இந்தச் சம்பவத்தில் விசாரணையின் தொடக்கத்தில் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களை கண்டுபிடித்தனர். அந்த வாக்குமூலங்கள், நீதிமன்ற விசாரணையின் போது சொன்னதற்கு மாறானதாக இருந்தது. தாமஸ் பார்ட்டில் என்ற சாட்சி, துப்பாக்கியைக் காட்டி பணத்தை பறித்த நபருக்கு, பற்கள் கோணல் மாணலாக இருக்கும் என்று கூறியிருந்தார். அவரின் சாட்சியை புறந்தள்ள முடியாததற்கு காரணம், அவர் ஒரு பல் மருத்துவர். ஆனால், செஸ்மேனின் பற்கள், வரிசையாக அழகாக இருந்தன. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படாத, ஆரம்பக் கட்ட விசாரணையின் போது பதிவு செய்யப் பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆராய்ந்த போது சிவப்பு விளக்கு கொள்ளையனின் காரைப் பற்றிக் கூறியதற்கும், செஸ்மேனிடம் இருந்து கைப்பற்றப் பட்ட காருக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இரண்டு சாட்சிகள் வர்ணித்த கார்கள் வேறு வேறாக இருந்தன. ஆனால் போலீசார், வசதியாக இந்த விபரங்களை மறைத்து விட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த, பாலியல் வன்முறைக்கு உள்ளான மேரி அலைஸ் மேஸா என்ற பெண்ணின் சாட்சியே, செஸ்மேனின் தண்டனைக்கு காரணமாக அமைந்தது. அந்தப் பெண், காரின் டேஷ்போர்டில் இருந்த ஸ்பீடா மீட்டர் வட்ட வடிவத்தில் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள், செஸ்மேன் தனது காரில் இருந்த ஸ்பீடா மீட்டரை பழுது பார்க்க கொடுத்திருந்தார். பழுது பார்க்க கொடுத்திருந்த மெக்கானிக்கிடமிருந்து, அதற்கான ரசீதை கைப்பற்றினர்.
மேலும் காவல்துறை முன்பு சில சாட்சிகளின் வாக்குமூலத்தின் படி, அவர்களிடம் கொள்ளையடித்தது இரண்டு நபர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் போலீசார், இரண்டு நபர்கள் என்று குறிப்பிட்டால் மற்றொரு நபர் யாரென்ற கேள்வி வரும் என்பதற்காக, அந்த வாக்குமூலங்களை மறைத்து விட்டனர்.
இவ்வளவு ஆதாரங்களையும் திரட்டினாலும், சிவப்பு விளக்கு கொள்ளையன் யார் என்பதை நிரூபிக்க வேண்டுமே… அவர்கள் மேலும் விசாரணையைத் தொடர்ந்த போது, செஸ்மேன் முதன் முதலாக போலீசார் முன்பு கொடுத்த வாக்குமூலத்தை கண்டுபிடித்தனர். அந்த வாக்குமூலத்தில், டெர்ரநோவா என்ற நபர் தான் சிவப்பு விளக்கு கொள்ளையனாக இருக்கக் கூடும் என்று செஸ்மேன் குறிப்பிட்டிருந்தார். அந்த டெர்ரநோவா யார் என்று கண்டுபிடிக்க முனைந்த போதுதான், காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்ட அந்த டெர்ர நோவா 15 வழக்குகளில் தண்டிக்கப் பட்டவர் என்பதும் 1955ல் சிறையில் இருந்து வெளியேறி, அதன் பிறகு காணாமல் போய் விட்டார் என்பதும் தெரிய வந்தது.
ஆனால், அந்த டெர்ரநோவாவின் புகைப்படத்தை அந்த இரு பத்திரிக்கையாளர்களும் கண்டு பிடித்தனர். அந்தப் புகைப்படத்தில் டெர்ரநோவாவின் இடது புருவத்தின் மீது ஒரு தழும்பு இருந்தது தெரிய வந்தது. இந்தத் தழும்பை செஸ்மேனின் வழக்கில் உள்ள பல்வேறு சாட்சிகள் குறிப்பிட்டிருந்தனர்.
