வினய் சீதாபதி என்கிற எழுத்தாளர் எழுதிய ஜுகல்பந்தி என்றொரு ஆங்கிலப்பு புத்தகம் உள்ளது. இந்திய அரசியல் குறித்த சுவாரஸ்யமான புத்தகம் தேடுபவர்களுக்கு இதை பரிந்துரைப்பேன். ஜுகல்பந்தி என்பது ஒரே துறையின் இரு பிரிவுகள் சந்திப்பது என்பதாக மேலோட்டமாக மொழிபெயர்க்கலாம். இதில் வினய் சீதாபதி இருவரின் நட்பைப் பற்றிப் பேசுகிறார். இரண்டு அரசியல்வாதிகளின் நட்பு. இந்த நட்பு எப்படி இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியது என்பது குறித்து அலசுகிறார். அவர்கள் இந்திய அரசியல் வரலாற்றில் மறக்கவியலாத பெயர்கள். அவர்கள் அத்வானி மற்றும் வாஜ்பேயி. இருவரின் குடும்ப பிண்ணனிகள், கலாசாரம், பண்பாடு, மொழி எல்லாம் கடந்து எப்படி ஒன்றிணைந்தார்கள், பொதுவாழ்க்கைக்காக சுயவாழ்வில் எதையெல்லாம் விட்டுக் கொடுத்தார்கள் என்றெல்லாம் விவரித்திருப்பார். அதிலும் வாஜ்பேயியின் காதல் கதை ஒன்று இதில் உண்டு. உங்களில் நிறைய பேர் இது குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நான் இந்தக் கட்டுரையில் இதைச்சொல்லப்போவதில்லை… அரசியலில் நட்புணர்வோடு நீண்ட காலங்கள் தாக்குப்பிடிப்பது என்பது மிகுந்த கடினமானது. ஏனெனில் ரகசியங்களும், திட்டங்களும், கூர் ஈட்டிகளும் எங்கு எப்படி மறைந்து கிடைக்கும் என்று தெரியாது. எவர் முதுகில் எவருக்கான கத்தி செருகப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியாது. தனியாளாக இதனைக் கடப்பதே பெரும் விஷயம் எனும்போது துணைக்கு நண்பனையும் பிடித்துக் கொண்டு அவன் முன்னேற்றத்துக்கும் சேர்த்து பயணிப்பதெல்லாம் அசாதாரணம். நம்பமுடியாத அளவுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
இது அரசியலில் நேரடியாக ஈடுபடுபவர்களுக்கானது மட்டுமல்ல, என்னைப் போல அரசியல்வாதிகளுடனும், அதிகாரிகளுடனும் பழகுபவர்களுக்கும் தான். என்னுடைய நட்பு வட்டம் பெரிது. தொழில் சார்ந்த நட்பு, எவரிடமும் சொல்லாதவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடிய சில நட்புகள், இருந்தாலும் என் மனசாட்சி போன்ற சிலர் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். இவர்கள் எனக்கு சரியான திசையை மட்டுமே காட்டக்கூடியவர்கள். இவர்களை நான் நம்புகிறேன்.
என் மேல் பல குற்றச்சாட்டுகள் அனுதினமும் சொல்லப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றன. அது பெரும் அழுத்தம். இந்த அழுத்தத்தை நான் சுலபமாக கடக்கிறேன். ஏனென்றால் நான் ஒன்றை நம்புகிறேன். நான் மிக நெருக்கமாக நட்பு பாராட்டுபவர்கள் என்னை நம்புகிறார்கள். அவர்களிடம் என்னைப் பற்றிக் கேட்டால், சரியாகச் சொல்வார்கள். அது போதும் எனக்கு. மற்றபடி மக்களில் எவருக்கு எந்த செய்தி என்னிடத்தில் வேண்டுமோ அதை மக்களே எடுத்துக் கொள்வார்கள்.
பகிர்ந்து கொள்ளக்கூடிய சில விஷயங்களை மட்டும் நான் பகிர்ந்து கொள்கிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு நண்பர்கள் அதிகம். 12 வயதில் நட்பானவர்கள் இன்றும் எனக்கு நெருக்கம். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பல பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் எங்கள் நட்பு துளியும் குறையவில்லை.
