பத்து ஆண்டுகள் பதவியில் இல்லாமல் இருந்தாலும் கூட, திமுக மீது மக்களுக்கு 2006-2011 ஆண்டில் நடந்த அராஜகங்கள் காரணமாக வெறுப்பு இன்னமும் அகலவில்லை என்பதையே பெரும்பாலான மக்களின் உணர்வுகள் காட்டுகிறது. அய்யோ திமுக வந்தாலே ரவுடியிசமும் சேர்ந்து வரும் என்ற அச்சம் மக்களிடையே இன்னும் இருக்கிறது.
ஆனால் ஒரு கட்சி ஒரு முறை தவறிழைத்து விட்டால், மீண்டும் மீண்டும் அந்த தவறை செய்துகொண்டுதான் இருக்கும். அக்கட்சி திருந்தாது என்று நான் நம்பவில்லை.
ஆனால் பொதுமக்களின் பெரும்பாலான கருத்து உண்மையோ என்று எண்ண வைக்கும் அளவுக்குத்தான் திமுகவின் ‘சில’ வேட்பாளர்களின் தேர்வு காட்டுகிறது.
திமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம். என்னடா பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இவர் தந்தையார் பெயர் என்ன தெரியுமா ? காதர்பாட்சா வெள்ளைச்சாமி. இவரை கடந்த 2012ம் ஆண்டில் அதே ஊரைச் சேர்ந்த தனசீலன் என்பவர் கொலை செய்தார். சம்பவம் நடந்தபோது அருகில் இருந்தோர் கொலையாளி தனசீலனை பிடித்து தாக்கியதில் அவரும் வெட்டி கொலை செய்யப்பட்டார். இணைப்பு
இந்த காதர்பாட்சா வெள்ளைச்சாமிக்கு மூன்று மகள்கள். இரண்டு மகன். இதில் மூத்தவர்தான், காதர்பாட்சா முத்துராமலிங்கம். 20 ஆண்டுகளாக, மேலராமநதி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் என்றால் இவர் செல்வாக்கை பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட நபர்களுக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட் கொடுப்பது வழக்கம்தான் என்றாலும், இந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஒரு நவீன மோசடியில் ஈடுபட்டு, ஒரு கூட்டுறவு வங்கியில் 7.50 கோடிக்கும் அதிகமாக சுருட்டியுள்ளார் என்பதுதான் இதில் விஷயமே.
இந்த சுருட்டல் திடீரென்று நடைபெறவில்லை.
1 ஏப்ரல் 2016ல் தொடங்கி, 2018ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
காவடிப்பட்டி என்ற கிராமம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ளது. இங்கே காவடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று 10 செப்டம்பர் 1958 முதல் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், விவசாயக் கடன் உள்ளிட்டவை பெற முடியும். கூட்டுறவு வங்கிகளில் கடன் வட்டி விகிதம் குறைவு என்பதால், கிராமங்களில் உள்ள பலர் கூட்டுறவு வங்கிகளையே விரும்புவர்.
இச்சங்கங்களை நிர்வகிக்க, தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அலுவலர் ஒருவர் மெற்பார்வையாளராக இருப்பார். இருப்பினும், கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடக்கையில், இயக்குநர் குழு போல, சங்க உறுப்பினர்களால் ஒரு குழு தேர்வு செய்யப்படும். அந்தக் குழுவே வங்கியை நிர்வகிக்கும். இந்த நிர்வாகக் குழுவானது கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்தால், ஒருவரும் தடுக்க முடியாது.
ஒவ்வோரு ஆண்டும் ஆண்டு இறுதித் தணிக்கை சமயத்தில், நகைக் கடன், விவசாயக் கடன் போன்றவற்றை ஆய்வு செய்யும் தணிக்கை அலுவலர்கள், நகைகளையும், அடமானம் வைக்கப்பட்ட நில பத்திரங்களையும் சரிபார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென்றெ, Cooperative Audit கூட்டுறவு தணிக்கை என்ற ஒரு துறையே உள்ளது.
இக்கூட்டுறவு சங்கத்தில், முத்துராமலிங்கத்தின் உறவினர்களும், பினாமிகளுமே நிர்வாகிகளாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, 7.50 கோடி வரை பணத்தை கையாடல் / மோசடி செய்த விபரம் அம்பலமானது.
இதையடுத்து, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டப் பிரிவு 81இன் கீழ் விசாரணை ஒன்று நடைபெறுகிறது.
கள அலுவலர் மற்றும் கமுதி கூட்டுறவு சார் பதிவாளர் திரு கு.க.கிருஷ்ணாராவ் என்பவர் விசாரணையும் நடத்துகிறார். இந்த விசாரணைக்கு, இச்சங்கத்தில் முத்துராமலிங்கம் காதர் பாட்சாவின் பினாமியாகவும், சங்கத்தின் செயலராகவும் இருந்த மீனாட்சி சுந்தரம், விசாரணையிலிருந்து தப்பிக்க ஒரு தந்திரத்தை கையாள்கிறார். அவர் அனைத்து ஆவணங்களையும் தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்கையில் அவை தொலைந்து விட்டதாக ஒரு புகாரை பெருநாழி காவல் நிலையத்தில் 5 செப்டம்பர் 2017ல் கொடுப்பதோடு நாளிதழில் விளம்பரமும் கொடுக்கிறார்.
ஆனால் அந்த விசாரணை அதிகாரி அசரவில்லை. இருக்கும் ஆவணங்களை வைத்து விசாரணையை முடித்து, 2019ல் கூட்டுறவு துணை பதிவாளர் பரமக்குடிக்கு தனது அறிக்கையை அனுப்புகிறார். அந்த விசாரணையில் நகைகள் போலி. நில ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவையும் போலி என்பது தெரிய வருகிறது.
பரமக்குடி கூட்டுறவு துணைப் பதிவாளர் கணேசன் என்பவர், அக்டோபர் 2019ல், வணிக குற்றப் புலனாய்வு பிரிவு, கிண்டி சென்னைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், கூட்டுறவு சட்டத்தின் படி நடத்திய விசாரணையில், மோசடி / ஊழல் நடந்திருப்பது உண்மை என்றும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறும் கேட்டுக் கொள்கிறார்.
விசாரணை தொடங்குகிறது. விசாரணை தொடங்கியதும், இவ்வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளியான சங்கத்தின் முன்னாள் தலைவர் கண்ணன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகி, ஒரு சப்பை காரணத்தை சொல்லி தடையாணை பெறுகிறார். இதை எதிர்த்து முறையீடு செய்த கூட்டுறவுத் துறையின் வாதத்த்தை ஏற்று, 4 பிப்ரவரி 2020ல் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தடையை ரத்து செய்ததோடு, விசாரணையை தொடங்கவும் உத்தரவிட்டது.
ஏறக்குறைய ஒரு வருடம் முடிந்து விட்டதல்லவா ? விசாரணையில் என்ன முன்னேற்றம் என்கிறீர்கள். ஒரு இம்மியளவும் முன்னெற்றம் இல்லை.
இந்த புகார்கள் குறித்து முத்துராமலிங்கம் காதர் பாட்சாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது முழுக்க முழுக்க பொய்யான புகார். இப்புகாரில் இம்மியளவும் உண்மை இல்லை. என் மீதோ, என் உறவினர்கள் மீதோ எவ்விதமான புகார்களோ வழக்கோ கிடையாது. 2019 தேர்தல் சமயத்திலும் இது போன்ற புகார்கள் வந்தன” என்றார். பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்க்கவில்லை.
காதர்பாட்சா முத்துராமலிங்கம் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
முடிவு உங்களிடம்.