நாளை இந்தியாவின் 75வது சுதந்திர நாளை கொண்டாட இருக்கிறோம். எந்த ஒரு நாட்டின் வரலாறிலும், அடிமைத் தளையிலிருந்து விடுதலையான 75வது ஆண்டு என்பது கொண்டாடத்தகுந்ததே.
நாமும் கொண்டாடுவோம். சுயபரீசிலனை செய்துகொண்டே.
இந்த 75 ஆண்டுகளில் நாம் சாதித்தது ஏராளமான விஷயங்களில். சறுக்கியதும் பலவற்றில். பெற்றது பல. நமது தவறுகளால் இழந்ததும் பல. கடும் போராட்டத்துக்கு பிறகு பெற்றவை பலவற்றை நாம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோமோ என்ற அச்சம் மேலிடுகிறது. இந்த அச்சம் பேரச்சமாக 2014க்கு பிறகு மாறி வருகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலாகவே இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே நீறு பூத்த நெருப்பாகவே ஒரு வெறுப்பு இருந்து வந்தது. வட இந்தியாவில் மிக எளிதாக இஸ்லாமிய வெறுப்பை ஏற்படுத்த முடிவதற்கு ஒரு முக்கிய காரணம், வெள்ளையர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்ததால். பிரிட்டிஷார் மீது இருக்கும் வெறுப்பை விட, இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் இந்து கோவில்களை சூறையாடியது ஏற்படுத்திய கோபம், வெறுப்பு இன்றும் மேலோங்கி இருக்கிறது. இது தற்போது தொடர்ந்து ஊதி ஊதிப் பெரிதாக்கப்படுகிறது.
இந்த கோபத்தை, பாப்ரி மசூதி இடிப்பு ஓரளவுக்கு குவிமயப்படுத்தியது என்றே சொல்லலாம். யோசித்துப் பாருங்களேன். பிறந்தாரா இல்லையா என உறுதி செய்யப்படாத ஒரு தகவலை நம்பி, ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதி என்று ஒரு 550 வருட மசூதியை இடிக்க, இந்தியா முழுக்க இருக்கக் கூடிய இந்துக்களை எப்படி வன்முறையாளர்களாக மாற்ற முடிந்தது ? சட்டம் படித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்த வன்முறையை, அராஜகத்தை அங்கீகரிக்க வைத்தது எது ?
6 டிசம்பர் 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது, இந்தியா என்ற நாட்டின் முகத்தை மாற்றி அமைத்தது. ராமர் கோவிலுக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட மோடி, இது 100 ஆண்டு கால போராட்டம் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடுகளை கொண்டிருந்த மக்களை, பிரிட்டிஷார் ‘இந்து மதம்’ என்ற ஒற்றைப் புள்ளியில் ஒரு நாடாக இணைக்க முடிந்ததற்கு மதம் ஒரு காரணம் இல்லை என்பதை மறுக்க முடியுமா ? சிப்பாய் கலகத்துக்கு முன் இது இந்தியாவா… ? அல்லது, இந்தியாவில் அனைவரும் இந்துக்களாக இருந்தார்களா ?
இதை சரியாக புரிந்து கொண்டதால்தானே, மார்க்சியத்தை உயர்த்தி பிடிக்கும், 140 ஆண்டுகள் மேலாக இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் சாத்தியப்படுத்த முடியாத பாட்டாளி வர்க்க புரட்சியை, இந்து ராஷ்டிரா உருவாக்குவற்றை லட்சியமாக கொண்ட, 100 ஆண்டுகள் கூட நிறைவடையாத ஆர்.எஸ்.எஸ்ஸால் சாத்தியப்படுத்த முடிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி, இஸ்லாமியர்களை ஒரு உறுதியான வாக்கு வங்கியாகவே தொடர்ந்து பார்த்து வந்தது. இதன் வெளிப்பாடே, ஷா பானு உள்ளிட்ட நடவடிக்கைகள். பெரும்பான்மை வாக்குகளை இழக்க வேண்டாம் என்ற ஒரே நோக்கமே, 1986ம் ஆண்டு, பாப்ரி மசூதி வளாகத்தில், பூட்டை உடைத்து இந்துக்களை வழிபட அனுமதித்தது.
