எனக்கு நீதிமன்றங்களுக்குமான தொடர்பு வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கப் போகிறது என்று எவரேனும் 15 வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன். இந்த நாட்டின் சாமானியக் குடிமகனுக்கு ஒரு நீதிமன்றம் எப்படி அறிமுகமாகியிருக்குமோ அப்படித் தான் எனக்கும் அறிமுகம்.
அதே தான். நீதிமன்றங்கள் தமிழ்த் திரைப்படங்களின் மூலமாகத்தான் எனக்கும் அறிமுகம். 1984ம் ஆண்டு “விதி” என்ற திரைப்படம் வெளியானது. தஞ்சையில் இருந்தோம் அப்போது. என் அம்மா என்னையும் என் தங்கையையும் அழைத்துக் கொண்டு சென்றார். அந்த படத்தில் மிக நீண்ட கோர்ட் காட்சி இருக்கும். நினைவு தெரிந்து அதுதான் நான் பார்த்த கோர்ட்டு காட்சி. அது போலத்தான் நிஜ கோர்ட்டும்இருக்கும் என்று நினைத்தேன்.
பிறகு பணியில் சேர்ந்த பிறகு 1995ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக டி.எஸ்.பி விஸ்வநாதன் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்குக் கீழ் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே எனக்குக் கொடுக்கப்பட்ட விதிமுறை, “அமைதியாக உட்காருங்கள்” என்பது மட்டும் தான். அன்று தான் நேரில் நீதிமன்றத்தைப் பார்த்தேன். அது ஒரு மார்ச் மாதம் என்று நினைவு. வெயில் அதிகமாக இருந்தது. இந்த வெயிலில் எப்படி இவர்கள் இந்த கருப்பு கோட்டை போட்டுக் கொண்டு நடக்கிறார்கள் என்று அங்குள்ள வழக்கறிஞர்களைப் பார்த்துத் தோன்றியது.
அதன் பின்னர் எனக்கும் கோர்ட்டுக்கும் நேரடியான தொடர்பு ஏற்பட்டது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி சண்முகம் ஆணையத்தோடு 15 நாட்கள் பயணிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் வழக்கறிஞர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது.
நேரடியாக நீதிமன்றத்தோடு உறவு என்றால், 17 ஜூலை 2008 அன்று நான் கைது செய்யப்பட்ட போதுதான். இரவு முழுக்க கடும் தாக்குதலுக்குப் பின் 18 ஜூலை 2008 அன்று சென்னை எழும்பூரில் உள்ள நீதித்துறை நடுவர் முன்பு அழைத்து வரப்பட்டேன். நான் தாக்கப்பட்டது குறித்து நீதிபதியிடம் முறையிடுமாறு வழக்கறிஞர் புகழேந்தி கூறியிருந்ததால், எழும்பூரில் நான் ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்றத்தின் நடுவர் சரோஜினி தேவியிடம் “I was tortured throughout the night. I have been subjected to third degree torture” என்று கூறினேன்.
உடனே அவர், “Accused complains of torture. Take him to medical treatment” என்று பதிவு செய்தார். எந்த விசாரணையும் நடைபெறவில்லை. இதுதான் என் முதல் அனுபவம்.
எல்லோரையும் போலவே நீதிபதிகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணமே எனக்கு இருந்தன. அது தமிழ் சினிமா தந்திருந்த பாதிப்பு என்று கூட சொல்லலாம். ஆனால் நீதிபதிகளும் மற்ற சராசரி மனிதர்களைப் போல அற்பத்தனங்களும் கொண்டவர்கள் தான் என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு முதல் காரணமாக இருந்தது நீதிபதி சண்முகம் அவர்கள். அவர் ஆணையத்தில் தான் இதனைத் தெரிந்து கொண்டேன். ஆணையங்கள் ஆளும் அரசுகளுக்கு துதிபாடுபவை என்பதையும், அரசுக்கு ஏற்றார்போல அறிக்கை அளிக்கும் நீதிபதிகளைத்தான் ஆளும் அரசுகள் தேர்ந்தெடுக்கும் என்பதையெல்லாம் நேரடியாக பார்த்தேன். அப்போதுதான் நீதிபதிகளின் மீதான பிம்பம் எனக்கு உடைந்தது.
நீதிமன்றங்களில், நீதிபதிகள் வருகையில் அவர்கள் செய்யும் படோடாபத்தை பார்த்தால் உங்களுக்குள் ஒரு வித அச்சம் ஏற்படும். அப்படித் தான் நடந்து கொள்வார்கள். காவல்துறையிலும் இப்படி நடக்கும் என்றாலும் காவல்துறையை விட நீதிபதிகள் நடந்து கொள்வது பலமடங்கு என்பதை கண்டறிந்தேன்.
நீதிபதிகளின் மீதான பிம்பம் உடைய நீதிபதி சண்முகம் ஆணையத்தில் இரண்டு சம்பவங்கள் காரணமாக இருந்தன. என்னை சிக்க வைத்திருந்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கினை விசாரிக்க நீதிபதி சண்முகம் ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன்.
முதல் சம்பவம் : சாட்சிகள் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. டெகல்காவின் நிருபர் வினோஜ் விசாரணை செய்யப்பட்டார். வழக்கறிஞர் புகழேந்தி வந்திருந்தார். மதியம் 3 மணிக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விசாரணை ஆணையம் என்பதால் சிறிய அறை. நீதிபதி 8 அடி தூரத்தில் அமர்ந்திருந்தார். எனக்கு முன்னால் உள்ள நாற்காலியில் புகழேந்தி அமர்ந்திருந்து, தலையை குனிந்து கொண்டிருந்தார். அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன்.
பொதுவாக விசாரணையில் ஆணைய வழக்கறிஞர் கேள்வி கேட்பார். அதற்கான பதிலை சாட்சி சொல்வார். நீதிபதிஅதை ஆங்கிலத்தில் dictate செய்வார். தட்டச்சர் அதை டைப் அடிப்பார். இப்படித் தான் நடக்கும்.
வினோஜிடம், வழக்கறிஞர் ஒரு கேள்வி கேட்டபோது, வினோஜ் சொன்ன பதில் எனக்கு சாதகமாக, அதாவது எனக்குஇந்த வழக்கில் தொடர்பு இல்லை என்பதாக இருந்தது. நீதிபதி அதை dictate செய்கையில் அப்படியே மாற்றி சொன்னார்.
எனக்கு இது தவறு என்று தெரிந்தது. உடனே புகழேந்தியிடம்”தோழர்… ஜட்ஜ் சாட்சி சொன்னதை மாத்தி dictate பண்றாரு. object பண்ணுங்க” என்றேன். புகழேந்தி வழக்கை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது அப்போது தான் தெரிந்தது.
புகழேந்தி எழுந்திருக்கக் கூட இல்லை. மிக சாதாரணமாக தலையை உயர்த்தி, “அவரு என்ன சொல்றாரு, நீங்க என்ன சொல்றீங்க” என்றதும், நீதிபதி சண்முகத்தின் முகம் இருட்டடித்தது. “Iam sorry. I am sorry” என்று கூறி விட்டு, சாட்சி சொன்னதை சொன்னார்.
என்ன இந்த நீதிபதி இத்தனை அற்பமாக இருக்கிறார் என்று தோன்றியது.
இரண்டாவது சம்பவம் : எனது வழக்கில் முக்கிய சாட்சி, அப்போதைய தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி ஐஏஎஸ். அவர் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம், “ஜெயலலிதாவை கொடநாடு வாங்கிய வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்ற உரையாடலை நான் வெளியிட்டதாக இருந்த வழக்கில் சாட்சியாக வரவேண்டும்.
திரிபாதி விசாரணைக்கு வந்தால் எனது வழக்கே முடிந்திருக்கும். அவர் ஜெயலலிதாவை பொய் வழக்கில் சிக்கவைக்க முயன்றார் என்பதை விசாரணையில் கொண்டு வந்திருக்க முடியும். அதற்கு பிறகு வழக்கே திசை மாறிப் போயிருக்கும்.
திரிபாதிக்கு தான் விசாரணைக்கு வந்தால் மாட்டிக் கொள்வோம் என்பது தெரியும். அவர் சண்முகத்தை அழைத்து தன்னை விசாரணைக்கு அழைக்காமல் ஆணையத்தை முடிக்கும்படி கூறியிருக்கிறார். சண்முகமும் சரி என்றிருக்கிறார்.
