நவம்பர் 8 , 2016 ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் நாடே பரபரப்பானது
இந்திய மக்கள் திகைத்துப் போனார்கள். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்கினார்கள். வங்கி வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எல்லோர் மனதிலும் அச்சம்..அச்சத்தைத் தவிர எதுவும் இல்லை.
ஆனால் ஒரே ஒருவருக்கு மட்டும் இந்த பணமதிப்பிழப்பு என்பது எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நாட்டுக்காக ஒவ்வொரு சாதாரண குடிமகனும் அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரத்தில் மணல் மாபியா அதிபர் சேகர் ரெட்டியிடம் மட்டும் அள்ள அள்ளக் குறையாத புத்தம்புது இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் இருந்தன. அவை யாவற்றையும் வருமான வரித்துறை கைப்பற்றியபோது நாடே அதிர்ந்தது. வருமான வரித்துறை சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றிய புதிய இரண்டாயிரம் ரூபாயின் மதிப்பு 9.63 கோடி.
ஒரு நபருக்கு இரண்டு இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் மட்டுமே வழங்கப்படும் அதிலும் மணிக்கணக்காக வங்கியின் முன்பாக நின்றால் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலையில் சாமானியன் தெருவில் நிற்க, ஒரு மனிதரிடமிருந்து புத்தம் புதிய நோட்டுகள் கட்டுகட்டாய் இருந்ததைக் கண்டு மக்கள் கொதித்தனர். அப்போதுதான் அச்சடித்து வந்த 9.63 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டியால் பதுக்கி வைத்திருந்திருக்க முடிந்திருந்தது. இதோடு புதிதாய் அச்சடிக்கப்பட்ட மற்ற ரூபாய் நோட்டுகள் என அவரிடம் இருந்தவை 96.89 கோடி. இவற்றொரு பழைய ரூபாய் நோட்டுகளாக 36.29 கோடிகளை வருமானவரி கைப்பற்றியது.
இந்த வருமான வரி சோதனையின் போது அதிகாரிகள் ஒரு டைரியைக் கைப்பற்றினார்கள். அந்த டைரியில் மாநிலம் முழுவதும் யார் யாருக்கு பணம் தரப்பட்டது என்கிற விவரங்கள் இருந்தன. அதைப் பார்த்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி. மாநில நிர்வாகத்தின் அமைச்சர்கள், உயரதிகாரிகள், மாவட்ட நிர்வாக உயரதிகாரிகள் என பெரிய ‘தலைகளின்’ பெயர்களை அந்த டைரி குறித்திருந்தது.
வரவு செலவு கணக்கு புத்தகங்களைக் கைப்பற்றிய வருமானவரித் துறை தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தோடு எந்த ஆவணங்களையும். இணைக்கவில்லை.
சேகர் ரெட்டியிடம் நடத்திய வருமான வரி சோதனைகளின் தொடர்ச்சியாக, அப்போது தலைமைச் செயலராக இருந்த, ராம் மோகனராவின் அலுவலகமான தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, ராம் மோகன் ராவ், ஐஏஎஸ் மாற்றம் செய்யபப்ட்டு அந்தப் பொறுப்பிற்கு கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்படுகிறார். கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலாளராக பொறுப்பேற்கிறார். விழிப்புப் பணி ஆணையர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக ஏற்கிறார் கிரிஜா வைத்தியநாதன்.
கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குனருக்கு இந்த பணப்பதுக்கல் மற்றும் ஊழல் குறித்த விசாரணையை தொடங்குமாறு கடிதம் அனுப்புகிறார். பூர்வாங்க விசாரணை பதிவு செய்கிறது. விசாரணை எண் PE 131/2017/PUB/HQ
வருமான வரித்துறையிடமிருந்து கடிதத்தைப் பெற்றுக் கொண்ட விசாரணை அதிகாரி விசாரணையைத் தொடங்குகிறார். சேகர் ரெட்டியின் கணக்கு வழக்கு புத்த்கங்களை வருமானவரி அதிகாரிகளிடமிருந்து பெறுகிறார். அந்த கணக்குப் புத்தகங்கள் முழுவதும் சங்கேத மொழியினால் எழுதப்பட்டிருந்தன. அதனை முதலில் ‘டிகோட்’ செய்கிறார்.
