‘சார்… டெல்லியிலிருந்து வீடியோ சாட்டிங்கில் உங்களை பாண்டியன் சார் அழைக்கிறார்’’ என்று இன்டர்காமில் அலெக்ஸுக்கு தகவல் கொடுத்தார் அர்ச்சனா.
சாட்டிங்கில் நுழைந்து, ‘‘என்ன பாண்டியன். டெல்லி கேஸ் எப்படி போயிக்கிட்டு இருக்கு’’ என்று விசாரித்தார் அலெக்ஸ்.
‘‘நம்ம வழக்கை வழக்கம் போல தள்ளி வைச்சிட்டாங்க. டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் ஏகப்பட்ட தமிழ் தலைகளைக் கண்டேன். சந்தோஷமா இருந்தது’’
‘‘புலிகள் மீதான தடையை நீடிப்பதா… விலக்குவதான்னு விசாரிக்கிற தீர்ப்பாயத்துக்கு வந்திருப்பாங்க’’
‘‘கரெக்ட். அந்த விசாரணையின் முதல் நாளில் மத்திய அரசின் வக்கீல் ஏ.எஸ்.சாந்திஹோக் தனது தரப்பு வாதத்தை முடித்தார். மறுநாள் நவம்பர் 2-ம் தேதி மத்திய அரசின் சார்பில் ரகசிய ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்துப் பார்த்த நீதிபதி விக்ரம்ஜித் சென் அடித்த கமென்ட், ‘இந்த ரகசிய ஆவணத்தை தயாரித்தது யார் என்பது கூட இதில் இல்லையே. இதில் இருக்கும் பெயர்களை வெளியே சொன்னால் ஆபத்து என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் யார் பெயருமே இல்லையே. எந்த விவரமும் இல்லையே. இதுதான் ரகசிய ஆவணமா? ஜனநாயக நாட்டில் விதிவிலக்கான விஷயங்களைத்தான் ரகசியம் என்று கருத வேண்டும்’ என்று சொன்ன வார்த்தை பளிச்சென வந்து விழுந்தது. அடுத்து வைகோவும் நச்சென கருத்துக்களை எடுத்து வைத்தார்’’
‘‘டெல்லிக்கும் வந்துவிட்டாரா?’’
‘‘அவர்தான் எல்லா அமர்வுகளுக்கும் சென்றுவிடுவாரே… ‘தமிழீழம் என்பது எந்த வகையிலும் இந்தியாவின் ஒரு பகுதியை இணைத்துக் கொள்வதல்ல. மேலும் அப்படி ஓர் ஆவணத்தையும் அரசு தரப்பில் சமர்ப்பிக்கவும் இல்லை. புலிகள் ஒரு நாளும் இந்தியாவின் ஒரு பகுதியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூட இல்லை’ என்று வாதாடினார். அடுத்து வந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வைத்த வாதமும், கூடியிருந்தவர்களின் புருவத்தை உயர வைத்தது’’ ‘‘அவர் என்ன சொன்னார்?’’
