பாரப்பட்டி சுரேஷ், பொட்டு சுரேஷ் வரிசையில் பிட்டு சுரேஷ். இந்த பெயர் சவுக்கு வைத்ததில்லை. தினகரன் தலைமை நிருபர் சுரேஷைப் பற்றி சவுக்கில் எழுதியபோது, ஒரு வாசகர் எழுதியிருந்த பின்னூட்டம், “அழகிரிக்கு ஒரு பொட்டு சுரேஷ், கலாநிதிக்கு ஒரு பிட்டு சுரேஷ்”. அது கவிதை போல அழகாக இருந்ததால், அந்தப் பெயரே இக்கட்டுரைக்கு வைக்கப் பட்டது.
பிட்டு சுரேஷைப் பற்றி சவுக்கில் எழுதியவுடன், பாராட்டுக்கள் என்றால் பாராட்டுக்கள், அப்படி ஒரு பாராட்டு. வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. வாழ்த்துக்களோடு, பல்வேறு தகவல்களையும் சொன்னார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பிட்டு சுரேஷ், மாலைச் சுடர் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கிண்டி துணை ஆணையர் அலுவலகத்தில் வரும் தினசரி க்ரைம் ரிப்போர்ட்டுகள், பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப் படும். அப்படி ஒரு நாள் காண்பிக்கப் பட்ட க்ரைம் ரிப்போர்ட்டில் “Four suspicious persons arrested” என்று இருந்தது. அதாவது சந்தேகத்திற்குரிய நான்கு நபர்கள் கைது செய்யப் பட்டனர்.
பிட்டு சுரேஷுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும், மாலைச் சுடர் பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக, பேனர் நியூசாக இந்தச் செய்தியை கொடுத்து விட்டு வந்து விட்டார். காலை 11 மணிக்கு வந்து மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு இந்தத் தகவலை பகிர்ந்து கொள்கிறார். மற்ற பத்திரிக்கையாளர்கள் என்ன ஏது என்று விசாரிக்கிறார்கள். விசாரித்தால், முதல் நாள் இரவு, நான்கு நபர்கள் குடித்து விட்டு, ரயில்வே ட்ராக் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்புப் பாதையை சரி செய்ய வந்த நபர் யார் என்று கேட்டதும், அவர் மீது கல்லெடுத்து வீசியிருக்கிறார்கள். அவர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்ததும், அவர்கள் நாக்கு பேரையும் பிடித்து வந்து நாலு சாத்து சாத்தி அனுப்பி விட்டார்கள். இதுதான் பிட்டு சுரேஷின் திறமையான பத்திரிக்கையாளருக்கான அடையாளம்.
இது போல, பிட்டு சுரேஷின் திறமைக்கு பல சம்பவங்களை சான்றாக சொல்லுகிறார்கள்.
தினகரன் பத்திரிக்கைக்கு வேலைக்கு சென்றவுடன், சுரேஷின் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லுகிறார்கள். நம்பர் ஒன் நாளிதழ் என்று தினகரன் சொல்லிக் கொண்டதும், இவரும் தன்னை நம்பர் ஒன் நிருபர் என்று கருதிக் கொள்கிறார். இந்த நம்பர் ஒன் என்ற கித்தாப்பில், இவர் அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை என்கிறார்கள். தினகரன் நாளிதழில் வரும் கிசு கிசு பகுதியில், பிடிக்காத நபர்களைப் போட்டுத் தாக்குவது என்பது இவருக்கு கைவந்த கலை என்கிறார்கள்.
சென்னை மாநகர காவல்துறையில் ஒரு பெண் காவலர் பணியாற்றி வந்தார். அவர் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகையில் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். கணவர் இறந்ததும், தன் குழந்தைகளுக்காக தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றி வருகிறார். நல்ல குரல் வளம் இருப்பதால், காவல்துறை சார்பாக நடைபெறும் விழாக்களில் இவரை அறிவிப்பு செய்யும் வேலைக்கு நியமிப்பதுண்டு. அப்படி ஒரு விழாவில் இவர் அறிவிப்பு செய்து கொண்டிருக்கையில், மேடை ஏறிய ஒரு அதிகாரிக்கு சல்யூட் வைக்க தவறி விட்டார். உடனடியாக அந்த அதிகாரி கடிந்து கொள்ளவும், அந்த காவலர் மன்னிப்பு கேட்டார். அந்த அதிகாரியும், அத்தோடு அந்த விவகாரத்தை முடித்து விட்டார்.
