இந்தியாவில் பேஸ்புக்கின் மிகப்பெரிய அரசியல் வாடிக்கையாளரான பிஜேபி குறைந்த பணத்தில் அதிக வாக்காளர்களை சென்றடைய மலிவான விலைகள் அனுமதித்தன.
பேஸ்புக் தளத்தில் 2019 பிப்ரவரி முதல் 2020 நவம்பர் வரை வெளியிடப்பட்ட 5,36,070 அரசியல் விளம்பரங்களை லாபநோக்கம் இல்லாத மீடியா அமைப்பு ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ (டிஆர்சி) மற்றும் ஆராய்ச்சித் திட்டமான ‘அட் வாட்ச்’ ஆய்வு செய்தன.
பாஜக, அதன் வேட்பாளர்கள் மற்றும் பாஜகவுடன் தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்து, ஒரு விளம்பரத்தை 10 லட்சம் முறை காட்டுவதற்கு சராசரியாக 41,844 ரூபாய் கட்டணத்தை பேஸ்புக் வசூலித்தது என ஆய்வில் தெரியவந்தது. அதேநேரத்தில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அதன் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்து ஒரு விளம்பரத்துக்கு 53,766 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது பாஜவிடம் வாங்கப்பட்ட கட்டணத்தைவிட 29 சதவீதம் அதிகம் ஆகும்.
அரசியல் விளம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யும் பாஜ, காங்கிரஸ் கட்சிகளை மட்டுமே ஒப்பிட்டு டிஆர்சி, அட் வாட்ச் ஆய்வு நடத்தின. 22 மாதங்களில் பாஜவும், பாஜவுடன் தொடர்புடைய அமைப்புகளும் பேஸ்புக் தளத்தில் அவர்களுடைய அதிகாரபூர்வ பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிட மொத்தம் 10.41 கோடி ரூபாய் செலவு செய்தன. மாறாக, காங்கிரசும், அதன் அமைப்புகளும் 6.44 கோடி ரூபாய் செலவு செய்தன.
காங்கிரஸ் கட்சியிடம் கூடுதல் விகிதத்தில் பேஸ்புக் கட்டணம் வசூலித்தது. பாஜவிடம் வசூலிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் அதே அளவு விளம்பரங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தைவிட கூடுதலாக 1.17 கோடி ரூபாயை காங்கிரஸ் கொடுக்க நேரிட்டது.
பாஜவுக்கு ஆதரவாக விளம்பரங்கள் வெளியிட அதிக அளவில் பினாமி விளம்பரதாரர்களை பேஸ்புக் அனுமதித்தது. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட விளம்பரங்கள் முடக்கப்பட்டு, பாஜ ஆதரவு விளம்பரங்கள் மட்டுமே அதிக முறை காட்டப்பட்டு, கூடுதல் நபர்களை சென்றடைந்தன.
பாஜவின் அதிகாரபூர்வ பக்கங்களில் வெளியான விளம்பரங்களுடன், பாஜவுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பினாமி விளம்பரங்களையும் சேர்த்தால், பாஜவுக்கான விளம்பர கட்டணம் சராசரியாக 39,552 ரூபாய் ஆகும். ஆனால், காங்கிரஸ் ஆதரவான விளம்பரங்களுக்கு சராசரியாக 52,150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது 32 சதவீதம் கூடுதல் ஆகும்.
சுப்ரீம் கோர்ட் அச்சம்
2020ம் ஆண்டு டில்லியில் வன்முறை கலவரம் வெடித்தபோது, பகைமை மற்றும் வெறுப்பை துாண்டிவிட பேஸ்புக் தளம் பயன்பட்டது என புகார் எழுந்தது. இதுகுறித்து டில்லி அரசு அமைத்த விசாரணை கமிட்டி முன்னிலையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பேஸ்புக் மனுத் தாக்கல் செய்தது. அதில், உலகம் முழுவதும் 24 கோடி பயனாளர்கள் கொண்ட நடுநிலை தளம் என பேஸ்புக் கூறிக் கொண்டது.
ஆனால், அதை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து, ‘நம்நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு அடிப்படையான தேர்தல் மற்றும் ஓட்டு நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலாக சமூக வலைத்தளங்களின் தில்லுமுல்லுகள் உருவாகியுள்ளன’ எனறு அச்சம் தெரிவித்தது.
