அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்தில் கூட சாதிக்க முடியாதது உத்திரப் பிரதேசத்தில் நடந்தது. அங்கேதான் முதல் முறையாக தலித்துகள், சாதி ஆதிக்கம் மிகுந்த ஒரு மாநிலத்தில் பதவிக்கு வந்தார்கள். மாயாவதியால் அதை சாதிக்க முடிந்தது.
திராவிட கட்சிகள் கோலோச்சிய ஒரு மாநிலத்தில் அது இன்னமும் சாத்தியமாகவில்லை. பெரியார் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற, திராவிட இயக்கத்தின் வீச்சு, பார்ப்பனீயத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது என்றாலும், அது இடைநிலை சாதிகள் தலித்துகளை காலுக்கு கீழே அடக்கி வைத்திருப்பதை உறுதி செய்தது. சாதி ஒழிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திமுகவும் கூட தலித்துகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பெறும் பங்கு வகிக்கவில்லை என்பது உண்மையே.
திமுக போன்ற வெகுஜன கட்சிகளுக்கு ஒரு நெருக்கடி இருக்கிறது. சமூக நீதி, தலித்துகளுக்கு அதிகாரம் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினால், இதர இடைநிலை சாதிகள் அனைத்தின் ஆதரவையும் இழக்க வேண்டியிருக்கும். இடைநிலை சாதிகளை வேறு ஒரு கட்சி ஒன்று திரட்டி, தலித்துகளுக்கு எதிராக களம் கண்டு, திமுகவை எளிதாக வீழ்த்தி விட முடியும். தலித் வீட்டிலேயே சம்பந்தம் செய்தவரான கருணாநிதி இதை நன்கு புரிந்திருந்தார்.
தமிழகத்தில் தலித்துகள் கணிசமான அளவில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் ஒற்றுமையாக ஒரு அரசியல் சக்திகளாக உருவெடுக்கவில்லை. பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர்களே தமிழகத்தில் அதிக அளவிலான தலித்துகளாக இருந்து வருகின்றனர். மற்ற இடைநிலை சாதிகள் தலித்துகள் மீது காட்டும் சாதிய உணர்வை விட, பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியினர் தங்களுக்கிடையே கடைபிடிக்கும் சாதிய வேற்றுமை மிக அதிகம்.
பள்ளர்கள் தங்களை உயர்ந்த சாதியினராக கருதிக் கொள்வதாக அந்த சமுதாயத்தின் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி வருகிறார். பள்ளர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்து, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஒரு விநோதமான கோரிக்கையை எழுப்பி வருகிறார்.
கிருஷ்ணசாமியின் இந்த நடவடிக்கை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் பள்ளர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் இன்று தேவை தலித் ஒற்றுமை. தமிழகத்தில் இன்று தலித் இயக்கம் அதிகாரம் பெறுவதற்கான சூழல் எழுந்துள்ளது. அதற்கான போராட்டத்தை திருமாவளவன் முன்னெடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் பிஜேபியின் ஆட்டம் தொடங்கியது, செல்வி ஜெயலலிதா இறந்த அந்த 5 டிசம்பர் 2016 அன்று. அன்றுதான் பிஜேபிக்கு அதிமுக நமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்ற ஆணவம் வந்தது. அது போலவே கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதுதானே ?
பிஜேபி அதிமுகவை கபளீகரம் செய்ததற்கு எதிரான முதல் கலகக்குரலை எழுப்பியவர் சசிகலா. அவருக்கு பிஜேபி கட்சியை கைப்பற்றிவிட்டது என்பது தெரிந்து விட்டது. இனி காலாகாலமும் பிஜேபிக்கு அடிமையாக இருப்பதை அவர் விரும்பவில்லை. சிறை செல்லப் போகிறோம் என்ற ரிஸ்க்கையும் மீறி அன்று அவர் கலகம் செய்தார். அதனால்தான் இன்று சிறையில் இருக்கிறார்.
