அன்புள்ள அண்ணாமலை அவர்களுக்கு.
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
தொடர்ச்சியான பயணங்களும், இடைவிடாத பணியும் உங்களுடைய முகத்தில் களைப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திமுகவை ஒழிக்க வேண்டுமென்ற உங்களுடைய பணியோடு சேர்த்து உடல் நலனிலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும். அக்கறையோடு சொல்கிறேன்.
இந்தியாவின் 5-வது பெரிய மாநிலமான தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் யாருக்குமே உங்களைப்போல ஒரு பேரதிர்ஷ்டம் கிடைத்ததில்லை.
ஒவ்வொரு குருபெயர்ச்சியின் போதும் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும் என ஜாதக பலன்களை கூறுவோர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படி விபரீத ராஜயோகத்தின் பலன் பெற்றவரை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் கிடையாது.
ஆனால், அப்படி ஒரு பேரதிர்ஷ்டசாலியை பார்க்கும் வாய்ப்பை காலம் உருவாக்கிக் கொடுத்தது. ஆம். உங்களுக்குத்தான் அந்த விபரீத ராஜயோகம் அடித்தது.
இல்லையென்றால் பிஜேபிக்காகவே நாயாய் பேயாய் உழைத்து, பாடுபட்டுக்கொண்டிருக்கும் பலருக்கு கிடைக்காத வாய்ப்பு, உங்களுக்கு கிடைக்குமா ?
அப்படியொரு யோகம் இல்லாவிட்டால்2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ம் தேதி அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் -8-ம் தேதி,அதாவது சரியாக சொன்னால் 10 மாதங்கள் 13 தினங்களில் இந்த நாட்டை ஆளும் ஒரு தேசியக்கட்சியின் மாநிலத் தலைவராக நீங்கள் நியமிக்கப்பட முடியுமா?
கடவுளை நம்பும் நபரான நீங்கள் என்னுடைய இந்த விபரீத ராஜயோக விளக்கத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இந்த நாட்டை ஆட்சி செய்கிறோம் என சொல்லும் பிஜேபி கட்சியின் தமிழகத்தினுடைய மாநிலத் தலைவர் நீங்கள் என்பதை ஞாபகப்படுத்திவிட்டு தொடர நினைக்கிறேன்.
கருத்துரிமைக்கு எதிராக திமுக தலைமையிலான தமிழக அரசு நடக்கிறதென ஒரு யுத்தத்தை தொடங்கிருக்கிறீர்கள். அதற்கு முதலில் வாழ்த்துக்கள். இப்படி எல்லாம் தமிழக பிஜேபியினருக்கு பேசவும்,யோசிக்கவும், குரல் கொடுக்கவும் தெரியும் என்பதே என்னைப்போன்ற ஊடகவியலாளர்களுக்கு தெரியாது.
ஏனென்றால், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவர் மனைவி சுப்புலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளோடு குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தையே பதறவைத்த சம்பவமது. பிஜேபியை போல “எவன் செத்தா நமக்கென்ன” என்று அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் பாருங்க. 6 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் 4 பேர் துடிக்க துடிக்க சாவதற்கு காரணமான ஆட்சியாளர்களை கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் அம்மணமாக சித்தரித்து ஒரு கார்ட்டூன் வரைந்து விட்டார்.
அய்யயோ வந்ததே கோபம் அப்போதிருந்த அதிமுக அரசுக்கு. அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புகார் கொடுக்க, நெல்லையில் இருந்து வந்த போலீசார் 05-11-2017 அன்று வீட்டில் இருந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்து தரதரவென இழுத்துச்சென்றனர்.
தமிழகத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதை கண்டித்தன. கண்டிக்காத ஒரே ஒரு கட்சி பிஜேபி மட்டுமே. ஜனநாயகம் பற்றியோ கருத்துரிமை பற்றியோ எல்லாம் உங்கள் கட்சி பேசவில்லை. ஏன் மூச்சு கூட விடவில்லை.
அன்பழகன் என்ற ஒரு சீனியர் பத்திரிகையாளர். உங்கள் கட்சி மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகிறதல்லவா. ஊழல் ஒழிப்பு. ஊழல் ஒழிப்பு என்று தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளையும் ஊழல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக ஆவணங்களாக பெற்று அந்த அன்பழகன் தன்னுடைய மக்கள் செய்தி மையம் என்ற இணையப்பக்கத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களுடைய அன்புக்குரிய சகோதரர் எஸ்.பி.வேலுமணிக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.
இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் பெரிய கட்சி அதிமுகதான்னு சொன்ன அமித்ஷாவையே நாங்க கரெக்ட் பண்ணிட்டோம். நீ யார்ரா பெரிய வெங்காயம்னு. ஒரு நாள் கோயம்புத்தூர்ல இருந்து போலீசை அனுப்பி வாக்கிங் போன அன்பழகனை கைலியோட கைது பண்ணிட்டு போய்ட்டாங்க.
அப்புறம் தொடர்ச்சியா பல வழக்குகளை போட்டது போலீஸ். ஆனாலும் எஸ்.பி.வேலுமணிக்கு கோபம் அடங்கல. அன்பழகன் மீது குண்டர் சட்டம் போட்ட பிறகுதான் அவரு கூல் ஆனார்.
அன்பழகன் கைது செய்யப்பட்டதையும்,அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதையும் தமிழகத்தில் இருக்கும் எல்லா கட்சிகளும் கண்டித்தன. கண்டிக்காத ஒரே ஒரு கட்சி. தமிழக பிஜேபி மட்டுமே.
இப்போ நீங்களே சொல்லுங்க. உங்க கட்சிக்கு கருத்துரிமைன்னா என்னென்ன தெரியுமான்னு நான் சந்தேகப்பட்டது சரிதானே !
நீங்கள் தலைவராக இருக்கும் கட்சி கருத்துரிமைக்கு எதிராக ஏதாவது நடந்தால் பிஜேபி என்ன செய்யும் என்பதற்கான ட்ராக் ரெக்கர்ட் இது தான்.
ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
சரி. எப்போது பார்த்தாலும், 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம் என்று வேறு சொல்கிறீர்கள். உங்கள் கட்சி 17 மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. 14ல் தான் இருக்கிறது.
யாரோ உங்களுடைய மூளையில் பதிவேற்றம் செய்துவிட்டார்கள் போல. ரோபோ போல அதையே திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள்.
கொஞ்சம் அப்டேட் ஆக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் காவல் அதிகாரியாக பணியாற்றிய கர்நாடகாவுக்கு வருவோம். கெளரி லக்கேஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர் குறித்து பேசினால். அண்ணா..” அப்போ யாரோட ஆட்சிங்கண்ணா கர்நாடகாவுல” அப்படின்னு எதிர்கேள்வி கேட்பீங்க. கொலை செய்தது சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்து பயங்கரவாத அமைப்பினர்னு சிபிஐ-யே கூறிய பிறகும் கூட அதைப்பற்றி பேசமாட்டீங்க. சரி அது உங்க அரசியல். அது எதுக்கு.
கர்நாடக மாநிலம் பிதாரியில் இருக்கும் ஸ்கூல் ஒன்றில்ங்கண்ணா. குடியுரிமை சட்டத்துக்கெதிரா ஒரு நாடகம் போடறாங்க. அந்த பள்ளியின் டீச்சர், அந்த நாடகத்தில் நடித்த குழந்தையின் அம்மா மீது தேச துரோக வழக்கை பதிவு செய்தது பிஜேபி அரசு.
6 வயது முதல் 12 வயதிலான குழந்தைகளை போலீசார் விசாரணை என்ற பெயரில் உளவியல் சித்ரவதை செய்ததை அறிவீர்களா அண்ணாமலை ? நாடகத்தை எழுதியதாக சொல்லப்படும் குழந்தை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என கதறிய வீடியோவை பார்த்திருக்கிறீர்களா ?
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்ற விஷயத்தை வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக மருத்துவர் கஃபீல் கானை துரத்தி துரத்தி உத்திரபிரதேச அரசு பழிவாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு ?
குடியுரிமை சட்டம் குறித்து பேசியதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு எத்தனை மாதங்கள் ஜாமீன் கூட மறுக்கப்பட்டதென அறிவீர்களா ?
NRC க்கு எதிராக போராடிய மக்கள் எத்தனை பேர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளது என்ற பெயர்களை பட்டியலிட்டால் இந்த கடிதம், இன்னும் நாலு பக்கம் இழுக்கும்.
பீமா கொரேகான் ஜோடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா, மற்றும் செயற்பாட்டாளர் வரவர ராவ் ஆகியோரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 100 புகழ்பெற்ற அறிவுஜீவிகள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ,உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தது ஏன் எனத்தெரியுமா உங்களுக்கு ?
2020ம் ஆண்டு மே மாதத்தில் 83 வயதான ஸ்டான் சாமி NIA-வால் ராஞ்சியில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் ஏன் அடைக்கப்பட்டார் என்று எப்போதாவது படித்திருக்கிறீர்களா அண்ணாமலை ? பலவித நோய்களுடன் வயது முதிர்வால் தவித்து வந்த ஸ்டேன் சாமி, கொரோனா கடுங்காலத்தில் 10 மாதம் சிறையில் இருந்தார்.
பார்க்கின்ஸன் நோய் காரணமாக தண்ணீரையோ, உணவையோ கையால் கூட எடுத்து சாப்பிட முடியாத நிலைமையில் இருந்த அவர் தண்ணீர் குடிக்க ஒரே ஒரு ஸ்ட்ரா கேட்டார். அதற்கு கூட உங்கள் அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பு மனசாட்சியே இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்தது என்பது உங்களுக்கு தெரியுமா அண்ணாமலை ?
உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸில், பாலியல் பலாத்காரம் செய்து,,கொடூரமாக தாக்குதலுக்கு ஆளாகி தலித் சமூக பெண் ஒருவர் இறந்துவிடுகிறார். உங்களுடைய காவல்துறையே சடலத்தையும் எரித்துவிடுகிறது. அந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற சித்திக் கப்பான் உள்ளிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் உள்ளனர். இப்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை அறிவீர்களா ?
இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக `டூல்கிட்` உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் திஷா ரவி என்ற பெங்களூருவைச் சேர்ந்த பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த 22 வயது பெண் தேசத்துரோக வழக்கில் உங்களது அரசின் அதிகாரத்திற்கு கீழ் இருக்கும் டெல்லி போலீஸ் கைது செய்தது தெரியுமா உங்களுக்கு ?
அந்த பெண்ணுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் என்ன சொன்னதென கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.
“அரசாங்கங்களின் காயமடைந்த தற்பெருமைக்கு ஊழியம் செய்ய” தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறதென” கூறியது.
குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேலை இலட்சத்தீவில் நிர்வாகியாக நியமித்து தீவை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்ற கணக்கில் மத்திய அரசு கொண்டுவந்த நடைமுறைகளை எதிர்த்து தொலைக்காட்சியில் பேசியதற்காக திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிவீர்களா ?
இந்தியாவில் மாட்டின் பெயராலும், ஜெய்ஸ்ரீராம் கூறச்சொல்லியும் 2014 ம் ஆண்டுக்கு பிறகு 50க்கும் அதிகமான நபர்கள் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர். யாரால் தெரியுமா நீங்கள் யாரை தேசியவாதிகள் என்கிறீர்களோ அந்த வலதுசாரி கும்பலால்.
இது போய் ஒரு குற்றம்னு வேலை வெட்டி இல்லாம நம்ம மணிரத்னம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என 2019 ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிவிட்டனர்.
உடனே, ஒரு பிஜேபி ஆதரவு வழக்கறிஞருக்கு கோபம் வந்துவிட்டது. சுதீர்குமார் ஓஜா என்ற என்ற அந்த பீகார் மாநில வழக்கறிஞர் முசாபர்பூர் நீதிமன்றத்தில் 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிய வேண்டுமெனக்கேட்க டக்குனு நீதிபதியும் ஓக்கேன்னு உத்தரவு கொடுத்திட்டார்.
