விசாரணைக்கு உத்தரவிட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இனியும் என்ன செய்கிறீர்கள்? இத்தனைக்கு பிறகும் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர் மாற்றப்படவில்லை. விசாரணையின் போக்கைப் பார்த்தால், இன்னும் பத்தாண்டு இழுப்பீர்கள் போல? நேர்மையை கடைபிடிக்கும் விஷயத்தில், அரசே எவ்வளவு அக்கறையாக நடந்து கொள்கிறது என்பதை இதை வைத்தே தெளிவாக அறிய முடிகிறது…’’
-ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில்தான் கடந்த வாரம் இப்படி மத்திய அரசை காய்ச்சி எடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஜன்பத் இல்லம் முதல் கோபாலபுரம் வரை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பது நீதிபதிகளின் இந்த பாய்ச்சல் கேள்விகள்தான்!
மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பாக இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் சில வருடங்களாகவே இந்திய அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை மையம் கொண்டு வீசி வரும் இந்த புயலில் இப்போது உச்ச நீதிமன்றத்தின் சாட்டையடிக் கேள்விகளும் சேர்ந்திருக்கின்றன.
‘சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன்’ என்ற அமைப்பும் சுப்பிரமணியன்சுவாமியும் தனித்தனியாக டெல்லி ஹைகோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, வழக்கு போட்ட இருதரப்புமே உச்ச நீதிமன்றத்தை நாடின. நீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) பணிக்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலமாக சென்னை, ஜோத்பூர், மும்பை, டெல்லி, குர்கான் என்று இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் தொடர்ந்து ரெய்டு நடத்தியது சி.பி.ஐ.
இந்நிலையில், மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் இது தொடர்பாக விசாரித்து, அரசிடம் ஓர் இடைக்கால வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார். இந்த வரைவு அறிக்கை மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியன் ‘உடல் நிலை சரியில்லை’ என காரணம் காட்டி ஆப்சென்ட் ஆகி, தனக்குப் பதில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவலை அனுப்பி வைத்தார்.
இதனால் கொதிப்படைந்த ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுதான் தங்கள் கடுமையை காட்டிவிட்டது.
சி.பி.ஐ. மீது உச்ச நீதிமன்றம் காட்டம் காட்டியதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வின் குமார் சந்தித்துப் பேசியதாகச் சொல்கிறார்கள்.
‘ஸ்பெக்ட்ரம் வழக்கை ஆட்சியாளர்களின் அரசியல் லாபத்துக்காக நடத்தப் போய்தான் சி.பி.ஐ.க்கு இப்படி பழிச் சொல் ஏற்பட்டிருக்கிறது. வழக்கை நேர்மையாக நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இல்லையென்றால், சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பில் இருந்து நான் விலகி விடுகிறேன்’’ என்று பிரதமரிடம் அஸ்வின் குமார் சொன்னதாக டெல்லியில் தகவல் பரவிக் கிடக்கிறது. இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தியிடமும் ஆலோசித்தாராம். ஜெயலலிதாவும் ‘‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்குப் பிறகும் ஆ.ராசா அமைச்சராகத் தொடரலாமா?’’ எனக் கேட்டு கொந்தளித்திருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு போனவர்களில் முக்கியமானவரான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டபோது, ‘‘பல ஆயிரம் கோடிகள் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் சுருட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு இப்போதுதான் சீரியஸான கட்டத்தை எட்டி இருக்கிறது. இனியும் இதனை யாரும் மூடி மறைக்க முடியாது. நீதிபதிகள் வழக்கின் தீவிரத்தை புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். தொலைத் தொடர்புத் துறையிலிருந்து ராசாவை அப்புறப்படுத்தும் வரையில் ஓயமாட்டேன்…’’ என்றார்.
இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘ஏற்கனவே டான்ஸி வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ‘முதல்வர் என்பதால் சட்டத்தை வளைத்தீர்களா?’ என்று கூட கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்துச் சொன்னார்கள் நீதிபதிகள். ஆனால், தீர்ப்பு மாறாக வரவில்லையா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டுத்தான் இருக்கிறது. மற்றபடி, இதனால் கூட்டணி முறியும் என்றெல்லாம் சொல்வது, அபத்தம்…’’ என்றார்.
சர்ச்சைகளின் மையத்தில் இருக்கும் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடமே பேசினோம். ‘‘ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து நான் விளக்கமாக எதுவும் பேச முடியாது. தொலைத் தொடர்புத் துறையின் நேர்மையான செயல்பாடுகள் குறித்தெல்லாம் கோர்ட்டில் சொல்வோம். என்னை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம் பலிக்கப் போவதில்லை…’’ என்றார்.
டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் பேசியபோது… ‘‘ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு காரணமே அவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால்தான். சென்ற ஆட்சியிலேயே ஆ.ராசா மீது இந்தப் புகார்கள் வந்தபோதும் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்துக்கு காங்கிரஸ் பணிந்தது. ஆனால், இப்போது அதை வலுக்கட்டாயமாக செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளால் முரண்பட்டு நிற்கும் தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான கூட்டணியில்கூட இதனால் பிளவு ஏற்படலாம்’’ என்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும் நவம்பர் 15-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கடுமையை குறைக்க முயலும் என்ற எதிர்பார்ப்பு டெல்லியில் கூடிக் கொண்டிருக்கிறது.
ராசா மீதான பிரதமரின் நடவடிக்கை என்பது குறைந்தபட்சம் ராசாவின் இலாகாவை மாற்றுவதாகவும், அதிகபட்சம் அமைச்சர் பதவியிலிருந்தே நீக்குவதாகவும் இருக்கலாம். இதில் எது நடந்தாலும் தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி முறிவுக்கான முதல் படியாக இருக்கும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் ‘ஸ்பிளிட்’ரமாக உருவெடுத்திருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்!