ஆகஸ்ட் 15ல், யார் அதிமுகவின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை எழுந்ததன் பின்னால், கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், முழுமையான வெற்றி எடப்பாடிக்கே என்பதை உறுதியாக நிரூபித்தார் எடப்பாடி பழனிச்சாமி
2021 தேர்தல் வரவிருப்பதால் அரசியல் ஆலோசகர் சுனில் கனுகொலு உதவியுடன், பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி, தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக நிரூபிக்க கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார் எடப்பாடி.
திடீரென்று பிஜேபியை கடுமையாக எதிர்க்கும் மதச்சார்பின்மையின் காவலனாக தன்னை காட்டிக் கொள்வார். அடுத்த கணம் பிஜேபியின் சொல்லுக்கு அடிபணிவார். ஒரு புறம் அதிமுக நாளிதழில் பிஜேபியை கடுமையாக கண்டித்து கட்டுரை எழுத வைப்பார். மறுபுறம் இந்தியாவே எதிர்க்கும் விவசாயிகள் மசோதாவை பாராட்டி புகழாரம் சூட்டுவார்
ஆனால் இந்த வேடங்கள் எல்லாம் கடந்த சனிக்கிழமை அன்று அம்பலமானது. அவரின் முகத்திரை கிழிந்தது. அதிமுகவின் 49 ஆண்டுகால சரித்திரத்தை ஒரு அரசு விழாவில் அமித் ஷா முன்பாக எடப்பாடி.
அமித் ஷா வருகையை ஒட்டி, கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுமா என்று பரபரப்பு நிலவியது. அரசு விழா தொடங்கும் சில மணி நேரங்கள் முன்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அதிமுக தலைவர்கள், “கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்னும் காலம் இருக்கிறது. தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பே இல்லை” என்று அறுதியிட்டு கூறினார்கள்
ஆனால் அந்த அரசு விழாவில் நடந்ததோ வேறு. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபியுடனான கூட்டணியைத் தொடரும் என்றார். அவரை அடுத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை வழிமொழிந்தார். இது ஒரு அரசு விழாவாயிற்றே இங்கே அரசியல் கூட்டணி பற்றி பேசலாமா என்று எவ்வித அசூயையும் ஒருவருக்கும் இல்லை. பெரும்பாலான அதிமுக தலைவர்களுக்கும், பிஜேபி தலைவர்களுக்கும் அதிர்ச்சி. ஒருவருமே இதை எதிர்ப்பார்க்கவில்லை.
என்னதான் அமித்ஷா பாஜகவின் மூத்த தலைவர் என்றபோதும், அவர் அந்த அம்மேடையில் உள்துறை அமைச்சராகவே அமர்ந்திருந்தார். அந்த மேடையும் அரசியல் மேடையோ, தேர்தல் பிரசாரக் கூட்ட மேடையோ அல்ல. அது அரசு விழாவுக்கான மேடை. அங்கு இப்படியான ஒரு அறிவிப்பு அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.
அமித் ஷா இந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பும் முன்னெப்போதும் இல்லாதது. உள்துறை அமைச்சரான பிறகு இதற்கு முன்பும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். 2019 ஆகஸ்ட் மாதம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அப்போதெல்லாம் இந்தளவுக்கான வரவேற்பு இல்லை. சென்னையின் விமான நிலையம் அமைந்திருக்கும் ஜிஎஸ்டி சாலை பல மணி நேரம் போக்குவரத்தால் திக்கித் திணறியது. பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். ஆம்புலன்ஸ்களும் நகர முடியாமல் அவதிப்பட்டன.
தமிழ்நாடு என் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை ஆணவத்தோடு பறைசாற்றும் வகையில், அமித் ஷா தனது கான்வாயை நிறுத்தி சாலையில் இறங்கி நடந்தார்.
சாலையின் இரு புறங்களும் அதிமுக தொண்டர்கள் அதிமுக கொடிகளோடு நின்றிருந்தனர்.
திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் கூட்டணிகளை அறிவிப்பதில் ஒரே வித முறையை பின்பற்றி வந்துள்ளன. கட்சியின் உயர்மட்டக் குழு அல்லது நிர்வாகக் குழுவினர் முன்னிலையில் ஆலோசனை நிகழ்த்தப்பட்டு கூட்டணிக் கட்சித் தலைமைக்கு அறிவிக்கப்படும். அதிமுகவிலும் உயர்மட்டக் குழு, நிர்வாகக் குழு புதிதாய் உருவாகியுள்ள வழிகாட்டுக் குழு எல்லாம் இருந்தும், இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இந்தக் குழுக்களை எல்லாம் கலந்தாலோசிக்காமல் தங்களுடைய கூட்டணி குறித்து அறிவிப்பினை வெளிப்படுத்த ஒரு அரசு விழாவினைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவராலும் வெளியிடப்பட்ட கூட்டணி அறிவிப்பு என்பது அமித் ஷா தமிழ்நாட்டு வருகையை ஒட்டி முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டதுதான். இது திடீர் அறிவிப்பெல்லாம் இல்லை.
பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணியாதவர் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்க முதல்வர் இபிஎஸ் முயன்று கொண்டிருந்தார். ஆனாலும் பிஜேபியின் வழி செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எடப்பாடி சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்கள் அத்தகையவை.
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வரும் ஜனவரி இறுதியில் அவர் வெளிவந்து விடுவார். அவருடைய உறவினர் டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடியின் தலைமைக்கு டிடிவி சவாலாக உருவாக எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன. டிடிவி தரப்புக்கு பிஜேபி ஆதரவு தரும் பட்சத்தில், தன்னை ஒரு பெரும் ஆளுமையாக கருதிக் கொள்ளும் எடப்பாடி தன் தலைமைப் பதவியையே தியாகம் செய்ய வேண்டிய சூழல் எழும்.
எடப்பாடி பழனிச்சாமி மீதே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அது உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது தவிர, எடப்பாடியின் பெரும்பாலான அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
ஆர்கேநகர் தொகுதி வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பண விநியோகம் செய்ய முயன்று, அதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கிய வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது. இதில் விசாரணை நடந்தால், எடப்பாடி உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள். , இவ்வழக்குகளுக்கு மோடி எப்போது வேண்டுமானாலும் உயிர் கொடுக்க முடியும்.
இந்தச் சூழலில், எடப்பாடி பழனிச்சாமி முன்பு இருக்கும் வாய்ப்பு பிஜேபிக்கு வெண்சாமரம் வீசுவது அல்லது பாழும் கிணற்றில் விழுவது மட்டுமே.
பிஜேபியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு மீதமுள்ள கட்சிகளை இணைத்து அவர் தேர்தலை சந்திக்க முடியும். கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பாமக இதற்கு உடன்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் அன்புமணி ராமதாசும் சிபிஐ வழக்குகளை சந்தித்து வருகிறார். பிஜேபி அல்லாத கூட்டணி என்று எடப்பாடி முடிவெடுப்பாரேயானால், பிஜேபி துளியும் தயங்காமல் பிஜேபியின் கூலிப்படைகளை அவர் மீது ஏவி விடும். கூலிப்படைகள் என்றால் என்ன என்று வியக்காதீர்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும், மிக முக்கிய துறையான நீதித்துறை.
மாறாக அவர் பிஜேபியோடு அணுக்கமாக இருந்தால், இந்த கூலிப்படைகளுக்கு வேலை இருக்காது.
ஒருவேளை பிஜேபியுடன் அமைந்த கூட்டணி அவருக்கு 2021 தேர்தலில் தோல்வியை தந்தால் என்ன நடக்கும் ?
1996ல் நடந்தது போல திமுக லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மீது வழக்குகளை பதிவு செய்யும். கைதுப் படலம் நடக்கும் என்பதை எடப்பாடி நன்றாகவே அறிவார்.
ஆனால் 2024 வரை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி அவருக்கு ஆதரவாக களமிறங்கும். இதன் காரணமாக அந்த ஆபத்திலிருந்து ஓரளவுக்கு தப்பிக்க முடியும்.
2001ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நடுஇரவில் கைது செய்த சம்பவம் இதற்கு ஒரு உதாரணம். இந்தியாவின் மூத்த தலைவரான கருணாநிதி நள்ளிரவில் பலவந்தமாக ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த கைது சமயத்தில் மத்திய கேபினெட் அமைச்சர்களாக இருந்த டி.ஆர்.பாலு மற்றும் முரசொலி மாறனும் காவல்துறையால் தாக்கப்பட்டனர்.
