“நாங்கள் நல்லவர்களை குறிவைப்பதில்லை. நாங்கள், இந்துக்கள், இந்துத்துவா மற்றும் இந்தியாவை தாக்குபவர்களையே குறிவைக்கிறோம். அது அவர்கள் குற்றம்”
மார்ச் 2020 முதல் இந்தியாவை கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பொதுமுடக்கத்தில் இந்தியாவை அடைத்த நரேந்திர மோடி சத்தமில்லாமல் நினைவுகளை கிளறும் ஒரு காரியத்தை செய்தார். தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த ராமாயணம் மற்றும் மகாபாரத தொடர்களை மறுஒளிபரப்பு செய்ய உத்தரவிட்டார். மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேக்கர் பொது மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே தொடர் மறுஒளிபரப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இந்த மறுஒளிபரப்பு நினைவுகளை மட்டும் கிளறி விடவில்லை.
தன்னை வலதுசாரி செயற்பாட்டாளர் என்று கூறிக் கொள்ளும் 39 வயது மும்பையைச் சேர்ந்த ரமேஷ் சோலங்கி நம்மிடம், “இந்தத் தொடர்கள் ஒளிபரப்பப் பட்டதைத் தொடர்ந்து “சமூக வலைத்தளங்களில் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் லட்சக்கணக்கான கணக்குகள் சுனாமி போல தொடங்கப்பட்டன” என்றார்.
இதனை எதிர்கொள்ள சோலங்கியும் அவரது 10 நண்பர்களும் சேர்ந்து “இந்துமதத்தை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்” என்ற குழுவினை தொடங்குகிறார்கள். இக்குழு பெரும்பாலும் இணையதளத்திலேயே செயல்படுகிறது. மே 2020ல், அவர்கள் தங்களை “இந்து ஐடி செல்” என்று வர்ணித்துக் கொண்டு தொடங்குகிறார்கள். இந்து மதத்தை பாதுகாக்க நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்திக் கொள்வதென்றும் முடிவெடுக்கிறார்கள்.
“இந்து வெறுப்பாளர்களை விட மாட்டோம். மீண்டும் சொல்கிறோம். இவர்களில் ஒருவரையும் சட்டபூர்வ நடவடிக்கையில் இருந்து விடமாட்டோம். இது போன்ற இந்து விரோதிகளுக்கு சட்டபூர்வமாக புகாரளிப்பதன் மூலம், உரிய பாடத்தை கற்றுக் கொடுக்க நீங்கள் விரும்பினால் எங்களோடு தன்னார்வலராக நீங்கள் இணையலாம்” என்று அவர்களின் ட்விட்டர் ஹேண்டிலில் உள்ள ஒரு ட்வீட் கூறுகிறது.
மற்றவர்களை இதில் இணைய இவ்வாறு இவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். நீங்கள் புகழ்பெற்ற பதிவரா இல்லையா என்பது முக்கியம் இல்லை. இந்து தர்மத்துக்காக நீங்கள் உழைக்கத் தயாராக இருந்தால் நீங்கள் எங்களோடு இணையலாம்”. இக்குழுவில் இணைய, ஒரு உறுப்பினர் இந்து தர்மத்தில் உறுதியான பிடிப்புடையவராக இருக்க வேண்டும்.” இதற்கான தகுதி, இந்து தர்மத்தை பாதுகாப்பதற்காக குறைந்தது ஒரே ஒரு ஆன்லைன் புகாராவது ஒருவர் அளித்திருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் அவதூறான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தக் கூடாது. வலதுசாரி சிந்தனை உள்ளவர்களை குறிவைக்க கூடாது”. இவையெல்லாம் இதில் சேர நிபந்தனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இவர்களின் நோக்கம் என்னவென்று இவர்கள் கூறுவது, இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்களை சட்டபூர்வமாக காவல் துறையில் புகாரளித்து, வழக்கறிஞர்கள் உதவியோடு சம்பந்தப்பட்டவர்கள் சிறை செல்வதை உறுதி செய்வது. இந்த விளக்கத்தை பார்த்தால், இவர்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதுபோல தோற்றம் ஏற்படும். ஆனால் யதார்த்தம் வேறானதாக உள்ளது.
இந்து மதக் கடவுளை ஒருவர் இழிவுபடுத்தி விட்டார் என்று இவர்கள் கருதுகையில் இவர்களின் தாக்குதல் சட்டபூர்வமாக புகாரளிப்பதோடு நின்று விடுவதில்லை. இத்தோடு கூடவே ஆன்லைனில் வெறித்தனமாக ட்ரோல் செய்வது, மிரட்டல்கள் விடுப்பது, அனாமதேய மெயில்கள் அனுப்புவது என்று பல்வேறு வடிவங்களில் இது அவதாரமெடுக்கிறது.
தங்களது இலக்கை மிரட்ட இந்து ஐடி செல் தனது ஆன்லைன் தன்னார்வலர் டீமை ஆக்டிவேட் செய்கிறது. இந்த தன்னார்வலர் டீம், தங்கள் இலக்கை குறிவைத்து வேட்டையாடுகிறார்கள். சம்பந்தப்பட்டவரின் தொலைபேசி எண், வீட்டு விலாசம் ஆகியவற்றை கண்டறிகிறார்கள். பின்னர் அவர் வேலை செய்யும் இடத்தின் முதலாளி / மேலாளரை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர் வேலை நீக்கம் செய்யப்படும்வரை தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும். இன்னொரு புறம் சம்பந்தப்பட்டவரும் ஆன்லைனில் ட்ரோல் செய்யப்பட்டுக் கொண்டிருப்பார். இறுதியாக பணி நீக்கம் செய்யப்படும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள்.