பீகாரின் சதர் காவல் நிலையத்தில் 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவும் செய்துவிட்டனர்.
எதுக்கு, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதுக்கு தேசத்துரோக வழக்கு. திரிபுராவில் ஹிந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தி கலவரம் செய்கிறார்கள். பல இடங்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
அதை ட்விட்டர்லTripura is burning -ன்னு பதிவு செஞ்ச பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட102 நபர்கள் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது உங்களுடைய பிஜேபி அரசாங்கம்.
நீங்கள் காவல்துறையில் பணியாற்றியபோது உங்களை கர்நாடகாவின் சிங்கம் என்றெல்லாம் ஊடகங்கள் வர்ணித்துள்ளன. நீங்கள் சிங்கமா. இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது.
ஆனால் உண்மையான பெண் சிங்கத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
2017-ம் ஆண்டு மணிப்பூரில் தேர்தலை சந்திக்கும் போது, பிஜேபி முன்வைத்த முழக்கம் என்னவென உங்களுக்கு தெரியுமா ? “War on Drugs”.வெற்றியும் பெற்றுவிடுகிறீர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு 2018-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி
Narcotics and Affairs of Border பிரிவை சேர்ந்த தனோஜம் பிருந்தா என்ற பெண் காவல் கண்காணிப்பாளர் போதைப்பொருள் கும்பலை பிடிக்கிறார்.
அந்த கும்பல் மீது வழக்கு பதியக்கூடாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாதென பிஜேபியின் மணிப்பூர் முதல்வர் பிரான் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர், கட்சியின் மாநிலத்தலைவர் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
நான் தான் முன்பே சொன்னனே. பெண் சிங்கம்னு. இம்பால் நீதிமன்றத்தில் நடந்த எல்லாவற்றையும் குறிப்பிட்டு பிராமணப்பத்திரம் தாக்கல் செய்து விட்டார். அதை எப்போது தாக்கல் செய்தார் தெரியுமா ?நீங்க பிஜேபியில் உறுப்பினராக சேர்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான்.
அப்புறம் அடிக்கடி தமிழகத்தில் பிரிவினைவாதிகள் அதிகரித்துவிட்டதாக கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. உங்கள் கட்சியினர் பயங்கரவாதிகள் அதிகரித்துவிட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் துப்பாக்கி சூடு நடத்துபவன், வெடிகுண்டுகளோடு பிடிபடுபவன் இந்துவாக இருந்தால் மாநில போலீசாரே விசாரிக்கட்டுமென விட்டுவிடுவதும் முஸ்லிமாக இருந்தா NIA உள்ளே நுழைந்து தீவிரவாதி பட்டம் கட்டுவதும் தங்களுக்கு தெரியாததல்ல.
அப்புறம் 2014 க்கு பிறகு இந்தியாவில் ஒரே ஒரு முஸ்லிமிடம் இருந்தும் ஆயுதங்களோ, வெடிகுண்டுகளோ கைப்பற்றப்படவில்லை. கேரளா மாநிலம் கண்ணனுரில் பிஜேபி அலுவலகத்தில் இருந்து கூட வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.
அந்த வழக்கை கேரளா மாநிலப்போலீஸார் தான் விசாரிக்கின்றனர். தமிழகத்தில் ,முகநூலில் பதிவு போட்டவன், ரயிலில் கல்யாணத்துக்கு போனவனை எல்லாம் கைது செய்து, தேசிய புலனாய்வு முகமை வேண்டுமென்றே மீது தவறான தோற்றத்தை உருவாக்க முயல்கிறது என்பதை தமிழக அரசும், காவல்துறையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.
அப்படி ஒரு தோற்றத்தை மத்திய அரசு உருவாக்குவதற்கு அரசியல் ரீதியா என்ன காரணம்னு உங்களுக்கு மட்டும் தெரியாதா என்ன?
இவ்வளவும் சொல்லியிருப்பதற்கு என்ன காரணமென புரிகிறதா அண்ணாமலை சார்?
எங்களுக்கு உங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் என்ன நடக்கிறதென்றும் தெரியும், கருத்துரிமைக்கு எதிராக தமிழக அரசு நடக்கிறதென நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கான காரணமும் புரியும்.
உங்கள் வீட்டிலிருக்கும் கண்ணாடி முன்பு சென்று நில்லுங்கள். உங்களை நீங்களே ஒரு முறை கேட்டுப்பாருங்கள்.
உங்களுக்கொ, அல்லது உங்கள் கட்சிக்கோ. ஜனநாயகம் பற்றியோ கருத்து சுதந்திரம் குறித்தோ பேசுவதற்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்று.
ஆம். ஏராளமான பாவத்துடன் சேர்ந்த அழுக்கு மூட்டையை சுமந்து கொண்டிருக்கும் ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் நீங்கள்.
நீங்கள் சோறு போட்டு வளர்த்து உருவாக்கி இருக்கும் உங்களுக்கு ஆதரவான ஒரு பேட்டை ரவுடியான மாரிதாஸுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆதரிக்கிறீர்கள். அவ்வளவு தானே ! அதில் எதற்கு கருத்துரிமை என்ற டயலாக்கை எல்லாம் மூச்சு முட்ட பேசறீங்க ?
ஆனால், இந்தியாவில் பிஜேபி என்ற கட்சி இதுவரை இப்படியெல்லாம் எந்தவொரு தனிநபரையும் இந்தளவு அளவு எல்லாம் நேரடியாக ஆதரித்ததில்லை. இது அந்த கட்சிக்கே புதியது தான்.
நீங்கள் எந்தக் கழுதையை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். அது உங்கள் இஷ்டம். ஆனால், கருத்து சுதந்திரம் குறித்து ஆதரித்து பேசியதற்காக வெட்கப்படுங்கள் அண்ணாமலை. அதற்கு உங்களுக்கு துளியும் தகுதி இல்லை.
இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசுவோம். தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது. அந்த கட்சிகளும்,அதன் தலைவர்களும் இந்த மாநிலத்திற்கான உரிமை,மக்கள் பிரச்சனைகள் குறித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும் போராடி வருகின்றனர்.
அவர்கள் யாருமே நீங்கள் காட்டும் ஆணவத்தையோ, அகம்பாவத்தையோ ஊடகவியலாளர்களிடமோ செய்தியாளர்களிடமோ இதுவரை ஒருபோதும் காட்டியதில்லை.
தமிழகத்தின் எந்தவொரு மக்கள் பிரச்சனைக்கும் போராட வீதிக்கு வராத,சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடா, ஒரு கட்சியின் மாநிலத்தலைவரான நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு நாட்களாகிறதென தெரியுமா ?
ஒரு வருடம் நான்கு மாதங்கள் நான்கு தினங்கள் மட்டுமே.
ஆனால் என்னமோ.. பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு உயிரைக் கொடுத்து போராடிய தலைவரைப்போல நீங்கள் காட்டும் பிம்பம் இருக்கிறது பாருங்கள். விபரம் தெரியாதவர்கள் பார்த்தால் நிச்சயம் உண்மை என்றே நம்பி விடுவார்கள்.
சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் கிளுகிளுப்புக்கும, உங்களைச்சுற்றி இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை குதூகலப்படுத்தவும் ஊடகவியலாளர்கள்/செய்தியாளர்கள் மீது பாய்ந்து பிராண்டும் உங்களது யுக்தி, நீண்டகால அரசியலுக்கு ஒருபோதும் உதவாது. ஒருவேளை உதவும் என்று நம்புகிறீர்கள் என்றால் உங்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன். விட்டில் பூச்சியின் வாழ்க்கைதான் இது.
தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள்/பத்திரிகைகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.குறிப்பாக அங்கு பணியாற்றும் முக்கிய நபர்கள் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். இது தானே நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
அதாவது வெளிப்படையாக சொன்னால் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதனால் தான்.கோபாலபுரம் மீடியாக்கள் என நீங்கள் துணிச்சலாக விமர்சிக்கிறீர்கள்.அப்படித்தானே.!
சில விஷயங்களை உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புறேன். ஏன் தெரியுமா ? அப்போது நீங்கள் கர்நாடகாவில் பணியாற்றிக்கொண்டிருந்தீர்கள்.
நானொரு “Proud Kannadiga” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த காலம் அது. 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்,,அப்போதைய தமிழக எதிர்கட்சித்தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் மேகதாது விவகாரம்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவோடு அனைத்துக்கட்சித் தலைவர்கள் டெல்லிக்கு சென்றார்கள்.
வேறு வழியில்லாத காரணத்தால் பிஜேபி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணனும் உடன் சென்றார்.
பிரதமரை சந்தித்து மனு கொடுத்த பின்னர் செய்தியார்கள் சந்திப்பு நடந்தது.
ஜெயா தொலைகாட்சி செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார். அப்போது விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா ? சம்பந்தப்பட்ட செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல். ஜெயலலிதாவை குண்டக்க மண்டக்க திட்டிப்புடுவேன். உங்களுக்கு, உங்க டிவிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாதெனக்கூறி. நாற்காலியைத் தூக்கி அடிக்க முற்பட்டார்.
அதே தேமுதிக தலைவர் விஜகாந்த் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ஆளுநரிடம் அதிமுக அரசின் ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்கச் சென்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது என்ன நடந்தது தெரியுமா ? தமிழகத்தில் பத்திரிகைகள் அதிமுக அரசுக்கு ஜால்ரா அடிப்பதாகவும்,, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா.
என்று கடுமையாக கோபப்பட்டு செய்தியாளர்களை நோக்கி காறித்துப்பினார். 2016 தேர்தலுக்கு பின் எதிர்கட்சித்தலைவராக இருந்த முக ஸ்டாலின் பலமுறை ஊடகங்கள் அதிமுக அரசுக்கு பயப்படாமல் உண்மையை எழுத/பேச வேண்டும் என கூறியிருக்கிறார். நாங்கள் சொல்வதை நீங்கள் எழுத மாட்டீர்கள், டிவியில் போடமாட்டீர்கள் எனவும் முக ஸ்டாலின் ஆதங்கப்பட்டிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை அவரும் தமிழகத்தின் ஊடகங்கள் அதிமுக அரசுக்கு ஜால்ரா அடிப்பதாகவே மறைமுகமாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். இதெல்லாம் உங்களுக்கு தெரியாது.
ஏன்னா அப்போ நீங்க “Proud Kannadiga” என்று கூறிக்கொண்டிருந்தீர்கள். அரசியலுக்கு புதுசு இல்லையா. வந்து ஒரு வருஷம் தானே ஆகிறது. அதனால் இதெல்லாம் சொல்கிறேன்.
ஒருவேளை திமுகவின் அமைப்புச் செயலாளர் R.S. பாரதி தமிழக ஊடகங்களை “ரெட்லைட் மீடியா” என்று விமர்சித்தது உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். ஏனென்றால் அது சமூக வலைத்தளங்களில்/ வாட்சப்பில் அதிகம் பகிரப்பட்ட ஒரு விஷயம்.
இதெல்லாம் கடந்த 2021 மே மாதத்திற்கு முன்பு வரை ஊடகங்கள்/ பத்திரிகைகள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக பேசிய/ஊழலை வெளிப்படுத்திய ஊடகங்கள்/பத்திரிகைகள் நெருக்கடியை சந்தித்ததா என்றால். ஆமாம். மறைமுகமாக நெருக்கடி கொடுக்கப்பட்டது.
2021 தேர்தல் மாற்றத்திற்கு பிறகு தமிழக பிஜேபி தலைவரான நீங்கள். இப்போது போகும் இடமெல்லாம் ஏளன எள்ளல் தொனிக்க கோபாலபுர மீடியாக்கள் என்று விமர்சிக்கிறீர்கள். ஏதோ விபரம் தெரியாத ஒரு நபர் சொல்கிறார் என்றால் வெறுமனே அதை கடந்து போய்விடலாம்.
