அன்பார்ந்த தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
விகடன், குமுதம், கல்கி மற்றும் அவர் நடத்திய சொந்த பத்திரிக்கையான “தீம்தரிகிட” ஆகியவற்றில் காலம் சென்ற எழுத்தாளர் ஞாநி “ஓ பக்கங்கள்” என்ற தொடர் எழுதினார். எனது அரசியல் பார்வையை அக்கட்டுரைத் தொடர் மிகவும் செழுமைப் படுத்தியது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் ஞாநியின், ஞாநபானு ஸ்டாலில் புதிய தொகுப்பு வரும். ஞாநி இருப்பார். முதலில் தயக்கத்தோடு அணுகி, அவரோடு அரசியல் விவாதிக்கும் அளவுக்கு பழக்கமானது.
அந்த ஓ பக்கங்களில் ஞாநி தொடாத சப்ஜெக்டுகளே இருக்காது அரசியல் தொடங்கி பாலுறவு வரை அனைத்தையும் அலசுவார். கடைசியாக குமுதம் இதழில் ஞாநி ஓ பக்கங்களை எழுதி வந்தார் 2010ம் ஆண்டில் அப்போதைய உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் குறித்த ஆதாரங்களை என்னுடைய சவுக்கு இணையதளத்தில் பதிப்பித்ததால், மறுநாளே பொய் வழக்கில் கைது செய்யப்பட்டேன்.
இதை கண்டித்து ஞாநி ஓ பக்கங்களில் எழுதினார். வெகுஜன ஊடகவியலாளர்கள் என்னை இன்னும் பத்திரிக்கையாளனாக ஏற்றுக் கொள்வதில்லை. அது குறித்து எனக்கு எவ்வித கவலையும் இல்லை. யாரோ ஒரு சவுக்கு என்பவனுக்காக குமுதம் போன்ற பாரம்பரிய பத்திரிக்கையில் எழுதுவதை அதன் உரிமையாளர் வரதராஜனும் விரும்பவில்லை சக ஊடகவியலாளர்களும் விரும்பவில்லை. அதனால் கட்டுரை நிறுத்தப்பட்டது.
அதற்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு, ஞாநி, குமுதத்தில் எழுதுவதை நிறுத்தினார்.
அந்த ஓ பக்கங்கள் போல, வெகுஜன ஊடகங்களிலோ, இணையதளத்திலோ இப்போது எந்த தொடரும் இல்லை. எழுத்தாளர் சுஜாதா “கணையாழியின் கடைசி பக்கங்கள்” என்று எழுதினார். ஜெயகாந்தன் “ஒரு சொல் கேளீர்” என்று கட்டுரைகள் எழுதினார்.
அந்த வடிவத்தில் இன்று அல்மோஸ்ட் ஒருவருமே எழுதுவதில்லை.
சவுக்கு இணையதளத்தில், ஒவ்வொரு ஞாயிறன்றும், “கசடற” என்ற தொடர் எழுதலாம் என்று முடிவு. இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டால்தான், ஒரு ஒழுங்கு ஏற்பட்டு, “டெட்லைன்” என்ற அச்சம் ஏற்படும் என்பதற்காகவே இந்த முன்னுரை.
பிடித்தால் வாழ்த்துங்கள். வெறுத்தால் ஏசுங்கள்.
இங்கே அனுப்புங்கள் @jayajayakanthan@gmail.com
அன்புடன்
சவுக்கு சங்கர்
19 ஜூன் 2022.
இனி, கசடற முதல் அத்தியாயம்.
கசடற – 1
சிறு வயதில் சோவியத் ரஷ்யாவில் இருந்து வரும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் கதை வாசித்தேன். தனது மகளின் அறிவை பரிசோதிக்க , அவளுடைய தந்தை ஒரு கேள்வி கேட்பார்.
“உலகிலேயே பலசாலி யார்” என்பதுதான் கேள்வி. அவளோ, வண்டியை இழுக்கும் மாடு, பொதி சுமக்கும் ஒட்டகம் என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வருவாள். பிறகு அந்த சிறுமி உலகிலேயே பலம் வாய்ந்தது யானைதான். அதை விட பலசாலி யாரும் கிடையாது என்பாள். அவளின் தந்தை, இதுதான் உனது இறுதியான பதிலா என்று கேட்பார். ஆம் என்பாள் மகள்.
