காங்கிரஸை கருவறுப்போம், என்ற கட்டுரையில், காங்கிரஸ் அரசு வரக்கூடிய மழைக்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சந்திக்கப் போகும் சிக்கல்களைப் பற்றி சவுக்கில் எழுதினாலும் எழுதினோம், ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. நாம் எழுதியதை விட, கூடுதலான சிக்கல்களில் காங்கிரஸ் கட்சி மாட்டிக் கொண்டிருப்பதை நினைத்தால், தமிழர்களாகிய நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது ?
இந்தக் காங்கிரஸ் அரசு கவிழத்தான் வேண்டும் என்பதற்கான மற்றொரு சான்றாக இன்றைக்கு பாராளுமன்றத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை கூறலாம்.
சமல்ராஜபக்சே தலைமையில் இலங்கை எம்.பி.க்கள் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது. அவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் வருகை புரிந்ததாகத் தெரிகிறது. அவர்கள் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக அவைக்கு வந்திருந்தனர். அவர்களை சபாநாயகர் மீராகுமார் வரவேற்று, இலங்கை எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதை அவைக்கு அறிவித்து, அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நடவடிக்கைக்கு, அதிமுக எம்பிக்கள் ‘வெட்கம், வெட்கம்’ என்று கூச்சல் போட்டு, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சேனல் 4, ஆவணப்படத்தைப் பார்த்து, அமெரிக்க நாடாளுமன்றக் குழு, இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிறுத்தியிருக்கிறது.
ஆனால், ஈழப் போரில் இன அழிப்புக்கு துணை போன இந்திய அரசாங்கமோ, இலங்கை சபாநாயகரை வரவேற்று ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறது. இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த, அதிமுக எம்.பிக்களுக்கு சவுக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நடவடிக்கை, காங்கிரஸ் அரசு, தமிழகர்களின் உணர்வுகளுக்கு என்ன விதமான மரியாதையை அளிக்கிறது என்பதை உணர்த்துகிறது.
நாம் ஏற்கனவே சொன்னது போல, மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, பாராளுமன்றத்தை நடைபெற விடாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்பியுள்ளன. இந்த பாராளுமன்றக் கூட்டத் தொடரின், முதல் நாள், பத்திரிக்கையாளர்களை சந்தித்த மன்மோகன் சிங், எதிர்க்கட்சிகள் ஊழலைப் பற்றிப் பேசினால், எதிர்க்கட்சிகளின் ஊழலைப் பற்றி பேச வேண்டி வரும் என்று மறைமுகமான மிரட்டலை விடுத்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த மிரட்டலை பொருட்படுத்துவதாக இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்த இடதுசாரிக் கட்சிகள், எந்த எதிர்க்கட்சிகள் ஊழல் புரிந்திருக்கின்றன என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளான எடியூரப்பாவும் ராஜினாமா செய்திருப்பதால், பாரதிய ஜனதா கட்சியும், மன்மோகன் சிங்கை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த பூகம்பத்தை கிளப்பியவர் ஆ.ராசா. நீதிமன்றத்தில், பிரதமருக்குத் தெரிந்தே அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டன என்று அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. தற்போது, ராசா சொல்லியுள்ள குற்றச் சாட்டுகள் வலுப் பெற்றுள்ளதற்கான காரணம், மன்மோகன் சிங்கின் அந்தரங்க காரியதரிசி, 2ஜி விவகாரம் தொடர்பான கோப்பில் “பிரதமர் இந்த விவகாரம் (ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பானது) அலுவல் ரீதியாக அல்லாமல் தொலைத் தொடர்புத் துறைக்கு தெரியப் படுத்தப் பட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் இது தொடர்பாக எழுத்து பூர்வமான தகவல் எதுவும் வேண்டியதில்லை, ஆனால், தகவலை தெரியப்படுத்தவும். PM wants this informally shared with the Department (of Telecom). (He) does not want a formal communication and wants PMO to be at arm’s length.” என்று எழுதியுள்ள குறிப்பு ஊடகங்களில் வெளியானது ராசாவின் குற்றச் சாட்டுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
போதாத குறைக்கு, இன்றைக்கு 2ஜி விவகாரத்தில் தனது வாதத்தை தொடங்கிய ஷாஹீத் பல்வா, தன் பங்குக்கு பிரதமரையும், இழுத்து விட்டிருக்கிறார். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்ளபடியும், ட்ராயின் பரிந்துரையின் படியும், பிரதமர் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை ஆமோதித்தே வந்திருக்கிறார் என்று வாதாடியிருக்கிறார் ஷாகீத் பல்வா. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் பெரும் லாபத்தை ஈட்டியுள்ள டாடா குழுமத்தினரை, சிபிஐ கைவைக்காமல் இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது என்றும் வாதாடியிருக்கிறார்.