ஆனால் ஒரு முன்னாள் IPS அதிகாரியான நீங்கள் குறிப்பிட்ட ஒரு கட்சித்தலைவரின் வீட்டைக்குறிப்பிட்டு மொத்தமாக கோபாலபுர மீடியாக்கள் என்று விமர்சிக்கிறீர்கள். இதை எப்படி கடந்து செல்வது மிஸ்டர் அண்ணாமலை ?
யார் சார் நீங்க? என்ன சார் செஞ்சுட்டீங்க தமிழக மக்களுக்கு ! எங்க இருந்து சார் உங்களுக்கு இவ்வளவு தடித்தனம் வந்தது ? 2015 ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி புதிய தலைமுறை அலுவலகம் மீது ஒரு தேச பக்தர் 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசிவிட்டார்.
குண்டு வீசறவனை உலகமே தீவிரவாதின்னு சொன்னாலும் குண்டு வீசியவன் பாரத் மாதாகீ ஜே. சொல்லிட்டான்னா. உங்கள் கட்சியின் பார்வையில் அவன் தேச பக்தன் தானே.
அவருக்காக பிஜேபி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அந்த தேச பக்தனுக்காக எல்லா சட்ட உதவிகளையும் செய்தார்கள். இதற்கும் குண்டு வீசியவன் உங்கள் கட்சி கூட கிடையாது.
தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் செயல்படும் கல்யாணராமனுக்கு உங்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு உதவுகிறது. இந்த மாதிரி காரியங்களுக்கு வேலை செய்வதற்கு மட்டும் தான் வழக்கறிஞர் பிரிவு வச்சிருக்கீங்களா என்ன ?
அவதூறு பரப்பும் நிறுவனங்கள் குறித்து வழக்கு போடுங்க. நோட்டீஸ் அனுப்புங்க. அதைவிட்டுட்டு ஒட்டுமொத்தமாக தமிழக ஊடகங்களை இப்படி நக்கல் நையாண்டி செய்வது எல்லாம் ஒரு அரசியல் கட்சித்தலைவருக்கு அழகா ? ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இருப்பது கோபாலபுர மீடியாக்கள் என்று நீங்கள் சொல்வதை“உங்கள் திருப்திக்காக” உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.
பிஜேபி ஆட்சி செய்யும் குஜராத்தில், மத்திய பிரதேசத்தில், ஹிமாச்சல், ஹரியானா, கர்நாடகா, உத்தர பிரதேஷ், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, உத்ரகாண்டில் இருக்கும் மீடியாக்களை என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் அண்ணாமலை ?
அல்லது உங்கள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பிஜேபி மாநிலத்தலைவர்கள் என்ன பெயர் சொல்லி ஊடகங்களை அழைக்கிறார்கள் ?
நீங்கள் கட்சித்தலைவராக பதவியேற்ற பின்னர் ஆறு மாதத்தில் தமிழக மீடியாக்களை நம்ம கண்ட்ரோல்ல கொண்டுவந்து விடலாம். சம்பந்தப்பட்ட துறைக்கு நம்ம முருகன் ஜி தான் அமைச்சர்னு பேசியது நியாபகம் இருக்கா உங்களுக்கு ?
அந்த துறை மூலமாக மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் தமிழக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க சார்.
அதை விட்டுட்டு, நான் இப்படி தான் பேசுவேன். பேட்டியை போட்டா போடுங்க.இல்லேன்னா குப்பையில் போடுங்கன்னு பேச்சு. இது ஆணவத்தின் உச்சம் இல்லையா ?
உங்களையும் உங்கள் கட்சியையும் மதித்து, பல மணி நேரம் காத்திருக்கும் ஊடக/பத்திரிகையாளர்களை மிகவும் அவமானப்படுத்துகிறீர்கள் அண்ணாமலை.
மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா,கருணாநிதி போன்றோர் அவதூறு செய்தி எழுதப்பட்டதாக கூறி எத்தனையோ வழக்குகளை தொடந்துள்ளனர். சில நேரங்களில் கடுமை கூட காட்டியுள்ளனர்.
ஆனால் ஒரு நாளும் இப்படி தொடர்ச்சியாக ஊடகங்களையும் / பத்திரிக்கையாளர்களையும் இழிவு படுத்தியதில்லை.
உண்மையை சொல்கிறேன். உங்களைப்போல ஒரு ஆசாமியை தமிழக ஊடகத்துறை இதுவரை சந்தித்ததில்லை.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என மதிக்கப்படும் இந்திய பத்திரிகைத் துறைக்கு உலகளவில் என்ன பெயர் என்று தெரியுமா மிஸ்டர் அண்ணாமலை உங்களுக்கு ?
GodiMedia
இந்திய ஊடகத்துறை உலகளவில் சந்தி சிரித்துக் கிடக்கிறது அண்ணாமலை. சந்தி சிரித்துக் கிடக்கிறது. இதெல்லாம் எதுவும் தெரியாமல் நீங்கள் ஏதோ கோபாலபுர மீடியாக்கள் என வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அது போல GodiMediaவாக தமிழக மீடியா மாறவில்லை என்பதுதான் உங்கள் ஏக்கமா ?
ஆளும் பா.ஜ.க. அரசு ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துகிறது என தெரியுமா உங்களுக்கு ? உங்கள் கட்சி ஊடகங்களை கையாண்ட விதத்தை சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள்.
ABP தொலைக்காட்சியில் MasterStoke என்ற ஒரு நிகழ்ச்சியை புன்யா ப்ரசூன் பாஜ்பாய் என்ற ஊடகவியலாளர் நடத்திக்கொண்டிருந்தார்.
ஒரு நாள். பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, சீத்தாப்பழ விவசாயம் மூலம் தனது லாபம் இரட்டிப்பானது என்று பேசினார். அவர் பொய்யாக அப்படி பேசியதையும், அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து பேச வைத்தனர் என்பதையும் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திவிட்டார் புன்ய பிரசூன்.