தந்தை தனது மகளை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்வார். வெளிநாடு ஒன்றில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒரு யானையை க்ரேனில் ஏற்றிக் கொண்டிருப்பார்கள். அதை அந்த சிறுமிக்கு காண்பித்த அவள் தந்தை, “யானைதான் உலகிலேயே சக்தி வாய்ந்தது என்று கூறினாயே. அந்த யானை க்ரேனில் ஏற்றப்படுகிறது பார்த்தாயா” என்று கேட்பார்.
அந்தச் சிறுமி கண்கள் விரிய அதை பார்த்து “அப்போ க்ரேன்தான் உலகில் பலசாலியா” என்று கேட்பாள். “இந்த விலங்குகளை பழக்கி, இது போல பல இயந்திரங்களை கண்டுபிடித்த மனிதன் தான் உலக ஜீவராசிகளிலேயே பலசாலி. அவனின் அறிவுக்கு நிகர் இவ்வுலகில் எதுவும் இல்லை” என்பார். மனிதனின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சோவியத் ரஷ்யா வெளியிட்டிருந்த காமிக்ஸ் புத்தகம் அது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின், அது போன்ற புத்தகங்களின் வருகை நின்று விட்டது.
என்னை அதிகம் யோசிக்க வைத்த சிறுகதை அது. அதனால் தான் அது இப்போது வரை நினைவில் இருக்கிறது. மனிதனுக்கு நிகரான அறிவிற் சிறந்த இயற்கையின் படைப்பு எதுவும் இல்லை. நான் மனிதர்களுடன் அதிகம் உரையாடுபவன். விதவிதமான மனிதர்களை சந்திப்பவன். அவர்கள் மிகமிக வசீகரமானவர்களாக, வியப்படைய வைப்பவர்களாக, ரசிக்க வைப்பவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களில் சமீபத்தில் சந்தித்த இருவர் குறித்தும் அவர்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இந்த இருவருக்குள்ளும் ஒரு ஒற்றுமையை என்னால் பார்க்க முடிந்தது. அதை நான் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திய பின் சொல்கிறேன். திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தூய இருதயபள்ளி நினைவில் இருக்கிறதா? சில நாட்களுக்கு முன்பாக அடிக்கடி செய்தியில் அடிபட்ட பள்ளி. திட்டமிட்டு அடிவாங்கப்பட்ட பள்ளி. லாவண்யா என்ற மாணவியின் தற்கொலையை கையில் எடுத்து, 160 வருடமாக ஏழை மாணவிகளுக்கு கல்வி புகட்டும் ஒரு கல்வி நிறுவனத்தை மதத்தை காரணமாக வைத்து மூடத்துடித்த தமிழக பிஜேபியின் போராட்டங்களை தொடர்ந்து, தொடர்ந்து இப்பள்ளி செய்திகளிள் அடிபட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
அந்தப் பள்ளிக்கு சமீபமாக நான் சென்றிருந்தேன். பலவிதமான கருத்துகள், யூகங்கள் என ஒரே நாளில் பள்ளிக்கூடம் அரசியலாக்கப்பட்டு விட்டது.
அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள், வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றுவிட்டதால் அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருக்கிறதா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.
நான் செல்லும்போது இருட்டி விட்டது. நான் பல்வேறு நேர்காணல்களில், இப்பள்ளிக்கு ஆதரவாக பேசியிருந்ததால், அப்பள்ளியில் இருந்த கன்னியாஸ்திரிகளுக்கு என்னை நன்றாக தெரிந்திருந்தது. என்னை அன்போடு வரவேற்று பள்ளியை சுற்றி க்காண்பித்தனர். தற்போது விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகளால், ஏதாவது தொந்தரவு இருக்கிறதா என்று கேட்டபோது அவர்கள் இல்லை என்று மறுத்தனர்.
