13 டிசம்பர் 2001. காலை 11.30 மணி. பாராளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. ஆயுதம் தாங்கிய 5 நபர்கள் ஒரு அம்பாசிடர் காரில் பாராளுமன்ற வளாகத்துக்குள் அதிரடியாக நுழைகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது தாக்குதலை தொடுக்க, தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த 5 தீவிரவாதிகளும் கொல்லப் படுகிறார்கள். அவர்கள் போக 8 பாதுகாப்பு அதிகாரிகளும், ஒரு தோட்டக் காரரும் கொல்லப் படுகிறார்.
பாராளுமன்றம் ஒத்தி வைக்கப் படுகிறது. தேசம் கொதித்து எழுகிறது. நாடெங்கும் கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன. பிரதமர் வாஜ்பாய் செப்டம்பர் 19ல் அமெரிக்காவின் மீது நடந்த தாக்குதலோடு இத்தாக்குதலை ஒப்பிடுகிறார்.
மற்ற தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுபவர்களைப் போல அல்லாமல், இறந்து போன தீவிரவாதிகள் தங்கள் சட்டைப் பையில், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், மற்றும் உலர்ந்த பழங்களை வைத்துள்ளனர். மும்பாய் தாக்குதலின் போது சிக்கிய தீவிரிவாதிகளிடமிருந்து உலர்ந்த பழங்களைத் தவிர வேறு எந்த ஆவணமும் கைப்பற்றப் படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
அதிசயமாக தில்லி போலீசார் மறு நாளே, முக்கிய தடயங்கள் கிடைத்திருப்பதாக அறிவித்தனர். முக்கிய நபர்கள் பிடிபட்டதாக தெரிவித்தனர். மறுநாள் லஷ்கர் ஏ தொய்பா மற்றும் ஜெய்ஷ் ஏ முகம்மது என்ற இரு தீவிரவாத இயக்கங்கள் சேர்ந்து நடத்திய தாக்குதல் என்றும், இது தொடர்பாக சையது அப்துல் ரகுமான் கிலானி, ஷவுகத் ஹுசைன் குரு மற்றும் முகம்மது அப்சல் மற்றும் ஷவுகத்தின் மனைவி அப்சான் குரு ஆகியோர் இது தொடர்பாக கைது செய்யப் பட்டனர்.
பாரதீய ஜனதாவின் ஆட்சியில், பாகிஸ்தானின் மீது போர் அறிவிப்பு செய்து, “தேசபத்தியை” வளர்ப்பதற்கு அருமையான வாய்ப்பாக சங் பரிவார் அமைப்புகள் இத்தாக்குதலை கருதின. 21 டிசம்பர் அன்று பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைத்தது. பாகிஸ்தானுடனான வான் வழி, தரைவழி போக்குவரத்துக்களை நிறுத்தியது. போருக்கான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியது. 70 ஆயிரம் துருப்புக்கள் எல்லையில் குவிக்கப் பட்டன. பதிலுக்கு பாகிஸ்தான் 30 ஆயிரம் துருப்புக்களை குவித்தது. ஈரான் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முன் வந்தது. ஐநா செயலர் கோபி அன்னான் அமைதி பேணுங்கள் என்று அறிவுரை வழங்கினார். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவாகியது. இரு நாடுகளும் அணு ஆயுத வல்லமை படைத்திருப்பதால், எந்நேரமும் அணு ஆயுதப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்தப் போர் தயாரிப்புக்கு இந்தியா 10 ஆயிரம் கோடி செலவழித்தது.
13 டிசம்பர் 2001 அன்றே எப்ஐஆர் போட்டாலும், வழக்கில் எப்படியாவது தண்டனை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 19 டிசம்பர் அன்று, இந்த வழக்கில் போடா சட்டப் பிரிவுகள் சேர்க்கப் பட்டன.
இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, அப்சல் குரு, செய்தியாளர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டு, தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வதாக வாக்குமூலம் அளித்தார்.
