அன்பார்ந்த உறவுகளே…. நமக்கும் ஜாபர் சேட்டுக்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பதை அறிவீர்கள். இந்த ஜாபர் சேட்டை நாம் தீவிரமாக எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் ஏற்கனவே பல முறை பதிவு செய்திருக்கிறோம். ஜாபரும், நம்மை விடாமல் என்னென்ன தொல்லைகள் செய்தார் என்பதையும் நாம் படித்திருக்கிறோம்.
அதிகார துஷ்பிரயோகம் என்பதன் மொத்த உருவம் ஜாபர் சேட் தான். தான் ஒரு அரசு ஊழியர் என்பதையும் மறந்து சர்வ வல்லமை பொருந்திய கடவுளைப் போல உணர்ந்தார். கடவுளைப் போல அதிகாரங்கள் கிடைத்தாலும், அவற்றை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்த ஜாபர் தவறினார்.
உளவுத்துறையின் வரலாற்றில், ஜாபரைப் போன்ற அதிகாரம் படைத்தவர்கள் யாருமே இல்லை எனும் அளவுக்கு ஜாபர் கோலோச்சிக் கொண்டிருந்தார். அவரின் அதிகாரத்திற்கு எல்லையே இல்லை என்னும் அளவுக்கு ஒரு சக்ரவர்த்தி போல தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்படி அவருக்கு வழங்கப் பட்ட அதிகாரத்தை தனக்கு சொத்து சேர்த்துக் கொள்ளவும், அதிகார மையங்களில் உள்ளவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், அவர்கள் அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்ளவும், எதிர்ப்பவர்களை என்கவுண்டர் செய்தும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும், பிடிக்காத அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து வழக்கு போட்டும், இந்த ஜாபர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப் பட்டோரின் பட்டியல், அண்ணா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலை விட பெரியது.
அப்படி ஆடிய ஆட்டத்திற்குத் தான் இன்று விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜாபர் சேட். ஒரு மனிதனின் வீழ்ச்சியில் உலகமே மகிழ்வதைப் போன்ற ஒரு வேதனையான தருணம் இருக்க முடியாது. இது போன்ற மனிதனின் வீழ்ச்சியில் ஊரே மகிழ்ந்த ஒரு தருணம் என்றால், நக்கீரன் காமராஜ் வீட்டிலும், ராசா வீட்டிலும், சிபிஐ சோதனை நடத்திய போதும், தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்த போதும் தான்.
அதே போல இன்று ஜாபர் சேட் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை நடைபெற்றது என்ற தகவலை தெரிந்ததும், பத்திரிக்கையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது… அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.
ஆரம்பக் கட்டத்தில் வந்த செய்திகள் ஜாபர் சேட் வீட்டோடு, காமராஜ் வீட்டிலும், ட்ராலி பாய்ஸ் பாண்டியன், விநோதன் மற்றும் கணேசன் வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகிறது என்று தான். ஆனால் பின்னால் சரிபார்த்ததில், அவ்வாறு நடைபெற வில்லை என்று தெரிய வருகிறது.
தலைமைச் செயலாளருக்கு மே 2011ல் அளிக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜாபர் சேட் மற்றும் மற்றவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120-B, 420, மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் 13 (c) மற்றும் 13 (d) மற்றும் 13 (2) ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து கீழ் கண்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
1) ஜெய்சங்கர் மேற்கு மாம்பலம் (ஜாபர் சேட் பினாமி)
2) பால்ராஜ் ஜான்சன், திருவான்மியூர்
3) கஸ்தூரி ராஜ், அண்ணா நகர்
4) நஜிம்முதின், எழும்பூர்
5) பர்னாஸ் இன்டர்நேஷனல், வேப்பேரி, சென்னை
(ஆளுனர் பர்னாலாவின் மகனின் நிறுவனம்)
6) ஜாபர் சேட் வீடு, அண்ணா நகர்
7) துர்கா சங்கர், கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின்
மகன்
8) லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், தி.நகர்
9) ஜாபர் சேட்டின் மாமனார், பெரியக்குளம்
இந்த வழக்குகளை ஒட்டி, ஜாபர் சேட் எந்த நேரமும், பணி இடை நீக்கம் செய்ய படுவார்.
ஜாபர் சேட்டின் ஆணவத்தின் விளைவு என்ன தெரியுமா ? அவரின் மனைவி பர்வீன் மீதும், மகள் ஜெனிபர் மீதும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எத்தனையோ பேர் வயிற்றில் அடித்து, அவர்கள் மனதார இட்ட சாபமும், ஈழப் போரின் போது, அப்பாவித் தமிழர்களை பிடித்து செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாமில் அடைத்ததால் அவர்கள் விட்ட சாபமும், ஈழத் தமிழர்களுக்கு மருந்து கடத்துவதற்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் சேகரித்து வழங்கிய பணத்தை, அவர்களிடமிருந்து கொள்ளையடித்த சாபமும், ஈழத் தமிழருக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த ரத்த உறைகளை அழித்தற்காக விட்ட சாபமும்தான் இன்று ஜாபரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
ஜாபருக்கு கண்ணதாசனின் வரிகளைத் தான் நினைவூட்டத் தோன்றுகிறது.
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?