2 ஜூலை 2022 டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி வந்திருந்தது. பலரின் கவனத்தில் அந்த செய்தி பதியாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த செய்தி என்னை பாதித்தது, அந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் வலி என்னை அழுத்தியது. முப்பது ஆண்டுகள் கழித்து ஒருவரை நிரபராதி என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது என்பதுதான் அந்த செய்தி.
உத்திரப்பிரதேசம், முசாபராபாத் மாவட்டம், ரொஹானா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் ராம் ரத்தன். இவர் 40 வயதாக இருக்கையில், 1996ம் ஆண்டில், முசாபராபாத் நகர கோத்வாலி காவல் நிலையத்தினரால், ராம் ரத்தன் கைது செய்யப்படுகிறார். இவர் மீதான குற்றச்சாட்டு, சட்டவிரோதமாக ஒரு நாட்டுத் துப்பாக்கியும் இரண்டு குண்டுகளும் வைத்திருந்தார் என்பது. சிறைக்கு சென்ற அவர் மூன்று மாதங்கள் கழித்து வெளியே வருகிறார்.
அநேகமாக இவர் Default Bailல்தான் வெளியே வந்திருக்க வேண்டும். Default Bail என்றால், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்தை புரிந்திருந்தால், 60 நாட்களுக்குள் புலனாய்வை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்தை புரிந்திருந்தால் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை காவல் துறை செய்ய தவறினால், கைதாகி சிறையில் இருப்பவரை நீதித்துறை நடுவர் ஜாமீனில் விடுதலை செய்யலாம். அதே நேரத்தில், இந்த Default Bail என்பது குற்ற சாட்டப்பட்டவருக்கு கொடுக்கப்பட்ட சட்ட உரிமை கிடையாது, நீதிபதி தேவைபப்ட்டால் இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்பதே நடைமுறை.
ராம் ரத்தனும் 90 நாட்கள் கழித்து வெளியே வந்திருப்பதால் Default Bailல்தான் வெளியே வந்திருப்பார் எனத் தெரிகிறது. காவல் துறை எப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது தெரியுமா ? இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படவேண்டிய குற்றப்பத்திரிகையை காவல்துறை எப்போது தாக்கல் செய்தது தெரியுமா? பத்து வருடங்கள் கழித்து, அதாவது 1996 ல் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு குற்றத்துக்கு 2006ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. 3 ஆண்டுகளுக்குள் தண்டனை வழங்க கூடிய பிரிவில் குற்றம் சுமத்தப்பட்டதால், ராம் ரத்தனின் வழக்கை குற்றவியல் நீதிமன்ற நடுவர் (Magistrate) விசாரித்தார். 14 வருடம் வழக்கு நடந்தது.
பதினான்கு வருடங்கள் கழித்து 21 செப்டம்பர் 2020 அன்று, விடுதலை செய்யப்பட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் நீதிபதிகள் பலர் மாறியிருந்தனர். கைது செய்யப்பட்டபோது ராம் ரத்தனுக்கு வயது 40. விடுதலை செய்யப்படுகையில் வயது 55.
இந்த பதினான்கு ஆண்டு கால வாழ்க்கை அவருக்கு எப்படி கழிந்திருக்கும் என தெளிவாகத் தெரிகிறது. அவர் குறைந்தது 500 முறையேனும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கியிருப்பார். ஒவ்வொரு முறையும் வழக்கறிஞருக்கு செலவழித்திருப்பார். போய் வரும் செலவுகள் எத்தனை இருந்திருக்கும்.
இத்தனைக்கும் பிறகு அவருக்கு நீதி கிடைத்து விடுதலை ஆகிவிட்டாரே என்றதும், கதை முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள். இது இண்டர்வெல். அடுத்த பகுதி இருக்கிறது. பதினான்கு வருடம் உறங்கிக் கொண்டிருந்த உத்திரப்பிரதேச காவல் துறை திடீரென முழித்துக் கொண்டது. செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
எத்தகைய கொடூர காவல் துறையை உருவாக்கி வைத்திருக்கிறோம் நாம்?
இரண்டு வருட இழுத்தடிப்புக்கு பிறகு ராம் ரத்தன் 1 ஜூலை 2022 அன்று, செசன்ஸ் நீதிமன்றத்தாலும் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இதனை உத்தரபிரதேச காவல்துறை விடாது என்று தோன்றுகிறது. துளியும் வெட்கமின்றி, உயர்நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தால் கூட நான் வியப்படைய மாட்டேன்.
