கடந்த ஒரு மாதமாக அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் பெரும் அலைகளை கட்சிக்குள்ளும் தொண்டர்களுக்குள்ளும் கிளப்பியுள்ளது. சாதாரண அலை அல்ல, கொந்தளிப்பான அலை. இந்த அலை யாரை வெளியில் தள்ளும், யாரை உள்ளே இழுக்கும் என்பதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதிமுகவின் பிரமுகர்கள் தொடங்கி அதன் தொண்டர்கள் வரைபல்வேறு தரப்பினருடன் உரையாடுகிறேன். பலரும் அதிமுக குறித்து நான் தொடர்ந்து பேசிவரும் கருத்துக்களுக்காக வாழ்துகளை சொன்னார்கள். அவர்களுடைய ஆதங்கத்தை நான் அவர்கள் சார்பாக பேசுவதாக சொன்னார்கள்.
இந்தத் தொண்டர்களிடம் ஒரு கவலையைப் பார்த்தேன். . “கட்சி ஒன்னா சேந்துருமா.. பழையபடி ஸ்ட்ராங்கா ஆயிடுமா” என்ற ஆதங்கத்தை பல தொண்டர்களிடம் பார்க்க முடிந்தது. ஒழுங்கான தலைமை இல்லாததால் கட்சி, கிட்டத்தட்ட தாயில்லா பிள்ளை போல ஆகி விட்டது என்கிற ஏக்கத்தை அவர்களிடத்தே பார்க்க முடிந்தது.
அரசியல் நகர்வுகளை செய்தித்தாளில் படித்து தெரிந்து கொள்வதற்கும் அருகில் இருந்து பார்ப்பதற்கும் கடலளவு வித்தியாசம் உண்டு. நெருங்கிய நண்பர்கள் எனக்கு அரசியலில் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். அரசியல் களத்தில் இருக்கும் தலைவர்களோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளமுடிந்திருக்கிறது.
இந்த Movers & Shakers of தமிழக அரசியல்வாதிகளுடனான தொடர்பு அரசியலை ஒரு புதிய கோணத்திலும், ஒரு அழகான புரிதலோடும் அணுக வைத்திருக்கிறது.
அரசியல் சதுரங்கத்தில் விளையாடி வெற்றி பெறுவது அத்தனை எளிதல்ல. அரசியல்வாதிகள் அத்தனை எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். அப்படி யாரையும் எளிதாக நம்பாதவர்களே நல்ல அரசியல்வாதிகளாக பரிணமித்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை பெறுவது கடினம். மூத்த அரசியல்வாதிகள் சொல்கிற அவர்களுடைய அனுபவக் கதைகள் சுவையானவை. வரலாற்றில் நடந்த பல முக்கிய சம்பவங்களை நாம் புரிந்து கொண்ட கோணமும், உண்மையில் நடந்தவையும் வேறு வேறாக இருக்கும். சிலவற்றை தாராளமாக பகிரலாம். நான் இதற்கு முன்பும் பகிர்ந்துள்ளேன்.
ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சொல்லிய அனுபவம் இது.
1991-1996 தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு. நரசிம்மராவ் பிரதமர். 1994 இறுதி அல்லது 1995 தொடக்கமாக இருக்கலாம். பிரதமரை சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்கிறார். ஜெயலலிதா நரசிம்மராவை சந்தித்து விட்டு வெளியே வருகையில், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. கோபம் தாண்டவமாகிறது.
ஜெயலலிதாவின் legendary angerஐ பார்த்தவர்கள் அவர் அருகே செல்லமாட்டார்கள். ஒருவரும் அவருடன் பேசவில்லை. அவர் சந்திப்பை முடித்து வரும்போது மதியம் 1 மணி இருக்கும். ஜெயலலிதா கோபத்தோடு தமிழ்நாடு இல்லம் திரும்பினார். மதிய உணவு முடித்து விட்டு ஓய்வில் இருக்கிறார். ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரிக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வருகிறது.
மாலை 5 மணிக்கு உள்துறை செயலாளர், நிதித் துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், இன்னும் 2 அதிகாரிகள் முதல்வரை பார்க்க வருகிறார்கள். முதல்வரிடம் உடனே சொல்லுங்கள் என்கிறார். உளவுத்துறை அதிகாரிக்கோ தயக்கம். ஏற்கனவே கோபத்தில் இருக்கிறார். ஓய்வு நேரம் வேறு.
