தற்போது காவல்துறையில் உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் என்ன தெரியுமா ? ஜாபர் சேட் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தான்.
என்ன விவாதிக்கிறார்கள் தெரியுமா ? ஜாபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட முறை சரியா இல்லையா என்று தான். இதில் விவாதிக்க என்ன இருக்கிறது ? ஆனாலும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். இப்படி விவாதிப்பவர்களில் சில நல்ல அதிகாரிகளும் உள்ளனர்.
இவர்கள் விவாதிக்கும் விஷயத்தில் முக்கிய விஷயங்கள் மூன்று.
1. என்னதான் இருந்தாலும், ஜாபர் மீது குற்ற வழக்கு பதிவு செய்திருக்கக் கூடாது. அவர் மீது துறை நடவடிக்கை எடுத்திருக்கலாம், எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கக்கூடாது.
2. ஜாபர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் ஒரு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு ஊழியர் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருக்கக்கூடாது. இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். மேலும் புகார் கொடுத்த சங்கருக்கும் ஜாபர் சேட்டுக்கும் முன் விரோதம் உள்ளது.
3. இது போன்ற நடவடிக்கைகள் காவல்துறையின் பெயரைக் கெடுத்து, பொது மக்கள் மத்தியில் காவல்துறையின் மரியாதையை கெடுத்து விடும்.
ஜாபர் சேட் என்பவர் யார் ? எப்படிப்பட்ட மனிதர் என்பதை சவுக்கு கடந்த இரண்டாண்டுகளாக விரிவாகவே எழுதியிருக்கிறது. ஜாபர் சேட் செய்த அநியாயங்கள் ஒன்று இரண்டு அல்ல. போலி என்கவுண்டர்களை நிகழ்த்தியது உட்பட, ஈழத் தமிழர்கள் மீது போலி வழக்குகளை போட்டு உள்ளே தள்ளியது உட்பட, கருணாநியின் ஸ்பெக்ட்ரம் பங்கை பத்திரமாக முதலீடு செய்தது உட்பட ஏராளம், ஏராளம்.
ஜாபர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுபவர்களின் இந்தக் கருத்துக்கு காரணம், அரசு நிலத்தை மோசடியாக வாங்கியதை ஒரு பெரிய குற்றமாக யாருமே கருதாததே காரணம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நேர்மை உணர்ச்சி, இன்று அருகிப் போயிருக்கிறது.
1991ல் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக சி.எல்.ராமகிருஷ்ணன் என்ற ஐபிஎஸ் அதிகாரி இருந்தார். அவருக்குப் பிறகு ஆர்.கே.ராகவன் என்பவர் இருந்தார். இந்த இரண்டு இயக்குநர்களும் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தங்களை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு காபி, டீ வாங்கித் தர ஆகும் செலவினத்தைக் கூட, தங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து எடுத்துத் தருவார்கள். மாதம் தோறும் முதல் தேதியில் தங்கள் கேம்ப் கிளர்க்கை அழைத்து ஒரு தொகையை கொடுத்து, விருந்தினர்கள் வந்தால், இந்த பணத்திலிருந்து செலவு செய்யுங்கள் என்று சொல்வார்கள்.
அப்படித்தான் அன்று காவல்துறை இருந்தது. ஆனால், இன்று ரகசிய நிதியிலிருந்து கொள்ளையடிப்பதை ஒரு தவறாகவே எந்த காவல்துறை அதிகாரியும் பார்ப்பதில்லை. இப்போது மாநகர உளவுத்துறை இணை ஆணையராக இருக்கும் நல்லசிவம், இதற்கு முன் கடந்த ஆட்சியில், உளவுத் துறை டி.ஐ.ஜி.யாக இருந்தார். அவருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெயில் ஒத்துக் கொள்ளவில்லை என்று, வீடு முழுக்க ஸ்பிளிட் ஏசி மெஷின்களை வாங்கி பொறுத்தினார்.