இந்த வழக்கில் நேரடியாக திரிபாதி சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர் தான் பேசினாரா என்பதை நேரில் வரவழைத்துக் கேட்க வேண்டும் அது தான நடைமுறை. ஆனால் அவரை வரவைக்காமல் இருக்க சில வேலைகளை சண்முகம் செய்கிறார் என்று தெரிகிறது. அதை எப்படி நான் விட முடியும்? திரிபாதியை அழைத்து விசாரிக்குமாறு சொல்லும் உரிமை எனக்கு உண்டல்லவா?
நீதிபதி சண்முகம் எனது வழக்கறிஞர் விஜயக்குமாரை தனியாக அழைத்தார். “திரிபாதியை விசாரணைக்கு அழைக்காதீர்கள். உங்கள் க்ளையண்ட்டை (நான்) காப்பாற்றி விடுகிறேன்”என்றார். வழக்கறிஞர் விஜயக்குமார் ஆவேசமாக பேசுவாரே ஒழிய அப்பாவி. நீதிபதிகளை நம்பக்கூடாது என்பது அனுபவமே இல்லாத எனக்குத் தெரிந்தது. அவருக்குத் தெரியவில்லை.
என்னிடம் வந்து, “சார். ஜட்ஜ் நமக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டார். உங்க மேல துறை நடவடிக்கைக்கு மட்டும் பரிந்துரைக்க போறாராம்” என்றார்.
எனக்கு நன்றாக தெரியும், நீதிபதி சண்முகம் அரசின் அடிமை என்பது. கலைஞருக்கு, “ஒரு டேப்பை ஒருத்தன் வெளியிட்டு அரசையே ஆட்டி வச்சிட்டானே. நாம் சட்டவிரோதமாக போனை ஒட்டுக்கேட்பது தெரிந்து விட்டதே என்ற ஆத்திரம் இருந்தது. அதற்கு காரணமான என்னை கடுமையாக தண்டித்து, மற்றவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம். எப்படி என்னை விடுவார்கள்?
நான் விஜயக்குமாரிடம், “திரிபாதியை விசாரிச்சா நமக்கு ஹெல்ப்புல்லா இருக்கும்” என்றேன். விஜயக்குமாரோ, “சும்மா இருங்க சார். நமக்கு இதுல இருந்து தப்பிக்கணும். ” என்றார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது பலமுறை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். இதற்கு பலனாக, சென்னை சட்டக்கல்லூரி மாணவர் மோதல் சம்பவத்தை விசாரிக்க சண்முகமே மீண்டும் விசாரணைய ஆணைய நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இப்படி வெளிப்படையாக விதிமுறைகளை தங்களின் சுயலாபத்திற்காக மீறும் நீதிபதிகளைப் பார்த்து அவர்கள் மீதான ‘தூய்மையான’ பிம்பம் எனக்குள் உடைந்தது.
2008 செப்டம்பரில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, வேலை போயிருந்தது. வழக்கறிஞர் அலுவலகமே எனது வாசமானது. வழக்கறிஞர்களில் பலர், தட்டச்சு செய்ய ஆள் இல்லாமல் சிரமப்படுவார்கள். வெளியே காசு கொடுத்து டைப் அடிப்பார்கள். எனக்கு தமிழ் ஆங்கில தட்டச்சு நன்கு தெரியும் என்பதால், நானே தட்டச்சு செய்கிறேன் என்று கூறியதும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார். முதலில் ஜாமீன் மனுக்களை தயார் செய்ய கற்றுக் கொண்டேன். இரண்டு பக்கங்கள்தான். பெரிதாக எழுத ஒன்றும் இருக்காது.
குற்றச்சாட்டுகளை எழுதி, “My client is innocent and has been falsely implicated in this case by the respondent police.” இவ்வளவுதான். இதை தொடர்ந்து செய்வதோடு, உயர்நீதிமன்றத்தில் filing செய்யும் வேலையையும் கற்றுக்கொண்டேன்.
பெயில், மற்றும் கிரிமினல் வழக்கு மனுக்களை தயார் செய்வது எளிது. Writ Petition எழுதுவது ஒரு கலை. புகழேந்தி தொடக்கத்தில் விஜயக்குமார் என்ற சீனியர் அலுவலகத்தில் இருந்தார். அவருக்கும் தனியே ஒரு அலுவலகம் இருந்தாலும், 136 தம்புச் செட்டித் தெருவில் உள்ள சீனியர் அலுவலகத்தில்தான் இருப்பார்.
2008 இறுதி மற்றும் 2009 தொடக்கத்தில் வழக்கறிஞர் ஈழப்போரை நிறுத்தக் கோரி நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நான் புகைப்படங்களை எடுத்தேன். கொஞ்ச கொஞ்சமாக வழக்கறிஞர்கள் பழகத் தொடங்கினார்கள்.
17 பிப்ரவரி 2009 அன்று சுப்ரமணிய சுவாமி மீது நடந்த தாக்குதல் மற்றும், 19 பிப்ரவரி 2009 அன்று உயர்நீதிமன்றத்தில்நடந்த வழக்கறிஞர் காவல்துறை மோதலில் நான் நேரடி சாட்சி. நூற்றுக்கணக்கான புகைப்படங்களை கலவரத்தின்போது எடுத்தேன்.
அன்றைய தினம் கலவரம் எல்லாம் ஓய்ந்து தம்புச்செட்டி தெருவுக்கு அனைவரும் திரும்பினோம். வாசலிலேயே நின்று கொண்டிருந்தோம். வழக்கறிஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது குறித்து விஜயக்குமார் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அவரால் மற்ற யாரையும் திட்டமுடியவில்லை.
அவர் யார் மீதோ கொண்டிருந்த கோபத்தை என் மீது காட்டினார்.
“உங்களாலதான் சார் எல்லாம். போலீஸ் வக்கீலை போட்டு எப்படி அடிக்கிறான் பாத்தீங்களா. இப்படி மானத்தை வாங்கிட்டீங்களே” என்றார். அனைத்து வழக்கறிஞர்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
புகழேந்திக்கு என்னை அவர் அனைவர் முன்னிலையிலும் திட்டியது பிடிக்கவில்லை. மறுநாள் முதல் அவர் விஜயகுமார் அலுவலகத்துக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
நான் அன்று முதல் தினமும் காலை 7 மணிக்கெல்லாம் புகழேந்தியின் அலுவலகத்துக்கு சென்று விடுவேன். 10.30 மணிக்கு நீதிமன்றம் தொடங்கும். அன்றைய வழக்குகளை தயார் செய்ய வேண்டும். அன்று தாக்கல் செய்ய வேண்டிய வழக்குகள், புதிய வழக்குகள் தயார் செய்வது என்று தொடங்கி, புதிய க்ளையண்ட்டுகளை பார்த்து பேசி, விபரங்களை கேட்டு பீஸ் வாங்குவது வரை நான் தான் செய்வேன். புகழேந்தி அலுவலகத்தை என் பொறுப்பிலேயே விட்டு விட்டார்.

வழக்கறிஞர் புகழேந்தி
எனது வழக்கை, விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள். சாவித்ரி என்பவர் தற்காலிக நீதிபதியாக பொறுப்பேற்றிருந்தார்.
மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோதான் Prosecutor. அரசுத் தரப்பு வழக்கறிஞர். அவர் வழக்கு நடத்திய விதத்தை பார்த்து வியந்தேன். உளவுத்துறை எப்படியாவது எனக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று பொய் சாட்சிகளை விசாரிக்க அழுத்தம் தந்தபோது கோபத்தோடு மறுத்தார்.
அவருக்கு நான் யாரென்றே தெரியாது. நான் பொய் சாட்சிகளால் சிறை சென்றால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாறாக, எனக்கு பொய் சாட்சிகளை வைத்து தண்டனை பெற்றுத் தந்திருந்தால், அந்த ஆண்டே எம்.பியாகியிருப்பார். ஜாபர் சேட் செய்து கொடுத்திருப்பார்.
நீதிபதி சாவித்ரி கடுகடுவென இருப்பார். இந்த வழக்கில் எனக்கு தண்டனை பெற்றுத் தந்தால் அவரை நிரந்தரம் செய்வதாக ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒருநாள் என்னால் நீதிமன்றம் செல்ல முடியவில்லை. அதற்காக என்னைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தார்.