2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருதலைபட்சமாக பாதிப்பு ஏற்படுத்த பேஸ்புக் பயன்பட்டது என்ற புகார் மற்றும் வெளிநாடுகளில் நடந்த சர்ச்சைகள் அடிப்படையில், இந்த கருத்தை சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
கட்டண நிர்ணயம்
தேர்தல் பிரச்சாரத்தில் பாஜவின் கை ஓங்கும் விதத்தில், பேஸ்புக் தளத்தின் விளம்பர கட்டண நிர்ணய வழிமுறை அமைந்திருந்தது என டிஆர்சி, அட் வாட்ச் நடத்திய ஆய்வில் புள்ளிவிபர ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
விளம்பரங்களை பேஸ்புக் வெளியிட்ட பின்னரே அதற்கு அரசியல் கட்சிகளும், பினாமி விளம்பரதாரர்களும் பணம் கொடுக்கின்றனர். பத்திரிகைகள் மற்றும் டி.வி சேனல்களில் வெளியிடப்படு்ம விளம்பரங்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், பேஸ்புக் தளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு மாறுபட்ட கட்டணங்களை பேஸ்புக் உரிமையாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் வசூலிக்கிறது. யாரை விளம்பரம் சென்றடைய வேண்டும் என்பதை விளம்பரதாரர் வரையறுக்கலாம். ஆனால், பயனீட்டாளரின் ஸ்கிரீனில் எத்தனை முறை விளம்பரம் தோன்றும் என்பதையும், அதற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் தெளிவற்ற வழிமுறைகளில் மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிர்ணயிக்கிறது.
விளம்பர கட்டணத்தை நிர்ணயிப்பதில் இரு வழிமுறைகள் முக்கியமானவை: விளம்பரம் சென்றடைபவர்கள் கண்களின் மதிப்பு என்ன? அவர்களுக்கு விளம்பரத்தின் தகவல் எப்படி பொருத்தமானது?
எனினும், ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தின் கட்டணம் நிர்ணயத்துக்கான கணக்கீட்டை மெட்டா பிளாட்பார்ம்ஸ் வெளியிடுவதில்லை.
மொத்தம் 10 தேர்தல்களில், 9 தேர்தல்களின்போது விளம்பரங்களுக்கு செலவிடப்பட்ட பணம் மற்றும் விளம்பரங்கள் பார்க்கப்பட்ட எண்ணிக்கையை ஆய்வு செய்து, 10வது தேர்தலுடன் ஒப்பிட்டால் கிடைப்பது ஒரே முடிவு மட்டுமே : அது பாஜவுக்கு சாதகமான செயல்பாடு என்பதே.
பாஜ மற்றும் வேறு கட்சிகளுக்கு வெவ்வேறு விளம்பர கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து இ-மெயில் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மெட்டா பிளாட்பார்ம்ஸ் அனுப்பிய பதிலில், ஒருவருடைய அரசியல் நிலை அல்லது கட்சி தொடர்பு என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா விளம்பரதாரர்களுக்கும் சரிசமான கொள்கைகளை நாங்கள் அமல்படுத்துகிறோம். ஒரு நபருக்காக விளம்பர பணி மற்றும் கட்டணம் குறி்த்து ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்படுவதில்லை’ என தெரிவித்தது.
ஆனால், பாஜ – காங்கிரஸ் இடையே விளம்பர கட்டண பாகுபாடு பற்றி மெட்டா பிளாட்பார்ம்ஸ் விளக்கம் அளிக்கவில்லை.
மாறுபட்ட கட்டணங்கள்
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் அதனுடன் சேர்த்து நடத்தப்பட்ட ஒடிஷா, அருணாச்சல பிரதேம், சிக்கிம், ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னதாக 3 மாத பிரச்சார காலத்தில், ஒரு விளம்பரத்தை 10 லட்சம் முறை காட்டுவதற்கு பாஜ மற்றும் அதன் வேட்பாளர்களிடம் சராசரியாக 61,584 ரூபாய் கட்டணத்தை பேஸ்புக் வசூலித்தது. அதே நேரத்தில், காங்கிரஸ் மற்றும் அதன் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு சராசரியாக 66,250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதன்பின்னர், அரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜ, காங்கிரஸ் கட்சிகளிடம் வெவ்வேறு விளம்பர கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
2020ம் ஆண்டு நடந்த டில்லி சட்டசபைத் தேர்தலில், ஒரு விளம்பரத்தை 10 லட்சம் முறை காட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் வேட்பாளர்களிடம் சராசரியாக 39,909 ரூபாய் கட்டணத்தையும், பாஜக மற்றும் அதன் வேட்பாளர்களிடம் சராசரியாக 35 ஆயிரத்து 596 ரூபாய் கட்டணத்தையும் பேஸ்புக் வசூலித்தது.