அடுத்து என்ன நடந்தது தெரியுமா ?
மோடி என்ற பெயரையே பயன்படுத்தக்கூடாது என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. MasterStoke நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதெல்லாம் செயற்கைகோள் ஒளிபரப்பில் தொழில்நுட்பரீதியாக இடைஞ்சல் கொடுக்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கருப்புப்பண மீட்பு போராட்டம் எனும் நாடகம் நடத்தி பிஜேபி ஆட்சிக்கு பிறகு பெரும் தொழிலதிபரான யோகா குரு பாபா ராம் தேவின் ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், அந்த தொலைக்காட்சிக்கு கொடுத்து வந்த அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது. கடைசியில் புன்ய ப்ரசூன் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இப்படி மத்திய அரசின் அழுத்தத்தால் வேலையைவிட்டு துரத்தப்பட்ட,,அல்லது ராஜினாமா செய்து விலகிய நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரே ஒரு உதாரணத்தை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.
Rights & Risks Analysis Group –RRAG என்ற அமைப்பு “இந்தியா: கோவிட்-19 ஊரடங்கின் போது ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறை” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையை படித்திருக்கிறீர்களா அண்ணாமலை ?
புலம் பெயர் தொழிலாளர்கள்,, கொரோனா கால மக்களின் பிரச்சனை குறித்து பேசிய நபர்கள் மீது கொரோனா குறித்து தவறான தகவலை பரப்புவதாக கூறி 31 பத்திரிகையாளர்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்பட்டது. அதில் பெரும்பாலானவை பிஜேபி ஆளும் மாநிலங்கள்.
உண்மையில், அப்போது தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்களே கொரோனா பரவலுக்கு காரணம் என்ற மதத்துவேஷ பிரசாரத்தை உங்கள் கட்சி மட்டுமே இந்தியா முழுமைக்கும் செய்துகொண்டிருந்தது.
நீங்கள் செய்த மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு தமிழகம் உட்பட இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஊடகங்களும் உதவியது.
தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊடகவியலாளர்கள் கேடு விளைவிப்பதாக அரசு மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுவது உலகத்திலேயே, இந்தியாவைத்தவிர வேறு எந்த நாட்டிலும் நடப்பது கிடையாது.
கடந்த மாதம் Inter National Press Institute (IPI) அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை படித்தீர்களா அண்ணாமலை ? உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறியுள்ளது மிஸ்டர் அண்ணாமலை.
அந்த ஆய்வறிக்கை எந்த ஒரு பத்திரிகையாளர் இந்தியாவில் விமர்சனங்களை வைத்தாலும் பா.ஜ.க., ஆதரவாளர்களால் தேச விரோதிகள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் என மிரட்டப்படுவதாக என அதில் சுட்டிக்காட்டி இருந்தது. இந்தியாவில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்த ஆய்வறிக்கை அது.
180 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியாவின் இடம் 142.
பத்திரிகையாளர்கள் அதிகம் கொலை செய்யப்பட்ட நாடுகளில் போதைப்பொருள் வர்த்தகம் கோலோச்சும் மெக்ஸிகோ முதலிடம். அங்கு 7 பேர் கொலை. இந்தியா இரண்டாமிடம். 6 பேர் படுகொலை.
பத்திரிகை சுதந்திரம் குறித்த குறியீட்டை Reporters Without Borders என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. 180 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியா அதிலும் நமக்கு 142-வது இடமே.
அதிகார அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அண்ணாமலை. 24 மணி நேரமும் எப்போது மதக் கலவரத்தை தூண்டலாம், பிரிவினையை ஏற்படுத்தலாம் என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த விபரங்கள் தெரிய வாய்ப்பில்லை.
சமூக வலைதள பிரிவில் பிஜேபிக்காக களமாடும் தேசியவாதிகள் என கூறிக்கொள்வோர் மத்திய அரசை விமர்சிக்கும் ஊடகங்களை விபச்சார ஊடகங்கள் என கூறிவரும் போக்கை அறிவீர்களா ?
வேளாண் சட்டத்திற்கெதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஊடகங்களை நோக்கிப்போட்ட கோஷம் என்னவென தெரியுமா அண்ணாமலை உங்களுக்கு ?
GodiMedia Down. Down.
கடைசிவரை தேசிய ஊடகங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணமென்ன தெரியுமா ? மத்திய அரசின் கால்களை பற்றிக்கொண்டிருக்கிறதென்ற கோபம்.
மத்திய அரசை விமர்சிக்கும் பெண் பத்திரிகையாளர்களை உங்கள் கட்சியைசேர்ந்தவர்கள். தூக்கிப்போட்டு கற்பழிக்க வேண்டுமென பேசியதெல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கா ?
இப்படி இன்னும் நிறைய இருக்கிறது அண்ணாமலை பிரதர்.
ஆனால, பாருங்களேன். ஊடகவியலாளர்களுக்கான பிரச்சனைகள் குறித்து கூட ஊடகங்களும்/பத்திரிகைகளும் பேசியதில்லை. அதற்கு எந்த நிர்வாகமும் அனுமதிப்பதில்லை. ஊடகவியலாளர்களை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். கடிக்கலாம். தாக்கலாம்.
ஊடகவியலாளர்களிடையேயும் நீங்கள் உங்களின் விஷப்பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறீர்கள். டைம்ஸ் நவ் செய்தியாளர் ஷபீர் அஹமது மற்றும், டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளர் ஜூலி மாரியப்பன் ஆகியோரை நீங்கள் குறிவைத்து விமர்சனம் செய்வதன் பின்னணியில் இருப்பது, உங்களின் மதவெறி மட்டுமேயன்றி வேறு அல்ல.
அப்புறம் நீங்கள்,அதாவது உங்கள் கட்சி பிரிவினைவாதிகளை/ பயங்கரவாதிகளை தமிழக ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைக்கிறது இல்லையா.!