தாங்கள் சேகரித்த அத்தனை ஆதாரங்களையும் பரிசீலித்துப் பார்க்கையில், செஸ்மேனை காப்பாற்ற வேண்டுமென்றால், இந்த விபரங்களை பத்திரிக்கையில் போடுவதை விட, நேராக கவர்னர் அலுவலகத்தில் இதை சமர்ப்பிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். அந்த ஆதாரங்களோடு கவர்னர் அலுவலகம் சென்றால், கவர்னரின் செயலாளர் செசில் பூல் என்பவர் அவர்களிடம் அந்த ஆதாரங்களை கேட்கிறார். செசில் பூல் என்பவருக்கு, செஸ்மேனை உடனடியாக மரணக் கொட்டடிக்கு அனுப்ப வேண்டும் என்பது விருப்பம். ஆனாலும் இந்த இரண்டு பத்திரிக்கையாளர்களின் ஆதாரங்களை பரிசீலிக்கிறார். பரிசீலித்த விட்டு ஒரு வாரம் கழித்து தகவல் சொல்கிறேன் என்று அந்த இரண்டு பத்திரிக்கையாளர்களிடமும் தகவல் சொல்கிறார்.
இதற்கு மறுநாள், செஸ்மேனின் நண்பரான அந்த பத்திரிக்கையாளர், ஆர்கோஸி பத்திரிக்கையாளர் கண்டுபிடித்த விபரங்களை சொல்கிறார். காவல்துறையினர் உங்களை முதன் முதலாக விசாரித்த போது நீங்கள் சொன்னீர்களே… டெர்ரநோவா என்ற நபர். அவர்தான் சிவப்பு விளக்கு கொள்ளையனா என்று கேட்கும் போது, நிச்சயம் இல்லை என்று பதிலளித்தார் செஸ்மேன். உடனே அவரது நண்பர் ஏன் இந்த சந்தேகம் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்…. உங்கள் வாழ்க்கை ஊசலாட்டத்தில் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியவில்லையா ? நீண்ட நாள் தாமதம் என்பதால் அவர் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நீங்கள் தப்பிக்க முடியாது என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை என்று கேட்ட போது, அன்றைய சந்திப்பு நேரம் முடிந்து விட்டதால், செஸ்மேன், நாளை சந்திக்கலாம் என்று கூறுகிறார்.
மறுநாள் அந்த நண்பர் செஸ்மேனை சந்தித்த போது, “12 ஆண்டுகளுக்கு முன்பு நான் தண்டிக்கப் பட்ட நான் சிவப்பு விளக்கு கொள்ளையன் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உணரும் வரைக்கும், நானே சிவப்பு விளக்கு கொள்ளையனாக இருந்து விட்டுப் போகிறேன். நான் நிரபராதி என்றால் உண்மையான சிவப்பு விளக்கு கொள்ளையனைக் கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு, என்னுடையது அல்ல” என்று கூறுகிறார் செஸ்மேன்.
“நண்பரே, உங்களுக்கு இன்னும் வாழ்வதற்கு நீண்ட காலம் இருப்பது போல பேசுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று அந்தப் பத்திரிக்கையாளர் கூறுகிறார்.
