தொல் திருமாவளவன், தமிழகம் சந்தித்துள்ள தலித் தலைவர்களில் வேறுபட்டவர். தமிழகம் சந்தித்துள்ள தலித் தலைவர்களின் ஆகப் பெரும் லட்சியமே, தாங்கள் எம்பி அல்லது எம்.எல்.ஏ ஆவது மட்டுமே. வளர்ச்சி அடையும் வரை தலித் முன்னேற்றம், சாதி ஒழிப்பு என்று வாய் கிழிய பேசுபவர்கள், ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் திருப்தியடைகிறார்கள். திருமா அதிலிருந்து மாறுபட்டவர். தொடக்கத்தில் அரசியலில் இறங்கும் எண்ணமே திருமாவுக்கு இல்லை. அவர் போராளியாகத்தான் இருந்தார். வட தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் வீதிப் போராட்டங்கள் தமிழகத்தை அதிர வைத்தன. தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில் விடுதலை சிறுத்தைகள் முன்னிலை வகித்தனர்.
1999ம் ஆண்டில்தான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நடத்திக் கொண்டிருந்த ஜி.கே.மூப்பனாரின் அழைப்பை ஏற்று, திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒரே கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தனர். திருமாவளவனுக்கு அதுதான் முதல் தேர்தல். அதன் பிறகு அதற்கடுத்த அனைத்து தேர்தல்களிலும் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டு வருகிறது.
தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி வலுவாக இருக்கும் ஒரே தலித் இயக்கம் எதுவென்றால் விடுதலை சிறுத்தைகள் மட்டுமே. இதர தலித் கட்சிகள் காணாமல் போய் விட்டன, அல்லது லெட்டர் பேட் கட்சிகளாக இருக்கின்றன. தலித்துகளுக்கு, குறிப்பாக பறையர் சமூக மக்களுக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்ததில் தொல் திருமாவளவனுக்கு பெரும் பங்கு உள்ளது.
விடுதலை சிறுத்தையினர் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள். நாடகக் காதலில் ஈடுபட்டு, உயர்சாதிப் பெண்களை கவர்ந்து காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை மீது மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகிறது.
விடுதலை சிறுத்தை கட்சியினர் என்றாலே, அவர்கள் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள். நாடகக் காதல் நடத்தி பணம் பறிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டு, விசிகவினரின் சாதியை குறிவைத்தே நடத்தப்படுகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அனைத்து கட்சியினரும்தான் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். காதல் விவகாரங்களிலும் கூடத்தான் அனைத்து கட்சியினரும் தலையிடுகிறார்கள். ஆனால் இது விடுதலை சிறுத்தையினர் மட்டுமே செய்வதாக சித்தரிப்பு நடப்பது, சமூகத்தின் பொது தலித் விரோத புத்தியே அன்றி வேறில்லை.
இத்தனை சிலுவைகளையும் சுமந்துகொண்டுதான், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகளை வளர்த்தார். அக்கட்சியை ஒரு வலுவான சக்தியாக வளர்த்து எடுத்துள்ளார்.
2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஈழப் போர் பெரும் விவாதப் பொருளாக இருந்தது. அத்தேர்தலில், ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் திமுக சித்தரிக்கப்பட்டன. அப்போது அந்த கூட்டணியில் இருந்த திருமாவளவனும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அப்போது, ஈழப்போரில் காங்கிரஸ்-திமுக ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகம் காரணமாக திருமாவளவன், திமுக கூட்டணியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைவார் என்று பலரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் திருமா திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தார். அப்போது திருமாவை கடுமையாக விமர்சித்து எழுதினேன்.
