மூன்று விஷயங்களை மறைக்க முடியாது. அவை சூரியன், சந்திரன், உண்மை என்றார் கவுதம புத்தர்.
உண்மையை வெளிக்கொணர்வது எப்படி ? ஏன் வெளிக்கொண்டு வரவேண்டும்? இது ஒரு தத்துவார்த்த கேள்வி. உண்மை கசப்பானது. உண்மை அசவுகரியமானது. உண்மை அதிர்ச்சி அளிக்கக்கூடியது. உண்மை உன்னதமானது. அது தன்னை எந்த நொடியிலும் வெளிப்படுத்தியே தீரும். எவ்வளவு சிரமப்பட்டு அதை மறைக்க நினைத்தாலும், அது பட்டென்று முகத்தைக் காட்டிவிடும்.
உண்மை எல்லோருக்கும் பிடித்தமானது அல்ல.. உண்மையை மட்டுமே விரும்புபவர்களை புரிந்து கொள்வது சிரமம். ஏனெனில் உண்மையின் சூட்டினை எல்லோராலும் தாங்க முடியாது. அதனால் அதனைத் தீண்ட பலரும் யோசிப்பார்கள்.
இந்த நெருப்பினைத் தீண்ட எவ்வளவு போராட வேண்டும் தெரியுமா ? ஆனாலும் யாராவது போராடிக் கொண்டேதான் இருப்பார்கள். உலகம் தட்டை என்று விவிலியம் சொன்னபோது ஒரு கலிலியோ இல்லவே இல்லை என கலகக் குரல் எழுப்பினான். மனிதன் ஆதாமின் எலும்பிலிருந்து வந்தான் என்று தேவாலயங்கள் உரத்து கூறியபோது ஒரு டார்வின் தப்பு தப்பு என்று போட்டு உடைத்தான். .
நமது பெரியார் இல்லையா? எல்லாம் கடவுள் விட்ட வழி..அவர்கள் பெரியவர்கள்.. இவர்கள் சிறியவர்கள் என பேசிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு மூத்திரப்பையை சுமந்து கொண்டு தெருத்தெருவாக உண்மையைப் பேசவில்லையா?.
சிலருக்கு மட்டுமே நியாயங்கள் என்பதை மறுத்து சட்டத்தில் உள்ளதை எந்தப் பாகுபாடும் இல்லாமல் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று உண்மையை சட்டமாக்கிய அம்பேத்கர் நம்மிடம் தானே இருந்தார்.
இவர்கள் என்னுள் இருக்கிறார்கள். என்னை வழிநடத்துகிறார்கள். அதனாலேயே உண்மையத் தேடி நான் பயணிக்கிறேன்.
ஒரு விஷயத்தை புலனாய்ந்து அறிவது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒரு செயல். அதற்காக மிகவும் மெனக்கிடுவேன். மூளையை போட்டு உருட்டிக்கொண்டே இருப்பேன். அப்படி என் மூளைக்குள் விழுந்த விதைகளுள் ஒன்று தான் போலி பாஸ்போர்ட் விவகாரம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநருக்கு புகார் ஒன்றினை அனுப்புகிறார். அதற்கு மறுநாள் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், போலி பாஸ்போர்ட் விவகாரம் பற்றி பேசுகையில், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்தை குற்றம் சாட்டிவிட்டு, அவர் உளவுத்துறையில் இருப்பதால், அதிக அளவில் மதமாற்றம் நடக்கிறது என போகிற போக்கில் ஒன்றை சொல்லி விட்டார். இந்த ஒரு வார்த்தைதான் டேவிட்சனுக்கு வசதியாக போய் விட்டது.
இதையடுத்து, டேவிட்சனுக்கு ஆதரவாகவும், எதிராகவும், வாட்ஸப் செய்திகள், செவிவழிச் செய்திகள் என்று பரவத் தொடங்கின. மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகள் பரவின. ஒரு ஏட்டையா வழங்கிய பாஸ்போர்ட் சான்றிதழுக்கு, ஏடிஜிபி எப்படி பொறுப்பாக முடியும் ? டேவிட்சன் ஒரு மைனாரிட்டி என்பதால் பாஜக குறி வைக்கிறது. அவர் அரசிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளார். கடுமையான அதிகாரி என பெயரெடுத்துள்ளதால் அவர் குறி வைக்கப்படுகிறார் என்று பல செய்திகள்.
இவருக்கு எதிராக வந்த செய்திகளில் பெரும்பாலானவை மிகைப்படுத்தப்பட்டவை அல்லது சரிபார்க்க முடியாதவை. ஆதரவாக வந்த செய்திகளின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இப்படி ஒரு இறுக்கமான சூழலில்தான் இவ்விவகாரம் குறித்த உண்மைகளை வெளியிட வேண்டும் என முடிவெடுத்தேன். இதனால் பல அதிகாரிகள் பகையாளி ஆவார்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆகட்டுமே ? எந்தவொரு செய்தியையும் நீங ‘ப்ரேக்’ செய்யும்போதும், அரசியல் சமூக ரீதியிலான கருத்துகளை வெளிப்படையாகப் பேசும்போதும் எனக்கு புதிது புதிதான எதிரிகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் நான் இதற்கு அஞ்சியதில்லை. ஏனெனில் நான் சொன்னது போல, உண்மை பலருக்கும் சுடும்.
