கடந்த 22 பிப்ரவரி அன்று, காஞ்சி விஜெயேந்திரன், ஆடிட்டர் குருமூர்த்தி, எச்.ராஜா உள்ளிட்டோர் ராமநாதபுரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வழிபடுவதற்காக வந்தனர். அவர்கள் படை பரிவாரங்களோடு வந்தனர். அவர்களுக்கு துணையாக குருமூர்த்தியின் அடிமை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் உடனிருந்தார்.
ராமநாதபுரம் ராமநாத ஸ்வாமி கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருவது. இந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தோடு சேர்த்து, இக்கோவிலுக்கே உரிய ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டது.
“இந்து மதத்தில் பல ஆகமங்கள் உள்ளன. மூத்த சிவாச்சாரியாரான சுப்பிரமணிய குருக்கள் மொத்தம் 28 ஆகமங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார். அந்தந்த ஆகமங்களின் அந்தந்த குருக்களிடம் அதற்கான ஆகமங்கள்,மந்திரங்கள் பயின்று, அதை அப்படியே வழிவழியாக பாரம்பரியமாக செய்பவர்களே செய்ய வேண்டும்.”
நண்பர் சாவித்ரி இச்சம்பவம் பற்றி அவர் எழுதிய அத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்
என்ற கட்டுரையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி..உள்ளிட்ட படை பரிவாரங்களுடன் இராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வந்தார்! அவருக்கு பூரணகும்ப மரியாதை எல்லாம் தரப்பட்டது. அவர் ஸ்வாமியை தரிசிக்க வருவதாக அனைவரும் கருதி இருந்த நேரத்தில், திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்து தானே ஸ்வாமி மேனியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என முயற்சிக்க, அதை அவருடன் வந்தவர்கள் ஆரவாரமாக ஆமோதிக்க கோவில் குருக்கள் இருவர் மிகுந்த பணிவுடன், ’’நீங்க பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கோவில் கருவறையில் சிவாகம முறைப்படி தீட்சை பெற்று, பாரம்பரிய வழிமுறையில் சிவாகமத்தை ஓதுபவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்! பெரியவா.. நீங்களே ஆகமவிதிகளை அதுமீறப்படாது..’’என எடுத்துச் சொல்லியுள்ளனர்.
ஆனால், அவரும்,அவர் கூட வந்தவர்களும் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கவில்லை. மீண்டும், மீண்டும் வலுயுறுத்தி உள்ளே போக எத்தனிக்கவும் குருக்கள் குறுக்கே படுத்து வீழ்ந்து கெஞ்சியுள்ளனர்.ஆனால், அவர் கூட வந்தவர்கள் ‘’சங்கராச்சாரியாரையே அவமானப்படுத்துவதா..? அவருக்கு இல்லாத உரிமையா? அவர் லோக குருவாச்சே..’’ என்றெல்லாம் அடாவடியாகப் பேசியும், கத்தியும் ரகளையில் ஈடுப்பட்டனர். பக்தர்கள் பெருந்திரளாக இதை வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. கூட வந்தவர்கள் கோவில் நிர்வாக அதிகாரியை அழைத்து, ’’குருக்களை சமாதானப்படுத்தி, சங்கராச்சாரியாரை உள்ளே அனுமதிக்க ஆக வேண்டியதை செய்யுங்கள்’’ என கட்டளையிட்டதும், இதென்னடா மேலிடத்து பொல்லாப்பு நமக்கு ஏன்? அப்புறம் நம்ம வேலைக்கு ஆபத்தாகிவிடப் போகிறது என்ற பயத்தில் அவர்களும் சேர்ந்து வற்புறுத்தி, சங்கராச்சாரியாரை கருவறைக்குள் அனுமதித்துள்ளனர்! மூலஸ்தானத்தை,கருவறை பூஜையை போட்டோ எடுக்க கூடாது என்பது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் மரபு.அதையும் சங்கராச்சாரியார் ஆட்கள் மீறியுள்ளனர்.” என்று சாவித்திரி கண்ணன் குறிப்பிடுகிறார்.
காஞ்சி சங்கர மடத்தை நடத்தி வந்த காலம் சென்ற பெரிய சாமி பரமாச்சாரி, காலம் சென்ற ஜெயேந்திரன் தற்போது உள்ள, விஜயேந்திரன் ஆகிய அனைவருமே, காஞ்சி மடம் ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடம் என நிறுவ முயன்று வந்துள்ளனர். குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும் காலில் விழுவதாலேயே காஞ்சி மடம் அதிகார மையமாகவும், புகழ் பெற்ற மடமாகவும் விளங்குகிறது.
“ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள்; கிழக்கில் பூரியின் கோவர்தன மடம், தெற்கில் சிருங்கேரியில் உள்ள சிருங்கேரி மடம், மேற்கில் துவாரகையின் காளிகா மடம் வடக்கில் பத்ரிகாஷ்ரமத்தின் ஜோதிர் மடம் ஆகிய நான்கு மட்டுமேயாகும்!. ஆதிசங்கரரின் வரலாறு, இந்த நான்கு மடங்களின் வரலாறு ஆகிய எதிலும் காஞ்சி சங்கர மடத்தைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. ஆனால், ஆதி சங்கரால் உருவாக்கப்பட்ட மடமாக தன்னை நிறுவ சங்கர மடம் பல பொய்யான கதைகளை சிருஷ்டித்துக் கொள்வதோடு, தனக்கு இல்லாத அதிகாரங்களும், உரிமைகளும் இருப்பதாக அடவாடி செய்கிறது! உண்மை என்னவென்றால், 1821ல் சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கும்பகோணத்தில் துவங்கப்பட்டது. அந்த கிளை சிருங்கேரி மடத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தனித்து இயங்குவதாக அறிவித்துக் கொண்டது. அது பின்னாட்களில் காஞ்சிக்கு இடம்பெயர்ந்தது. அது தமிழக பிராமணர்களால் அரசியல், அதிகார மையங்களுக்கு தன்னை நெருக்கமாக்கிக் கொண்டது. எல்லா இடங்களிலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது. மற்ற உண்மையான சங்கரமடங்கள் ஆன்மீகப் பணிகளை தவிர்த்த அரசியல் விவகாரங்களில் அனாவசியமாக தலையிடுவதில்லை என்பதும் கவனத்திற்குரியது.” என குறிப்பிடுகிறார் சாவித்திரி கண்ணன்.
இந்த வரலாற்று ஆய்வுக்குள் நாம் செல்ல இப்போது அவசியமில்லை.
இப்போது விசாரணை நடத்தப்பட வேண்டிய விஷயம், 22 பிப்ரவரி அன்று, குருமூர்த்தி, எச்.ராஜா, விஜயேந்திரன் ஆகியோர் ராமநாதஸ்வாமி கோயிலுக்குள் கூட்டமாக சென்று அடாவடி செய்தபோது, அந்த கர்ப்ப கிரஹத்துக்குள் இருக்கும் பழங்கால ஸ்படிக லிங்கம் உடைக்கப்பட்டதா என்பதே.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது கீழ்கண்ட விஷயங்கள் கிடைத்தன.
ராமநாத ஸ்வாமி கோவில் கர்ப்ப கிரஹம் அருகே ஒரு பழங்கால ஸ்படிக லிங்கம் இருந்துள்ளது. ஆகமம் காரணமாக, இந்த ஸ்படிக லிங்கத்தை பக்தர்கள் காலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டுமே வழிபட அனுமதிக்கப் படுவர். அத்தகைய பழமையான ஸ்படிக லிங்கம் இது. மற்ற நேரத்தில் பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை.
22 பிப்ரவரி அன்று ஜெயேந்திரன் அண்ட் கோ, அடாவடியில் ஈடுபட்டபோது, யாரோ மேலே விழுந்து, மிதித்து இந்த ஸ்படிக லிங்கம் உடைந்து விட்டது. இதன் காரணமாக 23 பிப்ரவரி முதல் கட்டண தரிசனமாக இருந்த இந்த ஸ்படிக லிங்கம், இலவச தரிசனமாக அனுமதிக்கப்பட்டது. பல பக்தர்கள், ஸ்படிக லிங்கம் ஏன் உடைந்திருக்கிறது என்று கேள்வியெழுப்பத் தொடங்கினர்.
இது பெரும் சிக்கல் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த மைலாப்பூர் ப்ரோக்கர் குருமூர்த்தி, கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரத பீட சங்கராச்சாரி, பாரதி தீர்த்த ஸ்வாமிகள், ராமநாதபுரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு 9 இன்ச் உயரம் உள்ள புதிய ஸ்படிக லிங்கத்தை வழங்குவது போல ஏற்பாடு செய்தார்.
அவசர அவசரமாக இரண்டு கிலோ எடையுடைய ஒரு ஸ்படிக லிங்கம் தயார் செய்யப்பட்டு, அதை காசி விஸ்வநாதர் சன்னதி வைத்து சிறப்பு பூசைகள் செய்வது போல ஒரு நாடகமாடியுள்ளனர். இந்த நாடகம் முடிந்த கையோடு, இந்த 9 இன்ச் டுபாக்கூர் ஸ்படிக லிங்கம், ராமநாத ஸ்வாமிகள் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
அன்றே சொன்னார் கலைஞர். “கோவில் கூடாதெனவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது” என.
இந்த திருட்டுப் பயல்கள் செய்த வேலையை பார்த்தீர்களா. கடவுள் மீது துளியும் நம்பிக்கை இல்லாத ஒரு தெளிந்த நாத்தீகன் கூட இதை செய்யமாட்டான்.
ஆனால் இதையெல்லாம் செய்திருப்பது, கடவுள் பெயரால் வியாபாரம் செய்யும் அயோக்கியர்கள்.
தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தோழர் தொல் திருமாவளவன், இடதுசாரிகள், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகங்கள் ஆகியவை, இச்சிக்கலை கையில் எடுத்து உரிய விசாரணைக்கு அழுத்தம் தரவேண்டும்.
தரவுகள் உதவி :
https://aramonline.in/3214/rameshwaram-temple-sankarachariyar-puja-conflict-aram/
Sir, I have been reading your blog but why have you not taken many more issues like privatization of Indian Overseas Bank and Central Bank.