மூன்று தமிழர்களை தூக்குக் கொட்டடியிலிருந்து காக்க வேண்டும் என்று சவுக்கில் கட்டுரை எழுதிய போது, ஒரு சில தோழர்கள், ஏன் அப்சல் குருவுக்காக குரல் கொடுக்கவில்லை என்று கேட்டிருந்தனர். மரண தண்டனை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும் என்பதே சவுக்கின் நிலைபாடு. அஜ்மல் கசாப் கூட தூக்கிலிடப் படக் கூடாது. அஜ்மல் கசாப் தீவிரவாதி, தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறான் என்றால், அவனை தூக்கிலிடுவதன் மூலம், நாமும் நாகரீகத்திலிருந்து பிறழ்ந்து, தீவிரவாதியாகிறோம்.
உலகில் அரபு நாடுகளை விடவும் நாம் நாகரீக சமுதாயமாக திகழ்கிறோம் என்பதில் சந்தேகம் கிடையாது. அரபு நாடுகள் மற்றும் சீனாவில் 2010ம் ஆண்டில் மட்டும் எத்தனை பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். சீனா 5000, ஈரான் 252, வட கொரியா 60, ஏமன் 53, அமெரிக்கா 46, சவுதி அரேபியா 27, லிபியா 18, சிரியா 17. இந்தியாவில் 2004க்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப் படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
மரண தண்டனை என்பது ஒரு மனிதாபிமானமற்ற ஒரு செயல் என்பதில் எந்த விதமான மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. “கண்ணுக்கு கண் என்றால் உலகமே குருடாகி விடும்” என்ற காந்தியின் வரிகளை விட, எளிமையாக விளக்குவது முடியாது.
அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். 1948ம் ஆண்டில் லாஸ் ஏன்ஜெலிஸ் நகரில் ஒரு நபர் கைது செய்யப் படுகிறார். அவர் பெயர் கேரில் செஸ்மேன். (Caryl Chessman) 1947 முதல் லாஸ் ஏன்ஜலீஸ் நகரில், தொடர் கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு நபர் சிவப்பு விளக்கை சுழல விட்டுக் கொண்டு காரில் செல்பவர்களை மறிப்பார். காவல்துறையினர் என்று நினைத்ததும் பொதுமக்கள் வண்டியை நிறுத்துவார்கள். வண்டியை நிறுத்தியதும், துப்பாக்கியை எடுத்து, வண்டியில் உள்ளவர்களிடம் காண்பித்து, பணத்தையும், நகையையும் எடுங்கள் என்று கொள்ளையடித்துச் செல்வார். இவ்வாறு நடக்கையில் இரு சம்பவங்களில் இரு பெண்களை பாலியல் பலாத்காரமும் செய்திருந்தார்.
கேரில் செஸ்மேன்
இதன் பிறகு ஒரு நாள், ஒரு கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கின்றனர் என்ற தகவல் அறிந்து காவல்துறையினர் அவர்களை துரத்திப் பிடிக்கையில், அதில் பிடிபடும் நபரின் காரிலிருந்து சிகப்பு சுழல் விளக்கையும், துப்பாக்கியையும் கைப்பற்றுகின்றனர். இவன்தான் சிவப்பு விளக்கு கொள்ளையன் என்று முடிவு செய்கின்றனர். அவ்வாறு போலீசாரால் பிடிபட்ட நபர்தான் கேரில் செஸ்மேன்.
1948ல் அந்த வழக்கு விசாரணை சந்தேகத்திற்குரிய முறையில் நடைபெறுகிறது. செஸ்மேன் துன்புறுத்தப் பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு கட்டாயப் படுத்துகிறார். பின்னாளில் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் மறுத்தாலும், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் தண்டிக்கப் படுகிறார். வழக்கு விசாரணை முடிவடையும் முன்பாக, அந்த விசாரணையை பதிவு செய்து கொண்டிருந்த நீதிமன்றத்தின் சுருக்கெழுத்தர் இறந்து போகிறார். அரசு வழக்கறிஞரின் உறவினர் சுருக்கெழுத்தராக நியமிக்கப் படுகிறார். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். குற்றம் சாட்டப் பட்டவரின் ஒப்புதலைக் கூட பெறாமல், அவர் விசாரணையை பதிவு செய்கிறார். அந்த பதிவின் அடிப்படையில்தான், செஸ்மேனுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களைப் போலவே, செஸ்மேன் மரண தண்டனையை எதிர்நோக்கி 12 ஆண்டுகள் காத்திருக்கிறார். இவரின் மரண தண்டனை 8 முறை, இறுதி நேரத்தில் தடை விதிக்கப் படுகிறது. இவரின் மரண தண்டனைக்கு தடை விதிக்கப் பட்ட போதெல்லாம், நேற்று டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில் அர்னாப் கோஸ்வாமி “எப்படி மரண தண்டனையை நிறுத்தலாம் ?” என்று கேள்வி கேட்டது போலவே, அமெரிக்க மக்கள் கேட்டார்கள். நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 8 முறை இவ்வாறு நிறுத்தியதன் மூலம், உலகப் புகழ் பெற்றார் செஸ்மேன்.