இது இப்படி இருக்கையில், கணவனை இழந்த விதவைதானே… நாம் வளைத்துப் பார்க்கலாம் என்று ஒரு உதவி ஆய்வாளர் அந்த பெண் காவலரிடம் தன் சில்மிஷத்தை காட்டுகிறார். எரிச்சல் அடைந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கிறார். உயர் அதிகாரிகள் அந்த உதவி ஆய்வாளரை அழைத்து, சட்டையை கழற்றி விடுவேன் என்று கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
இதனால், ஒரு காவலர் கொடுத்த புகாரில் தனக்கு இப்படி ஒரு அவமானம் நேர்ந்து விட்டதே என்று அந்த உதவி ஆய்வாளர் கருவிக் கொண்டு இருக்கிறார். அந்த உதவி ஆய்வாளரின் ஆருயிர் நண்பனான பிட்டு சுரேஷிடம் இந்தத் தகவல்களை சொல்கிறார் அந்த உதவி ஆய்வாளர்.
அவ்வளவுதான். உயர் அதிகாரிகளை மதிக்காத, பல பேருடம் தொடர்பு வைத்திருக்கும் பெண் காவலர் என்று செய்தியை பீட்டர் மாமாவில் வெளியிட்டார் பிட்டு சுரேஷ். அப்போத காவல்துறையில் இதைக் கண்டு எரிச்சலடைந்த உயர் அதிகாரிகள் பலரும், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகையரோடு, கேடி சகோதரர்கள் அடிக்கும் லூட்டியைப் பற்றி பிட்டு சுரேஷ் எழுதத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனாலும், பிட்டு சுரேஷைப் பற்றி எங்கே புகார் செய்வது ? தினகரன் ஆசிரியர் ஆர்எம்ஆர்.ரமேஷ் தான் என்ன சொன்னாலும் கேட்பார், தன்னை மீறி ஒரு வார்த்தை செய்ய மாட்டார் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியும் பிட்டு சுரேஷைக் கண்டு அஞ்சி எந்த அதிகாரியும் காவலரும் ஒரு வார்த்தை பேசவில்லை.
பிட்டு சுரேஷ் யாருக்குத் தான் விசுவாசமாக இருப்பார் என்று விசாரித்தால், அவர் தனக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார் என்கிறார்கள்.
தான் தான் ஆர்எம்ஆர்.ரமேஷுக்கு நெருக்கம், நான் என்ன சொன்னாலும் ஆர்எம்ஆர் கேட்பார் என்று வெளியில் சொல்லிக் கொண்டு, ஆர்எம்ஆர் பெயரைச் சொல்லி பிட்டு சுரேஷ் காரியம் சாதித்துக் கொள்வதுதான் அதிகம் என்கிறார்கள். போலீஸ் துறையில் பல்வேறு மாறுதல்களை இது போல, சாதித்துக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.
தனக்கு காரியம் சாதித்துக் கொள்வது மட்டுமல்லாமல், சன் டிவி ராஜாவுக்கும் வேலைகளை முடித்துக் கொடுப்பார் என்கிறார்கள். தனக்கான காரியமாக இருந்தாலும் சரி, சன் டிவி ராஜாவுக்கான காரியங்களாக இருந்தாலும் சரி, சுரேஷ் சொல்வது, இது ஆர்எம்ஆர்.ரமேஷின் வேலை என்றுதான். அப்போதுதான் உயர் அதிகாரிகள் தட்டாமல் அந்த வேலையை செய்து கொடுப்பார்கள் என்ற சூட்சுமத்தை நன்கு அறிந்தவர் பிட்டு சுரேஷ்.