அதில் அந்த விசாரணை அதிகாரிக்குத் தெரிந்த ஒரு தகவல், முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ் 97 இலட்ச ரூபாய்க்கு வைர அட்டிகை வாங்கியுள்ளார் என்பது. வருமான வரி விதிகளின்படி இரண்டு இலட்சத்திற்கு மேல் வாங்கும் எந்த நகைக்கும் வருமான வரித் துறையிடம் கணக்குக் காட்டப்பட வேண்டும். அதனால் தான் இரண்டு இலட்சம் மேல் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து விற்பனையாளர்கள் அவர்களின் பாண் கார்ட் மற்றும் இதர விவரங்களைக் கேட்டுப் பெறுவார்கள். இந்த வழக்கினைப் பொறுத்தவரை 97 இலட்சம் மதிப்பில் வாங்கியவை வைர அட்டிகையாக இல்லாமல் வைரக் மூக்குத்தி / கம்மல்களாக பதிவு செய்யபப்ட்டிருந்தன.
ராம் மோகன் ராவ் தன்னுடைய நிர்வாக அனுபவத்தைத் தவறாக பயன்படுத்தி வருமான வரித்துறையின் கண்ணை கட்ட நினைத்தார். இதற்கு அவருக்கு உதவி செய்தது கீர்த்திலால் நகைக்கடை. அந்த நகைக்கடை 47 போலி ரசீதுகளைத் தயார் செய்தது. அதாவது 47 ஜோடி வைரக் கம்மல்களுக்கான போலி ரசீதுகள். ஒவ்வொன்றும் இரண்டு இலட்சத்துக்கும் குறைவான மதிப்பு கொண்ட வைரக்கம்மl மற்றும் மூக்குத்திக்கான ரசீதுகள். இதனால் அவை வருமான வரித்துறையின் பார்வைக்கு போகவேயில்லை.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் சிறந்த புலனாய்வுத் திறன் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த அதிகாரி கீர்த்திலால் நகைக்கடையின் மேலாளர்களான கனகராஜ் மற்றும் சிவகுமாரை விசாரிக்கிறார். அவர்கள் இருவரும் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பாக போலி ரசீதுகள் தயாரித்ததை ஒப்புக் கொள்கின்றனர். இதனை அந்த விசாரணை அதிகாரியும் உறுதி செய்கிறார். ஆனால் பின்னாளில் அந்த இரு மேலாளர்களும் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தை மறுத்து மாற்றி சொன்னார்கள்.
இது தவிர, கைப்பற்றப்பட்ட சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிட்டிருந்தபடி ராம் மோகன் ராவுக்கு 50,33,55,000 ரூபாய் (ஐம்பது கோடியே முப்பத்தி மூணு இலட்சத்தி ஐம்பத்தி ஐயாயிரம் ரூபாய்) தரப்பட்டிருந்ததும் குறிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது குற்றச்சாட்டு என்பது வெவ்வேறு நபர்களுக்கும், பெயர் தெரியாத தனி நபர்களுக்கும் தரப்பட்டது குறித்து. அந்தப் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்புப் பிரிவு சட்டத்தின்படி, எந்தவொரு பொது ஊழியரும் எந்தவொரு நபரிடமும் தனக்கோ வேறு ஒருவருக்கோ பொது ஊழியம் செய்ய ‘லஞ்சம்’ பெற்றாலோ பெற முயற்சித்தாலோ அவர்கலுக்கு முறிந்த பட்சமாக் அமூன்று ஆண்டு காலம், அதிகபட்சம் ஏழு ஆண்டு காலமும் சிறைத் தண்டனை வழங்கப்படும்”
இந்த சட்டத்தின்படி ’லஞ்சம்’ என்பது சட்டப்படி அல்லாத எந்தவொரு கைமாறையும் அரசு ஊழியர் பெறக்கூடாது என்பதேயாகும். ‘லஞ்சம்’ என்பது பணம் மட்டுமல்ல, பொருள் மற்றும் இதர இலாபத்தையும் உட்படுத்தியதேயாகும். ஒருவருக்கு பணி வழங்குவதில் சலுகை ஏற்படுத்துவது, ஓய்வு கால சலுகைகள், பரிசுப் பொருட்கள் என நேரடி பணம் அல்லாத எல்லாமே இலஞ்சம் பெறுவதற்கு சமமானது. இது ஒரு குற்ற நடவடிக்கை என்கிறது சட்டம்.
