தமிழகத்தின் அடுத்த டிஜிபி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? இந்த பதவி மட்டும் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?- தேர்வு எப்படி நடக்கிறது?- அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் முழு அலசல்
சமீப காலமாக காவல்துறை குறித்து எழுதும் பத்திரிக்கையாளர்கள் சிலர் செய்தித்தாள்களில், ஆன்லைனில் சட்டம் ஒழுங்கு தேர்வு குறித்து மனம் போன போக்கில் தாங்கள் எழுதுவதே சாசனம் என்கிற போக்கில் எழுதுவதை பார்க்கும்போது தமிழக க்ரைம் செய்திகள் வருங்காலம் எப்படி இருக்குமோ, பிழையான பதிவுகளை வாசகர்கள் படித்து நம்புவார்களே என்கிற நோக்கத்தில் இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அடுத்த டிஜிபி யார் என அவரவர் எழுதும் கதைகளை படிக்கும்போது நுனிப்புல் மேயும் இவர்களின் அறிவு குறித்து சிரிக்கத்தான் தோணுகிறது. சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 6 மாதம் பதவிகாலம் இல்லாத டிஜிபிக்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பென்ஷனில் உள்ள ராஜேஷ்தாஸ், மூன்று மாதம் மட்டுமே பணிக்காலம் உள்ள பிரதீப் வி பிலிப் போன்றோரை எல்லாம் தேர்வு பட்டியலில் உள்ளதாக எழுதுகின்றது பிரபல ஆன்லைன்.
அதைக்கூட மன்னிக்கலாம் டிஜிபி அந்தஸ்த்தில் இல்லாத ஏடிஜிபி ரவியை முதல்வர் ஸ்டாலினிடம் அவரது உறவினர் அடுத்த டிஜிபி பதவிக்கு பரிந்துரைத்ததாகவும் அதை ஸ்டாலின் ஏற்கவில்லை என மிகப்பிரபலமான ஒரு தளத்தில் செய்தி. சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு ஏடிஜிபியாக உள்ளவர் எப்படி போட்டியிட முடியும் என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால் உள்ளிட்டோர் பெயரையும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வர வாய்ப்புள்ளதாக எழுதுகிறார்கள். காசா பணமா எழுத வேண்டியதுதானே.
தமிழ் பத்திரிக்கைகள், ஆன்லைன், ஊடகங்கள் அனைத்திலும் உள்ளவர்கள் இதுபோன்று எழுதுவதற்கு முன் சற்று தங்களுக்கு பழக்கமான அதிகாரிகளை கேட்டாலே அவர்கள் நடைமுறைகளை சொல்வார்கள். ஒரு பிரபலமான ஆன்லைன் தற்போது தமிழில் வந்துள்ளது, அதில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பட்டியலுடன் செல்லும் தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி திரிபாதியைக் கண்காணிக்க அவர்களைவிட குறைவான அந்தஸ்த்தில் உள்ள முதல்வரின் தனிச் செயலர் உதயச்சந்திரன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் இருவரையும் முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வேவு பார்ப்பதாக எழுதியுள்ளனர். எவ்வளவு பெரிய அபத்தம் !!!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் சட்டம் ஒழுங்கு தேர்வு குறித்து வழக்கு நடக்கிறதா? அங்கு தமிழகம் சார்பில் வாதாட செல்கிறார்களா?
யூபிஎஸ்சியின் நடைமுறையே வேறு, அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியலை மாநிலத்திலிருந்து பெறும்போது அவர்களின் டிராக் ரெக்கார்டை ஆய்வு செய்து பணிக்காலத்தில் அவர்கள் சிறிய சார்ஜ் வாங்கியிருந்தாலும், சிறிய சஸ்பென்ஷன் வாங்கியிருந்தாலும் அவர்கள் பெயரை தள்ளுபடி செய்கிறது. வருமான வரிக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என டிஜிபி ராதாகிருஷ்ணன் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது கடந்த முறை நடந்தது வரலாறு.
