மும்பையில் கொலாபா என்ற இடத்தில் எல்லா விதிமுறைகளையும் மீறி “ஆதர்ஷ் ஹவுசிங் சங்க’த்துக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இத்தனை விதிமுறைகளும் மீறப்பட்டதற்கு ஒரே காரணம், கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக இங்கே வீடு கட்டப்படுகிறது என்பதுதான். இத்தனை விதிமுறை மீறல்களும் செய்துவிட்ட பின்னர், இங்கே ராணுவ வீரர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. இங்கே கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான, சகல வசதிகளுடனும் கூடிய 103 குடியிருப்புகளில் 3 பேர் மட்டுமே நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள். மற்ற வீடுகள் முதலமைச்சர் சவாண், அமைச்சர்கள், அரசுச் செயலர்கள் போன்ற எல்லோர் பெயரிலும் இருக்கின்றன.
இந்த ஊழல் அம்பலப்பட்ட பிறகு, இதில் இரண்டு ராணுவ உயர் அதிகாரிகள் இந்த மனை ஒதுக்கீடுகளை “ஆதர்ஷ் ஹவுசிங் சங்க’த்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந்த ஊழலும்கூட, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளின்போது வெளிப்பட்டதுதான்.
இந்த உயர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும் இடம் கடலோர ஒழுங்காற்று மண்டலத்தின் வரையறைக்குள் வருவதால், இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதற்காகத்தான் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கொடுக்கப்பட்டது. இந்த இடம் கார்கில் போரில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்காகக் கட்டப்படுகிறது என்றும், இதில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பத்துக்கான நலத்திட்டம் என்பதால் இதில் அரசு விதிமுறைகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டது என்பதும் தெரியவந்தது. ஆனால், இப்படியான வசதிமிக்க குடியிருப்புகள் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்குச் சாத்தியம்தானா என்கிற கேள்வி எழுந்தபோதுதான், இந்த ஊழல் அம்பலத்துக்கு வந்தது.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்துக்காக கார்கில் நிதி திரட்டுகிறோம் என்கிற பெயரில் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளை இதுவரை யாராலும் வெளிப்படுத்த முடியாததாகவே இருந்துவருகிறது. இப்போது வெட்கமே இல்லாமல், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் பெயரைச் சொல்லி, சுயநலத்துக்குக் கடை விரித்திருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், உடன்போன அதிகாரிகளும்.
கார்கில் வீரர்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றியது ஒருபுறம் இருக்க, கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரச்னைக்கு ஆளாகியிருக்கிறார் மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை அமைச்சர் நாராயண ராணே. ஸ்ரீஷேத்ர மகாபலீஸ்வர தேவஸ்தான அறக்கட்டளைக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலம், ராணே மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலத்தை பஞ்சால் என்பவரின் பெயருக்கு மாற்றி, பிறகு அமைச்சரின் மனைவி பெயருக்கு மாற்றியிருக்கிறார்கள். அதாவது அமைச்சரின் மனைவி அப்பாவி. அவருக்கு இது கோயில் நிலம் என்பதே தெரியாது என்று உலகத்துக்கும் நீதிமன்றத்துக்கும் சொல்லிக் கொள்ள முடியும்.
அதைவிட மோசமானது என்னவென்றால், 2008-ல் வருவாய்த் துறை ஆவணங்களிலேயே இந்தக் கோயில் நிலம் இல்லாதபடி அழித்தொழித்துவிட்டதுதான். கோயில் அறக்கட்டளையினர் நீதிமன்றத்தின் படிகளில் ஏறித்தான் ஆவணங்களைக் காட்டினார்கள். ஆனால் அரசு ஆவணங்களில் இது அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலத்தை பஞ்சால் 15 ஆண்டுகளுக்கு முன்பு 1.4 லட்சத்துக்கு வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு கொடுமையும் புனே அருகே நடந்துகொண்டிருக்கிறது. புனே நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பகுதியில் “லாவசா’ கட்டுமான நிறுவனம் சகல வசதிகளுடனும் 2,000 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 1,000 அடி உயரத்தில் மலைமீது கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்று அனுமதிக் கடிதம் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், 1,052 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரியம், எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், “லாவசா’ கட்டுமான நிறுவனத்தின் பூர்வாசிரமத்தில் 22 விழுக்காடு பங்கு வைத்திருந்தவர்கள் யார் தெரியுமா? மத்திய அமைச்சர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சூலே!