வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று டிசம்பர் 1 முதல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்த போராட்டம் ஜனவரியிலும் தொடரும் என்று கூறியுள்ளார் மருத்துவர்.
கடந்த 22 நவம்பர் 2020 அன்று, நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், இந்த போராட்டம் தொடர்பாக, மருத்துவர் ராமதாஸ் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.
“போராட்டம் என்பது நமக்கு லட்டு தின்பதைப் போன்றது. 1987ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் என்ற மிகக்கடுமையான போராட்டத்தை நடத்தினோம். இப்போது அதைவிட மிகக்கடுமையான போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிறோம் என்று இந்தக் கால இளைஞர்கள் எனக்கு சவால் விடும் வகையில் கூறுகின்றனர்.
வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டு இன்றைய இளைஞர்கள் கொதித்துபோய் இருக்கிறார்கள். அய்யாவையே ஏமாற்றுகிறார்களா என்று ஆவேசமடைந்துள்ளனர். அவர்களை திரட்டிதான் மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம். குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது போன்று, குஜ்ஜார் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியது போன்று நமது போராட்டமும் மிக கடுமையாக இருக்கும்.
நாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்று கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம்
நாம் அனைத்து வகைகளிலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் அதனால் தான் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தை நடத்த உள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம். நல்ல பதில் கிடைக்காவிட்டால் நாம் நடத்தும் போராட்டம் மிக கடுமையாக இருக்கும்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தாழ்மையுடன் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்குங்கள். கலைஞர் எங்களுக்கு அழுகிய கனியை கொடுத்தார். நீங்கள் நல்ல சேலத்து மாங்கனியை கொடுங்கள் என்று கேட்கிறோம்.
வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற கோரிக்கை மிகவும் குறைவுதான். மக்கள் தொகைப்படி பார்த்தால் எங்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.”
மேலும் தொடர்வதற்கு முன்பு மருத்துவர் அய்யாவின் வரலாறு குறித்து 2011ல் எழுதப்பட்ட கட்டுரையை படித்து விடுங்கள்.
இது எப்படிப்படிப்பட்ட நியாயமற்ற கோரிக்கை என்று யோசித்துப்பாருங்கள். வன்னியர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், இதர சமூகத்தினர் என்ன செய்வார்கள் ?
இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது திடீரென ராமதாஸ் வன்னியர்களுக்கான 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? தேர்தல் பேரத்தை அதிகரிப்பது அல்லாமல் வேறு எதற்கும் இருக்க முடியாது. தொடர்ந்து சட்டப்பேரவை மற்றும், பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாமகவின் பேர வலிமையை அதிகரிப்பது மட்டுமே நோக்கமல்லாமல் வேறு எதுவும் இருக்க முடியாது.
மேலும், அமித் ஷாவின் வருகைக்கு பின்னால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்க வாய்ப்பில்லை. தன் பேர வலிமையை அதிகரிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே வன்னிய மக்களை அடகு வைக்க மருத்துவர் முடிவெடுத்து விட்டார்.
இன்று மருத்துவர் ராமதாஸ் முன்னெடுக்க இருக்கும் போராட்டம் அவரின் முழுமையான சுயநலத்துக்காகவே. 2006ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் 96 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்றிருந்தது. காங்கிரஸ், 34 எம்.எல்.ஏக்களை பெற்றது. பாமக வசம் அன்று 18 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். வன்னியர் சமூக மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்று இன்று ஒப்பாரி வைக்கும் ராமதாஸ், அன்று வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, இதை நிறைவேற்றினால்தான் ஆட்சிக்கு ஆதரவு என்று அழுத்தம் தந்திருக்கலாம். செய்தாரா ? ஏன் செய்யவில்லை ?
32 ஆண்டுகளில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறாரா என்றால் இல்லை.
எண்பதுகளில் நடந்த போராட்டத்தை விட மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் ராமதாஸ். 32 ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸின் சொத்து என்ன ? இன்று அவரின் சொத்துக்கள் என்ன ? ஒரு சிறிய கட்டிடத்தில் ஏழைகளுக்காக மருத்துவம் பார்த்த மருத்துவரா அவர் இன்று ?