இதற்கு முன்னால், “குற்றமுறு செயல்” என்பதை பாஜக அரசு நீர்த்து போக வைத்து விட்டது. திருத்தப்பட்ட சட்டமானது 26, ஜூலை 2018ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. முதற்கட்ட விசாரணை 2017ல் பதிவு செய்யப்பட்டது. ஊழல் குறித்து பதிவு செய்யப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்க்கையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபப்ட்டு தொடர் விசாரணை நடைபெறும் என்றே தெரிகிறது.
இதில் எண் 36 என்கிற பட்டியல் மிக முக்கியமானது. இந்த எண் 36 “SC Special Delhi” என ஒரு சங்கேத குறிப்பை சொல்கிறது. சேகர் ரெட்டியின் தொழில் பங்குதாரரான ஸ்ரீனிவாசுலு என்பவர் வருமான வரித்துறையின் முன்பாக கொடுத்த வாக்குமூலத்தில் இது உச்சநீதிமன்றத்துக்காக தரப்பட்ட தொகை என்று சொன்னார். இரண்டு கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகை அங்கு உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஒரு கிளர்க்குக்காக தரப்பட்டிருக்காது. பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அது உயர் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கே அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சேகர் ரெட்டி அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு மாதத்திற்குள் தந்த தொகை மட்டுமே 105, 8,20,000/- (நூற்றிஐந்து கோடியே நாற்பத்தி எட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்)
இந்தப் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதல்வர் ஓபிஎஸ் பெயரும் இடம்பற்றிருக்கிறது. இவர்களோடு ஆளும் அஇஅதிமுகவின் அமைச்சர்களின் பெயர்களும் பட்டியலில் அடக்கம்.
மூன்றாவது பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுரங்கத் துறை, வருமானத் துறை அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இலஞ்சம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இதில் ஒரு பெயர் இடம் பெற்றிருக்கிறது. இவர் திரு.அதுல் ஆனந்த் ஐஏஎஸ் அப்போதைய சுரங்கம் மற்றும் கனிம வள துரையின் கமிஷனர். இவருக்கு தரப்பட்டதாக சொன்ன தொகை 94 இலட்சம்.
அறிக்கை 4 ல் குறிப்பிடப்பட்டுள்ளவை, மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சத் தொகை பற்றிய விவரம்.
இதிலும் கூட வரிசை எண் 2 மிகத் தீவிரமாய் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இவை “SC/Special/Delhi (Supreme Court)” என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காகக் கொடுக்கபப்ட்ட தொகை ஆறு கோடி என்பதாக உள்ளது. இந்தத் தொகையும் கூட உச்சநீதிமன்றத்தின் கடைநிலை ஊழியர்களுக்கானதாக இருக்காது அல்லவா?
ஐந்தாவது பட்டியல் ராம் மோகன் ராவ் ஐஏஎஸ் -ஐ குறிப்பிடுகிறது. இதில் அவருக்கு அளித்ததை குறிப்பிடப்பட்டுள்ள தொகை 39,77,57,900 (முப்பத்தி ஒன்பது கோடியே எழுபத்து ஏழு லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய்)
வரிசை எண் 16 – ல் குறிப்பிடப்பட்ட நபர் வேறு யாரும் அல்ல, தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ். இது குறித்து அவருக்கு வாட்ஸ்அப்பில் கேட்டபோது, அவர் எந்தவொரு பதிலையும் நமக்கு அனுப்பவில்லை.