இவைகளை அறியாமல் கண்டபடி எழுதுவது, சஸ்பெண்ட் ஆகி பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி பெற்றாலும் இதுவரை உத்யோக உயர்வு மறுக்கப்பட்டு ஐஜியாக இருக்கும் ப்ரமோத் குமாரின் பெயரையும், சஸ்பெண்ட் ஆகி வீட்டில் இருக்கும் ராஜேஷ்தாஸ் பெயரை போட்டு டிஜிபி பட்டியலில் உள்ளார் என்று போட்டது எல்லாம் உலக மகா காமெடி.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டிஜிபி ரேஸில் உள்ள அதிகாரிகள் பட்டியலில் உள்ள அதிகாரிகள் யார் யார் என்பது முழுமையாக தெரியாமல் பட்டியல் போடுவதுதான்.
பிரஜ் கிஷோர் ரவி என்று ஒரு தமிழக கேடர் டிஜிபி இருப்பதும், அவரும் இந்த போட்டியில் இருப்பதும் தமிழ் பத்திரிக்கையில் ஒருவருக்குக் கூடவா தெரியவில்லை. எம்.கே.ஜா (மிதிலேஷ் குமார் ஜா) என்கிற தமிழக கேடர் டிஜிபி டெல்லி அயல்பணியில் உள்ளார் (அவர் தற்போது பட்டியலில் வரமுடியாது அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்) அவரைப் பற்றியும் தெரியாது இதுதான் இவர்கள் நிலை. வாசகர்களுக்கு டிஜிபி தேர்வு குறித்த தெளிவான வழிகாட்டுதல், சட்டம் ஒழுங்கு டிஜிபி ரேஸில் உள்ளவர்கள் பட்டியல் உள்ளிட்டவைகளை தருகிறோம்.
சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன் பல சட்டப்போராட்டங்கள் நடந்து இன்று டிஜிபி பதவிக்கு வரும் ஒருவர் 2 ஆண்டுகள் அசைக்க முடியாத அதிகாரியாக இருக்கும் நடைமுறை வந்த பின்னணி, டிஜிபி தேர்வு நடக்கும் முறை, ரேசில் உள்ள அதிகாரிகள், அடுத்த டிஜிபி யார்? முழு விவரம் கீழே.
காவல்துறையில் உச்சகட்ட மரியாதை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உண்டு. ஐபிஎஸ் அதிகாரிகள் தம் வாழ்நாளில் பெருமையாகக் கருதுவது சென்னை காவல் ஆணையர் பதவி, சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி. காவல்துறையின் உச்சகட்ட ப்ரமோஷன் டிஜிபி பதவி தான். தமிழகத்தில் ஒரு கட்டத்தில் 13 டிஜிபிக்கள் வரை இருந்தார்கள். 13 டிஜிபிக்கள் இருந்தாலும், ஒரு டிஜிபி பதவிக்குத்தான் உச்சக்கட்ட மரியாதை இருக்கும், அது சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி.
அந்தப்பதவிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மட்டுமே பெருமை உண்டு. காரணம் 2 ஆண்டுகள் அசைக்க முடியாத, மாற்ற முடியாத, கேரண்டியான, கவுரமிக்க, அதிகாரமிக்க பதவி இது.
மற்ற டிஜிபி பதவிகள் ரயில்வே, தீயணைப்புத்துறை என பல வந்தாலும், சட்டம் ஒழுங்கு டிஜிபி மட்டுமே ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைமை பதவி ஆகும். தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை, காவல் துறையின் தலைமை அதிகாரி (Head of the police force – HOPF) என்று அழைக்கிறார்கள். தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்குமான தலைவராக எச்.ஓ.பி.எஃப் பார்க்கப்படுகிறார்.
ஆகவே முன்பு போல் சட்டம் ஒழுங்கு டிஜிபி என்று நாம் அழைத்தாலும் இதுதான் காவல்துறையில் உள்ள நடைமுறை ஆகும். ஒரு மாநிலத்தின் காவல்துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப்பதவிக்கு வருபவர் நிர்வாகிப்பார். இப்படிப்பட்ட பதவியைப் பெற ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு வகைகளில் முயற்சி செய்த வரலாறு உண்டு. நேர்மையாக தங்கள் பணியைப் பார்த்ததால் தகுதியிருந்தும் ஒதுக்கப்பட்ட அதிகாரிகளும் உண்டு. அரசியல் செய்து இந்தப் பதவிகளுக்கு வந்த அதிகாரிகளும் உண்டு. இரண்டையும் காவல்துறை கண்டதுண்டு.