ஆனால், சசிகலாவுக்கு இருந்த “நற்பெயர்” அவரும் அவர் குடும்பத்தினரும் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் மக்களிடையே சசிகலாவை எதிரி என்று நிறுவ பிஜேபிக்கு உதவியது. அவர்கள் அதில் வெற்றியும் பெற்றார்கள்.
இதற்குப் பிறகு, பார்ப்பனீயம் பிஜேபியின் முகம் கொண்டு, தமிழர்கள் மீது அவர்களுக்கு இருந்த நூற்றாண்டுப் பகையை தீர்க்கும் காரியத்தில் இறங்கியது. பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இந்துத்துவா, இந்து ஒற்றுமை, இந்து மதத்துக்கு ஆபத்து என்ற போர்வையில் தமிழகத்தில் களமிறங்கியது.
உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விவகாரம். கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பிஜேபியின் அஸ்வத்தாமன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
தமிழ் அழிக்கப்பட்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்த சமஸ்கிருதம் நம்மை இழிபிறவிகள் என்று சொல்கிறதோ, எந்த சமஸ்கிருதம் நம் பெண்களை நடத்தை கெட்டவர்கள், நம்பத் தகாதவர்கள் என்று சொல்கிறதோ, அந்த சமஸ்கிருதத்தை நம் வரிப்பணத்தைக் கொண்டு வளர்க்கும் பணி நடைபெறுகிறது.
நமது நாட்டார் தெய்வங்களை அழித்தொழித்து, வட இந்திய கடவுள்களை நம் மீது திணிக்கும் பணி நடைபெறுகிறது. மதமற்று வாழ்ந்த தமிழர் சமுதாயத்தில் வட அந்நியர்களான ஶ்ரீராமன்களையும், கணபதி பப்பாக்களையும் திணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து சொன்னது போல, “இது ஒரு தத்துவார்த்த போர்”. வெறும் அரசியல் போர் அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக ஒரு தத்துவார்த்த போரை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
100 ஆண்டு காலம் காத்திருந்தார்கள் அவர்கள் இந்தியாவை இந்து ராஷ்டிரம் ஆக்க. இதில் பெருமளவு வெற்றியும் பெற்று விட்டார்கள். இதை நிலைநிறுத்த அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். கொலை மற்றும் உயிர்ப்பலி உட்பட. வட இந்தியாவில் குறிவைத்துக் கொல்லப்படும் இஸ்லாமியர்களின் மரணம் உயிர்ப்பலி அல்லாமல் வேறு என்ன ?
இந்த தத்துவார்த்த போரை திமுக முன்னெடுக்க வேண்டுமா என்றால் ஆம் எடுக்க வேண்டும். ஆனால் திமுக இதை தடுத்தால், இந்தப் போரில் தன்னை முன்னிறுத்தினால், அதிகாரம் பிஜேபிக்கு போய் விடும் அபாயம் இருக்கிறது. பாசிசத்துக்கு எதிரான போரில், மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவது ஒரு முக்கிய தந்திரம்.
பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கேரளாவில், மிக மிக சாதுர்யமாக, விவசாய மசோதாவுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டிருப்பது ஒரு உதாரணம். மராட்டிய அரசு பிஜேபியின் கண்ணை எப்படி உறுத்துகிறது என்பதை பார்த்து வருகிறோம். சிவசேனா அரசு இல்லையென்றால் அர்நப் கோஸ்வாமி கதறுவதை நாம் கண்டுகளிக்க முடியுமா ?
அதனால், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிரான தற்போதைய போரில், திமுக இப்போது வகிக்கும் நிலை மிகச் சரியானது. மேலும், முக.ஸ்டாலின், திருமாவளவனுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கை, ஒரு “ஸ்டேட்ஸ்மேனின்” நடவடிக்கை. திமுக தனது அடிப்படை கொள்கைகளிலிருந்து விலகவில்லை என்பதை அது தெளிவாக உணர்த்தியது. மேலும், தனது கட்சிக்குள்ளாகவே, விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து கலகம் செய்து வரும் டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி போன்றோருக்கு ஸ்டாலின் தெளிவான ஒரு செய்தியை உணர்த்தி விட்டார்.