“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளுங்கள். நான் ஒரு இருண்ட காட்டிலிருந்து வெளியே வந்து விட்டேன். சிவப்பு விளக்கு கொள்ளையன் செய்த குற்றங்களுக்கெல்லாம் என் பொறுப்பாக்கிய போது நான் அடைந்த மனவேதனை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. எனக்கு வாழவே பிடிக்கவில்லை. எவ்வளவு மோசமான சூழலில் நான் இருந்தேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்போது நான் யாரென்று கண்டுகொண்டேன். எனக்க என்னுடைய எழுத்துப் பணி இருக்கிறது. உங்களைப் போல, பல்வேறு நண்பர்களை சிறைக்கு அழைத்து சந்திக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறேன். டெர்ரநோவாதான் சிவப்பு விளக்கு கொள்ளையனா இல்லையா என்பது இப்போது எதையும் மாற்றப் போவது கிடையாது. அவர் உயிரோடு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
ஒரு வேளை உயிரோடு இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் வழக்கு விசாரணை நடந்தால் இந்தச் சாட்சிகள் டெர்ரநோவாவை அடையாளம் காட்டுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஒரே ஒரு நாள் இரவில் டெர்ரநோவாவை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அவற்றைத் தவிர வேறு சாட்சிகளை நான் கொண்டு வர வேண்டும் என்றால் பல பேரைக் காட்டிக் கொடுக்க வேண்டி வரும். நான் டெர்ரநோவாவோடு சேர்ந்து சில குற்றங்களைச் செய்திருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு நான் பல சம்பவங்களை, நேரம் மற்றும் நாட்களோடு குறிப்பிட வேண்டும். என்னுடைய பல நண்பர்களை நான் சாட்சியாக அழைக்க வேண்டும். சில நண்பர்கள் எனக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்கள். ஒருவர் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். நான் சாட்சிக்கு அவர்களை அழைத்தால், அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விபரங்களை வெளியிட வேண்டும். என் ஒருவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக இத்தனை பேரை சிக்கலில் இழுத்து விட்டு அப்படி நான் உயிரோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காலம் முழுக்க துரோகி என்றும் காட்டிக் கொடுத்தவன் என்ற பட்டத்தை நான் சுமந்து கொண்டு வாழ வேண்டும். என்னுடைய எழுத்துப் பணி காரணமாக நான் பெற்றிருக்கும் நற்பெயர் அனைத்தும் ஒரே நாளில் போய் விடும். அதற்கு பதிலாக நான் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன். இதுவே உங்கள் கேள்விக்கு பதில்” என்று கூறினார் செஸ்மேன்.
பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி ஆர்கோஸி பத்திரிக்கையின் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கவர்னரிடம் கொடுத்ததோடு, பெரும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர். பத்திரிக்கைகளில் விரிவாக செய்திகள் வந்தாலும், கவர்னர் அந்த மரண தண்டனையை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ மறுத்தார்.
இந்தத் தகவலை, செஸ்மேனின் பத்திரிக்கையாள நண்பர் டொமினிக் சிறையில் தெரிவித்ததும் கூட, எந்த விதமான பெரும் சலனமும் செஸ்மேனிடம் ஏற்படவில்லை. மரண தண்டனை குற்றங்களை ஒழிக்கும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார் டொமினிக்.
செஸ்மேன், “ஆட்களை கடத்திப் பணம் பறிக்கையிலும், துப்பாக்கியைக் காட்டி, சகட்டு மேனிக்கு வழிப்பறி செய்யும் போதும் இது ஒரு நாள் மரண தண்டனைக்கு இட்டுச் செல்லும் என்று தோன்றியிருக்காதா ? அதனால் எந்தக் குற்றவாளி குற்றம் செய்யாமல் இருக்கிறான்.
நான் இளமையாக இருக்கும் போது, சிறு சிறு குற்றங்களைப் புரிந்து கொண்டிருந்த போது பலர் என்னிடம் இறுதியாக நீ மரண தண்டனைக்கு ஆளாவாய் என்று சொன்னார்கள். ஆனால் மரண தண்டனை என்னிடம் சிறிய பாதிப்பைக் கூட ஏற்படுத்தவில்லை. இளமையில் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஒருவனுக்கு மரண தண்டனை எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாது, அது எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் கூட. இந்தப் 12 ஆண்டுகளில் என்னோடு சிறையில் இருந்த 200 நபர்களுக்கும் மேல் மரண தண்டனை விதிக்கப் படும் விஷ வாயுக் கூடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கூட குற்றம் புரியும் போது, மரண தண்டனையை நினைத்து செய்யாமல் நிறுத்தத் தோன்றியது என்று சொல்லவில்லை.
மரண தண்டனையைப் பார்த்து அஞ்சுபவர்கள் உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மனிதர்கள் தான். நேர்மையான மனிதர்கள் தான் மரண தண்டனைக்கு அஞ்சுவார்கள்” என்று கூறிய செஸ்மேன், உங்களுக்கு யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா என்று கேட்டார்.
