இந்தியாவில் வழக்கமான குண்டுவெடிப்பு மீண்டும் அரங்கேறியிருக்கிறது. மீண்டும் 11 அப்பாவி மக்கள் தங்களின் உயிரை இழந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்புகளும், உயிர்ப்பலிகளும், அதைத் தொடர்ந்த விசாரணைகளும், தண்டனைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், குண்டுவெடிப்புகள் நின்றபாடில்லை.
மற்ற நேரங்களில் வெடித்த குண்டுவெடிப்பை விட, புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் வெடித்த இந்த குண்டுவெடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் அது வெடித்த நேரம். குண்டுவெடிப்புக்கு பிறகு, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு தடை செய்யப் பட்ட ஹூஜி என்ற அமைப்பிடமிருந்து ஈமெயில் வந்துள்ளது. அந்த ஈமெயிலில், டெல்லி குண்டு வெடிப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அப்சல் குருவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப் பட வேண்டும், இல்லையென்றால், முக்கிய உயர்நீதிமன்றங்களையும், உச்ச நீதிமன்றத்தையும் குண்டு வைத்து தகர்ப்போம் என்று அந்த மின்னஞ்சலில் எழுதப்பட்டுள்ளது.
அப்சல் குருவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் எந்த அமைப்பும், இந்த நேரத்தில் குண்டு வைத்து, இப்படிப்பட்ட ஒரு முட்டாள்த்தனத்தை செய்யாது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவில் இன்று மரண தண்டனை ஒரு விவாதமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டுமா என்ற விவாதம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய் என்று வெடிகுண்டை வைத்து, 11 உயிர்களை பறித்தால், இதனால் அப்சல் குருவின் தண்டனை ரத்து செய்யப் படுவதற்கு மாறாக, அப்சல் குருவை உடனே தூக்கில் போடு என்ற குரலே வலுத்து ஒலிக்கும் என்பது கூட தெரியாத தீவிரவாத இயக்கங்கள் கிடையாது. குண்டு வைப்பது ஸ்திரத்தன்மையை குலைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க முடியுமே ஒழிய, அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதாக இருக்க முடியாது.
இன்று மத்திய அரசு சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. தினம் தினம் புதுப்புது நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடைசியாக கிளம்பிய புது நெருக்கடி அமர் சிங் விவகாரம். அமர் சிங் விவகாரத்தை எப்படியாவது மூடி மறைக்க காங்கிரஸ் அரசு விரும்பியது. இந்த விவகாரம் விக்கிலீக்குகளில் வெளியான போது, இது தொடர்பாக விசாரிக்கவென்று ஒரு பாராளுமன்றக் குழுவை அமைத்தது. அந்தக் குழு விசாரித்து, யார் மீதும் நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என முடிவு செய்தது. மன்மோகன் சிங்கும், அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று, யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலாது என்று தெரிவித்தார். இந்தப் பிரச்சினை இதோடு முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியாக இருந்த மன்மோகன் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் பீதியைக் கிளப்பி விட்டது. “இது வரை ஏன் கைது செய்யவில்லை ? விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம் ?” என்று சராமாரியாக கேள்விகள் எழுப்பியதும், வேறு வழியின்றி அமர்சிங்கையும் இன்னும் இரண்டு பேரையும் கைது செய்தது.
இந்தக் கைதுகளைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சி, இந்த பணப்பரிமாற்றத்தால் பயனடைந்தது யார் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஜுலை 2008ல், நூலிழையில் வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு தப்பியது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு வாக்கெடுப்பில் தப்பிப்பதற்கு, மன்மோகன் சிங் அரசுக்காக கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக வழங்கப் பட்டது வெளிப்படையான விஷயம். அமர் சிங் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டால், அது மன்மோகன் சிங் அரசின் தலையில் விடிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
இது தவிரவும், அன்னா ஹசாரேவின் போராட்டம் வேறு நாடெங்கும் காங்கிரஸ் அரசுக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அவப்பெயர் போதாதென்றால், ஆ.ராசா வேறு அவர் பங்குக்கு ப.சிதம்பரத்தையும், மன்மோகன்சிங்கையும் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கனிமொழியும் ராசாவின் வழியை பின்பற்றுகிறார்.
