யார் இது புது கேரக்டர். வசந்தி என்றவுடன் கண்ணா பின்னாவென்று யோசிக்காதீர்கள். இந்த வசந்தி வேறு யாருமல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்ய சபை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி தான் அந்த நபர்.
இந்த வசந்தி ஸ்டான்லியைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன்பு, சமீபத்தில் வசந்தி ஸ்டான்லி வெளியிட்ட, கலைஞர் 87 என்ற ஒரு ஜால்ரா நூலை வெளியிட்டார். அதை ஏற்றுக் கொண்ட புகழ்ச்சியே பிடிக்காத கருணாநிதி என்ன பேசினார் என்பதை கொஞ்சம் பார்ப்போம்.
“இந்தத் தொகுப்பு நூலில் வசந்தி ஸ்டான்லி எழுதிய கட்டுரையில் கடைசி வரிகள் என்னுடைய உள்ளத்தில் எத்தனையோ உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
“அப்பா! என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும். அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனைத் தீர்த்த பாக்கியத்தை நான் அடைவேன் அப்பா!”” என்று வசந்தி ஸ்டான்லி எழுதியிருக்கிறார். (இதுக்குப் பேர்தான் நெஞ்ச நக்கறது) இது என்னுடைய உள்ளத்தை உருக்குவதாக இருந்தாலுங்கூட, இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்று நான் விரும்புகின்றேன் வசந்தி ஸ்டான்லி போன்ற கழகத்தினுடைய கருவூலம் போன்றவர்கள், கழகத்தினுடைய ஆற்றல் மிக்க தொண்டுள்ளம் படைத்தவர்கள் பல காலம் இருந்து எந்தக் கொள்கைக்காக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அவர்கள் வழி நின்று நாங்களும் பாடுபட்டு வருகிறோமோ, அந்தக் கொள்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றித் தீருவோம் என்று ஒரு சூளுரை மேற் கொண்டு இந்தக் கட்டுரை முடிக்கப்பட்டிருந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
சுருக்கமாகச் சொன்னால் கழகத்தின் கருவூலமாம். இந்தக் கருமம், மன்னிக்கவும், கருவூலம் என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
வசந்தி ஸ்டான்லி. மிகச் சாதாரண அரசு ஊழியராக, வருவாய்த் துறையில் தனது பணியைத் துவக்கியவர். அதன் பிறகு, வணிக வரித் துறைக்கு வருகிறார். வணிக வரித் துறையிலே, உதவி வணிக வரி அலுவலர் வரை பதவி உயர்வு பெறுகிறார்.
வணிக வரித் துறையிலே என்னதான் மாமூல் வந்தாலும், அரசியலில் சம்பாதிப்பது போல வருமா… ? உடனே என்ன அரசியல்வாதிகளோடு தனது தொடர்பை நெருக்கப் படுத்துகிறார். குறிப்பாக இருட்டுக் கடை அல்வாக் காரர் இந்த அம்மணிக்கு நெருக்கம் என்கிறார்கள். அந்த நெருக்கத்தின் பயனாக, வசந்தி, 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் சார்பாக போட்டி போடுவதற்கு, டிக்கெட் கேட்கிறார்.
இவரை விட பல பேர், பெட்டியோடு காத்திருந்ததால், அந்த வாய்ப்பு பறி போகிறது. தன் முயற்சியில் சற்றும் மனந் தளராத வசந்தி, மீண்டும் ஏதாவது ஒரு அரசுப் பதவி கிடைக்குமா என்று முயற்சி செய்கிறார். கருணாநிதியின் கடைக்கண் பார்வை இவருக்கு கிடைக்கிறது.
சிறுபான்மையினர் கமிட்டி உறுப்பினர் பதவி கிடைக்கிறது. அரசு ஊழியர் பதவியை ராஜினாமா செய்கிறார். அப்படியே பொழப்பை பாத்துக்கிட்டு போனா சம்பாதிக்க முடியுமா ?
கணவர் ஸ்டான்லி ராஜன் அருமையாக ஒரு வேலையைத் தொடங்குகிறார். அது என்ன வேலை தெரியுமா…. ? அரசு வங்கிகளை ஏமாற்றுவது.
உங்களில் யாராவது ஒருவர் கடன் வேண்டும் என்று வங்கிக்கு செல்லுங்களேன். என்னென்ன கேள்வி கேட்பார்கள் உங்களிடம். இங்க கையெழுத்து போடு, அங்க போடு, இப்டி போடு, அப்டி போடு, இந்த டாகுமென்ட குடு, அந்த டாகுமென்ட குடு என்று என்னென்ன சொல்லி டபாய்ப்பார்கள் ?.