மனுஸ்மிருதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், புதுவையில் பேசிய திருமாவளவனின் பேச்சு முக்கியமானது.
“திமுக கூட்டணியிலிருந்து யாருக்கும் நெருக்கடி கொடுக்காமல் அனைத்து தலைவர்களின் ஒப்புதலோடு வெளியேறி தனியொருவனாக பிஜேபியை எதிர்த்து களமாட தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகளா பிஜேபியா என்று ஒரு கை பார்த்துவிட தயார்” என்று பேசினார் திருமா.
இதை வேற்று சூளுரையாக நான் பார்க்கவில்லை. திருமாவளவனை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அவர் இதை உளபூர்வமாகவே சொல்கிறார்.
திருமா இப்படி சொல்வதால், திமுக விடுதலை சிறுத்தைகளை விலக்கி விடாது என்று நம்புகிறேன். 2019 தேர்தலிலேயே, கட்சியின் பல மூத்த தலைவர்களின் எதிர்ப்பை மீறியே விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் இணைத்தார் ஸ்டாலின்.
மேலும், திமுகவின் கோணத்திலிருந்து அணுகினால், திருமாவளவனின் தற்போதைய நடவடிக்கைகள், திமுகவுக்கு பலமே. திருமாவளவனின் மூலம், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற பிஜேபியின் திட்டம் கடும் தோல்வியில் முடிந்துள்ளது. இதன் ஆபத்தை தாமதமாக உணர்ந்த பிஜேபி, பொறியில் மாட்டிய எலியாக மாறியுள்ளது.
தமிழக பிஜேபி / ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஒருவரையும் கலந்தாலோசிக்காமல் பிஜேபி தலைவர் முருகன் மற்றும் குபீர் பெரியாரிஸ்ட் குஷ்பூ ஆகிய இருவரும் எடுத்த தனிப்பட்ட முடிவால், கட்சி இன்று பெரும் இக்கட்டில் மாட்டியுள்ளது. எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறது. குஷ்புவுக்கு பிஜேபியில் அரசியல் எதிர்காலம் இனி இல்லை. ஆர்.எஸ்.எஸ் குஷ்புவை ஒருபோதும் மன்னிக்காது.
தனிப்பட்ட முறையில் பேசிய ஒரு மூத்த பிஜேபி தலைவர் இவ்வாறு கூறினார். “நாங்கள் விரித்த வலையில் நாங்களே வசமாக சிக்கிக் கொண்டோம்”.
மேலும் ஸ்டாலின் கவனிக்க வேண்டிய முக்கிய தரவு ஒன்று உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழத்தில் இளைஞர்களை வசீகரிக்கக்கூடிய ஒரு தத்துவமோ தலைவரோ இல்லை. ஆண்டாண்டு காலங்களாக பதின்பருவ இளைஞர்களை ஈர்த்து வந்த இடதுசாரிகளும், திராவிட அமைப்புகளும், அப்பணியை செய்யத் தவறியதன் விளைவே சீமான் போன்ற விஷ சக்திகளின் வளர்ச்சி. சீமானின் பொய்யுரைகளை பார்த்து வசீகரிக்கப்படும் இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் மாடுகளைப் போல உருவாக்கப்பட்டுள்ளார்கள். மீதமிருக்கும் இளைஞர்கள், ஆண்ட சாதி பெருமை பேசச் சென்று விடுகிறார்கள்.
பதின்பருவ வயதில் நம் அனைவருக்கும் ஒரு ஹீரோ தேவை. தொண்ணூறுகளில் வைகோ வளர்ந்தது இப்படித்தான். அந்த இடத்தை திருமாவளவனால் பிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அவரின் உறுதியான நிலைபாடு இதற்கு உதவுகிறது.
திருமாவின் இந்த பலத்தை திமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளை சேகரிக்க திமுகவுக்கு உதயநிதியை விட திருமா அதிகம் பலனளிப்பார் என்று நம்புகிறேன்.