வீர ராகவ ராவ் ஐஏஎஸ் அவர்கள் இப்படி பதில் அனுப்பியிருந்தார்,
“No.
It is a False Allegation”
(இல்லை..இது தவறான குற்றச்சாட்டு)
இந்தப் பட்டியலில் மாவட்ட ஆட்சியாளர்கள், எஸ்பிக்கள் பெயர்கள் சங்கேத மொழியில் இடம்பெற்றிருக்கின்றன. மிகக் கவனமாக ஆரைந்தபிறகே அந்த அதிகாரிகளின் அடையாளங்கள் கண்டுபிடிக்கபப்ட்டு குறிப்பிடப்பட்டன. இந்த அறிக்கை எண் 5ல் ஒரு சுவாரஸ்யமானது வரிசை எண் 18. லால்குடி சப் கலெக்டர் என்று பதிவு செய்யபப்ட்டிருந்தது. ஐம்பது இலட்சம் அவருக்கு அளித்திருப்பதாய் அதில் இருந்தது.
அப்போதைய லால்குடி சப் கலெக்டராய் இருந்தவர் டாக்டர். V.ஜெயச்சந்திர பானு ரெட்டி என்பவர். இவர் நேரடி ஐஏஎஸ் அதிகாரி. 2011ம் ஆண்டு பணியில் சேர்கிறார். முதல் பணியான சப்-கலெக்டர் பதவியிலேயே ஒரு மணற் கொள்ளையனிடம், 50 லட்சம் லஞ்சம் பெறுகிறார் என்றால், இவர் தலைமைச் செயலர் அந்தஸ்த்துக்கு உயர்கையில் எப்படிப்பட்ட ஊழல் பேர்வழியாக இருப்பார் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இந்த டைரியில் உள்ளவை அனைத்தும் எஸ்.ஆர்.எஸ் மைனிங் என்ற ஒரு நிறுவனத்த்தில் யாரோ ஒருவர் எழுதிய கணக்குதானே.? இதில் என்ன உண்மைத் தன்மை இருக்கும். சேகர் ரெட்டியே அவர் விசாரிக்கப்படுகையில், “யாரோ ஒருவர் எதையோ எழுதி வைத்தால் நான் எப்படி பொறுப்பாக முடியும் ? அது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்” என்று கேட்டார்.
அந்த அனுபவம் வாய்ந்த அதிகாரி, அந்த டைரியில் உள்ள மற்ற பதிவுகளை சரிபார்க்க முடிவெடுத்தார். அந்த டைரியில் வங்கியில் செலுத்திய பணம், நாள், மற்றும், நிலம் பதிவு செய்தது தொடர்பான பதிவுகளும் இருந்தன. இவற்றை சரிபார்க்க அந்த அதிகாரி முடிவெடுத்தார். வங்கியில் இருந்து வந்த ஆவணங்களும், பத்திரப் பதிவுத் துறையில் இருந்து வந்த ஆவணங்களும் முறையாக சேகர் ரெட்டி டைரிகளோடு பொருந்தின. இவை உண்மை என்றால் லஞ்சப் பட்டியலும் உண்மைதானே ??
இது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்யத்தக்க ஒரு வழக்கு என்று புலனாய்வு அதிகாரி முடிவெடுத்தார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சோதனைகள் நடத்தினால் பல பெரிய முதலைகள் சிக்கும் என்பதில் அவர் உறுதியானார்.
இந்த பூர்வாங்க விசாரணையில் இறுதியான குற்றச்சாட்டு, முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவின் மகன் விவேக் பாப்பிசெட்டி மீதானது.
தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை வழங்குகிறது. இதற்காக, தமிழக அரசு ஏசர் மற்றும் ஐசிஎம்சி என்ற இரண்டு நிறுவனங்களிடமும் லேப்டாப்புகள் வாங்குகிறது.
