கடந்த வாரம் கசடற தொடரில் வில் இப்படி எழுதியிருந்தேன்.
“உண்மை எல்லோருக்கும் பிடித்தமானது அல்ல. உண்மையை மட்டுமே விரும்புபவர்களை புரிந்து கொள்வது சிரமம். ஏனெனில் உண்மையின் சூட்டினை எல்லோராலும் தாங்க முடியாது. அதனால் அதனைத் தீண்ட பலரும் யோசிப்பார்கள்”
இந்த வார ‘கசடற’ வில், இது உண்மையாகும் என்று நான் நினைத்திருக்கவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தான் சொல்கிறேன்
ஒரு 17 வயது பெண் குழந்தை மர்மமான முறையில், ஒரு பள்ளி ஹாஸ்டலின் அருகே உயிரிழந்து கிடக்கிறாள். பெண்ணின் தாயார், அப்பெண் கொலை செய்யப்பட்டாள் என்கிறார். கொலையாளி பள்ளியின் தாளாளர் சாந்தி என்கிறார். அவர் சொல்லும் மருத்துவரை வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்கிறார். அத்தோடு நிற்கவில்லை. மூன்றாவது முறையாக தன் மகளின் உடலை கூறுபோட உச்சநீதிமன்றம் வரை செல்கிறார்.
அந்த பள்ளியை நிரந்தரமாக சீல் வைக்க வேண்டும். ஆறு மாதங்கள் ஆனாலும் சரி. என் பெண்ணின் சடலத்தை வாங்க மாட்டேன் என்கிறார்.
இந்தப் பிடிவாதம் ஒரு தாயின் வேதனை என்ற அளவில் இல்லாமல் எனக்கு வினோதமாகத் தோன்றியது. 3800 மாணவர்கள் படிக்கும் பள்ளியை சீல் வைத்தால்தான் தன் மகளின் சடலத்தை வாங்குவேன் என்று ஒரு தாய் அடம் பிடிப்பது எனக்கு விசித்திரமாகத் தான் தெரிந்தது.
இதோடு என்னை பாதித்தது, காவல் துறையின் செயலிழப்பு. இப்படி போவோர் வருவோரெல்லாம் விமர்சனம் செய்யும்படி நடந்து கொண்டார்களே என்று எனக்கு வருத்தம் இருந்தது.
தொடக்கத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார், அதன் நியாயம் வேண்டி ஊர் மக்களும் அந்தக் குழந்தையின் தாயாரும் போராடுகின்றனர் என எல்லோரும் தெரிந்து வைத்திருந்த செய்தியைத் தான் நானும் கவனித்தேன். இது குறித்து அதிக அளவில் சிந்திக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து பலரும் என்னிடம் கருத்து கேட்டதும், காவல்துறை ஏன் இது குறித்து தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும், வன்முறையாக மாறியதும் தான் என் கவனம் அதில் சென்றது.
ஒரு போராட்டம் வன்முறையாக மாறும் அளவுக்கு காவல்துறை ஏன் கோட்டை விட்டது என்பது தான் என் முதல் கேள்வியாக இருந்தது. இது குறித்து விசாரிக்கத் தொடங்கினேன்.
நான் விசாரித்ததும், தெளிவாக தெரிந்து கொண்ட தகவல்களையும் சவுக்கு யூட்யூப் சேனலில் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த விசாரணையில் என் மனதில் தோன்றிய ஒன்றை காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பகிர்ந்து கொண்டேன். “என்ன சார். ஒரு அம்மா, தன் குடும்ப பஞ்சாயத்தை மறைக்க, ஒரு ஸ்டேட்டையே நாலு நாளு கிறுக்கனுங்களா ஆக்கியிருக்கு. ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதினு சாமியாடிக்கிட்டு இருக்காங்க. இதை வெளிய சொல்லாம அமைதியா இருந்தா எப்படி சார்” என்றதும், “பப்ளிக் செண்டிமெண்ட் பாத்தீங்கள்ல. இப்போ எப்படி பேச முடியும்” என்றார்.
ஆனால் எனக்கு இது சரியெனப்படவில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும் என்றேன். பல அதிகாரிகள் தடுத்தனர். அவர்கள் தடுத்ததன் காரணம், எல்லோரும் ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும்போது நான் அறிந்த உண்மைகளை சொல்லுவதால், யாரும் நம்ப மாட்டார்கள் என்பதே அவர்கள் என்னைத் தடுத்த காரணம் அவர்கள் சொல்லும் முன்பே இந்த சமூகத்தை நான் புரிந்தே வைத்திருக்கிறேன். இச்சமூகத்தின் அழுக்குகள் எனக்குத் தெரியும். அதன் ஆபாசங்களை நான் அறிவேன். அவற்றை நீக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் இத்தொடரின் பெயர் “கசடற”. கசடற்றுத்தானே வாழ வேண்டும் ? கசடாகவா ?
