சொக்கிக்கிடக்கும் 100 தொகுதியின் அதிமுக நிர்வாகிகள்: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸை வீழ்த்தப்போகும் வெலுமணி.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற சர்ச்சை எழுந்து, போஸ்டர் யுத்தம் வரை நடக்கத் தொடங்கி விட்டது. அதிமுகவில் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது ? என்ன நடக்கலாம் ?
கொஞ்சம் பழைய விஷயத்தோடு பார்க்கலாம் வாருங்கள்
2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சர் நாற்காலியில் ரிலாக்ஸாக அமர்ந்தார். அதன், பின்னர் எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்களை முழுமையாக அனுசரித்து போவதென முடிவெடுக்கப்பட்டது. நினைத்துக்கூட பார்க்காத கோணத்தில் அவரது அனுசரிப்பு ,நன்றாக “கூர்” தீட்டப்பட்ட ஆயுதமாக மாறி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவரை நோக்கியே திரும்பிக் கொண்டிருக்கிறது.
2017 மார்ச் மாதத்தில் உள்ளாட்சி துறைக்கு வாய்மொழியாக சொல்லப்பட்ட உத்தரவு என்ன தெரியுமா ?
எம்.எல்.ஏக்கள் யாரை சொல்கிறார்களோ அவர்களுக்கே அனைத்து டெண்டர்களும் கொடுக்க வேண்டுமென்பதே அந்த ஓரல் ஆர்டர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதியில் அவர்களை மீறி,அவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது என்பதே இந்த நிமிடம் வரை இருக்கும் நிலை.
ஆனால், திமுக வெற்றிபெற்றுள்ள சட்ட மன்ற தொகுதியில் நிலைமையே வேறு.
இது எல்லா ஆட்சியிலும் நடக்கக்கூடியது தான் என்றாலும்,அதிமுக ஆட்சியில் நடந்ததில் சுவாரஸ்யமான அரசியல் காய் நகர்த்தல்கள் இருக்கிறது. அதற்கான விதை இணைப்பு S P Velumani Progressive TN my dream என்ற பெயரில் ஊன்றப்பட்டது.
ஆம்,2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் சமாதானமானார்.
இருவரையும் இணைத்து வைத்தார் அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதற்கு முன்பே 2021ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில், அதிமுக சார்பிலான முதலமைச்சர் வேட்பாளர் போட்டிக்கு தன்னுடைய கால்தடத்தை 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே பதித்து விட்டார் எஸ்.பி.வேலுமணி..
வெறும் தடத்தை மட்டும் பதிக்கவில்லை. புகுந்து விளையாடவும் தொடங்கினார்.
அவருக்கு தகுந்த மைதானமாகவும் அமைந்தது திமுக வெற்றிபெற்ற சட்டமன்ற தொகுதிகள்..
ஆம்..
கண்ணா லட்டு திங்க ஆசையா ..!?
அதுவும் “நூறு லட்டு” திங்க ஆசையா ? எனக்கேட்டது காலம்…
ஒரு முறை திமுக பொருளாளர் துரைமுருகனுடன் பேசிக்கொண்டிருந்த போது இவ்வாறு சொன்னார்.
“என் ஊரு காட்பாடியில் எந்த குளத்தை மராமத்து செஞ்சாங்கன்னு எனக்கு தெரியாதுப்பா. நானும் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கன்னு கழுதையா கத்திப்பார்த்துட்டேன்
ஹூ..ஹூம் ஒன்னும் வேலைக்கு ஆகல” எனக்கூறியபடி தலையைக் கவிழ்த்து சோபா கைப்பிடியில் விரல்களால் தாளம் போட தொடங்கிவிட்டார். அவர் சொன்ன இந்த தகவல் கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் உண்மை.
ஆம், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சேரவேண்டிய பங்கு முறையாக சென்று சேர்ந்துவிடுகிறது..
விளக்கு, விளக்குமாறு, பினாயில், நோட் புக் வரை கொள்முதல் செய்யப்படும் எந்த விஷயத்திலும் நேரடியாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் தலையிடுவதில்லை.
வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு கமுக்கமாக இருந்து விடுகின்றனர்.
வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் சகல செளகர்யங்களோடு பரம திருப்தியாக போகிறது அவர்களின் அரசியல் பயணம்..
ஆனால், இந்த இடத்தை தான் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கான ரூட்டாக பயன்படுத்திக்கொண்டார்..
பொதுவாக,அமைச்சர் பதவியில் இருப்போர் தங்களுடைய மாவட்டத்தைத்தாண்டி பெரும்பாலும் அரசியல் செய்வது கிடையாது. செய்யவும் மாட்டார்கள்
ஆனால், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கோ அந்த வாய்ப்பு தானாக அமைந்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல.
