2011 செப்டம்பர் 7 அன்று பல உயிர்கள் பலியான ஒரு சில மணி நேரங்களிலேயே, அப்சல் குருவின் பெயர் இந்த விவசாரத்தில் இழுக்கப் பட்டுள்ளது. உண்மையானதா என்று சரிபார்க்கும் முன்பே, ஒரு மின்னஞ்சல் அப்சல் குருவை தூக்கில் போடாதே என்ற கோரிக்கையோடு வந்ததாக ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.
இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவை அல்ல. 24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களை கட்டுப் படுத்தி அவை ஊடக தர்மங்களை கடைபிடிக்கின்றனவா என்று கண்காணிக்கவும், அவற்றை ஒழுங்குமுறை படுத்தவும் இந்தியாவில் எந்த விதமான அமைப்பும் இல்லை. ஊழலைப் பற்றி உரத்த குரலில் மின்னணு ஊடகங்கள் பேசினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஊழலைப் பற்றிப் பேசவும், பொறுப்பற்ற அதிகாரம் படைத்த இந்த ஊடகங்கள் தயாராக இல்லை.
தேச பக்தி என்பது, பாதுகாப்பு அதிகாரிகள், கார்ப்பரேட் மீடியாக்களின் செய்தியாளர்கள் மற்றும், இந்துத்துவா சக்திகள் ஆகியோரின் தனிப்பட்ட சொத்து போல, அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசும் அனைவரையும் ஊடகங்கள் இந்தியாவின் துரோகியாக காட்டுகின்றன.
அப்சல் குருவை காப்பாற்றுங்கள் என்ற எங்களது கோரிக்கை கீழ்கண்ட விஷயங்களை முன்னிறுத்தியது.
புலனாய்வு செய்யும் நிறுவனங்களில் நிலவும் ஊழலும், அந்நிறுவனங்களின் திறமையின்மையும் வெளிப்பட்டன. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கை விசாரித்த அதிகாரிக்கு பல விருதுகளும், பதக்கங்களும் தரப்பட்டன, ஆனால், அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தின் காரணமாக சுட்டுக் கொல்லப் பட்டார். அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக சிறப்புப் படையில் நிலவும் ஊழல்களின் மீதான கவனம் திசை திரும்பி விடும்.
2. இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்ததிலிருந்தே, ஊடகங்கள் தங்களின் ஆதிக்கத்தை உச்ச நீதிமன்றம் வரை செலுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது. ஒருவரை தூக்கிலிடுவதற்கு, சட்ட ரீதியான காரணமாக இது அமைய முடியாது. அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக, நாளை இந்துத்துவா சக்திகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் திருப்தி செய்வதற்காக யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட முடியும்.
3. பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பான குற்றப் பத்திரிக்கை 3 பாகிஸ்தானியர்களை குற்றம் சாட்டியது. மவுலானா மஸுத் அஸார், காஸி பாபா மற்றும் தாரிக் அகமது ஆகியோர் இத்தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் இவர்கள் கடைசி வரை பிடிக்கப் படவேயில்லை. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர். அப்சல் இத்தாக்குதலுக்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவருக்கு மரண தண்டனை எப்படி வழங்க முடியும் ? அவர் இத்தாக்குதலுக்கான மூளையும் அல்ல. அல்லது அதில் பங்கேற்கவும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முக்கியப் பணியில் இருந்து நழுவுவதற்காகவும், தீவிரவாதத்தின் உண்மைக் காரணங்களை மறைப்பதற்காகவுமே, அப்சல் தூக்கிலிடப் படுகிறார்.
4. மனித உரிமை ஆர்வலர்கள் பாராளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் நிரபராதிகள் என்று நிரூபித்தனர். இந்த இருவருள், சிறையில் குழந்தையைப் பெற்ற கர்ப்பமான ஒரு சீக்கியப் பெண்மணி அடங்குவார். அவர் வாழ்க்கை முழுமையாக சீரழிந்து விட்டது. நமது தொலைக்காட்சிகளில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் பார்க்கவே இல்லை. இவ்வாறு நமக்கு தெரியாமல் போனது, சில இந்தியக் குடிமகன்களைப் போல, எப்படி சிலரை சாதாரணமாக காவு கொடுக்கலாம் என்பதை உணர்த்தியது.