அவர் குழந்தைகளை குளுமையாக வைத்திருக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அவர் சொந்தக் காசில் அல்லவா அதைச் செய்ய வேண்டும் ? மாதந்தோறும், ரகசிய நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாயை எடுத்துக் கொள்வார் இந்த நல்லசிவம். இதை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாததற்கு ஒரே காரணம், ரகசிய நிதியை கையாடல் செய்வதை ஒரு ஊழல் காரியமாக எந்த அதிகாரியும் பார்க்காததே.
ஜாபர் சேட்டுக்கு இன்று உருவாகியுள்ள சிக்கல் யாரால் வந்தது ? பேராசை பிடித்த கருணாநிதி அத்தனை சொத்துக்கள் இருந்தும், புதிய தொலைக்காட்சி தொடங்குகையில் கனிமொழியை இயக்குநராக்க வேண்டும் என்று யாராவது அவரை கட்டாயப் படுத்தினார்களா ? அவரின் பேராசை தானே காரணம் ?
அதே பேராசை தானே ஜாபர் சேட்டுக்கும் ? 1995ல் அரசு ஒதுக்கீடு செய்த நான்கு வீட்டு மனைகளில் ஒரு அழகான வீட்டைக் கட்டிய ஜாபர் சேட், எதற்கான அதை விற்றார் ? இப்போது கூட, சென்னை முகப்பேரில், ஒரு வீட்டைக் கட்டி, 2000 ரூபாய் மாத வாடகை வருகிறது என்று கணக்குக் கொடுத்திருக்கிறாரே…!!! பின் எதற்காக தன் மகளையும், மனைவியையும் இப்படி ஒரு சிக்கலில் இழுத்து விட்டார் ?
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் என்னவென்பது, அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு சொந்த வீடு இல்லையென்றாலும் கூட, நான்கு படுக்கையறை கொண்ட குடியிருப்புகள், நகரின் மையப் பகுதியில் இவர்களுக்காக ஒதுக்கப் படுகிறது. மேலும், இவர்கள் வீட்டில் வேலை பார்க்க எப்போதும் போலீஸ்காரர்கள் உண்டு. போதாக் குறைக்கு ரகசிய நிதி தாராளமாக உண்டு. இதற்கெல்லாம் மேலாக, 30 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்தது யார் குற்றம் ?
கருணாநிதியின் மனைவிகளில் ஒருவரான ராசாத்தியிடமே 45 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டு விட்டார் என்று ஜாபர் சேட் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டாரே போலா நாத்…!!! இது போல, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நாங்களா ஜாபர் சேட்டுக்கு சொல்லிக் கொடுத்தோம் ?
ஒன்றிரண்டு எதிரிகளையா ஜாபர் சேட் சம்பாதித்திருந்தார் ? தனக்கு பிடிக்காத அதிகாரிகளின் வாழ்க்கையையே நாசம் செய்ய வில்லையா ? தனக்கு பிடிக்காத ஒரு அதிகாரியோடு பணியாற்றினார்கள் என்ற காரணத்துக்காக, அவரின் முகாம் உதவியாளரை ராமநாதபுரத்துக்கு மாறுதல் செய்யவில்லையா ஜாபர் சேட் ? தனக்கு பிடிக்காத அதிகாரி என்ற ஒரே காரணத்துக்காக அந்த அதிகாரியை பூங்கோதை டேப் வெளியான விவகாரத்தில், சிக்க வைக்க, இன்று புகார் கொடுத்திருக்கும் சங்கரை சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்க முயற்சிக்கவிலையா ?
தனக்கு பிடிக்காத அதிகாரியோடு நண்பராக இருக்கிறார் என்ற காரணத்துக்காகவே ஒரு பத்திரிக்கை அதிபர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்க வில்லையா ?
தனக்கு பிடிக்காத மற்றொரு அதிகாரியின் குடும்பத்தையே நாசம் செய்ய வேண்டும் என்று, அந்த அதிகாரியின் மின்னஞ்சலை ஹேக் செய்து, அவருக்கு மற்றொரு அதிகாரியோடு கள்ளத் தொடர்பு இருப்பது போல போலியான மின்னஞ்சலை உருவாக்கிய நீசத்தனமான செயலை நாங்களா ஜாபர் சேட்டை செய்யச் சொன்னோம் ?