நான் தனிநபராக செய்த மற்றொரு புலனாய்வையும் சொல்லலாம் என நினைக்கிறேன். சேகர் ரெட்டி டைரி பற்றி மறந்திருக்க மாட்டீர்கள். அந்த டைரியின் உண்மைத்தன்மையை அடைய நான் மிக பொறுமையாக காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தக் காத்திருப்பில் ஒரு நொடியும் சோர்வு என்னை ஆட்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. டைரியின் உண்மைத்தன்மை கிடைத்ததும் அதை வருமான வரித்துறையோடு சரி பார்த்த பின், அந்த ஆவணத்தை, வெகுஜன ஊடகங்களில் வெளியிட முயற்சி செய்தேன். ஆவணங்களை பெற்று முழுமையாக படித்துப் பார்த்த ஊடக ஆசிரியர்கள், இரண்டு நாட்கள் கழித்து மேனேஜ்மெண்ட்டில் வேண்டாம் என கூறி விட்டார்கள் என்று கூறிவிட்டனர். ஏன் என்றால் சேகர் ரெட்டி டைரியில் உள்ள பட்டியலில் யாராவது ஒருவர் நிர்வாகத்துக்கு தெரிந்தவர்களாக இருந்தனர். அல்லது, சேகர் ரெட்டியே தெரிந்தவராக இருந்தார்.
ஒரு பிரபல பத்திரிக்கையில் பணியாற்றிய எனது நண்பரிடம் இந்த ஆவணம் பற்றிக் குறிப்பிட்டேன். “எல்லார்கிட்டயும் கேட்டுட்டேன். மெயின்ஸ்ட்ரீம் மீடியாவில் ஒருவரும் முன்வரவில்லை. சவுக்கே மெயின்ஸ்ட்ரீம் மீடியாதான‘ என்று கூறி இங்கு வெளியிட்டேன்.
இந்துவிலோ, இந்தியன் எக்ஸ்பிரஸிலோ வெளியாகி இருந்தால் அதன் தாக்கம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், அனைத்து கட்சிப் பிரமுகர்களுமே, சேகர் ரெட்டியின் க்ளையண்டாக இருந்ததால், ஒருவரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள்.
சேகர் ரெட்டி டைரியை நான் ஏன் வெளியிட வேண்டும் ? இதற்கு பதில் மற்றொரு கேள்விதான். ஏன் வெளியிடக் கூடாது ? அதை விட மிகச் சிறந்த சமுதாயக் கடமை இருக்க முடியுமா ?
சரி எதற்கு இதை செய்கிறேன் ? இதனால் எனக்கு கிடைக்கும் பலன் என்ன ?
மிகப் பெரிய ஊடகங்கள், செய்யத் தவறுவதை நான் செய்கிறேன். அவர்கள் செய்திருந்தால் நான் விலகியிருப்பேன். இங்கு பொய்கள் பேசுவதற்கு பல வாய்கள் உள்ளன. உண்மை பேச சில நாக்குகள் மட்டுமே இருக்கின்றன.
இன்று இந்தக்கட்டுரை எழுத ஒரு காரணம் இருக்கிறது. இன்று 17 ஜூலை 2022. இதே நாளில்தான் 2008ம் ஆண்டில் நான் கைது செய்யப்பட்டேன். இக்கட்டுரை எழுதும் 10 மணிக்கெல்லாம் நான் அடி வெளுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
14வது ஆண்டு. இன்று எங்கே இருக்கிறேன் என்பதை திரும்பிப் பார்க்கிறேன். “நான் தென்றலை தீண்டியதில்லை, ஆனால் தீயை தாண்டியிருக்கிறேன்” என்ற வசனம் எனக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
இன்று மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவனாக வளர்ந்திருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் முதல், மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், வங்கியாளர்கள், ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஃஎப்எஸ் அதிகாரிகள் என்று நான் தொடர்பு கொள்ளும் வட்டம் பெரிது.
எந்தத் தகவலையும் பலமுறை சரி செய்தபிறகே பொதுவெளிக்கு கொண்டு வருகிறேன். சில நேர்வுகளில் மறைமுகமாக எச்சரிக்கையும் அளித்திருக்கிறேன். ஏனெனில் சில விஷயங்கள் அப்போது சொல்வதற்கான சூழலாக இருந்திருக்காது.
நான் அறிந்த, படித்து அறிந்துகொண்ட, கேள்விப்பட்ட, சந்திக்கிற, பழகுகிற அத்தனை மனிதர்களிடம் இருந்தும் நான் தொடர்ந்து கற்றுக் கொள்கிறேன். அறிவாளிகளை கண்டு வியக்கிறேன்.
14வது ஆண்டில் எனக்கு தோன்றும் உணர்வு என்ன ?
மகிழ்ச்சி. நெகிழ்ச்சி.
நிறைய பேர். உங்களுக்கு வாழ்க்கையில என்ன இலட்சியம் என்ன என்று கேட்பார்கள். ஒரே ஒரு இலட்சியம் தான் இருக்கிறது.
ஒரு அதிகாரி என்னிடம் கேட்டார். “சங்கர் உங்களுக்கு தெரிஞ்ச ஒரே ஒரு உண்மை என்னன்னு சொல்லுங்க” என்றார். நான் பல விஷயங்களை சொன்னேன். அவர் சிரித்தபடி மறுத்துக் கொண்டே இருந்தார். “மரணம்”. மரணம்தான் உண்மையானது. நீங்க சாகவே மாட்டீங்கன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா என்று கேட்டார்.
அது எப்படி சார் முடியும் என்றேன்.
“அப்போ அதுதானே உண்மை” என்றார்.
அதுதானே உண்மை. மரணம் எத்தனை உண்மையானதோ அதே போல் சில நேரங்களில் உண்மையும் மரணத்துக்கு நிகரான நிம்மதியையும் வேதனையையும் தந்துவிடக்கூடியது. மரணம் போல உண்மையும் நிரந்தரமானது. இந்த உண்மையை உங்களிடம் எப்போதும் சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய இலட்சியம்.
அடுத்த வாரம் சந்திப்போம்.