மேற்கண்ட விவகாரங்களை ஆளும் அரசுகள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டிய நபர்களை டிஜிபிக்களாக நியமிக்கும் வேலையும் நடந்தது உண்டு. அதில் சில நேரம் விதிமீறல்களும் நடந்து நேர்மையாகப் பதவிக்கு வரவேண்டிய அதிகாரிகள் வாய்ப்பு கிடைக்காமலே ஓய்வுபெற்ற வரலாறும் உண்டு. ஆனால் இவைகள் அனைத்திற்கும் உச்சநீதிமன்றம் பிரகாஷ் சிங் பாதல் வழக்கில் வழங்கிய தீர்ப்பு ஆப்பு வைத்தது.
இந்தப்பதவிக்கு வருபவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டாலும் நியமிக்க மட்டுமே முடியும், அவரி நீக்கவோ, இணையாக வேறு அதிகாரியைப் போட்டு மதிப்பைக் குறைக்கவோ, பதவி விலகச் சொல்லி நிர்பந்திக்கவோ அரசால் முடியாது. இந்தப்பதவிக்கு வரும் ஒரு டிஜிபி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது அவர் சர்வீஸ் உள்ளவரை இருப்பார் என்கிற தீர்ப்பால் இப்பதவி முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
இதற்கு முன்னர் இப்பதவியும் சாதாரண டிஜிபி பதவி போல் ஆளுங்கட்சியினரால் பந்தாடப்பட்டது. ஆலோசகர் என்று ஒரு பதவியைப் போட்டு டிஜிபி பதவியை டம்மி ஆக்கினார்கள், ஏடிஜிபிக்கு பவர் கொடுத்து டம்மி ஆக்கினார்கள். ஒரு நேர்மையான டிஜிபி அடுத்த ஆட்சிக்கு வருவார் என எதிர்க்கட்சித்தலைவரை சந்தித்ததாக சந்தேகத்தின்பேரில் அவரை கட்டாய விடுப்பில் போக பணித்தார்கள். நினைத்தப்படி டிஜிபியை மாற்றுவது, சீனியாரிட்டி பார்க்காமல் தனக்கு தேவையானவர்களை நியமிப்பது என்கிற நடைமுறை இருந்தது.
இதில் தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களுக்கும் இதே நிலைமை நடந்தது. முதன்முதலில் தன்னை நியமிக்காதது குறித்து, கர்நாடக மாநில டிஜிபி நியமனம் சம்பந்தமாக, சங்கர் எம் பிடாரி (தற்போது சிபிஐயில் உள்ள தமிழக கேடர் அதிகாரி விஜேந்திர பிடாரியின் தந்தை) தீர்ப்பாயம் சென்றார். ஆனால் இன்ஃபாண்ட் என்பவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதை மாற்ற முடியவில்லை. ஆனால் அந்த வழக்கில் தீர்ப்பாயம் இனி சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வு விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து தேர்வு நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.
இதே போன்றதொரு பிரச்சினை தமிழகத்தில் நடந்தது அதுவே பின்னர் சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வாய்ப்பாக அமைந்தது. 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். அவரைவிட அனுபவமும், மூத்த அதிகாரி என்கிற முறையிலும் தன்னை நியமிக்காதது தவறு என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் டிஜிபி நட்ராஜ்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் லத்திகா சரண் நியமன விவகாரத்தில் சீனியாரிட்டி கடைபிடிக்கப்பட்டதா? சீனியாரிட்டி பட்டியலில் முதலில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரிடம் விருப்பம் உள்ளதா எனக்கேட்கப்பட்டதா? எனக்கேள்வி எழுப்பியது. அவர் அயல்பணியில் டெல்லியில் இருப்பதால் கேட்கவில்லை என்று சொன்னதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.
சீனியாரிட்டியில் முதலிடத்தில் இருக்கும் அவரிடம் வில்லிங் (விருப்பம்) உள்ளது அல்லது இல்லை என எழுத்துப்பூர்வமமாக பெற்ற பின், அடுத்து சீனியாரிட்டியில் உள்ள தகுதியான அதிகாரிகளை மத்திய தேர்வாணையத்திற்கு அனுப்பி அது அளிக்கும் 3 பேர் பட்டியலில் உள்ள ஒருவரை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. லத்திகா சரண் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்தது.
