ரிலையன்ஸ் நிதியுதவி பெற்ற ஒரு நிறுவனம் எப்படி பாஜகவின் முகநூல் பிரச்சாரத்தின் வீச்சை அதிகரித்தது ?
சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சாதகமான விதிகளை பயன் படுத்தி முகநூல் நிறுவனம், ரிலையன்சின் நிறுவனத்தை கோடிக்கணக்கில் பாஜக பிரச்சாரத்துக்காக முகநூலில் செலவழிக்க அனுமதித்தது
2019 பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சி, ஒரு இந்து சாமியாரை களமிறக்கியது. இவர் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளானவர். மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாக்குரை தனது வேட்பாளராக லோக் சபாவுக்கு தேர்வு செய்ததும், முகநூல் ஒரு விளம்பரத்தை காண்பிக்கிறது, அது செய்தி போன்ற தோற்றத்தை கொண்டு இருக்கும் ஒரு விளம்பரம், அதன் தலைப்பு உண்மைக்கு புறம்பாக இருக்கிறது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மகாராஷ்டிராவின் மாலேகானில் 6 பேர் குண்டு வைத்து கொல்லப்பட்டனர். அந்த குண்டு வைக்க பயன்படுத்த தனது இரு சக்கர வாகனத்தை கொடுத்ததாக பிரக்யா தாக்குர் மீது குற்றச்சாட்டு. இதில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதாக பொய்யாக அந்த விளம்பரம் இருந்தது. உண்மையில் அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து கொண்டு இருக்கிறது. அவர் விடுவிக்க படவில்லை என்பதே உண்மை. இந்த பொய் விளம்பரம் 3 லட்சம் பார்வைகளை ஒரு நாளில் பெற்றது. சிறையில் இருந்து மருத்துவ சிகிச்சை என்று சொல்லி பரோலில் வெளிவந்த பிரக்யா தாக்குர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு ஏப்ரல் 11 அன்று, முகநூல் ஒரு விளம்பரத்தை காண்பித்தது. அதில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல்காந்தி மட்டம்தட்டி கிண்டலடிக்கப்பட்டார். பாஜக தீவிரவாதத்தின் மீது மென்மையான போக்கு கொண்டு இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி பேசி இருந்தார். 1990 இறுதியில் கடந்த முறை ஆட்சியில் இருந்த போது பாஜக, மசூத் ஆசாரை விடுதலை செய்ததை சுட்டிக்காட்டி அவ்வாறு பேசி இருந்தார். மசூத் ஆசார் என்பவர், பாகிஸ்தானை அடித்தளமாக கொண்ட ஆயுதம் ஏந்திய அமைப்பின் தலைவர். இந்த அமைப்பை இந்தியா தீவிரவாத அமைப்பு என அறிவித்து இருந்தது. இதை ராகுல் குறிப்பிடும் போது வஞ்சப்புகழ்ச்சியாக மசூத் ஆசாரை ‘ஜீ’
என்று குறிப்பிட்டார். அவர் உள்ளபடியே, பிஜேபியை கிண்டல் செய்யவே மசூத் ஆசாரை “ஜி” என்று அழைத்தார்.
ஆனால் மேற்கூறிய விளம்பரத்தில் ராகுல் கூறிய அந்த முக்கிய வரலாற்று குறிப்பு நீக்கபட்டிருந்தது. அதாவது மசூத் ஆசார் என்ற தீவிரவாத இயக்க தலைவனை பாஜக சிறையில் இருந்து விடுவித்த குறிப்பை ராகுல் பேச்சில் இருந்து நீக்கிவிட்டு அவர் மசூத் ஆசாரை ‘ஜீ’ என்று மரியாதையாக புகழ்ந்தது போல அந்த விளம்பரத்தில் வெளியிடப்பட்டது. அதுவும் அது ஒரு NEWJ என்ற லோகோவுடன் ஒரு செய்தி வெளியீடு போல சித்தரிக்கப்பட்டு இருந்தது. ‘ராகுல் மசூத் ஆசாரை ‘ஜீ’ என்றழைத்தபோது’ என்ற தலைப்புடன் மீம் தயாரிக்கப்பட்டு இருந்தது. 4 நாட்களில் அது 6.5 லட்சம் பார்வைகளை அது ஈர்த்தது.