ராமதாஸின் தொடக்கமே நில அபகரிப்புதான். 1888ம் ஆண்டில், வன்னியர்களுக்கென்று, “சென்னை வன்னியகுல சத்திரிய மகாசங்கம்” என்ற ஒரு சங்கம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த சங்கத்தின் பெயரில் தமிழகமெங்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. இச்சங்கத்தின் சார்பில் வங்கியும் நடத்தப்பட்டது. அறுபதுகளில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது இந்த வங்கியும் அரசால் கையகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, சென்னை வன்னியகுல சத்திரிய மகாசங்கத்தின் நிர்வாகம் சரிவர நடத்தப்படாமல் போகவே, ஒரு கட்டத்தில் இச்சங்கமே காணாமல் போனது. தமிழகமெங்கும் பரவிக் கிடந்த இந்த சங்கத்தின் கோடிக்கணக்கான சொத்துக்கள் பராமரிப்பின்றி கிடப்பில் இருந்தன.
இந்த நிலையில்தான், எண்பதுகளில், வன்னியர் சங்கத்தின் பெரும் தலைவராக ராமதாஸ் உருவெடுக்கிறார். தொடக்ககாலத்தில், தேர்தல் புறக்கணிப்பை வன்னியர் சங்கம் கொள்கையாக வைத்திருந்தது. வன்னியர்களின் ஒரே தலைவராக ராமதாஸ் உருவெடுக்கிறார்.
இச்சொத்துக்கள் பராமரிப்பின்றி வீணாவதை கண்டு மனம் வருந்திய பலர், இச்சொத்துக்களின் விபரங்களை மருத்துவர் ராமதாசிடம் தெரிவிக்கின்றனர். ராமதாஸ் என்ன செய்தார் தெரியுமா ? அவரின் வன்னியர் சங்கத்தில் இருந்த முக்கிய நிர்வாகிகளிடம், இதில் பல சொத்துக்களை ஆக்ரமிக்க உத்தரவிடுகிறார். 87ல் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி மிகப் பெரும் போராட்டத்தை நடத்துகிறார் ராமதாஸ். வட தமிழகமே ஸ்தம்பித்தது. பலர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். பின்னர் ஆட்சிக்கு வந்த கலைஞர் “மிகவும் பிற்படுத்தப்பட்டோர்” என்று ஒரு தனிப் பிரிவை உருவாக்குகிறார்.
இந்த வெற்றியை அறுவடை செய்யவே, 1989ல் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்குகிறார் ராமதாஸ். சென்னை வன்னியகுல சத்திரிய மகாசங்கத்துக்கு சொந்தமான பல சொத்துக்கள், பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகங்களாக மாறின. இப்படி காடுவெட்டி குரு சென்னை மைலாப்பூரில் ஆக்ரமித்திருந்த ஒரு சொத்து மார்வாடிக்கு விற்கப்பட்டது.
வன்னியர்களின் ஒரே தலைவனாக உருவெடுத்த ராமதாஸ், இந்நன்மதிப்பை அறுவடை செய்வதற்காக 24 ஜூன் 2000 அன்று, ஒரு அறக்கட்டளையை தொடங்குகிறார். “வன்னியர் கல்வி அறக்கட்டளை” என்பது இதன் பெயர். பொதுமக்களின் நலனுக்காக, சமூக சீர்திருத்தத்துக்காக, கல்வி முன்னேற்றத்துக்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டதாக என தெரிவிக்கப்பட்டது. அறக்கட்டளையை தொடங்க ராமதாஸ் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார்.
அந்த அறக்கட்டளையில் முக்கிய விதியாக ஒன்றை சேர்த்தார் ராமதாஸ். மருத்துவர் ராமதாஸ் தான் வாழ்நாள் வரையில் இதன் நிர்வாகியாக இருப்பார். அடுத்த நிர்வாகி யார் தெரியுமா ?
அவர் மகன் அன்புமணி ராமதாஸ். அவரும் வாழ்நாள் முழுக்க நிர்வாகியாம்.
வன்னியர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக என்று தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்கு, லட்சக்கணக்கான வன்னியர்கள் தாங்கள் உழைத்த பணத்தை நிதியாக அளித்தார்கள்.
இன்று இந்த அறக்கட்டளையின் மதிப்பு பல நூறு கோடிகள். இந்த அறக்கட்டளையின் பெயரில் திண்டிவனத்தில் மட்டும் 250 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த அறக்கட்டளையின் சார்பில் ஒரு சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அதைச் சொல்லியும் நிதி வசூல் செய்யப்பட்டது. லட்சக்கணக்கானோர் நிதியை அள்ளி அள்ளி கொடுத்தனர். சட்டக் கல்லூரியும் தொடங்கப்பட்டது. அந்த சட்டக்கல்லூரிக்கு, வன்னியர் சமூகத்துக்காக போராடிய மூத்த தலைவர்களின் பெயரை வைக்கவில்லை. 87 போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகளின் பெயரை வைக்கவில்லை.