ஊரக, நகர, ஒன்றிய, பேரூர் என எந்த பகுதியில் திட்டப்பணிகள் நடந்தாலும் அமைச்சர் தரப்பு சொல்லும் நபர்களுக்கே டெண்டர் கிடைக்கும் என்பது எழுதப்படாத சட்டம்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டெண்டர் சம்பந்தமாக அணுகினால்,,ஒரு எட்டு அமைச்சரை பார்த்துடுங்க சார். வேலை உடனே முடிஞ்சுடும் என்ற டயலாக்கை டெம்ப்ளேட்டாக பயன்படுத்துவர்…
உதாரணத்திற்கு, ராமநாதபுரத்தில் திமுக எம்.எல்.ஏ தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில்,சிறிய டெண்டர் ஒன்றை எடுக்க அதிமுக நிர்வாகி விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி சென்னைக்கோ அல்லது கோயம்புத்தூருக்கோ சென்று அமைச்சரை சந்தித்தால் அவருக்கு ஒப்பந்தம் கிடைத்துவிடும்.
எந்த சிக்கலும் இல்லாமல் திமுக எம்.எல்.ஏ-வுக்கு போக வேண்டியதும் போய் சேர்ந்து விடும்.
இப்படி,திமுக கைவசமுள்ள சட்டமன்ற தொகுதிகளைச்சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிக நெருக்கமாகிவிட்டனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கோவையை நோக்கி சனி, ஞாயிறுகளில் அதிமுகவினர் வாகனங்கள் பறப்பதை தேசிய நெடுஞ்சாலைகளில் கண்கூடாக பார்க்கலாம்.
குறிப்பாக, மற்ற மாவட்ட அதிமுக நிர்வாகிகள் என்றால் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்தி அவர்களது கோரிக்கைகளை உள்ளாட்சித்துறை நிறைவேற்றி வருகிறது.
சமீபத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் நியமிக்கப்பட்டதிலும், விருது நகர் மாவட்ட பொறுப்பாளராக மீண்டும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டதிலும் எஸ்.பி.வேலுமணிக்கு பெரும் பங்கிருக்கிறது.
அதாவது,கொஞ்சம் கொஞ்சமாக ஒபிஎஸ்-இ.பி.எஸ் கண்களை மறைத்து அதிமுகவில் தனித் தோட்டத்தையே ஏன் பணப் பதியமிட்டு தனிகாட்டையே சத்தமில்லாமல் உருவாக்கி வருகிறார் எஸ்.பி வேலுமணி.
இதற்கென கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றி வருவது யாரென்றால் வேறு யாருமல்ல..
எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன், மற்றொரு பவர் பாயிண்ட் கே.சி.சந்திரசேகர்.
அதாவது கிட்டத்தட்ட நூறு சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஸ்லீப்பர் செல் போல உருவாகியுள்ளனர்.
இதைவிட முக்கியம் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முழு கண்ட்ரோல் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியிடமே மட்டுமே உள்ளது. அவரது கண் அசைவுக்கு பிறகே சென்னையில் எதுவும் நடக்கும்.
அதிமுக நிர்வாகிகள் விஷயத்திலும் அவரை மீறி எதுவும் செய்ய இயலவில்லை ஒபிஎஸ்-இ.பி.எஸ்- ஆல்..
கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்றது..
அமைச்சர் பெஞ்சமின், விருகை ரவி, அம்பத்தூர் அலெக்ஸாண்டர், கும்மிடிப்பூண்டி விஜயகுமார்,ஆகிய 5 MLA-க்களோடு சென்ற ஓபிஎஸ்-ஐ மிரட்டி சென்னையில் திமுக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது. செய்தவர் பெயர் சத்யநாரயணன். தி.நகர் எம்எல்ஏ..
அதிமுக அலுவலக முற்றுகை,உள்ளிருப்பு போராட்டம்,கொடும்பாவி எரிப்பு என அல்லோகலபட்டது அவ்வை சண்முகம் சாலை. அதிமுக வரலாற்றிலேயே கட்சி அலுவலகத்தினுள் இது போல போராட்டங்கள் நடந்தது இல்லை.
நடவடிக்கை எடுப்போம் என உறுதிக்கொடுத்து கேபி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது..
தமிழ்நாடு முழுக்க நிர்வாகிகளை மாற்ற முடிந்த அதிமுக தலைமையால் தலைநகரத்தை, அதாவது சென்னையை தொடக்கூட முடியவில்லை.
கத்தி வைத்து மிரட்டாத கொடுமை. காரணம் வேறொன்றுமில்லை..