முதல்வர் ஓய்வில் இருக்கிறார் என்றதும், பிரதமரின் செயலர் “நான் பிரதமரின் செயலாளர் சொல்கிறேன். உங்கள் முதல்வர் ஓய்வில் இருக்கிறார் என்கிறீர்கள். பிரதமரே நேரடியாக பேச வேண்டுமோ” என்று கத்தியதும், உளவு அதிகாரி, ஜெயலலிதாவை தயக்கத்துடன் சென்று எழுப்புகிறார். விஷயத்தை சொன்னதும் ஜெயா, “ஆல் ரைட். மேக் அரேஞ்மெண்ட்ஸ்” என்று கூறுகிறார்.
மதியம் 3.30 மணிக்கு ஜெயா, மீட்டிங் ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். என்ன ஸ்னாக்ஸ் என்று கேட்கிறார். அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுக்கு, நம் ஊர் வடை, பஜ்ஜி, சமோசா என்று மெனுவை சொல்கிறார்கள். சைடிஷ் என்ன என்று கேட்கிறார். சட்னி, சாம்பார் என்று கூறவும், எங்கே கை கழுவுவார்கள் என்று கேட்டதும், அதிகாரிகள் 50 மீட்டரில் இருக்கும் ரெஸ்ட் ரூமை சுட்டிக் காட்டுகிறார்கள். ஜெயா முறைக்கிறார். அதிகாரிகள் சாண்ட்விச் போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். இதுவல்ல விஷயம்.
மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநில முதல்வர்களை ஒரு க்ளெர்க் ரேஞ்சுக்குத்தான் மதிப்பார்கள். தமிழக அதிகாரிகள் பெரும் லாபி செய்ய வேண்டி இருக்கும். அப்படி இருக்கையில் அன்று மத்திய அரசின் பெரும் உயர் அதிகாரிகளை தன்னைத் தேடி தமிழ்நாடு இல்லத்துக்கு வரவழைத்தது ஜெயலலிதாவின் மாபெரும் political power என்று அந்த ஐபிஎஸ் அதிகாரி கூறினார்.
இது சாதனையா என்றால் சாதனைதான். இந்த ஆளுமை எப்படி இருக்கிறது. ஆனால் நான்கு வருடங்களாக டெல்லிக்கு தமிழகத்தில் இருந்து பல்லக்கு தூக்கும் ஒரு கூட்டம் ஆட்சி செய்ததே. அது சாதனையா ?
அரசியலில் மிக அரிதாகவே பேருள்ளங்களை பார்க்க முடியும். ஒவ்வொருவருமே முதுகில் கத்தி வைத்திருப்பார்கள். எதிரிக்காக அல்ல. தன் சொந்த கட்சிக்காரனுக்காக. இதற்கு ஒரு கட்சியும் விதிவிலக்கல்ல. கத்தியைத் தேவைப்படும் இடங்களில் சுழற்றும் கெட்டிக்காரன் பிழைத்துக் கொள்கிறான். முந்துகிறான். ஆள்கிறான். அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்கிறான். வரலாறு வெற்றி பெற்றவர்களால்தான் எழுதப்படுகிறது.
இதற்காக இவர்கள் எந்த பஞ்சமாபாதகம் எதையும் செய்ய தயங்குவதில்லை. ஆனாலும் அரிதான சில தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எம்ஜிஆர் இறந்ததும் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு அணி. ஜானகி தலைமையில் ஒரு அணி. எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சைக்காக தங்கியிருந்தபோது ஆர்.எம்.வீரப்பன் தான் நிழல் முதல்வர். அரசாங்கத்தை ஆட்டிப் படைத்தார். ஜெயலலிதாவை எப்படி ஒடுக்க முடியுமோ அப்படி ஒடுக்கினார். ஜெயலலிதாவை பிடிக்காமல்தான் ஆர்.எம் வீரப்பனோடு கட்சிகாரர்கள் இருந்தார்களே தவிர ஆர்.எம்.வீரப்பனை பிடித்து அல்ல. இதனால் எம்.ஜி.ஆர் இறந்ததும், ஆர்.எம்.வீரப்பனை அவர் கட்சிக்காரர்களே தலைமை தாங்க விடவில்லை. மாறாக ஜானகி ராமச்சந்திரனை முதல்வராக்கினார்கள். அவர் சில நாட்கள் முதல்வராக இருந்தார்.