காவல்துறை, சிறை, நீதிமன்றம் நம்மை வதைக்கும் கொடுமைகளில் இவை மூன்றுக்கும் சமமான இடங்களைத் தரலாம். எனக்கு இந்த மூன்று கொடுமைகளையும் நேரடியாக சந்தித்த அனுபவங்கள் உண்டு தொடக்கத்தில் அயர்ச்சி ஏற்பட்டது. எரிச்சலாக வரும். கால் கடுக்க நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். சிஸ்டம் எப்படி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
2010ல் ஜாபர் சேட் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்தார். மனைவி பெயரில் மோசடி செய்து வீட்டுவசதி வாரிய இடம் ஒன்றைப் பெற்றிருந்தார். இதனை ஆதாரத்தோடு சவுக்கு இணையதளத்தில் அம்பலப்படுத்தினேன். செய்தி பரபரப்பானது. வானளாவ அதிகாரம் பெற்றிருந்த ஜாபர் சேட் விடுவாரா என்ன? மறுநாள் காலை என் மீது வழக்கு ஒன்று புனையப்பட்டது. சாலையில் சென்ற ஒருவனை தகராறு செய்து, அடித்து சட்டையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்தேன் என்ற வழக்கு போட்டார்கள். கைது செய்யப்பட்டேன்.
கைதான மறுநாள், என் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியானது. முதல் முறை ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது போல் இல்லாமல் இப்போது, மூன்று நாட்களில் ஜாமீனில் வெளி வந்தேன். காவல் துறையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் வெளி வரமுடிந்தது. அப்போது பொறுப்பில் இருந்த ஒரு மூத்த அதிகாரி, என் மேல் புனையப்பட்டது பொய் வழக்கென்று புகார் எழுதிக் கொடுக்க சொன்னார். நானும் எழுதினேன். என்னை அந்த அதிகாரியிடம் அழைத்து சென்றது இரண்டு பத்திரிக்கையாளர்கள். அதனால் தட்ட முடியாமல் எழுதிக் கொடுத்தேன். எனக்கு அப்போதே தெரியும். ஒன்றும் நடக்காது என.
நீதியின் பக்கம் ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் உச்சகட்ட அயோக்கியத்தனம் நடந்தது. அந்த வழக்கில் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு குற்றம் தவறாக சுமத்தப்பட்டு வழக்கு போடப்பட்டிருந்தால், MOF (Mistake of Facts) என்று குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்து வழக்கினை முடிக்க சட்டத்தில் இடமுள்ளது.
ஆனால், அதற்கு இடம் தராமல் குற்றம் உண்மை என்றே அப்போதைய மதுரவாயல் இன்ஸ்பெக்டரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நடைபெற்ற அதே நேரத்தில் தான் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தான் முதன் முதலாக என்னைக் கைது செய்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு நடக்கும். இரண்டு வழக்கின் விசாரணைகளும் சில நாட்களில் ஒரே நாளில் வந்துவிடும்.
இரண்டு நீதிமன்றங்களுக்கும் பரபரப்பாக பைக்கில் செல்வேன். வெயிலில், பூந்தமல்லி போவதற்குள் நாக்கு தள்ளி விடும். அங்கே சென்றால், பிக்பாக்கெட், அடிதடி, சங்கிலி பறிப்பு கைதிகளெல்லாம் ஒரு 70 பேர் இருப்பார்கள். நீதிபதி கத்துவது காது கேட்காது. இப்போது புது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது.
பலவாறு சில்லறை வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் முக்கால்வாசி பேர் குடித்துவிட்டு வந்திருப்பார்கள். கட்டுப்பாடு இருக்காது, மேலே விழுவார்கள். திரும்பி பார்த்தால் “ம்மால என்ன பாக்குற” என்பார்கள். கோர்ட்டுக்கு போகாத நாட்களில் வழக்கறிஞர் 317 Cr PC பெட்டிசன் போட வேண்டும். என்னதான் நண்பர்கள் என்றாலும், கொஞ்சம் பீஸ் குடுத்தால்தான் மரியாதை.
செலவும் ஆகும். அந்த வழக்கு மூன்று ஆண்டுகள் நடந்தன என்று நினைவு. மாதம் ஒரு முறை அல்லது இரு முறை வாய்தா வரும். இரண்டு முறை செல்லாமல் விட்டு விட்டால், பிடி வாரண்ட் பிறப்பித்து விடுவார்கள். காவல்துறை எந்த நேரம் வேண்டுமானாலும் கைது செய்யும். நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும்.
