ஜாபர் சேட் ஒரு இசுலாமியர், அவர் பழிவாங்கப் படுகிறார் என்று அங்கலாய்த்து ஒரு நீண்ட அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு.
“கடந்த கால திமுக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பது தான் அவர் மீது குற்றச்சாட்டு. அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ.தி.மு.க. ஆட்சியிலேதான்.
முதல் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவீத வீடுகள் அல்லது மனைகளைத்தான் விருப்புரிமை அடிப்படையிலே அரசு வழங்கலாம் என்று இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 1991ம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில் விருப்புரிமை 10 சதவீதம் என்பதை 15 சதவீதம் என்று உயர்த்தி வழங்கலாம் என்று முடிவெடுத்ததும் அவர்கள்தான்.
வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவீதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் மீதியுள்ள 15 சதவீதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.
விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால் அரசு அதனைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று 7.12.2010ல் கழக அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறி, அது ஏடுகளிலேயே வெளி வந்துள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் வீட்டு மனைகளை விருப்புரிமை அடிப்படையிலே பெற்றவர்கள் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு 1993ம் ஆண்டு 4115 சதுர அடி. தற்போது அமைச்சராக உள்ள கே.ஏ.செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசனுக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995ம் ஆண்டு 4535 சதுர அடி.
முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமீலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993ம் ஆண்டு 2559 சதுர அடி. நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி பானுமதி தம்பிதுரைக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம். அ.தி.மு.க.வின் தொழிற்சங்கப் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.எம். வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993ம் ஆண்டு வீடு. அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் காவல் துறை அதிகாரிகளிலேயே தேவாரம், கே. விஜயகுமார், ஆர். நடராஜ், பி. காளிமுத்து, இக்பால் முகமது, ஏ.பி. முகமது அலி, கே.ராதாகிருஷ்ணன், வி.பாலசந்திரன், சி. சைலேந்திரபாபு, எஸ்.வி. கருப்பசாமி, சிற்றரசு, ஆர். திருநாவுக்கரசு. எப்.எம்.உசேன்,ஜி.சம்பத்குமார் செந்தாமரைக் கண்ணன், கே.சண்முகவேல், பி. சின்னசாமி, சஞ்சய் அரோரா, தமிழ்ச் செல்வன், கோபாலகிருஷ்ணன், பெரியய்யா, அசோக் குமார் போன்றவர்கள் வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளையோ வீடுகளையோ பெற்றிருக்கிறார்கள். ஆனால் இதில் எதையும் தி.மு.கழக ஆட்சியிலே தவறு என்று சுட்டிக் காட்டவில்லை.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் மாலிக் பெரோஸ்கான், பி.ஏ. ராமையா, எஸ். கபிலன், ராகவன், சியாம் சுந்தர், சீனிவாசன், லால் ரெய்னா சைலோ, வி. ராமு, வி. வரப்பிரசாத ராவ், டி. நடராசன் (இவர் ஜெயலலிதாவிடம் துணைச் செயலாளராகப் பணியாற்றியவர் கழக ஆட்சியில் இவர் வீட்டிற்குச் சென்று சோதனை செய்யவில்லை), எம். தேவராஜ், சையத் முனீர் ஹோடா (இவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு மனை வாங்கியவர்கள் ஆயிற்றே என்று கருதாமல் நான் முதல்வராக இருந்த போது என்னிடம் செயலாளராகவே இவர்கள் பணியாற்றினார்கள்) போன்றவர்கள்.
இவர்கள் தவிர அரசியல்வாதிகள் பட்டியல் வேறு உள்ளது. இரண்டு மனை பெற்றவர் களின் பட்டியலும் உள்ளது. இத்தனை பேர் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அந்த ஆட்சிக் காலத்திலும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மனைகளைப் பெற்றிருக்கிறார்கள். இதில் குறி பார்த்து ஒருசிலர் மீது மட்டும் தற்போது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுப்பது என்பது பழி வாங்கும் செயலா அல்லவா?
