எஸ்பிபாலசுப்ரமணியம் போன்ற ஒரு அற்புதமான சங்கீத கலைஞனுக்குபுகழஞ்சலி செலுத்த எனக்கு போதுமான சங்கீத ஞானம் இருக்கிறதா என ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். பாலு என்னை சிரிக்க வைத்திருக்கிறார். அழ வைத்திருக்கிறார். உற்சாகத்தில்நடனமிடவைத்திருக்கிறார். மனதில் பாரத்தை ஏற்றியிருக்கிறார். பல நேரங்களில் பாரமான மனதை லேசாக்கியிருக்கிறார். அதனால் பாலு மற்றவர்களைப் போலவே எனக்கும் நெருக்கமானவர்தான். அவருக்கு புகழஞ்சலி செலுத்த எனக்கு தகுதி இருக்கிறது என்றே கருதுகிறேன்.
தமிழில் எத்தனையோ பின்னணிப் பாடகர்கள் இருந்திருக்கின்றனர். இருக்கின்றனர். ஆனால் பாலு கொண்டாடப்படுவது ஏன் ?
புகழின்உச்சத்துக்கு சென்ற பிறகும் கூட அவர் கால் தரையை விட்டு என்றுமே பறந்தது இல்லை. 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். பல தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரை அவர் தன் எளிமையால் அனைவரையும் தொடர்ந்து வசீகரப்படுத்தியே வந்தார்.
வானொலி பட்டிதொட்டிகளையெல்லாம் ஆக்ரமித்திருந்த காலத்தில் பாலுபாடத் தொடங்கினார். இன்று எப்.எம்சேனல்கள் பல இருந்தாலும் வானொலி தன் வசீகரத்தை இழந்து விட்டது. இந்த ஸ்மார்ட்போன்யுகத்திலும் இன்றைய தலைமுறையினரை இன்றும் வசீகரித்து வைத்திருக்கிறார் பாலு. அதுதான் அவரின் வெற்றி.
நம் வாழ்வின் எந்த சூழலை எடுத்தாலும் அதற்கேற்றார்போல ஒரு பாலுவின் பாடல் இருந்தே தீரும். தமிழர்கள் பாலுவை ஒரு பாடகராக பார்த்தது இல்லை. தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே பார்த்தனர். எந்த இடத்துக்கு பயணித்தாலும், நம்மை அவ்வப்போது வருடும் ஒரு தென்றலைப் போல பாலு நம்மை வருடிச்செல்வதை தடுக்க முடியாது. கிராமத்தில் வயலில் வேலை செய்யும் ஒரு கூலித் தொழிலாளி மீதும், செல்வச்செழிப்பில் வாழும் ஒரு பெரும் செல்வந்தர் மீதும், ஒரே மாதிரியான தாக்கத்தை செலுத்தினார் பாலு. அதனால்தான் அவரின் மறைவு சமூகத்தில் அனைத்துப் பிரிவினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
முறையாக சங்கீதம் கற்காத அவர் அடைந்த உயரங்களை பிரபல கர்நாடக சங்கீத கலைஞர்கள் கூட அடைந்ததில்லை. அவரின் சங்கராபரணத்தை கேட்டவர்கள் அவர் முறையாக சங்கீதம் படித்ததில்லை என்பதை நம்ப மறுப்பார்கள். இசை என்பது மக்களுக்கே என்பதை தன் வாழ்வின் மூலம் உணர்த்தியவர்தான்பாலு. சங்கீதம் மேட்டுக்குடி மக்களுக்கானது என்று அதை கச்சேரிகளின்அரங்கத்துக்குள் முடக்கி வைத்திருந்தபோது, சங்கீதத்தை பாமரம க்களுக்கெல்லாம் அளித்து அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசச் செய்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல் என தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்களை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றதில் பாலுவின் பங்கு பெரியது. தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், ஒவ்வொரு தமிழரும் அவரை தங்கள் வீட்டில் ஒருவராகத்தான் கொண்டாடி வந்திருக்கின்றனர். தொடர்ந்தும் கொண்டாடுவர். தன் இசையின் மூலமாக மொழி எல்லைகளை உடைத்து அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர்தான் பாலு.
புகழின்உச்சத்துக்கு சென்ற பெரும்பாலானோருக்கு அந்த இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். புதிய போட்டியாளர்கள் வருகையில் அவர்களை வரவிடாமல் செய்து, தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறை திரைத்துறையில் மிகவும் சாதாரணம். ஆனால், பாலுவுக்கு தன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று தெரிந்திருந்ததோ என்னவோ, இளையவர்களை எப்போதும் ஊக்குவித்து வந்தார்.
காதல் ஓவியம் படத்துக்காக, எஸ்பிபி “பூஜைக்காக வாழும் பூவை” பாட வேண்டும். அப்போது வளர்ந்து வரும் பாடகரான திருச்சி லோகநாதனின் மகன் தீபன் சக்கரவர்த்தி “ட்ராக்”பாடியிருந்தார். பாலு வந்து அதை கேட்டுவிட்டு, அதே போல பாலு பாட வேண்டும்.
ட்ராக்கை கேட்ட பாலு, “இந்த தம்பியேதான் நல்லா பாடியிருக்கே. எதுக்கு இதை மாத்தணும்? அந்த தம்பியவே பாட வையிங்க” என்றார். இதை தீபன் சக்கரவர்த்தி தான் பாடும் கச்சேரிகளெல்லாம் குறிப்பிடுவார்.
