அரசை நிர்வாகம் செய்வது என்பது ஒரு போர்க்கலை. போர் செய்யும் மனமும் திடமும் இருப்பவர் மட்டுமே களத்தில் நிற்க முடியும். அது அத்தனை எளிதில்ல. தலைமைப்பண்பு அவசியம். எதிரியை வீழ்த்துவது மட்டுமல்ல போரின் தந்திரம், தனனுடைய சேனாதிபதிகளை, தளபதிகளை வீரர்களை வழிநடத்த வேண்டும். ‘தலைவன் இருக்கிறான்’ என்ற அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். தாமாக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என ஒரு தளபதி போர்க்களத்தில் இஷ்டத்துக்கு முடிவெடுத்தால் நாடு எதிரியின் காலடியில் வைக்கப்படுகிறது என்று அர்த்தம்.
சுதந்திரம் அடைந்த பிறகு, நாம் அறிந்த தலைவர்களில் பெரும்பாலானோர் போர்க்கலை கற்றுத் தேர்ந்தவர்கள். நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத், கிருஷ்ண மேனன், அபுல் கலாம் ஆசாத், காமராஜர், போன்றோர் பிரிட்டிஷ் ஆட்சியில் கலெக்டர்களாக இருந்து ஆட்சிமுறை பற்றிக் கற்றுக் கொண்டவர்களா என்ன? அவர்கள் வீதிகளில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள். சிறைக்கு சென்றவர்கள். ஐஐஎம்களில் மேலாண்மை படித்தவர்கள் அல்ல. ஐஐஎம்களை உருவாக்கியவர்கள். ஐஐடிக்களை உருவாக்கியவர்கள். எய்ம்ஸ்களை உருவாக்கியவர்கள். 68 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தவர்கள் விற்றுத் தீர்க்க பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியவர்கள்.
அவர்களின் நிர்வாகத்தால் இந்தியாவே வளர்ந்ததா இல்லையா ? காமராஜரை எடுத்துக் கொள்வோமே. மெத்தப் படித்தவர் அல்ல. ஆனால், பள்ளிகளை வங்கிகளில் செய்யும் முதலீடுகளைப் போல பார்த்தார். அவர் செய்த முதலீடுகள் பல மருத்துவர்களை, பொறியாளர்களை, வழக்கறிஞர்களை, பல எழுத்தாளர்களை இச்சமூகத்துக்கு அளித்தது.
அபுல் கலாம் ஆசாத் கல்வி இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தவர்.
அண்ணாவும் கலைஞரும், நிர்வாகம் படித்தவர்கள் அல்ல. கலைஞரோ, முறையான கல்வி முடித்தவர் அல்ல. அவர்கள் மக்களை படித்தவர்கள். திராவிட ஆட்சியில் பல சுயமரியாதை சீர்திருத்தங்கள் சமூகத்தையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. பல தலைமுறைகளை கைதூக்கி விட்டது.
எம்.ஜி.ஆர் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கியதன் மூலம், சத்துக் குறைப்பாட்டை போக்கினார்.
ஜெயலலிதா, பெண்களிடம் துணிச்சலை அதிகரித்தார். ரோல் மாடலாக விளங்கினார். பெண்கள் அதிகார மையத்துக்குள் வரமுடியாத காலகட்டத்தில் வந்தவர். அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் பெரும்பாலான பெண்களின் ரோல் மாடலாக இருக்கிறார். ஜெயலலிதாவை பத்திரிகையாளர் கரன் தப்பார் ஒரு நேர்காணல் செய்தது நினைவிருக்கும். அந்த நேர்காணலை அவர் பாதியில் முடித்துக் கொண்டார். கோபத்துடன் மைக்கினை தூக்கிப் போட்டுவிட்டு சென்றார். இது குறித்தனது Devil’s advocate புத்தகத்தில் கரன் தப்பார் இபப்டி சொல்கிறார், “ஜெயலலிதாவை பிறகு முதல்வர்கள் மாநாடு ஒன்றில் சந்திக்க நேர்ந்தது. அவரைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அந்த நேர்காணலுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். அவர் சொன்னார், நான் அதை மன்னித்துவிட்டேன் என்றார், அப்படி சொல்லிவிட்டிருந்தால் அவர் ஜெயலலிதா அல்ல, நான் மன்னித்துவிட்டேன்..ஆனால் மறக்கவில்லை என்றார் புன்னகையுடன்..இது தான் ஜெயலலிதா.. அவர் எதையும் மறப்பதில்லை. தன்னை வாழ்த்தியவர்களை குறிப்பாக தன் கால்களைப் பிடித்து இழுத்தவர்களை அவர் மறந்ததேயில்லை. இது ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணமாக இருக்கலாம். ஆனால் ஒரு தலைவனுக்கு நிச்சயமாக இருக்க வேண்டிய குணம். ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய தனித்துவம் இது. இல்லையேல் ஆளுமையாக இருக்கவே முடியாது.