வளர வளர நட்பு வட்டாரம் விரிவானது. வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், அரசு ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பழ வியாபாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், உயர் உயர் அதிகாரிகள் என, சமூகத்தின்அனைத்து திசைகளில் இருந்தும் வருபவர்கள். இவர்கள் என் ஆசான்கள். இவர்களிடமிருந்து நான் ஏராளமாக கற்றுக் கொள்கிறேன்.
இந்த வட்டம் நாளாக நாளாக விரிந்து கொண்டேசெல்கிறது. எனது அனுபவம் விரிவடைகிறது. அனுபவம் விரிவடைய வாழ்க்கை பற்றிய தெளிவு பிறக்கிறது. இதனால் அச்சம் அகல்கிறது. இந்த நட்பு தான் என் அச்சத்தை விலக்கியது.
ஒரு மனிதனை வழிநடத்துவது அச்சம் தானே தவிர வேறொன்றுமில்லை. அவன் கடவுளை வணங்குவதற்கு காரணமே அச்சம் தானே.
இந்த அச்சத்தை எதிர்கொண்டு வெல்வது அத்தனை எளிதல்ல. ஆனால் வென்று விட்டாலோ, உலகமே புதிதாக தோன்றும். சுதந்திர இந்தியாவுக்காக சிறை சென்று தூக்கு மேடை ஏறியவர்கள் பலருக்கும் நெருங்கிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த நண்பர்கள மூலம் தியாகிகள் தங்கள் அச்சத்தினைப் போக்கிக் கொண்டார்கள், தங்கள் நண்பர்களின் தியாகத்தின் மூலமாக அவர்களுடைய நண்பர்கள் தங்களது பயத்தை விரட்டியடித்தார்கள். இதனை சும்மா சொல்லவில்லை. அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படிக்கையில் இது தோன்றியது.
அப்படி ஒருவனுக்கு தீவிரமாகத் தோள் கொடுக்கும் நண்பர்கள் வைத்துவிட்டால், அவன் எந்த உச்சிக்கும் போகத் தயங்கமாட்டான். அப்படி தீவிரமான மனதுடைய ஒருவனுக்கு ஒரு நட்பு இல்லை என்றாலும் அவன் சமூக எண்ணத்துடன இருக்கிறான் என்றால், நண்பனுக்கு பதில் அவனிடத்தில் புத்தகங்கள் இருக்கும்.
எண்பதுகள் வரை, கம்யூனிச இயக்கத்தையோ, பெரியாரிய இயக்கத்தையோ, தலித் இயக்கத்தையோ உரை பார்க்காத இளைஞர்களை பார்ப்பது அரிது. வாசகர்களாக இருப்பார்கள். அந்த வாசிப்பை. அவர்களை ஒரு அமைப்பை நோக்கி உந்தும். இது ஒரு நட்பினை ஏற்படுத்தித் தரும். தோழமையை உருவாக்கும்.
இன்றும் எனது நட்பு வட்டத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றாலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கிய நட்பு இப்போதும் தொடர்வது போல இவர்களது நட்பு இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் நீடிக்குமா என்பதே சந்தேகம் தான். சரி என்ன தான் பேசிக்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் எல்லாம் விநோதமாக இருக்கிறது. எவரைப் பற்றியும் மேலோட்டமான கருத்துகள் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் அதிபர் சீமானின் உரை வீச்சில் மயங்கி அவர் பின்னால் செல்கிறார்கள். சென்ற வேகத்தில் திரும்பவும் செய்கிறார்கள்.
தாராளமயமாக்கலுக்குப் பிறகு, குறிப்பாக ஸ்மார்ட்போன் புரட்சிக்கு பிறகு உலகமே தனிமையாகிப் போனதுதான். எந்த விஷயமாக இருந்தாலும் என் போனுக்கு வர வேண்டும் என்பது நியதியாகிப் போனது. எல்லோருமே ஸ்மார்ட்போனில் மூழ்கி, எல்லாவற்றுக்கான விடையையும் கூகிளில் மட்டுமே தேடினால் அது நிம்மதியையா தரும் ? இந்த தனிமையும் மனிதனின் அச்சத்துக்கு ஒரு பெரும் காரணமாகி விட்டது.