கருணாநிதியோடு நெருக்கமாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழகத்தின் சக்கரவர்த்தியாக தன்னை கருதிக் கொண்டு நினைத்ததையெல்லாம் செய்து முடித்து, அகங்காரம் தலைக்கேறி, தலைக் கனத்துடன் நாங்கா ஜாபர் சேட்டை ஆடச் சொன்னோம் ? முற்பகல் இன்னாசெய்யின், பிற்பகல் தானே விளையாதா ?
துறை நடவடிக்கை எடுக்கலாம், எஃப்ஐஆர் போடக் கூடாது என்று பேசும் காவல்துறை அதிகாரிகளே…. எத்தனை அப்பாவிகளை வழக்கு போட்டு கைது செய்து உள்ளே தள்ளியிருப்பீர்கள் ? எத்தனை பேர் குடும்பங்களின் சாபங்களுக்கு ஆளாகியிருப்பீர்கள் ? ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் ஒரு நபரை விட, எந்த விதத்தில் ஜாபர் சேட் உயர்ந்து விட்டார் ?
சாதாரணமாக சில லட்ச ரூபாய் மதிப்புள்ள நில மோசடி செய்த குற்றத்துக்கெல்லாம், சம்பந்தப் பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்ததில்லையா நீங்கள் ? அரசு நிலத்தை மோசடியாக ஒதுக்கீடு பெற்று, அந்த நிலத்தில் வியாபாரம் செய்து, 10 கோடி ரூபாய் லாபம் பார்க்கும் காரியத்தில் ஈடுபட்டட ஒரு நபர் மீது வழக்கு போடாமல், விருதா வழங்க முடியும் ?
ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான வழக்குகள் என்றுமே முழுமை அடைந்ததில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கில் கூட துறை ரீதியாக கூட, ஒரு அதிகாரிக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை என்பதே,
இந்த உயர் அதிகாரிகள் எப்படி செல்வாக்காக உள்ளனர் என்பதை காட்டுகிறது. உதாரணத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது தொடர்ந்த வழக்குகள் சில
DE 147/2008/POL/HQ
சி.கே.காந்திராஜன் ஐபிஎஸ்
DE 136/2006/TPT/HQ
பி.சண்முகம் ஐஏஎஸ்
PE 81/2001/MISC/HQ
உஜகார் சிங், ஐஏஎஸ்
DE 269/2004/POL/HQ
எஸ்.ராஜேந்திரன், ஐபிஎஸ்
PE 62/2003/PUB/HQ
பி.சிவசங்கரன், ஐஏஎஸ்
DE 160/2006/POL/HQ
பி.சிவனாண்டி, ஐபிஎஸ்
PE 41/2002/POL/HQ
கே.என்.சத்தியமூர்த்தி, ஐபிஎஸ்
DE 137/2001/POL/VL
அறிவுசெல்வம் ஐபிஎஸ்
DE 126/2002/POL/HQ
வீ.ஏ.ரவிக்குமார் ஐபிஎஸ்
DE 90/2002/POL/HQ
கே.சண்முகவேல் ஐபிஎஸ்
RC 63/2003/POL/HQ
முத்துக்கருப்பன் ஐபிஎஸ்
DE 145/2008/POL/HQ
ஐ.ராஜா ஐபிஎஸ்
DE 45/88/POL/HQ
ஜி.திலகவதி, ஐபிஎஸ்
DE 102/2004/POL/HQ
ஜி.திலகவதி, ஐபிஎஸ்
DE 52/2001/PUB/HQ
எஸ் மாலதி ஐஏஎஸ்
சி.பி.சிங், ஐஏஎஸ்
சாந்தா ஷீலா நாயர், ஐஏஎஸ்
ஜோதி ஜகராஜன் ஐஏஎஸ்
DE 24/2007/SUGAR/HQ
ஆர்.எஸ்.கண்ணா ஐஏஎஸ்
DE 118/2001/PUB/HQ
பி.ஆர்.பிந்துமாதவன், ஐஏஎஸ்
RC 63/2001/SUGAR/HQ
செல்வம் ஐஏஎஸ்
RC 64/2001/SUGAR/HQ
பாண்டியன் ஐஏஎஸ்
RC 65/2001/SUGAR/HQ
சுகுமாறன் ஐஏஎஸ்
PE 87/2006/HD/HQ
சுதீப் ஜெயின் ஐஏஎஸ்
RC 34/96/POL/HQ
ஆறுமுகம் ஐபிஎஸ்
DE 158/2006/POL/HQ
ஆறுமுகம் ஐபிஎஸ்
இது தவிரவும், தேவ் ராஜ் தேவ் என்ற ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரி, லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். அந்த அதிகாரி மீதான வழக்கில் நடவடிக்கை கைவிடப் பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான புகார்களின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் சாதாரண கான்ஸ்டபிள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, சிறையில் அடைக்க வேண்டுமா ?