இவர்கள் தலைவர்கள். கட்சியையும் நாட்டையும் வழிநடத்தியவர்கள். இந்த அத்தனை பேரிடமும் இருக்கும் ஒரு முக்கியமான குணம் என்ன தெரியுமா ? இவர்கள் சரியான ஆளுமைகளிடம் ஆலோசனைகளை பெற்று, கலந்தாலோசிப்பார்கள். ஆனால் முடிவை சுயமாக எடுப்பவர்கள். அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டால், “நான் சொல்றதை செய்யுங்க” என்று கூறுபவர்கள். தங்களின் திறமை மீதும் உள்ளுணர்வு மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். வரம்பு மீறும் அதிகாரிகளை பந்தாடியவர்கள்.
இந்த உறுதிப்பாடு ஒரு நிர்வாகிக்கு மிகவும் அவசியம்.
தமிழகத் தலைவர்களில் மறக்க முடியாத தலைவர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும். அவர்கள் சந்திக்காத சவால்கள் இல்லை. விமர்சனங்கள் சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் பக்கங்களுக்கு சொல்லலாம். ஆனால் அவர்களின் நிர்வாகத் திறமை பல நேரங்களில் மதிப்புமிகுந்து இருந்திருந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் நேரம் இது.
அவற்றில் சிலவற்றை எடுத்துச் சொல்வதின் மூலம் இன்றைய ஆட்சி முறையைப் பற்றி நாம் புரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு வன்னியர்கள் கேட்ட இடஒதுக்கிட்டினை எடுத்துக் கொள்வோம். வன்னியர்கள் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கேட்கிறார்களா ? இந்த கோரிக்கையை சட்டமாக்கிய அதிமுகவுக்கு இது தேர்தலில் பலமளித்ததா ? அதிமுக தேர்தலில் தோற்றதன் காரணம் என்ன ? திமுகவுக்கு வாக்களித்தது எந்த சமூகம். ஏற்கனவே கொண்டு வந்த சட்டம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா ? என்பதை அதிகாரிகளோடு ஆராய வேண்டும்.
வன்னியர்களுக்கு சலுகை கொடுத்ததால், வன்னியர் அல்லாத இதர சமூகங்களும், எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தலித்துகளும் கோபமடைந்து, ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதை மிக எளிதாக, ஓரளவு அரசியல் தெரிந்தாலேயே கண்டுபிடித்து விடலாம். இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்து கொண்டார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.
கலைஞர் என்ன செய்திருப்பார் ?
1989ம் ஆண்டு கழக ஆட்சியிலேதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது என்று தொடங்கி, கண்ணீர் வரும் அளவு, வன்னியர்களுக்காக கழக அரசு செய்தது என்று ஒரு நீண்ட கடிதம் எழுதியிருப்பார். ஜெகதரட்ச்கனை கொண்டு, ராமதாஸுக்கு எதிரான தலைவர்களை ஒன்றிணைக்க சொல்லியிருப்பார். மற்றொரு பக்கம், ராமதாஸ் மறைக்க விரும்பும் ஒரு விஷயத்தை, உளவுத் துறை மூலமாக ஊடகத்தில் கசிய விட்டிருப்பார். ராமதாஸ், 10.5 சதவிகித போராட்டம் குறித்து வாயே திறக்காத வகையில் அவரை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பார்.
உடனடியாக வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து, அந்த கோரிக்கைக்கு சமாதி கட்டியிருப்பார்.
ஜெயலலிதா என்ன செய்திருப்பார் தெரியுமா ?