அதன் பின்னர் அவர்கள் சொன்ன செய்திதான் என்னை, வியப்படைய வைத்தது. இவ்வழக்கில், அம்மாணவி லாவண்யாவை, பள்ளி ஹாஸ்டலில் பல்வேறு வேலைகள் வாங்கியதாலும், மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியதாலும் லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் என்பது பிஜேபியின் கூற்று. ஆனால், பல்வேறு தரவுகளால், அம்மாணவி, இரண்டாவதாக அவர் தந்தை திருமணம் செய்து கொண்ட சித்தியின் கொடுமையால் இறந்திருக்கிறார் என்பதே விசாரித்ததில் தெரிய வரும் தகவல்.
இவ்வழக்கை பிஜேபி கையில் எடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பியதால் லாவண்யாவின் பெற்றோரும் மதமாற்ற குற்றச்சாட்டை சுமத்தியதால், காவல் துறை வேறு வழியின்றி, அப்பள்ளியின் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரியை கைது செய்தது.
இவ்வழக்கில் கைது அவசியமில்லை என்பதும், சகாயமேரியிடம், இறந்துபோன மாணவி லாவண்யா பிரியமாக இருந்தாள் என்பதும் வார்டனின் செல்லப் பிள்ளையாகவே லாவண்யா இருந்தாள் என்பதையும் விசாரித்து அறிவது ஒன்றும் அவ்வளவு சிரமம் இல்லை. உடன் படித்த மாணவிகளிடம் கேட்டால் சொல்ல மாட்டார்களா என்ன ? ஆனால் பிஜேபியை திருப்திப்படுத்த, வார்டனை கைது செய்தே ஆக வேண்டும்.
வேறுவழியின்றி, வயது முதிர்ந்த ஹாஸ்டல் வார்டனான கன்னியாஸ்திரி சகாயமேரியை காவல்துறை கைது செய்தது. கைதுக்குப் பின் ஒரு காவல்துறை அதிகாரி, சகாயமேரியிடம் இரக்கத்துடன், “நீங்கள் நீதித் துறை நடுவரிடம், எனக்கு உடல்நிலை சரியில்லை” என்று கூறுங்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதி உத்தரவிடுவார்” என்று கூறியுள்ளனர். அவர் சரியென்று சொன்னால் என்ன செய்வதென, அரசு மருத்துவமனையில், நெஞ்சு வலி நோயாளி ஒருவரை எடுத்து வருகிறோம் என்றும் தகவல் சொல்லியுள்ளனர்.
சகாயமேரியோ, “என்னால் பொய் சொல்ல முடியாது. நான் சிறைக்கே செல்கிறேன். பரவாயில்லை” என்றே பதில் அளித்துள்ளார்.
எப்படியாவது சிறை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று, நெஞ்சுவலி என்று மருத்துவமனைகளில் அனுமதிக்குமாறு கெஞ்சும் அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம். கைதுக்கு பயந்து கட்சி மாறிய தலைவர்களை பார்த்திருக்கிறோம். சிறையை தவிர்க்க அரசியல்வாதிகள் காலில் விழுந்து கெஞ்சும் ஊழல் அதிகாரிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் சகாயமேரியை சிறை அச்சுறுத்தவில்லை. அவர் சொல்லியிருக்க வேண்டியது ஒரே ஒரு பொய் மட்டுமே. ஆனால் அவர் அதை சொல்ல மறுத்தார்.
ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். சகாயமேரிக்கு தான் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும். அத்தனை வருட வாழ்க்கை அனுபவத்தில் தன முதிய பருவத்தை சிறையில் கழிக்க வேண்டி வரும் என்று எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். ஆனால் அப்படி நடந்துவிட்டது. அவர் ஏன் தன்னை சிறையில் அடைத்துக் கொண்டார் ? விடை அவருக்குத் தெரிந்திருக்கலாம். தான் எப்போதுமே இந்த வழக்கில் இருந்து வெளிவர முடியாது என்றும் தோன்றியிருக்கலாம். தன்னுடைய மாணவியில் இறப்பில் தன் பள்ளியில் பெயரும், மதமாற்றம் என்கிற அரசியல் பழியும் கலந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். இந்த அரசியலின் கோர முகத்தை அவர் அனுபவித்துவிட்டார். எல்லோருடைய வாயும் மூட வேண்டும் , மதத்தை நோக்கி வீசப்படுகிற கற்கள் தடுக்கப்பட வேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கலாம். அதனால் அவர் இனிவரும் தன் நாட்களை எங்கு கழிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார். இது என்னுடைய யூகம் என்று ஒதுக்கிவிட முடியாது. களத்தில் சென்று கண்டு உணர்ந்து எழுதும் வார்த்தைகள் இவை.