பிரிவு 356ந் கீழ் ஜானகி தலைமையிலான ஆட்சியை கலைத்தார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. ஒரு வருட குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு தேர்தல் நடந்தது. 175 தொகுதிகளில் போட்டியிட்ட ஜானகி அணி 2 இடங்களில் வென்றது. ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது.
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவர் சொன்ன தகவல் இது. ஒரு பத்திரிக்கையாளர், உசிலம்பட்டியில் ஒரு வயதான் பெண்ணிடம், யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்றதும், சேவலுக்கு என்றிருக்கிறார் அவர். சேவல் ஜெயலிதா போட்டியிட்ட சின்னம். எம்ஜிஆரின் மனைவி ஜானகியே போட்டியிட்டாரே அவருக்கு ஏன் ஓட்டுப் போடவில்லை என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, இந்த அம்மா மேலத்தானே (ஜெயலிலிதா) தலைவர் பிரியமா இருந்தாரு என்று சொன்னதாகச் சொன்னார். இப்படியாகத் தான் அப்போதைய பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருந்தது. இதுதான் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே ஒரு அடித்தளத்தை அமைத்துத் தந்தது.
தேர்தலுக்கு பிறகு தனக்கு அரசியலே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார் ஜானகி. அவரது அணியில் இருந்த முத்துசாமி உள்ளிட்டோர், ஜானகியை விலக விடவில்லை. அந்த சமயம் ஜெயலலிதா சார்பில் ஒருவர் ஜானகியிடம் தூது போனார். அதிமுக கட்சி இரண்டாக உடையவேண்டாம் சமரசம் செய்து கொள்ளலாம் என்பது தூதின் நோக்கம். ஆனால் இந்தத் தூதினை ஜெயலலிதா விரும்பவில்லை. தான் இறங்கிப்போய்விடுவோமோ என்கிற ஈகோ அவரிடம் இருந்திருக்கிறது. ஆனால் வேறுவழியில்லாமல் தூதினை அனுப்பியிருந்தார். ‘நான் வெற்றி பெற்றவள். நான் ஏன் இறங்கிப் போக வேண்டும். தோற்றவர் இணைப்புக்கு வரட்டுமே என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. தனது தூதுவரிடம், தனது தரப்பு இறங்கி வந்தது போல ஜானகிக்கு தெரியக் கூடாது என கூறியிருந்தார்.
ஆனால் ஜானகியோ, ஜெயலலிதாவின் தூதுவரிடம், “இது எங்க வீட்டுக்காரரு ஆரம்பிச்ச கட்சி. இது இப்படி ரெண்டா உடைஞ்சு கிடக்கறத நானும் விரும்பல. கட்சி எனக்கு வேண்டாம்” என்று கூறுகிறார்.
தூதுவர், ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கட்டும் என்றும் நீங்கள் தலைவராக இருந்து கொள்ளுங்கள் என்று ஜானகியிடம் கூறியதும், ஜானகி கையெடுத்து கும்பிட்டு, “வேணாம்ப்பா. எனக்கு விருப்பமே இல்ல. வீரப்பனை எல்லாரும் வேண்டாம்னு சொன்னதாலதான் நான் வந்தேன். இது என் வீட்டுக்காரரு கட்சி இல்லையா!! அந்த பொண்ணோட லைப் என் வீட்டுக்காரராலதான் கெட்டுப் போச்சு. அந்த பொண்ணே இந்த கட்சியை நடத்தட்டும். நல்லா வாழட்டும்” என்றிருக்கிறார்.
அதிமுகவில் இரட்டை தலைமை ஐடியா அப்போது தோன்றியதுதான்.
ஜானகியின் அந்த பேருள்ளம் அதோடு நிற்கவில்லை. அவ்வை சண்முகம் சாலையில் தான் நடித்து சம்பாதித்த வீட்டை அதிமுகவுக்கு வழங்கினார்.
எத்தகைய மனிதராக இருந்திருக்கிறார் அல்லவா ஜானகி ?
அதையும் இன்று அதிமுகவில் நடப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரு தரப்புக்கும் ஆசை. இரு தரப்பும் கைப்பற்ற முனைகிறது. ஒரு தரப்பிடம் பெரும்பான்மை சென்றது. மறு தரப்பு தனிமைப்பட்டது. வலியது பிழைக்கும் என்பது இயற்கையின் நியதி. இதில் யார் மீதும் விமர்சனம் செய்வதற்கில்லை.
