மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில் என்றார் வள்ளுவர்.
பொருள் : குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
அது போன்ற ஒரு கயவனைப் பற்றியதே இக்கட்டுரை. கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் பிறந்த செந்தில் பாலாஜி, 1996ம் ஆண்டில் திமுக கவுன்சிலர். 2000ம் ஆண்டிலேயே அதிமுகவில் இணைந்தார் செந்தில். செந்தில் குமார் என்ற தனது பெயரை, செந்தில் பாலாஜி என்று நியுமராலஜி படி மாற்றிக் கொண்டார்.
யார் காலை பிடித்தால் சுக்கிர திசை என்பதை தொடக்க காலத்திலேயே நன்கு அறிந்து வைத்திருந்த செந்தில் பாலாஜிக்கு, அக்கலை இன்று வரை கைகொடுக்கிறது. அதிமுகவில் சேர்ந்த ஆறாவது மாதம் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர். நான்கு ஆண்டுகளில், மாவட்ட மாணவர் அணி செயலாளர். 2006ல் எம்.எல்.ஏ சீட். அதிமுகவின் அதிகார மையம் மன்னார்குடி மாபியா என்பதை உணர்ந்த செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து ஏறுமுகம் தான். 2006ல் எம்.எல்.ஏ ஆனாலும் திமுக ஆட்சி என்பதால் பெரிய அளவில் வரும்படி இல்லை. 2011ல் மீண்டும் எம்.எல்.ஏ. உடனடியாக அமைச்சர். அதுவும் போக்குவரத்துத் துறை. ஜூலை 2015ல் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி அமைச்சர் பதவியோடு கட்சி பதவியையும் இழந்தார்.
ஜெயா மறைவுக்கு பிறகு சில மாதங்கள் டிடிவி தினகரனை சுற்றி வந்தார். 15 டிசம்பர் 2018ல் திமுகவில் இணைந்தார் இந்த பச்சோந்தி. சேர்ந்த ஒரு சில வாரங்களிலேயே மாவட்டச் செயலாளர் பதவி. இன்று திமுக அமைச்சர்களில் அதிகாரம் பொருந்திய அமைச்சர்.
2010ல் செந்தில் பாலாஜியின் நிதி நிலைமை என்னவென்று பார்ப்போம்.
நமது எம்.ஜி.ஆர் நாளேடு, 13.05.2010 அன்று செந்தில் பாலாஜிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
‘ஏப்ரல் மாதம் பில் தொகையையும் சேர்த்து மொத்தம் 95,150 ரூபாய் நமது எம்.ஜி.ஆருக்கு பாக்கி வைத்திருக்கிறீர்கள். அதனால் பார்சல் நிறுத்தப்பட்டிருக்கிறது. பாக்கி குறித்து தகவல் தெரிவிக்க செல்போனில் தொடர்புகொண்ட போது, ஏனோ பேசுவதைத் தவிர்த்து வருகிறீர்கள். கடிதம் எழுதினால், அதற்கும் பதில் இல்லை. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் பாக்கியைச் செலுத்தாமலும் பதில் தெரிவிக்காமலும் உதாசீனப்படுத்துவது ’நமது எம்.ஜி.ஆர்’ அலுவலகத்தையே அவமதிப்பதாகும்’
இன்று செந்தில் பாலாஜியின் சொத்து மதிப்பு சில ஆயிரம் கோடிகளை தொடும். வசூல் வேட்டை இப்போதும் தொடர்கிறது. அது குறித்து பின்னால் பார்ப்போம்.
இது, செந்தில் பாலாஜி, அதிமுகவில் அமைச்சராக இருந்தது பற்றிய கதை.
செந்தில் பாலாஜிக்கு அன்றும் இன்று வசூலில் உறுதுணையாக இருப்பது இரு கைத்தடிகள். ஒருவர் சண்முகம் என்கிற கம்ப்யூட்டர் சண்முகம். மற்றொருவர் கார்த்திகேயன் என்கிற கார்த்திக். இருவரும் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரை சேர்ந்தவர்கள். இன்றும் வசூல்களை இவர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.
செந்தில் பாலாஜி 2011ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியேற்றதுமே, முதல் அல்லக்கை சண்முகம் தமிழகத்தின் அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகத்துக்கு விசிட் செய்கிறார். நேராக, எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்சனுக்கு (பணியாளர் நியமனம்) சென்று, பணி நியமனம் எப்படி நடைபெறுகிறது, நேர்முகத் தேர்வை யார் நடத்துவார்கள் என்ற விபரங்களை கேட்கிறார். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு ப்ரோக்கரை தயார் செய்கிறார். அதாவது, அந்த அலுவலகத்திலேயே உள்ள ஒரு பணியாளர், சண்முகத்துக்கு வேலை கேட்டு வருபவர்களிடம் ரேட் என்னவென்று சொல்ல வேண்டும். ரேட் படிந்தால், அமவுண்ட்டை வசூல் செய்து, சண்முகத்திடம் கொடுக்க வேண்டும்.
இது போக, காலியிடங்கள், ஓய்வு பெறுவோர் பட்டியல் என அனைத்தையும் வாங்கிச் செல்கிறார்.
2012 ஜனவரி முதல் நியமனங்கள் தொடர்கின்றது. ஓட்டுனர், நடத்துனர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர், மெக்கானிக் என்று பல்வேறு பதவிகள். ஒவ்வொரு காலியிடத்துக்கும், ப்யூன் வேலை உட்பட அனைத்து நியமனங்களும் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்தே செய்யப்பட்டன. ஆரம்பத்தில் நேரில் வந்து கோப்புகளில் கையெழுத்து பெறச் சொல்லிய செந்தில் பாலாஜி, கால தாமதம் ஆகிறதென்பதால், வசூலுக்கு, மின்னஞ்சலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியோர் பட்டியலை அனுப்புகிறார். எல்லாம் 2014 இறுதி வரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.
இதற்குள், செந்தில் பாலாஜிக்கு லஞ்சம் கொடுத்து வேலை பெற்றவர்களில் பலர் ப்ரோக்கர்களாக மாறியிருந்தார்கள்.
அது வரை காலியிடங்களை நிரப்பிக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி பேராசை காரணமாக இல்லாத பணியிடங்களுக்கு நியமனங்களை செய்யத் தொடங்கினார். ஆங்கிலத்தில் Sky is the limit என்று சொல்வார்கள். அது போல வானமே எல்லை என்று இல்லாத பணியிடங்களுக்கும் சேர்த்து வசூலை தொடங்கினார் செந்தில்.
தமிழகம் முழுக்க, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைத்து போக்குவரத்துக் கழக ஊழியர்களும் ப்ரோக்கர்களாக மாறுகிறார்கள். வசூல் பறக்கிறது. வசூல் செய்த ப்ரோக்கர்கள், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கமிஷனாக பார்த்தார்கள். குறைந்த ஊதியம் பெறும் ட்ரைவருக்கும், கண்டக்டருக்கும், மெக்கானிக்குக்கும், 50 ஆயிரம் பெரிய தொகை அல்லவா ? அதுவும் பத்து நியமனங்கள் போட்டால் ….. ?
இந்த சூழலில், செந்தில் பாலாஜி, 700 முதல் 800 கோடி வரை வசூல் செய்து முடித்து விட்டார். நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால் நியமன ஆணைகளில் செந்தில் பாலாஜி கையெழுத்து போட வேண்டியதில்லையே …. ! கையெழுத்து போட வேண்டிய அதிகாரிகள் காலியிடம் இல்லை என்பதை சுட்டிக் காட்டத் தொடங்கினார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் தொகையை லஞ்சமாக கொடுத்து, நியமனத்தை தொடங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது.
இதற்குள், பணத்தை கொடுத்த பலருக்கு நியமன உத்தரவுகள் வரத் தொடங்கின.
பலருக்கு வராமலும் இருக்குமல்லவா ? வராதவர்கள் பணம் வாங்கிக் கொடுத்த ப்ரோக்கர்களை மிரட்டுகிறார்கள். கூட்டமாக வீட்டுக்குப் போய் சத்தம் போடுகிறார்கள். இதில் அதிக எண்ணிக்கையில் செந்தில் பாலாஜிக்காக வசூலில் ஈடுபட்டவர் பெயர் பாஸ்க்கர். இவர் ஏன் அதிக வசூலில் ஈடுபட்டார் என்றால், இவர்தான் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்சனின் உதவியாளர். அமைச்சருக்கு ரொம்ப நெருக்கம். அதனால வசூல் பண்ணி குவித்து விட்டார். இவர் மட்டும், 20 கோடிகள் கொடுத்துள்ளார். அனைவரும் இவரை நெருக்கித் தள்ள இவர் செந்திலின் அல்லக்கை சண்முகத்தை நெருக்குகிறார். இதற்குள் நியமன ஆணைகள் வழங்க செந்தில் பாலாஜி எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
பணம் கொடுத்தவர்கள், அப்போதைய சென்னை மாநகர ஜார்ஜிடம் மார்ச் 2015ல் புகார் அளிக்கிறார்கள். ஜார்ஜ்தான் தோட்டத்துக்கே மாமூல் கொடுத்த ஒரே கமிஷனராயிற்றே. புகாரில் என்ன “உண்மை” என்பதை விசாரிக்க சொல்கிறார்.
இப்போது செந்தில் பாலாஜியின் சுக்கிர திசை முடிவுக்கு வருகிறது. ஜூலை 2015ல், ஜெயலலிதா செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் நீக்குகிறார்.
சிக்கல் முற்றுகிறது.
இப்போ காவல்துறை வேகமாக வேலை செய்ய வேண்டும் அல்லவா ?
இதற்குள் ஒரு கிளைக்கதையை சொல்லி விடுகிறேன். ஜார்ஜ் புகாரை விசாரிக்க உத்தரவிட்டதும், காவல் துறை, அதிக வசூலில் ஈடுபட்ட பாஸ்க்கரை தூக்குகிறது. பாஸ்க்கர் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறார்.
காவல்துறை வெகுண்டெழுந்தது.
வெயிட்.
வசூல் பண்ண அருமையான ஐயிட்டம் சிக்கிருக்கே என்று ஆய்வாளர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர் தேன் தமிழ் செல்வன் என்று செந்தில் பாலாஜியிடம் வசூலை குவிக்கிறார்கள். அதிலும், தேன் தமிழ் செல்வன் ரொம்ப கப்பி. இந்த ட்ரைவர் கண்டக்டர் ஆளுங்க கிட்ட ஏசி வாங்கிக் குடுக்க சொல்லி மூணு பேருக்கிட்ட 75 ஆயிரம் வாங்கிருக்கான்.
இதற்குள், இந்த பாஸ்க்கரும், காவல் துறை அதிகாரிகளும் நண்பர்களாகி விடுகிறார்கள். அடிக்கடி நண்பர்கள் போல உரையாடுவது. சென்னையில் தங்காதே என்று பாஸ்க்கரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இவர்கள் செலவிலேயே அனுப்பி ஊர் சுற்ற வைத்துள்ளார்கள்.
ஜூலையில் செந்தில் பாலாஜி சீட் கிழிந்தது அல்லவா ?
29 அக்டோபர் 2015 அன்று தேவசகாயம் என்பவர் அளித்த புகாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது.
அப்போது பாஸ்க்கர், காவல் துறையினர் செலவில் திருச்செந்தூரில் முருகன் அருள் பெற்றுக் கொண்டு இருக்கிறார். வழக்கம் போலவே செல்லமாக, “பாஸ்க்கர் கொஞ்சம் சென்னை வந்துட்டுப் போறீங்களா” என்று சொன்னதும் பாஸ்க்கர் ஆர்வமாக சென்னை வருகிறார்.
பாஸ்க்கரை, பழைய ஆணையர் அலுவலக அறைக்கு அழைத்து செல்கிறார்கள். உள்ளே, துணை ஆணையர் ஜெயக்குமார் உட்பட பெரிய காவல் அதிகாரிகள் கூட்டம் அனைவரும் சேர்ந்து கைதட்டி, ரொம்ப நாள் தேடிய கைதியை பிடித்தது போல கைதட்டுகிறார்கள். (இந்த பொழப்புக்கு).
அங்கே பார்த்தால், பாஸ்க்கர் போலவே கேசவன், பழனி, ஶ்ரீதர், மனோகர், செல்வராஜ், மணிவண்ணன் ஆகிய போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார்கள். இவர்கள் ஆறு மாதம் சிறையிலிருக்கிறார்கள்.
ஆறு மாதம் கழித்து இவர்கள் ஜாமீனில் வெளியே வருகிறார்கள். ஒரு அரசு ஊழியர் சிறை சென்றால் பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இவர்களில் ஒருவர் கூட பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு ஊழல் மேலாண் இயக்குநர் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்களுக்கு வேலை போட்டுத் தருகிறார். அனைவரும் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் திமுகவை சேர்ந்த கோபி என்பவர், மாநகர காவல் துறையை அணுகி, செந்தில் பாலாஜியிடமே நேரடியாக, செந்தில் தம்பி அசோக் குமார் முன்னிலையில் 2 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக 7 மார்ச் 2016 அன்று அளிக்கிறார்.
வழக்கு பதிவு செய்யச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். உயர்நீதிமன்றம், தனது 20 ஜூன் 2016 நாளிட்ட உத்தரவில், 2 கோடி ரூபாயை சாதாரண கண்டக்டர் லஞ்சமாக வாங்க வாய்ப்பில்லை என்று கூறி, சின்ன மீன்களை பிடிப்பதை விட பெரிய மீன்கள் மீது கவனம் செலுத்தவும் என்று உத்தரவிடுகிறது.
16 ஜூன் 2017 அன்று வழக்கில் காவல் துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. இது வரை, செந்தில் பாலாஜிக்காக பணத்தை கோடிக் கணக்கில் வாங்கிக் குவித்த அல்லக்கைகள் கார்த்திகேயனையோ, சண்முகத்தையோ காவல் துறை விசாரிக்கவேயில்லை. யார் மீது குற்றச்சாட்டு தெரியுமா ? ப்ரோக்கர்களாக கைது செய்யப்பட்டார்களே…. அவர்கள் மீது மட்டும்.
சென்னை உயர்நீமன்றம் பெரிய மீன்கள் மீது கவனம் செலுத்துங்கள் என்று சொல்லிய பிறகும், இத்தகைய குற்றப்பத்திரிக்கை என்றால், செந்தில் பாலாஜியின் செல்வாக்கை புரிந்து கொள்ளுங்கள்.
இதற்கு பின்னர், இவ்வழக்கில் பணத்தை பறிகொடுத்த அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுகிறார். உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையை ஒதுக்கு வைத்து விட்டு, மேல் விசாரணை நடத்த உத்தரவிடுகிறது.
இந்த இடத்தில்தான் செந்தில் பாலாஜியின் சுக்கிர திசை, சனி திசையாக மாறுகிறது.
உளவுத்துறையோடு சேர்த்து கூடுதல் பொறுப்பாக, மாநகர குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பும் சேர்ந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரிக்கு வழங்கப்படுகிறது.
புலனாய்வில் தேர்ந்த அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறார். உத்தரவுகளை பிறப்பிக்கிறார். விசாரணை அனல் பறக்கிறது. போக்குவரத்து துறையின் பல மூத்த அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழகமெங்கும் சோதனைகள் நடக்கின்றன. செந்தில் பாலாஜியும் அவர் தம்பி அசோக்கும் முன் ஜாமீன் பெறுகிறார்கள்.