இரண்டாவது குற்றச்சாட்டு, பணி இடைநீக்கம் செய்யப் பட்ட ஒரு கடைநிலை ஊழியர் கொடுத்த குற்றச் சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது.
புகார் கொடுத்த சங்கர், பணி இடை நீக்கம் செய்யப் படும் வரை, 18 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர். அதனால், ஒரு நபர் மீது புகார் கொடுத்து, அந்தப் புகாரில் கையெழுத்திடும் முன்பு, அவருக்கு தான் போடும் கையெழுத்தின் வலிமை என்ன என்பது தெரியும். உண்மையில்லாமல் ஒரு நபர் மீது புகார் கொடுத்தால், பொய்ப் புகார் கொடுத்த காரணத்துக்காக, அது அவர் மீதே திரும்பும் என்பதும் அவருக்கு நன்கு தெரியும்.
மேலும், இது வரை அவர் கொடுத்த புகார்கள் அத்தனையுமே, ஆதாரங்களின் அடிப்படையில் தானே தவிர, மொட்டைக் கடுதாசிகள் அனுப்பும் வழக்கம் அவருக்கு கிடையாது. மொட்டைக் கடுதாசி அனுப்புவது, ஒரு இழிந்த செயல் என்று கருதுபவர். ஆனால், இவ்வாறு கருத்து கூறும் அதிகாரிகளில், எத்தனை பேர் மற்ற அதிகாரிகளைப் பற்றி மொட்டை கடுதாசிகள் அனுப்பும் பழக்கம் உள்ளவர்கள் என்று சவுக்குக்கு நன்கு தெரியும்.
இது தவிரவும், அந்த காரியத்தை அந்த கேவலமான க்ளெர்க் சங்கர் இன்று செய்யும் வரை நீங்கள் யாருமே செய்யவில்லையே அய்யா !!! ஜாபர் சேட் போன்றவர்களை எதிர்க்க அவரால் பாதிக்கப் பட்ட உயர் அதிகாரிகளில் ஒருவர் கூட துணியவில்லை என்பதுதானே அய்யா உண்மை ? ஜாபர் சேட் மீது வேறு யாரும் புகார் கொடுக்கக் கூடாது என்று, அந்த க்ளெர்க் சங்கர் யாரையாவது தடுத்தாரா ? தவறான முன்னுதாரணம் என்று சொல்கிறீர்களே… எது அய்யா தவறான முன்னுதாரணம் ?
ஊழலை எதிர்த்து, சர்வ வல்லமை படைத்த ஒரு அதிகாரியை, அந்த சாதாரண க்ளெர்க் துணிந்து எதிர்த்து, தகவல் அறியும் உண்மைச் சட்டத்தின் மூலம் ஆதாரங்களை வெளிக் கொணர்ந்து, அவற்றை ஊடகங்களில் வெளியிட முயன்று, தோற்று, இணையத்தின் மூலம் வெளிக் கொணர்ந்து, அதற்காக பொய் வழக்கை சந்தித்து, சிறை சென்று, சிறையிலிருந்து வெளி வந்து, சளைக்காமல் மீண்டும் தொடர்ந்து முயன்று, வேறு யாருமே புகார் கொடுக்க முன் வராததால், தானே புகார் கொடுத்து, அதன் மூலம் ஒரு கூடுதல் டிஜிபி மீது வழக்கு பதிவு செய்யும் நிலையை எட்டியிருப்பது தவறான முன்னுதாரணமா ?
