இதற்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு இதை நிறைவேற்ற வேண்டும்.
யார் இந்த நீதிபதி ? கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் சவுமித்ரா சென். இவர்தான் இன்று ராஜ்யசபையில் ஆஜராகி வாதாடியவர். என்ன குற்றச் சாட்டுகள் இவர் மீது ?
1983ம் ஆண்டு, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கும், ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கும் இடையே ஒரு வழக்கு. இந்த வழக்கில், ஆர்.என்.பைன் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, 1984ம் ஆண்டு, ஏப்ரல் 30 அன்று, அப்போது மூத்த வழக்கறிஞராக இருந்த சவுமித்ரா சென்னை ரிசீவராக நியமிக்கிறார். சென்னின் பணி, இரும்பு உருக்கு ஆலையில் இருந்த தள்ளுபடி செய்யப் பட்ட பொருட்களை, விற்பனை செய்து, அவற்றுக்குண்டான தொகையை வசூல் செய்து கணக்கு வைக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் தொகைக்கான கணக்கை ஒவ்வொரு 6 மாதத்துக்கும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த ஆணையில் விற்பனையாகும் மொத்த தொகையில் 5 சதவிகிதத்தை சவுமித்ரா சென் தனக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், மீதம் உள்ள தொகையை தனியாக ஒரு வங்கிக் கணக்கில் போட்டு வைக்க வேண்டும் என்றும், அந்த தனி வங்கிக் கணக்கில் இவருக்கு எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிடப் படுகிறது. 1 ஜனவரி 1993 முதல், 1 ஜுன் 1995 வரை சவுமித்ரா சென் 33,82,800 ரூபாய் வசூல் செய்கிறார். 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்.
இவ்வாறு வசூல் செய்த பணத்தை சவுமித்ரா சென் ஏஎன்இஸட் க்ரின்ட்லேஸ் வங்கியில் தன்னுடைய பெயரில் ஒரு அக்கவுன்டிலும், அலஹாபாத் வங்கியில் தன்னுடைய பெயரில் ஒரு வங்கியிலும் போட்டுக் கொள்கிறார்.
இந்நிலையில் 2003ல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுகிறார் சவுமித்ரா சென். உயர்நீதிமன்ற நீதிபதியான பின்னும், 1994ல் தான் நியமிக்கப் பட்ட ரிசீவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில், 1983ல் தொடரப்பட்ட வழக்கு என்னதான் ஆயிற்று என்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, மீண்டும் அந்த வழக்கை உயிர்ப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் எடுத்து வருகிறது.
அனைத்து ஆவணங்களையும் வரவழைத்து விசாரித்தால், சவுமித்ரா சென் 33 லட்ச ரூபாயையும், வரவு வைக்கவில்லை என்பதும், 6 மாதங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டிய கணக்குகளையும் சமர்ப்பிக்க வில்லை என்பதும் தெரிய வருகிறது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தொடர்ந்த வழக்கில், நீதிபதியாக அமர்ந்திருந்த சவுமித்ரா சென்னுக்கு நேரடியாக, மொத்த விற்பனை தொகை எவ்வளவு, அதை எந்த வங்கியில் முதலீடு செய்திருக்கிறார் ஆகிய விபரங்களை சமர்ப்பிக்கச் சொல்லி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால், அந்த உத்தரவை வாங்கி காற்றில் பறக்க விட்டு விட்டு விடுகிறார் சென்.
இந்த உத்தரவை அமல்படுதத் முடியாத வண்ணம் ஏப்ரல் 2006 வரை இழுத்தடிக்கிறார் சென்.
எரிச்சலடைந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, 17.05.2006 அன்று, அன்றைய தேதி வரை வட்டியோடு சேர்த்து 52 லட்ச ரூபாயை சவுமித்ரா சென் கட்ட வேண்டும் என்று உத்தரவிடுகிறார். உத்தரவிட்டதோடு அல்லாமல், ஒரு நீதிபதியாக இருந்து கொண்டு, இப்படி வரைமுறை இல்லாமல் நடந்து கொண்ட சவுமித்ரா சென்னின் நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறார். இதையடுத்து சவுமித்ரா சென், 40 லட்ச ரூபாயை கட்டுகிறார். கட்டி விட்டு, தன் தாயார் மூலமாக, மீதம் உள்ள 12 லட்ச ரூபாயை கட்ட கால அவகாசம் கேட்கிறார்.