சிக்கலான கர்னாடக இசை சங்கதிகள் உள்ள பாடல்களை பாடச்சொனால், ‘இதை நான் பாடறத விட இன்னார் பாடினா நல்லாருக்குமே’ என்றிருக்கிறார். இத்தனைக்கும் சிக்கலான இசையின் நுணுக்கங்கள் கைவரப்பெற்றவர் தான் பாலு, ஆனால் இது போன்ற பாடல்களை மற்ற பாடகர்களுக்கு ஏன் விட்டுக் கொடுத்தார்? அது அந்தப் பாடகர்களை வாழ வைக்கவா? புகழ் சேர்க்கவா? இல்லவே இல்லை. ஒரு பாடல் மக்களிடம் சரியாய் சென்றடைய வேண்டும் என்று அவர் நினைத்தாலேயே தனக்கு கிடைக்கும் மரியாதையை விட பாடலுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். தன்னை விட இசையை நேசித்ததால்தான் பாலு உயர்ந்து நிற்கிறார்.
இந்தியாவில் இந்தி தவிர பிற மொழிகள் பேசப்படுவதில்லை என்கிற ஒரு பொதுவான எண்ணம் வெளிநாட்டவர்களுக்கு உண்டு. இந்தியாவில் பேசப்படுகிற மொழிகள் அனைத்தும் உச்சரிப்பிலும், அர்த்த பாவத்திலும் வேறுபட்டவை. இந்தி தெரிந்த எல்லோருக்கும் உருது வந்து விடாது. இரண்டும் வேறுவேறு உச்சரிப்பினைக் கொண்டவை. இதை யாராலும் அவ்வளவு எளிதாய் உள்வாங்கி விட முடியாது. ஆனால் பாலு உள்வாங்கியிருந்தார். இந்தியாவின் இந்தி தவிர துளுவும், ஒரியாவும், வங்காளமும், தெலுங்கும், தமிழும் உண்டு, அந்த மொழிகளுக்கும் அழகான வழமை உண்டு என்று வெளிநாட்டு மேடைகளில் நிரூபித்துக் காட்டினார். இந்த சாதனையை இதற்கு முன்பு செய்த பாடகர்கள் இருப்பர்களா என்பது சந்தேகமே. பதினாறு மொழிகளையும் அதன் இயல்போடு, உச்சரிப்போடு பேசுவதே கடினம், பாடியிருக்கிறார் அதிலும் சிறு பிழையின்றி என்பது காலத்துக்கும் நாம் கொண்டாடப்பட வேண்டிய அம்சம் அல்லவா? இப்போது இதை எழுதும்போது கூட தேரே மேரே பீச் மே’ மனதுக்குள் ஒலிக்கிறது.
என்னைப் போன்ற பாமர ரசிகனை பாலு ஈர்த்த தருணங்கள் எது தெரியுமா? எந்த கஷ்டமான சங்கதியும் இல்லாமல் தொண்டைக்குள்ளும், வாய்க்குள்ளும் முனகுவது போல எளிமைபடுத்தி பாடலைத் பாடித் தருவது. இதற்கு இசையமைப்பாளர்களின் ட்யூன் ஒரு காரணம் என்றாலும் கூட பாலு அதைப் பாடினால் அது ஜனரஞ்சகமாகி விடுகிறது. ‘சங்கீத சாதி முல்லை பாடல்’ பாலு பாடி கேட்டுவிட்டு நானும் பாடும்போது எனக்குள்ளும் அது அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தான் அவரின் குரலின் சாதனை.
முகம்மது ரஃபியின் பெரும் காதலன் பாலு. ஆனால் ரஃபியினுடைய தாக்கம் இல்லாமல் அவரால் பாட முடிந்திருக்கிறது. ஆனால் பாலுவின் தாக்கம் கொண்ட பாடகர்கள் அதிகம். இரவுகளில் பாடல் எங்கேனும் காற்றில் மிதந்து வந்தால் அந்த அமைதிக்குள் எப்போதும் இருப்பது பாலுவின் குரலாகவே இருந்திருக்கிறது. சில நாட்கள் என்னைனையுமறியாமல் வேலையின் இடையில் பாடலை ஓடவிட்டு தூங்கிவிடுவேன். கனவில் கேட்டது போல இவர் குரல் என்னை எழுப்பியிருக்கிறது. நடுஇரவில் உற்சாகமாய் வேலை செய்ய வைத்திருக்கிறது. சொல்லப்போனால் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையே ஏற்படுத்தியிருக்கிறது.
‘ஆயிரம் நிலவே’ பாடலை பாலு பாட வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பியதாக சொல்வார்கள். மஞ்சள் காமாலை வந்து படுத்துவிட்டார் அப்போது பாலு. இரண்டுமாதங்கள் காத்திருந்து அவர் குணமாகி வந்த பின்பு அந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்திருக்கிறார். அந்த இரண்டு மாத காலங்கள் தான் இந்திய இசை ரசிகர்களுக்கு பாலு கொடுத்த அதிகபட்ச இடைவேளை. மற்ற சமயமெல்லாம் ஏதோ ஒரு மொழியல் அவர் இசைத்துக் கொண்டே தான் இருந்தார். இன்று நிரப்பவே முடியாத இடைவெளியை விட்டுப் போய்விட்டார்.
பாலு ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார் என்பதற்கு, வார்தைகளால் விவரிப்பதை விட, வட இந்தியாவை சேர்ந்த ஒரு விவசாயி உருவாக்கிய டிக்டாக் வீடியோ எளிதில் விளக்கும்.
சென்று வாருங்கள் பாலு.
Very nice post on SPB sir. Well written mr.Shankar