சில மாதங்கள் கழித்து, நண்பர் புகழேந்தி நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், “தலித்துகளுக்கு வேண்டியது அரசியல் அதிகாரம். அரசியல் அதிகாரம் இருந்தால்தான் சட்டப்பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ சென்று தலித்துகளின் சிக்கல்களை, தலித்துகளின் பிரச்சினைகளை, இடஒதுக்கீட்டுக்கான ஆபத்துகளை பேச முடியும். அரசியல் அதிகாரம் வேண்டுமென்றால், நாங்கள் திராவிட கட்சிகளை சார்ந்துதான் இருக்க வேண்டும். எங்களால் தனித்துப் போட்டியிட்டு ஒரு பொதுத் தொகுதியில் வெற்றி பெற இயலாது. அதிகாரம் மட்டுமே தலித்துகளை முன்னேற்றும்” என்று பேசினார். அது நான் எழுதிய கட்டுரைக்கான பதில் என்று நண்பர் புகழேந்தி குறிப்பிட்டார்.
திருமா பேசியதில் உள்ள நியாயத்தை நான் புரிந்து கொண்டேன். அதற்கு பின்னர் அவர் எடுத்த அரசியல் முடிவுகளை கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். 2019ல் இரண்டு மக்களவை தொகுதிகள். அவற்றிலும் ஒன்று திமுகவின் அழுத்தத்தையும் மீறி தனிச் சின்னத்தில் என்ற திருமாவின் உறுதியான நிலைப்பாடு சரியானதே. அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக, அன்று திருமா, அதிமுகவுடனோ, அப்போது புதிதாக தொடங்கப்பட்டிருந்த அ.மமுக வுடனோ கூட்டணி பேரம் நடத்தியிருந்தாலும் நான் அதை தவறாக கருதியிருக்க மாட்டேன்.
கொள்கை வழுவாத குன்றுகள் போல சட்டாம்ப்பிள்ளைத்தனமாக திமுக அனைத்து கட்சிகளும் உதயசூரியன் சின்ன்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று 2019 தேர்தலிலும் வலியுறுத்தியது. ஆனால் திருமா தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று எடுத்திருந்த உறுதியான நிலைபாடும் சரியானதே. மிகுந்த சிரமங்களுக்கிடையே திருமா வெற்றி பெற்றார். திமுக கூட்டணி 39 தொகுதிகளில் 38ல் வெற்றி பெற்றது.
வட தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கும், வன்னியர் வாக்குகளுக்கு எதிராக ஒன்றுதிரண்ட பறையர் வாக்குகளும், திருமாவளவனும் ஒரு முக்கிய காரணம்.
2019 மக்களவை தேர்தல் முடிவுகளை, சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளாக பிரித்தால், அன்று இருந்த திமுக கூட்டணி, 200க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். இன்றும் அதே கூட்டணி பெயரளவிலாவது தொடர்கிறது. அப்படியிருக்கையில், இன்று திமுக கூட்டணியில் இத்தனை சிக்கல்கள் / இழுபறி ஏற்பட என்ன காரணம் ?
2019ல் இருந்த திமுக இன்று இல்லை. கடந்த இரண்டாண்டுகளில், திமுக முழுக்க கார்ப்பரேட் மயமாகி விட்டது. 2014ல் பிஜேபி மற்றும் மோடியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த, மோடிக்காக பணியாற்றிய பீகார் பார்ப்பனர் பிரசாந்த் கிஷோர் வசம் திமுக முழுமையாக போய் விட்டது.
ஏறக்குறைய திமுக எடுக்கும் எல்லா முடிவுகளுமே, பிஜேபியின் அழுத்தத்தால் எடுக்கப்படும் முடிவுகளாக மாறிப்போயுள்ளன. கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழகத்தின் அரசியல் விவாதத்தையே பிஜேபி தலைகீழாக மாற்றியுள்ளது.