அப்போது திமுக, மத்தியில் பிஜேபியுடன் கூட்டணி அமைச்சரவையில் பங்கெடுத்திருந்தது. கலைஞர் கைதினை தொடர்ந்து, அந்த கைது சமயத்தில் வன்முறையை பிரயோகித்த ஐபிஎஸ் அதிகாரிகளான முத்துக்கருப்பான், ஜார்ஜ் மற்றும், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு நியமித்து பிஜேபி அரசு உத்தரவிட்டது. மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது.
விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த ஜெயலலிதா பின்வாங்கினார். கலைஞர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். மத்திய அரசின் ஆதரவு அப்போது கிடைக்காமலிருந்தால் கலைஞர் அவ்வளவு விரைவாக விடுதலை செய்யப்பட்டிருப்பாரா என்பது சந்தேகமே.
2014க்கு பிறகு மாநில அரசுகளின் அதிகாரங்களை பிஜேபி அரசு கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டு வருகிறது. தேசிய புலனாய்வு முகமை சட்டம் இதற்கு ஒரு உதாரணம். இது வரை எந்த விசாரணையாக இருந்தாலும் மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை மாநில அரசின் அனுமதி பெற்ற பிறகே விசாரணை செய்யப்படும் என்று இருந்த நிலையை பிஜேபி அரசு மாற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுகவும் ஆதரவு அளித்தது என்பதுதான் விசித்திரம்.
நடப்பு காலத்துக்கு வருவோம். மகாராஷ்டராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவர் கேட்டுக் கொண்டதன்படி சிவசேனா அரசு பதவி ஏற்றதும் பீமா கோரேகான் வன்முறை வழக்கினை மராட்டிய அரசு மறுபரீசலனை செய்யத் தொடங்கியது. இவ்வழக்கில், சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்தம்டே, வரவர ராவ் போன்ற இந்தியாவின் முக்கியமான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆதாரங்கள் ஏதுமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள்.
உடனடியாக பிஜேபி களத்தில் குதித்தது. இந்த வழக்குகளை என்ஐஏவுக்கு மாற்றியது. இந்த என்ஐஏவுக்கு இருக்கும் எல்லையில்லா அதிகாரத்தினால் ‘தீவிரவாத செயல்பாடுகள்’ என்ற பெயரில் அவர்கள் மேல் விசாரணைகள் நடத்தலாம். அந்த விசாரணை பற்றிய தகவல்களை மாநில அரசு உட்பட எவருக்கும் சொல்ல வேண்டியதில்லை.
இதே போல, திமுக அரசு, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை “தீவிரவாத கோணம்” இருக்கிறது என்ற காரணம் காட்டி மத்திய அரசு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். ஊழல் வழக்கில் எப்படி தீவிரவாத கோணம் வரும் என்று நீங்கள் கேட்கலாம். கேரளாவில் ஒரு சாதாரண தங்கக் கடத்தல் வழக்கை மத்திய அரசின் என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டதல்லவா ? அது போல ஊழல் வழக்கை என்.ஐ.ஏ எடுத்துக் கொள்ளாது என்பதற்கு என்ன உத்தரவாதம் ? எந்த விதமான நியாய தர்மங்களையும் கடைபிடிக்காத ஒரு பாசிச அரசு எதுவும் செய்யும்.
இந்த சூழலில்தான் எடப்பாடி பழனிச்சாமி பிஜேபியின் காலடியில் அதிமுகவை அடகு வைக்க முடிவெடுக்கிறார்.
அரசு விழாவில் இந்த கூட்டணி அறிவிப்பு முடிந்ததும், அமித் ஷா தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலில் பல சந்திப்புகள் நடந்தன.