ஆனால், ஸ்டான்லி ராஜன் முதன் முதலில், அண்ணா நகரில் பேங்க் ஆப் பரோடாவில், முகப்பேரில் உள்ள தனது பிளாட்டை அடமானமாக வைத்து 40 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார். வெறும் 40 லட்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது. அதனால், அதே முகப்பேர் பிளாட்டின் பத்திரத்தை போலியாக தயாரித்து (வேறு என்ன செய்வது, பரோடா வங்கியில் அசல் இருக்கிறதே …) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அண்ணா சாலை கிளையில் 25 லட்சம் வாங்குகிறார். என்ன இந்த பேங்க் கார பசங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே என்று, அடுத்தடுத்து, பல பத்திரங்களை தயாரித்து, எல்ஐசி, திருவாங்கூர் வங்கி, விஜயா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, தேனா வங்கி என்று பின்னி எடுக்கிறார்.
இந்த அத்தனை கடன்களிலும், உத்தரவாதமாக சமர்ப்பிக்கப் பட்டவை போலி ஆவணங்கள். அத்தனை கடன்களிலும், வசந்தி ஸ்டான்லி, அதாங்க திமுகவின் கருவூலம், ஜாமீன்தாரர் அல்லது, இணை கடன்தாரர்.
வாங்கின கடனை திருப்பி கட்டினால் வங்கிகள் கண்டு கொள்ளாது. ஒரு வங்கியில் கூட வாங்கிய கடனை கட்டவில்லை. உடனே, சம்பந்தப் பட்ட வங்கிகள், ஆவணங்களை எடுத்து சொத்தை ஏலம் விடலாம் என்று பார்த்தால், ஒரே வீட்டை ஏலம் விட, ஒன்பது வங்கிகள் வந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்கள். என்னடா இது என்று ஆவணங்களை சரி பார்த்தால், அத்தனையும் போலி என்பது தெரிய வருகிறது.
உடனே, சென்னை மாநகர காவல் துறை ஸ்டான்லி ராஜன் மீதும், வசந்தி ஸ்டான்லி மீதும் ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்கிறது. ஸ்டான்லி ராஜன் உடனடியாக கைது செய்யப் படுகிறார். வசந்தி ஸ்டான்லி தான் இருட்டுக் கடை அல்வாக் காரருக்கு நெருக்கமாயிற்றே…. காவல்துறை, அவரை முன்ஜாமீன் வாங்கச் சொல்லி யோசனை தெரிவிக்கிறது.
வசந்தி முன்ஜாமீன் தாக்கல் செய்கிறார்… அந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, 25 லட்சம் பெறுமானமுள்ள சொத்துக்கான பத்திரத்தை வசந்தியோ, அல்லது வசந்தி சார்பாக வேறு ஒருவரோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இரண்டு நபர்கள், தலா ஒரு லட்சம் மதிப்புள்ள ஜாமீன் தாரர்களாக இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதிக்கிறது.
இது வரை கதை சரி. இதற்குப் பிறகுதான் திடுக்கிடும் திருப்பங்கள். வசந்தி நீதிமன்ற உத்தரவுப் படியே பிணைதாரர்களை நிறுத்தி, முன்ஜாமீன் பெறுகிறார்.
வசந்திக்கு ஜாமீன் தாரர்கள் மூன்று பேர். முதலாமவர் கே.ராமதாஸ். தந்தை பெயர் கண்ணன். முகவரி 25/38, கோவிந்த சிங் தெரு, புளியந்தோப்பு, சென்னை 12.
அடுத்த ஜாமீன்தாரர் கே.ராதாகிருஷ்ணன். தந்தை பெயர் கண்ணன். முகவரி எண் 2/421, முதல் குறுக்குத் தெரு, ராஜீவ் காந்தி நகர், மேடவாக்கம், சென்னை.
மூன்றாவது ஜாமீன் தாரர் எம்.புஷ்பராஜ், தந்தை பெயர் முனுசாமி. எண் 99, போக்குவரத்து சந்து தெரு, புதுப்பேட்டை, சென்னை.2
இதில் முதல் ஜாமீன்தாரர் ராமதாஸ் செங்கல்பட்டு மாவட்டம், சைதாபேட்டை தாலுகா, 135, சேலையூர் கிராமம், விவேகானந்தர் தெரு, கதவு எண் 198ல், சர்வே எண் 212/பி ல் உள்ள பிளாட் எண் 4561 விஸ்தீரணம் 2400 சதுர அடியில் உள்ள வீடும் காலி மனையும் அடங்கிய சொத்துப் பத்திரத்தை வசந்திக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். இவருக்கு இந்த அளவுக்கு சொத்து உள்ளது என்று தாம்பரம் தாசில்தார், ஒரு சொத்துச் சான்றிதழையும் வழங்குகிறார்.
இரண்டாவது நபர் ராதாகிருஷ்ணன், தனக்கு எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம்பாக்கம் கிராமம், தாம்பரம் தாலுகா என்ற முகவரியில் நான்கு செண்ட் மதிப்பில் ஒரு ஓட்டு வீடும் காலி மனையும் இருப்பதாக காட்டி, தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சொத்துச் சான்றிதழை தாக்கல் செய்திருக்கிறார்.