1 டிசம்பர் 2020 அன்று, பாமகவினர் நடத்திய வன்முறையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று, அன்புமணி ராமதாஸை தூக்கி உள்ளே வைத்திருப்பார். பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள பாமகவினரை இரவோடு இரவாக கைது செய்திருப்பார். ராமதாஸ் அரண்டு போய், 10.5 சதவிகித கோரிக்கையை நான் உயிரோடு இருக்கும் வரை பேச மாட்டேன் என்று ஜெயலலிதாவிடம் கெஞ்சி, தன் மகனை மீட்டிருப்பார்.
அவசர அவசரமாக, 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை வெளியிட்டு, உச்சநீதிமன்றத்திடம் ஜெயலலிதா குட்டு வாங்கியிருக்க மாட்டார்.
அடுத்து ஒரு உதாரணம் பார்ப்போம்.
அதிமுகவை கலைஞர் இருந்திருந்தால் உடைத்திருப்பாரா ?
மாட்டார் என்று நான் நம்புகிறேன். அவரை புரிந்து கொண்ட வரையில். அரசியலில் வெற்றிடம் இருக்காது என்பது அவருக்கு நம்மை விட நன்றாகவே தெரியும். பிஜேபியின் ஆபத்தை உணர்ந்திருப்பார். எடப்பாடி, பன்னீர் இருவரில் யார் தனக்கு இணக்கமாக இருப்பார்கள் என்பதை அறிந்து, பலமுள்ள அணியை மறைமுகமாக ஊக்குவித்து, உதவி செய்து, பெருமளவில் ஆட்சிக்கு தொல்லை கொடுக்காமல் இருக்குமாறு ஒரு மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருப்பார்.
கலைஞர் அதிமுகவை உடைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் ?
இத்தனை நாள் தன்னை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்த அதிமுகவை உடைப்பது என்று முடிவெடுத்திருந்தால், முதலில் எடப்பாடி ஆட்சியையே கவிழ்த்திருப்பார். பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏவாக, 2021 தேர்தலுக்கு முன்பாகவே தூக்கியிருப்பார். அண்ணாமலையைக் கூட உடைக்க பயன்படுத்துவார். எடப்பாடிக்கு எதிரான கலகத்தை சேலத்திலிருந்தே தொடங்கியிருப்பார்.
தோற்பவனை தேடிப் பிடித்து உதவி செய்து அம்பலப்பட்டு நின்றிருக்க மாட்டார்.
திருக்காட்டுப்பள்ளி லாவண்யா தற்கொலையை எப்படி கையாண்டிருப்பார் கலைஞர் ?
திருச்சி கிழக்கு திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை விட்டு, அனைத்து கிறித்துவ மதகுருமார்களை அழைத்து, பிஜேபி கட்சியினர் மதமாற்றம் செய்கிறார்கள் என்று மிரட்டி, தாக்குதல் நடத்துகிறார்கள் என்று அவர்களை முறையிட வைத்திருப்பார். அப்பாவி கிறித்துவ மக்களை, பிஜேபி ரவுடிகள் மிரட்டுகிறார்கள் என்று திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கேஎஸ்.அழகிரி என்று கூட்டணி கட்சித் தலைவர்களை கண்டித்து அறிக்கை விட வைத்திருப்பார்.
ஜி.ஆர் சுவாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டால், கி.வீரமணியை வைத்து நீதிபதிகளை கண்டித்து அறிக்கை விட வைப்பார்.
ஜெயலலிதா என்ன செய்திருப்பார் ?
முதலில் லாவண்யாவின் சித்தியை கைது செய்திருப்பார். அந்த சித்தி வசித்த பகுதியில், பக்கத்து வீட்டில் உள்ளவர்களை, சித்தி கொடுமை பற்றி பேட்டி கொடுக்க வைத்திருப்பார். அது 24 மணி நேரமும் ஜெயா டிவியில் ஓடும். காவல் துறையில் உள்ள ஒரு பெண் அதிகாரியை வைத்து, சித்தியின் கொடுமைகளை, கண்களில் கண்ணீர் வரவைக்கும் வகையில் பேட்டியளிக்க வைத்திருப்பார்.
They both would have set the narrative.
பிஜேபியின் மதவாத பிரச்சாரத்தை பார்த்து அஞ்சி பின்வாங்கியிருக்க மாட்டார்கள்.