கலிபோர்னியா மாகாணத்தில், மரண தண்டனை விஷ வாயு மூலம் நிறைவேற்றப் படும். மரண தண்டனை விதிக்கப் பட்ட நபர், ஒரு அறைக்குள் அடைக்கப் பட்டு, நாற்காலியோடு சேர்த்துக் கட்டப் படுவார். அந்த அறைக்குள் விஷ வாயு வீசப்படும். அந்த விஷவாயுவை சுவாசித்த நபர் இறந்து போவார். இதுதான் நடைமுறை.
நான்கு முறை, விஷவாயு அறைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பின் செஸ்மேனின் மரண தண்டனை நிறுத்தப் பட்டிருக்கிறது. ஒரு முறை அந்தச் சிறையின் தலைமை வார்டன், உன்னால் உண்மையிலேயே மரண தண்டனையை நிறுத்த முடியும் என்று நம்புகிறாயா என்று கேட்டார். அதற்கு செஸ்மேன் அளித்த பதில் “வெறுப்போடு எனது தொடர்பு முடிந்து விட்டது. நீதிமன்றத்தின் மூலமாக என் உயிர் பல முறை காப்பாற்றப் பட்டு விட்டதால், எனக்கு எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. மரணம் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வாழ்வது எப்படி இயல்பானதோ, அதே போல மரணமும் இயல்பானதாகி விட்டது” என்று கூறினார்.
செஸ்மேனுக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டது. நாளை காலை விஷவாயு அறைக்கு செஸ்மேன் அழைத்துச் செல்ல வேண்டும். கலிபோர்னியா மாகாண கவர்னர் எட்மன்ட் ப்ரவுன் என்பவர் செஸ்மேனின் வழக்கு பற்றிய விபரங்களை முழுமையாக பார்வையிடுகிறார். அவ்வாறு பார்வையிட்டதும், மரண தண்டனையை ஏன் ஒழிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரக் கூடாது என்று அவருக்கு தோன்றுகிறது. சட்டம் இயற்றுவதற்காக ஒரு சிறப்புக் கூட்டத்தொடரை அறிவிக்கிறார். அந்தக் கூட்டத் தொடரில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறலாம் என்றும், அதன் பொருட்டு இரண்டு மாத காலத்துக்கு செஸ்மேனின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடுகிறார்.
அவ்வளவுதான்…. கலிபோர்னியான மாகாணமே கொதித்து எழுந்தது. பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டின. பொதுமக்கள் கூட்டம் போட்டு எட்மன்ட் ப்ரவுனை கண்டனம் செய்தார்கள். இறுதியாக அந்தக் கூட்டத் தொடர் நடந்த பொழுது, 16 மணி நேரம் விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பங்கேற்ற கிறித்துவ பாதிரிமார்கள், மரண தண்டனை என்பது கடவுளின் சித்தம் என்றனர். காவல்துறை அதிகாரிகள் மரண தண்டனையை ரத்து செய்தால், குற்றங்கள் அதிகரிக்கும் என்றனர். ஆனால் எட்மன்ட் ப்ரவுன் அசையவில்லை. இந்த முயற்சியால் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறோம் என்பது தெரிந்தும் இறுதியாக நடந்த வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மரண தண்டனை ஒழிக்க வேண்டும் என்ற சட்ட மசோதா தோல்வி அடைந்தது.
இதன் நடுவே, ஒரு கைதி, அதுவும் மரண தண்டனைக் கைதி இப்படி தண்டனையிலிருந்து தப்பி வருகிறானே என்று பெரும்பாலான மக்கள் நடுவே கோபம் கிளம்பியது. இது அமெரிக்கா முழுக்க பெரும் விவாதமாக கிளம்பியது.
கேரில் செஸ்மேன், தன்னேடு இருக்கும் சக மரண தண்டனைக் கைதிகளைப் பற்றி கூறுகையில், ஒவ்வொருவரும், மரண தண்டனையை ஒவ்வொரு வகையில் அணுகுவர். மரணக் கொட்டடிக்கு அழைத்துச் செல்கையில், ஒருவர் அனைவரையும் திட்டி, மரண ஓலமிடுவார். ஒருவர் வெற்றிக்கான வி சைகையை காண்பித்த படி செல்வார். ஒருவர் பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு பைபிள் வசனங்களை முணுமுணுத்தபடி செல்வார். ஒவ்வொருவரையும் மரணம் ஒவ்வொரு வகையில் பாதிக்கிறது என்றார்.