அதனால் அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறேன்.
தமிழ்நாட்டில் தினந்தோறும் அறிக்கை விடும் ஒரு கட்சி பாமக.
அதன் தலைவர் சமூகநீதிக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். எத்தனையோ போராட்டங்கள்,மக்கள் பிரச்சனைக்காக எவ்வளவோ வழக்குகளை அந்த கட்சி நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. ஆனால் பாருங்கள் அவரது அறிக்கைக்கோ, அந்த கட்சி குறித்த செய்திகளுக்கோ ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஊடகங்கள் மீது டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு மிகவும் வருத்தம் மற்றும் கோபம் இருக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மண்,மலை,காடு,கடல் என அவர் கையிலெடுக்காத பிரச்சனைகளே இல்லை.மக்களுக்காக நடையாய் நடந்து ஓடாய் தேய்ந்து போன மனிதர். நேரடியாக அவரே நீதிமன்றத்தில் ஆஜராகியும் வாதிடுவார். முக்கியமான பிரச்சனைகள் குறித்து பல பக்கங்கள் எழுதி நன்கு விரிவாக அறிக்கை கொடுப்பார். ஆனால்.தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள்/பத்திரிககைகள் பெரிதாய் சட்டை செய்யாது.செய்வதுமில்லை
கம்யூனிஸ்ட் கட்சிகள்.
ரோடு சரியில்லை என்றால் சாலையில் நாத்து நடும் போராட்டம்,கவுன்சிலரை காணவில்லை என போஸ்டர் ஓட்டுவது என மக்களுக்கான எக்கச்சக்கமான பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுகிறார்கள். அவர்களுக்காவது ஊடகங்கள் முக்கியத்துவம் தருகிறதா என்றால் அதுவும் கிடையாது.
மாநில உரிமை,மனித உரிமை சமூக நீதி என எல்லா பிரச்சனைகளுக்காகவும் வீதிக்கு வந்து போராடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறதா என்றால் நிச்சயம் கிடையாது.
தேசிய அளவிலான பிரச்சனைகளை வெளிப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகளையோ,அல்லது அந்த கட்சியின் நிகழ்ச்சிகளுக்கோ தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் தருவது இல்லை.
சரி. மழை வெள்ளம் புயல் போன்ற பேரிடர் காலங்களில் உயிரைக்கொடுத்து பணியாற்றும் இஸ்லாமிய கட்சிகள்/ அமைப்புக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் போராட்டங்களை செய்தியாக போடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் விஜயகாந்த், வாசன், சீமான், வேல்முருகன் என பல தலைவர்கள் பல அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
பல கூட்டங்களை நடத்துகிறார்கள். எந்த பத்திரிகையும் ஊடகமும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை நான் குறிப்பிடாத பல கட்சிகளும் அமைப்புக்களும் கூட இருக்கிறது.
கோவில்,ஹிந்து மதம் இதைத்தாண்டி உங்கள் கட்சி ஒருநாளும் ஒன்றையும் செய்தது கிடையாது. கடவுள்கள் மீது நீங்கள் காட்டிய அக்கறையை மக்கள் மீது நீங்கள் காட்டியதே இல்லை.
அவ்வளவு ஏன் கடந்த 10 ஆண்டுகளில் ஏதாவது தமிழகத்தில் ஊழல் குறித்து பேசி இருக்கிறீர்களா ? ஏதாவது புகார். ம்ம்ஹூம்…
மக்கள் பிரச்சனைக்காக ஒரே ஒரு வழக்கைக்கூட உச்ச/உயர்நீதிமன்றத்திலோ தொடுக்காத ஒரு கட்சி இந்தியாவில் இருக்கிறதென்றால் அது பிஜேபி மட்டுமே.
நீட் தேர்வு சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தான் தமிழக பிஜேபி வரலாற்றிலேயே முதல் வழக்கு.
மேலே நான் சொன்ன எல்லா கட்சிகளும் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்த மாநிலத்தின் மக்களுக்கான எல்லா பிரச்சனைகள் குறித்தும் பேசி இருக்கிறார்கள்.ஏன் நீதிமன்றம் வரை சென்று கூட போராடி இருக்கிறார்கள்.
ஆனால, ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே செய்யாத உங்களுக்கு கர்நாடகாக சிங்கம் என்று டைட்டில் கொடுத்து ஏதோ ஒரு ஆர்வக்கோளாறு செய்தியாளர் உங்களை ஆளாக்கிவிட்டான் பாருங்க.
அதே போன்ற ஆர்வக்கோளாறோடு இருக்கும் செய்தியாளர்கள். தமிழகத்தின் எந்த கட்சிக்கும்/ தலைவருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை உங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளோடு பழகி பழகி ஊடகத்துறையினருக்கும் தோல் தடித்து சொரணையே இல்லாமல் போய்விட்டது.
அதனால் தான் வெட்கமின்றி உங்களது வாலை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ரத்தம் வருமளவு கடித்தாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் திரும்பவும் வருவார்கள்.
இப்போது. நீங்களே சொல்லுங்கள். யாரை ஆதரிக்கிறது தமிழக ஊடகங்கள் ?
ஆனால். நீங்கள் சொல்வது உண்மை தான். அண்ணாமலை. ஒப்புக்கொள்கிறேன். பிரிவினைவாதிகளையும் / பயங்கரவாதிகளையும் தான் தமிழக ஊடகங்கள் / பத்திரிகைகள் ஆதரிக்கிறது.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி மக்களவையில் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு தொகுதியின் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் Tapir Gao பேசிய உரையை கேட்டு இருக்கமாட்டீர்கள்.
அதனால் அவரது பேச்சை சுருக்கமாக சொல்கிறேன்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே.
இந்த பிரச்னையை நான் இப்போது பேசவில்லை என்றால், இந்த நாடும் அடுத்துவரக்கூடிய தலைமுறையும் ஒருபோதும் என்னை மன்னிக்காது.