இதன் நடுவே, சவுமித்ரா சென்னின் மீதான புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் செல்கிறது. அவர் ‘சென்’னை அழைத்து, இந்தப் புகார்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சென் இந்தப் புகார்களுக்கு பதிலளிக்க எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்கிறார். கேட்டு விட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலேயே தன் தாயார் மூலமாக டிவிஷன் பென்ச் முன்பாக, தன் மீது கூறப்பட்ட கண்டனங்களை நீக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்கிறார். இவ்வாறு மேல் முறையீடு செய்கையில், சம்பந்தப் பட்ட ஷிப்பிங் கார்பரேஷன் மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து, இதை நீக்குவதற்கு உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்டு, அவ்வாறு இல்லை என்று அவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில், அந்த கண்டனங்கள் நீக்கப் படுகின்றன.
இதை எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சென்று, பாருங்கள் என் மீதான கண்டனங்கள் நீக்கப் பட்டு விட்டன என்று கூறுகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பட்நாயக், ஆர்.எஸ்.லோதா மற்றும் ஏ.பி.ஷா ஆகியோர் அடங்கிய ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, சவுமித்ரா சென் மீதான புகார்களை விசாரிக்கச் சொல்லுகிறார்.
அவர்கள் அந்தப் புகார்களை விசாரித்து உண்மை என்ற அறிக்கை அளிக்கின்றனர். அவர்கள் முன்பாக ஆஜரான சவுமித்ரா சென், இந்தப் புகார்களுக்கான உங்கள் பதில் என்ன என்று கேட்டால், நான்தான் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டேனே… இதில் என்ன தவறு இருக்கிறது என்று திருப்பிக் கேட்டார்.
இதன் நடுவே, கொல்கத்தா பேன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சவுமித்ரா சென் ரிசீவராக நியமிக்கப் பட்ட பொழுது மேலும் ஒரு 70 லட்ச ரூபாயை ஆட்டையைப் போட்ட விபரமும் தெரிய வந்தது. அப்போதைய தலைமை நீதிபதி, இவரை ராஜினாமா செய்யச் சொன்ன போது மறுத்த காரணத்தால், ராஜ்ய சபையில் 58 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு, இவர் மீதான பதவி நீக்க தீர்மானம் எழுப்பப் பட்டது. அதன் பின், நீதிபதிகள் மீதான விசாரணைச் சட்டத்தின் படி, ஒரு தலைமை நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுனர் அடங்கிய குழு சென் மீதான குற்றச் சாட்டுகளை மீண்டும் விசாரணை செய்தது. மீண்டும் விசாரணை செய்த இந்தக் குழு, சவுமித்ரா சென் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன என்று முடிவுக்கு வந்தது.
இதையடுத்தே இன்று ராஜ்யசபை முன்பு ஆஜராகி, சவுமித்ரா சென், தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். இதற்குப் பிறகு, ராஜ்யசபையில் வாக்கெடுப்பு நடந்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒன்றாகக் கூடி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், இந்த பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே, சவுமித்ரா சென் பதவி நீக்கம் செய்யப் படுவார். இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.
இதுதான் இன்றைய நிலைமை. அரசியல் அமைப்புச் சட்டம் நீதிபதிகளுக்கு அப்படி ஒரு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. நீதிபதிகள் நேர்மையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.
ஆனால், இன்றைய நிலைமை, அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்த காலத்தில் உள்ளது போலவா இருக்கிறது ? இன்று நீதித்துறையில் உள்ள ஊழல்கள் அதிகமாகி விட்டன என்பதை நீதிபதிகளே ஒப்புக் கொள்கிறார்களே….!!!
சவுமித்ரா சென் விஷயத்தில், வங்கி ஆவணம் மற்றும் மற்ற ஆதாரங்கள் தெளிவாக இருந்ததால் அவர் மீதான குற்றச் சாட்டுகளை இத்தனை கட்ட விசாரணையையும் தாண்டி எடுத்துச் செல்ல முடிந்தது. அதற்காக இன்று நாட்டில் உள்ள அத்தனை உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்ல முடியுமா ? எல்லா நீதிமன்றத்திலும் கருப்பு ஆடுகள் இருக்கின்றனவே….!!!