அந்த வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்பட்டன என்பதை அப்சல் குரு தெரிவிக்கிறார். “பத்திரிக்கைகள் முன்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு முன், “பல்வேறு முறை வீடியோவில் பதிவு செய்து ஒத்திகை பார்த்தார்கள். அதற்கு முன்பாக இரண்டு நாட்கள் கடுமையான சித்திரவதைகள் நடந்தன. என் வாயில் சிறுநீர் கழித்தார்கள். இரண்டு நாட்கள் முழுமையாக நிர்வாணமாக இருந்தேன். கயிற்றில் கட்டி தொங்க விடப் பட்டேன். மறுநாள் காகிதங்களில் எழுதப் பட்ட வாக்குமூலத்தை மனப்பாடம் செய்யும் படி, ராஜ்பீர் சிங், என்ற உதவி ஆணையர் என்னிடம் கூறினார். இதில் எதையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது என்றும், எனது சகோதரர் ஹிலால் காஷ்மீர் போலீசார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதையும், அவர் குடும்பத்தினர் எந்நேரம் வேண்டுமானாலும், கைது செய்யப் படுவார்கள் என்பதையும் ராஜ்பீர் சிங் கூறினார். இது போல 6 முறை ஒத்திகை பார்க்கப் பட்டது. 6 ஒத்திகைகளும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டன.” என்று கூறினார் அப்சல்.
ஷவுகத்இ கிலானி மற்றும் அப்சல் குரு
இவ்வாறு ஒத்திகை பார்த்த பின்புதான் அப்சல் குரு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டார். ஆனால், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, இந்த ஒத்திகை ஒத்துழைப்புக் கொடுக்க வில்லை. ஒத்திகை பார்த்த சமயத்திலேயே அப்சல் குரு, கிலானியைப் பற்றி கேள்வி வரும்போது திணறினார். போலீசார் கிலானிக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறச் சொன்ன போது தடுமாறினார். ஆனால் ராஜ்பீர் சிங், கிலானி பற்றி கேள்வி எழுந்தால் அமைதியாக இருக்குமாறு அப்சல் குருவை கண்டித்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது, சீராக சென்று கொண்டிருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் கிலானியைப் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, “கிலானி குற்றமற்றவர்” என்று அப்சல் குரு பதில் அளித்தார். இதைக் கேட்டு கடும் கோபமடைந்த ராஜ்பீர் சிங், பத்திரிக்கையாளர் முன்பாகவே, “வாயை மூடு” என்று அப்சல் குருவைப் பார்த்து உரத்த குரலில் கத்தி விட்டு, இந்தச் செய்தியை ஒளிபரப்ப வேண்டாமென்று பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டார். பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் டெல்லி போலீசார் சொல்படியே நடந்தனர். ஆனால், ஆஜ்தக் தொலைக் காட்சி, எடிட் செய்யாமல் முழுமையாக இதை ஒளிபரப்பியது. இந்தக் காட்சியே கிலானிக்கு விடுதலை பெற்றுத் தந்தது. ஆஜ் தக் நிறுவனத்தின் அந்த செய்தியாளர் எதிரித் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்துக்கு வரவழைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டார். பின்னாளில் உயர்நீதிமன்றத்தில் டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
காவல்துறையினரின் வழக்குப் படி தாக்குதலின் போது இறந்து போன தீவிரவாதிகளிடமிருந்து 4 செல்போன்களும், 6 கைப்பற்றட்டன. இந்த செல்போன்களின் தொடர்பு எண்ணாக 9841148429 என்ற எண் கொடுக்கப் பட்டிருந்தது. முகம்மது என்ற இறந்து போன தீவிரவாதியும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார் என்று தெரிய வந்தது. இந்த எண் அப்சல் குருவினுடையது என்பதுதான் காவல்துறையின்வழக்கு. இந்த எண்ணிலிருந்து 9810081228 என்ற எண்ணுக்கு டிசம்பர் 9 அன்று ஒரு அழைப்பு போயிருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இந்த எண் தான் புது தில்லி பேராசிரியர் கிலானியுடையது.
வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே, ஊடகங்கள் தீர்ப்பையே எழுதி முடித்து விட்டன. அந்தத் தாக்குதல் நடந்த வாரத்தில் வந்த தலைப்புச் செய்திகள் எப்படி இருந்தன தெரியுமா ?
‘Case Cracked: Jaish behind Attack’
The Hindustan Times, Dec 16, 2001: Neeta Sharma and Arun Joshi
“In Delhi, the Special Cell detectives detained a Lecturer in Arabic, who teaches at Zakir Hussain College (Evening)…after it was established that he had received a call made by militants on his mobile phone.” Another column in the same paper said: “Terrorists spoke to him before the attack and the lecturer made a phone call to Pakistan after the strike.”
‘DU Lecturer was terror plan hub’
The Times of India, Dec 17, 2001
“The attack on Parliament on December 13 was a joint operation of the Jaish-e-Mohammed (JeM) and Lashkar-e-Toiba (LeT) terrorist groups in which a Delhi University lecturer, Syed A.R. Gilani, was one of the key facilitators in Delhi, Police Commissioner Ajai Raj Sharma said on Sunday.”
‘Varsity don guided fidayeen’
The Hindu, Dec 17, 2001: Devesh K. Pandey
“During interrogation Geelani disclosed that he was in the know of the conspiracy since the day the ‘fidayeen’ attack was planned.”
‘Don lectured on terror in free time’
The Hindustan Times, Dec 17, 2001: Sutirtho Patranobis
“Investigations have revealed that by evening he was at the college teaching Arabic literature. In his free time, behind closed doors, either at his house or at Shaukat Hussain’s, another suspect to be arrested, he took and gave lessons on terrorism…”
‘Professor’s proceeds’
The Hindustan Times, Dec 17, 2001
“Geelani recently purchased a house for 22 lakhs in West Delhi. Delhi Police are investigating how he came upon such a windfall…”.
‘Aligarh se England tak chaatron mein aatankwaad ke beej bo raha tha Geelani (From Aligarh to England Geelani sowed the seeds of terrorism)
Rashtriya Sahara, Dec 18, 2001: Sujit Thakur
Trans: “…According to sources and information collected by investigation agencies, Geelani has made a statement to the police that he was an agent of Jaish-e-Mohammed for a long time…. It was because of Geelani’s articulation, style of working and sound planning that in 2000 Jaish-e-Mohammed gave him the responsibility of spreading intellectual terrorism.”
‘Terror suspect frequent visitor to Pak mission’
The Hindustan Times, Dec 21, 2001: Swati Chaturvedi
“During interrogation, Geelani has admitted that he had made frequent calls to Pakistan and was in touch with militants belonging to Jaish-e-Mohammed…Geelani said that he had been provided with funds by some members of the Jaish and told to buy two flats that could be used in militant operations.”
‘Person of the Week’
Sunday Times of India, Dec 23, 2001:
“A cellphone proved his undoing. Delhi University’s Syed A.R. Geelani was the first to be arrested in the December 13 case—a shocking reminder that the roots of terrorism go far and deep…”
இப்படித்தான் இருந்தன அந்த தலைப்புச் செய்திகள். அதாவது எஸ்ஏஆர்.கிலானி மற்றும் அப்சல் குரு, ஆகிய இருவரும், இந்தியாவின் மிக மிக மோசமாக தீவிரவாதிகள். அவர்களை நாளையே தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் இருந்தன அந்த தலைப்புச் செய்திகள்.
பொது மக்களின் கருத்தாக்கத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு மிக மிக முக்கியமானது. ஒரு பத்திரிக்கையாளர் என்பவர், தனது நிதானத்தை எப்பொழுதும் இழக்கக் கூடாது. எப்படிப் பட்ட மோசமான சூழலிலும் ஆதாரம் என்ன என்பதை ஆராய வேண்டும். தனக்கு இருக்கும் தனிப்பட்ட கருத்தை பொதுக் கருத்தாக திணிக்கக் கூடாது. இதழியல் நெறிகளில் இது மிக மிக முக்கியமானது.
ஆனால், அந்தக் காலகட்டத்தில் போலீசார் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விட, போலீசார் கை காட்டும் குற்றவாளிகளை ஊர்ஜிதப்படுத்தும் வேலையை பிரதானமாக செய்தன ஊடகங்கள். இரண்டே நாட்களில் எப்படி அத்தனை குற்றவாளிகளையும் கண்டுபிடித்தீர்கள், வெற்றிலையில் மை போட்டுக் கண்டு பிடித்தீர்களா, எப்படி இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரிய வந்தன என்பது போன்ற எந்தக் கேள்விகளையும் பத்திரிக்கையாளர்கள் கேட்கத் தவறினர்.