இந்து சனாதனத்தையும், மதவெறியையும் மட்டுமே பேசும் பிஜேபியின் மத முகத்தை திருமா எதிர்கொள்ளட்டும். ஆட்சி, நிர்வாகம், ஊழல் போன்றவற்றை திமுக பேசி அதிமுகவை எதிர்கொள்ளட்டும். விடுதலை சிறுத்தைகளின் நடவடிக்கைகளில் திமுக தலையிடாது என்ற மறைமுக உடன்படிக்கை வேண்டும்.
திருமாவளவன்
நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் திருமா. உங்களின் நோக்கம் உன்னதமானது என்று நான் நம்புகிறேன். உங்களோடு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து, இன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் ஒருவர் உங்களைப் பற்றி ஏராளமாக சொல்லியிருக்கிறார். நான் அவரை நம்புவதால், உங்களையும் நம்புகிறேன். நீங்கள் நாளை மற்றொரு ராமதாஸாக மாற மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த பாதையில் தொடர்ந்து பயணியுங்கள். உங்கள் மீது சிலுவையாய் சுமத்தப்பட்டிருக்கும் “பறையன்” என்ற சிலுவை உடைந்து தூள் தூளாக ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இப்போதே, ஆண்ட சாதி பெருமை பேசும், முக்குலத்தோர், வன்னியர் சமூக மக்கள், எங்களின் இடஒதுக்கீட்டை காக்க இல்லாமல் போய் விட்டாரே என்று வெளிப்படையாகவே கருத்தளிக்கிறார்கள்.
தேர்தல் வெற்றி என்பதையெல்லாம் தாண்டி, ஒரு இயக்கத்துக்கு சமூக பொறுப்பு என்ற ஒன்று இருக்கிறது. அதன் தற்போதைய கடமை பாசிசத்தை உயிர்கொண்டு எதிர்ப்பது. அதை முன்னெடுக்க சரியான நபர் நீங்கள்தான்.
தொடர்ந்து சமர் புரியுங்கள்.
தலித் ஒற்றுமை
தலித் ஒற்றுமைக்கு பெரிதும் தடையாக இருப்பவர்கள் பள்ளர்களே. ஆண்ட சாதி பெருமை பேசுவதில் இவர்களை விஞ்ச ஒருவருமே கிடையாது. இப்படி ஆண்ட சாதி பெருமை பேசுவது யாரென்று பார்த்தால், இடஒதுக்கீட்டை பயன்படுத்தி, இன்று நவீன பார்ப்பனர்களாக அவதாரமெடுத்திருக்கும் பள்ளர்களே ஆண்ட சாதி பெருமை பேசிக் கொண்டு, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார்கள். இன்றும் கூலி விவசாயிகளாகவும், 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுமாக இருக்கும் பள்ளர்களுக்கு என்ன சிக்கல் என்பதே புரியவில்லை.
இத்தகைய நவீன பார்ப்பனராக அவதாரமெடுத்திருப்பவர்தான் டாக்டர் கிருஷ்ணசாமி. இட ஒதுக்கீட்டினால் அவர் மருத்துவரானார். அவர் மகன் மருத்துவரானார். மகளுக்கு ஜெயலலிதாவிடம் பிச்சையெடுத்து மெடிக்கல் சீட் பெற்றார். ஆனால் தன் சமூக மக்கள் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கக் கூடாது என்று முனைப்பாக இருக்கிறார். தன் சமூக மக்களை குழிக்குள் தள்ளுவதற்கு, அவர்களிடமே வசூல் செய்து வருகிறார். பிஜேபியின் காலடியில் தன் சமூக மக்களை அடகு வைக்கத் துடிக்கிறார்.
தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் சமூக மரியாதை வந்து விடுமா ? கொங்கு வேளாளரும், சைவ வேளாளரும் பெண் கொடுத்து விடுவார்களா ? உடுமலையில் சங்கர் எதற்காக கொலை செய்யப்பட்டான் ? “தேவேந்திர குல வேளாளர்தானே சங்கர் ?