‘‘இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியை இணைத்துக் கொள்ளும் திட்டம் இருந்திருந்தால், அந்த இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இறந்ததற்காக, இரங்கல் கவிதையை எழுதி, அதையும் அரசின் செய்தித்துறை வாயிலாக தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர் வெளியிட்டிருப்பாரா?’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் நீதிபதியை சிந்திக்க வைத்திருக்கும். எல்லா வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி. சரி… தமிழ்நாட்டில் என்ன விசேஷம்?’’ ‘‘அரசின் நிலத்தை முத்தமிழ்ப் பேரவை என்ற அமைப்புக்கு கொடுத்த விவகாரம், இன்னும் சில நாட்களில் வெடிக்கப் போகிறதாம். சிலர் கோர்ட்டுக்கும் போகப் போகிறார்களாம்’’
‘‘ஒண்ணுமே புரியவில்லை’’
‘‘சென்னை கீரின்வேஸ் சாலையில் அமைச்சர்கள் வீடுகள் இருக்கிறது அல்லவா? அதில் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் பங்களாவுக்குப் பக்கத்தில் சிவாஜி மணி மண்டபத்துக்கு இடம் ஒதுக்கியிருந்தார்களே ஞாபகமிருக்கிறதா? அதற்கும் பக்கத்தில் ஐந்து கிரவுண்ட் நிலம் காலியாக இருந்தது. அந்த இடத்தை முத்தமிழ்ப் பேரவை என்ற அமைப்புக்கு ஒதுக்கி, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பின்னணி என்ன என்று விசாரித்தால், விவகாரம் வேறு மாதிரியாக போகிறது. பேரவையின் செயலாளர் அமிர்தம். இவர் கலைஞருடைய சகோதரியின் மகன். பேரவையின் துணைச் செயலர் வழுவூர் ரவி. இவர் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மிருதங்க கலைஞர். இன்னும் இந்த அமைப்பில், கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்’’
‘‘அதெல்லாம் சரி. அந்த நில விஷயத்துக்கு வாருங்கள்…’’
‘‘அந்த நிலத்தில் கடந்த அக்.28-ம் தேதி பூமி பூஜை நடத்தப்-பட்டது. அங்கே மாபெரும் அரங்கமும், அதற்கு மேலே ஏழு மாடிகள் கொண்ட வர்த்தக அலுவலகங்கள் கட்டப்பட இருக்கிறதாம். இத்தனை செலவு செய்து கட்டடங்கள் எழுப்ப முத்தமிழ்ப் பேரவைக்கு என்ன தேவை? அதற்குத் தேவையான பண வசதி எங்கிருந்து வந்தது? அரசு நிலத்தை வாங்கி, அதில் ஏதோ லாபம் பார்க்கும் வேலை நடக்கிறதா அல்லது கருப்பில் இருக்கும் பணத்தை வெள்ளையாக்கும் பணி நடக்கிறதா? இல்லை நிஜமாகவே தமிழுக்கு ஏதோ ஒரு வகையில் தொண்டு செய்யப் போகிறார்களா? என்ற கேள்விகள் அரசு அதிகாரிகளுக்கே எழுந்துவிட்டது. இது தெரிந்ததும், அரசுத்துறை அதிகாரிகளே, எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் போட்டு இத்தகவலை பரப்பி வருவதுதான் ‘தவுசன்வாலா’ சரவெடி. ஆனால், போயஸ் கார்டனில் அம்மாவை, அஷ்டாவதானி பார்த்துவிட்டார் என்று செய்தியை பரப்புவது செம காமெடி’’
‘‘என்ன சரவெடி… காமெடின்னு’’
‘‘எதுகை மோனையை பார்த்தா தெரியலை. டி.ராஜேந்தர் விஷயத்தை சொல்றேன்னு. அவர் சில நாட்களுக்கு முன்னாள் போயஸ் கார்டனுக்கு போய் அம்மாவைப் பார்த்துவிட்டதாகவும், 28 தொகுதிகள் வேண்டும் என்று பட்டியல் கொடுத்ததாகவும் ஒரு செய்தி. விசாரித்தால், அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அந்தச் சந்திப்புக்கு வாய்ப்பு இருக்கிறதாம். தேர்தல் பிரசாரத்தில் டி.ஆரின் சிலம்பாட்டத்தை பாருங்கள் என்று மட்டும் சொல்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள்’’
‘‘என்னாச்சு டி.ஆருக்கு?’’
‘‘ரொம்ப காலமாகவே அரசியலில் தனக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு உண்டு. இந்த முறை, அந்த இடத்தை பிடித்துவிடுவேன் என்று சொடுக்கு போடுகிறாராம் டி.ஆர். அவர் பிரசாரத்துக்கு வந்தால், தங்களது அணிக்கு ஸ்டார் பேச்சாளர் டி.ராஜேந்தர்தான் என்று அ.தி.மு.க.வும் கருதுகிறதாம்’’
‘‘சரி. 28 தொகுதி கிடைக்குமா’’
‘‘எட்டை நீக்கிவிடுங்கள்’’
‘‘ஒன்று அவருக்கு. மற்றொன்று யாருக்கு?’’