ஆம் என்று டொமினிக் கூறியதும், “ஏன் நீங்கள் அந்தக் கொலையை செய்யவில்லை…. எது உங்களைத் தடுத்தது… ? உங்களைத் தடுத்தது மற்றவர்களை ஏன் தடுக்கவில்லை ? இளம் சமுதாயத்தினர் ஏன் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள், ஒரு சமூக அமைப்பு ஒப்புக் கொள்ளாததை ஏன் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்யத் துணிகிறார்கள்” என்று ஆராய இந்தச் சமுதாயம் தவறுகிறது” என்றார் செஸ்மேன்.
உங்கள் மரணம் எதை நிரூபிக்கும் என்று கேட்டார் டொமினிக். “எதையும் நிரூபிக்காது. 2455 செல் நம்பரில் இருந்த கைதி இறந்தான் என்பதைத் தவிர. அந்த மரணம் எதை உணர்த்தும். எதையும் உணர்த்தாது. நான் இறந்த பிறகும், குற்றங்கள் நடக்கும், குற்றவாளிகள் இருப்பார்கள். நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், விஷ வாயு அறையில், அமிலத்தில் சயனைடு குப்பிகள் விழும் ஓசையை கேட்கும் முன்பாக, குற்றங்களைத் தீர்ப்பதற்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னைப் போல மரணக் கொட்டடியில் இருக்கும் பல செஸ்மேன்களுக்கு இந்தச் சமுதாயம் எப்படி உதவி செய்வது என்பதை ஆராய வேண்டும். அப்படி உதவி செய்தால் தான், ஒரு நபரைத் தூக்கில் போடுவதை விட, ஆயிரக் கணக்கில் வெடித்துக் கொண்டிருக்கும் ரிவால்வர்களையும், ரிவால்வரைப் பார்த்து உயரும் கரங்களையும், மரணக் கொட்டடிகளையும் எப்படி தவிர்ப்பது என்பதற்கான தீர்வைத் தேட முடியும். நான் நிச்சயம் இறக்கப் போகிறேன். ஆனால், என்னுடைய மரணம் எதற்காக நான் கொல்லப் பட்டேன் என்ற கேள்விக்கான விடையாக இருக்காது.”
“உங்களைக் கொல்ல வேண்டும் என்று விரும்பி எழுதிய பத்திரிக்கையாளர்களை உங்கள் மரணத்தை பார்வையிட அழைத்திருக்கிறீர்களே“ என்று டொமினிக் கேட்டார்.
அதற்கு செஸ்மேன் “ஆம். அழைத்திருக்கிறேன். என் மரணத்தை பார்வையிடுபவர்கள் என்றென்றைக்கும் அதை மறக்க மாட்டார்கள். அதைப் பற்றி அவர்கள் வெளியே சொல்லும் போது இது என்றைக்கும் நடக்கக் கூடாது என்ற உணர்வு ஏற்படும். மரண தண்டனைக்கு ஆதரவாக இருப்பவர்களும், எதிராக இருப்பவர்களும், இது போன்ற மரண தண்டனைகளை பார்வையிடும் போது, அவர்கள் அந்தக் கொலையின் பங்குதாரர்களாக ஆகிறார்கள்.”
“டொமினிக் ஒன்றை மறந்து விடாதீர்கள். குற்றவாளியை தண்டிப்பது மட்டும் சமுதாயத்தின் நோக்கமல்ல, குற்றத்தை தடுப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். மனிதன் குற்றத்தை நோக்கிப் போவதை தடுப்பதற்கான வழி வகைகளை கண்டறிய வேண்டும்.“ என்று செஸ்மேன் கூறினார்.
டொமினிக் மற்றும் செஸ்மேன் இடையிலான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே, இறுதி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து, செஸ்மேனின் உயிரைக் காப்பதற்கு ரோசலி ஆஷர் மற்றும் ஜார்ஜ் டேவிஸ் ஆகிய அவரது இரு வழக்கறிஞர்கள் கடும் முயற்சியை மேற்கொண்டிருந்தார்கள்.
செஸ்மேனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ரோசலி மற்றும் டேவிஸ் முயற்சி எடுப்பது பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத காரணத்தால், அவருக்கு மிரட்டல் அழைப்புகளும், கடுமையாக விமர்சனம் செய்யும் கடிதங்களும் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இவர்கள் இருவரும் அதைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் இருவரும் இறுதி முயற்சியாக மீண்டும் கவர்னர் எட்மன்ட் ப்ரவுனைச் சந்தித்து நடத்திய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. செஸ்மேனின் மரண தண்டனையை நிறுத்த அவர் மறுத்து விட்டார்.
