அன்றாடம் நாம் பார்க்கும் காட்சிகள், படிக்கும் செய்திகள், சந்திக்கும் மனிதர்கள் நம் மீது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவை நம் ஒவ்வொருவர் வாழ்விலும், பல்வேறு கோணங்களில் பிரதிபிலிக்கின்றன. அவற்றை பகிர்ந்துகொண்டு நாம் ஒரு உரையாடலை தொடங்குவது, நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலை புரிந்து கொள்ள உதவலாம் என்று நினைக்கிறேன். அவ்வகையில், இவ்வாறான நிகழ்வுகளை பதிவு செய்யலாம் என்று தோன்றியது. அந்த அடிப்படையில் இத்தொடரை தொடங்குகிறேன்.
2014ல் பிஜேபி முழு பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது முதலாகவே, முழுநேர சிறுபான்மையினரை ஒடுக்குவது, அவர்களை அச்சத்துக்குள்ளாக்குவது, என வெளிப்படையாக களமிறங்கியுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். இப்போக்கு 2019 தேர்தலில், புல்வாமாவில் நடந்த தாக்குதலின் அடிப்படையில் பெற்ற அசுரத்தனமான வெற்றிக்குப் பின்னர் வெளிப்படையாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஹரித்வாரில் நடந்த இந்து சன்சத் மாநாட்டில், இந்தியாவை தூய்மைப்படுத்த வேண்டும், அதற்காக இன அழிப்பு செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுந்த வெளிப்படையான கூக்குரல்களை பார்த்தே வருகிறோம். இதன் தொடர்ச்சியாக மற்றொரு மதச் சிறுபான்மையினரான கிறித்துவர்கள் மீதும் தாக்குதல்கள் தொடரத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆறு மாத காலமாக இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இத்தாக்குதல்கள் திடீரென்று அதிகரிக்க காரணம் இருக்கிறதா என்றால் காரணம் இருக்கிறது.
உத்திரப் பிரதேச தேர்தல் பிஜெபிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் அதிக மக்கள் தொகை மற்றும் பரப்பளவு கொண்ட ஒரு மாநிலமாக இருக்கும் உத்திரப் பிரதேசம், மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்புகிறது. கடந்த முறை 303 இடங்களில் வென்ற பிஜேபிக்கு, உத்திரப் பிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த தேர்தலில் பிஜேபி பின்னடைவை சந்திப்பது, 2024 தேர்தலையும் தாண்டி பாரதூர விளைவுகளை ஏற்படுத்த வல்லது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் மட்டுமல்லாது, இந்த ஆண்டு ஜூலையில் நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்.
2017ல் உத்திரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபி மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை இடங்களான 403ல் 325 இடங்களை பெற்று ஆங்கிலத்தில் சொல்வது போல brutal majority யை பெற்றது. அத்தகைய அதீதப் பெரும்பான்மையை பிஜேபி அத்தேர்தலில் பெற்றதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கும் புகழும் ஒரு பெரும் காரணமாக இருந்ததை மறுக்க முடியாது.
இந்த தேர்தலிலும், மோடியே பிஜேபியின் தேர்தல் யுக்தியின் பிரதான அம்சமாக இருப்பார் என்பதை உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பதவியில் இருக்கும் மோடியின் செல்வாக்கு 2017ம் ஆண்டு இருந்தது போல இப்போதும் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். பிஜேபியின் சாதனைகளாக அவர்கள் பல்வேறு விஷயங்களை சொன்னாலும், அவை களத்தில் பிரதிபலிக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதை மற்றவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நன்றாகவே உணர்ந்திருக்கிறது.
இச்சூழலில் பிஜேபி உபி, மற்றும் இதர மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கு அவர்களின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில், மதவெறியை தூண்டுவது மட்டுமே ஒரே வழி என்று முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்னாலும் அவர்கள் மதவெறி அரசியலைத்தான் செய்து கொண்டிருந்தார்கள் என்றாலும், இம்முறை இதன் வீச்சு அதிகமாகி, அது வன்முறைக்கு இட்டுச் செல்லுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்திலேயே, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், 2017க்கு முன், இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருட்கள் கிடைத்து வந்தது என்று கூசாமல் மேடையில் பேசினார்.