இந்த இந்து ஐடி செல்லின் நிறுவனர்கள், ஆன்லைன் ட்ரோலிங்க்குக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் சைபர் சேவகர்கள் என்று கூறிக்கொள்வோர் இவை அனைத்தையும் செய்கிறார்கள். ஆனால் சிக்கல் வந்தால், இந்து ஐடி செல் நிறுவனர்களால் எவ்விதமான சட்டபூர்வமான சிக்கலில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும்.
இந்த இந்து ஐடி செல்லின் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால், புகாருக்கு ஆளானவர் பல வருடங்கள் நீதிமன்றத்துக்கு நடையாக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
டெல்லியை சேர்ந்த 26 வயது பெண் பத்திரிக்கையாளரான சுஷ்மிதா சின்ஹாவின் கதையை பார்ப்போம்.
கடந்த ஆண்டு 20 ஆகஸ்ட். அது தீஜ் எனப்படும் இந்து பெண்களுக்கான ஒரு பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பு. இந்த பண்டிகையின் முக்கியத்துவம் என்னவென்றால், பார்வதியை சிவபெருமான் மனைவியாக ஏற்றுக் கொண்டதற்காக பார்வதி சிவனுக்கு நன்றி செலுத்துவது போன்ற ஒரு பண்டிகை என ஐதீகம். இப்பண்டிகை தென்னகத்தில் கொண்டாடப்படுவதில்லை. வட இந்தியாவில் இப்பண்டிகை மிகவும் பிரபலம். இந்த நாளன்று பெண்கள் தண்ணீர் கூட அருந்தாமல் காலை முதல் மாலை வரை கணவருக்காக விரதமிருக்க வேண்டும்.
இப்பண்டிகையை விமர்சித்து சுஷ்மிதா சின்ஹா ஒரு இன்ஸ்டாக்ராம் வீடியோவை வெளியிடுகிறார். அவ்வீடியோவில், சுஷ்மிதா சின்ஹா இவ்வாறு பேசுகிறார். “இந்த பண்டிகை அன்று பெண்கள் தண்ணீர் கூட குடிக்க அனுமதிக்கப் படுவதில்லை. இப்பண்டிகை பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனப்பான்மை கொண்டது, பெண்ணுரிமைக்கு எதிரானது என்று நான் சொன்னால் நீங்கள் என் மீது கோபப்படுவீர்கள். நான் நானாக எதுவுமே சொல்லவில்லை. ஹர்தலிக்கா தீஜ் விரதத்தின் கதை, என்ற ஒரு புத்தகத்தை காட்டி, இதில் இருந்து ஒரே ஒரு பக்கத்தை நான் படிக்கிறேன் என்றார் சுஷ்மிதா. அப்புத்தகத்தில் இருந்து “ஒரு பெண் தீஜ் விரதத்தின் நாளில் விரதமிருக்க தவறினால், அப்பெண், ஏழையாக, தீண்டத்தகாதவராக, சண்டை போடுபவராக, கஞ்ச எண்ணம் உடையவராக மகிழ்ச்சியற்றவராக மாறுவார். அந்த நாளில் அப்பெண் உண்ணும் உணவின் அடிப்படையில் அவர் ஒரு மிருகமாக மாறுவார்” என்று அப்புத்தகத்தில் உள்ள ஒரு பக்கத்தை படித்து விட்டு, சுஷ்மிதா, தன் நேயர்களை பார்த்து கேட்கிறார். “இப்புத்தகம் ஆணாதிக்க கருத்துள்ள புத்தகமா இல்லையா ? இப்புத்தகம் மனிதர்களுக்கு டாய்லெட் பேப்பராக மட்டுமே பயன்படும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா” என்று கேட்டார் சுஷ்மிதா இந்த வீடியோவில்.
இது குறித்து நம்மிடம் பேசிய சுஷ்மிதா, “கணவருக்காக குறிப்பிட்ட நாளில் விரதமிருக்காத பெண் மிருகமாக மாறி விடுவாள் என்று எழுதி வைத்த ஒரு நூல் குறித்த எனது விமர்சனத்தின் ஒரு வடிவமே எனது வீடியோ” என்றார் சுஷ்மிதா.
சுஷ்மிதாவின் வீடியோ மொத்தம் இரண்டு நிமிடம் 20 வினாடிகள். இந்து ஐடி செல்லின் போராளிகள், இந்த வீடியோவை வெறும் 17 வினாடி வீடியோவாக எடிட் செய்தனர். “இப்புத்தகம் மனிதர்களுக்கு டாய்லெட் பேப்பராக மட்டுமே பயன்படும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா” என்ற சுஷ்மிதாவின் இறுதி வாசகம் மட்டும் மீண்டும் மீண்டும் வருவது போல எடிட் செய்யப்பட்டது. இந்து ஐடி செல்லால் சிலுவையில் அறையப்பட்டார் சுஷ்மிதா.
