இப்படி ஆரம்பிக்க எனக்கு முழு உரிமை இருக்கு ரஜினி சார். என் பேர் சுப்ரமணியன், என்கூட படிச்ச சலீமும், எடிசனும் கூட உங்கள் தீவிர ரசிகர்கள் தான். உங்கள் “பைரவி”யையும், “தாய் மீது சத்திய” , “நான் போட்ட சவால் படங்களை பார்த்து ரசிகனானவர்கள் நாங்கள்.
ஹீரோவாக மட்டும் அல்ல. நீங்கள் நெகட்டீவ் கேரக்டரில் நடித்த,
“நான் வாழவைப்பேன்”, “ஆடுபுலி ஆட்டம்”, “காயத்ரி”, “புவனா ஒரு கேள்விக்குறி” ஆகிய படங்களுக்கும் நாங்கள் ரசிகர்களே.
பாலசந்தர் சார் உங்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது, அடுத்த சூப்பர் ஸ்டார் இவன் தான் என்று எஸ்பிபி ஐயா கிட்ட சொன்னாருன்னு எஸ்பிபி சார் பல பேட்டியில் உங்களைப்பற்றி சொல்வார். அவர் அமரராயிட்டார், ஆனால் அது உண்மைதான் ரஜினி சார். பாலசந்தர் சார் உங்களை கண்டுக்கொண்டாரோ இல்லையோ பள்ளி மாணவனா 6 வது வகுப்பு படிச்ச எனக்கு அப்பவே உங்களை பிடிச்சுப் போச்சு சார்.
எங்க வீட்டு அண்ணன் மாதிரி “அட்சாங்” என்று நீங்கள் சொல்லும்போதும், சிகரெட்டை பிடிக்கும்போதும் எனக்கு ஏதோ எங்க அண்ணனை பார்ப்பதுபோல் இருக்கும். அப்ப ரசிக்க ஆரம்பிச்சவன் இப்ப வரைக்கும் ரசிக்கிறேன் ரஜினி சார். மன்னிச்சுக்குங்க உங்க பேரை நான் எப்பவுமே சொல்ல மாட்டேன். அன்பு தெய்வம்னு தான் சொல்லுவேன். சலீமும், எடிசனும்கூட அப்படித்தான் சொல்வார்கள்.
நீங்க படிக்காதவனில் சிகப்பு கோட்டு, வெள்ளைப் பேண்ட் போட்ட டிரஸ் போட்டு நடிச்ச அந்த போஸ்டர அப்ப விப்பாங்க அதை வாங்கி வீட்டு சுவற்றில் ஒட்டி உங்களை பார்த்து பார்த்து ரசிப்பேன். அப்ப நான் பிளஸ்டூ முடிச்சிட்டேன். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? படிக்காதவன் படத்துல ஒவ்வொரு வசனமும் ஃபிரேம் பை ஃப்ரேம் எனக்கு மனப்பாடம்.
ஒன்னு தெரியுமா தலைவா ? உங்க ஹேர் ஸ்டைல் மாறும்போதெல்லாம் நானும் அதைப் போலவே மாற்றிக் கொள்வேன். . உங்களைப் போலவே ஸ்டைலா பாக்கெட்ல கைவிட்டு நடப்பேன். ஆனால் சலீமுக்கோ சுருட்டை முடி. அவனால என்னைப் போல ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள்ள முடியாது. என் தலை முடியைப் பாத்து பொறாமைப் படுவான். வெளிப்படையாகவே என்னிடம் அதை சொல்லுவான்.
நானாவது 4 தடவைத்தான் உங்கள் படத்தை பார்ப்பேன். அவன் 20 தடவை பார்ப்பான் தலைவரே.
உங்களுக்கு தெரியுமா தலைவரே ! எங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்களைப் பார்த்தேன். உங்களைப்பற்றி யாராவது ஏதாவது பேசினால் அப்படி கோபம் வரும். கண் தானம் செய்யச் சொல்லி நீங்கள் அறிவித்தபோது எங்கள் மனதில் உயர்ந்து நின்றீர்கள்.