வழக்கு விசாரணை தொடங்கியது. பாராளுமன்றத் தாக்குதலின் காரணமாக நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு அலைகள், வழக்கறிஞர் சமுதாயத்தையும் தாக்கத் தவறவில்லை. வழக்கறிஞர்கள் ஒருவர் கூட அப்சல் குருவுக்காக ஆஜராக மறுத்தனர். எந்த வழக்கறிஞரும் ஆஜராக மறுத்ததால், நீதிமன்றமே, நீதிமன்றத்தின் நண்பராக (Amicus Curiae) ஆலம் என்ற வழக்கறிஞரை நியமித்தது. 2001 ஜனவரி முதல் நாள் ஆலம் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்ற தகவல் அவருக்கு போயிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு தகவலே போகவில்லை. ஆகையால் அவர் வரவில்லை. அடுத்த கட்டமாக சீமா குலாத்தி என்ற வழக்கறிஞரை நீதிமன்றம் நியமித்தது. அப்சல் குரு, சீமா குலாத்தியின் நியமனத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருகிறார். சீமா குலாத்தியே, தன்னால் இந்த வழக்கில் ஆஜராக முடியாது, இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான கிலானிக்காக ஆஜராகிறேன் என்று தெரிவிக்கிறார். இதையடுத்து, சட்டம் படித்து ஒரு சில ஆண்டுகளே ஆன நீரஜ் பன்சால் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தின் நண்பராக (இவர் சீமா குலாத்தியின் ஜுனியர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத் தக்கது) நியமிக்கப் படுகிறார். 8 ஜுலை 2002ல் நீதிமன்ற விசாரணை தொடங்குகிறது.
அப்சல் குரு, வழக்கின் முதல் நாள் தனக்காக வழக்கறிஞர் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோருகிறார். தனது கடிதத்தில் அவர் “இந்த நீதிமன்றம் என்னை நடத்தும் விதத்தை பார்த்தால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. எனக்காக அஷோக் அகர்வால், பண்டிட் ஆர்.கே.நசீம், ஆர்.கே.தாம் அல்லது தவுபில் ஆகிய யாராவது ஒருவரை வழக்கறிஞராக நியமித்தால் தான் எனக்கு இவ்வழக்கில் நியாயம் கிடைக்கும்” என்று கடிதம் எழுதுகிறார்.
அப்சல் குருவின் இந்தக் கடிதத்தின் மீது முடிவெடுக்காமல், நீதிமன்றம் சாட்சிகளின் விசாரணையை தொடர்கிறது. 12 ஜுலை 2002 அன்று நீதிபதி அப்சல் குருவின் மனுவின் மீது தீர்ப்பளிக்கிறார். பல்வேறு வழக்குகளுக்காக இந்த நீதிமன்றத்தின் முன்பு ஆஜரான தாம், மற்றும் ஆர்.கே.நசீம் ஆகியோரைக் கேட்ட போது, அவர்கள் இந்த வழக்கில் ஆஜராக முடியாத தங்கள் இயலாமையை தெரிவித்து விட்டனர். அஷோக் அகர்வால் மற்றும் தவுபில் ஆகியோர் ஏற்கனவே, இவ்வழக்கில் ஜாமீன் மனுக்களுக்காக ஆஜராகியிருந்த விபரம் தெரிய வந்ததால் அவர்களால் நீதிமன்றத்தின் நண்பனாக இவ்வழக்கில் இருக்க முடியாது.
குற்றவாளிக்கு தனக்கு பிடித்த வழக்கறிஞர் வேண்டுமென்றால், அவர் வைத்துக் கொள்ளலாம். நீதிமன்றத்தின் நண்பனாக ஒரு வழக்கறிஞரை வைக்க வேண்டுமென்றால், இந்நீதிமன்றத்தின் முன்பு உள்ள பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களில் ஒருவர் தான் நியமிக்கப் படுவார்கள். அப்சல் குரு வேண்டுமானால், அவரே சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யலாம். நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டுள்ள நீரஜ் பன்சல், தொடர்ந்து இவ்வழக்கில் உதவி புரிய கேட்டுக் கொள்ளப் படுகிறார். ஆனால் அவர் அப்சலுக்காக வாதாட முடியாது” என்று தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளுக்காக வாதாட வழக்கறிஞர்கள் இருந்தார்கள் என்றாலும், அப்சல் குருவின் சார்பில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய எந்த வழக்கறிஞரும் இல்லாத நிலையிலேயே இவ்வழக்கின் விசாரணை நடத்தி முடிக்கப் பட்டது.