அதிமுகவின் தேர்தல் உத்திகளை வகுப்பவரான சுனில் கனுகுலு முதலில் அமித் ஷாவுடன் தனியே சந்திப்பு நடத்தினார். இந்த சுனில் கனுகுலு, 2014 பிஜேபி தேர்தல் பிரச்சார அணியில் பிரசாந்த் கிஷோரோடு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, முதல்வர் எடப்பாடி மற்றும் சுனில் ஆகியோர் அமித் ஷாவை தனியே சந்தித்துப் பேசினர். இதையடுத்து, எடப்பாடி, பன்னீர்செல்வம் மற்றும், சுனில் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புகளில், சுனில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
தேர்தலில் திமுகவை வீழ்த்த என்னென்ன வியூகங்களை வகுத்திருக்கிறீர்கள் என்று அமித் ஷா கேட்டபோது, சுனில் இது வரை வகுத்துள்ள வியூகங்களை அவரிடம் விளக்கினார். இந்த வியூகங்கள் அமித் ஷாவை திருப்திப்படுத்தவில்லை. கூட்டணி மற்றும் வியூகங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அமித் ஷா மூவரிடமும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷா கூறியதற்கு பொருள் என்னவென்றால், தமிழக தேர்தலுக்கான உத்திகளை அதிமுக உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து நான் வகுக்கிறேன். நான் சொல்வதை அப்படியே பின்பற்றுங்கள் என்பதே.
மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க வேண்டும் என்று கடும் முயற்சிகளை எடுத்து வரும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அமித் ஷாவை சந்திக்க எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை.
இந்த சந்திப்புக்கு முன்பாக பிஜேபியை சேர்ந்த 200 உறுப்பினர்களுடன் ஒரு கூட்டம் நடந்தது. அதில் பிஜேபியில் சமீபமாக சேர்ந்த பல திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றிருந்தானர். அமித் ஷா முன்பு பேச இவர்களுள் நடிகை கவுதமியை தமிழக பிஜேபி தலைவர் முருகன் பரிந்துரைத்திருந்தார். அமித் ஷா முன்பு எழுந்து பேசிய கவுதமி, தமிழக ஊடகங்கள் பிஜேபிக்கு எதிராக இருப்பதாகவும், தனியாக பிஜேபிக்கென்று ஒரு டிவி சேனல் தொடங்க வேண்டும் என்றும் பேசினார். மேலும், தங்களைப் போன்ற திரை நட்சத்திரங்களை, கட்சி உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இவர்கள் பேசி முடித்ததும் இறுதியாக பேசிய அமித் ஷா, தனக்கே உரிய பாணியில் “பிஜேபி திரை நட்சத்திரங்களை நம்பி இல்லை. தொண்டர்களை நம்பி இருக்கும் கட்சி. தொண்டர்களின் உழைப்பில் இந்த கட்சி வளரும்” என்று கூறி முடித்தார்.
இதன் பின்னர், பிஜேபியின் முக்கிய தலைவர்களோடு தனியாக சந்திப்பு நடத்தினார் அமித் ஷா. இச்சந்திப்பில் கீழ்கண்டவர்கள் கலந்து கொண்டார்கள். பி.எல் சந்தோஷ், சி.டி ரவி, அண்ணாமலை, போன். இராதாக்ருஷ்ணன், எல்.முருகன், எஸ். குருமூர்த்தி, ஸ்ரீநிவாசன் (குருமூர்த்தியின் மகன்), பி. சுதாகர் ரெட்டி, இல.கணேசன், விபி.துரைசாமி, கே.டி. இராகவன், கரு.நாகராஜன் மற்றும் தமிழ்நாடு பிஜேபியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமித்ஷாவிடம் ஒரு கோப்பு ஒப்படைக்கப்பட்டது அதில் தமிழ்நாட்டின் மொத்தத்த 234 தொகுதியையும் A, B, C என்று பட்டியலிட்டிருக்கின்றனர். A என்பது பிஜேபி ஜெயிப்பதற்காக அதிக வாய்ப்புள்ள தொகுதிகள். B என்பது கூட்டணி கட்சிகளின் உதவியோடு வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள். C பிரிவு தொகுதிகள் பிஜேபி வெற்றி பெற வாய்ப்பேயில்லாத தொகுதிகள்.
இதனை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபின் சில கேள்விகளை அமித்ஷா கூட்டத்தில் இருந்த உறுப்பினர்களிடம் எழுப்பியிருக்கிறார். இந்தத் தொகுதிகளில் உள்ள சாதி விகித கணக்குகள், உள்ளூர் தலைமைகளின் பலம் என்றெல்லாம் கேட்க, ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. கோபத்தில் கோப்பை வீசியெறிந்தார் அமித் ஷா.
