நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு அப்படிப் பட்டதுதான். மத்திய அரசு, ரகசியமாக ஜுன் மாதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, சிபிஐ தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் வராது. இத்தனை நாட்களாக இச்சட்டத்தின் கீழ் தகவல்களை அளித்துக் கொண்டிருந்த சிபிஐ, திடீரென்று விதிவிலக்கு அளிக்கப் பட்டது, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று நினைக்கும் பலரை ஆச்சர்யப் பட வைத்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயலட்சுமி என்ற வழக்கறிஞர், சிபிஐக்கு விலக்கு அளிக்கும் ஆணையை எதிர்த்து பொது நல வழக்கொன்றை தொடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐக்கு விலக்கு அளித்தது சரியே என்று தீர்ப்பளித்துள்ளது.
விஜயலட்சுமி என்ற வழக்கறிஞர் தனது மனுவில், இந்தியாவில் இன்று ஊழல் தலைவிரித்து ஆடும் ஒரு சூழ்நிலையில், வெளிப்படையான நிர்வாகத்தை கடைபிடிக்காமல், தேசப்பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 24ன் கீழ், சிபிஐ அமைப்பை கொண்டு வந்துள்ளது. பிரிவு 24 (1)ன் படி, மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் தொடர்பான விபரங்களை, விதிவிலக்கு அளிக்கப் பட்ட அமைப்புகளானாலும் கொடுக்க வேண்டும் என்று இருக்கும் பிரிவுக்கு, மத்திய அரசின் இந்த அறிவிக்கை எதிரானது என்று தெரிவித்திருந்தார். புலனாய்வு நிலுவையில் இருக்கும் போது, தகவல்களை தர வேண்டியதில்லை என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 8 (1) (h) இருக்கையில், மத்திய அரசின் இந்த அறிவிக்கை தேவையற்றது என்றார்.
சிபிஐ தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. தேசப் பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனங்களுக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. சிபிஐ ம் தேசப்பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனம் தான். தேசப் பாதுகாப்பு தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் முக்கியமான வழக்குகள் என்று கீழ் கண்ட வழக்குகள் தெரிவிக்கப் பட்டிருந்தன.
கடற்படை ரகசிய வெளியிடப்பட்ட வழக்கு
பராக் ஏவுகணை எதிர்ப்பு கருவி வழக்கு
டெனல் ஆன்டி மெட்டீரியல் ரைபிள் வழக்கு
போலி பாஸ்போர்ட் வழக்கு
அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு
அந்தமான் ஆயுதங்கள் வழக்கு
IC 814 கடத்தப் பட்ட வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு
பாப்ரி மசூதி இடிப்பு வழக்கு
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கு
போலி ரூபாய் நோட்டுக்கள் வழக்கு
ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் வழக்கு
மாதவ்புரா மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி வழக்கு
சத்யம் மென்பொருள் நிறுவன வழக்கு
சட்ட விரோத சுரங்க வழக்கு
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு
இந்த வழக்குகளில் சிபிஐ மிக மிக முக்கியமான தேசப் பாதுகாப்பு தொடர்பான விசாரணையை மேற்கொண்டிருப்பதால், தகவல்களை அளிப்பது கூடாது. சிபிஐயில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் முழு சுதந்திரம் அளிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவரும், சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். அவ்வாறு எடுக்கப் படும் முடிவுகள் ஒட்டுமொத்தமாக ஆராயப் பட்டு ஒரு முடிவு எடுக்கப் படுகிறது. தகவல்களை அளித்தால், முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்று தனது பதில் மனுவில் சிபிஐ தெரிவித்திருந்தது.