தலைவா எனக்கு இப்ப வயது ஐம்பதுக்கு மேல். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது உங்களை பார்க்க ஆரம்பித்தவன்.
இப்போது ட்விட்டரில் தலைவா தலைவான்னு ஒரு கூட்டம் உங்களை ஆராதிக்கிறதே… அதுபோன்ற சுயநலம் எனக்கு இல்லை. உண்மையான ரசிகன் நான். எனக்கு எந்த நோக்கமும் இல்லை. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவான்னு பாடினீர்கள் அல்லவா? அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நானும் சலீமும், எடிசனும்.
வேறு எந்த சுய நலமும் இல்லாமல் உங்களை மட்டுமே தூர நின்று தெய்வத்தை பார்ப்பது போல் ரசித்தவர்கள் நாங்கள் மட்டும் இல்லை தலைவா ! எங்களைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களை அப்படித்தான் ரசித்தோம். என்ன திடீர்னு ரசித்தோம்னு சொல்றேன்னு பார்க்கிறீர்களா? தலைப்பை பார்த்தீர்களா? ரஜினிகாந்த் சார்னு போட்டிருக்கேன் பார்த்தீர்களா? இப்ப உங்களை தலைவான்னு கூப்பிட தயக்கமா இருக்கு அதான்.
இன்னைக்கு உங்களை யார் யாரோ தலைவான்னு கூப்பிடுகிறார்கள், அவங்கல்லாம் ஒரு கூட்டமா இருக்காங்க. இவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தாங்க? பாபா படம் வந்தப்ப பாமககாரங்க எங்கள அடிச்சப்ப இவங்கல்லாம் எங்கே இருந்தாங்க ? இப்ப திடீர்னு உங்களைச் சுற்றி ஒரு கூட்டம். திராவிடம் வேண்டாம் அதை கருவறுக்க நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்றாங்க. என்னென்னமோ சொல்றாங்க, அவங்க பக்கத்தில் இருக்காங்க. நாங்க உங்களை தூர நின்று பார்க்கிறோம்.
உசரமான இடத்தில் நீங்க இருக்கீங்க, இப்ப கருப்பா சாதாரண பேண்ட், சர்ட் போட்ட “அட்சாங்” அப்படின்னு சொல்கிற’என் வீட்டு அண்ணனா நீங்க தெரிய மாட்டேங்கிறீங்க.
யார் யாரோ உங்களைச் சுற்றி புதிய ஆட்கள், புதிய பாஷைகள், புதிய வியாக்யானங்கள் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்கள் தீவிர ரசிகன் சலீம் கூட இப்ப குழம்பிப்போய் கிடக்கிறான். இப்ப உங்க ரசிகராக சொல்லிக்கிறவங்க எல்லாம் 30, 35 வயது உள்ள ஆட்களாக இருக்காங்க. ஆனால் அவங்க மத்த மதத்துக்காரங்கள ஏத்துக்காதவர்களாக இருக்காங்க.
ஆனால் உங்கள் ரசிகர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லையே ! நாங்கள் அனைவரும், அனைத்து மதபேதம், மத வேறுபாடு இல்லாமல்தானே உங்களை ரசித்தோம் ?
உங்களை கன்னடக்காரன்னு சொன்னப்ப அவ்வளவு கோபப்பட்டு எதிர்த்த உங்கள் ரசிகன் சலீமும், எடிசனும் இப்ப குழம்பிப்போய் கிடக்கிறார்கள். நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நாங்கள் மூன்று பேருமே அவ்வளவு ஆசைப்பட்டோம். 96-ல் நீங்க ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தபோது அவ்வளவு சந்தோஷப்பட்டோம்.
