அன்பு உறவுகளே….. சென்னை உயர்நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்ட இந்த மகிழ்ச்சியான தருணத்தில்,
தமிழக சட்டப் பேரவையில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து, சட்டப் பேரவையில் தீர்மானத்தை தமிழகத்தின் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றியுள்ளார். ஜெயலலிதா முன் மொழிந்த தீர்மானத்தை, சட்டப் பேரவை ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த தீர்மானம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று பின்னர் பார்ப்போம்.
முதலில், நாம் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு தெரியுமா ? முருகன், சாந்தன் மற்றும் அறிவு ஆகியோருக்கும் தான். அவர்களுக்கு எதற்கு நன்றி ?
என்றுமே நடக்காத வகையில், தமிழினத்தை ஒன்று பட்டு அநீதிக்கு எதிராக கொதித்து எழ வைப்பது சாதாரண காரியமா என்ன ? எது நடந்தாலும் எனக்கென்ன என்று இருக்கும் தமிழகத்தை பார்த்து வருத்தப்பட்டதுண்டு. ஆனால், மூவருக்கும் தூக்கு என்ற செய்தியைக் கேட்டவுடன், அத்தனை அன்பு உள்ளங்களும், கொதித்து எழுந்தன. ஏதாவது செய்து அந்த மூவர் உயிரைக் காப்பாற்ற மாட்டோமா என்று தவித்தன. சமூக வலைத்தளங்களில், இந்த மூவருக்காக கண்ணீர் விட்ட நெஞ்சங்களைக் காண முடிந்தது. மாணவர்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒரு சேர குரல் கொடுத்தனர். பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டி கோரிக்கை வைத்தன. குறிப்பாக “மதுரை தினகரன் அலுவலகத்தில் இறந்த மூன்று பத்திரிகையாளர்களின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மட்டும் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்றால், இவர்களும் மன்னிக்கப்படத்தான் வேண்டும்.” என்று தலையங்கம் எழுதிய தினமணியின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. இந்தத் தலையங்கம், சட்டமன்றத் தீர்மானத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. தமிழகத்தின் அத்தனைக் கட்சிகளும், ஒரே குரலில், மூவர் உயிரைக் காப்பாற்று என்று உரத்துப் பேசின. ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும், இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு சேர மூவர் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கோரியது எவ்வளவு மகிழ்ச்சியளித்தது தெரியுமா ?
இன்று இந்த மகிழ்ச்சியான சமயத்தில் ஒரே ஒரு நெருடல், தோழர்.செங்கொடியின் மரணம் தான். அந்தத் தோழர் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கக் கூடாதா ? நீதிமன்றங்கள் இருக்கின்றன. போராட, கோடானு கோடி தமிழ் உறவுகள் இருக்கின்றன… அப்படியா மூவர் உயிரைப் பறிக்க விட்டு விடுவோம் ?
மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப் பட்டு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்ற வரலாறு காணாத அளவுக்கு கூட்டம். வழக்கு நடந்த 4வது நீதிமன்றத்தின் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு நெரிசல். நீதிமன்ற அறைக்கு வெளியே 500 பேர் திரண்டிருந்தனர். நீதிமன்றத்துக்கு கீழே, 2000த்துக்கும் அதிகமானோர் திரண்டு முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
மூவர் சார்பாக, புது தில்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, காலின் கான்சால்வேஸ் மற்றும் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மூச்சு விடக் கூட இடமில்லாத அந்த நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி தன் வாதத்தை தொடங்கினார்.
11 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து சாவகாசமாக குடியரசுத் தலைவர் அலுவலகம் இந்தக் கருணை மனுவை நிராகரித்திருக்கிறது. 2 வருடங்கள் தாமதமாக நிராகரித்த நேர்வுகளில் கூட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டிருக்கிறது. எதற்காக இந்தத் தாமதம் என்பதை அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். முதன் முறை மாநில அரசிடம் கருணை மனு சமர்ப்பித்த போது 5 மாதங்களில் நிராகரித்திருக்கிறார்கள். இவருக்கு எதற்காக 11 ஆண்டுகள் ? ஒரு மனிதனை அவன் இருக்கும் சிறையிலிருந்து வெளியே எடுத்து தூக்கிலிட 30 வினாடிகளே ஆகும். இந்த 30 வினாடிகளை மூன்று பேர் 11 ஆண்டுகளாக அனுபவத்துக் கொண்டிருப்பதை எண்ணிப் பாருங்கள். என்று வாதிட்டார்.
அவருக்கு பிறகு வாதாடிய காலின் கான்சால்வேஸ் பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் கூறி, ஏன் இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.
இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர், மத்திய அரசு 8 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, 8 வாரங்களுக்கு மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்தத் தகவல் கீழே குழுமியிருந்த தோழர்கள் காதில் விழுந்ததும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தனர் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அய்யா நெடுமாறன், சீமான், அறிவின் தாயார் அற்புதம் அம்மையார் ஆகியோர் கீழே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அற்புதம் அம்மையார், குழுமியிருந்த கூட்டத்தையும், கோஷங்களையும் கண்டு தன் மகனைச் சாக விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், வழக்கறிஞர்கள் என்று அத்தனை முகங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்தத் தீர்ப்புக்கு முன்னரே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அந்தத் தீர்மானம் பின்வருமாறு
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து
ஆற்றிய உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.
அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.
மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம்
“”தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
முடிவுரை:
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.“
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது, சட்டப் பேரவையில் இருந்த ஒரே காங்கிரஸ் உறுப்பினர் விஜயராணி. என்ன நடக்கிறது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போதே தீர்மானம் பலத்த கரவொலியோடு நிறைவேற்றப் பட்டது. “என்னடா இது… இப்படி ஒரு தீர்மானம் போட்டு விட்டார்களே…. எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று பார்த்தால், பேச்சு துணைக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை” என்ற யோசித்தவர், தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பிறகு, வெளியே வந்த அவர், பத்திரிக்கையாளர்களை அழைத்து, காங்கிரஸ் கட்சி இதை எதிர்க்கிறது என்று கூறி விட்டு, மீண்டும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை. மூவரை தூக்கிலிட வேண்டும் என்ற முடிவை எடுத்ததன் மூலம், தமிழ் நாட்டில், இப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. சரி, ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் கட்சி ஒழிந்தால் நமக்கு என்ன கசக்கவா போகிறது….. காங்கிரஸ் கட்சி சுத்தமாக அழிந்து போனதும், சத்யமூர்த்தி பவனை செங்கொடி நினைவகமாக மாற்றுவோம்.
இன்று சட்டப் பேரவை இயற்றியிருக்கும் தீர்மானத்தினால் என்ன பயன் விளையப் போகிறது ?
ஒரு மாநில அரசின் சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மீறி குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரிக்க முடியாது. அப்படியே, நிராகரித்தாலும் அந்த மூவரை மாநில அரசுக்கு அவர்கள் விண்ணப்பம் அளித்தால், மீண்டும் மாநில அரசு அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 161ல் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நிச்சயம் இந்த தண்டனையை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டப் பேரவையில் மார்ச் 1991ல் மத்திய அரசு மாநில அரசுக்கு எழுதிய ஒரு விளக்க கடிதத்தின் படி, குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த ஒரு நேர்வில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த குறிப்பிட்ட கடிதத்தில் சொல்லப் பட்டிருப்பது இதுதான்.
“… …
2. The Government of India, on an examination of the matter, and after taking all relevant constitutional aspects into view, direct in terms of article 257(1) of the Constitution of India that in cases of death sentences where a petition for grant of pardon etc. has earlier been rejected by the President of India in exercise of his powers under article 72 of the Constitution of India, it would not be open for the Government of a State to seek to exercise similar powers under article 161 in respect of the same case. However, if there is a change of circumstances or if any new material is available, the condemned person himself or any one on his behalf may make a fresh application to the President for reconsideration of the earlier order. Once the President has rejected a mercy petition, all future applications in this behalf should be addressed to and would be dealt with by the President of India.”
வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்த பிறகு சவுக்கு அறிவது, மாநில அரசுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கியுள்ள அதிகாரமானது உச்ச பட்சமானது. ஒரு நிர்வாக ரீதியான அறிவுரைக் கடிதத்தை வைத்து, அந்த அதிகாரத்தை தடுக்க முடியாது. மேலும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் படும், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 257 (1) என்ன கூறுகிறது என்றால்
257. Control of the Union over States in certain cases (1) The executive power of every State shall be so exercised as not to impede or prejudice the exercise of the executive power of the Union, and the executive power of the Union shall extend to the giving of such directions to a State as may appear to the Government of India to be necessary for that purpose.
அதாவது இந்த ஷரத்து என்ன சொல்கிறதென்றால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் போது, மத்திய அரசின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்யாத வகையில் பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறது. உதாரணத்திற்கு, தற்போது, மூவரின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதென்றால், அப்போது குறுக்கீடு செய்யும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் கருணை மனுவை ஏற்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தை வழங்கும் பிரிவு 72 (3) என்ன கூறுகிறது தெரியுமா ?
(3) Nothing in sub-clause (c) of clause (1) shall affect the power to suspend, remit or commute a sentence of death exercisable by the Governor of a State under any law for the time being in force.
அதாவது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு நிலுவையில் இருக்கும் போது கூட, மாநில அரசுக்கு 161ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க இயலாது என்பதுதான்.
ஆகையால், மூவர் உயிரை அத்தனை எளிதில் பறித்து விட முடியாது. மேலும் மீண்டும் குடியரசுத் தலைவர் இந்தக் கருணை மனுக்களை நிராகரித்தால் கூட, மீண்டும் மாநில அரசு மரண தண்டனையை ரத்து செய்ய முடியும்.
வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே……