இந்தியாவில் எவரும் காவல் துறை அதிகாரிகளை. ஐஏஎஸ் அதிகாரிகளை ஆளுங்கட்சியை, குடியரசுத் தலைவரை மக்களவை சபாநாயகரை முதல்வரை, பிரதமரை தேர்தல் ஆணையத்தை, ஆளுனரை ஏன் கடவுளையே கூட விமர்சிக்கலாம். ஆனால் நீதித்துறையை விமர்சிக்கவே முடியாது. அதிலும் 2014 பிறகு நீதித்துறை தலைமைகளில் சில கூடுதலான கீரிடத்தை சூடிக்கொண்டது. அந்தக் கீரிடத்தில் தான் கடவுளர்களின் ஏஜென்ட் என்கிற முத்திரை இருக்கும்.
இந்தக் கடவுளின் எஜென்ட்டுகளை விமர்சித்தால் சிறைக்கொட்டடியில் அடைக்கப்படுவீர்கள். ஏனெனில் விமர்சிப்பவர்களால் நீதிபரிபாலனத்துக்கு ஊறு நேருமாம். இவர்கள் நீதிபரிபாலனமா செய்கிறார்கள் ? அவரவர்க்கு ஏற்ற நீதியை, அவரவர் கொடுக்கும் விலையை வைத்து ஏலம் அல்லவா நடத்துகிறார்கள் !!!
இவர்கள் நம்மைப் போல சராசரி மனிதர்கள் தான். அவர்களுக்கான பொறுப்பு என்பது நீதிபதி என்பதே தவிர, இவர்கள் கடவுள் அல்ல. சட்டத்தின்படி ஆராய்ந்து தீர்ப்பு தர அவர்களுக்கு சட்டத்துறை படிப்பும், அனுபவமும் கைகொடுக்கிறது. இந்த நாட்டில் இவை இரண்டும் உள்ள எவரும் நீதிபதியாகலாம். ஆனால் இவர்களில் தங்களை கடவுளின் நேரடி அவதாரம் போல நினைத்துக் கொண்டு செய்யும் செயல்கள் எல்லாம் கேவலமானவை. அற்ப மனிதர்கள் செய்யும் காரியங்கள் அவை. ஆபாசமானவை. ஆனால், சமூகத்தின் மற்ற மனிதர்கள் போல இவர்களின் ஆபாசங்கள் வெளித்தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் ‘மை லார்டு’கள். இப்படி இவர்களை சொல்லக்கேட்டு தங்களை அவர்கள் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நீதி அவமதிப்பு பூனைகளுக்கு மணி யார்தான் கட்டுவது ? யாராவது கட்டத்தான் வேண்டும்.
தந்தை பெரியார் கட்டினார். பெரியார் நீதித்துறையில் நடக்கும் அநியாயங்கள் கண்டு வெகுண்டெழுந்தார். வீரச்சமர் புரிந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் போக்குகளுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை மெரினாவில் 30.10.1960ம் ஆண்டு பெரியார் நீதித்துறைக்கு எதிரான அவர் போராட்டம் குறித்து இப்படி பேசினார்.
“நான் பேச வந்திருப்பது கடினமான விஷயம். இந்த விஷயம் நான் பேசியதற்காக, கண்டிப்பாக ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜெயிலுக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. ஜெயிலுக்கு போவது கொஞ்சம் கஷ்டம். நஷ்டமும் கூடத்தான். ஆனால் போகாமல் தீரவில்லையே. என்ன செய்வது ? தங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதற்காகவே பலர் மிக மிக நேர்மைக்கேடாய், அக்கிரமமாக நடந்துகொண்டு வந்தால், அதை எதிர்த்து ஒழிக்க நம்மால் கையாலாகா விட்டாலும் அந்த நேர்மைக்கேட்டை அக்கிரமம் என்று சொல்லக் கூடவா நமக்கு யோக்கியதை இல்லை ? யோக்கியதை என்பது அதனால் வரும் கஷ்ட நஷ்டத்தை அனுபவிக்கத் தயாராக இருப்பதும்தான். அதனால் முன்பு ஒரு முறை எடுத்துக் கூறி தண்டனை அடைந்த அதே காரியத்தை, இரண்டாவது தடவையாகச் செய்து தண்டனை அடைந்து ஜெயிலுக்குப் போக அவசியம் உள்ளவனாக இருக்கிறேன்.
முதல் தடவை என்னை மரியாதையாக விட்டார்கள். தீர்ப்பு எழுதும்போது இந்த மனிதன் கிழவன். ஆனதினால் இவனை ஜெயிலுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவனுக்கு நூறு ரூபாய் அபராதம் போட்டால் போதும் என்று கருதி ஜெயிலுக்கு அனுப்பாமல் விட்டு விட்டார்கள். அதே போலவே அதைப் பிரசுரம் செய்த எனது துணைவியார் மணியம்மையை, “அவர் ஒரு பெண்; ஆனதனால் இனிமேல் அப்படி செய்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று எச்சரிக்கை செய்து விட்டு விட்டார்கள். எனக்கு வயதை உத்தேசம் செய்து அபராதம் போட்டார்கள். ஆனால் நாளைக்கு, இந்த அபராதம் போட்டும் எச்சரிக்கை செய்தும் விட்ட ஜட்ஜ் அவர்கள் இப்படி சொல்ல முடியாது. கேட்பார்களே நாலு பேர் ! இவன் நாளையோ, நாளை மறுதினமோ செத்து விடுவான். என்றாலும் நாளைக்கு விட்டு வைத்தால் இப்படித்தானே பேசுவான் ? ஆகையால் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கருதித்தானே தண்டிப்பார் ?
ஆகையால் முன்னைவிட இப்போது கொஞ்சம் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்துகொண்டு பேசுகிறேன். எனக்கு தண்டனை அனுபவிக்க ஆசை இல்லை. எனக்கு இனிமேல் தண்டனையினால் பெருமையோ, பதவியோ, பெருந்தன்மையோ வேண்டியதில்லை.
ஆனால் இந்த அக்கிரமத்தை தடுக்க வேறு மார்க்கம் இல்லையே ? ஆகையால் இந்த காரியத்தில் மனவேதனையோடு பிரவேசிக்கிறேன்.
காரியம் செய்கிறபோது, செய்துவிட்டு நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் செய்யக்கூடாது. வந்தது வரட்டும் என்றத் துணிவில் செய்தால்தான், உண்மையான உணர்ச்சியும், ஆத்திரமும் இருக்கும். இப்படி பேசினால் சட்டத்தில் மாட்டிக்கொள்வோமோ, அப்படிப் பேசினால் ஆபத்து வருமோ என்று நினைக்கக்கூடாது. அப்படியெல்லாம் நினைத்தால் வேகம் குறைந்துவிடும்.
இது என்னுடைய சுயநலத்திற்காகவோ, யாருடைய தனிப்பட்டவர் சுயநலத்துக்காகவோ செய்தால் குற்றமாகும்; வெட்கமும் ஆகும். ஆனால் இதில் ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை. குற்றமுமில்லை. நாம் செய்கிறது நியாயமான காரியம்”
பெரியார் மொழியில் சொல்வதானால், எனக்கும் “இந்த அக்கிரமத்தை தடுக்க வேறு மார்க்கம் இல்லை”
பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன அல்லவா ? ஆகையால் நீதியரசர்களுக்கு குளிர் விட்டுப் போய் விட்டது. பஞ்சமாபாதகத்தையும் செய்து விட்டு, இவர்கள் தப்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
ஏன் இவர்கள் குறித்து ஒருவரும் பேசுவதில்லை ? அச்சம், அச்சம், அச்சம். சிலருக்கு சிறை கண்டு அச்சம். சிலருக்கு இவர்களின் தயவு கிட்டாதே என்ற அச்சம். சிலருக்கு வருமானம் போய் விடுமே என்ற அச்சம். சிலருக்கு செட்டிங் செய்ய முடியாதே என்ற அச்சம். சிலருக்கு நாம் நீதிபதியாக முடியாதே என்ற அச்சம். இந்த அச்சமே இவர்களின் மூலதனம். இன்று யாருமே தொட முடியாத உயரத்தில் இருக்கிறோம் என்ற இறுமாப்பு இவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது.
அதனால்தான், இவர்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள். நமது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் ஒரு பொது ஊழியர்கள்தான் இவர்கள். சமூகத்தின் சீருக்காக, சமூகம் செம்மையாக வாழ வேண்டும் என்பதற்காக இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை இவர்கள் தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.
அமெரிக்க Duke பல்கலைக்கழகத்தில் படித்தவர் காட்பாய்ஸ் ஜூனியர். இந்தியா பற்றி படிக்கலாம் என வந்தவர், நீதித்துறையின் மீது கவனம் செலுத்துகிறார். நூலகங்களில் படித்து, 1961ம் ஆண்டு நீதித் துறை குறித்து அவர் தனது ஆய்வுக் கட்டுரையை எழுதுகிறார். அதில் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் தெளிவோடு சில விஷயங்களை பதிவு செய்கிறார். “மனித உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்க தவறினால், இந்தியாவே ஆபத்துக்குள்ளாகும். இவ்வுரிமைகளை காப்பதில் நீதிமன்றங்களுக்கு மட்டும் பங்கு இல்லை. உரிமைகளை பாதுகாப்பதில், பொதுக்கருத்தை உருவாக்குதல் மிக அவசியம்” என்று கூறுகிறார் காட்பாய்ஸ்.
அவரது முதுகலை ஆய்வுக்கு பிறகு, இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆரம்பகால வரலாறை 1921ம் ஆண்டு முதல் எழுதுகிறார். உச்சநீதிமன்றத்தின் அதிகாரம், மற்றும் உச்சநீதிமன்றம் உருவாகி, அது முதல் 15 ஆண்டுகளில் வழங்கிய தீர்ப்புகளை ஆய்வு செய்கிறார்.
பிறகு காட்பாய்ஸ் இந்திய நீதிபதிகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து கட்டுரை வெளியிடுகிறார். Economic & Political Weekly இதழில் காட்பாய்ஸ் இந்திய நீதிபதிகளின் ‘நடத்தை’ குறித்தும், அவர்களின் நம்பிக்கைகள், பொறாமைகள், முன்முடிவுகள் என பலவற்றை எழுதுகிறார். ஆனால், இந்திய வழக்கறிஞர் சமூகம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
சில ஆண்டுகள் வெளிநாட்டுக்கு சென்று விட்டு 1983ல் இந்தியா திரும்பும் காட்பாய்ஸ்க்கு இந்திய நீதித்துறை பற்றிய ஆர்வம் குறையவில்லை. ஒரு வழக்கறிஞர் எப்படி நீதிபதியாகிறார். அவர் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது. எப்படி அவர் அற்பமான குணங்களை கொண்டுள்ளார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பினார்.
உச்சநீதிமன்றத்தின் அற்புதமான நீதிபதிகளான சிக்ரி, விவியன் போஸ், ஹிதயதுல்லா, கெ.எஸ் ஹெக்டே, கிருஷ்ணய்யர் போன்றோர் பல ரகசியங்களை காட்பாய்ஸிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும் அத்தனை நீதிபதிகளையும் சந்தித்து உரையாடி 1984 இறுதியில் பெரும் தொகுப்பை தயார் செய்கிறார். அதை நூலாக உருவாக்குகையில் அவரது உடல்நிலை மோசமாகிறது.
பின்னர் நிதீத்துறையை விட்டு விலகி செல்கிறார். 1990ம் ஆண்டு லண்டனில் நீதித்துறை நியமனங்கள் குறித்து பேச அழைக்கிறார்கள். மீண்டும் நீதித்துறையின் மீதான ஆர்வம் திரும்பவும், நூல் பணிகளை தொடங்குகிறார்.
“உச்சநீதிமன்ற நீதிபதிகள்” இதுதான் நூலின் தலைப்பு. 2009ல் புத்தகம் வெளியானது. அந்த நூலில் காட்பாய்ஸ் இரண்டு முக்கிய கருக்களை ஆய்ந்தார்.
1) ஏன் சிலர் நீதிபதியாகிறார்கள். ஏன் பலர் ஆவதில்லை.