இந்த அதிகாரிகள் அந்த இடங்களைப் பயன்படுத்தி கூட்டுப் பொறுப்பில் வேறு சில தனியாரோடு சேர்ந்து பெரிய கட்டிடங்களாகக் கட்டி பிறருக்கு விற்று கோடிக் கணக்கிலே சம்பாதித்து விட்டார்கள் என்று ஏடுகளிலே செய்தி வெளியிடுகிறார்கள். இந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்காக வாரியம் குறிப்பிடும் தொகையை முழுவதுமாகக் கட்டி விட்டால் அந்த இடங்கள் அவரவர்களுக்குச் சொந்தமாகி விடும். சொந்தமாகி விட்ட அந்த இடங்களை இப்படி இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்று யாரும் கூற முடியாது அதற்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லை.
ஜாபர் சேட் இந்த மனையை முதலில் தன் பெண் பெயரிலே வாங்கிவிட்டு, பிறகு அதைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, அதன் பிறகு தன் துணைவியார் பெயரிலே அதே மனையைப் பெற்றிருக்கிறார். ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு மனையை வாங்கினால் தான் தவறு. இது ஒரே மனையை தன் குடும்ப சூழ்நிலை கருதி மற்றவர் பெயருக்கு மாற்றியதிலே என்ன பெரிய தவறு இருக்க முடியும்? மனைவி, மகள் பெயர்களையும் இதிலே இழுத்து வழக்கு தொடுக்கிறார்கள் என்றால்; அது வேண்டுமென்றே குடும்பத்தையே பழிவாங்குகின்ற செயல்தானே?
அந்த அதிகாரி மீது வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் நள்ளிரவிலே அவரைப் பணியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம் செய்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கைகள்?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா? இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்குவதிலே நிர்வாகத் திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது“ இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
இவர் ஜாபருக்கு ஆதரவு தருவதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டாரா, இல்லை என் குடும்ப ரகசியங்களை வெளியிட்டு விடாதே என்று ஜாபரிடம் மன்றாடி இந்த அறிக்கையை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. கருணாநிதியைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், கருணாநிதி எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டார் என்பது நன்கு தெரியும். தன் சொந்த மகனையே தலைவர் பதவிக்கு வர விடாமல் தடுப்பவர், ஜாபருக்காக இப்படி வக்காலத்து வாங்குகிறார் என்றால் வேறு உள் காரணங்கள் இருக்கும்.
காவல் துறை அதிகாரிகள் தேவாரம், கே. விஜயகுமார், ஆர். நடராஜ், பி. காளிமுத்து, இக்பால் முகமது, ஏ.பி. முகமது அலி, கே.ராதாகிருஷ்ணன், வி.பாலசந்திரன், சி. சைலேந்திரபாபு, எஸ்.வி. கருப்பசாமி, சிற்றரசு, ஆர். திருநாவுக்கரசு. எப்.எம்.உசேன்,ஜி.சம்பத்குமார் செந்தாமரைக் கண்ணன், கே.சண்முகவேல், பி. சின்னசாமி, சஞ்சய் அரோரா, தமிழ்ச் செல்வன், கோபாலகிருஷ்ணன், பெரியய்யா, அசோக் குமார் ஆகியோர் வீடு பெற்றிருக்கிறார்கள் என்று கருணாநிதி கூறுவது உண்மையை திரித்துக் கூறுவது.
ஜாபருக்கு கருணாநிதி கொடுத்தது வீட்டு வசதி வாரிய இடத்தில் தனது விருப்புரிமை ஒதுக்கீட்டில். இந்த ஒதுக்கீடுக்கு ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகள் விண்ணப்பித்து, தங்களுக்கு வீடு வேண்டும் என்று கேட்டுப் பெற்றது.
கருணாநிதி பட்டியலிடும் அதிகாரிகளுக்கு, வீரப்பனை சுட்டுக் கொன்றார்கள் என்று அந்த அதிகாரிகள் விட்ட கதைக்காக அரசு ஒதுக்கியது. அந்த வீட்டு மனைகள் அந்த அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கப் பட்டது. இதையும், ஜாபரின் கதையையும் கருணாநிதி முடிச்சு போடக் கூடாது.