வாரண்ட்டை திரும்ப பெற்று என்னை கைது செய்யாமல் இருக்க நான் நேரில் புகழேந்தியோடு ஆஜராகினேன். வாரண்டை திரும்ப பெறுவதும், மறுப்பதும் நீதிபதியின் உரிமை. இதனால் அந்த அம்மா மிகவும் அகம்பாவமாக நடந்து கொள்வார்.
நான் நீதிமன்றத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அந்த நீதிமன்றத்தின் OA என்னை தரையில் அமருமாறு நீதிபதிக்கு கேட்கும் வகையில் சொன்னார்.
“முடியாது” என்றேன்.
“அம்மா சொல்றாங்க”
“அம்மாக்கிட்ட முடியாதுன்னு சொல்லுங்க” என்று நானும் கத்தினேன்.
அம்மையார் கோபமடைந்தார். புகழேந்தியை பார்த்து, “பாருங்க சார் உங்க க்ளையண்ட்டை. எவ்வளவு திமிரா பேசுறார்” என்றதும் புகழேந்தி, “ஏங்க அவர் கவர்மெண்ட் செர்வண்ட்டுங்க. அவர் நிப்பாரு. தரையில ஏன் உக்கார சொல்றீங்க” என்றார்.
அந்த அம்மாவுக்கு அவமானமாக போய் விட்டது. பழிதீர்க்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் என் மீது charge framing என்றார். அது நடந்து முடிந்தால் வழக்கு அதி விரைவாக நடக்கும். எனக்கு discharge petition போடும் வாய்ப்பு பறிபோய் விடும்.
அன்று பார்த்து புகழேந்தி உயர்நீமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராகப் போயிருந்தார்.
“வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார். நாளை தள்ளி வையுங்கள்” என்றேன்.
‘அதெல்லாம் முடியாது சார். அவர் வர வரைக்கும் நீங்க போக முடியாது’ என்றேன்.
நீதிமன்றத்தில் ஒருவருமே இல்லை. டைப்பிஸ்ட் பெண்ணும் நீதிபதியும் நானும், OAவும், மட்டும் இருந்தோம். எப்போதும் என்னிடத்தில் புத்தகம் இருந்தது. காத்திருக்கும் நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்று நீதிமன்றத்தில் ஒரு ஓரத்தில், பெஞ்ச்சில் அமர்ந்திருந்து புத்தகம் வாசிக்கத் தொடங்கினேன்.
“எந்திரிச்சி வெளிய போயி நில்லுங்க சார்” என்றார் சாவித்ரி”
“This is a public court. Not your personal space madam. I will sit here only. You dont have the right to send me out”
டைப்பிஸ்ட்டை அழைத்தார்.
கண்டெம்ப்ட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்தார்.
100 ரூபாய் அபராதம்.
அல்லது ஆறு மாதம் சிறை.
அபராதத்தை கொடுத்தால் டைப்பிஸ்ட் வாங்க மறுத்தார்.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் சொன்னேன். வந்து நீதிமன்றம் அதிரும்படி சத்தம் போட்டார். உடனேயே அபராதத்தை வாங்கிக் கொண்டார்கள்.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினியின் வழக்கறிஞர். He is a maverick. Voratious reader. அவர் அரசியல், இலக்கியம், சட்டம் எனத் தொடங்கினால் விவாதம் நீண்டு கொண்டே செல்லும்.
ராதாகிருஷ்ணன் என்னை clientஆக பார்க்கவில்லை. ஒருpeerஆக நடத்தினார்.
ராதாகிருஷ்ணன், Typewriting Shorthand ல் Higher grade. அவரே வேகமாக டைப் அடிப்பார். ஆனால் நான் அவரை டைப்அடிக்க விட மாட்டேன். நான் தான் டைப் அடிப்பேன். ஏனென்றால், அப்போதுதான் நான் புதிய விஷயங்களை கற்கமுடியும். Writ petitions, affidavit, Supreme Court judgments, constitutional debates, English Law, House of Lords எனபலவற்றை சொல்லிக் கொடுத்தார். அவர் அலுவலகத்தில்குறைந்தது 3 ஆயிரம் புத்தகங்கள் இருக்கும்.