உங்கள் போஸ்டரை ஊரெல்லாம் ஒட்டினோம். உங்கள் குரலால்தான் ஆட்சி மாற்றமே வந்துச்சுன்னு எல்லாரும் பாராட்டினாங்க. கேட்க அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அதற்கு பிறகு அமெரிக்காவிலிருந்து 98-ல் வந்து ஒரு தடவை வாய்ஸ் கொடுத்தீங்க. ஆனால் அப்ப அதிமுக பெரிய அளவில் ஜெயிச்சது. அப்ப உங்க மேலதான் கோபம் வந்தது. அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் வாய்ஸ் கொடுத்தால் இப்படித்தான் ஆகும். நேரடியா அரசியலுக்கு வாங்க தலைவான்னு மனசுக்குள்ள வேண்டிகிட்டோம்.
அதுக்குப் பிறகு நீங்கள் அரசியலுக்கு வர்றேன், வர்றேன்னு சொல்லுவீங்க ஆனா வர மாட்டீங்க. 2004-ல் பாபா படத்துல நாங்க அடி வாங்கின கோபத்துல பாமக 6 இடத்திலயும் தோற்க வேலை செய்யுங்கன்னு சொன்னீங்க நாங்க யாருகூட சேர்ந்து வேலை செய்றது ?
96-ல் நீங்க எதிர்த்த அதிமுக கூடவான்னு ரொம்ப குழப்பமா போச்சு. சரி அத விடுங்க. அந்த வருஷமே உங்கள் மூத்த மகள் திருமணத்திற்கு ஜெயலலிதா அம்மாவை அழைச்சீங்க. எங்களுக்கு இன்னும் குழம்பிப்போச்சு. அரசியல் வேறு நட்பு வேறுன்னு நாங்களே எங்களுக்கு சமாதானம் சொல்லிகிட்டோம்.
அதுக்கு பிறகு நீங்க ஊழலைப் பற்றி பேசவே இல்லையே தலைவா? அதுக்கு அப்புறம் திமுக, அதிமுக ரெண்டுப் பக்கமும் உங்களுக்கு நண்பர்கள் அதிகமானாங்க . 2001-லிருந்து 2006 வரை அதிமுக ஆட்சிப் பற்றி உங்களுக்கு எந்த கருத்தும் இல்லை. 2006-2011 திமுக ஆட்சியின் மீதும் உங்களுக்கு எந்த கருத்தும் இல்லை. அந்த 5 ஆண்டுகள் தமிழகத்தில் பல விமர்சனங்கள் அந்த ஆட்சி மீது எழுந்தது. ஆனால் நீங்க தவறாமல் முதல்வருடன் கூட்டத்தில் மேடையில் அமர்ந்து புகழ்ந்து பேசுவீர்கள். ஏன் இந்த ஆட்சியில ஊழலே இல்லையா ? 96ல ஊழலை எதிர்த்து அப்படி கோவப்பட்ட தலைவர் திமுக ஊழலை பத்தி வாயே தொறக்க மாட்டுறாரேன்னு ஒரே கொழப்பம்.
அப்பத்தான் தலைவா நான் சிந்திக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் எந்திரன் படம் எடுத்தாங்க. நீங்க வழக்கம் போல் அரசியல் பேசுனீங்க. வழக்கமான உங்கள் படப்பாணிகளை கடந்து நூறு கோடிகளில் படம் எடுத்தார்கள். புதிய விஞ்ஞான வரவுகள் ஒரு வாரத்தில் நூறுகோடி வசூல் என்றெல்லாம் சொன்னார்கள். உங்கள் படத்துக்கான டிக்கெட்டுகள் முதல் நாள் 1000, 2000-ம்னு வித்தது.
