தமிழக காவல்துறையில் உள்குத்து உச்ச கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த உள்குத்து, லத்திக்கா சரணை டிஜிபியாக நியமித்ததில் இருந்தே தொடங்கி விட்டாலும், தற்போது, மிக அதிகமாகி, காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி சண்டை அளவுக்கு வளர்ந்திருப்பதாக தெரிகிறது.
இந்த கோஷ்டி சண்டையில், வழக்கம் போலவே, நமது ஜாபர் சேட்தான் முன்னணியில் இருக்கிறார். தனக்கு ஆதரவாக அதிகாரிகளை தன் பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.
எப்படியாவது, கூடுதல் டிஜிபி பதவி வாங்கி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஜாபர் சேட்டுக்கு, ஜுனியர் விகடன் பத்திரிக்கையிலேல்லாம், தான் கூடுதல் டிஜிபி ஆகப் போகிறோம் என்று எழுத வைத்தும், பதவி உயர்வு கிடைக்காததால், இருக்கும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பகீரத முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த பின்னணியில் தான், கடந்த வாரம், நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழகத்தின் விஜிலேன்ஸ் அதிகாரியாக உள்ள ஜார்ஜ் உடனான சந்திப்பு நடந்திருக்கிறது.
ஜார்ஜ் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரின் இணை ஆணையராக இருந்து கொடி கட்டிப் பறந்தவர். அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனை தனது ஸ்ட்ரைக்கிங் போர்சை வைத்து, அடித்து தூக்கிப் போட்டவர். இவ்வாறு தூக்கிப் போட்டதாலேயே, அறுவை சிசிச்சை செய்து மாறனுக்கு இதயத்தில் பொறுத்தியிருந்த பேஸ் மேக்கர் கருவி, செயலிழந்து, அதனாலேயே மாறனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக ஒரு பேச்சு உண்டு.
அதிமுக ஆட்சியில் நெருக்கமாக பல்வேறு பதவிகளை அனுபவித்து வந்திருந்த பல்வேறு அதிகாரிகள் திமுகவோடும், கருணாநிதி குடும்பத்தோடும் சமரசம் செய்து கொண்டு நல்ல பதவிகளை அனுபவித்து வந்தாலும், ஜார்ஜ் மட்டும் சென்னை வரவே முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், கேடி சகோதரர்கள் தான். யார் வந்தாலுமபரவாயில்லை, ஜார்ஜ் மட்டும் சென்னைக்கு நல்ல பதவிக்கு வரக் கூடாது என்பதில் கேடி சகோதரர்கள் பிடிவாதமாக இருந்தனர்.
இந்நிலையில், ஜார்ஜுக்கு கூடுதல் டிஜிபி பதவி உயர்வு வரவேண்டியிருந்தது. எங்கே பதவி உயர்வு வராமல் தள்ளிப் போய் விடுமோ என்று அஞ்சிய ஜார்ஜ், சிஐடி காலனியில் உள்ள டேனியல் என்பவரை அணுகுகிறார். டேனியல், பதவி உயர்வும், சென்னையில் பதவியும் வாங்கித் தருவதாக வாக்களித்து, ஐம்பது லட்சத்தை அன்பளிப்பாக பெற்றுக் கொள்கிறார்.
ஐம்பது லட்சத்தை பெற்றுக் கொண்ட டேனியல், பதவி உயர்வு மட்டும் வழங்கி விட்டு, சென்னையில் பதவி வாங்கித் தரவில்லை. ஜார்ஜ், நாகர்கோவிலில், ஒரு பழைய வில்லீஸ் ஜீப்பில் பவனி வந்து கொண்டிருந்தார். டேனியலிடம் இது பற்றிக் கேட்ட போது, டேனியல், உங்கள் மீது இருந்த குற்றச் சாட்டுகளையெல்லாம் ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு அளித்ததற்கு ஐம்பது லட்சம் சரியாகப் போய் விட்டது, சென்னைக்கு மாறுதல் வேண்டுமென்றால், மேலும் ஒரு ஐம்பது லட்சம் தர வேண்டும் என்று கூறுகிறார்.
அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ், என்ன செய்வது என்று புரியாமல், அமைதியாக இருக்கிறார். இந்த நிலையில்தான், ஜாபர் சேட்டுக்கும், அர்ச்சனா ராமசுந்தரத்துக்கும் மோதல் உருவாகிறது. அர்ச்சனாவை எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த சேட், ஜார்ஜுக்கு தூது விடுகிறார். ஜார்ஜிடம், சென்னைக்கு வருமாறு அழைத்து, கனி மொழியை சந்திக்கச் சொல்கிறார். ஜார்ஜும் கனிமொழியை சந்தித்து சென்னைக்கு வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.
கனிமொழி, டாடிகிட்ட பேசி ஏற்பாடு பண்றேன் என்று ஜார்ஜுக்கு உத்தரவாதம் அளிக்கிறார். குஷியான ஜார்ஜ், ஜாபர் சேட்டை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். இரண்டு பேரும், ஆளுக்கு இரண்டு லார்ஜ் போட்டவுடன், ஜாபர் சேட் குஷியாகி, “கன்சிடர் இட் அஸ் டன்“ என்று உத்தரவாதம் அளிக்கிறார்.