மேற்கூறிய இரு விளம்பரங்களுக்கும், ‘NEWJ’ என்ற முகநூல் கணக்கு பணம் கொடுத்து இருக்கிறது. இந்த தகவல் நமக்கு முகநூலின் விளம்பர நூலகத்தில் (Facebook Ad Library இல்) கிடைக்கிறது. இதில் முகநூலின் தாய் நிறுவனமான Meta நிறுவனங்களின் விளம்பர விவரங்கள் கிடைக்கிறது. NEWJ என்பது New Emerging World of Journalism Limited என்பதன் சுருக்கம். இது ஜியோ பிளாட்பாரம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உபநிறுவனமாகும் (Subsidiary of Jio Platforms Limited). ஜியோ நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு நிறுவனம் என்பது நாம் அறிந்ததே. ஒரு கட்டத்தில் அது
தேர்தல் ஆணையம் சட்டத்தின் ஓட்டை களையும், முகநூல் விதிகள் மற்றும் முறைகளை வசதியாக உபயோகித்து இந்தியாவின் மிகப்பெரிய பணமுதலை, மில்லியன் கணக்கில் பணத்தை மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக முகநூல் வழியாக செலவு செய்ய அனுமதித்து இருக்கிறது. அதுவும் பொய்யாக சித்தரிக்கப்பட்ட விளம்பரங்கள். இது வேட்பாளர் செலவு கணக்கிலோ கட்சி செலவு கணக்கிலோ நேரடியாக வராத வண்ணம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். (அதனால் தேர்தல் ஆணையத்தின் உச்சபட்ச செலவு வரம்பில் இந்த தொகை கணக்கு செய்யப்பட வில்லை). 2019 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 9 மாநில தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது நாம் அறிந்ததே.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை உறுதி செய்வதற்காக, முகநூல் நிறுவனம் இது போல இன்னொருவர் மூலம் கொடுக்கப்படும் விளம்பரங்களை கண்டுபிடிக்கும் செயலில் ஈடுபட்ட போதும், காங்கிரசுக்கு சாதகமான விளம்பரங்களைத்தான் நீக்கினார்களே ஒழிய NEWJ போன்ற பாஜக ஆதரவு விளம்பரங்கள் பெரிய அளவில் அனுமதிக்கப்பட்டன.
கடந்த ஆண்டில், இந்தியாவில் இயங்கும் ஒரு இலாப நோக்கற்ற ஊடக அமைப்பான தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ், பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரை, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட 536,070 அரசியல் விளம்பரங்களின் தகவல்களை பகுப்பாய்வு செய்தது. இது Facebook இன் Ad Library Application Programming Interface (API) மூலம் தரவை அணுகியது, இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், அந்த 22 மாதங்களில், 2019 தேசிய தேர்தல் மற்றும் ஒன்பது மாநில தேர்தல்களை, முகநூலின் விளம்பர தளம் ஒரு நேர்மையற்ற அரசியல் போட்டியாக ஆக்கி விட்டது. பிஜேபிக்கு அதன் போட்டியாளர்களை விட நியாயமற்ற நன்மையை அளித்திருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் பகுதியில், சட்ட ஓட்டைகளைச் பயன் படுத்தி, பிஜேபிக்கு ஆதரவாக பினாமி விளம்பரங்களை வெளியிடுவதற்கு முகநூல் நிறுவனம் எப்படி அனுமதித்தது என்று பார்ப்போம்.
பிஜேபியின் பினாமி விளம்பரங்களின் அளவு மற்றும் தாக்கம் மற்றும் ஃபேஸ்புக்கின் வழிமுறைகள் (அதன் அல்காரிதம், வழிமுறைகள் மற்றும் விதிகள்) தேர்தலின் போது அதன் போட்டியாளர்களை விட பிஜேபிக்கு எப்படி நியாயமற்ற மேலாதிக்கத்தை வழங்குகிறது என்பதை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
உண்மை செய்தி போல தெரியும் படி ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள்
NEWJ சமூக ஊடகங்கள் மூலம் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள மக்களுக்கு “புதிய செய்திகளை” வழங்குவதற்கான ஒரு Start Up நிறுவனமாக தன்னை பற்றி சொல்லி கொள்கிறது. ஆனால் உண்மையில் இந்த நிறுவனம், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில், விளம்பர இடத்தை விலை கொடுத்து வாங்குகிறது. அதில் அரசியல் விளம்பரங்கள், குறிப்பாக செய்திகள் போல சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை வெளியிடப்பட்டன. அதன் உள்ளடக்கம் பாஜகவை மறைமுகமாக உயர்த்துவதாகவே இருந்தது. தவறான தகவல்கள், முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுதல் மற்றும் எதிர்கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தல்.