என்னால் வாங்க முடியவில்லை தலைவா. நாங்கள்ளாம் 2 ரூபா 90 பைசாவுக்கு டிக்கெட் வாங்கி படம் பாத்த ரசிகர்கள். எனக்கு ஒரு கோபம் வந்தது. சாதாரண விலையில் உள்ள டிக்கெட்டுகளை நம் ரசிகர்களே வாங்கி 1000, 2000-ம்னு வித்தாங்க. மறுபுறம் 5 சிறப்புக் காட்சிகள்னு போட்டு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு டிக்கெட்டுகள் வித்தாங்க. முதல் நாள் காட்சி பார்க்கும் நானெல்லாம் பத்து நாள் பொறுத்துத்தான் பார்த்தேன் தலைவா. போகட்டும் அது மேட்டர் இல்ல. ஆனால் அதன் பின்னால் இருந்த முறையற்ற வருமானமும், அதை நீங்கள் கண்டுக்கொள்ளாததும் தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என்ன கொண்டு வந்தோம் என்னத்த கொண்டுப் போக போகிறோம்னு நீங்க பேசினபோதெல்லாம், அன்றைய வருமானத்தை போட்டு டிக்கெட் வாங்கி படம் பார்த்த நாங்க விசிலடிச்சோம். நீங்க சொன்னீங்கன்னு மற்றவங்களுக்கு உதவி செஞ்சோம். ஆனா துறவி வாழ்க்கைன்னு சொல்லிட்டு நூறு கோடியில் வருஷத்துக்கு 2 படம் யாருக்காக தலைவா நடிச்சீங்க ?
இங்கத்தான் தலைவரே முதல் முதலா எனக்கு மனசு விட்டுப்போச்சு. முறையற்ற வகையில் கோர்ட், அரசு உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பது சட்ட விரோதமா இல்லையா ? நீங்க எதிர்க்கிறேன்னு சொல்லும் ஊழல் இங்கிருந்துத்தானே தலைவா ஆரம்பிக்குது ? அந்தப் பணத்தை உன்னையே தெய்வமா நினைக்கும் எங்ககிட்ட இருந்துத்தானே தலைவா பறிக்கிறீங்க ? சரி யார்தான் இந்த வேலையைச் செய்யவில்லை, எல்லோரும் செய்யறதத்தானே தலைவரும் செய்றார், என்று மனசை தேத்திக்கிட்டோம்.
அதற்கு பின்னாடி நடந்த விஷயம் தான் தலைவா என் நெஞ்சையே பிளந்துடுச்சு. திடீர்னு உங்களுக்கு உடம்பு சரியில்லாம போனவுடன் நானும், சலீமும், எடிசனும் வேண்டாத தெய்வமில்லை. சலீம் மாதா மாதம் நோம்பு வக்கிறதா அல்லஹ் கிட்ட வேண்டிகிட்டான். எடிசன் வேளாங்கன்னி கோயிலுக்கு பாதயாத்திரை வருவதா வேண்டிக்கிட்டான். நல்லவேலை நீங்க பிழைச்சு வந்தீங்க.
சலீம் மாதா மாதம் நோம்பு வைக்கிறான், எடிசன் வேளாங்கன்னிக்கு சொன்னபடி போய்ட்டு வந்துட்டான். அப்ப ஒரு பட ஆடியோ வெளியீட்டு விழாவில வழக்கம் போல் எப்ப வருவேனோ அப்ப டக்குன்னு வருவேன்னு பேசுனீங்க. தலைவர் உடம்பு சரியில்லாம இருக்கும் இந்த நேரத்தில் எதுக்கு அரசியல்னு பேசிகிட்டோம்.
ஆனா பாருங்க தலைவா உங்க படம் ஓடுவதற்காக ரசிகர்களை ஏமாத்த நீங்கள் செய்யும் பட விளம்பரம்தான் உங்க அரசியல் பேச்சுன்னு சொல்லி எழுதுவாங்க. எங்களுக்கு கோபமா வரும்.
நீங்க எப்படி எங்களை ஏமாத்துவீங்க. நிச்சயமா ஏமாத்த மாட்டீங்கன்னு எங்களுக்குள்ள ஒரு நம்பிக்கை. என் கண்ணுக்கு நீங்கள் ராமர். சலீமின் மனதுக்கு நீங்கள் நபி. எடிசனின் கண்ணுக்கு நீங்கள் ஏசுபிரான். இப்படி நினைச்சிக்கிட்டு இருக்குற எங்களைப் போயி ஏமாத்துவீங்களான்னு நாங்க மனசை சமாதானப் படுத்திக்கிட்டோம்.