வரும் வாரங்களில், சிபிசிஐடியின் கூடுதல் இயக்குநராக உள்ள அர்ச்சனா ராமசுந்தரம் மாற்றப் பட்டு ஏதாவது ஒரு டம்மி போஸ்டுக்கும், ஜார்ஜ் சிபிசிஐடியின் கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜார்ஜ் ஐஐடி பட்டதாரி. அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற மாஸசூசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில், சுற்றுச் சூழல் பொறியியல் பயின்றவர். எவ்வளவு படித்தும் அறிவு மட்டும் இல்லை. இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தவர், இன்னும் ஆறு மாதம் காத்திருக்கக் கூடாதா ? இத்தனை நாட்கள் கழித்து ஒரு முழுகும் கப்பலிலா ஏற வேண்டும் ? ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஜார்ஜ் சென்னை மாநகர ஆணையாளராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றனவே ? ஜாபர் சேட் பேச்சைக் கேட்டு அழிந்தவர்கள் பட்டியலில், சுனில் குமாருக்கு அடுத்தபடி ஜார்ஜை சேர்க்க வேண்டும்.
நம்ம சுனில் குமார் எப்படி இருக்கிறார் தெரியுமா ? கடந்த வாரம், அர்ச்சனாவின் கணவர் ராமசுந்தரம் மீது ரகசிய விசாரணை நடத்தி, சுனில் மாட்டிக் கொண்ட விஷயத்தையும், இது தொடர்பாக போட்டுக் கொடுத்து விட்டார் என்று சந்தேகப் பட்டு, நகரம் 1 பிரிவில் இருந்த எம்.பி.நடராஜன் என்ற டிஎஸ்பியை நகரம் 3 பிரிவுக்கு மாற்றியதையும் சவுக்கு பதிவு செய்திருந்தது. எம்.பி.நடராஜனும் நகரம் 3 பிரிவில் பதவி ஏற்றுக் கொண்டார். சவுக்கில் இந்த விபரங்கள் விரிவாக பதிவு செய்யப் பட்டிருந்ததை அடுத்து, நடராஜன் சுனில் குமாரை சந்தித்து, எதற்காக என்னை மாற்றினீர்கள், நீங்கள் சொன்னதைத் தானே செய்தேன், அதற்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா என்று கேட்கிறார். இதையடுத்து, எங்கே நடராஜன் தான் ராமசுந்தரத்தை பற்றி விசாரிக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்த விவகாரத்தை வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயந்த சுனில், மாற்றல் ஆணையை ரத்து செய்து, நடராஜனை மீண்டும் நகரம் 1 பிரிவுக்கே நியமிக்கிறார். மாற்றல் ஆணையை ரத்து செய்தால், ஒரு மாதிரியாக இருக்கும் அல்லவா. அதனால் மீண்டும் வழங்கப் பட்ட மாறுதல் ஆணையில் In partial modification of the orders issued in the reference cited என்று போட்டு, நகரம் 1 பிரிவில் இருந்த மற்றொரு டிஎஸ்பியான திருநாவுக்கரசை நகரம் 3 பிரிவுக்கு மாற்றல் செய்து உத்தரவிட்டுள்ளார். திருநாவுக்கரசு இருந்த இடத்தில் கன்னியாக்குமரியில் இருந்து கண்ணன் என்ற ஒரு டிஎஸ்பி நியமிக்கப் பட்டிருக்கிறார்.
இதற்கிடையே, ஏ.கே.விஸ்வநாதன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த முகம்மது இக்பால் என்ற டிஎஸ்பியும் மாற்றம் செய்யப் பட்டு, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் ஏ.கே.விஸ்வநாதன் மீது சொத்துக் குவிப்பு வழக்கை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை கொடுத்ததாகவும், அவரது அறிக்கையை படித்துப் பார்த்த சுனில் குமார், ஜாபர் சேட்டின் உத்தரவுப் படி, ஏ. கே.விஸ்வநாதன் மீது எப்ஐஆர் போட்டால் தான் தகவல்கள் கிடைக்கும் என்று அறிக்கையை மாற்றி, அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் நடுவே, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் வழக்குகளை மேற்பார்வை செய்து வந்த சொர்ணா என்ற கூடுதல் மேலாளர் மீது, சவுக்குக்கு அவர்தான் தகவல் சொல்கிறார் என்று சந்தேகப் பட்டு, அவரிடமிருந்து அந்த சப்ஜெக்ட் பறிக்கப் பட்டு ஜெயஸ்ரீ என்ற மேலாளர் வசம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் திருடன் கையிலேயே சாவியைக் கொடுப்பது. இந்த ஜெயஸ்ரீ, தினமும், சிபிஐ இணை இயக்குநர் அசோக் குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தகவல்களை சொல்லுவதாகவும் தெரிகிறது. இந்த விபரங்கலெல்லாம் தெரியாத லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலா நாத், இந்த ஜெயஸ்ரீயை நம்பிக் கொண்டு ஏமாந்து வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் நடுவே, சுனில் குமார், லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றலில் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் தெரிகிறது. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார் என்று அனுப்பப் பட்ட புகாரின் மீது இது வரை நடவடிக்கை இல்லாததால், சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் ஜாபர் சேட்டின் மகள் ஜெனிபர், துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். அவருக்கு சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. (ஜாபர் சார், பரிசு கொடுக்கும் விழாவுக்கு, கிளம்பிட்டு, கடைசி நேரத்துல ஏன் கேன்சல் பண்ணீங்க. சவுக்கு உங்களுக்காக கோயம்பத்தூர்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துச்சு தெரியுமா ?)
காவல்துறையின் இந்த உள்குத்து, மிக மோசமான போக்குக்கு இட்டுச் செல்லும் என்று காவல்துறையில் விபரமறிந்த அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.