சுஷ்மிதா சின்ஹாவின் வீடியோ
https://www.instagram.com/tv/CEHNYCen81G/?igshid=19y58igzvzsjc
டெலிக்ராம் தகவல் செயலியில் இந்து ஐடி செல் ஒரு குழுவை வைத்திருக்கிறது. இந்த குழுவில் 32,900 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழுவில் சுஷ்மிதாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோ போடப்பட்டு, இந்த வீடியோவை பரப்பும்படி கோரப்பட்டது. இது வரை இந்த வீடியோ 2,04,832 முறை பார்க்கப்பட்டுள்ளது. 16.9 ஆயிரம் கமெண்ட்டுகள். சுஷ்மிதா மீது உடனடியாக புகாரளிக்கும்படி அதில் கோரிக்கை வைக்கப்பட்டது. புகார் அளித்து விட்டேன் என்று தகவலை பதிவிடுபவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். இந்து தர்ம போராளிகள் என்று அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ட்விட்டரில் பாலோவர்கள் கூடும்.
புகாரளிப்பவர்களுக்கு அங்கீகாரம்
வலதுசாரி இணையதளங்கள், இந்து ஐடி செல்லின் ட்வீட்டுகளை எடுத்து கட்டுரைகள் எழுதினார்கள். அவரின் முகநூல் ட்விட்டர் கணக்குகளில் இருந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விபரங்கள், புகைப்படங்கள் எடுத்து பொதுவெளியில் பகிரப்பட்டன. ஒரு இந்தி சேனல், சுஷ்மிதா இது தொடர்பாக அளித்த விளக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே ஒரு மணி நேரம் விவாதம் நடத்தியது.
சுஷ்மிதா சின்காவின் விளக்க ட்வீட்.
Leftists find pleasure in abusing gentle Hindus and Hindu believes. Here @Sushmitasinhaa, who works for @BoltaHindustan (owned by Mohd. Rahmani) uses Hindu texts as toilet paper! Give us any relevant details in my DM for FIR. We already have her linkedin, insta, FB. pic.twitter.com/K6wvrbHzAZ
— Hindu IT Cell (@HinduITCell) August 25, 2020
சுஷ்மிதா மீதான ட்ரோல்களின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. உறவினர்களும் நண்பர்களும் சுஷ்மிதாவின் குடும்பத்தை புறக்கணிக்கத் தொடங்கினர்.
சுஷ்மிதா மீதான தாக்குதலுக்கு காரணமான மோகன்
இந்து ஐடி செல்லை சேர்ந்தவர்கள் எனது நண்பரை அழைத்து எனக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்பதற்காக எனது வீட்டு முகவரி வேண்டும் என்று கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். இவர்கள் மிரட்டலுக்கு பயந்து, நான் எனது டெல்லி வீட்டை விட்டே வெளியேறினேன்.
சுஷ்மிதாவின் விபரங்களை சேகரித்த இந்து ஐடி செல்
Leftists find pleasure in abusing gentle Hindus and Hindu believes. Here @Sushmitasinhaa, who works for @BoltaHindustan (owned by Mohd. Rahmani) uses Hindu texts as toilet paper! Give us any relevant details in my DM for FIR. We already have her linkedin, insta, FB. pic.twitter.com/K6wvrbHzAZ
— Hindu IT Cell (@HinduITCell) August 25, 2020
இந்த ஐடி செல்லின் சுஷ்மிதாவுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பிஜேபியின் முக்கிய பிரமுகரின் ஆதரவு கிடைத்தது. பிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா இதற்கு ஆதரவளித்தார். அவர் சுஷ்மிதாவை கைது செய்ய வேண்டும் என்று ட்வீட் செய்த பிறகு #ArrestSushmitaSinha ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
“அந்த ட்விட்டர் ட்ரெண்டை பார்த்ததும் நான் அனைத்து நம்பிக்கையையும் இழந்தேன். நான் நிச்சயம் கைது செய்யப்படப் போகிறேன் என்றே உணர்ந்தேன். தனிமையாக உணர்ந்தேன். இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று நினைத்தேன்” என்றார் சுஷ்மிதா.
இந்த ஆபாசமான, ஆபத்தான ட்ரோல் அட்டாக்குகள், நாத்தீக குடியரசுக் குழு என்ற அமைப்பின் தலைவர் அர்மின் நவாபி நாத்தீகம் பேசிய ஒரு ட்வீட் பற்றி புதிய சர்ச்சைக்கு பின்னால் சுஷ்மிதாவின் மீதான தாக்குதல் குறைந்தது.
அர்மின் நவாபி ஒரு பெண் இந்து கடவுளின் கார்ட்டூனை போட்டு, “செக்சி” என்று ஒரு வார்த்தை போட்டு விட்டார். அவர் சார்ந்த நாத்தீக குடியரசுக் குழு, தீவிரமாக கடவுள் மறுப்பு கொள்கை பேசும் ஒரு அமைப்பு. அவர் ட்வீட்டை அடுத்து அவர் மீது சாரி சாரியாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
சுஷ்மிதா மீதும் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆறு மாதங்களை கடந்தும் காவல் துறை இவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. “ஆனால் அச்சம்பவம் எனது நம்பிக்கையை குலைத்தது. இன்றும் என் உயிருக்கு அஞ்சித்தான் வாழ்கிறேன்” என்கிறார் சுஷ்மிதா
சுஷ்மிதாவின் வழக்கு ஒன்று மட்டும் அல்ல. பல உதாரணங்கள் இருக்கின்றன.