அதேநேரத்தில், டில்லி தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு சராசரியாக 54 ஆயிரத்து 173 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது பாஜ கொடுத்த விளம்பர கட்டணத்தைவிட 80 சதவீதம் அதிகம் ஆகும். மேலும், 2020ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், பாஜவிடம் சராசரியாக 37,285 ரூபாய் கட்டணமும், காங்கிரஸ் கட்சியிடம் சராசரியாக 42,207 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டன. அதே தேர்தலில், பாஜவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திடம் 66,704 ரூபாய் விளம்பர கட்டணத்தை பேஸ்புக் வசூலித்தது.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்கு விளம்பர கட்டணம் குறைவாக இருந்தது. அப்போது, பாஜவிடம் 43,482 ரூபாய் கட்டணமும், காங்கிரசிடம் 38,124 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டன.
கட்டண பாகுபாடு
தேர்தல் களத்தில் எல்லா கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு சரிசமான வாய்ப்பு வழங்கப்படும் விதத்தில், வேட்பாளர்களின் பிரச்சார செலவுக்கு இந்திய தேர்தல் சட்டங்கள் உச்சவரம்பு விதித்துள்ளன. ஆனால், விளம்பரத்துக்கு செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிக வாக்காளர்களை சென்றடைய பாஜக மற்றும் அதன் வேட்பாளர்களை பேஸ்புக் அனுமதித்தது. இதன்மூலம் ஜனநாயக தேர்தல் நடைமுறையில் முக்கியமான அரசியல் போட்டியை திசைதிருப்பி, பாஜவுக்கு சாதகம் ஏற்பட பேஸ்புக் வழிவகுத்தது என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நியூயார்க் சாப்ட்வேர் பிரீடம் லா சென்டரின் சட்டப்பிரிவு இயக்குனர் மிஷி சவுத்ரி கூறுகையில், ‘தேர்தல் செலவுகளில் விளம்பர கட்டண பாகுபாடு பற்றி இந்திய தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் உலக தொடர்புப் பிரிவு துணைத் தலைவர் நிக் கிளெக் மற்றும் சமூக வலைத்தளங்களின் நிர்வாகிகளை தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமலாக்கப்படும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளால் எந்த பலனும் இல்லை’ என்றார்.
இதுதொடர்பாக ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பு எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் பதிலளிக்கவில்லை. இதேபோல், பாஜவின் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுானி, ஐடி மற்றும் சமூக வலைத்தளங்கள் பிரிவு தலைவர் அமித் மாளவியாவும் பதில் கொடுக்கவில்லை.
2019 பிப்ரவரி முதல் 2020 நவம்பர் வரை பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்ட 5,36,000 அரசியல் விளம்பரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், 98.48 கோடி முறை காட்டப்பட்ட விளம்பரங்களுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் வேட்பாளர்களின் மொத்த செலவு 5.29 கோடி ரூபாய் ஆகும். அதேநேரத்தில், 100 கோடிக்கும் அதிகமாக காட்டப்பட்ட பாஜ மற்றும் அதன் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு பாஜவின் செலவு 4.21 கோடி ரூபாய் ஆகும்.
2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் வசூலிக்கப்பட்ட விளம்பர கட்டணத்தைவிட குறைவாக டோனால்டு டிரம்ப்பிடம் விளம்பர கட்டணத்தை பேஸ்புக் வசூலித்தது என நியூயார்க் பல்கலைக்கழகத்தின் விளம்பர ஆய்வுப் பிரிவு கண்டுபிடித்தது. இதுபற்றி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாரா எடெல்சன் கூறுகையில், ‘விளம்பர கட்டண பாகுபாடு காரணமாக, வாக்காளர்களை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சென்றடையும் வழிமுறை பாதிக்கப்படுகிறது. எனவே, அரசியல் களத்தில் எல்லா கட்சிகளுக்கும் சரிசமான வாய்ப்பு உருவாக்கப்படுவதை பேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றார்.
எழுதியவர்கள் : குமார் சம்பவ் மற்றும் நயன் தாரா ரங்கநாதன்
அல் ஜசீராவில் வெளியான அசல் கட்டுரையின் இணைப்பு
சரண் அவர்களின் பதிவு தமிழ் மக்களின் அழிவின் போக்கை எச்சரிக்கிறது தமிழக அரசு இதை கண்காணிக்க வேண்டும். உரிய நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.