அதுக்கு அப்புறம்தான் தமிழ் நாட்டுல பெரிய விஷயமெல்லாம் நடந்துப்போச்சு. அம்மா ஜெயலலிதா இறந்துப்போக, அய்யா கருணாநிதி இயங்க முடியாமல் அரசியல் ஓய்வுக்கு போய்ட்டார். அப்பத்தான் நீங்க திடீர்னு ரசிகர்களை கூப்பிட்டு போட்டோவெல்லாம் எடுத்தீங்க. நான் உங்களை தூர நின்னே ரசிச்சேன். அண்ணன் சத்யநாராயணா கூட உங்கக்கூட இல்லன்னு கேள்விப்பட்டேன். யார் யாரோ புது மனிதர்கள் உங்க கூட தென்பட்டாங்க. நீங்க ரொம்ப அன்னியமாயிட்டதா உணர்ந்தேன்.
அப்பத்தான் திடீர்னு அறிவிச்சீங்க நான் அரசியலுக்கு வருவேன், நேரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன், போர், போர்னு அறிவிச்சீங்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் உங்க அரசியல் என்னன்னு கேட்டப்ப ஆன்மிக அரசியல்னு சொன்னீங்க. பாபா முத்திரையை காட்டுனீங்க.
சலீம் கூட கேட்டான். என்னடா தலைவர் அரசியலுக்கு வர்றார் சரி. அது என்னடா பாபா முத்திரை எல்லாம் காட்டுறாரு. ஆன்மிக அரசியல்னு சொல்றாரே குழப்பமாக இருக்குன்னு சொன்னான்.
தலைவர் எதையும் தீர ஆராய்ந்துதான் செய்வாருன்னு சொன்னேன், ஆனால் “கொள்கை என்னான்னு ஒரு பையன் கேட்டான் 2 நிமிஷம் தலை சுத்திருச்சுன்னு” நீங்க சொன்னப்ப எனக்கு அப்படியே விட்டுப்போச்சு. என் பையன் சிவாஜிராவ்கூட கிண்டல் பண்ணான். அவனுக்கு உங்க பேரைத்தான் வச்சேன், ஆனால் ரொம்ப கேள்வி கேட்கிறான். பொட்டுல அடிக்கிறது மாதிரி தெளிவா பேசுறான். அவன் கேட்டப்ப எனக்கு கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்துச்சு.
என் பையன் சிவாஜி ராவ்கிட்ட சொன்னேன். இனிமே பார்றா காளையன் ஆட்டத்த எல்லோரையும் கதற விடப்போறார்னு, “ஆமா பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டின்னு நாடே பொருளாதாரத்துல போச்சு இவர் அதை பாராட்டிகிட்டிருக்கார் அவர முதல்ல அரசியல் பேசச்சொல்லுங்க”-ன்னு உங்களை மாதிரியே, தலையைக் கோதிகிட்டு ஸ்டைலா என்னை பூச்சிய பார்க்கிற மாதிரி பார்த்துட்டு போய்ட்டான்.
அவன் ஏன் அப்படி என்னை பார்த்தான்னு அப்புறம்தான் புரிஞ்சது. எந்த பிரச்சினையிலும் நீங்க வாயே திறக்கலையே தலைவா…
நாடே ஒரு வழியில் போச்சு, எல்லாமே தலைகீழா போச்சு ஆனா நீங்க மூச்… ஒரு விஷயத்துலக்கூட நீங்க கருத்து சொல்லலையே தலைவா ! உங்களைச் சுற்றி ஒரு விளம்பரக் கூட்டமும், இந்துத்துவ கொள்கையை தீவிரமா பேசுகிற ஆளுங்களும் பெருகிப்போக ஒரு கட்டத்துல பாஜகவில் சேரப் போறீங்கன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
அதுக்கு ஏத்த மாதிரி மக்களை பாதிக்கிற எந்த விஷயத்திலும் நீங்க வாயே திறக்கல, ஆனால் பாராட்டுற விஷயத்துல உடனே பாராட்டினீங்க. மத்திய அரசில் பலர் உங்களுக்கு நண்பராக ஆனாங்க. உங்கள் குணமறிந்து ஆலோசனை சொன்ன சோ மறைஞ்ச பின்னாடி துக்ளக் பத்திரிக்கைக்கு புதுசா வந்த குருமூர்த்திக்கூட நெருக்கமானீங்க. துக்ளக் ஆண்டு விழாவில் நீங்க பேசியது நீங்க எந்தப்பாதையில் பயணிக்கிறீங்கன்னு தெளிவா காட்டுச்சு.