மரண தண்டனைக்கு முதல் நாள் விடியற்காலை 3 மணி முதல் செஸ்மேன் வேலை செய்து கொண்டிருந்தார். தனது இறுதிக் கடிதத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சான் ப்ரான்சிஸ்கோ எக்சாமினர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும், செஸ்மேனின் நண்பருமான ஸ்டீபனுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் “இந்தக் கடிதம் உங்களை சேரும் போது, என்னுடைய 12 ஆண்டு கால துன்பத்துக்கு பதிலாக மாய உலகத்திற்கு சென்றிருப்பேன். இறுதியான சடங்கை நீங்கள் பார்த்து முடித்திருப்பீர்கள். அதைப் பார்க்கும் போது, நான் மிருகங்களுக்கு உள்ள பயம் இல்லாமல், கவுரவமாக, தைரியமாக இறந்தேன் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். நான் இறக்கும் இந்தத் தருவாயிலும், மரண தண்டனைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை என்னோடு பணியாற்றிய, உழைத்த அனைவரும் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன். இது போன்ற சித்திரவதைக் கூடங்களையும் மரணக் கொட்டடிகளையும் இந்த உலகத்திற்கு அடையாளப் படுத்த, என்னாலான வழிகள் அனைத்திலும் நான் முயன்று விட்டேன். நான் இறக்கும் இந்தத் தருவாயில், என்னோடு, மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் பலரை அப்படியே விட்டுச் செல்கிறேன் என்பதை உணர்கிறேன். என்னை கொலை செய்வதன் மூலமாக, ஒரு திட்டமிட்ட கொலையை ஒரு சடங்காக செய்வதன் மூலம், எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமலேயே மனிதன் நாகரீகத்தீன் மீது அவமானக் கறையைப் பூசி விட்டான் என்று குற்றம் சாட்டுகிறேன்.
என்னைப் போன்ற ஒரு நிரபராதியை தண்டித்ததன் மூலம் கலிபோர்னியா மாகாணம், தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுத்து, அதைத் திருத்திக் கொள்ளத் தவறி விட்டது. உரிய நேரம் வரும் போது, இந்த உலகம் கலிபோர்னியாவின் தவறை உணரும்.” என்று அந்தக் கடிதத்தில் எழுதினார்.
இறுதியாக மேரி க்ராபோர்டு என்ற தனது மற்றொரு நண்பருக்கு இன்னொரு கடிதத்தை எழுதினார். “ஏராளமான மனக் குழப்பங்களோடு, சமுதாயத்தின் மீது அவநம்பிக்கையோடு இருந்த இந்த இளைஞனை திருத்தி, நல்ல குடிமகனாக்குவதற்கு என்ன செய்திருக்க முடியும் என்று கேட்டீர்கள். இதற்கு எளிதான விடை ஏதும் இல்லை.
இள வயதில் குற்றம் புரிந்திருக்கக் கூடிய ஒரு இளைஞனை தண்ணீர் நிறைந்த அடுப்பில் வைக்கப் பட்ட ஒரு பாத்திரத்திற்கு ஒப்பிடலாம். தண்ணீர் கொதிக்கக் கொதிக்க ஆவி அந்தப் பாத்திரத்தின் மூடியை தள்ளப் பார்க்கிறது. நாம் மூடியின் மீது கனத்தை வைத்து அழுத்துகிறோம். ஆனால், தீயை அணைக்காத வரை, நீராவியின் அழுத்தம் தீராது. ஒரு நாள் அது வெடித்து மூடியை தூக்கி எறியும். இந்த இளைஞர்களின் மனதில் இருக்கும் தேவைகள், அழுத்தங்கள், முரண்பாடுகள், நம்பிக்கைகள், கனவுகள் இதற்கான வடிகால் ஏற்படாத வரை, அவர்கள் குற்றவாளிகளாக மாறுவதை தடுக்க முடியாது.
