“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி. கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை கிருஷ்ண கான சபாவில் அந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் புகழேந்தியைப் போன்ற ஒரு உணர்வுள்ள மனிதரை காணுவது அரிதிலும் அரிது. தான் செய்யும் பணிகள் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து செய்யும் மனிதர். ஈழப் போர் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில் இந்த மனிதர் தனி நபராக செய்து, காரியங்கள் சொல்லி மாளாது. எப்படியாவது இந்தப் போரை நிறுத்த முடியாதா ? ஒரு நாலு உயிரையாவது காப்பாற்றி விட மாட்டோமா என்று இந்த மனிதர் கண்ணீரோடு அல்லாடியது இவரது நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கூட, அந்த நெருக்கடியான நேரத்திலும் கூட, பணம் பண்ண வேண்டும் என்று புகழேந்தியை ஏமாற்றியவர்கள் உண்டு.
அன்புத் தோழர் புகழேந்தி
ஆனால், அவர்கள் மீது தன் கோபத்தைக் கூட காட்டாமல் உதாசீனப் படுத்தி விட்டு தன் பணியை தொடர்ந்து செய்தவர் புகழேந்தி. இறுதிப் போரின் போது, போரை நிறுத்து என்ற கோரிக்கையோடு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களின் பின்னணியில், ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தோழர் புகழேந்தி என்பது பலருக்குத் தெரியாது.
அந்தப் புகழேந்திதான் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார். செய்தித்தாளில், புனிதவதி என்ற 13 வயது ஈழச் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை படித்த உடன் புகழேந்தி மனதில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பே இந்தத் திரைப்படம்.
திரைப்படம் என்பது, பொழுதுபோக்கு ஊடகம் என்று ஒரு கருத்து இருக்கிறது. வணிக ரீதியாக வெற்றியைத் தருவதற்கு, பெரும்பாலான மக்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பொழுது போக்கு அம்சங்களை நிறைத்துத்தான் திரைப்படங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில், உலக சினிமா என்ற பிரிவில் இருக்கும் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை காண்கையில், திரைப்படம் பொழுதுபோக்கு அல்ல. இறந்து போன உணர்வுகளை மீட்டு எடுக்கவும், மீண்டும் நம்மை மனிதர்களாக்கவும் இந்த ஊடகத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நிரூபித்திருக்கின்றன.
திரைப்படம் எடுத்து, வணிக ரீதியாக அதை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர் அல்ல புகழேந்தி. அவர் எப்படிப்பட்ட திரைப்படத்தை எடுப்பார் ? அவர் எப்படிப்பட்ட மனிதரோ, அப்படிப்பட்ட திரைப்படத்தைத் தான் எடுப்பார். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் உச்சிதனை முகர்ந்து.
இந்தத் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்த பிறகு, புனிதவதி பாத்திரத்திற்கு சரியான குழந்தை கிடைக்காமல் தாங்கள் பட்ட சிரமத்தையும், பிறகு ஒரு நாள் புனிதவதியே நேரில் வந்தது போல கிடைத்த குழந்தையையும், அந்தக் குழந்தைக்கு நீநிகா (நீர், நிலம் காற்று) என்று பெயர் வைத்ததையும் விரிவாக பேசினார் புகழேந்தி. இந்தத் திரைப்படத்துக்கு இசை அமைத்த இமான் கொடுத்த ஒத்துழைப்பை குறிப்பிட்ட புகழேந்தி, இசை அமைப்பதற்கான தொகையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், என்ன முடியுமோ, அதைக் கொடுங்கள் என்று கூறி விட்டு, இந்தத் திரைப்படத்துக்கு இழைத்து இழைத்து இசையமைத்திருப்பதை குறிப்பிட்டார்.