உண்மையான முகநூல்வாசிகளால் உருவாக்கப்பட்ட இடுகைகளைப் போலல்லாமல், இந்த விளம்பரங்கள்
அதிக காலத்திற்கு மக்கள் கண்முன்னே நின்றன, அதிக மக்களை சென்றடைந்தன. முகநூல் உபயோகிப்பவரின் இடம், நடவடிக்கை, ஒரு பகுதியின் ஜனத்தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் போன்ற முகநூலிடம் உள்ள தகவல்களுக்கு ஏற்றாற்போல் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டன, மக்கள் குறி வைக்கப்பட்டனர். இது போல வேறு சில நாடுகளின் தேர்தல்களில் பேஸ்புக்கை பயன்படுத்தி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தி வாக்குகளின் போக்குகளை மாற்றிய விபரம் ஏற்கனவே வெளியானது.
தேர்தலுக்கு முன்னதாக வெளிப்படைத்தன்மையைக் கோரும் வகையில், ஃபேஸ்புக் பிப்ரவரி 2019 இல் அதன் விளம்பர நூலகத்தில் இந்தியாவில் “அரசியல் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும்” டேக் செய்து காட்டத் தொடங்கியது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய மூன்று மாதங்களில் NEWJ பக்கம் சுமார் 170 அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதாக அந்த விளம்பர நூலகம் காட்டுகிறது. பெரும்பாலான பிஜேபி தலைவர்களை மிக உயர்வாக பேசுவது, மோடிக்கு வாக்காளர்களின் ஆதரவை காட்டுவது, தேசியவாத மற்றும் மத உணர்வுகளை தூண்டுவது ,பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்கள் , எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர்கள் நடத்திய பேரணிகளையும் கேலி செய்தல் போன்றன இந்த அரசியல் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் திணிக்கபட்டது.
இந்த விளம்பரங்கள், கவனமாக, இடைவிடாது சம்பந்தமில்லாத வீடியோக்களுக்கு இடையே பரப்ப பட்டன. அரசியல் அல்லாத வீடியோக்கள்,வரலாறு கலாச்சாரம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் வைரல் வீடியோக்களுக்கு இடையே பரப்பி விடபட்டன. ஒரு அதிகாரி ஊனமுற்ற குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது, ஒரு மாற்றுதிறனாளி பெண் காலால் பரீட்சை எழுதுவது போன்ற எளிய வைரல் வீடியோக்கள் NEWJ வுக்கு நல்ல பெயர் வாங்க இடையிடையே போடப்பட்டன.
பாஜகவின் பினாமி விளம்பரதாரர்
NEWJ நிறுவனர் ஷலப் உபாத்யாய், ரிலையன்ஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டுடனும் நெருங்கிய குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளார். அவரது தந்தை உமேஷ் உபாத்யாய், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஊடக இயக்குநராக உள்ளார். மேலும் இந்தியாவில் செய்தி சேனல்களை நடத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நெட்வொர்க்-18 குழுமத்தில் செய்தித் தலைவராக பணியாற்றினார். அவரது நெருங்கிய உறவினர் சதீஷ் உபாத்யாய் பாஜக தலைவர் மற்றும் கட்சியின் டெல்லி பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார்
NEWJ, BJP உடன் எந்த முறையான உறவையும் அறிவிக்கவில்லை, மேலும் அரசியல் விளம்பரங்களை உருவாக்க அல்லது வெளியிடுவதற்காக பாஜக கட்சி NEWJ க்கு பணம் செலுத்தியதற்கான எந்தப் பொதுப் பதிவும் இல்லை. ஜனவரி 2018 இல் தொடங்கப்பட்டதிலிருந்து மார்ச் 2020 வரை, நாங்கள் NEWJ இன் நிதிநிலைகளை மதிப்பாய்வு செய்த காலம். இந்த காலத்தில், செய்தி செயல்பாடுகள் மூலமாகவோ அல்லது விளம்பரங்களை ஊடகங்களில் வைத்து கொடுப்பதற்கான கட்டணமாகவோ NEWJ நிறுவனம் ஒரு ரூபாய் கூட வருமானம் ஈட்டவில்லை. மாறாக, ரிலையன்ஸ் குழுமத்தால் NEWJ நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தையே விளம்பரங்களுக்காக செலவழித்தது, இதையே நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் காண்பிக்கின்றன.