சமீபத்தில் கொடைக்கானல் சென்றபோது சின்னஞ்சிறு மலை கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆர்எஸ்எஸ் ஊடுருவி இருப்பதை காணமுடிந்தது. இதேபோல மேகமலை சென்றபோதும் பார்த்தேன். குன்னூருக்கு சென்றபோதும் ஒரு சோயா பீன்ஸ் கடைக்காரர் தானொரு ஆர் எஸ் எஸ் இயக்கத்தவர் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டதை கவனித்தேன். இவர்கள் ஆதிக்க சாதியோ, பார்ப்பனர்கள் கூட்டமோ அல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் என்பதுதான் ஆச்சரியம். ஆனால் இது இன்னமும் மிகச்சிறிய அளவில்தான் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைய செலவழித்தாலும் மக்களை ஒன்றிணைக்க தடுப்பது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும், திமுகவும் தான். ஆச்சர்யமாக இந்தப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கொடியை பார்க்க முடியவில்லை. மூணாறு உள்ளிட்ட கேரள இடுக்கி மாவட்டத்தின் தமிழர்கள் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பழக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
நமது திராவிட மண்ணில் பார்ப்பனியத்தை காலாகாலமாக எதிர்த்து வந்து கொண்டே இருந்திருக்கிறோம். அவர்கள் தெய்வமான பிரம்மனுக்கு இங்கு எந்த காலத்திலும் கோவில் இல்லை. ஆகவே நமது நாட்டார் தெய்வங்களை தங்களது தெய்வமாக வரித்துக் கொண்டு வேதியம் தனது ஊடுருவலை செய்தது. கோவில்களில் பூசாரிகளை வெளியே அனுப்பிவிட்டு இவர்கள் அமர்ந்துகொண்டார்கள். அப்பொழுது கூடவே தமிழையும் கோவிலிலிருந்து வெளியே அனுப்பினார்கள்.
இன்று இதே விதமான அரசியல் நகர்வுகளை சாமானிய மக்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு கிராமத்து கோவில் திருவிழாக்களில் ஒருபோதும் இவர்கள் பங்களித்ததில்லை. இன்று எந்த ஒரு சிறு கோவில் திருவிழா என்றாலும் இந்து மகாசபை, பாரத சேனை என்ற பெயர்களில் ஊடுருவி வருகிறார்கள். கோவில் காரியம் என்பதால் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.
மேலும் இவ்வாறான திருவிழாக்கள் முடியும் போதெல்லாம் அங்கு நிரந்தரமாக இவர்களுக்கு ஒரு இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். பிஜேபியின் கொடியை ஏற்றுகிறார்கள். அங்குள்ள மக்களை வைத்து ஒரு அமைப்பை நிறுவுகிறார்கள்.
இது சில வருடங்களில் வேறு பல விளைவுகளை கொண்டு வருகிறது. வள்ளி திருமண நாடகம் நிகழ்த்தி வந்த இடத்தில் அதை நீக்கிவிட்டு கதாகாலட்சேபம் வைக்கிறார்கள். பார்ப்பதற்கு இது மேம்போக்கான நிகழ்வாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் இந்த மண்ணின் முற்போக்கு எண்ணங்களில் நிகழ்த்தப்படும் தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டும்.
வள்ளி திருமண நாடகம் என்பது கிராமிய நாடகக் கலையும் கலப்புத் திருமணத்தை வலியுறுத்தும் கருத்தும் இணைந்தது. மக்கள் மனதில் சாதிய உணர்வுக்கு எதிராக தமிழ் கடவுளின் வாயிலாகவே சொல்வது. அதை மாற்றுவது என்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும்.
இவ்வாறு திருவிழா கமிட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் தங்கள் அதிகாரத்தை செலுத்த தொடங்கி உள்ளார்கள்.
பேருந்து போக்குவரத்து குறைந்த பகுதிகளில் கூட இவர்களது ஊடுருவல் நிகழ்த்தப்படுகிறது. அங்குள்ள இளைஞர்களை திரட்டி இலவச பயிற்சி என்று சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்துச்சென்று மனதில் விஷ விதைகள் ஏற்றப்படுகிறது. ABVP கிராமங்கள் வரை வந்து விட்டார்கள். இதில் அவர்களது முக்கியமான எளிமையான குறி ஊர்சேரிகள்.
பெரும் ஊர் திருவிழாக்களில் சேரிகளுக்கு எந்த பங்கும் கொடுக்கப்படாத பட்சத்தில் அதை பிஜேபியினர் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அவர்களுக்கு கட்சியின் வழியாக ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும்போது இயல்பாக அந்த மக்களில் உள்ள சில இளைஞர்கள் மடை மாறுகிறார்கள்.
அதேபோல ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பெரும் சாதிக் சங்கங்களுடன் இவர்கள் இணைந்து ஊர் விழாக்களில் பங்கெடுக்கிறார்கள். 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இவர்களின் டார்கெட். அவர்களை வைத்து தங்களது விளம்பர யுத்திகளை செயல்படுத்துகிறார்கள்.