இந்தியாவின் வளர்ச்சிக் குறியீடுகள் எதை எடுத்துக் கொண்டாலும், அதில் இஸ்லாமியர்கள் பின் தங்கியே உள்ளனர் என்பதை பல்வேறு புள்ளி விபரங்கள் சொன்னாலும், கூசாமல் மதவெறியை தூண்டி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் பிஜேபி இத்தகைய விஷப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, உத்திரப் பிரதேச முதல்வர், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, உத்திரப் பிரதேச தேர்தல், 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது என்று பேசியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
UP elections will be about '80 per cent vs 20 per cent': CM Yogi Adityanath
(@isamarths) pic.twitter.com/jRQJbX0lyw— IndiaToday (@IndiaToday) January 9, 2022
உத்திரப் பிரதேசத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மையினர் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள, Scroll இணையதளம் வெளியிட்டுள்ள இக்கட்டுரை தொடர்களை படியுங்கள்.
இது மட்டுமல்லாமல், மக்கள் வரிப்பணத்தில் உத்திரப் பிரதேச அரசு இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், 2017ம் ஆண்டுக்கு முன்னர் ஒருவர் கலவரத்தில் ஈடுபட்டது போல ஒரு படமும், 2017க்கு பிறகு, கலவரத்தில் ஈடுபட்டவர், கைகூப்பி மன்னிப்பு கேட்பது போலவும் ஒரு படம் இருந்தது. முதல் படத்தில் இருப்பவர் இஸ்லாமியர் போன்ற தோற்றத்தில் இருந்தது, பிஜேபி என்ன சொல்ல வருகிறது என்பதை வெளிப்படையாகவே அறிவித்தது.
இதன் உச்சகட்டமாக, உத்திரப்பிரதேசம் வாரணாசியில், கங்கை கரைகளில் “இந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கங்கை நதி என்பது அனைவருக்கு சொந்தம். இம்மண்ணின் மைந்தர்களுக்கு சொந்தம். இன்னும் சொல்லப்போனால் மனிதகுலத்துக்கே சொந்தம். ஆனால் ஒரு நதியின் கரையில் கூட மாற்று மதத்தினர் வரக்கூடாது என்று வெளிப்படையாக நடக்கும் பிரச்சாரம் தேர்தல் வெற்றிக்காக பிஜேபி எந்த அளவுக்கு செல்லும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
இத்தகைய போக்கு என்பது இந்தியாவில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை நினைத்தால் அச்சமூட்டுகிறது. இந்தியாவின் மூத்த நடிகர் நசிருதீன் ஷா, மூத்த பத்திரிக்கையாளர் கரன் தாப்பருக்கு முஸ்லீம்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்று பேசிய இந்து சன்சத் மாநாடு குறித்து, அளித்த பேட்டியில், “மத வெறியை தூண்டுவது போல பேசுபவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரிகிறதா என்று தெரியவில்லை. 20 கோடி மக்களை அத்தனை எளிதில் அழித்து விட முடியாது. 20 கோடி மக்கள் எதிர்த்து போரிடுவார்கள். 20 கோடி மக்கள் தங்களின் தாய்நாடான இந்நாட்டை மீட்க போராடுவார்கள். நாங்கள் இங்கேதான் பிறந்தோம். எங்கள் குடும்பங்கள் இங்கேதான் வாழ்ந்து மடிந்தன. இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்ற முயற்சி தொடங்கினால், அது கடுமையான எதிர்விளைவுகளையும் சீற்றத்தையும் ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளது ஆழ்ந்த பொருள் கொண்டது.
இத்தகைய போக்கு தொடர்ந்தால் அதன் விளைவுகள் என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இதுவா காந்தியும் நேருவும் கனவு கொண்ட இந்தியா ?
Savukku Sir.. If you dont mind can you create an app?
நல்ல முயற்சி, முன்னெடுத்தமைக்கு பாராட்டுக்கள். இந்த தொடர் சவுக்கு தளத்தோடு நின்றுவிடக் கூடாது, வெகுஜன மக்கள் படிக்கவும் ஆவணம் செய்ய வேண்டும், அப்போதுதான் உங்களின் இந்த முன்னெடுப்பு அதன் முழுப் பயனை அடையும், அடையவும் வேண்டும். நீங்கள் ஏன் ஒரு மாதாந்திர அல்லது காலாண்டு பத்திரிக்கை தொடங்கக்கூடாது? If there is funding issues, please initiate a crowd funding page, I pledge to donate Rs. 1.00 lakh as my contribution.