1992ல் நடந்த பாப்ரி மசூதி இடிப்பு, 1998 முதல் 2004 வரை, ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்க பாரதிய ஜனதா கட்சிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் மிகையாகாது. இந்துத்துவா அரசியல் அளித்த பலன்களை முழுமையாக புரிந்து கொண்ட பிஜேபி, சிறுபான்மையினரின் வாக்கள் இல்லாமலேயே, இந்துக்களின் வாக்குகளை, குறிப்பாக தீவிர மதப்பற்றுள்ள இந்துக்களின் வாக்குகளை பெருவதன் மூலமாகவே மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று முயன்றது. வெற்றியும் பெற்றது. இதன் காரணமாக இதர கட்சிகளும், பெரும்பான்மை இந்துக்களின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காகவே சாப்ட் இந்துத்துவாவை கடைபிடிப்பது வேதனை.
பிஜேபி தொடர்ந்து பெற்ற வெற்றியை நிலை நிறுத்துவது மட்டும் போதாது என்பதை புரிந்து கொண்டது. மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று, இந்தியாவை சவுதி அரேபியா போல ஒரு மதச் சார்புள்ள இந்து நாடாக மாற்ற எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்வதும், இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவதும் அவசியம் என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாக புரிந்து கொண்டது.
20 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி ஆட்சிக்கு பழக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கு ஒரு அறுதிப் பெரும்பான்மை ஆட்சி அமைய இந்துத்துவா அரசியல் உதவியது. 2019ல் தேசபக்தியோடு கலந்த இந்துத்துவா உதவியது. The deadly combine of Hyper patriotism and fanatic communalism are the deadly combine that has engulfed India today.
நன்றாக கூர்ந்து கவனித்தால், இன்று தேசபக்திக்கும், இந்துத்துவாவுக்கும் வேறுபாடு இல்லை என்ற கட்டமைப்பை பிஜேபி நிறுவி வருவது புரியும். தீவிர இந்துத்துவா பிரச்சாரத்தை நேரடியாக செய்ய, இன்று அமலில் இருக்கும் அரசியல் அமைப்புச் சட்டமும், எதிர்க் கட்சிகளும் பெரும் தடையாக இருந்து வருவது உண்மையே. இதன் நீட்சியே, இந்தியாதான் பிஜேபி, மோடியை எதிர்ப்பவன் இந்தியாவை எதிர்ப்பவன், தேசபக்தி இல்லாதவன் என்ற கட்டமைப்பும்.
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தெரிவிக்கும் எதிர்ப்பும், இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளுவதும், பெரும் எதிர்ப்பை உருவாக்கக் கூடும் என்பதை புரிந்து கொண்டதால்தான் பிஜேபி, அதன் சங் பரிவார் அமைப்புகளையும், யத்தி நரசிங்கானந்த் போன்றவர்களையும் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுகிறார்கள். இதன் பங்குக்கு பிஜேபி, இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில், இஸ்லாமியர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி, ஒன்று அவர்கள் மத அடையாளங்களை விட்டு வாழ வேண்டும், அல்லது இந்துக்களுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.
பல திசைகளிலும் இருந்து, இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இன்று உள்ள நிலையின்படி, மாநிலங்களவையில், பிஜேபிக்கு ஓரே ஒரு உறுப்பினர் கூட இல்லை.
2014 முதல் நாம் புதிது புதிதாக கேள்விப்பட்ட விஷயங்கள், இன்று Normal ஆகி விட்டது புரிகிறதா ?
பசு பாதுகாப்பு, மாட்டுக்கறி உணவுக்கு எதிரான நிலைபாடு, லவ் ஜிஹாத், கர் வாப்ஸி, பள்ளிகளில் ஹிஜாப்புக்கு தடை, காலை மசூதிகளில் நடக்கும் வழிபாட்டுக்கு எதிர்ப்பு என இஸ்லாமியர்களுக்கு எதிராக நாள்தோறும் புதிய புதிய கட்டமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த செய்திகள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூட தவறி விட்டன. சாதாரணமாக கடந்து செல்கிறோம்.