2ஜி வழக்கின் விசாரணை சூடுபிடிக்க சூடு பிடிக்க, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகியுள்ளன. கூட்டணிக் கட்சியின் தலைவரான மம்தா பேனர்ஜி வேறு தன் பங்குக்கு முறுக்கிக் கொண்டுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி மீதும், ஜனார்த்தன ரெட்டி மீதும் பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகள், காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் ராஜசேகர ரெட்டியின் ஊழல்களை அம்பலப் படுத்த உள்ளன.
தங்கள் சொந்தக் கட்சியின் அமைச்சர் அஜய் மக்கான் கொண்டு வந்த விளையாட்டு வாரிய வரைவு சட்டத்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் சரத் பவாரின் நெருக்கடியால் வாபஸ் பெற நேர்ந்தது. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை தூக்கில் போடலாம் என்று பார்த்தால், அதுவும் முடியவில்லை. சரி அப்சல் குருவையாவது போடலாம் என்றால், அதற்குள்ளாகவே ஓமர் ஷரீப் எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளார்.
மூவரின் கருணை மனுவை நிராகரித்து, அப்சல் குருவின் மனுவையும் நிராகரித்தால், இந்தியா இந்து முஸ்லீம், என்று இரண்டாக பிளவு படும், அவ்வாறு பிளவுபட்டால், அந்தப் பிளவில் குளிர் காய பாரதீய ஜனதா கட்சி முனையும், அப்போது இஸ்லாமியர் ஆதரவு வேஷம் போட்டு, அப்சலை தூக்கில் போடும் விருப்பம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று பசப்பலாம். பிஜேபிக்கு இந்துத்துவா வாக்கு வங்கியை பாதுகாக்க வேறு வழி இல்லாததால், அப்சல் குருவை உடனே தூக்கில் போடு என்று கோரிக்கை வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆதரவை அளிப்பார்கள். 2ஜி, 3ஜி, சிடபிள்யூஜி என்று அத்தனை ‘ஜி’க்களும் மறைந்து போகும், நிம்மதியாக குளிர் காயலாம் என்று திட்டம் போட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டார் அன்னா ஹசாரே என்ற 74 வயதுக் கிழவர்.
அந்தக் கிழவர் 2 வார காலம், தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க ஊழல் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை எழுப்பினார். இந்த விவகாரத்தில், வழக்கமாக பிளவு பட்டிருக்கும் எதிர்க்கட்சிகள், ஒற்றுமையாக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தின.
தமிழக வரலாற்றில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் நினைவு கூறத் தக்கது. திமுக ஆட்சி காலத்தில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆடிட்டர் ஒருவர் போயஸ் கார்டனில் வைத்து செருப்பால் அடிக்கப் பட்டதாக புகார் கூறினார். அந்தப் புகார் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. மறுநாள் சட்டசபை தொடங்கியது. தொடங்கியதும், அதிமுக உறுப்பினர் தாமரைக்கனி திமுக உறுப்பினர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதுகில் வேகமாக அறைந்தார். திரும்பிப் பார்த்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்தில் ஒரு பெரிய மோதிரத்தை வைத்துக் குத்தினார். வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
இந்தச் சம்பவம் நடந்ததும் ஆடிட்டரை செருப்பால் அடித்த விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வீரபாண்டி ஆறுமுகம் தாக்கப் பட்ட விவகாரமே பிரதான செய்தியாக வந்தது.
இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான மொசாட், அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ போன்ற நிறுவனங்கள், வெடிகுண்டு வைத்து நாச வேலையில் ஈடுபடுவதில் கை தேர்ந்தவை. 1973ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், இஸ்ரேலின் விளையாட்டு வீரர்கள் வெடி வைத்து கொல்லப் பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, இஸ்ரேல், அந்தத் தீவிரவாதிகள் ஒவ்வொருவராக தேடித் தேடிக் கொன்றழித்த விபரத்தை, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் “ம்யூனிக்” என்ற திரைப்படத்தில் அழகாக சித்தரித்திருப்பார்.