கலைஞரைப் போன்ற ஒரு பிறவி அரசியல்வாதியை பார்க்கவே முடியாது. இளைய மகனுக்கு எதிராக, மூத்த மகனையே எதிர் அரசியல் செய்ய வைத்தவர். மூத்த மகன் கையை மீறிப் போகையில் தூக்கி எறிந்தவர்.
தன் மகனின் தகுதி, திறமை என்ன என்பது கலைஞருக்கு நன்கு தெரியும். மகனால் வைகோவோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியுமா என்று பார்த்தார். முடியாது என்று தெரிந்ததும் வைகோ மீது கொலைப் பழி சுமத்தி வெளியே அனுப்பினார்.
குடும்பத்தின் செல்வாக்கை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தார். எளிமையாக சொல்வதானால் அதிகபட்சம் 20 சதவிகிதம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதித்திருப்பார். இந்த எல்லையை மீறுபவர்கள் கடுமையாக கண்டிக்கப்படுவர். சமயத்தில் பேசுவதை கூட நிறுத்தி விடுவார்.
குடும்பத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போலவே அதிகாரிகளின் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருப்பார். கலைஞர் ஆட்சியில் ஏதாவதொரு அதிகாரி அதிக செல்வாக்கு செலுத்துகிறார் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? விட மாட்டார்.
அதிகாரிகளை எங்கே வைக்க வேண்டும் என்பது கலைஞருக்கு தெரியும். அதிகாரிகளையும், கட்சியினரையும் சமமாக தராசில் வைத்தாலும், கலைஞரின் சலுகை, கட்சியினருக்கே. இன்று தனக்கு கதவை திறந்து விடும் அதிகாரி நாளை ஜெயலலிதாவுக்கு கதவை திறந்து விடுவார் என்பது கலைஞருக்கு தெரியும்.
அவர்களை எங்கே வைக்க வேண்டும் என்று நன்றாக அறிந்தவர் கலைஞர். 1996ம் ஆட்சி. உளவுத் துறைக்கு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஒரு அதிகாரியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த அதிகாரியை அழைக்கிறார்.
“மாறன் இந்த பதவிக்கு நீதான் சரிப்பட்டு வருவன்னு சொல்றான். வந்துடுறியா” என்று கேட்டார். அதிகாரி சரி என்றதும், இதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்த ? என்று கேட்கிறார்.
அதிகாரி, ‘உங்களைத்தான்…’ என்று இழுக்கிறார். உங்களை வேவு பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை சொல்ல முடியாமல் அப்படி சொல்கிறார்.
கலைஞர் உடனே, ‘என்ன பண்ணுவ?’ என்று கேட்கிறார்.
‘போன். அப்புறம் நீங்க எழுதுறது’
‘நீ மொழிபெயர்ப்பும் பண்ணுவியா’ என்கிறார் கலைஞர்.
“பண்ணுவேன்”
“எதையாவது பண்ணாம விட்டுருக்கியா ?”
“ஒண்ணு விட்டுருக்கேன்”
“என்னது அது ?”
“நீங்க ஒரு முறை புள்ளி, புள்ளி, புள்ளின்னு ஒரு கவிதை எழுதியிருந்தீங்க. ‘காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, கரும்புள்ளி, செம்புள்ளின்னு’ அந்த கவிதை போகும். அதை மொழிபெயர்க்கவே முடியலன்னு விட்டுட்டேன்” என்று கூறுகிறார்.
தன் போனை ஒரு அதிகாரி ஒட்டுக்கேட்டேன் என்று சொல்கிறார். அதை கேட்ட பின்பும் அந்த அதிகாரியையே உளவுத் துறைக்கு நியமித்தால், ஜெயலலிதாவின் போனை ஒட்டுக் கேட்டு சொல்லுவார். அவ்வளவுதானே. அவரையே உளவுத்துறைக்கு நியமித்தார். அந்த அதிகாரி, வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியபோது முக்கிய பங்காற்றினார். அந்த அதிகாரி, அதிமுகவோடு நெருக்கம் என்று அவர் நம்பிய தருணத்தில், அவரை விலக்கி வைத்தார்.