ஒரு நாள் இல்லை ஒரு நாள், இந்தச் சமுதாயம், ஒரு நபரை தண்டித்து, அவரை மரணக் கொட்டடிக்கு அனுப்புவதில் இருக்கும் விருப்பத்தை விட ஆராய்ந்து பார்த்து, நியாயத்தை கண்டறிந்து மனித நேயத்தை வளர்ப்பதில், கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன். இனி எந்த மனிதனும் என்னைப் போல மரணத்தை எதிர்பார்த்து 12 ஆண்டுகள் நரகத்தில் வாழ நேரிடாது என்று நம்புகிறேன்.” என்று அந்த இரண்டாவது கடிதத்தை முடித்தார்.
அன்று இரவு இறுதியாக செஸ்மேனை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்கிறார்கள். மறுநாள் கலிபோர்னியா உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்திருந்த ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவின் மீதான தீர்ப்பு 9 மணிக்கு வரும். அந்த வழக்கு நிராகரிக்கப் பட்டால், செஸ்மேனின் மரணத்தை நிறுத்தும் அதிகாரம், அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி லூயி குட்மேன் என்ற நீதிபதியிடம் மட்டுமே உள்ளது. அவரிடன் உடனடியாக செல்வதற்கு டாக்சி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தான் எப்படி எரிக்கப் பட வேண்டும், சாம்பலை தன் தாயாரின் கல்லறைக்கு அருகில் புதைக்க வேண்டும், இறுதி மரண சாசனம் போன்ற அனைத்தும் தயாராக இருக்கிறதா என்பதை செஸ்மேன் கேட்டறிந்தார்.
அன்று இரவு நிம்மதியாக உறங்கச் சென்றார் செஸ்மேன். மறு நாள் காலையில், செய்தித் தாள் மற்றும் வானொலி நிறுவனங்கள் புதிய தொலைபேசி இணைப்புளை வாசலில் நிறுவி விட்டு தயாராக காத்திருந்தன. அந்தச் சிறையின் வாசலில் இரண்டு குழுக்களாக பிரிந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். “சட்டபூர்வமான கொலையை தடுத்து நிறுத்து” மரண தண்டனை காட்டு மிராண்டித்தனமானது என்று ஒரு பக்கமும், செஸ்மேன் சாக வேண்டும் என்று ஒரு கூட்டம் மற்றொரு பக்கமும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
வானொலியில் செய்தியாளர் அந்தச் செய்தியை அறிவித்தார். “கலிபோர்னியாவின் உச்ச நீதிமன்றம் நான்குக்கு மூன்று என்ற பெரும்பான்மைத் தீர்ப்பின் அடிப்படையில், கேரில் செஸ்மேனின் வழக்கறிஞர்கள், ரோசலி ஆஷர் மற்றும் ஜார்ஜ் டேவிஸ் ஆகியோர் தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது” என்ற அறிவிப்பை வெளியிட்டார். செஸ்மேன் இறக்க இன்னும் 58 நிமிடங்களே இருந்தன.
இது எதுவும் தெரியாத செஸ்மேன் காலை எட்டு மணிக்கு எழுந்தார். காலை உணவை முடித்துக் கொண்டு, வானொலியை போட்டார். செய்தியாளர் அவர் மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப் பட்ட செய்தியை சொன்னார். அமைதியாக அதைக் கேட்ட செஸ்மேன், சிறிது நேரத்தில் கதவு திறந்ததும் எழுந்து வந்தார். டாக்டர் அவரை பரிசோதித்தார்.
டாக்டர் செஸ்மேனை சட்டையை கழற்றச் சொன்னார். நெஞ்சில் இருந்த முடியை அகற்றி விட்டு, ஒரு மின்னணுக் கருவியை பொருத்தினார். விஷவாயு அறையில் செஸ்மேன் அனுப்பப் பட்டதும், அவர் இதயம் எப்போது துடிப்பை நிறுத்துகிறது என்பதைக் கண்டறிவதற்காக.