எப்படிப் பட்ட குற்றத்தை இழைத்திருந்தாலும், அந்தக் குற்றாவளிக்கு நியாயமான, சட்டபூர்வமான வகையில் தன்னை தற்காத்துக் கொள்ள போதுமான சட்ட உதவிகள் வழங்கப் பட வேண்டும் என்பதுதான் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் உள்ள நடைமுறை. ஒட்டு மொத்த இந்தியாவே கோபம் கொள்ளும் ஒரு வழக்கு என்பதற்காக, அந்த குற்றவாளிக்கு மட்டும் எந்த வழக்கறிஞரும், ஆஜராக மறுத்து, அந்தக் குற்றவாளிக்கு தூக்கு விதிக்கப் போகிறோம் என்பது நாகரீக மனித சமுதாயம் செய்யும் செயலா ?
நீங்களே உங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று ஒரு குற்றவாளிக்கு நீதிமன்றம் அளிக்கும் உரிமையை நியாயமான நடைமுறையாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்சல் குரு மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நியாயமாகவே நடந்து கொண்டது போலக் காட்டுவதற்காக நீதிமன்றம் அப்சல் குரு, எவ்வித குறையும் இல்லாமல், சாட்சிகளை தானாகவே குறுக்கு விசாரணை செய்வதற்கு ஒப்புக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளது. பொதுவாக, குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆட்பட்டிருக்கும் நபர்களிடம், வழக்கறிஞர்களே சொல்லும் அறிவுரை, “ட்ரையல் ஜட்ஜ பகைச்சுக்கக் கூடாது” என்பது. அது எதற்காகவென்றால், வழக்கை நடத்தும் நீதிபதி கோபித்துக் கொண்டார் என்றால் தண்டனை கொடுத்து விடுவாராம்..!!!!!
90 சதவிதிம் கீழமை நீதிபதிகள் அரசின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கின்றனர். குற்றம் சாட்டப் பட்டவர்கள் வைக்கும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களைப் பொறுத்துதான் உண்மையான நியாயம் கிடைக்கும். எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வலிமையைப் பொறுத்தும், அரசுத் தரப்பு தரும் நெருக்கடியைப் பொறுத்தும் தான் தீர்ப்பு அமையும். இதில் நாடு முழுக்க இருக்கும் ஊடகங்கள் தங்கள் பங்குக்கு மீடியாவில் விசாரணை நடத்தத் தொடங்கினால் அதோகதிதான்,
ஒரு குற்றவாளி, நீதிமன்ற விசாரணை நடைபெறும் பொழுது, எனக்கு வழக்கறிஞர் வேண்டாம், நானே எனது வழக்கை நடத்திக் கொள்கிறேன் என்று முடிவெடுத்தால் அது வேறு. எனக்கு வழக்கறிஞர் வேண்டும் என்று கேட்டு, அவருக்கு யாருமே ஆஜராக மறுத்தால் அது வேறு. அப்சல் குருவைப் பொறுத்தவரை இரண்டாவதுதான் நடந்தது.
குற்றம் சாட்டப் பட்டவருக்கு வழக்கறிஞர் வழங்கப் பட வேண்டும் என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டும் சொல்லும் உரிமை அல்ல. சர்வதேச அரசியல் மற்றும் சிவில் உரிமைக்கான ஒப்பந்தத்தின் படியும், வழக்கறிஞர் வைத்துக் கொள்வதற்கான உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். குற்றவாளிக்கு வசதி இல்லையென்றால் அரசு செலவில் வழக்கறிஞர் வைத்துக் கொடுப்பது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை.
வழக்கறிஞர் உதவி இல்லாமல் தானே வழக்கை வாதிடும் ஒரு நபர், சட்டம் படித்த, அனுபவம் மிக்க ஒரு வழக்கறிஞருக்கு இணையாக சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவே முடியாது. வழக்கறிஞர் வேண்டுமா, வேண்டாமா என்பதை சம்பிரதாயமாக கேட்டு, தனது கடமையை விசாரணை நீதிமன்றம் முடித்துக் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது.
என்னதான் நடந்தது இந்த வழக்கில்……
தொடரும்.