இந்து ஐடி செல் மே 2020 முதல் இது வரை 500 புகார்களை பதிவு செய்திருப்பதாக அதன் நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள். இது, தற்போது இந்திய அறக்கட்டளைகள் சட்டத்தின் கீழ் ஒரு அறக்கட்டளையை பதிவு செய்துள்ளது. வெறும் 11 தன்னார்வலர்களை கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று 200 தன்னார்வரலர்களோடு செயல்படுகிறது.
இவர்களின் இலக்குகள் பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்.
இதை உருவாக்கியவர்கள்
இத்தகைய ஒரு கருத்தை சிந்தித்து திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் ரமேஷ் சோலங்கி மற்றொருவர் விகாஸ் பாண்டே. ரமேஷ் தனது ட்விட்டர் பயோவில், தன்னை ஒரு “இந்து தேசியவாதி” என்று வர்ணித்துக் கொள்கிறார். இந்தியன் ராஜ்புத் என்று ஒரு இணையதளத்தையும் நடத்துகிறார். அந்த இணையதளம் அதை பற்றி, “மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம். சுதந்திரத்தின் ரகசியம், வீரம்” என்று போட்டிருப்பதுதான் வினோதம்.
இந்த ரமேஷ் 1998ம் ஆண்டு சிவசேனாவில் சேர்கிறார். சிவசேனாவின் ஐடி செல்லில் தீவிரமாக செயல்படுகிறார். 2019ம் ஆண்டு சிவசேனா அதன் பரம வைரிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸோடு கூட்டு சேர்ந்ததை அடுத்து சிவ சேனாவிலிருந்து வெளியேறுகிறார். எங்களுக்கு அளித்த பேட்டியில், ரமேஷ், “இந்துத்துவாவை கைவிட முடியாது” என்கிறார்.
ஒரு ட்வீட்டில் ரமேஷ், கவிழும் கப்பலில் இருந்து முதலில் எலிகள்தான் வெளியேறும் என்று கூறுகிறார். அவர் தன்னைப் பற்றியே கூறிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.
உத்திரப் பிரதேசம், கோரக்பூரை சேர்ந்த விகாஸ், 2014ம் ஆண்டு பிஜேபிக்காக தேர்தலில் அதன் ஐடி செல்லில் பணியாற்றுகிறார். 17 நவம்பர் 2020 அன்று அவர் தனது மகன் பிரதமர் மோடியோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிடுகிறார். எனக்கு மோடியோடும், மோடி அமைச்சரவையில் பல அமைச்சர்களோடும் மிகுந்த நெருக்கம் உண்டு என்று விகாஸ் அப்போது பெருமை பட்டுக் கொள்வார்.
இந்து ஐடி செல் தவிர்த்து, மோடிக்காக ஐ சப்போர்ட் நமோ என்று ஒரு ட்விட்டர் ஹேண்டிலையும் விகாஸ் நடத்துகிறார்.
https://twitter.com/isupportnamo?lang=en
நமக்கு ஜும் கால் மூலமாக ரமேஷ் அளித்த பேட்டியில், இவை அனைத்தும் எப்படி தொடங்கியது என்பதை விவரிக்கிறார். “லாக்டவுன் சமயத்தில் ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தை மறு ஒளிபரப்பு செய்ததும், இந்து கடவுள்களை ஆன்லைனில் கடுமையாக இழித்து பேசுவது அதிகரித்தது. இதன் பிறகு விகாஸ் என்னை அழைத்து, “நாம் இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். “மக்கள் என்னிடம் ஏராளமாக எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால், என்னாலும் ஒரு அளவுக்குத்தானே முடியும். இந்து கடவுள்களை விமர்சிப்பவர்களை எதிர்த்து ஏற்கனவே நான் பல நூறு புகார்களை அனுப்பியுள்ளேன். நாங்கள் எங்களுக்குள் பல முறை விவாதித்த பின்னர், எங்களைப் போலவே இந்து தர்மத்தை காக்க விரும்பும் நபர்களை ஒன்றிணைத்து சட்டபூர்வமாக இந்து கடவுள்களை இழித்து பேசுபவர்களை தண்டிக்க விரும்பினோம். இப்படித்தான் இந்து ஐடி செல் பிறந்தது”
பல டிக்டாக் பயனாளர்கள், நெட்ப்ளிக்ஸ் இந்தியா, மற்றும் இந்து கடவுள்களுக்கு எதிராக பேசும் திரை பிரபலங்களுக்கு எதிராக பல எப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளேன்” என்ற அவர், ஒரு முறை நெட்ப்ளிக்ஸ் இந்தியாவை குறிவைத்து தாக்கியதை பெருமையோடு குறிப்பிடுகிறார். “எனது இலக்கு ஒரே நாளில் 2500 ட்வீட்களோடு #BoycottNetFlix ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. காலை 8 மணிக்கு தொடங்கினேன். ஒரு மணி நேரத்தில் 70 முதல் 80 ஆயிரம் ட்வீட்டுகளோடு அது உலகெங்கும் ட்ரெண்ட் ஆனது” என பெருமையோடு குறிப்பிடுகிறார் ரமேஷ்.