தன் மனைவி சரஸ்வதியின் பெயரை வைத்தார் ராமதாஸ். சரஸ்வதி என்ன அரசியல் சாசன நிபுணரா ? உச்சநீதிமன்ற நீதிபதியா ?
மனைவி பெயரில் கல்லூரி கட்டுவதற்கா லட்சக்கணக்கான வன்னியர்கள் நிதியளித்தார்கள் ?
இது மட்டுமல்ல தோழர்களே. வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயரை, “ராமதாஸ் அறக்கட்டளை” என்று பெயர் மாற்றம் செய்தார் ராமதாஸ். எத்தகைய மோசடி இது ? இது ஊடகங்களில் செய்தியாகி சர்ச்சை ஆனது. இதைத் தொடர்ந்து, ராமதாஸ், பாமகவின் கோ.க.மணியை விட்டு ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார்.
“வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களின் கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும். மருத்துவர் அய்யா அவர்களுக்கு தற்போது முத்துவிழா ஆண்டு நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான மருத்துவர் அய்யாவின் பெயரை அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், அறக்கட்டளையின் அறங்காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ள போதிலும், அதன் நிர்வாகத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவர் வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.. அந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவர் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே மருத்துவர் அய்யா செயல்பட்டு வருகிறார். அன்றாட நிர்வாகத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யாவின் பெயரை சூட்டியதில் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்.”
“அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவர்” ராமதாஸ் என்கிறார் கோ.க.மணி.
கோடிக்கணக்கான சென்னை வன்னியகுல சத்திரிய மகாசங்கத்துக்கு சொந்தமான சொத்துக்களை ஆட்டையை போட்டதைத் தவிர, மகனை மத்திய அமைச்சராக்கி கோடிகளை குவித்ததை தவிர, மத்திய அமைச்சரவையில் பெட்ரோலிய துறைகள் உள்ளிட்ட துறைகளை பெற்று, கோடீஸ்வர குடும்பம் ஆனதைத் தவிர ராமதாஸ் அப்படி என்ன தியாகங்களை செய்து விட்டார் ?
அன்பார்ந்த வன்னிய சகோதரர்களே. உங்கள் பெயரை பயன்படுத்தி, தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொண்டதைத் தவிர, வன்னிய மக்களுக்காக ஒரு துரும்பையும் ராமதாஸ் கிள்ளிப்போட்டதில்லை.
இவர் பேச்சைக் கேட்டு, பேருந்துகளை எரித்து, வன்முறையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான வன்னிய இளைஞர்கள் இன்றும் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வி நிலையங்கள் கட்டுகிறேன் என்று ஒரு புறம் கூறிக் கொண்டே வன்னிய இளைஞர்களை வன்முறையில் ஈடுபடவைத்து அவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்குகிறார்.
ராமதாஸ் உங்களை தவறாக வழிநடத்துகிறார். உங்கள் உணர்ச்சியை தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்.
தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் க்ளாஸும் போட்டுக் கொண்டு வன்னிய பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்று இவர் பேசியதை விட வன்னிய இன பெண்களை இழிவுபடுத்த முடியுமா ? ஒரு ஜீன்ஸ் பேண்ட்டுக்கும், கூலிங் க்ளாசுக்கும் வன்னிய பெண்கள் மயங்குவார்கள் என்பதுதானே இதன் பொருள் ?
ராமதாஸின் வார்த்தை ஜாலங்களை கண்டு ஏமாறாதீர்கள் தோழர்களே. வன்னிய மக்களை வட்டிக் கடையில் அடகு வைத்து பணம் சம்பாதிக்கவே ராமதாஸ் போராட்டம் அறிவித்திருக்கிறார். வேறு எந்த நோக்கமும் இல்லை.
இதர சமூகத்தினரோடு ஒப்பிடுகையில், வன்னிய சமூகம் இன்றும் பின்தங்கியுள்ளது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. உங்களை முன்னேற்றுவது கல்வி மட்டுமே. வெறி கொண்டு படியுங்கள். கல்வியால் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். ராமதாஸின் பின்னால் சென்றால் உங்கள் எதிர்காலம் சூனியமாகி விடும்.
ராமதாஸ் ஈடுபட்ட நில மோசடிகள், சொத்து அபகரிப்புகள் குறித்து அடுத்த கட்டுரை விரைவில்.