அதன் பின்னர் யூபிஎஸ்சிக்கு பட்டியல் அனுப்பட்டு 3 பேர் பட்டியலில் லத்திகாசரண், நட்ராஜ் இருந்தும் லத்திகா சரணை அரசு தேர்வு செய்தது தனிக்கதை. இதை இங்கு குறிப்பிடக்காரணம் இதுபோன்ற பல நடைமுறைகளை கடந்து இறுதியாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் எப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற நடைமுறையை உச்சநீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெரிதாக வகுத்து உத்தரவிட்டது.
இதனால் சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வில் கண்டபடி வேண்டிய அதிகாரிகளை அரசியல்வாதிகள் நியமிப்பதும், நினைத்தப்படி மாற்றுவதும் தடுக்கப்பட்டது. இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.ராஜேந்திரன் 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் அவர்மீது குட்கா வழக்கு விசாரணையில் இருந்தும் அவர் பெயரையும் யூபிஎஸ்சிக்கு அனுப்பி அவர் ஓய்வுப்பெற்ற அன்றைய இரவில் மீண்டும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
இதில் பாதிக்கப்பட்டது அவருக்கு கீழ் இருந்த தகுதியான அதிகாரிகள், சீனியர் டிஜிபியான மகேந்திரன் உள்ளிட்டோர். அவர் டிஜிபியாக நியமிக்கப்பட்ட அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை பிரகாஷ் சிங் என்பவரது வழக்கில் அளித்தது. அதில் பல்வேறு கடுமையான நிபந்தனைகள் சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வுக்காக வகுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் பணி ஓய்வு பெறும் நாளில் மீண்டும் டிஜிபி பதவியை அளிப்பது போன்ற நடைமுறைகளை மூட்டைக்கட்டும் நிலை ஏற்பட்டது.
அனைத்து மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் அத்துமீறல் நடந்ததை அடுத்து காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், அந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி மத்திய அரசு மனு செய்தது. அந்த மனு மீது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
அவை பின்வருமாறு.
* சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள் தகுதி வாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
* மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை (யூபிஎஸ்சி) மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும், தேர்வாணையம் அதை ஆய்வு செய்து, அதில் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பெயரை சீனியாரிட்டி அடிப்படையில் பரிந்துரைப்பார்கள்.
* தேர்வாணையம் அனுப்பிய பட்டியலில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமித்துக்கொள்ளலாம். அவர் அதிகப்பட்சமாக அடுத்த 2 ஆண்டுகள் அல்லது அவர் ஓய்வுபெறும் காலம் வரை பணியில் தொடர்வார்.
* ஓய்வுபெறும் காலத்துக்கு குறுகிய நாட்களுக்கு முன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்குவதை மாநில அரசுகள் அறவே தவிர்த்துவிட வேண்டும்.
* சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமிக்கப்பட பரிசீலிக்கப்படும் அதிகாரிகள், தங்களுடைய பதவி முடிய (ஓய்வு) 2 ஆண்டுகள் வரை பணியாற்றும் பணிக்காலம் உள்ளவராக இருக்க வேண்டும். (பின்னர் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை 6 மாதம் என குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது)
* தற்போது பதவியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறும் காலத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்கும் பணிகளை அரசு தொடங்கிவிட வேண்டும்.
* கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் ஏதேனும் சட்டம், உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு தகுதியாக பட்டியலில் வைக்கப்படும் டிஜிபிக்கள் பரிசீலனை தேதியின் போது குறைந்தது 6 மாதம் பதவியில் இருக்க வேண்டும், தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கட்டாயம் பதவியில் நீடிக்க வேண்டும் என தீர்ப்பில் இருந்தது.
இந்நிலையில் மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியை தாங்களே நியமனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப், ஹரியாணா, உ.பி., மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட 5 மாநிலங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தன.