2019 மக்களவை தேர்தல் முடிவுகளை பிற கட்சிகளை விட பிஜேபி / ஆர் எஸ் எஸ் மிக உன்னிப்பாக ஆராய்ந்தது. 2021 தேர்தல் பிரச்சாரம் விவாதங்கள் வழக்கமான வகையில் இருக்கக்கூடாது என்று பிஜேபி எடுத்த முடிவின் விளைவே, கருப்பர் கூட்டம் வெளியிட்ட கந்தர் சஷ்டி கவசம் தொடர்பான விமர்சன வீடியோ பெரும் சர்ச்சையானது.
நாத்தீகத்தையும், பகுத்தறிவு கொள்கைகளையும் ஆண்டாண்டு காலமாக பேசி வளர்ந்த தமிழ் மண்ணில், நாத்திகம் பேசுவதையே பெரும் பாவச் செயலாக பிஜேபி மாற்றியது. கருப்பர் கூட்டம் வீடியோவை ஒட்டி கடந்த ஜூலை மாதத்தில் எழுந்த சர்ச்சையை ஒட்டி, தமிழகத்தில் அரசியல் விவாதங்கள் இந்து கடவுள்களை ஒட்டியே நிகழ்த்தப்படுவதை பிஜேபி உறுதி செய்துள்ளது.
அதையொட்டி பிஜேபி நடத்திய வேல் பூஜை மற்றும் வேல் யாத்திரை தமிழக அரசியல் கட்சிகளிடையே, இந்துக்கள் வாக்குகள் போய் விடுமோ இந்துக்களை மனதை குளிர்விக்க வேண்டும் என்ற பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
பகுத்தறிவனை தங்கள் அடிப்படை கொள்கையாக கூறிக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் வேலை கையில் தூக்கிக் கொண்டு இன்று அரசியல் செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவரும் கார்ப்பரேட் முகவருமான முக.ஸ்டாலின் தான் ஒரு தீவிர இந்து என்று நம்ப வைப்பதில் முனைப்பாக இருக்கிறார். திமுக தேர்தல் பிரச்சார கூட்டங்களில், “எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார்கள். என் மனைவி தினமும் கோவிலுக்கு செல்வார்” என்பதை பெருமையோடு கூறுகிறார். திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி மட்டுமே, மிகவும் துணிச்சலாக இந்துக்கள் வாக்குகள் போய் விடுமே என்ற கவலை துளியும் இல்லாமல், தன்னிடம் வேலை பரிசளிக்க வந்த திமுக (???) நிர்வாகி அளித்த வேலை வாங்க மறுத்தார். இதர திமுக பிரமுகர்கள் அனைவரும், “இந்து வாக்குகளுக்காக” வேலை கையில் எடுத்து வேலாண்டிகளாக மாறியுள்ளார்கள்.
தமிழகத்தின் அரசியல் போக்கு மதமான பேய் பிடித்து ஆட்டப் பட்டக் கொண்டிருக்கும் இச்சூழலில் தொல் திருமாவளவன் நம்பிக்கை ஒளியினை பாய்ச்சினார்.
தொடர்ந்து திமுக பேச வேண்டியவைகளை திருமா பேசினார். பகுத்தறிவு கொள்கைகளை பேசினார். பெரியாரை பேசினார். எல்லாவற்றுக்கும் மேலாக, பார்ப்பன சனாதனத்தின் வேரான மனுதர்மத்தின் மீது வென்னீரை ஊற்றினார். மனுதர்மம் பெண்களை போகப் பொருளாக, உடைமையாக சித்தரிக்கிறது என்று உண்மையை உரக்க கூறினார்.
பெண்களின் இன்றைய நிலைமைகளுக்கு #மனுதர்ம_சனாதனமே காரணம்!
காலங்காலமாக
கல்வி மறுத்தது!
கருத்துரிமை பறித்தது! சொத்துரிமை தடுத்தது! ஆதிக்கம் திணித்தது!