கட்சியை கீழ்மட்டத்தில் பலப்படுத்துவதில் ஒருவருக்கும் ஆர்வம் இல்லை. எல்லோரும் மேம்போக்காக வேலை பார்க்கிறீர்கள் என்று கோபத்தோடு கூறினார் அமித் ஷா.
2021 தேர்தலை தனியாக சந்திக்கலாம் என்று குழுவில் சிலர் கூறியதையும் அமித் ஷா நிராகரித்தார். பிஜேபியின் கட்சித் தலைமைகள் அந்தந்த மாவட்டத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிராகரித்து, “உங்கள் யாருக்கும் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை’ என்று எரிச்லோடு கூறியிருக்கிறார் அமித் ஷா.
‘வேல் யாத்ரா’ நடத்துவதோ, மாநிலங்களுக்குள் கலவரம் செய்வதோ தமிழகத்தில் எந்த பயனையும் தராது. கட்சியை கீழ்மட்டத்தில் பலப்படுத்துவதையும், பூத் கமிட்டி அளவில் பணியாற்றுவது மட்டுமே கட்சியின் வெற்றிக்கு உதவும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்.
“கூட்டணி, தொகுதி பங்கீட்டு விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியை மட்டும் பாருங்கள். வெறும் 0.3 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த திரிபுரா மாநிலத்தில் இன்று மாநிலத்தை ஆளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இது கடின உழைப்பினால் மட்டும் நடந்தது. வேல் யாத்திரையாலும், நட்சத்திரங்களின் புகழாலும் அல்ல” என்று பட்டவர்த்தனமாக கூறினார் அமித் ஷா.
இறுதியாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அமித் ஷாவை தனிமையில் சந்தித்தார். அப்போது தமிழக பிஜேபியின் செயல்பாடுகள் குறித்து தன்னுடைய மதிப்பீடுகளை கூறினார். பிஜேபி நடத்திய ‘வேல் யாத்ரா’வினால் எந்த பயனும் இல்லை என்றும், சிறு வன்முறை ஏற்பட்டிருந்தால் கூட கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் குறித்தும் பேசியிருக்கிறார்கள். கோவிட் 19க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை ரஜினிகாந்த் வெளியில் வரப்போவதில்லை என்றும் அவரால் கட்சிக்கு எந்த ஆதரவும் தர முடியாது என்றும் கூறினார் குருமூர்த்தி. ரஜினியுடன் ஏற்கனவே இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகளைத் தான் முடித்ததாகவும், பிஜேபிக்கு ஆதரவளிப்பேன் என்று ரஜினி எங்குமே ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். ரஜினி நிச்சயம் பிஜேபிக்கு வருவார் என்று கடைசி வரை சொல்லி வந்தது குருமூர்த்திதான். ரஜினியின் இறுதி முடிவை குருமூர்த்தி தெரிவித்ததும், அவரும் அமித் ஷாவிடம் சரியாக வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சந்திப்பு முடிந்தபோது விடியற்காலை 3. வாடிய முகத்தோடு குருமூர்த்தி அமித் ஷா அறையை விட்டு வெளியேறிதாக ஒரு உளவுத் துறை அதிகாரி கூறுகிறார்.
அமித் ஷாவின் தமிழக வருகை குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய தலைவர் ஒருவர், “2024 தேர்தலில் தமிழ்நாட்டை முக்கிய மாநிலமாக அமித் ஷா பார்க்கிறார். 2024ல் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க மோடி தேர்தலில் போட்டியிடுவார். மூன்றாவது முறை வாக்கு கேட்கையில் ஆங்கிலத்தில் Double anti-incumbency என்ற அயற்சி வாக்காளர்களுக்கு ஏற்படும்.
2014ல் பெருவாரியாக மோடிக்கு வாக்களித்த மாநிலங்கள் பலவும் 2024 தேர்தலில் அதே ஆதரவை தரும் என்று சொல்லவியலாது. அதனால் கேரளா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு போன்றவற்றில் 2024ல் வெற்றியை அமித் ஷா எதிர்பார்க்கிறார். தமிழ்நாட்டின் மீது கண் வைத்திருக்கும் அமித்ஷா இங்குள்ள தேர்தல் கூட்டணிகள், விவகாரங்கள் போன்றவற்றை தானே தனிப்பட்ட முறையில் கையாள்கிறார். நவம்பர் 21 அன்று அவர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்ததே முதலில் இங்குள்ள நிலவவரத்தைத் தெரிந்து கொள்ளத் தான்” என்றார்.