இது போல மொசாட் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட சம்பவங்கள் ஏராளம். இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனமான ரா (RAW – Research and Analysis Wing)ன் முக்கிய பணி, உளவு சேகரிப்பதோடு அல்லாமல், பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது வழக்கமே. காஷ்மீரில், இந்திய உளவுத்துறை (INTELLIGENCE BUREAU) இது போன்ற தீவிரவாதச் செயல்களைத் தான் செய்து கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு மத்திய உளவுத்துறைக்கு கொடுக்கப் படும் ரகசிய நிதி மட்டும் 50 லட்ச ரூபாய். இந்த பணத்தை வைத்து, ஆயுதம் வாங்குவது, புதிய தீவிரவாதிகளை உருவாக்குவது, எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று தலைப்புச் செய்திகளை உருவாக்குவது போன்ற வேலைகளில் தான் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் நெருக்கடியினால், ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தால், தேசத்தின் ஒட்டு மொத்த கவனமும், குண்டு வெடிப்பில் திரும்பும். தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த நேரத்தில், அரசை விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்று ஊடகங்கள் குரல் எழுப்பும். அர்னான் கோஸ்வாமி, “THE NATION DEMANDS AND ANSWER. INDIA REACTS STRONGLY TO TERROR ACT. HANG AFZAL GURU IMMEDIATELY. என்று உச்ச ஸ்தாயில் கத்துவார்.
மற்ற ஊடகங்கள் டிஆர்பி ரேட்டிங் போய் விடுமே என்ற பயத்தில், அர்னாப் கோஸ்வாமி சொன்னதை வேறு வார்த்தைகளில் சொல்லும். பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டும். நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் ட்விட்டரிலும், பேஸ் புக்கிலும், கூகிள் ப்ளஸ்ஸிலும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள்.
இந்தியா வசதியாக மற்ற எல்லா விஷயங்களையும் மறந்து விடும். இதுதானே காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும் ? ஊடகங்கள் மற்றும், ஆங்கில செய்தித்தாள்களை வாசிக்கும் மக்களுக்கு தீனி போடும் வகையில், யாராவது சில இளைஞர்களை பிடித்து, டிவி முன்பாக, “டெல்லி குண்டு வெடிப்பை நாங்கள் தான் திட்டமிட்டோம். எங்களுக்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வந்துள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி எடுத்திருக்கிறோம். டெல்லி செங்கோட்டை, உச்ச நீதிமன்றம் போன்ற முக்கிய ஸ்தலங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்தோம்” என்று வாக்குமூலம் அளிக்க வைப்பார்கள். அந்தத் தீவிரவாதிகளை கைது செய்கையில், அவர்களிடமிருந்து சில புகைப்படங்கள், வரைபடங்கள், ஒரு ஆட்டோமேடிக் பிஸ்டல், பாகிஸ்தான் ரூபாய் நோட்டுக்கள் போன்றவை கைப்பற்றப் பட்டுள்ளன என்று தகவல் தெரிவிப்பார்கள். இரண்டு மாதங்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படும். வேறு எந்த இடத்தில் குண்டு வெடித்தாலே, ஆஜராகாமல் எதிர்ப்புத் தெரிவிக்கும் வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்றத்தின் அருகிலேயே குண்டு வெடித்திருப்பதால், ஒருவரும் ஆஜராகாமல் மறுப்பார்கள். வழக்கறிஞர்களே இல்லாமல் எதிரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் படும். மீண்டும் ஒரு விவாதம் இருக்கும். அப்போதும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்.
நாமும் அடுத்த செய்தி வந்ததும் அனைத்தையும் மறந்து விட்டு, வேறு வேலைகளை பார்க்கப் போய் விடுவோம்…. இதுதானே வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ?