For three of my four decades as a journalist, I argued that the Indian media are politically free but imprisoned by profit. Today I’d say they are still shackled by profit, but are increasingly politically imprisoned as well – Senior Journalist P. Sainath on Media@75
CREDIT : The Caravan
முதலில் என் வியப்பை தெரிவித்துக் கொள்கிறேன். பத்து வாரங்களாக தவறாமல் கசடற தொடரை எழுதுவேன் என்று தொடக்கத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இத்தொடர் தொடர்ந்து வெளிவருவதற்கு, இதற்கு கிடைத்திருக்கும் பெரும் ஆதரவும், கருத்துக்களும், இத்தொடர் செம்மையாக வரும் பொருட்டு, இதை எடிட் செய்தும், நினைவூட்டியும் வரும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த எடிட்டருமே காரணம். நான் ஒரு கருவி மட்டுமே. ஆகையால் அனைவருக்கும் ஒரு பெரும் நன்றி.
கடந்த வாரம் ஒரு ஊடக அதிபரை சந்திக்க நேர்ந்தது. மிகவும் வெளிப்படையாக சிலவற்றைப் பேசினார். அந்த உரையாடலின் போது, “நான் பத்திரிக்கை நடத்துறது ஊடகத்தையோ, ஜனநாயகத்தையோ காப்பாத்துறதுக்குன்னு நினைச்சீங்கன்னா நிச்சயமா இல்ல. என் தொழில் நிமித்தமா கவர்மெண்ட்டுல 5 NOC வேணும். மொத்தமா 4 கோடி ஆயிருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டி நியூஸ் போட்டு, 10 பைசா செலவில்லாம வாங்கிட்டேன். இதுக்குத்தான் நஷ்டம் ஆனாலும் பரவால்லன்னு பத்திரிக்கை நடத்துறேன்” என்றார்.
இந்த உண்மை ஓரளவுக்கு தெரியும் என்றாலும், அவர் நேரடியாக இப்படி சொன்னது சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒவ்வொரு மீடியாவாக அலசிப் பார்த்த போது, அவர் சொன்னது உண்மைதான் என்பது புரிய வந்தது. பெயரை நான் குறிப்பிட வேண்டியதில்லை. ஒவ்வொரு ஊடகமாக அலசிப் பாருங்கள். உங்களுக்கே இது உண்மை என்பது புரிய வரும்.
இன்று, ஊடக நிறுவனம் நடத்துவது என்பது ஒரு வணிகம் அவ்வளவே. சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இருந்த தலைவர்களை இன்றுள்ளவர்களோடு ஒப்பிட முடியுமா? ஜவஹர்லால் நேரு, மோதிலால் நேரு, படேல், காந்தி, சுபாஷ் சந்திர போஸ், முகம்மது அலி ஜின்னா, கான் அப்துல் கப்பார் கான், சிதம்பரம் பிள்ளை, பாரதி போன்ற மனிதர்கள் ஒரே ஒருவரை காட்டுங்கள்.
இல்லை அல்லவா ? சமூகத்தின் அனைத்து அவயங்களும் பழுதுபட்டு நிற்கையில் ஊடகங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ?
ஊடகம் வெறும் வணிகமாக மாறாமல், வணிக வெறியாக மாறியுள்ளது.
இந்தியாவின் பெரும் 100 பணக்காரர்களின் பட்டியலில் இருக்கும் ஐந்து பேர் ஊடக அதிபர்கள் என்று Forbes கூறுகிறது. பரஞ்ஜாய் தகுர்தா 2012ல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் பெருமுதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து எழுதிய கட்டுரை பல உண்மைகளை உணர்த்தியுள்ளது. 10 ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.
அரசை எதிர்த்தால் தொழிலுக்கு ஆபத்து என்பதை அனைத்து முதலாளிகளும் உணர்ந்திருக்கிறார்கள். சிறை, வரி, வருமானம் இழப்பு என அஞ்சியே, பலர் அமைதியாகிறார்கள். அன்றாட அக்கிரமங்களை கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். மேலும் பலர், தெரிந்தே ஒத்து ஊதுகிறார்கள். துதிபாடிகளாக மாறியுள்ளார்கள். லாபம், லாபம் மேலும் லாபம் என்பதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிகிறார்கள். 24 மார்ச் 2020 அன்று மோடி பொதுமுடக்கம் அறிவித்தார் இல்லையா? அனைத்து விதமான தொழில்கள், போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கும் கூட பொது முடக்கத்தினை அறிவித்திருந்தார் மோடி. இதில் ஊடகமும் அடக்கம். பிறகு சில தொழில்களுக்கு முடக்கம் தேவையில்லை என சிறப்பு சலுகை வழங்கப்பட்டஹ்டு. இதில் ஊடகமும் சேர்த்துக் கொலபப்ட்டஹ்டு. ஊடகவியலாளர்கள், பத்திரிக்கைத் துறையினர் எப்போதும் பணிக்கு செல்லவும், செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். எல்லா சிறப்பு சலுகைகளையும் ஊடகங்கள் பெற்றுக் கொண்டன. நிமிடத்துக்கு நிமிடம் செய்திகள் வாரி வழங்கியபடி இருந்தனர்.
ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சிறப்பு சலுகைகள் தருவது என்பது அந்தத் தொழிலின் வேலைவாய்ப்பினை உறுதி செய்வது என்பதற்காகத்தான்.. ஆனால் இந்த ஊடக முதலாளிகள் என்ன செய்தார்கள்?
லாபவெறியில் இருந்த ஊடக முதலாளிகள் கொரோனா தொற்றுக் காலத்தில் தங்களது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்தியா முழுக்க 3000 பத்திரிக்கையாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இது வெளியில் தெரிந்த எண்ணிக்கை. உண்மை நிலை இன்னும் மோசம்.
மனசாட்சி உள்ள முதலாளிகள் பத்திரிகை வாங்குவதற்கு ஆளில்லாத காரணத்தால் ஊதியக் குறைப்பு செய்தார்கள். இதை பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கவில்லை. நாடே பொது முடக்கத்தில் இருந்தபோது, நிலைமையை புரிந்துகொண்டு அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
ஊடகத்துறை “அத்தியாவசியப் பணி” என்ற அறிவிப்பு எந்த ஊடகவியலாளரின் பணியையும் காப்பாற்றவில்லை. இந்த பணி நீக்கம், ஊடகவியாளர்களின் முதுகெலும்பையே முறித்து விட்டது என்று கூறலாம்.
கோவிட், பணிநீக்கம், ஊதியக்குறைப்பு உள்ளிட்டவை, ஊடகவியலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. நீங்கள் மாதந்தோறும் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு ஊடகப்பணியில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்றார்ப்போல மாதத் தவணைகள் இருக்கும். வாழ்க்கை தரம் இருக்கும். திடீரென்று வேலை போய் விட்டால் என்ன செய்வீர்கள். மாதத்தவணையை எப்படி கட்டுவீர்கள் ? பிள்ளைகளின் கல்வி, வாடகை, பெட்ரோல் முதல், இணைய இணைப்பு, உணவு என அனைத்துமே பெரும் செலவாக இருக்கும். உங்களை சுற்றியுள்ள பத்திரிக்கையாளர்களின் பணி நீக்கம் ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துமா இல்லையா ?
இப்படி அச்ச உணர்வோடு வாழும் ஒரு ஊடகவியலாளர், நிறுவனத்தையோ, தன நிறுவனம் அச்சம் கொண்டிருக்கும் அரசையோ எதிர்த்துப் பேசுவார் என்றா நினைக்கிறீர்கள் ? EMI பயமுறுத்தாதா ? பணமில்லாமல் மனைவி குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்ற அச்சம் மனதில் இருக்கும் அல்லவா?
எப்படி சுதந்திரமாக பணியாற்றுவார். முதலாளி அரசுக்கு எதிராக செய்தி போடாதே என்பார். எடிட்டர் அவர் வேலையை காப்பாற்ற அதை ஆமோதிப்பார். கள செய்தியாளர் எதிர்த்து பேசி விட முடியுமா என்ன ?