5 மாநிலங்களின் மனுவை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. டிஜிபிக்கள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே உள்ளது. அவை அப்படியே தொடரவேண்டும் என தெரிவித்த அமர்வு 5 மாநிலங்களின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு வருபவர் அடுத்து 6 மாதங்கள் சர்வீஸ் உள்ளவராக (அதாவது 2021 டிசம்பர் 31 க்கு குறையாமல் பதவிக்காலம் உள்ளவராக) இருக்க வேண்டும்.
அதன்படி தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி ரேசில் உள்ள தகுதியான டிஜிபிக்கள் யார் யார்? என பார்ப்போம். தற்போது உள்ள ஐபிஎஸ்களில் டிஜிபியாக உள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு டிஜிபி ரேஸில் உள்ள அதிகாரிகள்
1986 பேட்ச் அதிகாரி:
1. மிதிலேஷ்குமார் ஜா (எம்.கே.ஜா) – டிஜிபி – அயல்பணியில் இருக்கிறார் (1986 பேட்ச்) ஜூலை -2021-ல் ஓய்வு என்பதால் Not Eligible
1987 பேட்ச் அதிகாரிகள்:
2. சைலேந்திர பாபு – டிஜிபி -ரயில்வேத்துறை (1987 பேட்ச்) ஜூன் 2022-ல் ஓய்வு – ஓய்வுக்கு 12 மாதம் உள்ளது. ஆகவே தகுதியிலும் சீனியாரிட்டியிலும் முதலிடத்தில் உள்ளார்.
3. கரன் சின்ஹா – டிஜிபி – தீயணைப்புத்துறை (1987 பேட்ச் ) பிப்ரவரி 2022- ஓய்வுக்கு சரியாக 7 மாதம் உள்ளது. ஆகவே தகுதி அடிப்படையில் 2 வது இடத்தில் உள்ளார்.
4. பிரதீப் வி பிலிப் – டிஜிபி – சீருடைப்பணியாளார் (1987 பேட்ச் ) செப்-2021 -ல் ஓய்வு – ஓய்வுக்கு 3 மாதம் உள்ளதால் தகுதி இல்லை. Not Eligible.
1988 பேட்ச் அதிகாரிகள்:
5. சஞ்சய் அரோரா – டெல்லி (சிஆர்பிஎஃப் டிஜிபி) அயல்பணியில் உள்ளார். (1988 பேட்ச்) ஜூலை 2025-ல் ஓய்வு இவர் தகுதி அடிப்படியில் 3 வது இடத்தில் உள்ளார்.
6. சுனில்குமார் சிங் – சிறைத்துறை டிஜிபி (1988 பேட்ச்) 2022 அக்டோபரில் ஓய்வு தகுதி அடிப்படையில் 4 வது இடத்தில் உள்ளார்.
1989 பேட்ச் அதிகாரிகள்
7. கந்தசாமி – லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி (1989- பேட்ச்) – 2023 ஏப்ரல் மாதம் ஒய்வு- தகுதி அடிப்படையில் 5 வது இடத்தில் உள்ளார்.
8. ஷகீல் அக்தர் – சிபிசிஐடி டிஜிபி (1989 பேட்ச்) – 2022 அக்டோபரில் ஓய்வு என்பதால் தகுதி அடிப்படையில் 6 வது இடத்தில் உள்ளார்.
9. ராஜேஷ் தாஸ் – (1989 பேட்ச்) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் – 2023- டிசம்பரில் ஓய்வு Not Eligible
10. பிரஜ் கிஷோர் ரவி (பி.கே.ரவி) – டிஜிபி டான்ஜெட்கோ (1989 பேட்ச்)- 2023 டிசம்பரில் ஓய்வு தகுதி தகுதி அடிப்படையில் 7 வது இடத்தில் உள்ளார்.
இவர்கள் 7 பேர் தற்போது டிஜிபி ரேசில் உள்ளனர். இதில் பிரஜ் கிஷோர் ரவி பெரும்பாலும் அயல் பணியில் இருந்ததால் தமிழக அரசு பரிசீலிக்க வாய்ப்பில்லை, ஷகீல் அக்தர் திமுகவில் செல்வாக்கு உள்ள ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் அவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வர சில சிக்கல்கள் தேர்வாணையத்தில் உள்ளதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமிக்கும் மத்திய அரசுப்பணியின்போது ரிமார்க் உள்ளதாக கூறப்படுவதால் அவர் பெயரும் பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை என காவல்துறை வட்டாரத்தில் தகவல் ஓடுகிறது.