சகாயமேரி, இந்த நீதித்துறையின் சிகப்பு நாடா நடைமுறையிலும் பாதிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட மறுநாளே, ஜாமீன் கிடைத்தது. ஆனால் ஜாமீன் உத்தரவால், 4 நாட்கள் கழித்தே சகாயமேரி வெளியே வந்தார். அவர் வெளியே வரும் நாள் அன்று, பிஜேபி தலைவர் அண்ணாமாலை, உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக சிறை இருக்கும் பகுதியில் பிரச்சாரம் செல்கிறார்.
சகாயமேரி தாக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்ததும், திமுக, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை அனுப்பி பாதுகாப்பு தருமாறு உத்தரவிட்டது. அவ்வாறே அவர் சென்று சகாய மேரியை வரவேற்றார்.
இரண்டாவது நபர் குறித்து சொல்கிறேன். தற்போதைய திமுக அரசில், வளம்கொழிக்கும் துறையின் அமைச்சராக இருக்கும் ஒருவரிடம் உதவியாளர் ஒருவர் பணி செய்கிறார். அமைச்சரின் பி.ஏக்கள் என்பவர்கள் குட்டி சக்கரவர்த்திகள். அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகூட செலுத்தமுடியாது. பணம் கொட்டும் துறை என்றால் கேட்கவே வேண்டாம். பொதுவாக உற்சவரை பார்த்த பிறகுதான் மூலவர் தரிசனம் கிடைக்கும் என்பதால், டெண்டர் வேண்டுபவர்கள், மாறுதல் வேண்டுபவர்கள், பிற சலுகைகள் வேண்டுபவர்கள் உற்சவர்களான பி.ஏக்களைதான் முதலில் கவனிப்பார்கள்.
இப்படியான செல்வ வளம் கொண்ட துறை அமைச்சரிடம் இருக்கும் உதவியாளர் குறித்த எனது வியப்பைத் தான் பகிர இருக்கிறேன். பிச்சாண்டி என்று வைத்துக் கொள்வோமே அவர் பெயரை.
அந்த பிச்சாண்டி கையில் பல லட்சங்கள், சில நேரங்களில் கோடிகள் புரளும். அமைச்சருக்கு பணம் கொடுக்க வருபவர்கள் அனைவருமே, பி.ஏவுக்கென்று சில லட்சங்களை சேர்த்து தருவது காலம்காலமாக இருக்கும் வழக்கம்.
அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் பிச்சாண்டி, ஒருபைசாவைத் தனக்கென தொடமாட்டார். அவரிடம் வரும் லட்சங்களை அப்படியே உரியவரிடம் சேர்த்துவிடுவார். இவரை ஒரு அதிசயப் பிறவியாகவே அனைவரும் பார்க்கிறார்கள். ‘லூசுப்பய’ என்று ஏசுபவர்களும் உண்டு. அவரிடம் நேரடியாகவே, “உங்களுக்கு எதுவும் வேணாமா” என்று கேட்டவர்களிடம், ‘எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க அமைச்சர் கிட்ட பேசிக்குங்க” என்று மென்மையாக சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்.
இந்த பணம் இருக்கிறதே….. அது எப்பேர்ப்பட்ட நேர்மையானவரையும் நிலை தடுமாற வைக்கும் போதை வஸ்து. அதுவும் 1991க்கு பிறகு, தாராளமயமாக்கல் பொருளாதாரம் வந்த பிறகு, பணத்தை செலவழிக்கவா வழியில்லை ? 5 லட்சம் முதல் 2 கோடி வரை கார்கள் இருக்கின்றன. 3 கோடிக்கு வாட்சுகள் இருக்கின்றன. இன்னும் ஏராளம் ஏராளம்.