மேலும், புலனாய்வும், உளவும் இரண்டற பின்னிப் பிணைந்தது. அவற்றை பிரிக்க முடியாது. சிபிஐ புலனாய்வு செய்யும் வழக்குகளில் பல, மத்திய மாநில மற்றும் சர்வதேச உறவுகள் சம்பந்தப் பட்டவை (கொட்டரோக்கியின் வங்கிக் கணக்கை விடுவித்தது, போபால் கொடுமைக்கு காரணமான ஆண்டர்சனை இன்று வரை கைது செய்யாமல் இருப்பது). குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையுமே இலவசமாக வழங்குகிறோம் (கொடுக்கவில்லையென்றால், விசாரணை நடக்குமா ?) சிபிஐ அமைப்பின் உள்ளேயே வெளிப்படையான நிர்வாகத்திற்கான அமைப்பு உள்ளது. புலனாய்வில் இருக்கும் வழக்குகள் தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலேயே இருந்தாலும், அது போதாது. வழக்கு முடியும் வரை ரகசியம் காக்கப் பட வேண்டும் (சோனியா உத்தரவிடும் வரை) என்றும் சிபிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம். சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் தேசப்பாதுகாப்பு தொடர்பானது என்பதை மறுக்க முடியாது. மத்திய அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞர் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, குற்றச் செயல்கள் தொடர்பாக முன்னதாக அனுமானிப்பது, குற்றங்களை தடுப்பது (2ஜி ஊழலை தடுத்தது போல!!!) போன்றவை உளவு என வகைப்படுத்தலாம். உளவு என்பது சிபிஐயின் பணிகளில் முக்கியமானது என்பதும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தேசப் பாதுகாப்போடு இணைந்தது என்பதையும் மறுக்க முடியாது. ஆகையால், சிபிஐ மத்திய அரசின் உளவு நிறுவனம் என்பதில் சந்தேகம் இல்லை.
சிபிஐ விசாரிக்கும் வழக்களின் தன்மையை பார்க்கும் போது, அவை தேசப் பாதுகாப்பு மட்டும் தொடர்பானது மட்டுமல்ல, நாட்டின் நிதிப் பாதுகாப்பு தொடர்பானதும் கூட. உளவு என்பது பாதுகாப்பையும் சேர்த்தது தான். ஆகையால் சிபிஐ ஒரு பாதுகாப்பு நிறுவனம் என்பதிலும் ஐயம் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பெரும்பாலான விண்ணப்பங்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களிடமிருந்தே வருகிறது என்று அரசு வழக்கறிஞர் குறிப்டுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாம் பட்டியலில் சேர்க்கப் பட்டு விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ள உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களும், மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் தொடர்பான விபரங்களை வழங்கியே ஆக வேண்டும் என்று உள்ள பிரிவு போதுமானது.
மத்திய அமைச்சகம் தீர ஆராய்ந்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஆகையால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு சரியானதே, என்று தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிக்கை வந்துள்ள காலச் சூழலைப் பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக சிபிஐ, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைத் தந்தே வந்திருக்கிறது. ஆனால், தற்போது, சிபிஐ என்ன பணியாற்றுகிறது என்பதை வெளி உலகத்திற்கு சொல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு இருக்கிறது.
இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில், சிபிஐ, ஆண்டிமுத்து ராசா அமைச்சராக இருந்த பொழுது, அவரைப் பார்க்க வந்த வருகையாளர் பதிவேடுகள் காணாமல் போய் விட்டன என்றும், இவ்வழக்கில் சம்பந்தப் பட்டுள்ள ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் டெண்டர் ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்து 11 மாதங்கள் கழித்தே, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் சிபிஐ சோதனை செய்தது என்பதையும், அந்தச் சோதனைகளும், 2009 பாராளுமன்றத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் தயவு தேவையில்லை என்ற சூழலில் தான் நடைபெற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் விசாரணை நடந்து முடிந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆ.ராசா, கைது செய்யப் படுவதற்கு முன்பாகவே, மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே எல்லாம் நடந்தது என்று கூறி, அனைத்து முடிவுகளையும் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலமாக தெரிவித்ததற்கான ஆதாரங்களையும் அளித்திருந்தார். மன்மோகன் சிங்குக்கும், ப.சிதம்பரத்துக்கும், இத்தகவல் தெரிந்திருந்தால், செட்டியாரையும், தாடிக்காரரையும், சாட்சியாகவாவது சிபிஐ விசாரித்திருக்க வேண்டுமா இல்லையா ?