9.30 சிறையில் விஷ வாயு அறையில் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. விஷ வாயு அறையின் நடுவே ஒரு நாற்காலி இருக்கிறது. அந்த நாற்காலியின் கீழே ஒரு வாளியில் சல்ப்யூரிக் அமிலம் ஊற்றப் படுகிறது. ஒரு ப்ளாஸ்டிக் உறையில் சயனைடு குப்பிகள் கட்டப் பட்டு வாளியின் மேலே கட்டப் படுகின்றன. உரிய கருவியை அழுத்தியதும், அந்த சயனைடு குப்பிகள் அந்த வாளியில் விழுந்து கடுமையான விஷவாயுவை பரப்பும். அதை சுவாசிக்கும் கைதி மரணிப்பார். அந்த அறையின் காற்று வெளியேறாமல் இருக்கிறதா என்று சரி பார்க்கப் படுகிறது. அப்போது ப்ரேக் போடும் போது எழுவது போல எழுந்த ஓசை செஸ்மேனின் காதில் விழுகிறது. எல்லாம் முடிந்து விட்டது என்பதை உணர்கிறார்.
9.58 ரோசலி ஆஷரும், ஜார்ஜ் டேவிசும் சான் ப்ரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள நீதிபதி லூயிஸ் குட்மேனின் அறையில் நுழைகிறார்கள். எடுத்தவுடன், உண்மைக் குற்றவாளி டெர்ரநோவாவின் படத்தை காட்டுகிறார் ரோசலி. படத்தில் உள்ளவர் தான் உண்மைக் குற்றவாளி என்கிறார். அதைப் பார்த்த நீதிபதி நீங்கள் சொல்வது ஆராய வேண்டியதுதான். ஆராய்கிறேன் என்கிறார். “யுவர் ஹானர். நேரமில்லை. தற்போது மணி பத்து. இன்னும் ஒரு நிமிடத்தில் அவர் விஷவாயு வைத்து கொல்லப் படுவார்.“ என்கிறார். “சரி. அப்படியானால் ஒரு மணி நேரத்துக்கு மரண தண்டனையை நிறுத்துகிறேன்“ என்கிறார் நீதிபதி.
அவர் செயலாளர் ஹிக்கி என்பவரை அழைத்து சிறைக்கு தொலைபேசியில் அழைக்கச் சொல்கிறார்.
10.01. அந்தச் சிறையின் தலைமைக் கண்காணிப்பாளர் எர்னஸ்ட் பிட்சார்ட் வேண்டுமென்றே ஒரு நிமிடம் தாமதிக்கிறார். ஆனால் எந்த அழைப்பும் வராததால், செஸ்மேன், தொடங்க வேண்டும் என்கிறார். செஸ்மேன் அவரைப் பார்த்து, “நான் தயாராக இருக்கிறேன். உங்களுக்கும் மற்ற சிறைப் பணியாளர்களுக்கும் எனது நன்றிகள். என்னை நன்றாக நடத்தினார்கள். நான் அந்த சிவப்பு விளக்கு கொள்ளையன் அல்ல. என்னுடைய இந்த துன்பம் மரண தண்டனையை ஒழிக்க பயன்டும் என்று நம்புகிறேன்“ என்கிறார்.
சிகாய் என்பவர் மரண தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கிறார். அவர் செஸ்மேன், நன்றாக இழுத்து மூச்சு விடு. சீக்கிரம் முடிந்து விடும்“ என்கிறார். மூச்சை நன்றாக இழுத்தால், விஷ வாயு நுரையீரலில் புகுந்து 20 வினாடிகளில் மூளையை செயலிழக்கச் செய்யும். மூச்சை அடக்கினால், வலியும் வேதனையும் தாங்க முடியாத வகையில் இருக்கும்.
இதற்கு முன்பு இது போல கொல்லப் பட்ட ஒரு நபர், மூச்சை அடக்கி வைத்து, வலிப்பு வந்து 16 நிமிடங்கள் கழித்து இறந்திருக்கிறார்.
நாற்காலியில் அமர வைக்கப் பட்ட செஸ்மேனின் கைகளும், கால்களும் பெல்ட் வைத்து இறுக்கக் கட்டப் படுகின்றன.
10.04 சிறை கண்காணிப்பாளர் மணியைப் பார்க்கிறார். 4 நிமிடங்கள் தாமதமாகி இருக்கின்றன.