ஐசிஎம்சி நிறுவனம் கம்ப்யூட்டர் தொழில் செய்யும் நிறுவனம் அல்ல. அது, மதுபான ஆலைகளுக்கு அட்டை பெட்டி தயாரித்து தரும் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு ஏன் லேப்டாப் ஆர்டர் கிடைத்தது என்பதே தனி ஊழலாக இருக்கும்.
அரசுத் துறைகளுக்கு மடிக்கணினியோ, கணினியோ வாங்குகையிலேயே, anti-virus மென்பொருளோடுதான் வாங்குவார்கள். மேலும், டெண்டர் விடுகையில், போட்டியிடும் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது, பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரி, அந்த நிறுவனத்திடம் எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு anti-virus மென்பொருள் வேண்டும் எனக் கேட்டால் பல நிறுவனங்கள் முன்வரும்.
ஆனால் தமிழக அரசோ, anti-virus இல்லாமலேயே லேப்டாப்புகளை வாங்கியுள்ளது. இந்த லேப்டாப்புகளை ஆண்டுதோறும் பராமரிக்க ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ராஜ் சுருதி. இவர் 2006 திமுக ஆட்சியில் பெல்டெக் என்ற பெயருடைய இலவச கலர் டிவிக்களை வழங்கியவர்.
இந்த ராஜ் சுருதி, பராமரிப்பு ஒப்பந்தத்தை இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறார்.
PC Chip Technologies மற்றும் (2) Virtu Technologies.
இந்த இரண்டு நிறுவனங்களும் யாருடையவை தெரியுமா ? ராம் மோகன ராவின் மகன் விவேக் பாப்பிசெட்டியுடையது.
இவை தவிர ராம் மோகன ராவின் மகன் விவேக் பாப்பிசெட்டி கீழ்கண்ட நிறுவனங்களை தொடங்குகிறார்.
1) Trans Earth Logistics Private Limited. (Date of incorporation 8 April 2013)
2) Tel Karaikal Logistics Private Limited. (Date of Incorporation 12 January 2016)
3) Blue Ocean Personnel & Allied Services Private Limited (Date of Incorporation 12 January 2016)
4) 3Lok Infra and Logistics Private Limited (Date of Incorporation July 2009)
5) Trans Earth Logistics Tech Solutions Private Limited (Date of Incorporation 11 September 2015)
6) Swan Facility Services Private Limited (Date of Incorporation 15 October 2013)
இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட தேதிகளை பார்த்தால், ராம் மோகன ராவ் ஜெயலலிதாவின் செயலராக பதவியேற்ற பின்னரே தொடங்கப்பட்டன என்பது புரியும். செயலர் 2 (S2) என்றே ராம் மோகன ராவ் இன்றும் அழைக்கப்படுகிறார்.
சேகர் ரெட்டியின் டைரிகளில், விவேக் பாப்பி செட்டிக்கு, 10 கோடி ரூபாய் கமிஷன் என்று உள்ளது. இது விவேக் பாப்பிசெட்டி மூலமாக ராம் மோகன ராவுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சமேயன்றி வேறல்ல.
சென்னை சேமியர்ஸ் சாலையில், Blue Ocean Personnel & Allied Services Private Limited என்ற பெயரில், விவேக் பாப்பிசெட்டி ஒரு கட்டிடத்தை வாங்குகிறார். இதன் சந்தை மதிப்பு 1.9 கோடி. ஆனால் 10 லட்ச ரூபாய்க்கு இந்த கட்டிடம் பதிவு செய்யப்பட்டது. 10 லட்சம் போக மீதம் உள்ள தொகையை கொடுத்தது சேகர் ரெட்டியே.