இறுதியாக போட்டியில் இருப்பது சைலேந்திரபாபு, சுனில்குமார் சிங், சஞ்சய் அரோரா, கரன்சின்ஹா ஆகியோர். இதில் கரன் சின்ஹா பெரும்பிரயத்தனம் செய்கிறார், அவருக்கு தற்போதைய டிஜிபி திரிபாதியின் ஆதரவு உள்ளது என்றாலும் முதல்வர் அவரை விரும்பவில்லை. இதற்கு உதாரணமாக முதல்வரிடம் அப்பாயிண்ட் கேட்டும் அவர் தரவில்லை என காவல்துறை வட்டாரத்தில் தகவல் ஓடுகிறது.
அடுத்து சஞ்சய் அரோரா, நேர்மையான அதிகாரி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி அயல்பணியில் உள்ள அவரிடம் விருப்பம் உள்ளதா என தமிழக அரசு கேட்டதற்கு இதற்கு முன் வரும் முடிவில் இல்லாத இவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவரை தமிழக அரசு பரிசீலிக்காது என காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பேச்சாக உள்ளது. காரணம் இவர் ஒருவர் தான் இளைய வயதுள்ள அதிகாரி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். இவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இவர் டிஜிபியாக தொடர்வார்.
இது அரசுக்கு சிக்கலாக அமையும், டெல்லியில் அயல்பணியில் உள்ள அதிகாரி, நேர்மையான வளைந்துக் கொடுக்காத அதிகாரியிடம் 4 ஆண்டுகள் டிஜிபி பதவியை கொடுத்து வேடிக்கைப் பார்க்க எந்த அரசும் விரும்பாது என்பதால் அவர் வாய்ப்பும் மறுக்கப்படும் எனத் தெரிகிறது. கரன் சின்ஹாவுக்கும், சஞ்சய் அரோராவுக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை இருவருக்கும் தமிழ் சரியாக வராது அதனால் முதல்வர் அதையும் கருத்தில் கொள்வார் என பேசிக்கொள்கிறார்கள்.
அடுத்து உள்ளது சுனில்குமார் சிங் இவரும் தமிழக அரசுடன் இணக்கமாக உள்ள அதிகாரிதான், ஆனால் இவரைவிட இணக்கமாக உள்ளவர் சைலேந்திர பாபு. இவருக்குத்தான் அதிக வாய்ப்புள்ளதாக அனைவரும் பேசுகிறார்கள். இவர் அயல்பணியிலேயே பணி புரிந்தது இல்லை அதனால் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு பரிசீலிக்கக்கூடாது என சக போட்டியாளர்களால் வாதம் எடுத்து வைக்கப்பட்டதாம்.
ஆனால் அப்படி விதி எதுவும் இல்லை, அயல் பணியில் ஒரு நாள் கூட பணியாற்றாத ரவீந்திரநாத் என்பவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றியுள்ளார் என காவல்துறை ஓய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே எவ்வித பிரச்சினையும் இன்றி சட்டம் ஒழுங்கு டிஜிபி இறுதிப்போட்டியில் இருப்பது சைலேந்திர பாபு முதலிடம், சுனில் குமார் சிங் இரண்டாம் இடம், ஒருவேளை மத்திய தேர்வாணையம் சகீல் அக்தர், கந்தசாமி பெயர்களை பரிசீலனைக்கு எடுத்து பட்டியலில் சேர்த்தால் அடுத்தடுத்து அவர்களுக்கே வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள நிலையில் சைலேந்திர பாபுவே வெற்றிமுகம் காட்டுகிறார்.
– முத்தமிழ்வேந்தன்
Loved your article. Only incorrect information is – if a officer has less than 2 years to retire and if he is selected as head of police force he can continue to serve for the full 2 years as head.
Nice article. As expected Mr Sylendra babu appointed as DGP. Mr Tripathi and Mr Viswanathan have set a high expectations, hope TN police legacy continues.
செம! நிஜமானது இன்று.
இன்னும் திரை மறைவாக எவ்வளவு டீலிங்ஸ் நடக்குமோ??
Nice article. Understand the basics.
Love ur works