நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது, உயர்ந்து கொண்டிருக்கிறது. போராட்டம் நடக்கவில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப் பட்டது சிறிய முணுமுணுப்புக்களை தவிர போராட்டம் ஏதும் நடக்கவில்லை. இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் வகையில், அமெரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது யாரும் பேசவில்லை.
இது போல இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்கள், ஒரு கிழவன் உண்ணாவிரதம் இருந்தால் அவர் பின்னால் சென்று விடுவார்களா என்ற இறுமாப்பே….
காங்கிரஸ் கட்சி தனது தந்திரமான உபாயங்களை பயன்படுத்தி இந்த இயக்கத்தை சிதைக்கலாம் என்று தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கிறது.
ஈழத்தில் போர் தொடங்கிய காலம் முதலாக ரகசியமாக சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளை செய்து வந்தது, அம்பலப்படுத்தப் பட்டது முதலாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. ஜனவரியில் முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு, ஒட்டு மொத்த தமிழகமுமே கொதித்து எழுந்தது. தமிழகமெங்கும் போராட்டங்கள் கிளம்பின. ஆனாலும், திமுகவின் தயவால், 2009 பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தமிழக மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழ் மக்களை அழித்தது காங்கிரஸ் கட்சி.
அதே போல ஒரு தந்திரத்தை அன்னா ஹசாரே விவகாரத்திலும் கடைபிடித்து வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கட்சி கையாண்ட உத்தி, இந்த விவகாரத்தில் பலிக்காமல், கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது.
அன்னா ஹசாரேவிடம் இருக்கம் நேர்மையில் ஒரு துளி கூட இல்லாத பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றும், 1000 ரூபாய் நோட்டை ஒழித்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று அற்புதமான யோசனைகளை தெரிவித்த ஒரு நபரை, தன் அமைச்சர்களை அனுப்பி, விமான நிலையத்திலிருந்து வரவேற்று, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு அந்த நபரை இரவோடு இரவாக கைது செய்து முகத்தில் கரியைப் பூசிக் கொண்டது காங்கிரஸ். இந்துத்வா பின்னணி உள்ள ஒரு மோசடிப் பேர்விழியை நள்ளிரவில் கைது செய்தபோது எழுந்த எதிர்ப்பைப் பார்த்த உடனேயே காங்கிரஸ் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், தன் அகந்தையை கைவிடாமல், உச்சானிக் கிளையின் அமர்ந்து கொண்டு, அதே ஆணவத்தோடு அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒழித்து விடலாம் என்று நினைத்ததாலேயே இன்று கடும் நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறது காங்கிரஸ்.
அன்னா ஹசாரே, ஏப்ரல் மாதத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கிய உடனேயே, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி மழைக்காலக் கூட்டத் தொடரில் வரைவு மசோதாவை அறிமுகப் படுத்துவோம் என்று உத்தரவாதம் அளித்தது காங்கிரஸ். அதன் பிறகு தொடர்ச்சியாக நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்த எந்த யோசனைகளையும் ஏற்க மறுத்தது. மாறாக, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மீதும் ஏதாவதொரு புகாரை தெரிவித்து, அவர்களை இழிவுப் படுத்தி அதன் மூலம் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற தவறான அணுகுமுறையைக் கடைபிடித்தது.
இந்த தந்திரமான உத்திகளை காங்கிரஸ் கட்சி கையாள நினைத்த அதே வேளையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலை எழுந்திருப்பதை கவனிக்கத் தவறியது. ஐந்து நிமிடம் வெயிலில் நடக்கக் கூட சம்மதிக்காத உயர் நடுத்தர வர்க்கம், மழை வெயிலைப் பொருட்படுத்தாமல், சாலையில் இறங்கிப் போராடும் என்பதை காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியது.
இன்றைய சந்தைப் பொருளாதார, நுகர்வுக் கலாச்சாரச் சூழலில், தன் பக்கத்து வீட்டுக் காரனுக்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவி செய்ய மறுக்கும் ஒரு மோசமான சமூக சூழலில், பொதுப்பிரச்சினைக்காக யார் போராடப் போகிறார்கள் என்ற மாயையில் காங்கிரஸ் ஆழ்ந்திருந்தது.