14 நவம்பர் 2019 பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சல பிரதேசம் சென்றார். சீனா அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தது. இந்தியா அமைதியாக இருந்தது. குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் அருணாச்சலப் பிரதேசம் சென்றார்கள். அப்போதும் ஒவ்வொரு முறையும் சீனா கடுமையாக எதிர்த்தது. ஆனால் நம்முடைய தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.
நான் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அருணாச்சலப்பிரதேசத்தில் நடக்கும் சீன ஆக்ரமிப்பு குறித்து பேசுங்கள். எழுதுங்கள். ஏன் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள். 60 கிலோ மீட்டர் பரப்பளவில் சீனா அருணாச்சல பிரதேச பகுதிகளை ஆக்ரமித்துவிட்டது. நான் நாடாளுமன்ற அவையின் சபாநாயகராகிய உங்கள் மூலமாக இந்தியாவில் இருக்கும் ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறேன் பாகிஸ்தான் குறித்த பிரச்சனை என்றால் கொடுக்கும் முக்கியத்துவத்தில், ஏன் சிறிய அளவு முக்கியத்துவம் கூட அருணாச்சல பிரதேசத்திற்கு கொடுக்க மறுக்கிறீர்கள். பத்திரிகை-தொலைக்காட்சிகள்-எதிர்க்கட்சிகள்,இந்த அவையில் கூட ஏன் யாருமே பேச தயங்குகிறீர்கள். தயவு செய்து பேசுங்கள். பத்திரிகை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களே தயவு செய்து பேசுங்கள், எழுதுங்கள்.
இல்லையென்றால் அருணாச்சல பிரதேசம் மற்றொரு டோக்லாமாக மாறிவிடுமென கூறி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் எந்த ஊடகமும் பத்திரிகையும் அவர் குறிப்பிட்ட அருணாச்சல பிரதேசம் குறித்து பேசவில்லை.
அவ்வளவு ஏன். கடந்த வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் 15 பகுதிகளுக்கு சீனா புதிதாக பெயர் கூட வைத்துவிட்டது. ஆனால் இப்போதும் இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஊடகங்களும் தமிழகம் உட்பட வாயை மூடிக்கொண்டுதான் இருக்கின்றன.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து வரும் ஜம்மு காஷ்மீர் குறித்து எந்த ஊடகங்களும் பேசுவதில்லை.
இந்த நாட்டின் பொருளாதாரம் நாசமாகிவிட்டதென உங்கள் கட்சியின் எம்.பி சுப்ரமணிசாமி சொல்வதை எந்த டிவியும் பேசுவதில்லை.
தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து யாரும் பேசுவதில்லை. இப்படி எக்கச்சக்கமான பிரச்சனைகள் இருக்கிறது பேசுவதற்கு. ஆனால் எந்த தொலைக்காட்சிகளும் பேசுவதில்லை. பத்திரிகைகளும் எழுதுவதில்லை.
இப்போது நீங்களே சொல்லுங்கள். இந்திய ஊடகங்களை GodiMedia என்று சொல்கிறார்களே. அது உண்மையா.அல்லது நீங்கள் சொல்வது உண்மையா மிஸ்டர் அண்ணாமலை ?
B.R.அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்
Good article
Please tell current status about Mugilan
Annamalai always performs his best in everything, his performance as an IPS officer stood as an example. Just like the quote “HISTORY REPEAT ITSELF”, Annamalai is performing well as a BJP state head. As we all know the nature of BJP is toxic and religious politics by extreme methods. It’s expected that Annamalai will act as a puppet of BJP and there his actions show us the very own nature of BJP heads and members, So I kindly suggest changing the topic from “Why are you so arrogant Annamalai? ” to “Another roll model of BJP, Annamalai!”.
அரவிந்தாக்ஷன்.. சத்தியம் டீவியில் நீங்கள் எப்போதாவது கிருத்துவ மிஷனரிகள், கிருத்துவ பள்ளிகளில் நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றி கண்டித்து விவாதம் நடத்தியது உண்டா?
வாடா கண்ணா, அண்ணாமலையை பற்றி கேட்டால் இப்படித்தான் அக்ரஹாரங்கள் கிருத்துவ பள்ளியை பற்றி கேட்பானுவ. ஏன்? பத்மா சேஷாத்ரி பள்ளி யோக்கியதை என்னாச்சு??
Hats off…
💯 truth senior journalist savukku sankar always standing on right side
இங்கே ஆளும் அரசுக்கு பக்கவாத்தியம் வாசிக்க அவர்களது செய்தி நிறுவனங்களே நிறைய உள்ளன..ஆனால் நடுநிலை நாளேடுகளாக தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் தின,வார,மாத பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் பெரும்பாலனவை மக்கள் அனுபவிக்கும் அரச பயங்கரவாத துன்புறுத்தல்களை பூசி மெழுகி மறைத்து சில அன்னக்காவடி, வெத்துவேட்டு, வாய்ச்சொல் சவடாலில் பெயர்வாங்கிய கட்டுரை ஆசிரியர் சுட்டும் மேற்கண்ட நபர் போன்ற மூன்றாம் தர அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்தி வருவதயும் மக்கள் நன்கு அறிவர். சம்பவம் செய்த கட்டுரையாளருக்கும், வெளியிட்ட வலைத்தளத்திற்கும் எனது பாராட்டுக்கள்…
Very well written, tks to Savukku Sankar for reproducing it. BJP party is Indian nation’s SHAME and BJP taking India to down path , Indian people soon realise it, is better for India.
does Annamalai have the necessary literacy and sufficient intelligent quotient to understand the well-intended article? Like Frog he is making noise.
Goti media ,என்று சொல்வதை விட RSB media என்று சொல்லப்படுவதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள்.
Hatras ,பற்றி எழுதும் கையை தமிழகத்தில் அதே போன்ற சம்பவம் நடக்கும் போது எழுத விடாமல் எந்த சக்தி உங்கள் கைகளை முறுக்குகிறது.
அது கோபாலபுரம் இல்லை என்று சொல்லி விட்டுப் போங்கள். ஆனால், எழுத முடியவில்லையே.