சரண்டர் ஆகும் கைதிகளை நீதிபதிகள் மிக கேவலமாக நடத்துவார்கள். உட்காரக் கூட முடியாது. ஜெயிலுக்கு போறவனுங்க என்கிற மனோபாவம் இருக்கும்… அவர் நீதிபதி. அய்யா அல்லவா… மற்றவர்கள் வாழ லாயக்கில்லாத குற்றவாளிகள் தானே…
காலை 10.30க்கு முன் நீதிமன்றத்துக்குள் போயாக வேண்டும். மதியம் 2.30 மணி வரை உட்கார முடியாமல் ஒரே இடத்தில் நின்றிருக்கிறேன். அடுத்த வாய்தா தேதி சொல்வார்கள். அப்போதும் கூட எரிச்சல்தான் வந்தது. தவறு செய்து விட்டோமோ என்ற கழிவிரக்கமோ யோசனையோ வரவில்லை.
அப்போதைய என் மனநிலை இப்படித் தான் இருந்தது. ஒரு சாதாரண தனி நபரை ஒரு சிஸ்டமே எதிர்க்கிறதே. ஒரு கூடுதல் டிஜிபி என்னை பழிவாங்க இறங்கும் அளவுக்கு நான் பெரிய ஆளா என்று தோன்றும். அது என்னை தேற்றிக் கொள்வதற்காக இருக்கலாம். சிஸ்டம் இப்படித் தான் செய்யும். ராம் ரத்தன் போன்றவர்களுக்கு குரல் கொடுக்க யாருமில்லை. இப்போது நினைத்துப் பார்த்தால், எனக்கு வழக்கறிஞர்கள் பெரும் உத்வேகமாக இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு சகோதரனின் வாஞ்சையோடு வாங்க தோழர் என்று அழைப்பார்கள். என்னை சிரமப்படுத்தியதே இல்லை. அடிதடி வழக்கை ராஜா செந்தூர்பாண்டியன் நடத்தினார். அவரிடம் அந்த காவல் துறை அதிகாரி, எல்லா சாட்சியையும் மாத்திடுறேன். ஜட்ஜ் விடுதலை பண்ணிடுவார். சங்கரை ஆப் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார் என்று பின்னாளில் அறிந்தேன்.
இது தெரியாமல், நான் விடுதலை ஆனதும், சார், “அந்த இன்ஸ்பெக்டர் சட்டையை கழட்டுறேன்” என்றேன். விடுங்க சங்கர் சார் என்று அன்போடு வற்புறுத்தினார். தட்ட முடியவில்லை. எனக்கு கோபம் என் மீது போடபட்ட போய்வழக்குக்காக மட்டுமல்ல, இப்படி எத்தனை பேர் மேல் ஒரு சிஸ்டம் பொய்வழக்குத் தொடுக்கும் என்பதில் தான் இருந்தது.
இது முடிந்ததா..!! அடுத்து தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு சிங்காரவேலர் மாளிகையில் நடைபெறும். அடுத்த வழக்கு தேடி வந்தது. நான் எழுதிய கட்டுரையை நீக்க 50 லட்சம் கேட்டேன் என்று ஒரு அம்மையார் பொய் புகார் அளித்தார்.
அந்த வழக்கை நீதியரசர் சிடி.செல்வம் சிபிஐக்கு அனுப்பினார். சிபிஐ அதிகாரிகள் கில்லாடிகள். 50 லட்சம் கேட்டு மிரட்டினேன் என்று அந்த அம்மையார் கொடுத்த ஆடியோவை சோதித்து, அதில் பேசியது நான் இல்லை அவர் தம்பி தான் என்பதை கண்டுபிடித்து பொய்ப்புகார் அளித்த பெண் மீதே கேஸ் போட்டனர்.
முதலில் சிபிஐ விசாரிக்கும் வழக்கா இது ? இந்த சிபிஐ வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்னும் நடந்து வருகிறது. அங்கே என்னோடு நீதிமன்றத்தில் நிற்பவர்கள் 300 கோடி, 500 கோடி ஏமாற்றி விட்டு வந்து நிற்பார்கள். நான் ஒரு கட்டுரை எழுதியதற்காக நிற்பேன். செயின் பறிப்புக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடங்கி ஐநூறு கோடி மோசடி செய்தவர்கள் வரை எல்லோருடனும் தோள் தொட்டு நின்ற அனுபவத்தை நீதிமன்றம் எனக்கு அள்ளித் தந்தது.