அரசின் அடக்குமுறையையும் மீறி, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. நீதிமன்றங்களும் கண்டும் காணாமல் திரும்பிக் கொள்கின்றன என்பதுதானே யதார்த்தம் ?
2019ல் பெரும் மெஜாரிட்டியோடு பதவியை பிடித்த பிஜேபி, இஸ்லாமியர்களின் திருமண முறையில் தலையிடும் சட்டமான Triple தலாக் முறையை சட்டமாக்கியது. இன்று, முழுமையாக விவாகரத்தும் கிடைக்காமல், கணவர்களும் ஏற்றுக் கொள்ளாமல், ஆயிரக்கணக்கான பெண்கள் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கின்றனர்.
ஆகஸ்ட் 2019ல் இந்தியாவின் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மூன்று துண்டுகளாக உடைக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் மீதான ஒடுக்குமுறையின் உச்சகட்டமே, CAA மற்றும் NRC.
அஸ்ஸாமில் பரீட்சார்த்த முறையில் ரஞ்சன் கோகோயின் துணையோடு செயல்படுத்தப்பட்ட NRC 19 லட்சம் இந்தியர்களை, இனி நீங்கள் இந்தியர்கள் இல்லை என்று அறிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் காரணத்தால், பிஜேபி வசதியாக இதை நிராகரித்தது.
சமீபத்தில் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான உடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா NRC நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்தே என்பதை புரிந்து கொள்ள ஜே.என்.யூவில் படித்திருக்க வேண்டியதில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் இறுதி இலக்கான இந்து இந்தியாவை அடைய, இந்தியாவில் ஒரு கணிசமான பகுதி இந்துக்களை, ‘இந்து மதத்துக்கு இஸ்லாத்தால் ஆபத்து, இஸ்லாமியர்களால் ஆபத்து, இந்து மதம் உடனடியாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கட்டமைத்தது பெரும் பலனை அளித்தது.
தொடக்கத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பால் இந்து மதத்துக்கு ஆபத்து. அடுத்து பிரிட்டிஷாரால் இந்து மதத்துக்கு ஆபத்து. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, நேருவின் இஸ்லாமிய ஆதரவு கொள்கையால் இந்து மதத்துக்கு ஆபத்து என்ற பிரச்சாரம் இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியின் இந்த இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகையில், இந்தியாவில் இஸ்லாமியர்களின் மனநிலை என்ன ? அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா, நம்மோடு சேர்ந்து இந்த சுதந்திரத்தை கொண்டாடுகிறார்களா என்பதில்தான், இது அனைவருக்குமான சுதந்திரமா ? மதப்பெரும்பான்மையினருக்கு கட்டுமான சுதந்திரமா என்பதை நாம் முடிவு செய்ய முடியும்.
என்னை ஒரு இஸ்லாமியனாக கருதி இன்றைய இந்தியாவை நான் பார்க்கிறேன்.
என்னால் இந்தியாவின் 75வது சுதந்திரத்தை மனமகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை.
இந்த நாடு, ஜீவகாருண்யம் பேசும் நாடு. விலங்குகளுக்கும் கருணை பேசும் தேசம் இது. ஆனால், 20 கோடி மக்களை, தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், மனைவி, குழந்தைகள் என உறவுகளோடு வாழ்பவர்களை மனிதர்களாகவாவது மதிக்கிறோமா ? அவர்களும் இந்த மண்ணில் பிறந்தவர்கள்தானே ? அவர்களுக்கில்லையா சுதந்திரம் ?
அரசியல் அமைப்பு சாசனம் அவர்களுக்காகவும் எழுதப்பட்டதுதானே !! அவர்களுக்கு இல்லையா அடிப்படை உரிமைகள் ?
அதை 20 கோடி மக்களுக்கு வழங்காமல் கொண்டாடுவது சுதந்திரமா ?