அடிமை சேற்றில் புதைத்தது!இதனை-
மகளிர் உணரும்வரை திமிறிமீளும்வரை
உரத்து முழங்குவோம்! #பெண்ணுரிமை_போராளி_திருமா pic.twitter.com/r8oKQPzyMn— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 23, 2020
#Demo
OCT 24: A GOLDEN DAY in VCK history. Let the fire of feminism & caste annihilation spread all over Tamil Nadu. Let this nonviolent revolt to liberate women win. Let this dialogue continue till women are liberated. Let this fire of protest spread till Manu is destroyed. pic.twitter.com/hWLh1LQd7U— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 23, 2020
திருமாவளவனின் மீது பிஜேபி தாக்குதலை கூர்மைப்படுத்தியது. திருமாவளவன் மீது இந்து மதத்தை இழிவுபடுத்தி வன்முறையை தூண்ட முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இணைப்பு
கலைஞர் திமுக தலைவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா ?
அவராக ஒரு சர்ச்சையை உருவாக்க மாட்டார். ஆனால் மனுதர்மம் தொடர்பாக இப்படி ஒரு சர்ச்சை உருவாகியிருந்தால் விட்டிருக்கவே மாட்டார். மனுதர்மத்துக்கு எதிராக அனைத்து கட்சி மாநாடு என்று ஒன்றை ஏற்பாடு செய்து, மனுதர்மத்தை கிழித்து தொங்க விட்டிருப்பார்.
ஆனால் கார்ப்பரேட் முகவர் ஸ்டாலின், திருமாவளவன் மீதான வழக்கு பதிவுக்கோ, தாக்குதலுக்கோ, சம்பிரதாயமான கண்டனத்தோடு நிறுத்திக் கொண்டு, வேலை கையில் தூக்கிக் கொண்டு பிரச்சாரத்துக்கு கிளம்பி விட்டார்.
இதுதான் இன்று தமிழகத்தின் நிலை. பிஜேபி இடும் கட்டளைகளை அனைத்து கட்சிகளும் சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகின்றன. பிஜேபியின் வலையில் ஏறக்குறைய அனைத்து கட்சிகளுமே விழுந்து விட்டன.
இச்சூழலில் திருமாவளவனை ஒரு மாற்று சக்தியாக நான் பார்த்தேன். புதுவையில் காங்கிரஸ் அரசை, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பிஜேபி கலைத்தபோது, மிக மிகச் சரியாக அச்சிக்கலை அணுகியது திருமாவளவன் மட்டுமே.
“புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதையும், புதுவையில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதையும் அறிய முடிகிறது” என்று திருமா வெளியிட்ட அறிக்கையிலிருந்து அவர் பார்ப்பன சனாதனிகளின் சதித் திட்டத்தை மிக சரியாகவே அணுகுகிறார் என்று நம்பினேன்.
புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதையும்; புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதையும் அறிய முடிகிறது. #பாஜக_அநாகரிகஅரசியல் pic.twitter.com/mUiGOp2Ojm
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 21, 2021
மேலும் திருமா, “அரசியல் கட்சிகள் கொள்கை பிடிப்பு இல்லாத தற்குறிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், என்ன ஆகும் என்பதை உணர்ந்து இனிவரும் காலங்களில் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
திருமாவின் இந்த வரிகள் முக்கியமானவை. இது திமுகவுக்கும் பொருந்தும். திமுகவின் ஒரு எம்.எல்.ஏ கூடத்தானே காங்கிரஸ் அரசுக்கு எதிராக ராஜினாமா செய்தார் ? புதுவை காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பில் திமுகவுக்கு பங்கு இல்லை என்றால், திமுகவின் அரக்கோணம் எம்.பி ஜெகதரட்சகன் 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ள புதுவையின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இல்லையென்றால் இதே மேடையில் தற்கொலை செய்துகொள்வேன் என்று எதற்காக அறிவிக்க வேண்டும் ? இணைப்பு
அடிப்படை அரசியல் தெரிந்த ஒரு பாமரன் கூட திமுக யாருக்காக புதுவையில் இம்முயற்சியை எடுக்கிறது என்பது தெரியும்.