நாள் ஆக நாள் ஆக, நீதிமன்ற நடவடிக்கைகள் என்னை வசீகரிக்கத் தொடங்கின. சட்டத்தின் நுணுக்கங்கள் பிடித்துப் போனது.
நீதிபதிகளை அருகில் நின்று பார்க்கத் தொடங்கினேன். அதுவரை நீதிபதிகளை ஒரு பெரும் சக்தி படைத்த மாமனிதர்களாக, கடவுள்களாக கண் விரிய பார்த்த எனக்கு அந்த பிம்பம் உடைந்தது.
இவர்களில் பலர் அற்பர்கள் என்பது தெரிந்தது. பல மாணிக்கங்களும் கிடைத்தன. அவர்களுள் நீதிபதி சந்துருவும் உண்டு. அவர் என் சமீபத்திய தோழர். பல விஷயங்களில் என்னை விட வேகமாக இருக்கிறார். வியக்கிறேன்.
நீதிபதிகள் சராசரி மனிதர்கள் மட்டும் அல்ல. அவர்களுக்கும் கீழானவர்கள் என்பது புரிந்தது. சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு பல அற்புதமான வழக்கறிஞர்களையும், சில நீதிபதிகளையும் அறிமுகப்படுத்தியது. அவர்கள் என்னை அவர்களுக்கு சமமாக நடத்தி சட்டம் விவாதிக்கையில், உண்மையில் பெருமைப்படத்தான் செய்கிறேன்.
இப்போது, புதிய வழக்குகள் எனக்கு விளையாட்டாகவும், சவாலாகவும் இருக்கின்றன. இப்போதெல்லாம் வழக்குகள் வந்தால் புன்னகையோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருப்பதாக உணர்கிறேன்.
ஏராளமான வழக்கறிஞர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.
இது எத்தனை பேருக்கு சாத்தியம்? எனது சக மனிதன் ராம் ரத்தனுக்கு இது சாத்தியப் படவில்லை. அதனால்தான் அவர் 30 ஆண்டுகளாக 500 முறை நீதிமன்றத்துக்கு அலைந்திருக்கிறார்.
இது எத்தனை அவமானம் !!! சுதந்திரம் பெற்று பவள விழாவை கொண்டாட நமக்கு என்ன தகுதி இருக்கிறது ? நீதிபதிகள் மக்களை விட்டு எவ்வளவு தூரம் சென்று விட்டார்கள் தெரியுமா ? இரக்கமற்றவர்களாக மாறி விட்டார்கள். இயந்திரங்களாக மாறி விட்டார்கள். தங்கள் மாண்பையும் மரியாதையையும் இழந்து விட்டார்கள்.
அம்பேத்கர் சட்டம் இயற்றியது ராம் ரத்தன் போன்றவர்கள் மேல் உள்ள கருணையினால் தான்..அதை நீதிபதிகளும் காவல்துறையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வித்தையினைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்..
இப்படியான ஆயிரக்கணக்கான ராம் ரத்தன்கள் தான் ஒரு சவுக்கு சங்கரை உருவாக்கி விடுகிறார்கள்..
Sir give ur mail id imp matter ramachandranbesthrcom@gmail.com
Savukku is necessary for a marginalized unorganized peoples, I’m proud to say we are there for you
They sell our total Indian democracy to the ruling government Shankar anna
“பேர கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல!” அதான் நீங்கள், உங்களின் அடையாளம், சவுக்கு சங்கர்!! இது உங்கள் நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம், உங்கள் கொள்கை பிடிப்புக்கு கிடைத்த புகழ், உங்களின் அற்பணிப்புக்கு கிடைத்த மரியாதை. Nobody can demoralise you, Sir. Demoralised officials are a shame to themselves. அவர்கள் அழக்குடனேயே வாழ்ந்து மறைந்தும் போவார்கள். ஒரு ஆசிரியர் தெரிந்ததே தவறு செய்யும் மாணவர்களின் தலையில் கொட்டி திருத்தும் இடத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள், திருந்துவதும், இல்லை தவறை மூடி மறைக்க முயல்வதும், இல்லை அந்த ஆசிரியரையே மிரட்டி தொந்தரவு செய்வதும் அவரவர்களின் ஒழுக்க நிலையை சார்ந்தது. When the powerful get demoralised the powerless become powerful. You’re one among them!