2) இவர்களை நீதிபதிகளாக தேர்ந்தெடுப்பவர்கள் யார் ? ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் ?
எண்பதுகளில் ஒருமுறை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.என்.ரேவை சந்திக்கிறார் காட்பாய்ஸ். நீங்கள் எதன் அடிப்படையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் “நல்ல குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
காட்பாய்ஸ் “இது வரன் தேடுவது போல இருக்கிறதே” என்பதற்கு, ரே, புன்முறுவல் பூத்தார்.
அவர் அப்படிக் கேட்டு 35 வருடங்களுக்கும் மேலாக கடந்துவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒருவர் நீதிபதியாவ்க வேண்டுமெனில் அவருக்கு ஒற்றைத் தகுதி இருந்தால் போதுமானது.
அந்தத் தகுதி என்பது ஒருவர் மனுதர்மத்தையும், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும் என்பது. இவர்களால் மட்டுமே இந்தியாவில் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியும்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் நீதிபதி எம்.என்.சந்துர்க்கர் என்பவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க நீதிபதி YV சந்திரசூட் பரிந்துரைத்தபோது, இந்திரா காந்தி அவர் நியமனத்தை நிறுத்தினார்.
என்ன காரணம் தெரியுமா ?
ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் மரண நிகழ்வில் கலந்துகொண்டு நீதிபதி, சந்துர்க்கர் கோல்வால்க்கரை வானளாவ புகழ்ந்தார் என்பதற்காகவே நியமனத்தை நிறுத்தினார். ஒரு கொள்கை சார்ந்த அடிப்படைவாத அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரவாக இருக்கும் ஒரு நபர் எப்படி நீதிமுறையை சரியாக செயல்படுத்துவார் என்பதே எண்ணமாக இருந்தது.
இன்று. “நான் ஆர்.எஸ்.எஸ்காரன்தான்” என்று ஆணவத்தோடு பேசும் நபரை, மனுதர்மத்தின் அடிப்படையிலும், சினிமா மற்றும் வெப்சீரிஸின் அடிப்படையில் தீர்ப்பெழுதும் நபரை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
“ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் புரையோடிப்போய் இருக்கிறது” என்ற உண்மையை சொன்னதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு வகையில் நல்லதே. இது வரை வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாருமே விமர்சிக்காத, விமர்சிக்க அக்கறை கொள்ளாத, விமர்சிக்க அஞ்சும் நீதித்துறையில் புரையோடிப் போயுள்ள ஊழல், சாதி வெறி, அதிகார துஷ்பிரயோகம், என்ற நீதித்துறையின் மறுபக்கத்தின் மீது இன்னும் ஆழமாக கவனம் செலுத்தும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் நீதித்துறை குறித்து தொடர் கட்டுரைகள் வர உள்ளன.
தந்தை பெரியார் இவ்வாறு கூறினார்.
“உயர்நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றிப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பது கோர்ட்டை அவமானபாடுத்துவதாகும் (Contempt of Court) என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும், சமுதாய உணர்ச்சிகளுக்கும், தவறுகளுக்கும் கட்டுப்பட்டவர்கள். இவர்களை நியமிக்கின்ற இந்திய தலைவரையும், அவருக்கு அடுத்தபடியாக உள்ள் இந்திய முதல் அமைச்சரையும் (பிரதமர்) கண்டிக்கவும், கொடும்பாவி கட்டிக் கொளுத்தவும் இவர்கள் எல்லோருக்கும் மேற்பட்டதாக கூறப்படுகின்ற “தேசியக் கொடி” என்பதையுமே கிழித்துப் போட்டு தீ வைக்கவும், ஜனநாயக சமூகத்தில் உரிமையிருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமையிருக்க வேண்டாமா” என்றார் பெரியார். (அழுத்தம் என்னுடையது)
உரிமை இருக்கிறது. அந்த உரிமையை இழந்திருக்கிறோம். மீட்டுப் பெறுவோம்.
வாருங்கள் நீதித்துறையின் மறுபக்கத்தை விவாதிப்போம். புனிதப் பசுக்களை அம்பலப்படுத்துவோம்.