சலீமுக்கும், எடிசனுக்கும் ரொம்ப வருத்தம். “என்னடா சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசுகிறவர்களோட தலைவர் கைகோர்க்கிறாரே, நாம என்ன மதம் பார்த்தா தலைவரை நேசிச்சோம் சொல்லு ? சுப்ரமணி, நீயும் எங்களை வெறுத்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி, கம்பி வேலிக்குள் அடைக்க துடிக்கும் கூட்டத்தோட சேரப்போறியா ? பாட்சாவும் (சலீம் பையன் பேரு அது 95-ல் பாட்சா படம் வந்தபோது பிறந்ததால் வச்ச பேரு), சிவாஜிராவும் (என் மகன்) அப்படியா பழகுகிறார்கள்” என்று கேட்டார்கள்.
தலைவரை மாதிரியே என்னையும் சந்தேகப்படுறியாடான்னு கோபமா கேட்டு அனுப்பிட்டேன். அப்பத்தான் அந்த கொடுமை நடந்துச்சு தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்ல செத்துப்போனாங்க. நிறையபேர் காயம்பட்டாங்க. திடீர்னு நீங்க காயம்பட்டவங்களை பாக்கப்போறேன்னு கிளம்பினீங்க, போகும்போது ஒன்னு சொல்லீட்டு போனீங்க, இடையில் என்ன நடந்ததோ வரும்போது என்னென்னமோ பேசிட்டீங்க. அதுக்கு பிறகு நீங்க எங்கள விட்டு எங்கேயோ விலகி போய்ட்டீங்க தலைவா.
உங்களை வீட்டில் வந்து பார்க்காத பாஜக தலைவர்களே இல்லை. உங்கள் பாதையும் மாறிப்போச்சு. நீட், இட ஒதுக்கீடு, கஜா புயல், தமிழ் நாட்டுக்கான பிரச்சினை அனைத்திலும் மத்திய அரசு பாரா முகமா இருந்தும் நீங்க வாயே திறக்கல. அதைவிட கொடுமை இந்திய குடியுரிமைச் சட்டம் அமலானபோது நாடே கொதித்தெழுந்துச்சு, நல்ல உள்ளம் கொண்டவர்கள் அத்தனை பேரும் கண்டிச்சாங்க.
நீங்க எதுவுமே சொல்லல, அதுக்கு அப்புறம் பிறகு போன வருஷம் உங்க அரசியல் வருகை பத்தி பேசுனீங்க. என்ன பேசுனீங்கன்னே எனக்கு புரியல, சலீமுக்கும், எடிசனுக்கும் கூட புரியல. 10%, 15% ஓட்டு வாங்க நான் தேர்தலில் நிற்க மாட்டேன், ஒரு நாடு முழுதும் ஒரு எழுச்சி வரணும். அதுக்கு பிறகு வருவேன்னு பேசுனீங்க. ஆனால் கொரோனா தான் நாடுமுழுதும் வந்துச்சு. நீங்க வீட்டுக்குள் போய் பதுங்கிக்கிட்டீங்க.