இதே போல ஆந்திராவிலும் விவேக் பாப்பிசெட்டி பீட்டர் என்பவரிடமிருந்து ஒரு நிலம் வாங்கியுள்ளார். அதன் அசல் விலை ரூபாய் 9,57,43,127/- (ரூபாய் ஒன்பது கோடியே ஐம்பத்து ஏழு லட்சத்து நாற்பத்து மூவாயிரத்து நூற்று இருபத்து ஏழு ரூபாய்). ஆனால் இது பதிவு செய்யப்பட்டதோ, ரூபாய் 4,21,05,250/-க்கு (ரூபாய் நாலு கோடியே இருபத்து ஏழு லட்சத்து ஐந்தாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு). மொத்த தொகையையும்தான், பத்து கோடி Facilitation Fee என விவேக் பாப்பிசெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகார்கள் குறித்து, திரு. ராம் மோகன ராவ் அவர்களிடம் கருத்து கேட்டோம். “என் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. நான் தலைமைச் செயலர் பதவியிலிருது நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கூறப்படுபவை. முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்த பிறகு என்னை தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக கூறப்படுபவை. உள்நோக்கத்தோடு எனக்கு வேண்டாதவர்கள் கூறும் புகார்கள் இவை. ஊடகங்கள் உள்நோக்கத்தோடு எனக்கு எதிராக கட்டுக்கதைகளை கூறுகின்றன” என்றார்.
திறமையாக புலனாய்வு செய்து, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை எப்படி வழக்கில் சிக்க வைப்பது என்று விரிவாக அறிக்கையை அளித்தார் அந்த புலனாய்வு அதிகாரி. ஐந்து முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை அளித்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக இருந்தது முருகன் ஐபிஎஸ். அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மஞ்சுநாதா, புலனாய்வு அதிகாரிக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எஸ்பி.வேலுமணிக்கும் ப்ரோக்கர் போல செயல்பட்டு, அவர்கள் மீதான விசாரணை விபரங்களை அவர்களுக்கே தெரிவித்த இணை இயக்குநர் முருகன், இந்த அறிகையை பார்த்ததும் அவரின் முதலாளிகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தார். அவர் முதலாளிகள் சிறை செல்வார்கள் என்பதையும் உணர்ந்தார்.
இந்த விசாரணையை குழிதோண்டி புதைக்க முடிவெடுத்தார். 1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், இந்த விசாரணையை கூடுதலாக நான்கு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முருகன் எப்படிப்பட்டவர் என்றால், குட்கா வழக்கில் முக்கிய குற்றவாளியான டி.கே.ராஜேந்திரனுக்கு வழக்கின் ரகசியங்களை கசிய விட்டுக் கொண்டிருந்தார். ராஜேந்திரனோ, அதை ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தார். குட்கா வழக்கு சோதனைகளின்போது சிபிஐ அதிகாரிகள் இதை கைப்பற்றினர்.
முருகனின் உத்தரவுப்படி கீழ்கண்ட நான்கு அதிகாரிகளிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
1) திரு ராமச்சந்திரமூர்த்தி, டி.எஸ்.பி
2) திரு திருநாவுக்கரசு, டி.எஸ்.பி
3) திருமதி பிரபா, ஆய்வாளர்
4) வெங்கடாசலபதி, கூடுதல் எஸ்.பி.
முதல் புலனாய்வு அதிகாரி கொடுத்த அறிக்கை இவர்கள் நால்வரிடமும் ஒப்படைக்கப்பட்டு மீள்விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கபடுகிறது.
முதல் மூன்று அதிகாரிகளும், முதல் அதிகாரி கொடுத்த விசாரணை அறிக்கையே சரி என்று அறிக்கை தருகின்றனர்.
நான்காவது அதிகாரியான கூடுதல் எஸ்பி திரு வெங்கடாசலபதி, 30 ஜனவரி 2019 அன்று பதவி ஓய்வு பெற வேண்டும். அவர், இவ்வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அறிக்கை அளித்தார்.
உதவி ஆய்வாளர்களாக பணியில் சேரும் ஒவ்வொருவருக்கும், எஸ்.பியாக ஓய்வு பெற வேண்டும் என்பது கனவு. இது வயது குறைவாக உதவி ஆய்வாளராக சேர்ந்து, பயிற்சியில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்க்கும்.
வெங்கடாசலபதி ஓய்வு பெற வேண்டிய தேதி 30 ஜூன் 2019.