முருகனின் வேலை தூக்கியதோடு திமுக நிற்கவில்லை. தங்கள் கட்சியின் சிறுபான்மை இன எம்.எல்.ஏ மஸ்த்தானை வைத்து ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி அளிக்க வைத்தது. இதுவும் இந்துக்களின் வாக்குகளை கவர்வதற்கான உத்தியாம். இதை கட்சியின் தலைமையே நியாயப்படுத்துகிறது. இணைப்பு
திமுக “மத நல்லிணக்கம்” என்ற பெயரால், இதை தொடர்ந்து நியாயப்படுத்தத்தான் போகிறது. அறிவாலயத்தில் ஆறு சீட்டுகளுக்காக தஞ்சமடைந்திருக்கும் திருமாவளவனும் ராமர் கோவில் கட்ட நிதியளிக்கப்போகிறாரா ?
மற்றொருபுறம், அதிமுகவோடு சேர்ந்து திமுகவும் சாதி அரசியலில் இறங்கிவிட்டது. வன்னியர் வாக்குகளை கவரும் நோக்கோடு அதிமுக அவசர அவசரமாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு சட்டத்தை தாக்கல் செய்தது. கிராமப்புர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இரண்டு வாரங்கள் தாமதப்படுத்திய பன்வாரிலால் புரோகித், வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு இரவோடு இரவாக ஒப்புதல் அளித்தது தமிழக்த்தை சாதிரீதியாக கூறுபோட முயலும் முயற்சியே. இதை திருமா நன்றாக புரிந்து கொண்டதன் காரணமாகத்தான் இம்முயற்சியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். திருமா இதை அதிமுக-பாமக-பாஜக கூட்டுச் சதி என்றே விமர்சித்தார்.
சாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு:
உள்ஒதுக்கீடு சமூகநீதியின் நுட்பமான பரிமாணமே!
எனினும், உள்ஒதுக்கீட்டின் பெயரால் சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற #அதிமுக– பாஜக- பாமக #கூட்டுச்சதி! #உள்ஒதுக்கீடு pic.twitter.com/UUZGr8H5sK— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 2, 2021
அவர் இன்று தஞ்சமடைந்திருக்கும் அறிவாலயத்துக்கும் இந்த திட்டம் உவப்பானதுதானே !!! அதிமுக அரசு அவசர அவசரமாக உள் ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ததும், இது வெறும் அறிவிப்பு. திமுக ஆட்சிக்கு வந்ததும் இதை திமுக அரசு செயல்படுத்தும் என்று ஸ்டாலின் அவசர அவசரமாக அறிவித்தார்.
இந்த அவசரகதியிலான வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதாவை கடுமையாக விமர்சித்திருக்கும் திருமாவளவன் திமுகவின் இந்த நிலைபாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
ஒரே மேடையில் ஸ்டாலின் வன்னியர் உள் ஒதுக்கீட்டு அரசாணை நான் வெளியிடுவேன் என்பார். திருமாவளவன் அதே மேடையில் அதை எதிர்ப்பாரா ?
இது எல்லாவற்றையும் கூட தேர்தல் அரசியல் நெருக்கடிகள் என்று ஒதுக்கலாம் அல்லது, கனத்த மனதோடு மன்னிக்கலாம்.
ஆனால், திருமாவளவன் தனது தோழமை கட்சிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்பதை தயக்கமில்லாமல் உறுதியாக கூறுகிறேன்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகு, திமுக சட்டாம்பிள்ளைத்தனத்தோடு, கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும், ஒற்றை இலக்கத்தில் நிற்க வேண்டும், நாங்கள் சொல்லும் இடங்களை வாங்கிக் கொண்டு சொல்லும் இடத்தில் நிற்க வேண்டும் என்று அடாவடி செய்கிறது என்பது திருமாவளவனுக்கு நன்றாகவே தெரியும். இது தெரிந்ததால்தானே திருமாவே ஒரு நாள் பேச்சுவார்த்தையை புறக்கணித்தார் ??