புலம்பெயர் தொழிலாளிங்க கோடிக்கணக்கில் சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் நடைபயணமா அலைஞ்சது மாதிரி அலைஞ்சாங்க. சோறு தண்ணி இல்லாமல் கோடிக்கணக்கானவங்க ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து சொந்த ஊர் போனாங்க, நீங்க ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து பேசவில்லை. அதுகூட வேண்டாம். பாதிக்கப்பட்டவங்களுக்காக ஒரு ஆதரவு குரல் கூட கொடுக்கல. 6 மாசம் வீட்டில இருந்து என்னதான் தலைவா செஞ்சீங்க ?
சோனு சூட்னு ஒரு நடிகன். வில்லன் நடிகர். நேத்து நடிக்க வந்த நடிகர். உங்களை மாதிரி 100 கோடி ரூபா பிஸ்னெஸ் நடிகர் இல்ல. அவன் சொத்தை வித்து புலம்பெயர் தொழிலாளர்களை காப்பாத்துனான். ஆனா நீங்க ? மாடிமேல நின்னு பிரதமர் சொன்னார்னு கைதட்டினீங்க, விளக்கேத்துனீங்க. வருத்தமா இருக்கு தலைவா. அதைவிடுங்க, தமிழ் நாட்டில் யார் யாரோ என்னென்னவோ செய்தார்கள், ஆனால் நீங்கள் ஈபாஸ் இல்லாம தினமும் மாவட்டம் விட்டு மாவட்டம் போய் சிக்கிகிட்டீங்க, அதை மறைக்க மருத்துவ எமர்ஜென்சி பாஸ்னு என்னென்னமோ கதை சொன்னாங்க.
மருத்துவத்துக்காக இ-பாஸ் கிடைக்காமல் ஆயிரக்கணக்கில் மக்கள் தவிக்கும்போது நீங்க உங்க புது வெளிநாட்டு காரில் தினமும் உங்க இளைய மகள் வீட்டுக்கு போய் வந்தீங்கன்னு சொன்னாங்க. கொரோனா காலத்தில தமிழ் நாட்டு மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல. ஆனால் நீங்க என்ன செஞ்சீங்க அந்த மக்களுக்குன்னு யோசிச்சு பார்க்கிறேன். உங்க மண்டபத்துக்கு வரி கட்டமாட்டேன்னு கோர்ட்டுக்கு போய் குட்டுப் பட்டதுதான் ஞாபகத்துக்கு வருது. நீங்க ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு.
நீங்க மட்டும் இல்லை தலைவா உங்களைச் சுற்றி புதுசா வட்டம் போட்டு வாங்க தலைவா. தலைவர் வந்துட்டார், மாற்றம்னு வருதுன்னு பேசிட்டு திரியுதே… அந்தக்கூட்டமும் ஆறு மாதம் எங்கபோச்சுன்னே தெரியாது. மற்ற கட்சியிலாவது மக்கள் பணியில் பல தலைவர்கள் உயிரை குடுத்து உழைச்சாங்க. நீங்க குரல் கூட கொடுக்கல தலைவா. இந்த நேரத்துல புதிய கல்விக்கொள்கை, 3 வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக கொண்டு வந்தாங்க. நீங்க அப்ப எந்த உலகத்துல இருந்தீங்கன்னே தெரியாது. அதுக்கு உங்கக்கிட்ட எந்த பதிலும் இருக்காதுன்னு எங்களுக்கு தெரியும் தலைவா.
இப்ப திடீர்னு கட்சி அறிவித்து ஊழலுக்கு எதிராக கட்சி, “இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லைன்னு” சொல்றீங்க. எந்த உரிமையில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரப்போறேன்னு கட்சி தொடங்குகிறேன்னு சொல்றீங்கன்னே தெரியல.
நீங்க நடிக்க வந்தப்ப பிறந்தே இருக்காத நடிகர் சூர்யா நீட்-டுக்கு எதிரா குரல் கொடுக்கிறார், புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறார். அவர் தம்பி கார்த்திக் வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார். ஆனால் நீங்க அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க, எந்த மக்களுக்காக மாற்றத்தை கொடுக்கப்போறீங்க தலைவா? என்ன மாற்றத்தை குடுக்க போறீங்க ?