“ஜாபர் சேட் இந்த மனையை முதலில் தன் பெண் பெயரிலே வாங்கிவிட்டு, பிறகு அதைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, அதன் பிறகு தன் துணைவியார் பெயரிலே அதே மனையைப் பெற்றிருக்கிறார். ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு மனையை வாங்கினால் தான் தவறு. இது ஒரே மனையை தன் குடும்ப சூழ்நிலை கருதி மற்றவர் பெயருக்கு மாற்றியதிலே என்ன பெரிய தவறு இருக்க முடியும்? மனைவி, மகள் பெயர்களையும் இதிலே இழுத்து வழக்கு தொடுக்கிறார்கள் என்றால்; அது வேண்டுமென்றே குடும்பத்தையே பழிவாங்குகின்ற செயல்தானே ?”
இது போல வேறு எந்த அதிகாரிக்கு கருணாநிதி இது போன்ற சலுகையை செய்திருக்கிறார் ? ஒரே வீட்டு மனையை முதலில் தன் பெயருக்கும், பிறகு தன் மகள் பெயருக்கும், பிறகு மனைவி பெயருக்கும் மாற்றி மாற்றி ஒதுக்கீடு பெறுவது வேறு யாருக்காவது சாத்தியமா ? மேலும், ஜாபரின் மகளும், மனைவியும், ‘சமூக சேவகர்’ என்று சான்றிதழ் ஒன்று கொடுத்துள்ளார்களே…. அதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார் கருணாநிதி ?
அரசு ஒதுக்கிய வீட்டை குறைந்த விலைக்கு பெற்று, அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பது தவறில்லையென்றால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குறைந்த விலைக்கு பெற்று, அதிக லாபத்துக்கு விற்ற ஸ்வான், யூனிடெக் மற்றும் டாடா நிறுவனங்கள் செய்ததும் தவறில்லைதானே ? பிறகு எதற்காக சிபிஐ அந்த நிறுவனங்கள் மீத நடவடிக்கை எடுத்துள்ளது ?
அடுத்ததாக “அந்த அதிகாரி மீது வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் நள்ளிரவிலே அவரைப் பணியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம் செய்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கைகள் ? “
தவறை மறைக்க எதற்கெடுத்தாலும், சாதியையும் மதத்தையும் கேடயமாக பயன்படுத்தவதில் கருணாநிதி சமர்த்தர். ராசா மீது குற்றச் சாட்டு சுமத்தப் பட்டதும் இப்படித்தான் ‘தலித் இனத்தின் தகத்தகாய கதிரவன், பொட்டல் காட்டில் பூத்த ரோசா’ என்று வாழ்த்தினார். தற்போது ஜாபர் சேட்டுக்கும் இதே ஆயுதத்தை எடுத்துள்ளார்.
இவர் ஆட்சி காலத்தில் மற்றொரு தலித் அதிகாரியான உமா சங்கரை உப்பு சப்பில்லாத காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யவில்லையா நீங்கள் ? அப்போது எங்கே போனது உங்களின் தலித் மீதான கருணை ?
ஜாபர் சேட் மீது பதியப் பட்டுள்ள வழக்கு, உரிய விசாரணைக்குப் பிறகு, ஆவணங்களை பரிசீலித்த பிறகே பதியப் பட்டுள்ளது. அவரை இசுலாமியர் என்ற காரணத்துக்காகவெல்லாம் யாரும் பழி வாங்கவில்லை. அரசுப் பணத்தையும், மக்கள் பணத்தையும் திருடித் திருடி பழக்கப் பட்டு, அதிலேயே ஊறிப் போன கருணாநிதிக்கு எதுவுமே தவறில்லை. தன் மகள் லஞ்சப் பணமாக 214 கோடி ரூபாயை வாங்கினாலும் தவறில்லை. தன் மகன் பத்திரிக்கை அலுவலகத்தில் ஆட்களை அனுப்பி 3 பேரை கொலை செய்தாலும் தவறில்லை. தனக்கு விசுவாகமாக இருந்த மாவட்டச் செயலாளரை தன் மகன் கொலை செய்தாலும் தவறில்லை.
நீங்கள் ஜாபர் சேட்டுக்காக வெளியிட்டுள்ள அறிக்கை, வேலிக்கு ஓணான் சொல்லும் சாட்சியே…