ஒரு அரசியல் வேட்பாளருக்கு சாதகமாக ஆனால் அந்த வேட்பாளரால் நேரடியாக நிதியளிக்கப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத பினாமி விளம்பரங்களை வெளியிடுவது இந்தியச் சட்டத்தின்படி குற்றம் ஆகும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மறைமுகமாக அந்த வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்ல, எதிரில் நிற்பவர்கள் ஒருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னால் போதுமே.
தேர்தலுக்கு செலவிடப்படும் பணத்தின் மூலத்தை வெளிப்படையாக வைப்பதற்கும் அரசியல் அமைப்புக்களுக்கு பொறுப்பு கொடுப்பதற்கும் இப்படி பினாமி நிறுவனங்கள் மூலம் விளம்பரங்கள் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் கூறுகிறது. ஆனால், நாட்டில் தேர்தல்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான இந்திய தேர்தல் ஆணையம், இந்த தடையை ஃபேஸ்புக் போன்ற டிஜிட்டல் தளங்களுக்கு நீட்டிக்கவில்லை. இப்படி ஒரு சட்ட ஓட்டை இருப்பது பல வருடங்களாக தெரிந்தும் தேர்தல் ஆணையம் இந்த பினாமி விளம்பர கட்டுபாட்டை டிஜிட்டல் தளங்களுக்கு நீட்டிக்காமல் இருக்கிறது. இது ரிப்போர்ட்டர்ஸ் கல்லெக்டிவ் நிறுவனம் பெற்ற தகவல் பெறும் உரிமைச் சட்ட தகவல் மூலம் தெரிய வருகிறது.
அப்படி பார்க்க போனால் முகநூலின் தாய் நிறுவனமான Meta கூட எந்த விதிகள் பற்றியும் கவலைப்படாமல் ரிலையன்சின் NEWJ , சத்தமில்லாமல் பாஜக மற்றும் அதன் வேட்பாளர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகித்து வளர்ப்பதை தேர்தலின் போது அனுமதித்து இருக்கிறது. இது Meta நிறுவனத்துக்கு தெரியாது என்பது நம்புவதற்கில்லை.
இது தவிர, முகநூலின் ஊழியர் திரு ஃப்ரான்சிஸ் ஹவுகன் முகநூல் நிறுவனத்தின் உள்ளே உள்ள தகவல்களை கசியச்செய்து இருந்தார்.
அதில் தெரியவருவது என்னவென்றால், முகநூல் நிறுவனம், Internet and Mobile Association of India (IAMAI) என்ற அமைப்பு மூலம் தேர்தல் ஆணையத்தோடு உறவாடி நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கடுமையான விதிகளை சோஷியல் மீடியா தளங்களுக்கு வைக்காமல் பார்த்து கொண்டது.
இது போன்ற பினாமி விளம்பர தாரர்களை களைந்துவிட்டதாக முகநூல் நிறுவனம் மார்தட்டி கொண்டாலும், உண்மையில் அது களைந்தது காங்கிரஸுக்கு ஆதரவான விளம்பரதாரர்களைத்தான். முகநூல் உலகம் முழுக்க பெருத்த சத்தத்துடன் செய்த களையெடுப்பான (“Coordinated Inauthentic Behaviour”) ஒருங்கிணைந்த நம்பகத்தன்மையற்ற நடத்தையின் கீழ் அது களை எடுத்தது 687 காங்கிரசுக்கு ஆதரவான முகநூல் பக்கங்கள் மற்றும் கணக்குகளை. காங்கிரசுடன் தனது தொடர்பை வெளிப்படுத்தாமல் காங்கிரசை ஆதரித்து பதிவு போட்டதற்காக இவை நீக்கப்பெற்றன.
ஆனால் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக அது களைந்தது ஒரே ஒரு பக்கம் மற்றும் 14 முகநூல் கணக்குகள் மட்டுமே. சில்வர் டச் என்ற ஒரு நிறுவனம் தனது பாஜக தொடர்பை வெளிப்படுத்தாமல் முடக்கப்பட்ட இவற்றை வைத்திருந்தது.