“ஒரு சமூகம் எந்த அளவுக்கு உண்மையை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு அது அவர்களை வெறுக்கும்” என்றார் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்.
பெண்ணுக்கு நீதி கேட்கிறேன் பேர்விழி என்று, இறந்த அந்த குழந்தையின் உடலை குதறியவர்களே இங்கு அதிகம். உதாரணத்துக்கு ஒரு பேட்டியை இங்கே தருகிறேன்.
இது போன்ற பல வீடியோக்களைப் பார்த்தபிறகு நான் பேசாமல் இருப்பது சரியானதா என்ற கேள்வி எழுந்தது. நான் பேசினேன்.
நான் எதிர்ப்பார்த்தது போலவே கடும் எதிர்ப்புகள் வந்தன. நான் நெருங்கிப் பழகிய நண்பர்கள், என்னை வினோதமாக பார்த்தனர். நான் பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கி விட்டேன் என்றனர். சாதி மோதலை ஏற்படுத்துகிறேன் என்றனர். வெறித்தனமாக என் மீது இன்னும் விழுந்து பிராண்டிக் கொண்டிருக்கிறார்கள். மைனர் குழந்தையின் பெயரை சொல்லி விட்டேன் என்று சொல்லிக்கொண்டே, மற்றொரு பக்கம் இறந்து போன குழந்தையின் உடலைக் குதறிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் “அந்த குழந்தை பார்க்கக் கூடாத காட்சியை பார்த்து விட்டது” என்று ஒரு கதை சொன்னார். ஒரு மீசைக்கார கான்ஸ்பிரசி தியரிஸ்ட், குழந்தையைக் கொன்றதே ஆர்.எஸ்.எஸ் என்றார். பள்ளி உரிமையாளர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர், அதனால் பள்ளியை கொளுத்தியது தவறல்ல என்றும் சேர்த்து சொன்னார்.
யூ ட்யூபில் நண்டு சிண்டுகளெல்லாம் கருத்து சொல்லத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் கருத்து சொல்லாவிட்டால், தலை வெடித்து விடுவது போலவே சமூகம் நடந்து கொண்டது. ஒவ்வொருவரும் நிபுணரானார்கள். ‘அது எப்படி நடந்துருக்கும். ரத்தக் கறை ஏன் இல்லை. இரவு ஏன் ஒருவரும் இல்லை’ என்று அனைவருமே ஸ்காட்லாந்து யார்டு இயக்குநரானார்கள்.
நான் சொல்லிய உண்மையில் துளியும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் இச்சமூகம் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது குறித்து எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. அவர்கள் எதிர்ப்பார்த்தது, அவர்கள் விரும்பும் ‘உண்மையை’ நான் சொல்ல வேண்டும் என்பதை. அதாவது இறந்த குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதென நான் கூசாமல் சொல்ல வேண்டும் என எதிர்பார்த்தனர்.
அப்படி நானும் சொல்லியிருந்தால் அவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள். என்னை நியாயவாதி என்றிருப்பார்கள். ஆனால் மற்றவர்களின் சான்றிதழுக்காக நான் எப்போதும் வேலை செய்வதில்லை. முதலில், பெண்ணின் தாயாரின் புலம்பலை பார்த்து நான் ஏமாறவில்லை. அப்படி ஏமாந்து நானும் பேசியிருந்தால், இந்தச் சமூகம், “நாம் எழுச்சியடைந்து, பொங்கியது சரியே” என திருப்தியடைந்திருக்கும்.
இப்படி சமூகம் நடந்து கொள்வதை மனவியல் மருத்துவர்கள், Retrospective Falsification என்று அழைக்கிறார்கள். அமெரிக்க மனவியல் மருத்துவர்கள் சங்கம், இதை இப்படி விளக்குகிறது.
The alteration of a story each time it is told in order to emphasize its favorable points or make it more interesting. It may be deliberate or unintentional. [defined by British psychologist Donovan Hilton Rawcliffe in his 1952 book, The Psychology of the Occult]
இதன் எளிமையான விளக்கம், “ஒரு நிகழ்வு அல்லது கதை ஒவ்வொரு முறையும் சொல்லப்படும்போது நாம் எதை விரும்புகிறோமோ அதை இன்னும் சுவாரஸ்யப்படுத்துவோம். அதை நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்வோம் “. என்கிறது. இதைத்தான் இந்த சமூகம் செய்து கொண்டிருக்கிறது.