சத்யராஜ், சீமான் மற்றும் நாசர் ஆகியோர் இந்தத் திரைப்படத்துக்கு அளித்த ஒத்துழைப்பையும், ஒளிப்பதிவாளர் கண்ணன் மற்றும் அவர் உதவியாளர்கள் ஆகியோர் அளித்த உழைப்பைக் குறிப்பிட்டார்.
கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் கலைஞர்களின் பங்கு குறிப்பிடத் தக்கதாக இருந்திருக்கிறது என்றார். பொதுவாக திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வழக்கம் இல்லாத காசி ஆனந்தன், புகழேந்தியின் இந்தத் திரைப்படமும் ஒரு போராட்டம் என்பதால் பாடல் எழுத ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டார். திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பங்கு போராட்டத்தில் எத்ததையது என்பதை தேசியத்தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருந்தார் என்பதைக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், பிரபாகரனோடு சபையர் தியேட்டரில் “Operation Day Break” என்ற திரைப்படத்தை பார்த்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.
தன் சொந்த ஊரான மட்டக்களப்பு பற்றிய நினைவுகளில் ஆழ்ந்த காசி ஆனந்தன், அந்த ஊரின் உப்பேரியைப் பற்றிக் குறிப்பிட்டார். அந்த உப்பேரியில் படகில் செல்லும் போது, அந்த துடுப்பு நீரில் இருக்கையில், அந்தத் துடுப்பின் நுனியில் காதை வைத்தால் எழும் ஓசை, மீன் பாடுவது போன்று இருக்கும் எனவும், அதனாலேயே மட்டக் களப்புக்கு மீன் பாடும் தேனாடு என்ற பெயர் உண்டு என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஈழத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார். ஒரு மர்ம நபர், இரவு நேரங்களில் முகாம்களுக்கு வந்து, பெண்களை கத்தியால் கீறி கொலை செய்வதைக் குறிப்பிட்ட அவர், உலகம் இலங்கையின் போர்க்குற்றத்தை மவுனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாலும், இலங்கை முகாம்களுக்குள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருந்தாலும், “நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்லி முடித்தார்.
தோழர் சத்யராஜ் பேசுகையில், எடுத்த எடுப்பிலேயே, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக துடிக்கும் இதயங்களுக்கு வணக்கம் என்றார். கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை புரிந்து கொண்ட சத்யராஜ், அப்போது, அவர்களுக்காக துடிக்காத இதயங்களுக்கு வணக்கம் இல்லையா என்றால், அவர்களுக்காக துடிக்காத இதயம் இதயமே இல்லை, பிறகு எதற்கு வணக்கம் என்றார். திரைப்படத்தில் நடிப்பது பணத்துக்காக என்றாலும், எப்போதாவது ஒரு முறைதான் மனத்திருப்திக்காக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், உச்சிதனை முகர்ந்து அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் என்று குறிப்பிட்டார்.
அதன் பிறகு இயக்குநர் ஆர்.சி.சக்தி, தோழர் மணியரசன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “உச்சிதனை முகர்ந்தால்” மற்றும், “இருப்பாய் தமிழா நெருப்பாய்” என்ற பாடல்கள் மேடையில் பாடப்பட்டன. இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடல், நடனக்கலைஞர்களால் மேடையில் காட்சியாக்கப் பட்டது.
இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களையும் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.
உச்சிதனை முகர்ந்தால், உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி என்ற பாடல், ஒரு மிகச் சிறந்த மெலடி. இந்தப் பாடலின் வரிகளும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலின் வரிகளையும் வடித்த காசி ஆனந்தன், பாடலைக் கேட்கையில் இப்பாடல் வரிகளின் சுவையால், தமிழ் என் தாய் மொழி என நினைத்து பெருமைப் பட வைக்கிறார்.
அந்தப் பாடலின் வரிகளோடு முடிப்பது பொருத்தமே…
இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ….
இழிவாய் கிடக்க செருப்பா நீ….
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே…
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிதே…
துடித்துத் துடித்து உடல் சிதைகிறதே….
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே….
என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்…
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்…….