இந்த குழுவின் தந்திரம் என்ன ?
ரமேஷே விளக்குகிறார். “இந்து மதத்துக்கு எதிராக எதையாவது பார்த்தால் அவர்கள் எங்களை ட்விட்டரில் டேக் செய்து ட்வீட் போடுவார்கள். அவற்றை சேகரித்து நாங்கள் எங்களது கோர் டீமுக்கு இதை அனுப்புவோம். எங்கள் டீம் இது யாருடைய ஹேண்டிலில் இருந்து வந்திருக்கிறது, வெரிபைட் ஹேண்டிலா, எதற்காக அந்த நபர் இப்படியொரு ட்வீட்டை போடுகிறார். இது தவிர வேறு ஏதாவது சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கிறதா, இந்தியாவுக்கு எதிராக ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்வோம். சரி இந்த விஷயத்தை கையில் எடுக்கலாம் என்று முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நபரின் அத்தனை விபரங்களையும் எடுப்போம். எங்கள் காண்டாக்டுகள் மூலம், அந்த நபரின் வேலை, முகவரி, குடும்ப விபரங்கள், என அனைத்தையும் சமூக வலைத்தளத்திலிருந்து எடுப்போம்”
“அடுத்ததாக எங்களது வழக்கறிஞர்கள் களத்தில் இறங்குவார்கள். அவர்கள் விவாதித்து ஒரு மாதிரி புகாரை தயார் செய்வார்கள். இதை எங்கள் டெலிக்ராம் குழுவில் போடுவோம். இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் ஈமெயில் முகவரி மற்றும் சம்பந்தப்பட்டவரின் முகவரியை அனுப்புவோம். 20 முதல் 30 வரை எப்போதும் எங்கள் தன்னார்வலர்கள் ஆன்லைனிலோ, நேரிலோ புகார் அளித்தபின்னர் அதன் ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்வார்கள். நாங்கள் எங்களின் பிரபலமான தன்னார்வலர்களை அந்த ட்விட்டர் ஹேண்டில்களை பின் தொடர்வார்கள். பிரபலங்கள் பின் தொடரும் மகிழ்ச்சியில் அவர்கள் மேலும் வேகமாக பணியாற்றுவார்கள்.
Thanks for joining our training session. 🙏 https://t.co/SvsdsosuQu pic.twitter.com/8AE8trrY71
— Hindu IT Cell (@HinduITCell) July 26, 2020
“அதன் பிறகு, சைபர் க்ரைமின் புகார் காவல் நிலையத்துக்கு செல்லும். காவல் துறையினர் புகாரளித்த எங்கள் தன்னார்வலர்களை அழைத்து விசாரிப்பார்கள். நாங்கள் எப்.ஐ.ஆர் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுப்போம். முதல் ட்வீட் போடுவது முதல் சம்பந்தப்பட்ட நபர் சிறை செல்வது வரை, எங்கள் ஆட்கள் ஓயவே மாட்டார்கள். பெரும்பாலான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் சிறைக்கு செல்வதை உறுதி செய்வோம்” என்றார் ரமேஷ்.
பாதிக்கப்பட்டோர்
ஜூலை 2020ல், அக்ரிமா ஜோஷுவா என்ற மேடை நகைச்சுவையாளர், அவருடைய பழைய வீடியோ ஒன்றில் மராத்தா அரசர் சிவாஜியை கிண்டல் செய்து பேசியதை புதிதாக எடுத்து இந்து ஐடி செல் மூலமாக அவருக்கு கடும் தொந்தரவு கொடுத்தனர்.
Thanks for joining our training session. 🙏 https://t.co/SvsdsosuQu pic.twitter.com/8AE8trrY71
— Hindu IT Cell (@HinduITCell) July 26, 2020
கத்துவா பாலியல் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்காக ஆஜரான வழக்கறிஞர் தீபிகா ரஜாவத் இந்து மத விரோதி என்று ஐடி செல்லால் அக்டோபர் 2020ல் சித்தரிக்கப்பட்டார். அவர் பாலியல் வன்புணர்வு விழிப்புணர்வு குறித்து பேசியதை இந்துக்களின் நவராத்திரி விழாவுக்கு எதிராக பேசினார் என்று தாக்குதல் தொடுத்தனர். 21 அக்டோபர் 2020 அன்று, அவர் வீட்டின் முன்னால் பெரும் கூட்டம் கூடியது. “தீபிகா உன் சவக்குழி தோண்டப்படுகிறது” என்று கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர்.
Shouting slogan is not a crime. Proud of you guys ❤️ https://t.co/yXqdWJ9s0z
— Hindu IT Cell (@HinduITCell) October 21, 2020
தீபிகா ரஜாவத் இந்த அச்சுறுத்தும் சம்பவத்தைப் பற்றி இப்போது பேசுகையில் வெளிப்படையாக சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார், “இந்த வழக்கில் என் மேல் எப்ஐஆர் பதிவு செய்த உள்ளூர் காவல்துறை அதிகாரி, ‘ஐடி செல் கொடுக்கிற அழுத்தத்தின் காரணமாகவே வேறு வழியில்லாமல் எப்ஐஆர் பதிகிறேன்’ என்றார். இதனை வெளிப்படையாக சொல்வதில் எனக்குத் தயக்கம் ஒன்றுமில்லை” என்கிறார் தீபிகா.