இறுதி நாட்களில் அவரைச் சந்திக்க சென்ற பத்திரிக்கையாளர் அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது, சிறையில் உங்களுக்கு தொலைக்காட்சி வழங்கப் பட்டுள்ளதா என்று கேட்ட போது… “மரண தண்டனைக் கைதிகளுக்கு மட்டும் இந்த வசதி உள்ளது. ஆனால் அதன் நிகழ்ச்சிகள் உங்களுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். அடுத்த வாரம் முதல் புதிய தொடர் என்று அறிவிப்பு வரும் போது, அதை பார்க்க நான் இருக்க மாட்டேன் என்று தோன்றும். தினசரி செய்திகள் நமக்கு சம்பந்தம் இல்லாதது போலத் தோன்றும். எந்தச் செய்தியைக் கேட்டாலும், அப்போது நான் இருக்க மாட்டேனே என்றுதான் தோன்றும்” என்றார்.
உங்களக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் முழுக்க சிறையை விட்டு வெளியே வரமுடியாத தண்டனை என்ற வாய்ப்பு கொடுத்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்ட போது “வாழ்க்கை தான்.. உயிரோடு இருப்பது தான். என் வாழ்நாளின் இறுதி நாள் வரை எனக்கு வேலை இருக்கிறது. ஒரு சிறந்த எழுத்தாளனாக உருவாகுவேன். என் மனதில் நான்கு நாவல்களுக்கான கரு இருக்கிறது. அவற்றை எழுதி முடிப்பேன்” என்றார்.
அந்தப் பத்திரிக்கையாளர் அவரோடு தொடர்ந்து உரையாடுகிறார். அவர்களுக்குள்ளான நட்பு வளர்கிறது. அப்போது, ஒரு நாள் தன்னால் அடக்க முடியாததால் நேரடியாக அவர் செஸ்மேனைப் பார்த்துக் கேட்கிறார்.
“இப்படி அறிவாளியாக இருக்கும் நபரான நீங்கள் எப்படி, துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்யத் துணிந்தீர்கள் ? “
அதற்கு பதிலளித்த செஸ்மன், “லாஸ் ஏன்ஜெலீஸ் போலீசார் ஒரு நாள் இரவு என்னை பலவந்தமாக சிவப்பு விளக்கு கொள்ளையனால் பாதிக்கப் பட்ட ஒரு பெண் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் நான்காவது மாடியில் இருந்தார். நாங்கள் தரையில் இருந்தோம். அந்தப் பெண்ணை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கச் சொன்ன போலீசார், அந்தப் பெண்ணிடம் அது நான்தானா என்று அடையாளம் காட்டச் சொன்னார்கள். இரண்டு நாட்களாக காவல்துறையின் கட்டுப் பாட்டில் இருந்த நான் குளிக்கவில்லை. ஷேவ் கூட செய்யவில்லை. போலீசார் அடித்த அடியில் எனது மூக்கு உடைந்திருந்தது. இரண்டு போலீசாருக்கு நடுவே நின்றிருந்த என்னை காண்பித்து, அது நான்தானா என்று கேட்டார்கள். அந்தப் பெண் சரியாகக் கூட பார்க்காமல் ஆம் என்றார். அப்படித்தான் நான் சிகப்பு விளக்கு கொள்ளையன் ஆனேன்” என்றார்.
எதற்காக பின்னர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, இரண்டு நாட்களாக தொடர்ந்து துப்பாக்கியின் பின்பக்கத்தால் முகத்தில் அடியும், பூட்ஸ் கால்களால் வயிற்றில் உதையும் வாங்கிக் கொண்டிருந்தால், எதை வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வீர்கள் என்றார்.
மரணக் கொட்டடிக்குச் செல்ல கேரில் செஸ்மேனுக்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில் நியூயார்க்கைச் சேர்ந்த அர்கோஸி என்ற புலனாய்வு மாத இதழ், வில்லியம் வுட்பீல்ட் என்ற தனது தலைச்சிறந்த புலனாய்வு நிருபரை செஸ்மேனைச் சந்திக்க அனுப்புகிறது. அந்த நிருபர், சிறையில் செஸ்மேனைச் சந்தித்து விட்டு வெளியில் வரும் போது, செஸ்மேன் நிச்சயம் தவறு செய்யவில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்.
வந்தவர் தனது பத்திரிக்கை நிர்வாகத்திடம் இத்தகவலைச் சொன்னதும், நிர்வாகம், அவருக்கு உதவியாக மற்றொரு நிருபரை பணிக்கு அமர்த்தி உடனடியாக இந்த விவகாரத்தில் புலனாய்வு மேற்கொள்ளச் சொல்கிறது.
அவர்களின் புலனாய்வில் கிடைத்த விஷயங்கள் மிகுந்த அதிர்ச்சிகரமாக இருந்தன…… செஸ்மேன் காப்பாற்றப் பட்டாரா ? அடுத்த பாகத்துக்காக காத்திருங்கள்.
தொடரும்.