அடுத்த ஆயுதமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்த இருப்பது, அமைச்சரவை குழு கூடி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி, மன்மோகனுக்கு எழுதிய கடிதம். 26 டிசம்பர் 2007 அன்று மன்மோகனுக்கு ராசா எழுதிய கடிதத்தில், பிரணாப் முகர்ஜி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் வானாவதியோடு நடத்திய விவாதத்தில் தானே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆனால், பிரணாப் முகர்ஜி, மன்மோகனுக்கு எழுதிய அலுவலகக் குறிப்பில், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தெளிவான விதிமுறைகளை வகுத்து, வெளிப்படையாக முடிவெடுக்கும் வகையில் கொள்கைகளை மாற்றி, அதை பொது வெளியில் வைக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். பொதுக் கணக்குக் குழு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமரின் அலுவலகம், அமைச்சரவை குழு அமைக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியிடம் இருந்து எந்த வித கடிதமும் வரவில்லை என்று கூறப் பட்டிருக்கிறது. இது தொடர்பாக, சட்டத் துறை அமைச்சர் தனக்கு எழுதிய கடிதத்தில், அமைச்சரவை குழுவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அனுப்பலாம் என்று தெரிவித்திருப்பது, தனது துறையின் அதிகாரத்தை பறிப்பதாகும் என்று ராசா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் வைத்து, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அத்தனை விஷயங்களும், மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே நடந்திருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறுவது சரியானதே.
காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் தலைவலி போதாதென்று, அரசுக்கு தலைவலிகளைத் தருவதையே தனது பணியாகக் கொண்டிருக்கும் மத்திய அரசின் தணிக்கைத் துறை அடுத்த குண்டை வீசியிருக்கிறது. சுரேஷ் கல்மாடியை காமன்வெல்த் விளையாட்டுக்களின் அமைப்புக் குழுவின் தலைவராக நியமிக்க பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவு மிக மிகத் தவறானது, அதுவே, அரசுக் கட்டுப்பாட்டை மீறிய ஒரு அமைப்பாக அமைப்புக் குழுவை செயல்பட வைத்தது என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடியை ‘அமைப்புக் குழு’வின் தலைவராக ஆக்க மன்மோகன் சிங் முடிவெடுத்த போது, அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சுனில் தத் மற்றும் மணி சங்கர் அய்யர் தெரிவித்த எதிர்ப்புக்களையும் மீறி இந்த நியமனம் நடந்திருக்கிறது.
2ஜி விவகாரம், காமன் வெல்த் விளையாட்டு ஆகிய இரண்டு விவகாரங்களையும் எடுத்துக் கொண்டால், மன் மோகன் சிங் நினைத்திருந்தால், இரண்டு ஊழல்களையும் தடுத்திருக்க முடியும். ஆனால் ஏன் அதைச் செய்யத் தவறினார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பத்தானே செய்யும் ?
இந்த விவகாரம் மன்மோகன் சிங்குக்கும், ப.சிதம்பரத்துக்கும் தெரியாமல் நடந்திருக்காது என்பதற்கான சான்றாக, 15 ஜனவரி 2008 அன்று அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். அந்தக் கடிதத்தில் சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் மிக மிக அரியதொரு சொத்து. அந்த சொத்தை கவனமாக வழங்க வேண்டும் என்று எழுதிய அதே நேரத்தில், இந்த விவகாரத்தை (ஸ்பெக்ட்ரம் வழங்குவது) முடிந்து விட்டதாக கருதவும் என்று மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் இதற்கு ஆதாரமாக காட்டப் படுகிறது. இது செட்டிநாட்டு சீமானுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இத்தனை விவகாரங்கள் பற்றித் தெரிந்திருந்தும், காதில் எதுவுமே விழாதது போல, காந்தியின் குரங்கு பொம்மைகளைப் போன்று இருக்கும் மன்மோகன் சிங்கைத் தான், ஊமை ஊரைக் கெடுக்கும் என்று விரிவாக அலசியிருந்தோம். அந்த அலசல் சரியானதே என்பது இப்போது ஊர்ஜிதமாகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு நிதி அமைச்சர், ஏலம் விடாத காரணத்தால் கடும் நஷ்டம் ஏற்படும் என்பது தெரிந்தும், அமைதியாக இந்த விவகாரத்தை முடிந்து விட்டதாக கருதுமாறு கூறியிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப் படும்.
விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விவகாரங்களையும், வாக்கெடுப்போடு கூடிய கேள்வியாக எழுப்ப, பாரதிய ஜனதா கட்சி சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
அடுத்த அஸ்திரத்தை காங்கிரஸ் மீது, அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வீச இருக்கிறார்கள். ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, லோக் பால் மசோதா விவகாரத்திலும் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறது. அன்னா ஹசாரே, சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த் மற்றும் சாந்தி பூஷண், அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி உள்ளிட்டோர் தங்கள் பங்குக்கு லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, ஆகஸ்ட் 16 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு பாரதீய ஜனதா மற்றும் இடது சாரிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர். இதுவும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும்.
அதிமுக, மற்ற எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை ஒரு அணியில் திரட்ட முடிந்தால், இந்த மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே காங்கிரஸ் அரசுக்கு சங்கு ஊதி விடலாம்.