ராசா உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி தெரிவித்திருக்கிறார். நீங்கள் ஏன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அமைச்சரவைக் குழுவிற்கு, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான முடிவை அனுப்ப முடியாது என்பதை ராசா உங்களுக்கு கடிதமாக எழுதியிருக்கிறாரே… அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை சிபிஐ மன்மோகனை விசாரித்து வாக்குமூலமாவது பதிவு செய்திருக்க வேண்டாமா ? உண்மையில் பார்த்தால் ராசாவின் கடிதத்துக்குப் பிறகும் அமைதியாக இருந்த குற்றத்திற்காக மன்மோகன் சிங் சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109ன் கீழ் குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
சத்யம் மென்பொருள் நிறுவனத்தின் மோசடியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த மோசடியில் என்ன நடந்தது. ராமலிங்க ராஜுவின் தொழில் பங்குதாரராக இருந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஊழல் வெளி வந்த முதல் ஒரு வாரத்திற்கு ராமலிங்க ராஜுவை எங்கே வைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. செபி விசாரணைக்குப் பிறகு, சிபிஐ இவ்விசாரணையை கையில் எடுத்தது.
ராமலிங்கராஜுவை கைது செய்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த அதே வேளையில், சத்யம் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த மேத்தாஸ் என்ற நிறுவனத்தின் மீது எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. இந்த மேத்தாஸில், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு பெரும் பங்கு இருந்தது குறிப்பிடத் தக்கது. அப்போது கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த ப்ரேம் சந்த் குப்தா என்பவர், ஆந்திர மாநில டிஜிபியாக இருந்த எஸ்எஸ்பி.யாதவ் என்ற நபர் மூலமாக, மேத்தாஸ் நிறுவனம் மற்றும் சத்யம் நிறுவனம் போலியாக முதலீடு செய்திருந்த மற்ற நிறுவனங்களின் மீது விசாரணையை தடுத்தார். இந்த விசாரணைகள் தொடர்ந்தால், இறுதியாக ராஜசேகர ரெட்டி மீது அவ்விசாரணை திரும்பும். அவ்வாறு திரும்பினால், அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூடாரத்தை ராஜசேகர ரெட்டி காலி செய்யக் கூடும். இதனால், இவ்விசாரணையை இரண்டாக பிரிக்கப் பட்டது.
ராமலிங்க ராஜு மீதான புகார்கள் சிபிஐ விசாரிக்கும். மேத்தாஸ் மற்றும் 350 நிறுவனங்கள் மீதான விசாரணையை, சிபிஐயின் பிரிவான எஸ்எப்ஐஓ (SFIO Serious Fraud Investigation Office) விசாரிக்கும் என்று அப்போது உத்தரவிடப் பட்டது. இந்த விசாரணை என்ன ஆனது என்று இது வரை தெரியவில்லை.
போபர்ஸ் விவகாரத்தில் சிபிஐ ஆல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட கொட்டரோக்கியின் லண்டன் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டிருந்தன. யுபிஏ அரசாங்கம் பதவியேற்ற சில நாட்களிலேயே, கொட்டரோக்கியின் வங்கிக் கணக்குகளை முடக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு லண்டனுக்கு கடிதம் எழுதுகிறது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும், உச்ச நீதிமன்றத்தில் அஜய் அகர்வால் என்ற வழக்கறிஞர் இந்த தகிடுதத்தங்களைப் பற்றி ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்கிறார். இந்த வழக்கு விசாரணையின் போது, இவ்வழக்கில் ஸ்டேட்டஸ் கோ மெயின்டெயின் செய்யப் பட வேண்டும் என்றும், அந்த கணக்குகளில் உள்ள பணம் எடுக்கப் படாமல் பாதுகாக்கப் பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது. ஒரு வாரம் கழித்து பதில் மனு தாக்கல் செய்த, சிபிஐ, “சைக்கிள் கேப்புல, கொட்டரோச்சி அந்த பணத்தை வித்ட்ரா செய்து விட்டார்” என்று வெட்கம் துளியும் இல்லாமல் சொல்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா ? “சட்டம் தன் கடமையைச் செய்யும். சிபிஐ விவகாரங்களில் அரசு தலையிடுவதில்லை. வங்கிக் கணக்கை முடக்க பரிந்துரை செய்தது, முடக்கத்தை நீக்கச் செய்தது இரண்டு முடிவுகளுமே, சிபிஐ ஆல் எடுக்கப் பட்டவை. அரசுக்கு அதில் தொடர்பில்லை.