‘‘சும்மா விளையாட்டுக்கு இரண்டு தொகுதிகள் என்று சொன்னேன். அவர் எங்கேயும் நிற்க முடியாது. அவர்தான் தமிழ்நாடு முழுவதுமே செல்ல வேண்டியிருக்குமே. அதனால் தொகுதிகளை விட, ஆட்சிக்கு வந்தால் ஏதாவதொரு நல்ல பதவி தந்து அழகுபார்ப்பார்கள் என்று மட்டுமே சொல்லப்படுகிறது’’
‘‘டி.ஆரை விடுங்கள். வீரபாண்டி-யாரும் முரண்டு பிடித்துக் கொண்டிருக்-கிறாராமே?’’
‘‘ம்… ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸுடனான கூட்டணியே கலகலத்துக் கிடக்கும் நிலையில், நவம்பர் இரண்டாம் தேதி கலைஞரை கலங்கடித்தார் வீரபாண்டியார்.’’
‘‘ஆமாம்… ஆங்கில நாளிதழில் ஏதோ பேட்டி கொடுத்தாராமே… அதுவும் திடீரென்று..?’’
‘‘பேட்டி திடீரென்று வெளியாகி யிருக்கலாம். ஆனால், அதற்கான சூழல் சில வாரங்களுக்கு முன்பே ஏற்பட்டு விட்டதாம்’’
‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்…’’
‘‘சேலத்தில் நடைபெற்ற ஆறுபேர் கொலை தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைத்ததிலிருந்து வீரபாண்டியார் தரப்பு உஷ்ணமாகிவிட்டதாம். காரணம், வழக்கை விசாரிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே தனது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் மீதும் மற்றும் சில ஆதரவாளர்கள் மீதும் சி.பி.சி.ஐ.டி.யின் பார்வை பதிவதை ஸ்மெல் செய்து விட்டார் வீரபாண்டியார்…’’
‘‘ஓஹோ…’’
‘‘அடுத்த சில தினங்களில் கலைஞரைச் சந்தித்தார் வீரபாண்டியார். இவர் வருவதற்கு முன்பே சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி., கண்ணப்பனிடம் வழக்கின் உண்மைத் தன்மை பற்றி சில விவரங்களை வாங்கி வைத்துக்-கொண்டார் கலைஞர். எதிர்பார்க்கப்படும் சில கைதுகள் பற்றி கலைஞரிடம் வீரபாண்டியார் சொல்ல… ‘உன் மகன் இல்லையே… தம்பி மகன்தானே விடு…’ என்றாராம். ‘இப்படி கைது நடந்தால் கட்சியின் இமேஜ் பாதிக்கப்படுமே’ என்று வீரபாண்டியார் சொல்லியிருக்கிறார். அதற்கு கலைஞர் சொன்ன பதில்தான் வீரபாண்டியாரைச் சூடேற்றி-யிருக்கிறது…’’
‘‘அப்படி என்ன சொன்னாராம்?’’ ‘‘ஊர் ஊராக கண்டனக்கூட்டம் நடத்தி வரும் ஜெயலலிதா அடுத்ததாக சேலத்தில் கூட்டம் போடப் போகிறார். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அந்தம்மா கடும் விமர்சனம் செய்வார். அது கட்சியின் இமேஜை மேலும் பாதிக்கும் என்றார் கலைஞர். இதையடுத்து கோபத்தை வெளியில் காட்டாமல் கிளம்பிவிட்டார் வீரபாண்டியார்’’ ‘‘அப்புறம்?’’