மாற்றம் வரணும்னு சொல்றீங்களே 45 வருஷமா உங்க தீவிர ரசிகனாக இருக்கிற சலீமையும், எடிசனையும் எதிராக பார்க்கும் கூட்டத்தை கூட வச்சிகிட்டு என்ன மாற்றத்தை கொண்டுவரப்போறீங்க தலைவா? சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ, என்.ஆர்.சி சட்டங்கள், புதிய கல்விக்கொள்கை, வேளாண் சட்டங்கள், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாடு, மருத்துவத்தை அழிக்கும் கொள்கை, பொருளாதார வீழ்ச்சி, சொந்த மக்களிடமே பகை மூட்டிவிடும் குணம் கொண்ட கும்பலுடன் சேர்ந்து எதை மாற்றப்போகிறீர்கள் தலைவா?
உங்கள் ரசிகர்களாக சிறுபான்மை மக்களும் தானே இருக்கிறார்கள். அவர்களை எதிரியாக பார்க்கும் கூட்டத்துடன் எப்படி கைக்கோர்க்க மனது வருகிறது தலைவா ? உங்களை கட்சித்தொடங்க வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் யாருக்காக கட்சி தொடங்குகிறீர்கள், உங்களுடன் எந்த கொள்கை உள்ளவர்கள் சுற்றி இருக்கிறார்கள் என்பதே இப்ப உள்ள பிரச்சினை.
நீங்கள் இதற்கு பதிலளிக்க மாட்டீர்கள் தலைவா. அதற்கான மனதும் உங்களுக்கு தற்போது இல்லை. திரைப்படம் வேறு நிஜ வாழ்க்கை வேறு என்று ரசிகர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்பதற்காக இந்த கேள்வியை வைக்கிறேன். காலா படத்தில் ஏழை மக்களுக்காக போராடும் ஹீரோ நீங்கள். வில்லன் யார் தெரியுமா மிகப்பெரிய நடிகர் நானா படேகர். அவர் ஏழை மக்களுக்கு எதிராக இருப்பார்.
ஆனால் நிஜம் என்ன தெரியுமா? மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டபோது ஓடோடிச் சென்று அறக்கட்டளை அமைத்து கோடிக்கணக்கில் பணம் திரட்டி உதவியவர் அந்த வில்லன் நடிகர் நானா படேகர். இன்றும் உதவி வருகிறார். ஆனால் ஏழையைக் காக்கும் ரோலில் நடித்த ஹீரோ நடிகரான நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன? இந்த பிறந்த நாளிலாவது நீங்கள் இதை சிந்திக்கவேண்டும்.
நீங்கள் சிந்திக்காவிட்டால் நாங்கள் சிந்திப்போம் தலைவா, மன்னிக்கவும் ரஜினிகாந்த் சார்.
எங்களுக்காக, என்னைப் போன்ற, சலீமைப் போன்ற, எடிசனைப் போன்ற ரசிகனுக்காக செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இந்த மக்களுக்காக எதையுமே 40 ஆண்டுகளாக செய்யாமல், இந்த தமிழ் மக்களின் உழைப்பில் அவர்கள் சம்பாதித்த பணத்தில் நீங்களும் உங்கள் குடும்பமும் கோடீஸ்வர நிலைக்கு உயர்ந்து விட்டு, “எல்லாத்தையும் மாத்தி ஆன்மீக அரசியல் கொண்டு வருகிறேன்” என்று இப்போது நீங்கள் சொல்வதை உங்களின் முப்பதாண்டுகால மிகத் தீவிரமான ரசிகனான நானே நம்பாவிட்டால் சாதாரண பொதுமக்கள் எப்படி நம்புவார்கள் ரஜினிகாந்த் சார் ?
பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினி சார்.
அன்புடன்
உங்கள் முன்னாள் தீவிர ரசிகன்
சுப்ரமணியன்.