சோனியா காந்தி தெரிவித்தது, “சிபிஐ அந்தக் கணக்குகளை முடக்கத்திலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது குறித்து, அரசுக்கு பின்னர் தான் தெரியும். முன்னதாகவே தெரியாது.”
கடைசியாக முடக்கி வைக்கப் பட்டிருந்த அந்தப் பணமும் விடுவிக்கப் பட்டது. போபர்ஸ் விவகாரத்தில் சம்பந்தப் பட்ட வின்சத்தா இறந்து விட்டார், ராஜீவ் இறந்து விட்டார், ஹிந்துஜா சகோதரர்களையும் நீதிமன்றம் விடுவித்து விட்டது. இத்தோடு போபர்ஸ் விவகாரத்தை குழி தோண்டி புதைத்தாகி விட்டது என்று தான், சோனியாவும், காங்சிரஸாரும் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்த வழக்கை ஆரம்பம் முதல், குழி தோண்டிப் புதைத்து உண்மை வெளிவராமல் பார்த்துக் கொண்டது சிபிஐ தான்.
மார்ச் 2001ல் இந்திய பத்திரிக்கை உலகமே பெருமை கொள்ளும் அளவுக்கு முதன் முதலாக ஒரு ஸ்டிங் ஆபரேஷனை செய்தது டெஹல்கா. அந்த ஸ்டிங்குக்கு பலியானவர் பிஜேபியின் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமன்.
டெஹல்கா அம்பலப் படுத்திய ஊழல், பிஜேபி அரசாங்கத்தை உலுக்கிப் போட்டது. ஆனால் பதிலுக்கு டெஹல்கா இணையதளத்தையே முடக்கியது பிஜேபி அரசு. இந்த முடக்கத்துக்கு உறுதுணையாக இருந்தது சிபிஐ தான்.
வன விலங்குகளை வேட்டையாடியதற்காக இனாம் மற்றும் மெஹர்பான் என்ற இரண்டு வேட்டைக்காரர்களை கைது செய்த சிபிஐ, அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்து, டெஹல்காவில் பணியாற்றும் பங்கஜ் என்பவர்தான் சிறுத்தைகளின் தோல்களை உரிப்பதற்கு பணம் கொடுத்தார் என்ற தகவலின் அடிப்படையில் டெஹல்கா அலுவலகத்தை சோதனை செய்தது. சோதனையின் முடிவில், சிபிஐ கைப்பற்றிச் சென்ற ஆவணங்கள், டெஹல்கா நிறுவனத்தில் யார் முதலீடு செய்துள்ளார்கள், எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு ஊதியம் எவ்வளவு என்பது போன்ற விபரங்களை. இதற்கும் சிறுத்தையை வேட்டையாடுவதற்கும் என்ன சம்பந்தம் ?
சிபிஐ தொடர்ந்து எடுத்த நடவடிக்கைகளால், டெஹல்கா இணையதளம் முடக்கப் பட்டது.
இதுதான் சிபிஐயின் கறை படிந்த வரலாறு. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தான் சிபிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வர வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக சிபிஐ தகவல்களைத் தந்து கொண்டுதானே இருந்தது. 5 ஆண்டுகளாக இல்லாமல் இப்போது திடீரென்று எங்கிருந்து வந்தது, தேசத்தின் பாதுகாப்பு என்ற கேள்வி ? நாம் கேட்கும் இந்தக் கேள்வியை உயர்நீதிமன்றம் கேட்டிருக்க வேண்டாமா ?
ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக மேற்பார்வை செய்யத் தொடங்கிய பிறகுதான், சிபிஐ தனது மீளா உறக்கத்திலிருந்து எழுந்தது என்பது உயர்நீதிமன்றத்துக்கு தெரியாதா ? உச்சநீதிமன்றம் ஒரு வேளை மேற்பார்வை செய்யத் தவறியிருந்தால், ஸ்பெக்ட்ரம் காற்றோடு காற்றாக மறைந்து போயிருக்கும் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஏன் கவனிக்கத் தவறியது.
கடந்த வாரம் கூட, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் மீது ஆதாரம் இல்லை என்று சொல்லி விட்டு, பிறகு பிரசாந்த் பூஷண் மனுத் தாக்கல் செய்த பிறகு, ஆதாரம் இருக்கிறது என்று அந்தர் பல்டி அடித்ததே சிபிஐ.. இது பத்திரிக்கைகளில் விரிவான செய்தியாக வந்துள்ளதே… ஏன் கவனிக்கத் தவறியது உயர் நீதிமன்றம் ?
சிபிஐ ஆல் குற்றம் சாட்டப் பட்டவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டால் கூட, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படும் வரை அவருக்கு தகவல் தராமல் இருக்க அந்தச் சட்டத்திலேயே விதிவிலக்கு அளித்து பிரிவு 8 (1) (h) இருக்கிறதே… குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு, குற்றம் சாட்ட பட்டவருக்கு அனைத்து ஆவணங்களையும் கொடுத்தே ஆக வேண்டுமே. பிறகு எதற்காக இந்த விதிவிலக்கு ?
சிபிஐ ஒரு உளவு நிறுவனம் என்று எதை வைத்து முடிவு செய்கிறது உயர் நீதிமன்றம். இந்த விதிவிலக்கு அளிக்கப் படும் முன்பு கூட, சிபிஐ, ஒரு அரசு ஊழியரைப் பற்றியோ, ஊழலைப் பற்றியோ, தயார் செய்யும் உளவு அறிக்கையை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தர வேண்டியதில்லையே ? பிறகு எதற்காக இந்த விதிவிலக்கு ?
மடியில் கனமில்லையென்றால் எதற்காக வழியில் பயம் ? 5 ஆண்டுகளாக தகவல்களை அளித்துக் கொண்டிருந்த மத்திய அரசு, இப்போது திடீரென்று சிபிஐக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது, அவர்களின் தகிடுதத்தங்களை மறைக்கத்தான் என்ற ஊரறிந்த உண்மை உயர்நீதிமன்றத்துக்கு மட்டும் புரியாமல் போனது விந்தையே…!!!
உளவு நிறுவனம் என்ற அடிப்படையில் விலக்கு அளிப்பதாக இருந்தால், ஒவ்வொரு காவல்நிலையமும் உளவு நிறுவனம் தானே. இந்த இடத்தில் கலவரம் நடக்கப் போகிறது என்பதை உளவறிந்து, அந்த இடத்தில் காவல்துறை தக்க முன்னேற்பாடுகளைச் செய்வதில்லையா ? பாதுகாப்பு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு காவல்நிலையமும் பாதுகாப்பு அமைப்பு தானே ? மக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்பதற்காக காவல்நிலையங்களுக்கும் விலக்கு அளித்து விடலாமே… ??
நாட்டின் பாதுகாப்பு என்ற காரணத்தை வைத்துக் கொண்டால், இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வந்து விட முடியுமே….. மாநகராட்சியில் மாதத்துக்கு எத்தனை முறை கொசு மருந்து அடிக்கிறீர்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதற்கு பதிலளித்தால், எத்தனை முறை மருந்து அடிக்கிறார்கள் என்ற விபரத்தை வெளியிட வேண்டி வரும். அந்த விபரத்தை வெளியிட்டால் இந்தியா தனது மக்களை எப்படிப் பாதுகாக்கிறது, கொசுக்களை எப்படி ஒழிக்கிறது என்பதை பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தெரிந்து கொள்ள நேரிடும். அவ்வாறு தெரிந்து கொண்டால், கொசு மருந்து தெளிக்காத நாளில் அவர்கள், இந்தியாவுக்குள் கொசுவை அனுப்பி மக்களின் உடல்நலனை சிதைக்கும் காரியத்தில் ஈடுபடுவார்கள் என்று ஒரு பதில் கூற முடியுமா முடியாதா ?
இது போல எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். 2001ல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திமுகவினர் மீது தொடுக்கப் பட்ட ஊழல் வழக்குகள் அத்தனையும், 2006ல் முடிக்கப் பட்டன. இவ்வழக்குகள் எப்படி முடிக்கப் பட்டன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டு விடுவார்களோ என்று, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதின்றத்துக்கு சென்ற போது, அந்த வழக்கிலும் இதே போலத்தான் தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள், இது போல சில அமைப்புகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக காரணம், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வைத்திருப்பதை அவர்கள் விரும்பவில்லை. நீதிபதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், நீதிபதிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், வேண்டியவர்கள் வேண்டாதவர்களுக்கு சலுகை காட்டப் படுகிறதா, நீதிமன்றப் பணியாளர்களை எப்படி நியமிக்கிறார்கள் என்பது போன்ற விபரங்களை அவர்கள் வெளியிட விரும்பவில்லை. சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலமாகவோ, வேலைவாய்ப்பகத்தின் மூலமாகவோ அல்லாமல் 72 பணியாளர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
காலேஜியம் என்ற உயர்நீதிமன்றத்தின் மூத்த 5 நீதிபதிகள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பட்டியலில் உள்ளவர்கள் தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப் படுகிறார்கள். இந்தப் பட்டியல் எப்படித் தயார் செய்யப் படுகிறது, நீதிபதிகளாக நியமிக்கப் பட பரிந்துரை செய்ய்ப படுபவர்களுக்கு என்ன தகுதி, அவர்கள் சட்டத்தை நன்கு அறிந்தவர்களா, எத்தனை ஆண்டுகளாக ப்ராக்டிஸ் செய்கிறார்கள், எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள், அந்த பட்டியல் தயார் செய்வதில் அரசியல் தலையீடு உள்ளதா, என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் விடை கிடையாது. இரும்புத் திரை போட்டு மூடப்பட்ட ரகசியம் இது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதிக்கு நெருக்கமான சிலர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டு இன்றும் பணியாற்றக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு நீதிபதி முன்பாக கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது ஊழல் புகார் குறித்த வழக்கு வந்த போது, கண்ணை மூடிக்கொண்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தார் அவர்.
இது போலவே மர்மமாக வைக்கப் பட்டிருக்கும் மற்றொரு விஷயம், கீழமை நீதிபதிகளின் மீதான ஊழல் புகார்கள். இந்தப் புகார்களை யார் விசாரிக்கிறார்கள், விசாரிக்கப் பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப் படுகிறதா, இல்லையா என்பது போன்ற எந்த விபரங்களும் வெளியிடப் படுவது கிடையாது. அதிலும் ஊழல் புகார்களில் சிக்கி குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்ட பல நீதிபதிகளுக்கு வழங்கப் படும் தண்டனை, “கட்டாய ஓய்வு”. கட்டாய ஓய்வு என்றால் ஓய்வு பெற ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் மற்ற பலன்கள் அத்தனையும் கொடுக்கப் படும். இதே மற்ற அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் என்றால், ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்ற இதே நீதிபதிகள் கேள்வி கேட்பார்கள்.
அரசாங்கம் தான் செய்யும் ஊழல்களை மறைப்பதற்காகவே, சிபிஐ லஞ்ச ஒழிப்புத் துறை போன்ற அமைப்புகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களித்து, உத்தரவுகளை இடுகிறது. அரசாங்கத்தின் இந்த அநீதிகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினால், உயர்நீதிமன்றமும், அரசாங்கத்தின் செய்ல்களை நியாயப் படுத்துவது போல தீர்ப்புகள் வழங்குகையில், நீதிமன்றங்கள் எதற்காக என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.