ஒரு நேர்காணலில், ஃபேஸ்புக்கின் சைபர் செக்யூரிட்டி பாலிசியின் தலைவரான நதானியேல் க்ளீச்சர் கூறினார்: “நாங்கள் இங்கே எந்த பக்கங்கள், குழுக்களைத் தேடுகிறோம் என்றால் அவை சுதந்திரமாகத் தோற்றமளிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் உண்மையில் ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சியுடன் தொடர்பு உடையவை. அந்த தொடர்பை மறைக்க முயற்சி செய்கின்றன. செய்திப் பக்கங்கள் போல் பாசாங்கு செய்யும் ஆனால் உண்மையில் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் கணக்குகளின் உதாரணங்களையும் அவர் வழங்கினார்.
“ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குள், ஒரு நாட்டிற்குள் இருந்து வரும் ஒருங்கிணைந்த நம்பகத்தன்மையற்ற நடத்தைக்கு எதிரான நடவடிக்கைகளை உலகம் முழுக்க நிறுத்தியதாக முகநூல் அறிவித்தது,” என்று விசில்-ப்ளோவராக மாறிய முன்னாள் பேஸ்புக் ஊழியர் சோஃபி ஜாங், தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்விடம் தெரிவித்தார்.
உண்மையை சொன்னால், பெரும்பாலும் காங்கிரசை முன்னிறுத்திய பக்கங்களை இலக்காகக் கொண்ட ஆரம்ப களையெடுப்பிற்கு பிறகு, 2019 தேர்தலின் போது அல்லது அதற்குப் பிறகு எந்தவொரு கட்சியின் விளம்பரதாரர்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
NEWJ வின் பக்கங்கள் தொடர்ந்து பாஜகவையும் அதன் தலைவர்களையும் பதிவுகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பரப்புரை செய்ததால் பாஜக பல மாநிலங்களில் பலன் அடைந்தது. இந்த பதிவுகளை முகநூல் எந்த ஆய்வுக்கும் உட்படுத்தவே இல்லை.
பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரை, NEWJ 22 மாதங்கள் , 10 தேர்தல்களில் 718 அரசியல் விளம்பரங்களை வெளியிட்டது, அவை கூட்டாக 29 கோடிக்கும் அதிகமான முறை பேஸ்புக் பயனர்களால் பார்க்கப்பட்டதாக விளம்பர நூலக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விளம்பரங்களுக்காக ரிலையன்சின் NEWJ நிறுவனம் 5.2 மில்லியன் ரூபாயை (52 லட்சம் ரூபாய்) ($67,899) செலவிட்டுள்ளது.
இந்த விளம்பரங்களில் பல முஸ்லீம் மற்றும் பாக்கிஸ்தான் எதிர்ப்பு உணர்வுகளை பற்றி எரிய வைத்தன, பாஜகவின் எதிரிகள் மற்றும் விமர்சகர்களை தாக்கின, மோடியின் அரசாங்கத்தைப் புகழ்ந்துரைத்தன.
கீழே சில உதாரணங்கள்:
ஏப்ரல் 2019 இல், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, மோடி ஒரு தேர்தல் பேரணியில், இந்தியாவின் அணுசக்தி குறித்து பாகிஸ்தானை எச்சரித்து “தேசியவாத” உணர்வுகளைத் தூண்டினார். “பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் கொள்கையை இந்தியா நிறுத்திவிட்டது. ஒவ்வொரு நாளும் ‘எங்களிடம் அணுசக்தி பொத்தான் உள்ளது, எங்களிடம் அணுசக்தி பொத்தான் உள்ளது’ என்று அவர்கள் கூறினர். அப்படியென்றால் நம்மிடம் இருப்பது என்ன? அதை தீபாவளி கொண்டாடவா வைத்திருக்கிறோம்? ” என்றார். இதற்கு பதிலளித்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மோடியின் எதிர்ப்பாளருமான மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அணுகுண்டுகளை இந்தியா தீபாவளிக்கு வைக்கவில்லை என்றால், பாகிஸ்தானும் தனது அணுகுண்டுகளை ஈத் பண்டிகைக்காக வைக்கவில்லைதானே? பிரதமர் மோடி ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி அரசியல் பேச்சுக்கள் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை’ என பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மோடியின் உரையை பற்றி அவர் குறிப்பிட்டதை மறைத்து முஃப்தியின் இந்த ட்வீட்டை மட்டும் துண்டாக பயன்படுத்தி, ஒரு NEWJ விளம்பரம் அவரை பாகிஸ்தான் ஆதரவாளர் என்று சித்தரித்தது. “மெகபூபாவின் பாகிஸ்தான் மீதான காதல் இரண்டாவது முறையாக அம்பலமானது. மெகபூபா முப்தி மீண்டும் பாகிஸ்தானின் பக்கம் சாய்ந்தார்” என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
NEWJ விளம்பரங்கள் இந்து மத உணர்வையும் தூண்ட முற்பட்டன, இது பாஜகவின் முக்கிய யுக்தியாகும். மே 2019 இல், “#BoycottAmazon” ட்விட்டரில் பிரபலமடைந்தது, உலகளாவிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமும், இந்தியாவில் சில்லறை விற்பனையில் ரிலையன்ஸின் போட்டியாளருமான Amazon, இந்து கடவுள்களின் உருவங்கள் கொண்ட தயாரிப்புகளை விற்பது கண்டறியப்பட்டது. NEWJ ஒரு விளம்பரத்தை விரைவாக இயக்கியது, அதில் “இந்தியா தனது சக்தியை அமேசானுக்கு காட்டுகிறது. மக்களின் கோபம் வெளியே வந்துவிட்டது. கடவுள் மற்றும் தெய்வங்களின் தயாரிப்புகளுடன் உள்ள பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது.”