கொரோனாவிற்குப் பிறகும் இதுதான் இந்தியா முழுக்க உள்ள ஊடகங்களின் நிலை. மூத்த பத்திரிக்கையாளர் பி. சாய்நாத் பத்திரிக்கையாளர் கவுன்சிலில் இருந்தபோது, ஊடகங்களுக்கு கடிதம் எழுதி, எத்தனை பேரை வேலை நீக்கம் செய்தீர்கள் என்று கேட்டபோது, “ப்ரெஸ் கவுன்சிலுக்கு இதை கேட்கும் அதிகாரம் கிடையாது” என்பதை வக்கீல் நோட்டீஸ் மூலம் தெரிவித்தார்கள் ஊடக அதிபர்கள்.
அதற்கு முன்பாக ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டதா என்ற கேள்விக்கு என்ன விடை என்பது உங்களுக்கே தெரியும். 2014க்கு பிறகு, அரசுக்கு துதிபாடுபவர்கள் மட்டுமே ஊடகவியலாளர்கள் என்று அறியப்பட்டனர். எதிர்த்து செய்தி வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அல்லது வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். தொடக்கத்தில் பட்டும் படாமல் நடந்து வந்தது, நாள் ஆக ஆக, இயல்பாகிப் போனது.
தமிழ்ச்சூழல் இதற்கு விதிவலக்கல்ல. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அவருடைய அரசுக்கு துதிபாடினார்கள். இப்போது, உதயநிதி வரை எல்லோருக்கும் துதி பாடுகிறார்கள். பிழைக்க வேண்டுமல்லவா !! இதன் தாக்கம் ஊடகவியலாளர்கள் மத்தியில் வெகுவாக பரவிக் கிடைப்பதை பார்க்க முடிகிறது. திமுக ஆட்சி வந்து, 1 வருடம் 3 மாதங்கள் முடிந்து விட்டது. இந்த அரசில் ஊழல் மலிந்தது மட்டுமல்ல… கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுகிறது. சகித்துக் கொள்ள முடியாத முடைநாற்றமெடுக்கும் ஊழல் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் பீடித்திருக்கிறது.
ஆனால் தமிழக ஊடகவியாளாளர்கள் இதை வெளியிட முயலக்கூடவில்லை என்பதுதான் வேதனை. ஒன்றிரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல் அம்பலம் ஏறுவதில்லை.
இன்னும் சிலர் சொல்லும் காரணம் தான் வேடிக்கைக்குரியது. திமுகவை விமர்சித்தால் ‘பிஜேபி வளர்ந்து விடுமாம்’. இப்படி இழிவான ஒரு ஆட்சியை நடத்தினால் பிஜேபி என்ன, இந்து முன்னணியே வளரும்.
அரசியலில் வெற்றிடம் என்பது எப்போதும் கிடையாது. There can never be a political vacuum. ஆனால், திமுக கொலையே செய்தாலும் முட்டுக்கொடுக்கும் சிலர், திமுகவிடம் பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் சிலர் என்று திமுகவை காப்பாற்றுவதையே வேலையாக செய்து கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் திடீர் யூட்யூபர்கள் தனி. இவர்களுக்கு மாதந்தோறும், லட்சக்கணக்கில் சபரீசனின் பினாமி அண்ணா நகர் கார்த்தி செலவு செய்து வருகிறார்.
This is vitiating the media atmosphere in Tamil Nadu and doing immense damage to polity and democracy.
ஆனால் இது குறித்து ஒருவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
அரசும், (எல்லா அரசுகளும்) கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதில் முனைப்பாகவே இருக்கின்றன. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர் என இதற்கு விதிவிலக்கே அல்ல.
ஆனால் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகி விடவில்லை என்றே நம்புகிறேன். மனிதனின் வரலாற்றையும், உலக வரலாற்றையும் பாருங்கள். பூமி, உருண்டை, அது சூரியனை சுற்றுகிறது என்று சொன்ன கலிலியோவை ரோமன் கத்தோலிக்க திருச்சபை சிரச்சேதம் என சொல்லி மிரட்டியது. அவர் நூல்களை தடை செய்தது. கலிலியோ பின் வாங்கினார். சில காலம் கழித்து, இல்லை நான் சொன்னதுதான் உண்மை என்றார். தேவாலயம் மீண்டும் தடை செய்தது. இனி அவர் எழுதும் நூல்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த உண்மையை தேவாலயத்தால் தடை செய்ய முடிந்ததா என்ன ?