நான் 16 வயதில் அரசு ஊழியர் சங்கத்தில் சேர்ந்தேன். 1991 அப்போது செல்போனெல்லாம் கிடையாது. சினிமா, புத்தகத்தை தவிர வேறு பொழுதுபோக்கு கிடையாது. சங்கத்தில் சேர்ந்து பழக்கமானதும், அரசு ஊழியர் சங்கத்தின் டி.எம்.எஸ் பகுதிக் குழுதான் புகலிடம். சந்திரசேகரன் என்ற கால்நடை பராமரிப்பு துறையின் ஊழியர் அப்பகுதிக் குழுவின் இணை செயலர். பின்னர் 17 வயதில் நான் இணை செயலராக ஆனேன். அவர் கட்சி உறுப்பினர். நானும் பின்னாளில் சிபிஎம் உறுப்பினர் ஆனேன். சில ஆண்டுகள் கழித்து விலகினேன். அது குறித்து பின்னொரு நாளில் பேசுவோம்.
அலுவலகம் முடிந்தால் நேரே டி.எம்.எஸ் செல்வேன். சங்கத்தில் ஏதாவது ஒரு வேலை இருக்கும். இதரகிளைகளின் மாநாட்டுப் பணிகள், ரயில்வே ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், எல்.ஐ.சி ஊழியர் சங்கம் என பலசங்கங்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகளுக்கு தட்டி எழுதுவது, போஸ்ட்டர் ஒட்டுவது என ஏதாவது ஒரு வேலை இருக்கும். இன்னொரு சங்கத்துக்கு நாம் எதற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. அனைத்துமே நமது பணி என்ற எண்ணம்தான் இருக்கும்.
நானும் சந்திரசேகரனும் தட்டி தயார் செய்வதில் நிபுணர்கள். அவர் எங்கிருந்தாவது சைக்கிள் டயர்களை அள்ளிக்கொண்டு வருவார். இருவரும் சேர்ந்து, பழைய போஸ்ட்டர்களை முன்புறம் வெள்ளையாக இருக்கும்படி பசை கொண்டு ஒட்டுவோம். பின்னர் அதன் மீது வாசங்களை எழுதுவோம். அரசு ஊழியர் சங்கத்தில் ஞானசூரியன் என்ற தோழர் அழகாக சுவரெழுத்துக்கள், தட்டிகளில் தூரிகை கொண்டு எழுதுவார். அவர் எனக்கு எப்படி எழுதுவது என கற்றுக்கொடுத்தார். நானும் எழுதத் தொடங்கினேன். சூரி மாவோயிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர்.
எங்கள் இருவருக்கும் விவாதம் நடக்கும். அவர் எழுப்பும் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்காது. ஆனால் வறட்டு பிடிவாதம் பிடிக்க மாட்டேன். நான் படித்தறிந்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்று கூறி விட்டுதேடி படித்து மீண்டும் விவாதத்தை தொடர்வேன். அப்பகுதிக்குழுவின் தலைவராக பின்னாளில் அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகியான சீனிவாசன் என்ற தோழர் இருப்பார். முரட்டு சிபிஎம் விசுவாசி. கட்சி தவறே செய்தாலும் அதை சரி என்றுகூறுவார்.
சிறுவனாக இருந்ததால், கட்சியின் மூத்த மாநில நிர்வாகிகள் கேஜி என்கிற கே.கங்காதரன், எம்.ஆர்.அப்பன், என்.எல்.ஶ்ரீதரன், ஜோதி, முத்துசுந்தரம் என பல தோழர்கள் என்னிடம் பிரியமாக இருப்பார்கள். அசட்டுத்தனமான சந்தேகங்களை கேட்பேன். “சீனாவும் கம்யூனிஸ்ட்தான், சோவியத்தும் கம்யூனிஸ்ட்தான். ஆனா இரண்டும் ஏன் நட்பு நாடாக இல்லை ?”, “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே இறுதி இலக்கு. ஆனால், கருத்து சுதந்திரம் இல்லாத சோசலிசத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன். அன்போடு எனக்கு பொறுமையாக சொல்லி புரிய வைப்பார்கள்.