கடவுளிடம் பணம் இல்லை என்று, நகைகளையும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளையும் காணிக்கை அளிக்கும் சமூகம்தானே இது !!!
இலவசமாக, சிக்கலின்றி, வலிக்காமல் வரும் பணத்தை வேண்டாம் என்று சொல்லயாருக்குத்தான் மனம் வரும் ? அதை வேண்டாம் என்று சொல்ல எத்தனை தவ வலிமை வேண்டும் தெரியுமா ?
அரசு அதிகாரிகள் பலரை பார்த்திருக்கிறேன். ஊழல் அதிகாரிகள் வேறு வகை. அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். பணம் வாங்காத அதிகாரிகளில் சிலர், “அவனை பாருங்க இவ்வளோ சம்பாதிச்சிட்டான். இவனைப் பாருங்க, ரெண்டு வீடு கட்டிட்டான்” என்று புலம்புவார்கள். இதற்கு இவர்கள் லஞ்சமே வாங்கிக் கொள்ளலாம்.
பொறாமை இல்லாமல், அடுத்தவரை பற்றி கவலையில்லாமல், எனக்கு இது சரியெனப்படுகிறது. இது என் வாழ்வியல். என் வாழ்க்கை முறை; என்பதாக தவவாழ்க்கை வாழ்பவர்களை மிகமிக அரிதாகவே சந்தித்திருக்கிறேன். அவர்களை பார்த்து வியந்திருக்கிறேன். மலைத்திருக்கிறேன். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.
சகாயமேரிக்கும் பிச்சாண்டிக்கும் உள்ள ஒற்றுமையாக நான் பார்ப்பது என்ன தெரியுமா? அவர்கள் தங்களுடைய வாழ்க்கை குறித்த தெளிவோடு இருப்பவர்கள். சகாயமேரி தனக்கு அடைக்கலம் தந்த பள்ளியையும் மதத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை. பழியை ஏற்றுக்கொண்டார். பிச்சாண்டியும் தான் இருக்கும் இடத்தை விட்டுக்கொடுக்கவில்லை. தன் மீது கறை படியாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். காலம் பிச்சாண்டிக்கு சோதனைகள் கொடுத்திருக்கும். சகாயமேரி போல அவர் அதனை அமைதியாக எதிர்கொண்டிருப்பார். இலஞ்சம் வாங்காத உதவியாளருக்கு இத்தனை கரிசனமா என்று கேட்கலாம். ஒரே ஒரு ஃபைலை நகர்த்த இலட்சக்கணக்கில் பணம் என்று உங்களிடம் சொன்னால் எத்தனை பேர் மறுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் தினமும் மறுக்கிறார் என்றால் அது நெஞ்சுரம் அல்லாமல் வேறென்ன…தான செய்யாத பழிக்கு சிறையில் காலத்தை கழிக்கிறார் என்றால் அது முதியவரான சகாயமேரியின் உறுதி அல்லாமல் வேறென்ன ?
எந்தச் சூழலிலும் தன் நேர்மை மீது கொண்ட நம்பிக்கையோடு இருப்பது தான் தவம் .
அடுத்த ஞாயிறு அன்று தொடரும்.
Dear and respected Shankar siir please send your contact no or call me 8939027369
Shankar anna your socio political awareness are necessary for our society
நேர்மையான செயலை விட வேறென்ன வேண்டும்
idhu oru arumaiyana pathivu sir
வணக்கம் தோழர்
கள்ளக்குறிச்சி மாவட்ட AD நெடுஞ்சாலை துறை அவர்களின் லிலைகள் பற்றி விசாரணை நடத்தி எழுதுங்கள் தோழர். மிக மிக கேவலமான கூத்தை நடத்தி வருகிறார்
Let it be published twice a week,Sir.
அருமையான தொடர்…
நல்ல தெளிவான நீரோட்டம் போன்ற எழுத்து…
வாழ்த்துகள் சகோ