சாகேத் குமார் டெல்லியில் வாழும் பத்திரிகையாளர். தொடர்ந்து தலித் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எழுதி வருபவர். இவர் இந்துக் கடவுளான அனுமானைப் பற்றி பேசினார் என்று ஐடி செல்லினால் தொடர்ந்து ட்ரால் செய்யப்பட்டார்.
“என்னைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு ட்ரால் செய்தார்கள். அத்தனையும் வெறுப்பான சொற்கள். அதனை துர்க்கனவு என்று சொல்லாமல் என்ன சொல்வது.. ? அவர்கள் என்னை மட்டுமல்ல என்னுடைய பெண் தோழியையும் விட்டுவைக்கவில்லை. நான் வேலைப் பார்க்கும் இடம், என்னுடைய நெருங்கிய உறவுகள் என யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இப்போது கூட அந்த அதிர்ச்சியில் இருந்து நான் முழுமையாக மீளவில்லை” என்கிறார்.
அக்ரிமாவிற்கு பாலியல் வன்முறை மிரட்டல்கள் கொண்ட டிரால்கள் மழைக்காலத்து பூச்சிகள் போல படையெடுத்து அவரை எரிச்சலூட்டின.
சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை டிராலிங் என்பது அதன் வாழ்க்கை முறை. ஆனால் இந்து ஐடி செல்கள் தொடங்கி வைத்திருக்கும் ட்ராலிங்குகள் அச்சமூட்டக்கூடியவையாக உள்ளன
ஹனுமான் மன்மோகன் என்பவர் யூட்யூபர். இவரின் வேலை என்னவென்றால் ஐடி செல் யாரை குறிவைத்து தாக்குகிறதோ அவர்களைப் பற்றிய வீடியோக்களை வெளியிட்டு ட்ரால் செய்வது தான்.
வீடியோ 1
வீடியோ 2
வீடியோ 3
வீடியோ 4
வீடியோ 5
இந்த இந்து ஐடி செல்கள் இப்படி நடந்து கொள்கின்றதே என்று ரமேஷிடம் கேட்டதற்கு அவர் தரும் பதில் இப்படியாக இருக்கிறது. “இந்துக்களை துன்புறுத்தினால் அந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் பகத்சிங் வழியினையும் தொடர்வார்கள். இது தான் ஃபாருக்கிக்கும் நடந்தது” என்கிறார்.
ஃபாருக்கி ஒரு ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளர். அவர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யபப்ட்டார். இந்தோரில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின்போது இந்து கடவுள்களை அவமதிப்பு செய்யும் விதமாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது அவர் மேல் இருந்த வழக்கு. இத்தனைக்கும் அவர் அதில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்காக அவர் ஒரு மாதம் சிறையில் இருந்து வந்திருக்கிறார்.
இதில் மற்றொரு தகவல் என்னவென்றால் இந்த ஃபாருக்கி மேல் ரமேஷ் அவர் கைது செய்யபப்டுவதற்கு எட்டு மாதங்குக்கு முன்பே அதாவது ஏப்ரல் 2020ல் ஒரு புகார் ஒன்றினை அளித்திருந்தார்.
Filed online complaint with @MumbaiPolice against hate monger @FaruquiMunawar
I request Mumbai Police to file FIR n take strict against Munavar for mocking Sri Ram and Sita Maata@CyberDost @MahaCyber1 @ippatel @TajinderBagga @Aabhas24 @ShefVaidya @AskAnshul @MODIfiedVikas @ pic.twitter.com/52O8AkJP4R— Ramesh Solanki (@Rajput_Ramesh) April 14, 2020
“ஒருவருடைய மன உணர்வைக் காயப்படுத்தி மக்களிடம் கைத்தட்டு வாங்கலாம் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது சரியல்ல. நீங்கள் ஒருவரைக் கிண்டல் செய்கிறபோதும், கேலி செய்யும்போதும் அதற்கான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். நீங்கள் எங்கள் கடவுள்களை ஒன்றும் சொல்லாமல் இருந்தால் நீங்கள் ட்ரால் செய்யப்பட மாட்டீர்கள். நீங்கள் ட்ரால் செய்யப்படுகிறார்களா இல்லையா என்பது நாங்கள் தீர்மானிப்பதல்ல, நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்.. நல்லவர்களை நாங்கள் ட்ரால் செய்வதில்லை. யாரெல்லாம் இந்துக்களையும், இந்துத்துவர்களையும், இந்தியாவையும் தாக்குகிறார்களோ அவர்களையே நாங்கள் ட்ரால் செய்கிறோம்”. இது அவர்களது குற்றம் தானே தவிர, எங்களுடையது அல்ல. நாங்கள் இதில் ஒன்றும் செய்வதற்கில்லை“ என்கிறார் ரமேஷ் சோலங்கி.
இந்தத் தேசத்தில் கருத்துரிமை சுதந்திரம் என்பது பல வருட காலங்களாக பின்பற்றப்படுகின்றது. ஆனாலும் மத உணர்வுக்கு எதிராக யாரும் பேசி விட முடியாது என்கிற கட்டுப்பாடும் உண்டு. ஆனால் ஒரு குழுவாகவும், தனியாளாகவும் மதத்துக்கு எதிராக பேசுபவர்களை தாக்குவது என்பது நீதிக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
இந்து ஐடி செல்லினைப் பொறுத்தவரை ஐபிசி 153A மற்றும் 295A சட்ட விதிகளை மட்டும் கொண்டே அணைத்து புகார்களையும் அளிக்கின்றனர்.
கெளதம் பாட்டியா என்கிற வழக்கறிஞர், 295A சட்டப்பிரிவு குறித்து விளக்கம் தருகிறார். இது “அவதூறுக்கு” எதிரான சட்டம் என்கிறார். “மதம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு எதிராக வேண்டுமென்றே வெறுப்பினை உள்நோக்கத்துடன் விதத்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது 295-A என்கிறார் கெளதம்.
நீதிமன்ற வாரண்ட் இல்லாமலேயே காவல்துறை இந்தக் குற்றத்துகாக ஒருவரைக் கைது செய்ய இயலும்.
153A பிரிவின் கீழ் “வெவ்வேறான மதக் குழுக்கள், இனம், பிறந்த இடம் போன்றவற்றுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்தி நல்லிணக்கத்துக்கு ஊறு செய்ய முற்பட்டால் அது குற்றமாக கருதப்படும்.. இதனால் வெறுப்பு பேச்சுகளைத் தவிர்க்க இயலும்.
ஐந்து நபர் கொண்ட உச்சநீதிமன்ற பென்ச் மட்டுமே 295A பிரிவின் கீழ் பதியப்படும் குற்றங்களை விசாரிக்க இயலும். அப்படியென்றால் இதன் தீவிரமான பயங்கரத்தை புரிந்து கொள்ளலாம் என்கிறார் கெளதம் பாட்டியா.
1957ம் ஆண்டு ஐவர் பென்ச் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தில் எந்தவிதமான உறுதியான நிலைப்பாட்டினையும் நீதிமன்றங்கள் மேற்கொள்ளவில்லை.
இந்தத் தீர்மானங்கள் எப்படியாக அமையவேண்டும் என உச்சநீதிமன்றம் சில விதிமுறைகளைத் தந்திருக்கிறது.
பிரிவு 19Aக்குக் கீழ் கூறப்படும் கருத்துரிமைக்கான அரசியலமைப்பு சுதந்திரத்தின் இரண்டு பிரிவுகளும் இந்த தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பல சமயங்களில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மேல் ஒரு வழக்கு பதியபப்ட்டது. 2013 ஆம் ஆண்டு பிசினஸ் இதழின் அட்டைப்படம் தோனியை மகாவிஷ்ணு போல சித்தரித்திருந்தது. இதற்காக பதியப்பட்ட வழக்கில் 295A என்கிற பிரிவினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது அவதூறான , ஆபத்தான கருத்துகள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பேசப்பட்டது என்கிற உத்தரவாதம் வழக்கு பதியும் போது அவசியம் என்று உச்சநீதிமன்றம் 153A பிரிவின் கீழ் வலியுறுத்தியது.
”அபினவ் சேகரி என்கிற வழக்கறிஞர் இணையதள சுதந்திர அமைப்பில் பணி செய்கிறார். அவர் இப்படி சொல்கிறார், “இது போன்ற வெறுப்பு பேச்சுகளில் மத உணர்வு புண்படுவதாக சொல்லப்படுகிறது. உறுதிசெய்யப்படாத, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒருவர் ஜாமீனில் வர இயலாதவாறு கைது செய்யப்படலாம். இங்கு தான் உண்மையாகவே துன்புறுத்தல் தொடங்குகிறது. இதற்காகத் தான் தோனி உச்சநீதிமன்றத்தை அவசரமாக அணுகினார். ஏனெனில் இது போன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனநிலையை காவல்துறை எப்படி அறிந்து கொள்ளும் என்பது பெரிய கேள்விக்குறி. அவர் வேண்டுமென்றே தான் சொன்னார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? அதெல்லாம் விசாரணைத் தொடங்கிய பின் தான் நிரூபிக்க முடியும்”
சாகேத் குமார் வழக்கில் இந்து ஐடி செல் ஆறு புகார்களை பதிவு செய்தது. இவற்றில் எதுவுமே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படவில்லை. மற்ற சில வழக்குகளிலும் கூட புகார்கள் சட்டரீதியாக நிரூபிக்கப்படாமல் தோல்வியுற்றன.
முகேஷ் ஷர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். அவர் ஐடி செல்லின் சாட ஆலோசகராகவும் பனி செய்கிறார். “50 – 60 புகார்கள் வரை காவல் நிலையங்களில் உள்ளன. அவை யாவும் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படவில்லை. இதற்காக நாங்கள் உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கினால் நாங்கள் உள்ளூர் நீதிமன்றங்களை 156 (3) பிரிவின் கீழ் அணுகுவோம் “ என்கிறார்.
இந்த 156 (3) பிரிவென்பது, காவல்துறை விசாரணை மேற்கொள்ள அழுத்தம் கொடுப்பதற்கு மாஜிஸ்ட்ரேட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இதே தான் சுஷ்மிதா சின்ஹா வழக்கில் நடந்தது என்கிறார். “டெல்லி காவல்துறை சாகேத் நீதிமன்றத்தில் நான் பதிவு செய்த மனுவின் மீது தான் சுஷ்மிதா மேல் விசாரணை மேற்கொண்டது” என்கிறார்.
“இந்து ஐடி செல் எனக்கு எதிரான புகாரினை கோவிந்த்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்தது. ஆனால் அங்கே அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். உடனே ஆவர்கள் சாகேத் நீதிமன்றத்தை அணுகினார்கள். அங்கே எனக்கு எதிராக புகார் அளிக்கபப்ட்டது. எனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என்றார்கள் காவல்துறையினர். ஆனால் இந்து ஐடி செல் பிடிவாதமாக இருந்தார்கள்” என்கிறார் சுஷ்மிதா சின்ஹா.
இந்து ஐடி செல்லைத் தொடங்கியவர்கள் தங்களுக்கும் அரசியல் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்கள். அவர்கள் தேசியவாத இந்து தர்மத்தை பாதுகாக்கவே பணி செய்வதாக சொல்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பாஜக தலைவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள்.. 2020 டெல்லி கலவரத்துக்கு காரணமாக இருந்த கபில் மிஸ்ராவுடன் இணைந்து இவர்கள் இந்து அகதிகள் மையத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்கள். இந்த அகதிகள் புதிய குடியுரிமை சட்ட மசோதாவில் தங்களை இணைப்பதற்காக காத்திருப்பவர்கள்.
சுவாரஸ்யம் என்னவென்றால், 2019ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் “சட்டத்துக்கு மாறான தகவல் பரப்புவதில் சைபர் குற்றவாளிகளின் பங்கு” போன்றவற்றைக் குறித்து இவர்களை அழைத்து பேசியது. “தீவிரவாதம், தீவிரவாத கொள்கைகள், தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இணையத்தில் ஈடுபடுபவர்களை தேசிய சைபர் குற்றா இணையத்தில் புகாரளிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
“எவ்வளவு தான் அரசாங்கம் எல்லாவற்றையும் தனித்து செய்யும்?” என்கிறார் உள்துறை அமைச்சகத்தின் இந்த செயல்பாடினைக் குறித்து ரமேஷ். “விழிப்புணர்வு கொண்ட குடிமகன்களான எங்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன. நாங்கள் உள்துறை அமைச்சகத்தோடு தொடர்பில் இல்லையென்றாலும், அவர்களிடம் நாங்கள் புகாரளிக்க முடியும்” என்கிறார். தேசிய சைபர் க்ரைம் இணையத்தில் ஐடி செல் புகாரளித்ததை அவர் உறுதிபடுத்துகிறார்.
நவம்பர் 2020ல் அனைத்து மாநிலங்களுக்கும் அமைச்சகம் எழுத்துரீதியான உத்தரவினைப் பிறப்பித்தது. தேசிய சைபர் க்ரைம் இணையத்தில் பதிவுசெய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் எத்தனை எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சகம் கேட்டிருந்தது. கிடைத்த புள்ளிவிவரத்தின்படி பதியப்பட்ட புகார்களில் 2.5 சதவீதம் மட்டுமே எஃப்ஐஆர் ஆக பதியபட்டிருக்கிறது.
All of these volunteers are those who have done a cyber Complains for the cause. So if you want to join us, please do a complaint from https://t.co/ufviUr1HmF
— Hindu IT Cell (@HinduITCell) September 6, 2020
ரமேஷிடம் அவர் அப்படி நடந்து கொள்வதற்கான காரணத்தைக் கேட்டால், இப்படி சொல்கிறார். “இது ஒன்றும் உங்கள் அப்பா வீட்டுத் தோட்டம் அல்ல, வந்து சுற்றிப் பார்த்துவிட்டுப் போவதற்கு. அவமானப்படுத்தினால், எங்களை நோக்கி விரல்களைத் திருப்பினால், விளைவுகளை சந்திக்கத் தான் வேண்டும்” என்கிறார்.
“இந்த நாட்டில் கருத்துரிமைக்கான சுதந்திரம் உள்ளது. அது அரசியலமைப்பிலும் உள்ளது. ஆனால் எதற்கும் எல்லை உண்டு. நான் உங்களை அறைந்தால், அது சுதந்திரம் என்றாகி விடுமா? ஒரு மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் வந்தால், அது குற்றம் தான்.”
“நாங்கள் எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாகவே செய்கிறோம்” என்று முடிக்கிறார்.
இப்புலனாய்வு கட்டுரையை எழுதியவர்கள் : ஷ்ரிஷ்டி ஜஸ்நால் மற்றும் ஷ்ரீகிரீஷ் ஜலிஹால்
மொழிபெயர்ப்பாளரின் பிற்சேர்க்கை :
தமிழகத்தை பொறுத்தவரையும் இதுதானே நடந்தது. ஆண்டாண்டு காலமாக நாத்தீகம் பேசப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் மண்ணில், கந்தர் சஷ்டி கவசத்துக்கு விளக்கம் அளித்து, ஒரு முகம் சுளிக்கக் கூடிய வீடியோவை நாலு பேர் போட்டதற்காக, அவர்களை மிரட்டி குண்டர் சட்டத்தில் அடைத்ததோடு அல்லாமல், அதை வைத்து இரண்டாண்டுகளாக பிஜேபி எப்படி தமிழகத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதிமுகவையும், திமுகவையும் எப்படி வேலை தூக்க வைத்தது என்பதையும், இந்த கட்டுரையோடு பொருத்திப் பாருங்கள்.