தனக்கான காரியங்களை சாதித்துக் கொள்வது சரி. சன் டிவி ராஜாவுக்காக எதற்கு சுரேஷ் இப்படிப் பட்ட காரியங்களை செய்கிறார் ? சன் டிவி ராஜாதான், பிட்டு சுரேஷை திருச்சி தினமலரிலிருந்து தினகரனுக்கு வேலைக்கு எடுத்தது. அந்த விசுவாசத்தைத் தான் இப்படி காண்பிக்கிறார்.
சரி, ஆர்எம்ஆர்.ரமேஷுக்கும், தினகரன் நிறுவனத்துக்கும் சுரேஷ் விசுவாசமாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தினகரன் நிறுவனத்தில், நடக்கும் விஷயங்களையும், ஆர்எம்ஆர்.ரமேஷின் நடவடிக்கைகளையும், சன் டிவியில் நடக்கும் உள் விவகாரங்களையும், கலாநிதி, சக்சேனா போன்றவர்களைப் பற்றி ஊழியர்களும், மேலிட நிர்வாகிகளும் என்ன பேசிக் கொள்கிறார்கள், என்ன டெவலப்மென்ட் ஆகியற்றைப் பற்றி துல்லியமாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வருகிறார்.
பிட்டு சுரேஷ் ஏன் காவல்துறைக்கு விசுவாகமாக இருக்க வேண்டும் ? என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் ? காவல்துறைக்கு விசுவாசமாக இருந்தால் தானே, பிட்டு சுரேஷூக்கு வேண்டிய விவகாரங்களை சாதித்துக் கொள்ள முடியும் ? என்னதான் ஆர்எம்ஆர்.ரமேஷுக்கும், சன் டிவி ராஜாவுக்கும் நெருக்கமாக இருந்தாலும், காரியங்களை செய்து கொடுப்பது என்னவோ காவல்துறை அதிகாரிகள் தானே…. ஆக எல்லோரையும் விட, காவல்துறை அதிகாரிகள் தானே முக்கியம் ? அப்போதுதானே, பிட்டு சுரேஷின் காரியங்களை செய்து முடித்துக் கொள்ள முடியும் ?
தினகரன் ஊழியர்களும், பிட்டு சுரேஷ் மீது கடுமையான கோபத்தில் தான் இருக்கிறார்கள். ஏனென்றால், ஆர்எம்ஆர்.ரமேஷிடம் இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக் கொடுத்து, அந்த ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைப்பதில், பிட்டு சுரேஷ் கை தேர்ந்தவர் என்கிறார்கள். ஒரு முறை பிட்டு சுரேஷும் தினகரன் ஊழியர் ஒருவரும், மாலையில் டீ குடித்து விட்டு, நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பிரிந்து வீட்டுக்கு போய் விட்டார்கள். மறுநாள் காலை அந்த ஊழியரை அழைத்த ஆர்எம்ஆர்.ரமேஷ் நாளையிலிருந்து வேலைக்கு வராதே என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியருக்கு என்ன ஏது என்று ஒன்றுமே புரியவில்லை. ஏன் சார் நான் என்ன தப்பு செய்தேன், ஏன் என்னை வேலையை விட்டு அனுப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ஆர்எம்ஆர், என்னய்யா, சீப் ரிப்போர்ட்டர் சொன்ன வேலையை செய்ய மாட்டேங்கிறியாமே… கொஞ்சம் கூட மரியாதை இல்லையாமே…. என்ன நெனச்சுகிட்டு இருக்க உன் மனசுலே… என்று கடுமையாக பேசி விட்டு, போயி சீப் ரிப்போர்ட்டர பாரு என்று கூறியிருக்கிறார்.
பிறகு அந்த ஊழியர், நம்ப பிட்டு சுரேஷைப் பார்த்து, கெஞ்சி, தனது வேலையை தக்க வைத்துக் கொண்டார். இது போல, அத்தனை ஊழியர்களும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கடுமையான தகிடுதத்தங்களில் ஈடுபடுபவர்தான் பிட்டு சுரேஷ் என்கிறார்கள் தினகரன் ஊழியர்கள்.
nice