உலக வரலாற்றில், நெருக்கடி முற்றும் போது மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள், அந்த போராட்டத்தின் முன்னே எப்படிப்பட்ட ஆணவம் மிக்க அரசுகளும் அடி பணிந்து தான் ஆக வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியது. சுதந்திரம் கிடைத்த பிறகு முதலில் வெளி வந்த முந்த்ரா ஊழல் முதல், இன்று வரை தொடர்ந்து நடக்கும் ஊழல்களைப் பார்த்து புழுங்கிக் கொண்டிருந்த மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அன்னா ஹசாரே வெளிப்பட்ட போது, மக்கள் தன்னெழுச்சியாக அவர் பின்னால் அணி திரளத் தொடங்கினர். இன்று தேசத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினைகளில் பலவற்றில் மக்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.
சாதீய ஒடுக்கு முறைக்கு எதிராக போராட அழைத்தால், நகரத்தில் வாழும் மக்கள், அது எங்கள் பிரச்சினை இல்லை என்பார்கள். விவசாயிகளின் தற்கொலைகள், அவர்கள் மனசாட்சியை உலுக்குவதில்லை. விலைவாசி உயர்வைப் பார்த்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று உறுதி பூணுவார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே ஒன்றுபடும் தளம் ஒன்று உண்டு என்றால் அது ஊழல் தான். பிறப்புச் சான்றிதழ் வாங்குவதிலிருந்து, சுடுகாட்டில் எரியூட்டுவது வரை, அன்றாடம் பல்வேறு வேலைகளுக்கு தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை லஞ்சமாக தருவது யாருக்குமே ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும், தங்கள் தலையெழுத்தை நொந்து கொண்டு, லஞ்சம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த லஞ்சத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன் என்று எல்லோராலும் நம்பப் படும் ஒரு நபர் கிளம்பிய போது, தேசம் அவர் பின்னால் அணி திரண்டதில் ஆச்சர்யம் இல்லை.
மக்களின் அந்தக் கோபத்தை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி, அவர் மீது சேற்றை வாரிப் பூசுவதன் மூலமாக போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தது. “தலை முதல் கால் வரை ஊழல் பேர்விழியான ஒருவர் ஊழலைப் பற்றி பேசுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று அன்னா ஹசாரேவைப் பற்றி மனீஷ் திவாரி கூறினார். அதே மனீஷ் திவாரி இன்று மன்னிப்புக் கேட்டுள்ளார். நேற்று வரை திமிராக பேசிக் கொண்டிருந்த கபில் சிபல், ப.சிதம்பரம், அம்பிகா சோனி போன்றோரை ஆளையே காணவில்லை.
உண்ணாவிரதம் தொடங்கும் நாளன்று காலையில் அன்னா ஹசாரேவைக் கைது செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்று அன்னா ஹசாரே என்ன சொன்னாலும் கேட்கிறோம் என்று சரணாகதி அடைந்துள்ளது. நல்ல அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சமே இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி இப்படி அந்தர் பல்டிகள் அடிப்பதற்காக காரணம். ஏறக்குறைய அன்னா ஹசாரவின் அத்தனை கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வந்துள்ளது.
இந்தக் கோரிக்கைகளை போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தையின் மூலமாக ஏற்றுக் கொண்டிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரையாவது தவிர்த்திருக்கலாமே…. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இயல்பு இதுதான். துரோகங்களின் வரலாறே காங்கிரஸ் கட்சி.
நாளை பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில், காங்கிரஸ் அல்லாத கட்சிகள், இந்த தேசத்தின் மக்கள் இருக்கும் மனநிலையை புரிந்து கொண்டு விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும். மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளத் தவறிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இருக்கும் நிலைமையை மற்ற கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அன்னா ஹசாரே போராட்டம் உணர்த்தும் செய்தி.