28 ஜூன் 2019, ஒரு வெள்ளியன்று இரவு வெங்கடாசலபதியை கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளி வருகிறது. சனிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட வெங்கடாசலபதி, ஞாயிற்றுக் கிழமை ஓய்வு பெறுகிறார்.
இது லஞ்சமல்லாமல் வேறென்ன ?
இது குறித்து திரு வெங்கடாசலபதி அவர்களிடம் கேட்டபோது, அவர் “என்னோடு மேலும் சிலருக்கும் எஸ்பி பதவி உயர்வு வழங்கப்பட்டது. . இது எனக்காக வழங்கப்பட்டது அல்ல” என்றார்.
ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி, இவரோடு மேலும் 11 கூடுதல் எஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றது உண்மையே. ஆனால், இவருக்காகத்தான் அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றார். அவர்களுக்கு 8 மாதம் முதல் 3 வருடம் வரை பணிக்காலம் எஞ்சியிருந்தது. ஒரு நாள் எஸ்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே வெங்கடாசலபதிக்காகத்தான்.
முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன ராவ் அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். “என் வீட்டில் 1,12,320 பணம் மட்டுமே இருந்தது. இது ஒரு பழிவாங்கும் சோதனை” என்றார்.
ஆனால் அவர் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்ன என்பதைப் பற்றி அவர் வாய் திறக்கவேயில்லை.
அவர் அலுவலகத்திலிருந்து கீழ்கண்டவை கைப்பற்றப்பட்டன.
(1) 1 முதல் 59 பக்கங்களை கொண்ட ஒரு மஞ்சள் நிற கோப்பு
(2) 1 முதல் 86 பக்கங்களை கொண்ட ஒரு பிங்க் நிற கோப்பு
(3) ஒரு பழுப்பு நிற சீலிடப்பட்ட கவர்
(4) 8 தனித்தனி தாள்கள்.
(5) ஒரு ஐபோன் மற்றும் ஒரு LYE போன்.
நமது கைபேசிகள் நமது உடல் உறுப்புகளைப் போல மாறி விட்டன. அப்படி இருக்கையில் எதற்காக இரண்டு போன்களை ராம் மோகன் ராவ் அலுவலகத்திலேயே வைத்திருக்க வேண்டும் ?
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் இக்கட்டுரையை ஏன் எழுத வேண்டும் என்று வாசகர்களுக்கு ஐயம் வரலாம். நம்மை ஆள்பவர்கள் யார், ஆளத் துடிப்பவர்கள் (திமுக) யார் என்பதையும், அரசாங்கத்தை நடத்துபவர் யார் என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை. ஆள்பவர்களுக்கு மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினருக்கும் வாரி வழங்கிய கர்ணனாகவே வாழ்ந்திருக்கிறார் சேகர் ரெட்டி. இந்த பட்டியல் ஒரு பெரும் பனிப்பாறையின் சிறு முனை மட்டுமே.
இக்கட்டுரையால் எந்த பயனும் விளையாது என்பதும், சேகர் ரெட்டியை ஒன்றுமே செய்ய முடியாது என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.
தனது நண்பரிடம் சேகர் ரெட்டி கூறியது. “என்னிடம் லஞ்சம் வாங்கிய அனைவருக்கும் என்னைப் போன்ற ஒருவன் தேவை. இந்த அமைப்பு என்னை பாதுகாக்கும். இவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை பாதுகாப்பார்கள்”.
29 செப்டம்பர் 2020 அன்று, சிபிஐ, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. என்ன அறிக்கை தெரியுமா ?
பண மதிப்பிழப்பு ஆணை வந்த சில நாட்களில், சேகர் ரெட்டியிடம் 9.33 கோடி ரூபாய் புதிய தாள்கள் எப்படி வந்தன என்று பதிவு செய்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் சாட்சிகளும் எங்களிடம் இல்லாததால் வழக்கை முடிக்கிறோம் என்பதே. இணைப்பு
“இந்த அமைப்பு என்னை காப்பாற்றும்” என்று சேகர் ரெட்டி சொன்னது உண்மைதானே !!!
Excellent savuku Sankar for your article
Valka valamudan