இன்று ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள், மனிதநேயம் கொண்டோர் என அனைவர் முன்னாலும் ஒரு பெரும் சவால் இருக்கிறது. தொடர் அடக்குமுறைகளால் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்துள்ல இஸ்லாமிய சமூகத்துக்கு நம்பிக்கை அளிப்பது நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால்.
சுதந்திர இந்தியாவின் பொன்விழா கொண்டாட்டங்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது இன்று இருக்கும் நிலை இல்லை. இன்று இந்தியா என்ற நாட்டின் மேனி, மதவாத முட்களால் குத்தி கிழிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஆன்மா மதவாத விஷமேறி நீலமடைந்து வருகிறது. அதன் இதயத்துடிப்பு பலகீனமாக ஒலிக்கிறது. India is heading towards a multiple organ failure.
இத்தகைய காயங்களில் இருந்து ஒரு மனிதனை மீட்டெடுப்பது அத்தனை எளிதல்ல. ஒரு நாட்டை ? எளிதல்லதான். அதற்காக வாளாயிருக்க முடியுமா என்ன ?
பிரிட்டிஷாரிடம் கூட ஒரு நியாய தர்மம் இருந்தது. மனசாட்சி இருந்தது. அப்படி இல்லாவிட்டாலும் அதில் வியப்பில்லை. ஏனெனில் அவன் நம்மை அடிமைப்படுத்த வந்த வேற்று நாட்டவன்.
ஆனால் இந்தியன் என்று கூறிக் கொண்டு, நமக்கு தேசபக்தியை ஊட்டி கொண்டே, இந்தியாவின் தன்மையை சிதைக்கும் கூட்டத்தை எதிர்ப்பது அத்தனை எளிதல்ல. அன்றாவது, பிரிட்டிஷாரை எளிதாக எதிரி என அடையாளம் காட்ட முடிந்தது. ஆனால் இன்று எதிரி, நம்மோடு உறவாடிக் கொண்டே, நம்மோடு பழகிக் கொண்டே, தேசபக்தியை உச்சரித்துக் கொண்டே, இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கிறான்.
வீடுதோறும் தேசியக்கொடியேற்றுமாறு நமக்கு கட்டளையிட்டுக் கொண்டே, தேசத்தை சிதைக்கிறான் இந்தியாவின் எதிரி.
இந்த எதிரிக்கு எதிராக ஒரு மாபெரும் சுதந்திரப் போரை தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மதங்களை காப்பாற்ற முயலும் மனிதர்களிடமிருந்து, அவர்களையே காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை நமக்கு உள்ளது.
1857ல் தொடங்கிய சுதந்திரப் போர் வெற்றியடைய 90 ஆண்டுகள் தேவைப்பட்டது. இன்று நாம் தொடங்கவேண்டிய போர், எப்போது முடியும் என்பதை யாரும் சொல்ல இயலாது. ஆனால் இது நடத்தியே தீர வேண்டிய குருட்சேத்திரப் போர். இந்தப் போர் நம் சாதுர்யத்தை பொறுத்து 2024ல் முடியலாம். 2029ல் முடியலாம். அல்லது இன்னும் 50 ஆண்டுகள் எடுக்கலாம். நம் வாழ்நாளில் முடியாமலும் போகலாம்.
ஆனால் இந்தப் போருக்கான அடித்தளத்தை அமைத்து, நமது சந்ததிகளிடம் விட்டுச் செல்வது, நம் ஒவ்வொருவரின் கடமை. அந்தப் போரை நடத்த நமது சந்ததிகளை தயார் செய்வதும் நம் கடமை. இந்திய சுதந்திரப் போரில் நம் பெருந்தலைவர்கள் செய்த தியாகங்களை எண்ணிப் பாருங்கள். நாமும் அது போன்ற தியாகங்களை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.
போருக்கு ஆயத்தமாவோம்.
2014 முதல், தொடர் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வரும், இஸ்லாமிய சமூகத்த்தின் அன்புத் தோழர்களுக்கு, இந்த 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காணிக்கையாக்குவது நம் அனைவரின் கடமை.
அடுத்த ஞாயிறு சந்திப்போம்.