காதலிக்க வேண்டிய வயதில் நான் கம்யூனிசம் பயின்று கொண்டிருந்தேன். அது என்னை செம்மையாக்கியது. ஆண்டுக்கு ஒருமுறை, டெல்லியில் புதிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்க பேரணி நடக்கும். சங்கம் என்னை இரண்டு முறை தேர்ந்தெடுத்தது. மாநில தலைவர்களோடு ரயிலில் இரண்டு நாள் பயணம். விவாதம், விவாதம், விவாதம் என அந்த பயணமே விவாத அரங்குகளாக அமைந்தது. பிறகு டெல்லியில் பேரணி. இந்தியா முழுக்க இருந்த இடதுசாரி சித்தாந்தம் கொண்ட தோழர்களோடு அறிமுகம்என எனக்கு அமைந்தவை எல்லாமே செம்மையானஅனுபவங்கள்.
இந்த அனுபவங்கள் அறிவை விரிவாக்கி, பலவற்றை சொல்லிக் கொடுத்தன. எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் அளித்து அச்சத்தை அகற்றியது. அச்சம் குறித்து ஓஷோ இவ்வாறு சொல்கிறார்.
உங்களைப் பார்ப்பவர்கள் எல்லோருமே உங்களிடம் அச்சத்தை விதைக்க நினைப்பார்கள், ஏனெனில் அச்சமே சுதந்திரத்துக்கு முதல் எதிரி. நீங்கள் அச்சப்படும்போது சுதந்திரத்தின் சாத்தியம் குறைவாகிவிடுகிறது. அச்சம் ஏற்படுகையில் புரட்சிகரமான சிந்தனையும் குறைகிறது
இந்த சமூகம், மதங்கள், தேசங்கள் எல்லாமே எல்லோரையும் அச்சத்தில் வைத்திருக்கவே நினைக்கின்றன. நிலைத்த நீடித்த அச்சம், தெரிந்தவற்றின் மீதான அச்சம், தெரியாதவற்றின் மீதான அச்சம், மரணத்தின் மீதான பயம், நரகத்தின் மீதான அச்சம், சொர்க்கத்தை கைழுவவிடுவிமோ எனகிற அச்சம், இந்த உலகத்தில் நம் பெயர் நிலைக்காலம் போய்விடுமோ என்கிற அச்சம், சட்டென்று ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுவோமோ என்பது பற்றியான அச்சம்.. என எல்லாவற்றின் மீதும் அச்சம் கொள்ள வைக்கின்றனர். எந்தக் குழந்தையும் அச்சத்தோடு பிறப்பதில்லை. அவை சுதந்திரத்தோடும், அறிந்துகொள்ளும் மனதுடனும், புரட்சியான மனநிலையோடும், தனித்துவத்தோடும், அப்பாவித்தனத்தோடும் பிறக்கின்றன. இவை பரந்த குணாதிசயங்கள். ஆனால் பாவம் குழந்தைகள் ஆதரவு அற்றவர்கள், சார்ந்திருப்பவர்கள்…
ஆனால் நீங்கள் வளர வளர என்ன ஆகிறது? ஒரு வெங்காயத்தை உரிப்பது போல உரித்துப் பார்த்துக்கொண்டே இருங்கள், எதற்கெல்லாம் அச்சப்படுததப்பட்டு இருந்திருக்கீறீர்கள் எனத் தெரியும், எத்தனை பலவீனமாக இருந்துள்ளீர்கள் எனத் தெரியவரும், எப்படி மக்கள் உங்கள் வெள்ளந்திதனத்தைபயன்படுத்தினார்கள் என்பது தெரியும். அதனால் அச்சத்தின் கரத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்றார்.
இது ஓஷோ சொன்னது ..இதனுடன் நான் எளிமையாக ஒன்றை சேர்த்து சொல்வேன்.. உங்கள் மேல் நம்பிக்கையுடைய நட்புகளின் கரங்களைப் பற்றிக்கொள்ளுங்கள் என்று.. அச்சத்தை தூள்தூளாக்க அது இன்னும் சுலபம்…
மீண்டும் அடுத்த ஞாயிறு சந்திப்போம்.