இந்த கருப்பு ஆடுகளை அடையாளம் காண்பதற்காகத் தானே லோக்பால் மசோதாவில் நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் கடமை, ஒவ்வொரு சட்டத்துக்கும் உண்ணா விரதம் இருந்தால் பாராளுமன்றம் எதற்கு இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் இன்று நீண்ட விளக்கத்தை பாராளுமன்றத்தில் அளித்தார். சட்டம் இயற்றும் கடமை உள்ள பாராளுமன்ற வாதிகளால் கடந்த 15 ஆண்டுகளாக மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்க முடியவில்லையே…. மற்ற சட்டங்கப் பற்றியும், மசோதாக்களைப் பற்றியும் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்துகிறார்களா ?
லோக்பால் மசோதாவைத் தவிர இந்த பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப் படுத்த இத்தனை மசோதாக்கள் இருக்கின்றனவே….
The National Food Security Bill, 2011 |
The Narcotic Drugs and Psychotropic Substances (Amendment) Bill, 2011 |
The Prevention of Money Laundering (Amendment) Bill, 2011 |
The Benami Transactions (Prohibition) Bill, 2011 |
The Constitution (Scheduled Tribes) Order (Amendment) Bill, 2011 |
The Indecent Representation of Women (Prohibition) Amendment Bill, 2011 |
The Agriculture Bio-Security Bill, 2011 |
The Nuclear Regulatory Authority Bill, 2011 |
The Biotechnology Regulatory Authority of India Bill, 2011 |
The Regional Centre for Biotechnology Bill, 2011 |
The Electronic Service Delivery Bill, 2011 |
The Warehousing Corporation (Amendment) Bill, 2011 |
The Companies (Amendment) Bill, 2011 |
The Wildlife (Protection) Amendment Bill, 2011 |
The Indian Stamp (Amendment) Bill, 2011 |
The National Commission for Human Resources for Health Bill, 2011 |
The Customs Law (Amendment and Validation) Bill, 2011 |
The Boarder Security Force (Amendment) Bill, 2011 |
The National Academic Depository (Amendment) Bill, 2011 |
The National Council for Higher Education and Research Bill, 2011 |
The Universities for Innovation Bill, 2011 |
The Press and Registration of Books and Publications Bill, 2010 |
The Inter State Migrant Workmen [Regulation of Employment & Conditions of Service] (Amendment) Bill, 2011 |
The Administrator’s General (Amendment) Bill, 2011 |
The Mines and Minerals (Development and Regulation) Bill, 2011 |
The Emigration Management Bill, 2011 |
The Damodar Valley Corporation (Amendment) Bill, 2011 |
The Passengers Security Bill, 2011 |
The Rajiv Gandhi National Institute of Youth Development Bill, 2011 |
The National Sports Development Bill, 2011 |
The Land Acquisition, Rehabilitation and Resettlement Bill, 2011 |
இந்த மசோதாக்களை நாங்கள் சொல்வது போலத்தான் உருவாக்க வேண்டும், நாங்கள் சொல்வதுதான் சட்டமாக வேண்டும் என்று யார் அடம் பிடிக்கிறார்கள்.. ?
காங்கிரஸ் அரசின் விருப்பப் படி, ஒரு வலுவில்லாத லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்து, அந்த மசோதா, ஏற்கனவே உள்ள துருப்பிடித்த லஞ்ச ஒழிப்புச் சட்டத்தைப் போல உருவாக்கி, ஸ்பெக்ட்ரம், காமல்வெல்த் விளையாட்டுக்கள் போல பல்வேறு ஊழல்களைப் புரிந்து அதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு வருமானம் 467 கோடி என்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்களே…
அது போல ஊழல் புரிய வேண்டும் என்பதற்காகத் தானே லோக்பால் மசோதாவை எதிர்கிறார்கள்…..
இதற்காகத் தானே வரவேண்டும் லோக்பால் ?