ஒரு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பணி முக்கியமானது. ஒரு எதிர்க்கட்சியால்தான் ஆளுங்கட்சியை கட்டுக்குள் வைக்க முடியும். எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டால் ஒரு முதல்வர் ஏன் பதில் கூறுகிறார்? எதிர்க்கட்சியின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்தால், அடுத்த தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்பது முதல்வருக்கு தெரியும்.
தமிழகத்தில் அதிமுக கட்சியின் தேவை எப்போதும் அவசியமானது. கட்சிக்குள் ஒரு பிரிவு ஏற்பட்டால் அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது அதிமுக கட்சிக்கு தெரிந்தே இருக்கும். அதற்குத் தான் ஜெயலலிதா, ஜானகி பற்றி நினைவுகூர வேண்டியிருக்கிறது. சுயலாபத்துக்காக சண்டையிடும் போது அது கட்சியின் மாண்பை மட்டுமல்ல, தமிழகத்தின் நலனையும் சேர்த்து சூறையாடும்.
அதிமுகவும், திமுகவும் தமிழகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு பக்கம் தேய்வது அதை செல்லாததாக்கி விடும்.
11 ஜூலை அன்று பொதுக்குழு முடியட்டும்.
தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி யார் என்பது அப்போது தெரியும்.
தமிழா டெல்லியை பிடி.
—–
திராவிடா டெல்லியை பிடி.
—–
இந்தியாவை திராவிட நாடாக மாற்று.
—–
தளபதி ஸ்டாலினை இந்தியாவின் பிரதமராக, டெல்லி சுல்தானாக முடிசூட்டு.
——
தமிழ் வாழ்க.
தந்தை பெரியார் வாழ்க.
திராவிட நாடு வாழ்க.
https://youtube.com/watch?v=Qrn70DccUKg&feature=share
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு நேர்மையான கொம்பன்.
மிக நிதானமாக எழுதப்பட்ட அருமையான கட்டுரை
அரசியலில் மிக அரிதாகவே பேருள்ளங்களை பார்க்க முடியும்.//
உண்மை சார்.
உண்மையை நெஞ்சுரமிக்க தைரியத்துடன் எடுத்துக்கூறியுள்ளீர்கள்
Brother, you are the real gutsy person. I’m a big fan of you. How do I contact you ? I just need to talk to you.
ஒரு கட்சியில் succession பிளான் இல்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதற்கு அதிமுக ஒரு உதாரணம் . என்ன தான் வாரிசு அரசியல் என்று யாரும் காரித் துப்பினாலும் , மாநில கட்சியில் வாரிசுகள் தான் அடுத்த தலைவர்கள். உதாரணம் மமதா பானர்ஜி, ஷர்ட் பவார் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பாஜக அதிமுகவை சுரண்டித் தின்பதை நிறுத்த வரும் எந்தத் தலைவரும் நல்லத் தலைவரே.
https://writervivek.com
Shankar anna, You are essential for this society love you lots
Plz I need ur contact number to expose about BJP’s Nangavalli union vice president
I need your contact number sir please
விவோ மொபைல் போன் நிறுவனம் 63000 கோடி ரூபாயை அரசுக்கு வரி கட்டாமல் சட்ட விரோதமாக சீனாவுக்கு கடத்தியுள்ளது . இவ்வளவு பெரிய தொகை சீனாவுக்கு செல்லும்போது மத்திய அரசுக்கு தெரியாமலா நடந்திருக்கும் . இந்த ஊழல் பற்றி விரிவாக ஆராய்ந்து விவாதிக்கவும் .
Few Golden lines from கசடற – 4 :
” ஒவ்வொருவருமே முதுகில் கத்தி வைத்திருப்பார்கள். எதிரிக்காக அல்ல. தன் சொந்த கட்சிக்காரனுக்காக. இதற்கு ஒரு கட்சியும் விதிவிலக்கல்ல. கத்தியைத் தேவைப்படும் இடங்களில் சுழற்றும் கெட்டிக்காரன் பிழைத்துக் கொள்கிறான். முந்துகிறான். ஆள்கிறான். அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்கிறான் ” .
” வலியது பிழைக்கும் என்பது இயற்கையின் நியதி “.
” அதிமுகவும், திமுகவும் தமிழகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு பக்கம் தேய்வது அதை செல்லாததாக்கி விடும் ” .
good anna