‘‘அடுத்த சில நாட்களில் பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட, சேலம் திரும்பிய வேகத்தில் காரில் தேசியக்கொடி பறக்க சிறைக்குச் சென்று சுரேஷைப் பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது-மட்டுமின்றி தனது ஆதரவாளர்களாக அறியப்படும் பலரையும் சிறைக்குச் சென்று சுரேஷை பார்க்கும்படி உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டு கடுப்பான கலைஞர், ஆவேசப்பட்டு சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டார்’’
‘‘என்னவென்று…’’
‘‘சேலத்திற்கு இந்தம்மா போகவே வேண்டாம்யா… அ.தி.மு.க. தன்னா-லேயே ஜெயித்துவிடும். அப்படி கட்சியை வைச்சிருக்கான்யா சேலத்துல’ என்றாராம். இந்த விபரம் தன் கவனத்திற்கு வந்த பின்புதான் அந்த ஆங்கில நாளிதழ் நிருபரை அழைத்து தனது குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார் வீரபாண்டியார்’’
‘‘ஓ’’
‘‘அந்தப் பேட்டியில், வீரபாண்டியார் பயன்படுத்திய சில வார்த்தைகள்தான், தி.மு.க.வில் கலைஞர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை கவனிக்கப்படுகிறது. ‘இந்த வழக்கு விவகாரத்தை வைத்து கட்சிக்குள் என்னை ஓரம்கட்ட மிகக் கொடுமையான, கொடூரமான சதிவலை பின்னப்-படுகிறது. இந்தச் சதிவேலைக்கு தலைமை தாங்குபவர் ஒரு லோக்கல் எம்.எல்.ஏ. நயவஞ்சக எண்ணத்துடன், ரகசியமாக சிலரது ஆதரவும், ஆசீர்-வாதங்களும் அந்த எம்.எல்.ஏ.வுக்கு உண்டு. இது துரதிருஷ்டமானது’ என்று பொரிந்து தள்ளியிருந்தார் வீரபாண்டியார்’’
‘‘யாரைச் சொல்கிறார்?’’
‘‘சேலம் மாவட்ட தி.மு.க. அரசியலை சமீப காலமாக உற்று நோக்குபவர்களுக்கு, அந்த எம்.எல்.ஏ., பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் என்பதும் அவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்பதும் பளிச்சென்று விளங்கும்’’
‘‘அப்படியென்றால்..?’’
‘‘வீரபாண்டியாரின் இந்த வெளிப்படையான குமுறல் ஸ்டாலினை மையமாக வைத்தே வெளி-யான-தாக கணக்கிடுகிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். ஆரம்பக் காலத்திலிருந்தே அழகிரி ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டவர் வீரபாண்டியார் என்பதையும் சிலர் சந்தடி சாக்கில் தலைமையின் காதுகளில் போட்டு வைக்க.. நிலைமை சூடாகத்தான் இருக்கும் போல…’’
‘‘சரி… அடுத்து என்ன நடக்கும்?’
‘‘சேலத்து நிலவரத்தைப் பார்த்தால் இப்போதைக்கு சூடு தணியாது போல… இந்தப் பேட்டிக்குப் பிறகும் கூட, வீரபாண்டியார் தனக்கு நெருக்கமான சிலரிடம் மனம் விட்டுப் பேசிக் கொந்தளித்திருக்கிறார். ‘அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் விவகாரத்தில் இந்த ஆறுமுகம் செய்த உதவிகளை மறந்து விட்டார்களா?-’ என்றெல்லாம் கேட்டு பழைய விவகாரங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டினாராம்.’’
‘‘அப்படியா?’’
‘‘ம்… இந்தச் சூட்டைத் தணிக்காவிட்டால், தி.மு.கழகத்தில் ஸ்டாலினுக்கு எதிரான வலுவான முதல் கலகக் குரலாக இது இருக்கும் என்று கருதும் தி.மு.க. தலைமை, சூட்டைத் தணிக்கலாமா? அல்லது அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாமா? என்கிற ரீதியில் யோசிக்கிறதாம். இதற்கிடையில் இவ்வளவு வெளிப்படையாக குரல் எழுப்பிய வீரபாண்டியாருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் டெலிபோனில் வாழ்த்துக்கள் குவிந்துவருவதும் சிலரால் கவனமாக கவனிக்கப்படுகிறது. சரி. இரவில் மீண்டும் சாட் செய்வோம்’’ என்று கம்ப்யூட்டரை ஆப் செய்தார் அலெக்ஸ்.
நன்றி தமிழக அரசியல்