அந்த சாதாரண க்ளெர்க் போல, மற்ற க்ளெர்க்குகளும், சாதாரண குடிமக்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, இது போன்ற ஊழல் அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று கிளம்புவது சரியான முன்னுதாரணம் தானே ? அப்படி கிளம்பினால், இன்று முணுமுணுக்கும் உங்களின் முகத்திரையும் கிழிக்கப் படலாம் என்ற அச்சமா ? உங்கள் போக்கினை மாற்றிக் கொள்ளா விட்டால், அது நடக்கத் தானே செய்யும் ?
மடியில் கனமில்லையேல், வழியில் பயம் எதற்கு ?
அடுத்ததாக அந்த உயர் அதிகாரி கூறியது மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளது. இது போல நடவடிக்கை எடுப்பதால், பொது மக்கள் மத்தியில் காவல்துறைக்கு, கெட்ட பேர் உண்டாகி விடுமாம். இப்போது என்ன பெயர் இருக்கிறது பொது மக்கள் மத்தியில் ? திமுக ஆட்சி காலத்தில் நடந்த ரவுடிகளின் ராஜ்யத்திற்கு துணை போன காவல்துறை அதிகாரிகளைப் பற்றி பொது மக்களுக்கு தெரியாதா ?
ஆட்சி மாறினால் அப்படியே அந்தர் பல்டி அடிப்பவர்கள் இந்த காவல்துறையினர் என்பது பொது மக்களுக்குத் தெரியாதா ? நேற்றைக்கு முன் தினம் திருவாரூரில் ஸ்டாலின் கைது செய்யப் பட்ட அன்று, ஸ்டாலின் திருத்துரைப்பூண்டிக்கு வருகை தருகிறார் என்று அறிந்ததுமே, டிரைவரை வண்டியை திருப்பச் சொல்லி, ஒரு சந்துக்குள் ஒளிந்து கொண்டாரே டிஐஜி ரவிக்குமார்…!!! ஒளிந்து கொள்ளத் தெரிந்த ரவிக்குமாருக்கு, நன்னிலம் எம்எல்ஏ காமராஜின் மீது இருக்கும் கொலை முயற்சி வழக்கை முடிக்க மட்டும் உத்தரவிடத் தெரிகிறதா ? ஸ்டாலின் வந்த போது, ஜீப் கண்ணாடியை அடையாளம் தெரியாத இருவர் உடைத்த வழக்கை, திமுக எம்.எல்.ஏ. மீது பதியச் சொல்லி உத்தரவிடத் தெரிந்ததா ரவிக்குமாருக்கு ?
வி.ஏ.ரவிக்குமார்
காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில், நிச்சயமாக நற்பெயர் அதிகாரிகளே…. பொதுமக்கள் மத்தியில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறிந்தால், உங்களால் காது கொடுத்துப் பேச முடியாது அய்யா.
உங்களிடம் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ, லஞ்சத் தடுப்புச் சட்டத்திலோ எங்காவது ஒரு இடத்தில், ஒரு க்ளெர்க் உயர் அதிகாரி மீது புகார் கொடுக்கக் கூடாது என்றோ, அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றோ இருக்கிறதா என்று சற்றே தெளிவு படுத்தினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
மேலும், இந்தப் புகார் கொடுக்கப் பட்டது 18 மே 2011 அன்று. வழக்கு பதிவு செய்யப் பட்ட 23 ஜுலை 2011 வரை, இந்தப் புகாரை தீர விசாரித்து, அதன் உண்மைத் தன்மையை சரி பார்த்த பிறகு அளித்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த உத்தரவின் பேரில் அல்லவா இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது ? முதல்வர் ஜெயலலிதாவுக்கு அந்த சங்கர் ஒரு சாதாரண க்ளெர்க் என்பது தெரியாதா ? தெரிந்துதானே அவர் ஜாபர் சேட் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார் ?
கேள்வி கேட்கும் முன் சற்றே சிந்தியுங்கள் அதிகாரிகளே…!!!!