ஏன் வன்முறை நிகழ்ந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அரசியல் கட்சிகள், தனிநபர்கள் என பின்னணியில் இருந்தபோதிலும், மற்றொரு காரணமும் உள்ளது. 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் இறந்த துர்சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். பதற வைத்த சம்பவம். அந்த சம்பவத்தின் போதும் நாம் கொதித்தோம், அழுதோம்..நம் வீட்டுக் குழந்தைகள் என ஒவ்வொருவரும் துக்கம் கொண்டாடினோம். இப்போதும் அதை நினைத்தால் நாம் கலங்குவோம். ஆனால் அந்த சம்பவம் நடந்தபோது யாரும் பள்ளியை அடித்து நொறுக்கவில்லை. நியாயம் வேண்டும், என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கைதாக வேண்டும் என்றும் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது. ஆனால் யாரும் வன்முறையை கையில் எடுக்கவில்லை.
இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்திருக்கிறது. விசாரணைத் தொடங்குவதற்கு முன்பே அவகாசம் கொடுக்காமல் இத்தனை வன்முறைகளை செய்யக் கரணம் என்ன? முதலில் போராட்டம் நடக்கும்போது கண்டுகொள்ளாத ஊடங்கங்கள், இதில் கவனம் குவிக்க ஆரம்பித்தது. அது தவறல்ல, மக்கள் போராட்ட பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மெதுவாக செய்தி அலைவரிசைகளும், யூட்யூப் சேனல்களும்,சமூக வலைதளங்களில் சில தனிநபர்களும் இந்தப் பிரச்சனையை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றத் தொடங்கினார்கள். அப்பட்டமாக சொல்வேன் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூட பெரிதாக்கினார்கள். அதைவிட கேவலமாக அந்தக் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தடப்பட்டிருக்க வேண்டும் என விரும்பினார்கள் இப்படி குற்றம் சாட்டுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மிகுந்த புரிதலுக்குப் பிறகே சொல்கிறேன்,
அந்தக் குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வருவது வரை பாலியல் வன்முறை நடந்திருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் அறிக்கை வந்தபிறகும் மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்துவதின் நோக்கம் என்ன? அது அவர்களின் மனதில் இருக்கும் வக்கிரமின்றி வேறென்ன?
எதை மறைத்தாலும், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையினை மறைக்க முடியாது. பதினேழு வயதான ஒரு குழந்தை பாலியல் தாக்குதலுக்கு உள்ளானால் அதை மருத்துவர்களால் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் திரும்பத் திரும்ப அந்தக் குழந்தையின் மரணத்திற்குப் பின்புலமாய் பாலியல் தாக்குதலை முன்வைப்பதின் காரணம் என்ன?
நிச்சயமாய் இது அந்தக் குழந்தையின் மாண்பை குலைக்கும் செயல் என்பேன் . அந்தக் குழந்தை ஒரு மாணவனை விரும்பினாள் என்று நான் சொன்னேன். தெரிந்தும், அறிந்தும் தான் சொன்னேன். ஆனால் இதனை தவறு என்கிறார்கள். நானும் அந்தக் குழந்தையின் மாண்பை குலைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா இந்த சமூகம்? ஒருவரின் காதல் என்பது அந்தரங்கமானது. ஆனால் அந்த அந்தரங்கம் என்பது உண்மையை மறைக்கிறது என்றால், பல பேருந்துகளைக் கொளுத்துகிறது என்றால், அங்கு படிக்கும் 3800 குழந்தைகளின் வாழ்க்கையை காவு வாங்குகிறது என்றால், 3800 பெற்றோர்களின் மனதில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பாரத்தை ஏற்படுத்துகிறது என்றால், அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றால், அந்த உண்மையை நான் சொல்வேன்.
ஒரு பதின்பருவ காதல் விவகாரத்தை சரியாகக் கையாளத் தெரியாத இந்த சமூகத்தை நான் கேள்வி கேட்கிறேன். ஒரு குழந்தை பதின்பருவத்தில் காதலில் விழுந்தால் அதை சரியாகக் கையாளத் தெரியாமல் விட்டுவிட்டு பின்னர் இழப்பு நேர்ந்தபின் பள்ளியை மூடச்சொல்லும் மூடத்தனத்தை நான் கேள்வி கேட்பேன்..
என்னுடைய கேள்வி உங்களைத் துன்புறுத்தினால், எனக்கு வேறு வழியில்லை. நான் தொடர்ந்து துன்புறுத்துவேன்.
எழுத்தாளர் ஜெயகாந்தன், அவர் சமூகத்தின் இருண்ட பக்கங்களை கதையாக்குவது குறித்து கேள்வி கேட்டபோது இவ்வாறு கூறினார்.
கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
அதைத்தான் நானும் இந்த சமூகத்துக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவமானம் எனக்கா ?
அடுத்த ஞாயிறு சந்திப்போம்.
.