இதை தடுக்க நாம் பலவழிகளில் முயற்சிக்க வேண்டும்.
கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு திராவிட முற்போக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
சேரிகளில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் சமூக அங்கீகாரமும் பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த இளைஞர்களை வைத்து ஊர் திருவிழாக்களில் சமூக நல்லிணக்க நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். ஒரு நாடகம் நடத்தப்படும்போது அதில் பங்கேற்பவர்கள் திரும்பத் திரும்ப பயிற்சி எடுப்பதன் மூலம் அவர்களது ஆழ்மனதில் அந்த கருத்துக்கள் ஆழமாக வேரூன்ற தொடங்கிவிடுகின்றன.
சிறார்கள் ஆக இருந்து இளைஞர்களாக மாறும் பருவத்தினருக்கு இங்குள்ள அரசியல் பற்றிய பயிற்சிகள் பல்வேறு வடிவங்களில் நாம் கொடுத்தாக வேண்டும். 10 ஆண்டு கால கருத்தாக்க முதலீடாக இதனை செய்ய வேண்டும்.
பிஜேபியினர் தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களை சென்றடைவதில்லை மாறாக எல்லா காலகட்டத்திலும் பல வழிகளில் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். அதனைத் தடுக்க முற்போக்கு இளைஞர்களாகிய நாமும் பலவித பதில் நடவடிக்கைகள் தொடர் பயிற்சிகள் நமது துணை அமைப்புகளின் வழியாக நடத்தப்பட வேண்டும்.
வருடத்திற்கு 4 முறை கிராமங்களில் உள்ள நமது அமைப்புகளை வலுப்படுத்த அங்குள்ள மாணவர்களை நகரங்களுக்கு அழைத்து வந்து அவர்களை நல்விதமாக நடத்தி பயிலரங்குகள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பிஜேபியினர், இந்து மகா சபையினர் என்னவிதமான கருத்தாக்க ஆயுதங்களை பயன்படுத்துகிறார்களோ அதற்கு மாற்று ஆயுதங்களை நாம் நமது இளைஞர் பயிற்சி அரங்கில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு முற்போக்கு கருத்துக்கள் பள்ளி மாணவர்கள் வரை நுணுக்கமாக பல வழிகளில் சென்று சேர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கழக அமைப்புகள் இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் இது பற்றிய புரிதல் பயிற்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொருவரையும் பயிற்சியாளராக உருவாக்கி அவர்கள் மூலமாக சிறு நகரங்கள் கிராமங்கள் எல்லாவற்றுக்கும் சென்று பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் அவர்களுக்கு பதவி கொடுக்கப்பட வேண்டும். அப்படி செயல்படும் போதுதான் முற்போக்கு இயக்கங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும்.
பெண்களுக்கு தனி பயிற்சிகள், பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும். அவர்களது சமூக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் நமது கிராமம் அமைப்புகளில் முக்கியமான பதவி கொடுக்கப்பட வேண்டும். பெண்களைவிட நல்ல பயிற்சியாளர்கள் வாய்ப்பது கடினம். அவர்கள் ஒவ்வொருவரையும் திராவிட முற்போக்கு சமூக நீதிப் பயிற்சியாளர்களாக உருவாக்க வேண்டும்.
மேலும் இந்த அமைப்புகள் மூலம் அரசின் திட்டங்கள் எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல உதவ முடியும். அதனை கண்காணிக்க முடியும். முற்போக்கு கட்சிகளுக்கும் மக்களுக்குமான பாலமாக இவர்கள் எப்போதும் இயங்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு தொடர் செயல்பாடுகள் மூலம் நமது மக்களின் மனதில் திராவிட முற்போக்கு கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் ஒரு தலைமுறைக்கான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று கட்சியின் தலைமைகளை கேட்டுக்கொள்கிறேன். Karthikeyan
காங்கிரஸ் கட்சியின் மத சார்பற்ற தேசிய சித்தாந்தத்தையும் , முற்போக்கு சிந்தனைகள் கூட விதைக்க வேண்டும் … இன்று இந்த மதசார்பற்ற தேசிய சிந்தனைகள் போகாத இடங்களில் பிஜேபி மெல்ல பாய் விரிக்கிறது ….தேசியத்தை ஒதுக்கினால் அங்கு பிஜேபி நுழைந்து அந்த இடத்தை ஆக்ரமித்துக்கொள்வார்கள் ….
அப்பாடியோ. சரி நம்ம தமிழக ரரக்களும், உபிக்களும் எவ்வலவு செலவு இதுக்கு பன்னிருப்பாங்க?