மே 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, NEWJ அரசாங்கக் கொள்கைகள் மற்றும் BJP தலைவர்களைப் பாராட்டிய அல்லது புதிய அச்சுறுத்தலைப் பற்றி பயமுறுத்தும் கதைகளைத் தொடர்ந்தது.
2019 டிசம்பரில், பிஜேபி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து முஸ்லிம் அல்லாத அண்டைநாட்டு அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க முடிவு செய்தபோது, நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் வீசியது. ஆனால் நவம்பர் 2020 இல், NEWJ , வங்காளதேசத்தில் உள்ள இந்து வீடுகளைத் முஸ்லிம்கள் தாக்கும் வீடியோக்களைக் காட்டிய பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இஸ்லாத்தை அவதூறாகக் கூறம் முகநூல் வதந்தியினால் ஏற்பட்ட தாக்குதல் அவை. இந்த விளம்பரம் மூலம் புதிய குடியுரிமைச் சட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள போராட்டக்காரர்களிடம் தெரிவிக்க முயற்சிக்கபட்டது. சிறுபான்மை இந்துக்கள் எப்பொழுதும் (வங்காளதேசத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள்) பெரும்பான்மையினர் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று மக்கள் மனதில் பதிய வைக்க முயல பட்டது.
மோடி அரசாங்கத்தின் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் இந்திய விவசாயிகளுக்காக பாடகி ரிஹானாவும் மற்ற உலகப் பிரபலங்களும் குரல் கொடுத்தபோது, NEWJ விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் ‘புகழ்பெற்றவர்கள்’ ஏன் ‘தூண்டப்பட்ட’ விவசாய போராட்டம் பற்றி பேசுகிறார்கள் ஆனால் ‘இந்தியா’ தாக்கப்பட்ட போது அமைதி காத்தார்கள் என்று.
திட்டமிட்ட முறையாக செய்யப்பட்ட முதலீடு
ஷலப் உபாத்யாயும் அவரது சகோதரி தீக்ஷாவும் ஜனவரி 2018 இல் 100,000 ரூபாய் ($1306) செலுத்தப்பட்ட மூலதனத்துடன் NEWJஐ ஒரு தனியார் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக நிறுவினர். நவம்பர் நடுப்பகுதியில், ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) உடன் 75 சதவீத பங்குகளை வாங்கி
NEWJ ஐக் கைப்பற்றியது. மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மூலம் நிறுவனத்திற்கு 84 மில்லியன் ரூபாய் ($1.1 மில்லியன்) கடன் கொடுத்தது (840 லட்சம் ரூபாய்)
பணத்துடன் கொழுத்த NEWJ அதே வேலையைச் செய்தது – சமூக ஊடகங்களில் வீடியோக்களை தயாரித்தல் மற்றும் வெளியிடுதல், பெரும்பாலும் பாஜகவை விளம்பரப்படுத்தும் விளம்பரங்கள், முகநூல் மற்றும் YouTube நிகழ்ச்சிகளில் NEWJ தயாரிப்பு போன்றவை. மார்ச் 2019 நிதியாண்டின் முடிவில் 22.06 மில்லியன் ரூபாய் ($288,046) நிகர இழப்பை ஈட்டியது. ஆண்டு மொத்த வருமானமே 3.37 மில்லியன் தான்.
