1999ம் ஆண்டு ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ததிலிருந்தே இவ்வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். 2000ம் ஆண்டில் நளினியின் கருணை மனுவை மட்டும் சோனியா மற்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் மோகினி கிரி ஆகியோரின் பரிந்துரையின் படி, தமிழக ஆளுனர் பரிசீலித்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். ஆனால் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் கருணை மனுவை ஆளுனர் நிராகரித்தார்.
இதையடுத்து இம்மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர். 11 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து, திடீரென்று குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து செய்தி அனுப்பியதையடுத்து அதிர்ச்சி அலைகள் பரவின. தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துக் கிளம்பியது கட்சிகளை அப்பாற்பட்டு மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று உரத்த குரலில் கோரிக்கை வைத்தனர்.
நீதிமன்றத் தடையுத்தறவு ஏதும் இல்லாததால் ஆகஸ்ட் 26ம் தேதி, தமிழக அரசின் உள்துறை, சிறைக் கண்காணிப்பாளர் மூலமாக மூவருக்கும் செப்டம்பர் 9ம் தேதி அன்று தூக்குத் தண்டனை விதிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கும் கடிதத்தை மூவருக்கும் அளித்தார். உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் இடைக்காலத் தடை விதித்து 30ம் தேதி உத்தரவிட்டதையடுத்து தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 9 என்று தேதி நிர்ணயம் செய்யப் பட்ட பிறகு, வேலூர் சிறை நிர்வாகம் தூக்கிலிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியது. தூக்கிலிடும் இடத்தைச் சுற்றி தடுப்புகள் எழுப்பப் பட்டன. லோக்கல் காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, அதிரடிப் படை, மற்றும் சிறைத் துறையின் கமாண்டோப் படை ஆகிய நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறையைச் சுற்றிச் செய்யப் பட்டன. சிறையின் வெளிப்பகுதியில், கண்காணிப்பாளரின் வண்டியை நிறுத்தும் இடத்தில், தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப் பாட்டு அறை தற்காலிகமாக ஏற்படுத்தப் பட்டது.
இந்நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, இந்த தூக்கு தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, சிறைத்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தன் பெயர் குறிப்பிட விரும்பாத அவர் “வேலூர் சிறையில் பொது மக்கள் மனு பார்க்கும் இடத்துக்கு பின்புறம் தூக்கிடப் படும் இடம் இருக்கிறது. அது சிறை வளாகத்துக்கு உள்ளே அமைந்திருக்கிறது. கைதிகளை பார்வையிட வரும் பொது மக்கள் அதைக் காண முடியும். அந்த தூக்கிலிடும் இடத்தைப் பார்க்கும் வகையில் சிசிடிவி எனப்படும் ஒரு அதி நவீன காமெரா பொருத்தப் பட்டுள்ளது. அந்த காமெரா நேரடியாக தூக்கிலிடும் இடத்தை கவர் செய்யும் வகையில் அமைந்துள்ளது. தூக்கிலிடப்படும் போது தூக்கிடப்படுபவரை 15 அடி தூரத்திலிருந்து அழைத்து வரும்போதே இந்தக் காமெரா மூலம் பார்க்க முடியும்.
சிறை நிர்வாகத்திற்கு சிறைக்கு வெளியே காமெராவைப் பொருத்துவதற்கு மட்டும் தான் உரிமை உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கூட சிறைக்கு உள்ளே காமெராவைப் பொருத்துவதற்கு விதிகளில் இடம் இல்லை. அப்படியே பாதுகாப்புக் காரணங்களுக்காக பொருத்துவதாக எடுத்துக் கொண்டாலும் தூக்கிடும் இடத்தைப் பார்த்து பொருத்த வேண்டிய அவசியம் என்ன ? அதுவும், செப்டம்பர் 9 அன்று தூக்கு என்று முடிவெடுத்த 26ம் தேதி அறிவித்தனர். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு 28 அன்று, இந்தக் காமெராவைப் பொருத்த வேண்டிய தேவை என்ன ? இந்தக் காமெராவை, மத்திய உளவுத் துறையின் உத்தரவின் படியே பொருத்தப் பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் காமெராவைப் பொருத்தும் பொழுது, மத்திய உளவுத்துறையினர் நேரடி மேற்பார்வை செய்தனர் என்றும் தெரிகிறது.
தற்போது காமெரா பொருத்தப் படும் இடத்தின் அருகில் சிறைக் கண்காணிப்பாளருக்கான புதிய அறை கட்டும் பணி கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தூக்கு தண்டணைக்கு நாள் குறித்து ஆணை சிறைக்கு வந்த பிறகு, அந்தக் கட்டுமானப் பணிகள் முழுவதும் திடீரென்று நிறுத்தப் பட்டன. இதன் பிறகுதான் இந்தக் காமெரா 28ம் தேதி பொருத்தப் பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து, அவர்களின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் கருத்து கேட்டோம். “21 ஆண்டுகளாக, நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன், வெளி உலகத்தையே காணாமல் தனிமைச் சிறையில் இருக்கின்றனர். இவர்களை சிறையிலிருந்து வெளியே விடக் கூடாது என்று எந்த சக்தி விரும்பிகிறதோ, அந்த சக்திதான் இந்த விஷமத்தனமான சம்பவத்திற்கு காரணமாக இருக்கக் கூடும்” என்றார்.
தொடர்ந்து, “ஒரு வேளை நீதிமன்றத்தில் தடை கிடைக்காமல், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் தூக்கிலிடப்பட்டால் அவர்கள் படும் வேதனையையும், அவர்களின் இறப்பையும் நேரடி ஒளிபரப்பில் கண்டு களிக்கலாம் என்று சில மனித நேயமற்றவர்கள் விரும்பியிருக்கக் கூடும். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், எந்த நாட்டில் இருந்தாலும், மருத்துவமனையில் இருந்தாலும் கூட, கம்ப்யூட்டர் மூலமாக நேரடி ஒளிபரப்பைக் காண இயலும் வசதி வாய்ப்புகள் இருக்கும் போது, இந்தக் கொலைக் காட்சியை காண விரும்பியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இது நடந்திருக்கலாம் என்றார். இல்லையென்றால் மத்திய உளவுத்துறை இது போன்ற காரியத்தில் ஈடுபடுவதற்கான அவசியமே இல்லை.”
இது தொடர்பாக சிறைத் துறை கூடுதல் டிஜிபி எஸ்கே.டோக்ரா விடம் பேசிய போது, ”நாங்கள் அனைத்தையும் விதிப்படியே செய்தோம். சிறைப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் தூக்குக் கைதிககளிடமோ, தூக்கிடப் படும் இடத்தின் அருகிலோ நெருங்க முடியாது. நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு அடிப்படை ஏதுமில்லை” என்று முடித்துக் கொண்டார்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது கூட, தூக்கிலிடுவதை புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை. அரபு நாடுகளில் தான், மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும். ஆனால், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், இது போல மரண தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்வதை நாகரீகம் உள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நன்றி மீடியா வாய்ஸ்