பெரிய வழக்கில் நல்ல பீஸ் வந்தால், எனக்கு பணம் கொடுப்பார். அவர் நீதிமன்றத்துக்கே போக மாட்டார். பழையபுத்தக கடை, சிவாஜி கணேசன் படம் ஓடும் தியேட்டர்களில்தான் அவரை பார்க்க முடியும். இவரை உரிய முறையில் பயன்படுத்த நானும் புகழேந்தியும் முடிவெடுத்தோம்.
நான் சிறையில் இருக்கையில், என்னிடம் உள்ளே இருந்த கைதிகள் கேட்டுக் கொண்டது, எப்படியாவது போலி என்கவுண்ட்டர்களை தடுத்து நிறுத்துங்கள் என்பதே.
தமிழகத்தில் சிறை மரணங்களோ, போலி என்கவுண்ட்டர்களோ நடந்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்தால், அன்றே சிபிஐ விசாரணை கோரி பொதுநல வழக்குபதிவு செய்வோம்.
ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் சொல்லாமலேயே, நான் Writ Petition தயார் செய்து வைத்து விடுவேன். அவர் வந்து சிலதிருத்தங்களை செய்து உடனே வழக்கை தாக்கல் செய்வேன்.
ராதாகிருஷ்ணன் வாதாடுவார். இவையெல்லாம் 2010-2014 காலகட்டம். அப்போது தாக்கல் செய்த பொது நல வழக்குகள்இன்றும் நிலுவையில் இருக்கின்றன.
இதுதான் உயர்நீதிமன்றத்தின் நீதிபரிபாலன லட்சணம். ஜக்கிவாசுதேவ் மீதான வழக்கும் அப்போது தாக்கல் செய்ததுதான்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கென்றாலே, ராதாகிருஷ்ணன் – புகழேந்தி என்று ஆனது. தினந்தோறும்நீதிமன்றம் செல்வேன். ராதாகிருஷ்ணன் அவர்கள் எந்தநீதிமன்றத்தில் இருக்கிறாரோ அங்கே நான் இருப்பேன்.
நீதிபதிகள் குறித்தும், நீதிமன்றம் குறித்தும் பல கட்டுரைகளை எழுதித் தள்ளினேன். மீன் குழம்பு சரியாக வைக்காததால் ஒரு OAவை சஸ்பெண்ட் செய்த மேஜிஸ்திரேட், ஊழல் நீதிபதிகள் என எழுதினேன். யாரும் எழுதாத உண்மைப் பக்கங்களை எழுதியது ஒரு துணிவை எனக்குக் கொடுத்தது.
நீதிமன்றத்தோடு பயணிக்கும்போதெல்லாம் என் மனதில் தீராத ஏக்கம் ஒன்று உண்டு. நாம் வெறும் 10வது தான் படித்திருக்கிறோம். ஒரு வேளை இளமையிலேயே வேலைக்கு செல்லாமல் இருந்திருந்தால் வழக்கறிஞாயிருப்போமோ.
நமக்கு நீதிமன்றத்தில் வாதாடும் வாய்ப்பு ஒருநாளும் கிடைக்காது என்று ஏங்கியிருக்கிறேன்.
என் ஏக்கத்தை தீர்த்து வாட்டத்தை போக்கியவர் நீதிபதிஜி.ஆர்.சுவாமிநாதன்.
கடந்த 1 செப்டம்பர் 2022 அன்று, 150 வழக்கறிஞர்கள் இருந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், ஒரு டிவிஷன் பென்ச் முன்பாக வாதாடியது எனது வாழ்க்கையில் பெருமை மிகு தருணங்களில் ஒன்று. மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. பெருமை என்றால் அப்படியொரு பெருமை.
மெத்தப்படித்த வழக்கறிஞர்கள் இடையே நின்று, இரு மூத்த நீதிபதிகளின் முன் வாதாடும் பெருமை எனக்கும் வாய்த்ததன்றோ.
இதுவன்றோ பேறு.
இவ்வாய்ப்பை எனக்கு வழங்கிய நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி சொல்வது முறையன்றோ !!
நன்றி அய்யா ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே.
அடுத்த ஞாயிறன்று சந்திப்போம்.