இதுதான் அவருக்கும் அதிகாரிக்குமான உறவு. கலைஞர் ஒரு நாளும் அதிகாரிகள் தங்களுக்காக முடிவெடுப்பதை அனுமதித்ததே இல்லை. அதிகாரிகளின் ஆட்சி என்ற பெயர் ஒருநாளும் வந்ததில்லை. ஜெயலலிதாவிடமும் இந்தப் பழக்கம் உண்டு. ஆனால் அதே ஜெயலலிதா, ஒரு அதிகாரி தனக்கு விசுவாசமாக இல்லை என்பதை தெரிந்தால் பந்தாடுவார். அந்த அதிகாரிக்கு என்ன நேரும் என்பதை யாருமே நினைத்துப் பார்க்க முடியாது.
ஆனால் ஜெயலலிதாவோ கலைஞரோ, அதிகாரிகளை ஆட்சி நடத்த விட்டு, முடிவுகளை அதிகாரிகள் எடுக்க அனுமதித்திருக்க மாட்டார்.
ஒரு அரசியல் தலைவன் தீர்க்கமான, உறுதியான, எதிர்காலத்திலும் பாராட்டப்படத்தக்க முடிவுகளை எடுப்பான். அதனால்தான் அவன் தலைவன். ஏனெனில் அரசியல்வாதி அடுத்த தேர்தலை நினைத்து முடிவெடுப்பான். அதிகாரியோ அடுத்த பதவி உயர்வையும், தன் பணி ஓய்வையும் மனதில் வைத்து முடிவெடுப்பான். அதனால்தான் அவர்களுக்கு கூடுதல் அதிகாரம். அவர்களுக்கு கீழே அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள்.
இந்த சமன்பாடு ஒரு சீரான நிர்வாகத்துக்கு மிக மிக அவசியம். ஒரு சேர்ந்திசை போல சுர பேதமின்றி ஒலிக்க வேண்டும்.
ஆட்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம், அதிகாரிகளை நியமிப்பதில் குழப்பம், குடும்ப உறுப்பினர்களின் சகித்துக் கொள்ள முடியாத தலையீடு, அமைச்சர்களின் அதிகார குறைப்பு, குடும்பத்தை மையமாக கொண்டு Centralised வசூல், அதிகாரிகளின் ஆணவம், அனைத்துத் துறைகளிலும் வரலாறு காணாத ஊழல், நிர்வாகத் திறனின்றி முடிவுகள் எடுப்பதில் குழப்பம், தடுமாற்றம், கட்சியை நடத்துவதில் புரிதலின்மை, அரசின் ஊழல்களும் தகவல்களும் தங்கு தடையின்றி ஊடகத்தில் கசிவது, என இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்றைத்தான். முதலமைச்சர் ஸ்டாலினால் இந்த அரசை வழிநடத்த முடியவில்லை.
அவர் பலவீனம் வெளிப்படையாக தெரிகிறது. குடும்பத்தின் பேச்சை மீற முடியாத அவர் கையறுநிலை புரிகிறது. அது அவரின் பலவீனம்.
ஆனால் அவர் பலவீனத்துக்காக, இந்த மாநிலம் அவதிப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த மாநிலம், அவர்கள் நினைப்பது போல ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமானதல்ல.
சரி. ஸ்டாலின் ராஜினாமா செய்துவிட்டால் அடுத்து யார் ?
வேறு யார் ? சேப்பாக்கம் சே குவாரா உதயநிதிதான். யாரங்கே… வாரிசு அரசியல் என்று சத்தம் போடுவது.
இந்த குடும்பத்தைத் தவிர வேறு யாராவது திமுக தலைவராக முடியுமா ?
பேசாமல் மூன்றாம் கலைஞரை முதல் கலைஞர் ஆக்கி விடுங்கள். ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதியே முதல்வராக இருக்கட்டும்.
இந்த மாநிலம் எவ்வளவோ கேவலங்களை பார்த்து விட்டது. அதையும்தான் பார்க்கட்டுமே.
மச்சானை நம்பி மலையேறலாம் என்பார்கள். மலையேறலாம். ஆனால் போர்க்களத்தில் களமாட மச்சனையும், மகனையும் மருமகனையும் நம்பக் கூடாது. தலைவன் நேரடியாக களமாட வேண்டும். ஏனெனில் தலைவனை போருக்கு அனுப்புவது நம்பி வாக்களித்த மக்கள்.
அடுத்த ஞாயிறன்று சந்திப்போம்.