மேலும் பிஜேபி வட்டார தகவல்கள் சொல்வது “முக அழகிரியைப் பொறுத்தவரை சில ஊடகங்கள் சொல்வது போல பிஜேபியுடன் கைகோர்க்க அவர் தயங்குகிறார் என்பது உண்மையல்ல. ஆனால் வரும் தேர்தலில் அவர் துருப்புச் சீட்டாக பயன்படுவார். அழகிரி நிச்சயமாக “கலைஞர் திமுக” என்றோ, அல்லது வேறு பெயரில் ஒரு கட்சியை தொடங்கியோ, பிஜேபியுடன் சேருவார் என்றும் அது திமுக குடும்பத்துக்கு அதிர்ச்சியைத் தரும் என்றும் சொல்லப்படுகிறது.
2021 தேர்தலுக்கான பிஜேபியின் திட்டங்கள் திமுகவை வலுவிழக்கச் செய்வது. திமுகவில் இருந்து பல தலைவர்களை பிஜேபிக்கு இழுப்பது. பிஜேபியின் கூலிப்படைகளான, சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவு, வருவாய் புலனாய்வுப் பிரிவு, ஆகியவற்றை திமுகவின் முக்கியா தலைவர்கள் மீது ஏவி விட்டு, திமுகவை நிலைகுலைய வைக்க வேண்டும் என்பதே பிஜேபியின் திட்டம்.
தான் கூட்டணி சேர்ந்த கட்சிகளையெல்லாம், கரையான் போல அரித்து அழிப்பதுவே பிஜேபியின் தந்திரம். இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட வேறு எந்தவொரு கட்சியும் இருக்கவே கூடாது என்ற பாசிச எண்ணமே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியின் அடிப்படை கொள்கை. சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில், நிதிஷ் குமாரின் சரிவை நாடு கண்கூடாக பார்த்தது.
இவையெல்லாம் எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தெரியாதா என்றால் நன்றாகவே தெரியும். ஆனால், அதிமுக என்ற கட்சியை விட, அவர்களுக்கு அவர்களின் இன்றைய சுயநலம் பெரிதாக தெரிகிறது. அவர்கள் பிறந்து வளர்ந்த தமிழகத்தை விட அவர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை பாதுகாப்பது முக்கியமாகப் போய் விட்டது.
தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டியது அவசியம். திமுக மற்றும் அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் போட்டியே யார் தமிழகத்துக்கு அதிக நன்மை செய்தவர்கள் என்பதுதான். இதனால்தான் தமிழகம் இன்று முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
அதிமுகவை பிஜேபி படிப்படியாக அழிக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் வளரப்போவது பிஜேபியே.
இதை உணர்ந்தே ஜெயலலிதா, பிஜேபியோடு 2014ல் கூட்டணி வைப்பதை தவிர்த்தார். மோடியா லேடியா என்றால் தமிழ்நாட்டுக்கு இந்த லேடிதான் என்று கர்ஜித்தார்.
அந்த அம்மையாரின் பெயரில் ஆட்சி நடத்துகிறேன் என்று சொல்லும் அதிமுக தலைவர்கள், அதிமுக கட்சியையே அமித் ஷாவின் காலில் அடகு வைத்தது காலத்தின் கோலமே.
இப்படி அதிமுகவை பிஜேபியின் காலடியில் சுயநலனுக்காக அடகு வைத்ததற்கு, தமிழக மக்கள் அல்ல…. ஒன்றரை கோடி தொண்டர்கள் என்று அதிமுக தலைவர்கள் முழங்குவார்களே…
அந்த அதிமுக தொண்டர்கள் அதிமுகவுக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. பாடம் எப்படி இருக்க வேண்டுமென்றால், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, ஆர்பி.உதயக்குமார், விஜயபாஸ்க்கர் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களையும் தோற்கடியுங்கள்.
ஜெயலலிதாவின் ஆன்மா மகிழும்.
செய்வீர்களா !!! நீங்கள் செய்வீர்களா !!!