சோதனைகளில் ஆதாரங்கள் குவிகின்றன. 80 மதிப்பெண் பெற்ற ஒருவரை 8 மதிப்பெண் என மாற்றியது போல நூற்றுக்கணக்கில் முறைகேடுகள் நடந்தது தெரிய வருகிறது. நியமனம் செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை செந்தில் பாலாஜி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட ஹார்ட் டிஸ்குகள் சிக்குகின்றன.
வழக்கு விசாரணையை நடத்திய அதிகாரிகளுக்கு தலை சுற்றுகிறது.
வழக்கை நான்காக பிரிக்க முடிவெடுக்கிறார்கள். பதவி வாரியாக. முதலில் இளநிலை பொறியாளர் பதவி என்று பிரித்து விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறார்கள். இதற்குள் ஈஸ்வரமூர்த்தி மாற்றப்பட்டு, பிசி.தேன்மொழி என்கிற ஐஜி வருகிறார்.
47 குற்றவாளிகள். முதல் குற்றவாளி செந்தில் பாலாஜி. இரண்டாம் குற்றவாளி முதல் அல்லக்கை சண்முகம். மூன்றாம் குற்றவாளி, இரண்டாம் அல்லக்கை கார்த்திகேயன்
அடுத்த பதவியாக உதவிப் பொறியாளர் புலனாய்வை முடிக்கிறார்கள். இதற்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகிறன. ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. அனைத்து அதிகாரிகளின் தலையில் இடியாக, செந்தில் பாலாஜியை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு அமைச்சராக அறிவிக்கிறார் ஸ்டாலின். (நல்லா ஊழலை ஒழிச்சாங்க.)
புலனாய்வு அதிகாரிகள் ஒவ்வொருவராக மாற்றப்படுகிறார்கள். மாநகர ஆணையராக சங்கர் ஜிவால் வருகிறார். பழைய அதிகாரிகள் அனைவரும் மாற்றப்பட்டாலும், தேன்மொழி அதே பதவியில் தொடர்கிறார். தேன்மொழி தலைகீழாக மாறுகிறார். மேசையில் “நமது அம்மாவை” எடுத்து விட்டு, “முரசொலியை” வைக்கிறார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ வேட்பாளர் ஜின்னா அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராகிறார்.
இவ்வழக்கின் சாட்சிகள் ஒவ்வொருவராக நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். நான் கொடுத்த பணம் திரும்ப வந்து விட்டது. வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறென் என்று.
செந்தில் பாலாஜி மீது இரண்டாவதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் வழக்கில் இளநிலை பொறியாளர் பகுதி மட்டுமே முடிந்துள்ளது. இரண்டாவது வழக்கிலும், முதல் வழக்கோடு இணைத்து புலனாய்வை தொடர வேண்டும்.
ஆனால், மாண்புமிகு நீதியரசர் திரு நிர்மல் குமாரிடம் இரண்டாவது வழக்கு வந்தபோது, வீடியோவில், வழக்கின் சாட்சிகள் ஒவ்வொருவராக வந்து, “அய்யா, எனக்கு பணம் கிடைச்சிருச்சுய்யா. வழக்கை வாபஸ் வாங்கிக்கறேங்கய்யா” என்று, முதல் மரியாதை திரைப்படத்தில் “அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” என்று கூவியதை போல கூவ, அதை பார்த்து பரவசமடைந்த நீதியரசர் அய்யா நிர்மல் குமார், “இதுக்கு மேல எதுக்கு இந்த வழக்கு” என்று வழக்கை ரத்து செய்து விட்டார்.
நீதியரசர் நிர்மல் குமார் அய்யா முன்பாக எனக்கு பணம் வந்து விட்டது என்று சொல்லியதன் உண்மைத் தன்மை என்ன தெரியுமா ? ஒவ்வொருவரும் இரண்டு முதல் நான்கு லட்சம் வரை கொடுத்துள்ளார்கள். ஒரு லட்சம் மட்டும் முன்பணமாக வாங்கிக் கொண்டுதான் சாட்சியம் அளித்தார்கள். கடந்த வாரம், பாரிமுனையின் ஒரு இருண்ட கட்டிடத்தில் அவர்களுக்கு மீதம் உள்ள பணம் தரப்போவதாக வரச்சொல்லி தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தகவல் தெரிந்ததும், நான் அங்கு சென்று, அவர்களை வீடியோ படம் எடுத்தேன். உண்மையில் சொல்கிறேன் தோழர்களே, எனக்கு அழுகையும் ஆற்றாமையும் வந்தது.
அந்த வீடியோ.
ஒரு குற்றவாளி அமைச்சரானதும், அவ்வழக்கின் சாட்சிகள் பல்டியடிக்கிறார்களே… இது வினோதமாக இருக்கிறதே என்பது பாமரனுக்கும் கூட தோன்றும்.
சரி. அமைச்சர் பணம் கொடுத்ததாக சொல்கிறார்களே. இவர்கள் மிரட்டப்பட்டிருப்பார்களா ? முழுப்பணமும் பெற்று விட்டார்களா ? வங்கிக் கணக்கை காட்டுங்கள் என்றாவது கேட்டிருக்க வேண்டாமா ? ஆனால் நீதியரசர் எதையும் கேட்காமல் வழக்கை ரத்து செய்தார்.
47 பேர் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் செந்தில் பாலாஜி.
கீழமை நீதிபதி செந்தில் பாலாஜி ஆஜராகியே தீர வேண்டும் என்று கடுமையான உத்தரவு போட, நீதி நாயகர் நிர்மல் குமார் அய்யாவோ ஆஜராக விலக்கு அளித்துக் கொண்டுள்ளார்.
இதன் நடுவே, செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்த திமுக பிரமுகர் கோபி, செந்தில் பாலாஜி ஊர் போற்றும் உத்தமர் என்று சான்றிதழ் அளித்து வழக்கை வாபஸ் வாங்க உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
முதலில் கைது செய்யப்பட்ட எட்டு பேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு, பணம் வாங்கியவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பணம் கொடுத்து ஏமாந்தோரின் பட்டியலின் ஒரு சேம்பிள்
செந்தில் பாலாஜிக்கும் அவர் தம்பிக்கும் திடீர் தலைவராகியுள்ள கலைஞர் எழுதிய உரையோடு கூடிய குறளை படியுங்கள்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே…
இது உங்களுக்கு.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.
Super sir .
துப்பரியும் பத்திரிக்கையெல்லாம் உங்களிடம் தோற்று பொனது ஆதாரத்துடன் தகவல்கள் அபாரம் தோழர்
தினகரன், சசிகலா ஊழல் பற்றியும், செபா வின் ஊழல்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லையா??
அதையும் எழுதுங்கள், சவுக்கு அவர்களே
உங்கள் பயணம் தொடரட்டும்
Nice article. People like you do a great job to society by writing about such criminal elements fearlessly. I would like to meet you in person to share my appreciation. Kindly give me an appointment for a quick meeting
Please mail me to jayajayakanthan@gmail.com
21000 கோடி ருபாய் Heroin போதை பொருள் கைது பற்றி எழுதுங்கள் …
ஸ்டாலினுக்கு ஏன் ஓட்டு போட்டேன் என்று வெறுப்பாக உள்ளது.
தங்களுடைய பதிவுக்கு நன்றி சகோ.
உன்மையில் சவுக்கு அண்ணன் அவர்களின் தொடர் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊
தங்களுடன் பனியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்…காலம் பதில் கூறட்டும்…
திரு சவுக்கு சங்கர் அவர்களே, உங்களைப் போன்றோர் இந்த நாட்டிற்கு தேவை நீங்கள் மிகப்பெரிய சொத்து இந்த நாட்டிற்கு ஒருவர் எப்படிப்பட்டவர் என்ற உண்மையை தெரிவிக்கும் ஒரே மீடியா அது நமது சவுக்கு online.com உங்களின் மகத்தான சேவை தொடரட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்