10.04 நீதிபதியின் செயலாளர் தொடர்ந்து தொலைபேசியில் சிறையை அழைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இரண்டு முறை தாமதமாக முயற்சி செய்தும் லைன் கிடைக்காததால் செஸ்மேனின் வழக்கறிஞர் ரோசலி, அவராகவே தொலைபேசியை எடுத்து அழைக்க முயற்சிக்கையில், நீதிபதியின் செயலாளர் ஒரு எண்ணை விட்டு விட்டு தவறான எண்ணுக்கு டயல் செய்திருப்பது தெரிய வந்தது.
10.05. சிறைக் கண்காணிப்பாளர் தலையை அசைக்கிறார். இறுதியாக ஒரு முறை தொலைபேசியை பார்க்கிறார். அழைப்பு வரவில்லை. சயனைடு குப்பிகள் வாளியில் விழுவதற்கு முன் அழைப்பு வந்தால், எப்படியும் காப்பாற்றி விடலாம். அறையை திறப்பதில் சிரமம் இல்லை. ஆனால், சயனைடு குப்பிகள் வாளியில் விழுந்து விட்டால் ஒன்றுமே செய்ய முடியாது.
தொலைபேசி அழைப்பு வராததால், வேறு வழியின்றி மீண்டும் தலையை அசைக்கிறார். அந்தப் பணியாளர் அந்தக் கருவியின் லிவரை இழுக்கிறார். சயனைடு குப்பிகள் சல்ப்யூரிக் ஆசிட் அடங்கிய அந்த வாளியில் விழுகின்றன. விஷ வாயு அந்த கிளம்புகிறது.
புகை கிளம்புகிறது. செஸ்மேன் அந்த புகையை நன்றாக இழுக்கிறார். அவர் வாயில் இருந்து நுரை வருகிறது.
அப்போது தொலைபேசி அலறுகிறது. அந்த போனை எடுத்து சிறைக் கண்காணிப்பாளர் “மன்னிக்கவும். சயனைடு குப்பிகள் வாளியில் போடப்பட்டு விட்டன” என்கிறார். அவர் கண்கள் யாரையோ தேடுகின்றன. அவர் அவரது நண்பர் ஸ்டீவன்சனை தேடுகிறார். மரணிக்கும் தருவாயில் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டால், தலையை இடமும் வலமுமாக அசைக்குமாறு ஏற்கனவே அவர்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டுள்ளனர். செஸ் மேன் கண்களில் கண்ணீர் வழிகிறது. ஸ்டீவன்சனை கண்ட அவர் தலையை அசைக்கிறார். “தாங்க முடியாத வலியும் வேதனையும் இருக்கிறது” என்பதை ஸ்டீவன்சன் உணர்ந்து கொள்கிறார். அந்தப் புகை செஸ்மேன் முகத்தை அடைகிறது. அவர் கண்களை மறைக்கிறது. அவர் தலை சாய்கிறது. ஒன்பது நிமிடங்கள் கழித்து அவர் இறந்ததாக அறிவிக்கப் படுகிறார்.
தான் சிறையில் இருந்த காலத்தில் செஸ்மேன் மூன்று புத்தகங்களை எழுதினார். Cell 2455, Death Row’ (1954), Trial by Ordeal (1955), The Face of Justice (1957) and The Kid Was A Killer (1960).
முதல் புத்தகம் வெளிவந்ததும் சிறை நிர்வாகம் தன் வழக்கு குறித்துத் தவிர வேறு எதுவும் எழுதக் கூடாது என்று உத்தரவிட்டது. இதனால், இரவு முழுக்க, எழுதி, அதை சுருக்கெழுத்தில் மாற்றி, வழக்கு தொடர்பானது போல அதை சிறைக்கு வெளியே வழக்கறிஞர் மூலமாக அனுப்பியே எஞ்சிய மூன்று புத்தகங்களையும் செஸ்மேன் பதிப்பித்தார்.
செஸ்மேன் தனது கடைசி ஆசையாக, தனது சாம்பல் எடுத்துச் செல்லப் படும் கும்பத்தில் பொறிக்கச் சொன்ன எழுத்துக்கள் “தற்பொழுது நடந்தவற்றில், மகிழ்ச்சி அடையத் தக்க ஏதாவது ஒன்று இருக்குமானமால் அது, ஹேலி செஸ்மேனின் மகன், கேரில் செஸ்மேன் கவுரவமாக இறந்தான்”
தொடரும்.