இன்று தங்களின் நேர்காணல் பிலிஸ் அவர்களுடன் பார்த்தேன்.கவலைபடாதீர்கள்இந்த மானங்கெட்ட மக்கள் அப்படித்தான்.நீங்கள் இன்று பல லட்சம் இளைஞர்களின் ஆதரவு உள்ளது உங்களுக்கு.
இப்படியான ஆயிரக்கணக்கான ராம் ரத்தன்கள் தான் ஒரு சவுக்கு சங்கரை உருவாக்கி விடுகிறார்கள்.. உண்மைதான் சங்கர் அவர்களே . தமிழ்நாடு மக்கள் செய்த புண்ணியம் தங்களைப் போன்ற ஒருவர் கிடைத்தது . அநீதிகள் அதிமாகும்பொழுது இறைவன் தங்களைப் போன்ற ஒரு நபரைப் படைத்துவிடுவார் . இந்த மாதிரி வேதனைப்படுபவர்களின் குரலாக தாங்கள் வந்துள்ளீர்கள் . ஆகவே இப்படியாக நடக்கும் அநீதிகளையெல்லாம் தட்டிக்கேட்கும் ஒரு நபராக இறைவன் தங்களை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம் . இறைவன் விதித்த காலம் வரை தாங்கள் செயல் படுவீர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.. நடக்கும் அநீதிகளை பார்த்து மனம் வெதும்பும் தமிழ் நெஞ்சங்களின் குரலாக தாங்கள் பேசி வருகிறீகள். இவர்களின் ஆன்ம பலம் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கு பலம் சேர்க்கும். தகுந்த நேரங்களில் காப்பாற்றவும் செய்யும் . ஆகவே இந்த விதமாகவே தொடருங்கள் . தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு நாமக்கல் கவிஞரின் வார்த்தையை மெய்ப்பித்து வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள் . நன்றி வணக்கம்
Sir play your own game. We will support to you.
HAI Sir,
We am in need of your help…. I am working in a govt hospital on a contract basis through an outsourcing agency… We have an issue with our salary. i dont know how to contact you but please help out by conveying the means how to reach you.
Thank you
Hi sir
Savukku sir . I have a hotelier going and scamming with a civil judge tag incar and not paying tolls from madurai.please email me to have your photos.
Savukku sir . I have a hotelier going and scamming with a civil judge tag incar and not paying tolls from madurai.please email me to have your photos
Again what happened to your twitter ??
New acc also blocked huh ?
Thozhar, Please update your new interim twitter handle in this site too. Also, I am able to view the tweets from the blocked twitter handle using a VPN service without logging in to my Indian account. If I log-in to twitter, am unable to view the handle if I log-in using the VPN service.
Shankar Sir what happened to your Twitter account? 🙁
Available at @veera284
Sir, what happened to your Twitter account?!
Available at @veera284
Blocked by TN poliAe__
That car miss use issue ( post )
I am feeling depressed with this action taken by the police to the poor people
I am big fan of you anna!!!!!
enna savukku kan kalanga vaikaringa. namma saiyal aduthavargalai kastapaduthadha varaikum, ellame correct than. feeling pain of others is showing your quality. Your mother has brought you up as a good human being. My hugs and love to your mom.
Gathered so much in this blog.
Change the date in your picture , it is not 2022 July
காயங்களாலும் வலிகளாலும் செதுக்கப்பட்ட மனிதர்!
” இரண்டு வழக்கின் விசாரணைகளும் சில நாட்களில் ஒரே நாளில் வந்துவிடும்.
இரண்டு நீதிமன்றங்களுக்கும் பரபரப்பாக பைக்கில் செல்வேன். வெயிலில், பூந்தமல்லி போவதற்குள் நாக்கு தள்ளி விடும்”. 😭😭😭
” என்னதான் நண்பர்கள் என்றாலும், கொஞ்சம் பீஸ் குடுத்தால்தான் மரியாதை. செலவும் ஆகும் “😴
” நீதிபதிகள் மக்களை விட்டு எவ்வளவு தூரம் சென்று விட்டார்கள் தெரியுமா ? இரக்கமற்றவர்களாக மாறி விட்டார்கள். இயந்திரங்களாக மாறி விட்டார்கள். தங்கள் மாண்பையும் மரியாதையையும் இழந்து விட்டார்கள் “.
உங்கள் மீதான அன்பும் மரியாதையும் கூடிக்கொண்டே தான் போகின்றன!