மூன்றாவது நபர், புஷ்பராஜ், அவருக்கு சென்னை தாம்பரம் தாலுகா, சேலையூர் கிராமம், திருவள்ளுவர் தெருவில், நான்கு சென்ட் இடத்தில் ஒரு ஓட்டு வீடும், ஒரு காலி மனையும் இருப்பதாக காட்டியிருக்கிறார். இதற்கும் தாம்பரம் தாசில்தார் சான்று அளித்துள்ளார்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில், வசந்தி ஸ்டான்லி, கைது செய்யப் படாமல் முன்பிணை பெறுகிறார்.
இப்போது விஷயத்துக்கு வருவோம். ராமதாஸ் தனக்கு சொந்தமானது தாக்கல் செய்துள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள வீட்டிற்கு சென்றால், அப்படி ஒரு வீடே அங்கு இல்லை. ராமதாஸ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கு உள்ள ராமதாஸ் மாதம் 350 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு கூலித் தொழிலாளி. ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டையும் காலி செய்து விட்டு சென்று விட்டார். அந்த பத்திரத்தின் எண் 2856. தாம்பரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரித்துப் பார்த்தால், அந்தப் பத்திரம் வேங்கை வாசல் கிராமத்தில் இருக்கும் ருக்குமணி என்பவரின் சொத்து. ராமதாசுக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தமே இல்லை.
அடுத்த நபர் ராதாகிருஷ்ணன். அதுவும் கே.ராதாகிருஷ்ணன். இவர் தனது சொத்து என்று குறிப்பிட்டுள்ள, எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம் பாக்கம் என்ற முகவரியே போலி. அப்படி ஒரு சொத்து இல்லை. இந்த ராதாகிருஷ்ணன் கொடுத்த வீட்டு முகவரியும் போலி.
மூன்றாவது நபரான புஷ்பராஜ் தனக்கு சேலையூரில் சொத்து இருப்பதாக ஆவணம் தாக்கல் செய்துள்ளார். அந்த முகவரியில் அப்படி ஒரு வீடே இல்லை என்பது தெரிய வந்தது. சரி இந்த நபரின் புதுப்பேட்டை முகவரியாவது சரியாக இருக்குமா என்று பார்த்தால், அந்த தெருவில் இரண்டு புஷ்பராஜுகள் இருந்தனர். ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர், அவரது வீட்டை 1999ம் ஆண்டு விற்று விட்டு சென்று விட்டார்.
சரி. தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் சொத்துச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களே… அது எப்படி வழங்கப் பட்டது என்று விசாரித்தால், இதை விட பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
எஸ்.கோவிந்தராஜன், வட்டாட்சியர், (பொறுப்பு), தாம்பரம், தனது கடித எண் ந.க.459/2009 பி2 என்ற 22.04.2009 நாளிட்ட கடிதத்தில் இந்த மூன்று சொத்துச் சான்றிதழ்களும் பரிசீலிக்கப் பட்டது. அந்த சான்றுகளில் தாம்பரம் வட்டாட்சியர் வி.ராமனாதன் என்று கையொப்பமிடப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில், திரு.ராமனாதன் என்ற பெயர் கொண்ட வட்டாட்சியர் எவரும் இவ்வட்டத்தில் பணிபுரிய வில்லை. எனவே இந்தச் சான்றுகள் இந்த அலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மேலும் தாங்கள் தாக்கல் செய்துள்ள பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பம் இடப்பட்டுள்ளது. தனி நபர் பெயர்களில் வழங்கப் படும் பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்கப் படுவதில்லை. துணை வட்டாட்சியர் நிலையில்தான் பட்டாக்களில் கையொப்பமிடுதல் வழக்கம். மேலும் அதில் உள்ள கோபுர முத்திரையை ஆய்வு செய்ததில் அம்முத்தியும் இவ்வலுவலக முத்திரை கிடையாது. ஏனெனில் வட்டாட்சியர் அலுவலகம் என்று இவ்வலுவலக முத்திரை இருக்கும். ஆனால் தாங்கள் தாக்கல் செய்துள்ளவற்றில் வட்டாட்சியர் அலுவலர் என்று உள்ளது. எனவே மேற்படி சான்றுகள் இவ்வலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மெய்த்தன்மையற்றது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் இவ்வலுவலகத்தில் பயன்படுத்தப் படும் வட்டாட்சியர் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையையும், கோபுர முத்திரையையும் வெள்ளைத்தாளில் இட்டு இணைத்து அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான ஆவணங்கள் இதோ…. …. …..
இப்போது ஆவணங்களோடு, வசந்தி ஸ்டான்லியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியாயிற்று. இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்… ? நமது கண்ணாயிரம் தான். அவர் அடுத்த வாரம் வரை கமிஷனராக இருப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை இருந்தால், நடவடிக்கை எடுப்பாரா ? வசந்தி ஸ்டான்லி மீது, போலி ஆவணங்களை தயாரித்து நீதிமன்றத்தை ஏமாற்றியதற்காக ஒரு புதிய வழக்கு பதிவு செய்வது இருக்கட்டும். உடனடியாக, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டுமே… எடுப்பாரா கண்ணாயிரம்..
சவுக்கு வாசகர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்.