அடுத்த ஆண்டு ரிலையன்ஸ், கடன் பத்திரங்கள் மூலம் மீண்டும் 125 மில்லியன் ரூபாயை ($1.63 மில்லியன்) NEWJக்கு கடனாக கொடுத்தது. மார்ச் 2020 முடிந்த நிதியாண்டில், NEWJ எந்த வருவாயையும் பதிவு செய்யவில்லை, ஆனால் 27.3 மில்லியன் ரூபாய் ($356,467) விளம்பரச் செலவுகளை செய்து இருந்தது. முந்தைய ஆண்டு விளம்பர செலவு 6.06 மில்லியன் ரூபாயாக ($79,128) இருந்தது. அந்த நேரத்தில், RIIHL பங்குகளை மற்றொரு ரிலையன்ஸ் குழும நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் எடுத்துக்கொண்டது.
கவனிக்க பட வேண்டியது என்ன என்றால் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம் மார்ச் 2021 இல் முடிவடைந்த நிதியாண்டில் 902.9 பில்லியன் ரூபாய் ($12.07 பில்லியன்) வருவாய் ஈட்டிய நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.
ஜியோ NEWJ நிறுவனத்தில் பங்குகளை எடுத்துக்கொள்வதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, NEWJ அதன் ‘ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷன்’ ஐத் திருத்தியது.
எப்படி என்றால், NEWJ சமூக வலைத்தளங்களில் பதிவதற்காக என்ன செய்திகளை உருவாக்குகிறதோ அதை தீர்மானிக்கும் “உள்ளடக்க வழிகாட்டுதல்களை” அங்கீகரிக்கும் உரிமையை தனது முதலீட்டாளருக்கு அதாவது ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு வழங்குகிறது என்று. மார்ச் 2021 முடிவடையும் நிதியாண்டில் 0.0001% வருடாந்திர வட்டி விகிதத்தில் NEWJ க்கு ஜியோ மேலும் ரூ 84.96 மில்லியன் ரூபாயை ($1.12 மில்லியன்) கடனாக வழங்கியது. ஜியோ பேஸ்புக்கை ஒரு முதலீட்டாளராகக் கருதுகிறது.
“சமூக ஊடகங்களுக்காக பிரத்தியேகமாக” வெளியிடும் அதன் குறு வீடியோக்கள் மொத்தம் 4 பில்லியன் நிமிடங்கள் பார்க்கப் பட்டிருப்பதாகவும், 22 பில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைந்திருக்கிறது (இது உலகின் மக்கள்தொகை போல மூன்று மடங்கு) எனவும் NEWJ கூறுகிறது.
தேர்தல் ஆணையமும் முகநூல் நிறுவனமும் கண்களை மூடிக்கொண்டன
பண பலத்தால் தேர்தல் வளையாமல் தடுக்க, இந்திய தேர்தல் சட்டங்கள் ஒரு வேட்பாளர் பிரச்சாரத்திற்கு செலவிடும் பணத்திற்கு உச்ச வரம்பிடுகின்றன. வேட்பாளருடன் எந்த அறிவிக்கப்பட்ட தொடர்பும் இல்லாத மூன்றாம் தரப்பினர், அச்சு மற்றும் மின் ஊடகங்களில் அந்த வேட்பாளரின் விளம்பரங்களுக்கு பணம் செலுத்தினால், அது வேட்பாளரின் செலவாகவே தேர்தல் ஆணையம் கருதுகிறது. பாரம்பரிய ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை செய்திகள் போல தோற்றமளிக்கும் படி போடும் நிகழ்வுகளையும் தேர்தல் ஆணையம் விசாரிக்கிறது. ஒரு வேட்பாளரை பற்றி பரப்புரை செய்வதற்காக ஒரு ‘செய்தி’ உண்மையில் பணம் கொடுத்து போடப்பட்ட செய்தி போன்ற விளம்பரம் என்று கண்டறியப்பட்டால், அந்த விளம்பரத்திற்கான உண்மையான அல்லது மதிப்பிடப்பட்ட தொகையை அந்த வேட்பாளரின் தேர்தல் செலவில் ஆணையம் சேர்க்கிறது.
ஆனால் இந்த சட்டங்கள்/விதிகள், சமூக வலைத்தளங்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு செயல்படுத்தப் படுவதில்லை.
2013 ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் ஒரு விஷயத்தை கட்டாயப்படுத்தியது.