எஸ்பி வேலுமணி. அவரை மீறி செய்ய இயலவில்லை..
சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள அதிமுக எம்எல்ஏக்களும் வேலுமணியின் விசுவாசிகளாக மாறிவிட்டனர் சரி விஷயத்திற்கு வருவோம்.
இதனால் என்ன நடக்கப்போகிறதென்ற கேள்வி வரலாம் இல்லையா ?
அவர் ஓரு தலைவராக உருவெடுத்து விடுவாரா என்ற சந்தேகம் வருமில்லையா ?
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?
ஆட்சிப்பொறுபேற்ற 6 மாதத்தில் தன்னை சாமியாகவே சித்தரித்து விளம்பரம் எடுக்கவில்லையா எடப்பாடி பழனிசாமி!? ஏற்கனவே கோவை மாவட்டத்தில்
எஸ்பி வேலுமணிக்கு
“நீ..பொட்டு வெச்ச தங்கக்குடம்..
ஊருக்கு நீ மகுடம் பாட்டை தான் போடறாங்க..
அந்த ஊருக்கு என்ற வரியை மட்டும்
“தமிழ்நாட்டுக்கு நீ மகுடம்னு” மாத்தி பாடினா வேலை முடிஞ்சது..
சங்கர் மகாதேவன் மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு தான் பாடுவாரா..என்ன !
தமிழ் நாட்டு முதல்வருக்கும் பணம் குடுத்தா பாடுவாரா..
இல்லை பாட மாட்டேன்னு சொல்லிடுவாரா !?
கூடவே..
“இரும்பு தேசத்தின் கரும்பு மனிதன்”
கொங்கு நாட்டு தங்கமே..கோவையின் சிங்கமே..
மான்செஸ்டர் நகரத்தின் மாணிக்கமே…
கோயம்புத்தூரின் கோமேதகமே-ன்னு ஆயிரம் போஸ்டர் அடிச்சு ஓட்டினா..
முடிஞ்சது
அப்படியே…
நடந்து வர வீடியோவை 15 நொடி ஸ்லோமோஷன்ல போட்டா தலைவன் தயார் சார் இன்னைக்கு
அதிமுகவில் வரக்கூடிய தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பு மிக மிகக் குறைவு.
ஓ.பன்னீர் செல்வம் ஆயிரம் சதவிகிதம் ஒப்புக்கொள்ள மாட்டார்.
சரி கட்சியாய் வழிநடத்துவதற்காக அமைக்கப்படும் என சொல்லப்பட்ட 11 பேர்கொண்ட வழிகாட்டும் குழு முடிவெடுக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை
அந்தக்குழு இன்னும் அமைக்கப்படவே இல்லை.
சரி…அடுத்தது என்ன நடக்கும்? சமீபத்தில் “2021-ல் யார் முதலமைச்சர் ? என்ற விவாதம் எழுந்த போது
பொதுக்குழு,செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றே அதிமுக தலைவர்களால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த இடத்தில் தான் சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வந்த எஸ்.பி.வேலுமணியின் சாமர்த்தியத்தை கவனிக்க வேண்டும்.
பொதுக்குழு, செயற்குழு கூடி ஒருவேளை ஓட்டெடுப்பு நடத்துகிறதென்றால் பலர் முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டிக்கு வரலாம்..
ஏற்கனவே அந்த போட்டியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிச்சாமி இருக்கிறார்.
கொடி பிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான் என்ற முழக்கத்தை முன்வைத்து தனிக்கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறார். கே.சி.பழனிச்சாமி தமிழக பிஜேபி தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணனும் கே.சி.பழனிச்சாமியும் மிக நெருங்கிய மாமன், மச்சான் உறவு முறை. இதை சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.
அதிமுக அதிருப்தி நிர்வாகிகளோடு, கே.சி.பி ஜூம் மீட்டிங்- ஐ நடத்தி தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.
அந்த மீட்டிங்கில் என்ன நடக்கிறதென வேவு பார்ப்பதற்கு எஸ்.பி.வேலுமணி தனியாக ஆட்களை நியமித்திருக்கிறார்.
ஆர்வ மிகுதியில் சென்ற வாரம் கே.சி.பழனிச்சாமி நடத்திய ஜூம் மீட்டிங்-கில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பங்கேற்று என்ன நடக்கிறதென கவனித்திருக்கிறார்.
சசிகலா எதிர்ப்பை முதலில் கையிலெடுத்தவர் கே.சி.பழனிச்சாமி மட்டுமே.