5. டெல்லியில் கூட, உண்மையை பேசும், நியாயத்தின் பக்கம் நிற்கும், நீதியைத் தேடும், மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே அவர்களோடு இணைந்து அப்சலுக்காக குரல் கொடுத்தோம். காஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே இது போன்ற மக்கள் அமைத்திருக்கும் அந்தச் சன்னமான பாலத்தை அப்சல் குருவின் மரண தண்டனை உடைத்து விடும்.
6. அப்சல் குருவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறவேயில்லை. வழக்கறிஞர்கள் விரும்பாததால், அவருக்கு, நியாயமான வழக்கறிஞர்களும் அமர்த்தப் படவில்லை. அப்சலைத் தூக்கில் போடுவதன் மூலமாக நாம், நியாயமான நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கும் நம்பிக்கையையும் குலைப்போம்.
பாராளுமன்றத் தாக்குதல் நமக்கு இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளின் பலவீனத்தை உணர்த்திய அதே நேரம், நம்பிக்கை உள்ள ஒரு சிறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஜனநாயகத்தைக் காப்பதற்காக வேலை செய்தால் அது வெற்றி பெறும் என்பதையும் நிரூபித்திருக்கிறது.
ஒரு வேளை அப்சல் குரு தூக்கில் போடப்பட்டால், இந்துத்துவா சக்திகள் மகிழ்ச்சி கொள்ளும். கொண்டாடும். கார்ப்பரேட் மீடியாக்கள் அதன் புகழ்பாடும். ஆனால், இந்தியாவின் ஜனநாயகம் இறந்து போகும். இதற்காகத் தான் அப்சலை தூக்கில் போடாதீர்கள் என்று வேண்டுகிறோம்.
அப்சலின் அறிக்கையை இத்துடன் இணைக்கிறேன். அப்போதாவது இம்மனிதனின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.
9 செப்டம்பர் 2011
இப்படிக்கு
என்.டி.பன்ச்சோலி
திஹார் சிறையிலிருந்து அப்சல் குரு அளித்த அறிக்கை
திகார் சிறை எண் 3
தில்லி நீதிமன்றத்தில் இதயம் பதைபதைக்கும், நெஞ்சை உறைய வைக்கும் வெடிகுண்டு வைத்த ஒரு குற்றத்தை சில சமூக விரோத சக்திகள் செய்துள்ளன என்பது கவலை அளிக்கக் கூடியது. இந்த கோழைத்தனமான காரியம் அனைவராலும் கண்டிக்கப் பட வேண்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்த மதமும், அப்பாவிகளைக் கொல்வதை அங்கீகரிப்பதில்லை.
இந்த குற்றத்தில் தேவையற்ற முறையில் என்னுடைய பெயர் இழுக்கப் பட்டிருப்பது குறித்து நான் வருத்தம் அடைகிறேன். மோசமான விளையாட்டாக சில சக்திகளும், சில குழுக்களும், என்னுடைய பெயரை தவறாக இதில் இழத்திருக்கின்றன. கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபடும் சில விஷம சக்திகள் தேவையற்ற முறையில் என்னுடைய பெயரை இது போன்ற சம்பவங்களில் இழுப்பது இது முதல் முறையன்று. எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும், என்னைக் களங்கப் படுத்துவதற்காகவும், எனக்கு எதிராக பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்காகவும், அதில் என் பெயரை இழுப்பது ஏறக்குறைய வழக்கமாகவே ஆகி விட்டது.
எனது வழக்கறிஞர் திரு.என்.டி.பன்ச்சோலி அவர்கள் மூலமாக எனது இந்த அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு அளிக்கிறேன். இதை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அப்சல் குரு