பிஜேபி உள்ளிட்ட இதர கட்சி மற்றும் ஆட்சிகளின் அடக்குமுறையையும் மீறி உண்மைகள் வெளிவந்து கொண்டுதானே இருக்கிறது ?
ஆங்கிலத்தில் NewsLaundry, NewsClick, The Wire, Scroll, HW NEWS, Caravan போல சில இணையதளங்கள் அவர்களின் you tube சேனல்கள் இந்த அடக்குமுறையை எதிர்த்து கடுமையாக போராடி வருவது நடந்து கொண்டுதானே இருக்கிறது ? இது ஒரு கலிலியோ மொமெண்ட்.
இது போல பல கலிலியோ மொமெண்டுகள் இந்தியாவெங்கிலும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்ச்சூழலில் இது குறைவாக இருக்கிறது.
இன்று சமூக ஊடகங்கள் இருக்கின்றன. அரசு முடக்க நினைக்கும் விஷயம் எப்படியேனும் வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறது. முதல்வரின் குடும்பத்தின் பேராசை, அதிகார துஷ்பிரயோகம், பண வெறி, ஆக்ரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் சமூக ஊடகங்களின் மூலமாக வெளியே வந்துகொண்டுதானே இருக்கிறது ?
இப்படியான parallel ஊடகங்கள் சந்திக்கும் சவால்கள் ஒன்று இரண்டல்ல. நரேந்திர தாபோல்க்கர், கோவிந்த் பன்சாரே, எமெம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றோர் தங்கள் உயிரையே இழந்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. ஹத்ரஸ் பாலியல் வன்படுகொலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் கப்பான் அக்டோபர் 2020 முதல் இன்று வரை சிறையில் இருக்கிறார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிஜேபி நிர்வாகம் குறித்து முகம்மது ஸுபைர் என்ற பத்திரிக்கையாளர் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தார். சமூக ஊடகங்களிலும் எழுதி வந்தார்.
ஏப்ரல் 2020ல் இப்படி ஒரு ட்வீட்டை போட்டார்.
“Can someone explain why families are placed under home quarantine for speaking over phone with Covid patients?”
இதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்ன ? இதற்காக பல்வேறு பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஸுபைருக்கு Sunday Islander என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. முதலீடு இல்லாமல் இவரால் அப்பத்திரிக்கையை தொடங்க முடியவில்லை. இந்த மன அழுத்தமும், காவல் துறை வழக்கும் சேர்ந்து இனி வாழ வேண்டாம் என்று அவரை முடிவெடுக்க வைத்தது. அவர் வாழ்க்கை தற்கொலையில் முடிந்தது.
அரசுகளை எதிர்த்துக் கொண்டு எழுதியும் பேசியும் வருவது எளிதென்றா நினைக்கிறீர்கள் ? நிச்சயம் அல்ல. மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடிகள் என, ஒரு கட்டத்தில் நாம் எதற்கு இந்த வேலையை செய்கிறோம், நமக்கேன் அக்கறை உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்ற எண்ணம் வராமல் போகாது. வரத்தான் செய்யும்.
இந்த எண்ணத்தை கடந்து, எதிர்ப்புகளை எதிர்கொண்டு, பதுங்கி, பாய்ந்து, எகிறி, இறங்கி உண்மையை வெளிக்கொணர்வது ஒரு கலை. அசாத்திய துணிவு தேவையாயிருக்கும் ஒரு கலை.
இதுதான் மனித இனத்தின் பலம். ஒட்டுமொத்தமாக காற்று ஒரு பக்கம் அடித்தாலும், ஒட்டுமொத்த ஜனசமூகமும் ஒரு பக்கம் ஒன்று கூடினாலும், அவர்களை மாற்றம் கொள்ளச் செய்யும் ஒரு கலகக்குரல் எங்கோ கேட்டுக்கொண்டுதான் இருக்கும். இது இயற்கை நியதி. இதுவே விதி. இதை மோடியோ, பினரயி விஜயனோ, ஸ்டாலினோ, மமதாவோ மனது வைத்தாலும் தடுக்க முடியாது.
அதுதான் மனித இனத்தின் சிறப்பே. வரலாறு நெடுக இதற்கான தரவுகள் கொட்டிக் கிடக்கின்றன.
நம் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
அடுத்த ஞாயிறு சந்திப்போம்.