சசிகலா விடுதலைக்கு பின்னர் ஒருவேளை எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இணக்கமாக போக விரும்பலாம். அந்த நேரத்தில், கே.சி.பழனிச்சாமியோடு இணைந்தால் எடுபடுமா என வேடிக்கைப்பார்க்க ஜூம் மீட்டிங்-கில் பங்கேற்றிருக்கலாம் என ஏன் சந்தேகப்படக்கூடாது.
எஸ்.பி.வேலுமணியை பொறுத்தவரை சசிகலா, தினகரன் எதிர்ப்பில் இப்போது வரை முனைப்பாக இருக்கிறார்.
அந்த வகையில் முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி, அதிமுகவில் எழுந்தால்…என்ன! எழுந்தால்… அதான் எழுந்துவிட்டதே.
சாதாரண தொண்டன் என்ற அடிப்படையில் எஸ்.பி. வேலுமணி இயல்பாக அந்த போட்டிக்குள் வந்துவிடுவார்.
ஒரு வேளை அதிமுக என்ற மாபெரும் இயக்கம் 2021-ம் ஆண்டு தேர்தலுக்காக முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியை கட்சிக்குள் வைத்தால் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அதில் வெற்றிபெற்றுவிடுவார் எஸ்.பி.வேலுமணி.
காரணம், திமுகவின் 100 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் பெருபாலானோர் இப்போது உள்ளாட்சி அமைச்சர் அமைச்சர் வேலுமணியின் ஆட்களாக மாறிவிட்டனர். கொஞ்சம் அசைந்தாடும் நபர்களாக இருந்தால் வெயிட்டாக கவனித்து மாற்றப்பட்டுவிடுவர்.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூடியது. அதில் பங்கேற்க 2400 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ஆயிரம் பேரை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் தரப்பு தேவையானதை கொடுத்து முழுக்க வளைத்துவிட்டதாகவே தெரிகிறது..
டெல்லியின் ஆசிர்வாதமும் கொஞ்சம் இருப்பதால் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இருவரையும் வீழ்த்தி, அதிமுகவில் மேலெழுந்து வரப்போகிறார் எஸ்.பி.வேலுமணி..
ஒருவேளை 2021 தேர்தலில் வெற்றிபெற்றால் அதிமுகவில் மீண்டும் ஒரு தொண்டர் முதலமைச்சர் ஆகப்போகிறார்.
இனி தான் வேடிக்கையே ஆரம்பமாகப்போகிறது என்கிறார்கள் அவரால் ஆதாயமடைந்து வரும் அதிமுகவினர்.
இனி யாரையும் தனியாக குறிப்பிட்டு துரோகம் செய்துவிட்டார் டயலாக்கை எல்லாம் அதிமுகவினர் மக்கள் முன்பு பேச முடியாது..
ஏனெனில் அந்த வார்த்தையை சொல்லும் தகுதிகூட அதிமுகவில் யாருக்குமில்லை.
டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், வேலுமணி குறித்து இவ்வாறு கூறினார்.
“2021ல் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அதிமுகவை இன்றும் உலுக்கி வருகிறது. சில அமைச்சர்கள் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். சிலர் கருத்து தெரிவிக்காமல் நழுவினர். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி, 17 தமிழக அமைச்சர்கள், எடப்பாடியை அழைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளர் தேர்வில் குழப்பம் இல்லை என்று தெரிவித்த நிலையில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை. இவர்கள்தான் கூவாத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி பெயரை முன்மொழிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இந்த சர்ச்சையில் கருத்து தெரிவிக்காமல் இருப்பதை எளிதாக கடந்து செல்ல இயலாது.
கட்சி உள்விவகாரங்களை அறிந்தவர்கள், வேலுமணிக்கு, முதல்வராகவோ, துணை முதல்வராகவோ ஆக வேண்டும் என்ற கனவிருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் ரகசியமாக டெல்லியில் காய் நகர்த்தி வருவது ஒன்றும் ரகசியம் அல்ல. தமிழக அமைச்சரவையிலேயே மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள வேலுமணிக்கு டெல்லியின் ஆசி இருப்பது வெளிப்படை. வேலுமணி, தனக்கான ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காக ஒரு தனியார் ஏஜென்சியை நியமித்து செயல்பட்டு வருகிறார். இந்த ஏஜென்சி, ஊடகங்களில் வேலுமணியை புகழ்ந்து செய்திகள் வரவைக்க கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது. தமிழக அமைச்சர்களிலேயே, மிக அதிகமான பணம் வைத்திருக்கும் வேலுமணி, நிச்சயம் முதல்வர் வேட்பாளருக்கான பந்தயத்தில் இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.”
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் சூழ்நிலையை உணர்ந்து சுதாரிக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் “கதி..அதோ..கதி” தான்.