பள்ளர் சமூகத்தை பள்ளத்தில் தள்ளும் கிருஷ்ணசாமி உங்கள் தலைவரா, தமிழர்களை பார்ப்பனீயத்துக்கு எதிரான போரில் வழிநடத்திச் செல்லும் திருமா உங்கள் தலைவரா என்பதை முடிவு செய்யுங்கள். இது ஒரு சமூகத்தின் இருப்பு குறித்த போராட்டம் அல்ல. ஒரு இனத்தின் அடையாளத்தை தக்க வைப்பதற்கான போராட்டம்.
ஒரு கம்யூனிஸ்டாக தன் அரசியல் வாழ்வை தொடங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி, ஒரு முரட்டு சங்கியாக மாறிப் போனது காலத்தின் கோலமே.
இடதுசாரிகள்
வாக்கரசியலை மட்டுமே ஒரே குறிக்கோளாக வைத்து முழுமையாக கட்சி நடத்தாதவர்கள் இடதுசாரிகள் மட்டுமே. அவர்களின் முன்னால் ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. பாசிசத்தின் ஆபத்தை முழுமையாக உணர்ந்தவர்கள் இடதுசாரிகள் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
திருமாவோடு இணைந்து பாசிச எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுப்பதில் அவர்களுக்கு எந்த தடையும் இருக்காது. இந்திய சுதந்திரப் போரை பின்னின்று இயக்கியதைப் போல அவர்கள் இந்த பாசிச எதிர்ப்புப் போரையும் தமிழகத்தில் பின்னின்று இயக்க வேண்டும்.
ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, இவ்வாறு கூறினார். “தமிழர்கள் தங்கள் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய தருணம். இல்லாவிட்டால் இந்த தத்துவார்த்த போரினால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் சிக்கி தங்கள் சுயத்தை இழந்து வாழ்வும் பாதிக்கும். மேலும், இந்த்சூழ்நிலை , உணர்ச்சிகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கிற்கும் சவால் விடும் நிலையாக உள்ளது.
வீடு பற்றி எரியும் நேரத்தில் உடமைகளை களவாடுவது எளிது தானே.”
இதை ஒவ்வொரு தமிழரும் நினைவில் கொள்ள வேண்டும்.
பாசிசம் வீழ்த்த முடியாத சக்தி அல்ல. உலகெங்கும் பாசிசம் வீழ்த்தப்பட்டதற்கான வரலாறு இருக்கிறது. அது நீண்ட நெடிய, முட்பாதை நிறைந்த பயணம். இலக்கை நம் வாழ்நாளுக்குள் அடைந்து விடுவோம் என்று நினைப்பது பேராசை. ஆனால் நாம் இன்று செய்யும் பணியே அதற்கான அடித்தளம்.
அந்த கடினமான பாதையில் பயணிக்க தமிழர் ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது.
இன்று இந்தியாவின் அனைத்து அமைப்புகளும் காவிமயமாகி விட்டன. நீதித்துறை அவர்கள் வசம் சென்று விட்டது. நீதித்துறை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அடிப்படை உரிமைகளை நீதித்துறையால் நிலைநாட்ட இயலாது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. தமிழக காவல்துறை ஏறக்குறைய காவிமயமாகி விட்டது.
நல்ல அதிகாரிகள் செய்வதறியாது விழிக்கின்றனர். முதல்வரும் விழிபிதுங்கி நிற்கிறார். தமிழகத்தை சூறையாட வரும் காவிக் கூட்டத்தை எதிர்ப்பதற்கு ஒருவருமே இலர் என்ற சூழலில்தான் திருமாவளவன் களமிறங்கியிருக்கிறார்.
இது பாசிச எதிர்ப்புப் போர். தமிழினத்தை காப்பதற்கான போர். இதில் நாம் அனைவரும் வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைவது காலத்தின் தேவை.
It’s true…I like thiruma brother compared to other party people’s…I’m big fan of your blog news… politics pathi niriya vishayam unga news, YouTube interview videos parthu than therinjukura..keep updated sir…