அதாவது, அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், ‘சமூக ஊடக’ விளம்பரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து முன்கூட்டியே சான்றிதழ் பெற்று, அவற்றுக்கான செலவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மூன்றாம் தரப்பினரால் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் வேட்பாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக தொடர்பு படுத்தப்படாத நிறுவனங்கள், இந்த ஒழுங்குமுறைக்குள் வராமல் பினாமி விளம்பரங்களுக்கான ஓட்டையை திறந்து வைத்தது.
தேர்தல் ஆணையம், தனது அக்டோபர் 25, 2013 தேதியிட்ட உத்தரவில், சமூக ஊடகங்கள் மின் ஊடகத்தின் ஒரு பகுதியாகும் என்றும், அதே பாணியில் விளம்பரங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஆணையம் கூறியது. ஆனால், “கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரத்துடன் தொடர்புடைய அல்லது நியாயமான முறையில் தொடர்புபடுத்தக்கூடிய பதிவுகளை” வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சிகளைத் தவிர பிறர், இடுகையில், அதை எவ்வாறு கையாள்வது என்பதை இன்னும் பரிசீலித்து வருவதாக அது மேலும் கூறியது.
இந்த பரிசீலனைகளின் முடிவுகளை அறிய இந்த ஆண்டின் தொடக்கத்தில் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் RTIயில் சில தகவல்களை வினவியது. பதிலில், தேர்தல் ஆணையம், சமூக ஊடகங்களுக்காக மார்ச் 2019 இல் இண்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) வரைவு செய்த “தன்னார்வ நேர்மை நெறிமுறைகளை” மேற்கோள் காட்டியது. தேர்தலின் நம்பகத்தன்மையை பராமரிப்பதற்காகவே அதுவும் சமூக வலைதளங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட
இந்த நெறிமுறைகள், பினாமி விளம்பரங்கள் குறித்து எந்த குறிப்பிட்ட பரிந்துரையையும் கொண்டிருக்கவில்லை. இது நாடாளுமன்ற மற்றும் ஒன்பது மாநில தேர்தல்களுக்கு சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு ஓட்டை.
தேர்தலை வளைத்ததாக அமெரிக்காவில் கெட்ட பெயர் வாங்கிய பிறகு, அரசியல் விளம்பரங்கள் கொடுக்கும் நபர்களின் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்க்க முகநூல் 2018 இல் ஒரு கொள்கையை வெளியிட்டது. விளம்பரங்களுக்கு யார் பணம் செலுத்துகிறார்கள் என்பதை தெரிவிக்கும்படி, அத்தகைய விளம்பரதாரர்கள் அனைவரையும் அது இப்போது கேட்கிறது மற்றும் விளம்பர நூலகத்தில் நிதியளிக்கும் நிறுவனத்தின் விவரங்களையும் காட்டுகிறது. இருப்பினும், விளம்பரதாரரின் அடையாள வெளிப்பாடுகள் உண்மையா என்பதை முகநூல் சரிபார்ப்பதில்லை. அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் வேட்பாளர்கள் சார்பாக அந்த விளம்பரங்களுக்கு நிதியுதவி செய்கிறார்களா என்பதையும் அது சரிபார்ப்பதில்லை.
“தகுதிபெற்ற” செய்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் அனைத்து விளம்பரங்களுக்கும் முகநூல் விலக்கு அளிக்கிறது.
NEWJ இன் விளம்பரங்களுக்கு இந்த விதிவிலக்குகளை Facebook பயன்படுத்தவில்லை. அதாவது, முகநூலின்படியே NEWJ ஒரு சுயாதீனமான செய்தி நிறுவனத்திற்கான தகுதியை பெறவில்லை.
ரிலையன்ஸ் விளம்பரப்படுத்திய NEWJ மட்டும் தான் பாஜகவுடன் உள்ள தனது உறவை வெளிப்படுத்தாமல் Facebook விளம்பரங்கள் மூலம் BJP யை ரகசியமாக விளம்பரப்படுத்தியிருக்கிறதா? தொடரின் பகுதி 2, முகநூலின் வாடகை விளம்பர சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றவர்களை வெளிப்படுத்தும்.
– குமார் சம்பவ், நயன்தாரா ரங்கனாதன்
அல் ஜஸீரா கட்டுரையின் ஆங்கில இணைப்பு :
தமிழகத்தில் தினமலரும் இதையே தானே செய்கிறது ….
Very intrested… you are a good political reviewer.. informations are worth to indian citizens…
Long time no see sir…Informative article…thanks