அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே.. நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீதும், இணை ஆசிரியர் காமராஜ் அவர்கள் மீதும், தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா தொடர்பான ஒளிப்படக் காட்சிகளை ஒளிபரப்பும் முன், ஒரு ஹோட்டலில் வைத்து, பணம் கேட்டு மிரட்டினார்கள் என்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப் படாமல் இருக்க, கோபால் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்நிலையில், திரு கோபால் அவர்கள், பத்திரிக்கை அதிபர்களை தொடர்பு கொண்டு, நக்கீரன் இதழை முடக்கவும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் நோக்கத்திலும், இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இதற்காக போராட்டம் நடத்துமாறும் கேட்டு வருகிறார் என்று அறிகிறோம்.
அவரின் கோரிக்கையில் உள்ள நியாயங்களுக்குள் செல்லும் முன்பாக, இவர்கள் மீது பதியப் பட்டுள்ள வழக்கு எப்படிப் பட்ட வழக்கு என்பதைப் பார்ப்போம். பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு என்று இன்று பேசும் கோபால், தனி மனித சுதந்திரத்தை பறித்ததைப் பற்றி ஏன் யோசிக்க மறந்தார். அந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியான நக்கீரன் இதழை குழந்தைகளுக்கு படிக்கக் கொடுக்க முடியுமா ?
அப்படியே, அதை வெளியிடுவதைக் கூட ஒரு பக்கம் வைத்துக் கொண்டால், அதை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு பேரம் நடத்தப் பட்டது என்றல்லவா புகார் வந்திருக்கிறது. இந்தப் புகாரில் உண்மை என்ன என்பதை விசாரிக்க வேண்டாமா ? ஒரு வேளை அந்தப் புகார் உண்மையாக இருந்தால், அதை எந்த இதழியல் நெறிகளில் சேர்த்துக் கொள்ள முடியும் ?
இது போல எத்தனை தனி மனித உரிமை மீறல்களை செய்திருக்கிறது நக்கீரன் என்ற ஊடகம் ? எந்த விதமான இதழியல் நெறிகளிலும் பொருந்தாமல், திமுகவையும், கருணாநிதியையும் ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தானே நக்கீரன் இதழ் கடந்த 5 வருடங்களாக நடத்தப் பட்டு வந்தது ?
கடந்த ஐந்து வருடங்களாக நக்கீரன் இதழ், திமுகவுக்கு ஜால்ரா அடித்ததை விட வேறு என்ன செய்திகளை உருப்படியாக மக்களுக்கு தந்திருக்கிறது ? கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட, கனிமொழி மத்திய மந்திரி ஆகிறார் என்று கூசாமல் பொய்ச் செய்தியைத் தானே வெளியிட்டார்கள் ?
துளியாவது நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்கள், இப்படிப் பட்ட செய்திகளை ஏற்றுக் கொள்ள முடியுமா ? கருணாநிதிக்கு ஆதரவு தர வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெற வில்லை என்று பச்சைப் பொய்யை செய்தியாக வெளியிடும் நக்கீரன் இதழை எப்படி பத்திரிக்கை என்று ஏற்றுக் கொள்ள முடியும் ? தேர்தல் கருத்துக் கணிப்பு எதுவும் நடத்தாமலேயே, நடத்தியதாக செய்தி வெளியிட்டு, 120 சீட்டுகளில் திமுக வெல்லப் போகிறது என்று கருணாநிதியின் மனதை குளிரவைக்க செய்தி வெளியிடும் நக்கீரன் எப்படி பத்திரிக்கை வரிசையில் வரும் ?
அதிமுக ஆட்சியின் ஒரு ஊழல் குறித்த செய்திகளை வெளியிட்டு, அதற்காக இன்று நக்கீரன் இதழ் பழிவாங்கப் படுகிறதென்றால், நமது மனமாச்சர்யங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு, நக்கீரனுக்காகவும், பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும், போர்க்குரல் கொடுக்க யாரும் தயங்கப் போவதில்லை. கடந்த காலத்தில், அதிமுக ஆட்சியில், நக்கீரன் பழி வாங்கப் பட்ட போது, அதுதான் நடந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களும் திரண்டு நின்று நக்கீரனுக்கு தோள் கொடுத்ததார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது ? ஜெயலலிதா எதிர்ப்பு என்ற நக்கீரனின் நிலைபாடு, திமுக ஆதரவு என்பதில் அல்லவா சென்று முடிந்தது ? கருணாநிதிக்கு ஜால்ரா போடுவது மட்டுமல்லாமல், ஜாபர் சேட் சொல்படி அல்லவா பத்திரிக்கையை நடத்தினார் காமராஜ் ?
கருணாநிதியோடு தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, வீட்டு மனை ஒதுக்கீடு பெறுவதும், லாபம் சம்பாதிப்பதையுமே ஐந்தாண்டுகளாக செய்து கொண்டிருந்தவர்கள், ஒரு பெண்ணை ஆபாசமாக படமெடுத்து வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரல் கொடுப்பது எள்ளி நகையாடுவது போல உள்ளது.
அது மட்டுமின்றி, கடந்த காலங்களிலே, தின பூமி ஆசிரியர் கைது சம்பவத்தின் போதும், தினமலர் லெனின் கைது சம்பவத்தின் போதும், ஜுனியர் விகடனை பொட்டு சுரேஷ் மிரட்டிய போதும், சீமான் கைதின் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்ட போதும், ஊடகத்துறையினர் போராட்டம் நடத்திய போது, எங்கே இருந்தார்கள் காமராஜும், கோபாலும் ? சக பத்திரிக்கையாளனை அடித்து நொறுக்கும், ஒடுக்கும் ஒரு அரசுக்கு ஆதரவாக அல்லவா குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ?
இன்று தங்களுக்கு நெருக்கடி என்றதும் பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரலெழுப்புவது நியாயமற்ற செயலல்லவா ? கோபாலும், காமராஜும், உங்கள் அனைவரின் ஆதரவை தேடக் கூடும். போராடுங்கள் என்று அழைக்கக் கூடும்.
ஆனால் நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள், சிந்தித்து செயல்படுங்கள். அக்கிரமத்துக்கு துணை போன குற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வினையை விதைத்தவர்கள், இன்று வினையை அறுக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவது நமது வேலை இல்லை.
தலைமறைவு காெலைகாரன் வீரப்பன்தேடப்பட்டுக் காெ ண்டிருக்கும் பாேதே இவர் சந்தித்த விதம் அவனுடன் நட்பு அப் பாேதே உள்ளே பாே ட் டிருக்கனும் ஏமாந்துட்டாங்க