தோழமை கட்சிகளான இடதுசாரிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் வெறும் நான்கு இடங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இடது சாரிகள் கடும் கோபமடைந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நல்ல ஜனநாயகவாதி, அல்லது திருமா கூறுவது போல சனாதனத்தை எதிர்க்கும் நோக்கம் கொண்ட ஒருவருக்கு தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பதும் தெரியுமா தெரியாதா ?
பாசிச சனாதன சக்திகளை இந்தியா முழுக்க உறுதியாக எதிர்ப்பதில் இன்று முன்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே என்பதை தயக்கமில்லாமல் சொல்லுவேன். அந்த காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விட வேண்டும் என்பது பிஜேபியின் நோக்கம். அதை செயல்படுத்துவது திமுக என்பதை பாமரன் கூட புரிந்து கொள்வான். திருமாவும் இதை புரிந்து கொண்டிருப்பார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்பட்டால், அவர்கள் தேர்தலில் தோல்வியுறுவர். தோல்வியுற்றால், அடுத்த ஆண்டுகளில் அவர்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கூட கிடைக்காது. இதுதானே பிஜேபியின் காங்கிரஸ் இல்லா பாரதம் (Congress Mukth Bharat) திட்டம் ? இதைத்தானே திமுக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது ?
இப்படி அவசர அவசரமாக திருமாவளவன், தோழமை கட்சிகளோடு கலந்தாலோசிக்காமல் ஆறு சீட்டுகளுக்கு கையெழுத்திட வேண்டிய தேவை என்ன ? இன்றே பிஜேபியின் திட்டங்களை நிறைவேற்றித் தரும் திமுக, நாளை அதிகாரத்துக்கு வந்தால், எடப்பாடி பழனிச்சாமியை விட, பிஜேபிக்கு மோசமான அடிமையாக இருக்கும் என்பது திருமாவுக்கு தெரியாதா ? அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா ?
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் தலித்துகளின் சதவிகிதம் 20.01 (பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர்). வட தமிழகத்தில் பறையர்களே பெரும்பான்மை. அவர்கள் திருமாவை தங்கள் ஒரே தலைவன் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றே நான் அவதானிக்கிறென்.
இப்படியொரு வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு, 12 சீட்டுகளுக்கும் குறையாமல் அல்லவா திருமா வாங்கியிருக்க வேண்டும் ??? திமுகதான் விடுதலை சிறுத்தைகளை நம்பி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் முன்னால் விரிந்த உலகம் காத்திருக்கிறது. 2021 தேர்தலில் 4 எம்.எல்.ஏக்களை பெற்று தலித் விடுதலையை, சாதி ஒழிப்பை நிறைவேற்ற முடியாது என்பது திருமாவளவனுக்கும் தெரியும்.
இருந்தும் தோழமை கட்சிகளுக்கு துரோகம் இழைத்து, தலித் மக்களுக்கும் துரோகம் இழைத்து, வன்னியர்களை தூக்கிப் பிடித்து அவர்கள் வாக்குகளுக்காக எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளும் ஒரு முன்னாள் திராவிட கட்சியிடம் தலித்துகளை ஏன் திருமா அடகு வைத்தார் என்பது புரியவேயில்லை.
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது தலைவனுக்கான முக்கிய கூறு.
திமுகவுடன் ஆறு சீட்டுகளுக்காக அவசர அவசரமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திருமா தலித்துகளை அறிவாலயத்தில் அடகு மட்டும் வைக்கவில்லை. நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு தலைவர் என்ற அடையாளத்தையும் இழந்து விட்டார் திருமாவளவன்.
இவர் மாற்று சக்தி அல்ல. மாறிய சக்தி.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.